Tuesday, 29 July 2025

‘பந்த்’தம் {சச்சின் = ரிஷப்} 🏏

3வது டெஸ்டின் நான்காவது இன்னிங்ஸில் 192 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் ஆல் அவுட்டான இந்திய அணி அடுத்த வாரமே 4வது டெஸ்டின் நான்காவது இன்னிங்ஸில் 313 ரன்களை சேஸ் செய்து 400+ ஸ்கோரை அடித்தது அதுவும் வெறும் 4 விக்கெட் இழப்பில் இதற்கு யார் காரணம்?

ராகுல், கில் துவங்கி ஜடேஜா & சுந்தர் இந்த நால்வரின் அபார ஆட்டம் தான் காரணம் என உலகமே பாராட்டி எழுதினாலும் மூன்றாவது மேட்சில் நடக்காத அந்த அதிசயம் நான்காவது மேட்சில் நடந்தது எப்படி? எப்படி இது சாத்தியமானது? இந்த உத்வேகத்திற்கு காரணம் ஒருவரே! அவர் தான் ரிஷப் பந்த்!

ஆம்! ரிஷப் ஒரு காட்டாறு, யாருக்காகவும் தன்னியல்பை மாற்றிக் கொள்ளாத குணம் கொண்டவர். கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் கவாஸ்கர் ரிஷப் அடித்து ஆடிய ஷாட்டை முட்டாள்தனமான ஷாட், இவன் ஒரு முட்டாள் என்று கமெண்ட்டரி பாக்ஸிலிருந்து ஆவேசமாகத் திட்டினர்.

அதே கவாஸ்கர் இந்த இங்கிலாந்து தொடரின் முதல் டெஸ்டில் ரிஷப் செஞ்சுரி அடித்ததும் அவரை பல்டியடித்து கொண்டாடக் கேட்டுக் கொண்டார். அதுதான் ரிஷப் பந்த்! யார் என்ன சொன்னாலும் அவர் அவரது பாணியில் தான் ஆடுவார். இந்த இங்கிலாந்து தொடரின் ஆரம்பம் முதல் அதிரடி தான்.

முதல் டெஸ்டின் 2 இன்னிங்ஸிலும் சதம், இரண்டாவது மூன்றாவது நான்காவது டெஸ்டுகளில் 3 அரை சதங்கள் என இவர் ஆடிய ஆட்டம் மொத்த அணிக்கும் டன் கணக்கான பூஸ்ட் போல. 4வது டெஸ்டில் கால் விரலில் ரத்தம் வடிய வெளியேறியவர், திரும்பி வந்து அரைசதம் அடிப்பார்.

பாகிஸ்தானில் சச்சின் அறிமுகமான தொடரின் 4வது டெஸ்ட் எதிர் முனையில் இருந்த நவ்ஜோத் சித்து அன்று நடந்ததை சொல்வார். நாங்கள் சோர்ந்து போயிருந்தோம் பாக் வீரர்கள் பேய்த்தனமாக பந்துவீசிக் கொண்டிருந்தனர். நான் மட்டுமே அன்று தாக்குப்பிடித்து ஆடிக்கொண்டிருந்தேன்.

சீக்கிரம் மற்ற வீரர்கள் அவுட்டானால் எனக்கு கெட்டப் பெயர் வராமல் பெவிலியன் திரும்பலாம் என்று எண்ணியிருந்த போது சச்சின் என்னும் பாலகன் இறங்கினான். எனக்கு ஒரு கணம் பதைபதைத்தது இந்த பேய் வேகத்தை இவன் தாக்குப் பிடிப்பானா என்று, வக்கார்யூனுஸ் பந்து வீச வருகிறார்.

