#பால்குடி_பன்றிக்கறி
1725ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட ஒரு ரெஸ்டாரெண்ட் இன்றும் வெற்றிகரமாக இயங்கி வருகிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா! கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற இந்த பழமையான ரெஸ்டாரெண்ட் இந்த 2025இல் தனது 300ஆவது வயதை நிறைவு செய்கிறது! இப்போதே ஆச்சரியப்பட வேண்டாம் முழு பதிவையும் படித்துவிட்டு ஒரு ரூம் போட்டே வியப்போமா!
நம்ம ஊரிலேயே சிறு வயதில் நாம் ரசித்து ருசித்த பல ஓட்டல்கள் இப்போது இல்லை! வெறும் 50 ஆண்டுகளிலேயே இப்படி இருக்கும் போது 300 ஆண்டுகள் ஒரு கடை அதிலும் பிரத்யேகமா 2 வகை இறைச்சியை சமைத்து 10 தலை முறைகளை தாண்டி மக்களை இன்னும் தங்கள் உணவின் பிடியில் வைத்திருப்பது முதல் அதிசயம்! இன்றும் பரபரப்பாக இயங்குவது 2வது அதிசயம்!
உலகின் மிகப் பழமையான இந்த ஓட்டல் இருப்பது ஸ்பெயின் நாட்டின் Madrid நகரில்! Casa Botin என்பது இந்த ஓட்டலின் பெயர்! 1590இல் கட்டப்பட்ட கட்டிடம் ஒன்றில் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது காஸா போடின் ஓட்டல்! இந்த ஓட்டலின் வயது 300 அந்தக் கட்டிடத்தின் வயது 435! கிட்டத்தட்ட Madrid நகரமும் அப்போது தான் தலைநகரமனது!
1560 ஆண்டு ஸ்பெயினை ஆண்ட மன்னர் இரண்டாம் பிலிப்பே Madrid நகரை ஸ்பெயினின் தலைநகராக அறிவித்தார்! அதற்கு 30 ஆண்டுகள் கழித்து கட்டப்பட்டது இந்தக் கட்டிடம்! 300 ஆண்டுகளாக இங்கு அப்படி என்ன ஸ்பெஷல் உணவு? பன்றி இறைச்சியும், ஆட்டிறைச்சியும் தான்! 300 ஆண்டுகளுக்கு முன்பு தந்த அதே பாரம்பரிய முறை ருசியில் சமைத்துத் தருகிறார்கள்!
மனிதன் இறைச்சிக்காக வளர்த்த மிருகங்களில் முதலிடம் பன்றிக்கு தான்! உலகிலேயே இன்று அதிக மக்கள் உண்ணும் கறி பன்றிக் கறியே! பிரத்யேகமான குட்டிப் பன்றி & ஆடுகளை மாய முக்கோணம் என்றழைக்கப்படும் செபுல்வேதா-அரண்டா-ரியாசா என்னும் இடத்தில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்கிறார்கள்! இந்த இறைச்சிகளின் தனித்த ருசிக்கு இதுவே காரணமாகும்!
வெளிநாடுகளில் பன்றி, மாடு, மான் இறைச்சிகள் கிடைப்பது சர்வ சாதாரணம் தான்! ஆனால் காஸா போடின் பன்றி & ஆட்டு இறைச்சிகளின் சிறப்பு அவை 4- 6 வார குட்டிகளாக இருக்கும் போதே இறைச்சிக்காக கொல்லப்பட்டுவிடும்! அதாவது தாய்ப் பால் குடித்துக் கொண்டிருக்கும் குட்டிகளின் கறி! நம்ம ஊரில் சொல்வாங்களே பால் குடி மறக்காத பச்சிளம் குழந்தைன்னு!
பால் குடிக்கும் பருவத்திலேயே இறைச்சிக்காக வெட்டப்படுவதால் இந்த இறைச்சிகள் மிக மிக மிருதுவாகவும் அதிக ருசியாகவும் இருக்கின்றன! கறியும் தோலோடு எளிதில் வேகிறது! வெங்காயம், பூண்டு, ஒயிட் ஒயின், உப்பு, மிளகு, பிரியாணி இலை போன்ற பொருட்களை இதனுடன் சேர்ப்பதால் அது கறியின் ருசியை மேம்படுத்தி ஒரு அற்புதமான ருசி அனுபவத்தை தருகிறது!