அவரது 2வது புயல் பந்து சச்சினின் பேட்டில் பட்டு அவர் மூக்கை உடைக்கிறது. அப்படியே தக்காளி மூட்டை போல சரிகிறான். சட்டை எல்லாம் ரத்தக்களரி, அவன் மூக்கே இடம் மாறிப் போயிருந்தது. நானும் அணியின் பிஸியோ அலி இரானியும் நடுக்கத்துடன் ஓடிப் போய் சச்சினை பார்க்கிறோம்.

ஐயோ ஏதும் பிரச்சனை ஆகிவிடப் போகிறது இந்தச் சிறுவனை உள்ளே தூக்கிச் சென்றுவிடலாம் என்கிறார் இரானி, அப்போது கீழேயிருந்து பின்னாளில் உலகப் புகழ் பெற்ற அந்த மெல்லிய குரல் “ மெய்ன் கேலேகா” (நான் ஆடுகிறேன்) நானும் இரானியும் பிரமித்துப் போனோம்.

ஒரு 16வயது பாலகன் தன்னுடைய அணிக்காக இப்படி அடிபட்ட நிலையிலும் அணிக்காக ஆட நினைக்கிறான். ஆனால் நான் சீக்கிரம் ஆட்டத்தை முடிக்கலாமென சுயநலமாக இருந்தேனே என்று வெட்கி தலை குனிந்தேன். பின்பு அடுத்த பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார் சச்சின்.

எனக்குள்ளும் ஒரு உற்சாகம் பிறக்க அவரோடு இணைந்து போராட முடிவு செய்தேன். அன்று நமது சச்சின் எடுத்தது 57 ரன்கள். அவரைப் பார்த்து நான் எடுத்தது 97 ரன்கள். இதே தான் 4வது டெஸ்டிலும் நடந்தது. கால் விரலில் அடிப்பட்டு திரும்ப வந்து ஆடிய ரிஷப்பின் ஆட்டம் நமது அணிக்கு..

சிறப்பானதொரு உத்வேகத்தை தந்தது. இவன் இப்படி ஆடும் போது நாமும் ஏதாவது செய்தாக வேண்டுமே என அணியின் ஒவ்வொருவரையும் நினைக்கத்துண்டியது. இதுவே 3வது டெஸ்டிற்கும் 4வது டெஸ்டிற்கும் இருந்த வித்யாசம். அணி ஒருங்கிணைந்து ஆட காரணம் ரிஷப்பின் ஆட்டமே எனலாம்.

ரிஷப்பின் பாணி படு க்ளாஸிக்கான டெஸ்ட் ஆட்டம் அல்ல. அது சுழன்றடிக்கும் சூறாவளி போன்றது. அவர் கவர் டிரைவ், ஸ்கொயர் கட், ஆன் டிரைவ் போன்ற பாரம்பரிய கிரிக்கெட் ஷாட்டுகளை அதிகம் ஆட மாட்டார் ஒற்றைக் கை லாஃப்டுகள், படுத்து உருண்ட ஃபிளிக், ஃப்ளையிங் பேட் என அவரது..

கிரிக்கெட் புதிய புதிய பல ஷாட்டுகளை கொண்டது. இப்படி எல்லாம் கிரிக்கெட் ஆட முடியுமா என வியக்க வைப்பவர். ரிஷப் நிதானமாக ஆடத் துவங்கிவிட்டால் அவராக தவறு செய்தால் மட்டுமே அவுட்டாவார். இல்லாவிட்டால் மனுஷன் எதிரணிகளை கதிகலங்க வைத்துவிடுவார்.

இந்த ‘பந்த்’தம் நம் அணியில் இருக்கும் வரை பெருமையே..

Thursday, 10 July 2025

🛩️களிமண் விமானம்

#டெரகோட்டா_ஜம்போ_ஜெட்

நமது ஐ.நா. புகழ் இளம் விஞ்ஞானி செல்லத்துரையின் கண்டுபிடிப்புகள் உலகெங்கும் பரவலாகி வருவது மட்டுமின்றி தற்போது உலகளாவிய கவனம் பெற்று வருகின்றன!