அதே போல பால்குடி மறக்காத ஆடு & பன்றிகளை பாரம்பரிய முறையில் சமைப்பதே காஸா போடின் தனிச் சிறப்பு! இந்த இறைச்சி மிகவும் மிருதுவாக இருக்கும்! கறியின் தோல் நன்கு வறுபட்டு ருசிக்க அருமையாக இருக்கும்! இந்தக் கறியை கஸ்டமர் விருப்பம் போல மசாலாக்களை சேர்த்து லைவாக சமைத்துத் தருவார்கள்! நம்ம ஊரில் இரவு புரோட்டா கடையில் அமர்ந்து..
எக்ஸ்டிரா 1 முட்டை போட்டு ஒரு கொத்து போடுங்க மாஸ்டர்.. மட்டன் சுக்காவை வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி போட்டு நல்லா ப்ரை பண்ணுப்பா.. பெப்பர் தூக்கலா ஒரு ஆஃப் பாயில் போடுண்ணே என இன்று நாம் ஆர்டர் கொடுக்கும் வழக்கத்தை 17ஆம் நூற்றாண்டிலேயே ஸ்பெயின் மக்கள் துவக்கிவிட்டனர்! உலகிற்கே லைவ் கிச்சனின் முன்னோர்கள் ஸ்பெயின் நாட்டவரே!
உலகெங்கும் ஸ்பெயின் ஆட்சி செய்த நாடுகளில் எல்லாம் ஸ்பானிஷ் கலாச்சார உணவின் அடையாளமாக இந்த பன்றிக்கறி இருக்கிறது! போர்ச்சுகல், க்யூபா, டொமினிக் குடியரசு, ஸ்பானிஷ் மொழி பேசும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இந்தக் கறி மிகவும் பிரசித்தம்! ஸ்பானிஷ் மொழியில் ‘லெச்சான்’ (பால் பன்றி) எனவும் போர்ச்சுகல்லில் ‘லெய்டாவோ’ என்றும் அழைக்கப்படுகிறது!
300 ஆண்டுகள் பாரம்பரிய மிக்க காஸா போடின் சமையலறை இன்று வரை ஓய்வின்றி இந்த 2 இறைச்சிகளையும் தயாரித்து வழங்கி வருகிறது! 300 வருடப் பழமையான ஓக் மர ஓவன் அடுப்பில் இந்த உணவுகள் உணர்வுகளோடு சமைக்கப்படுகின்றன ஃபோர்ப்ஸ்பத்திரிகை உலகின் தலை சிறந்த பத்து கிளாசிக் உணவகங்களில் இதற்கு 3வதுஇடத்தை வழங்கியுள்ளது!
பன்றி & ஆடு மட்டுமின்றி நேர்த்தியாக சமைத்த போட்டின்-ஸ்டைல் கிளாம்ஸ், காஸ்டிலியன் சூப், புத்துணர்வூட்டும் காஸ் பாச்சோ போன்ற பாரம்பரிய உணவுகளுடன் ஸ்பெயினின் சிறந்த ஒயின்களுடன் (ஆஹா கவிதை) கூடிய பலப்பல ருசியானஉணவுகளையும் நீங்கள் இங்கே ருசிக்கலாம். இதற்கான சிறந்த செஃப்கள் இந்த உணவுகளை உரிய முறையில் சமைக்கிறார்கள்!
காசா போடின் உணவகம் ஏராளமான இலக்கிய ஆளுமைகளுக்கு உணவு பரிமாறியுள்ளபெருமையைப் பெற்றது! எர்னஸ்ட் ஹெமிங்வே, பெனிட்டோ பெரெஸ் கால்டோஸ், கிரஹாம் கிரீன் மற்றும் மரியா டியூனாஸ் உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் தங்கள்நாவல்களில் இந்த உணவகத்தை பின்னணியாக வைத்து நாவல் எழுதியுள்ளனர்! இன்றைக்கும் இங்கு சாப்பிட டிமாண்ட் உள்ளது!
முன்பதிவு இன்றி இங்கெல்லாம் போய் உணவருந்தவே முடியாது! ஸ்பெயினிற்கு சுற்றுலா செல்பவர்கள் தவறாமல் சென்று ருசித்து வரும் இடம் இந்த காஸா போடின் உணவகமாகும்! Madrid நகரும் இந்த ஓட்டலும் ஒரே நேரத்தில் உருவான பெருமை கொண்டவை! ஸ்பெயினின் கலாச்சாரமும், பண்பாடும் இக்கறியின் ஒவ்வொரு துணுக்கிலும் உள்ளது என்கிறார்கள் மிகுந்த பெருமையுடன்!
No comments:
Post a Comment