அகமதாபாத் விமான விபத்தில் மனம் நொறுங்கிப் போன செல்லத்துரை இந்த உலகில் கடைசியாக நொறுங்கியது தன்மனமாகவே இருக்கட்டும் என்று தன்மானத்துடன் உறுதி பூண்டு.. இஞ்சி, சீரகம், மல்லி, கடுகு, உளுந்து மிளகு என மேலும் பல பூண்டு கண்டுபிடித்ததே இந்த “டெரகோட்டா ஜம்போ ஜெட் விமான மாடலாகும்”! இந்த விமானம் முழுக்க சுட்ட களிமண்ணால் செய்வதால் அதிக எடை இருக்காது.

மலை உடும்பு, பச்சோந்தி ஆகியவற்றின் எச்சில், அமேசான் காடுகளில் வாழும் பசைத் தவளைகளின் தோலில் சுரக்கும் பசை போன்ற திரவம் அனைத்தையும் ஃபெவிகாலோடு கலந்து அதில் மரப்பிசின் & மைதா மாவு எல்லாம் சேர்த்து ஒரு அற்புத பெயிண்ட்டை கண்டுபிடித்துள்ளார்! அதைத் தான் இந்த விமானத்தின் மீது பூசவுள்ளார். ஆகவே இந்த விமானம் மிக உறுதியாக இருக்கும், தரையில் விழுந்தாலும் நொறுங்காது.

ஒரு வேளை விமானம் வீடுகள் மீது விழும் அபாயம் ஏற்பட்டால் இந்த விமானம் அந்தக் கட்டிடத்தின் மீது விழாது! மாறாக அந்த கட்டிடச் சுவரில் உடும்பு போல கப்பென்று இறுகப் பிடித்துக் கொள்ளும். மேலும் சுட்ட மண்ணால் செய்யப்பட்டதால் இந்த விமானம் தீப்பிடிக்கவே பிடிக்காது. விமானத்தின் உட்புறம் பானைத் தண்ணீர் போல எப்போது ஜில்லென்று இருக்கும்! இப்படி ஒரே கல்லில் சாரி மண்ணில் பல மாங்காய்கள்!

செல்லத்துரையை இப்போது தங்கள் நாட்டில் குடியேறச் சொல்ல அமெரிக்காவும், ரஷ்யாவும் ரூம் போட்டு பல ஐடியாக்களை யோசித்து வரும் வேளையில், ஜெர்மன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இதற்காக 50 செவன் ஸ்டார் ஓட்டல்களையே கட்டி யோசிக்கவுள்ளது. ஈரானிடம் முகத்தில் பூரான் வாங்கியதால் இஸ்ரேல் இந்தப் போட்டியிலிருந்து விலகிவிட்டதாம். சீனாவும், ஶ்ரீஸ்தானும் பயத்திலுள்ளன!

இந்த நிலையில் இந்த விமானத்திற்கு “புஷ்பக விமானம்” அல்லது ஶ்ரீராம்தூத் என்னும் பெயரை சூட்ட வேண்டும் என்று உத்திரகாசியிலுள்ள பல மடச் சாமியார்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிறு வயதில் மண்ணை அள்ளித் தின்றவர் குழந்தை கிருஷ்ணரே ஆகவே மண்ணால் செய்த இந்த விமானத்திற்கு மதுபாலகிருஷ்ணா என்று பெயர் சூட்ட மதுராவை சேர்ந்த மடச்சாமியார் மல்ஹோத்ரா கூவியுள்ளார்.

விஞ்சாணி செல்லத்துரையின் செல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருப்பதால் அவரது கருத்தை இன்னும் அறிய முடியவில்லை. உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள இந்த பக்கத்திலேயே குத்த வைத்து காத்திருங்கள்…

‘சைடு அயர்ன்’ சானலுக்காக சேலத்தில் இருந்து “சரடு சரவணன்”