கமல், ரஜினி, சுந்தர்.சி இவர்களோடு அவரது ஆஸ்தான குழுவான சந்தானபாரதி, கு.ஞானசம்பந்தன், நாசர், ஶ்ரீப்ரியா ஆகியோருடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்.
கமல் : (சந்தான பாரதியைப் பார்த்து) வெல்.. நீங்க ஆரம்பிங்க பாரதி..
பாரதி : எனக்கு நல்லா நினைவிருக்கு 33 வருஷத்துக்கு முன்னால டெல்லியில் ஒரு ஓட்டலில் மகாநதி படக் கதையை கமல் எங்கிட்ட சொன்னார் கேட்டவுடன் நான் கதறி அழுதுட்டேன். யாரு இதுக்கு டைரக்ஷன் கமல்னு கேட்டேன். சிரிக்காம நீங்க தான் சொன்னாரு அப்புறம் அன்னிக்கு ராத்திரி பூரா நான் கதறிக் கதறி அழுதேன்.
கமல் : நீங்க மட்டுமா அன்னிக்கு, நமக்கு உணவு கொண்டு வந்த ரூம் பாய், ரூமை க்ளீன் பண்ண வந்த ஸ்வீப்பர், ஓட்டல் மேனேஜர் எல்லாமே கதறி அழுதாங்க. இங்கே அழுகை என்பது ஒரு உணர்வு அதை சந்தானபாரதியும் உணரலாம், ஓட்டல் சர்வரும் உணரலாம். ஆனா அங்கே எல்லாருமே அழுதாங்க. அந்த உணர்வு முக்கியம். எல்லார் அழுகைக்கு பின்னாலும் ஒரு காரணம் இருந்தது. அந்த ஒரே காரணம் என் கதை! இதை நான் நேர்மையாக ஒப்புக் கொண்டு தான் ஆகணும். இதை நான் நன்கு உணர்ந்த போது எனக்கும் அழுகை வந்தது. ஆனா நான் அழுது அதைப் பார்த்து மத்தவங்க அழுதா அவங்க உடம்பு தாங்காதுன்னு அன்னைக்கு நான் அழலை. இந்தப் படம் மட்டும் வந்தா தியேட்டரில் மக்கள் எல்லாமே அழுவாங்க என்பதற்கான விதை அங்கே தான் விழுந்தது. பின்னர் அது கொல்கத்தா சோனா கஞ்சில் “எழுந்தது” மனிதன் ரத்தத்தில் மட்டுமல்ல அழுகையிலும் ஜாதி மதம் இல்லை எங்கே கண்ணீரை வைத்து ஒருத்தரோட மதத்தை சாதியை யாராவது கண்டுபிடிக்க முடியுமா? எல்லா மத மக்களும் கண்ணீர் சிந்திக் கொண்டு தான் இருக்கிறார்கள் அந்தக் கண்ணீர் ஆறாகப் பெருகி பல கிளைகளிலும் ஓடி ஓரிடத்தில் பெரும் நதியாக கலந்தால் அதில் கலந்துள்ள கண்ணீர் எந்த ஜாதி அல்லது எந்த மத மனிதரின் கண்ணீர் என்று நான் நம்பாத கடவுளால் கூட கணிக்க முடியாது இது தானே மெய்யான நிதர்சனம்.
கு.ஞா : ஆஹா அதுதான் படத்துக்கு மகாநதின்னு பேரு வச்சிங்களா கமல்?
கமல் : இது இன்னும் அற்புதம் பேராசிரியரே! இது நானே சிந்திக்காத கோணம்.. இப்படி ஒரு கோணம் 33 ஆண்டுகளுக்கு பின்பும் தோன்றுகிறது.. இதே போலத் தான் நான் பி.லெனின் இயக்கத்தில் எத்தனை கோணம் எத்தனை பார்வை என்கிற படத்தில் நடித்த போது..
ரஜினி : சாரி மிஸ்டர் கமல்.. நீங்க 33 வருஷம் கழிச்சு மஹாநதியைத் தான் எடுக்கப் போறிங்கன்னா என்ன எதுக்கு கூப்டிங்க.. நீங்களே நடிக்கலாமே.. ஐ திங்க் வேஸ்ட் ஆஃப் மை டைம் ஹியர்.
ஶ்ரீப்ரியா : ரஜினி டென்ஷன் ஆயிட்டார் கமல் நீங்க கொஞ்ச நேரம் பேசாம இருங்க. நடிகர் சங்கத்தில் இருந்து நாசர் வந்திருக்கார் அவர் கருத்தை கேட்போம்! நாசர் சார் நீங்க என்ன சொல்றிங்க?
நாசர் : எனக்கொரு நல்ல ஐடியா தோணுது பேசாம மகளிர் மட்டும் படத்தை ரீமேக் பண்ணுங்க கமல்.. நான் பண்ண கேரக்டரை வேணா ரஜினி சார் பண்ணட்டும். கிட்டத்தட்ட அது அவர் ஏற்கனவே பண்ண நெற்றிக்கண் பட கேரக்டர் தானே! வேணுமுன்னா இந்த படத்தில் நாகேஷ் சார் பண்ண கேரக்டரில் நான் நடிக்கிறேன். படத்துக்கு நெற்றிக்கண் 2.0 னு பேர் வைப்போம்.
சுந்தர் சி : சார் ஒண்ணு சொன்னா எல்லாரும் தப்பா நினைக்காதிங்க இந்தப் படத்தை டைரக்ட் பண்ண என்னை மட்டும் தான் கூப்பிட்டிங்கன்னு நினைச்சேன். இத்தனை பேரை ஏன் கூப்பிட்டிங்க? ஒரேயொரு உணவை சமைக்க இத்தனை சமையல்காரங்களா?
ரஜினி : வெல் செட் சுந்தர்! மெனி குக்ஸ் ஸ்பாயில் த ஃபுட்னு சொல்வாங்க டைரக்டர் உங்களை கூப்டுட்டு நாம பேசக் கூடாது. நீங்க என்ன கதை வச்சிருக்கிங்க? அதைச் சொல்லுங்களேன்..
சுந்தர் சி : ரஜினி சார் நீங்க ஒரு பணக்கார வீட்டு பிள்ளை பொறுப்பில்லாம சுத்துறிங்க, உங்களைத் திருத்த உங்க அப்பா கிராமத்துல இருக்குற அவர் நண்பர் ரிடையர் மிலிடரி ஆபிசர் ராஜசேகர் கிட்ட..
ரஜினி : மிஷ்டர் சுந்தர்! இவங்களே பரவாயில்லை போல.. தம்பிக்கு எந்த ஊரு கதையை இப்போ ஏன் சொல்லிட்டு இருக்கிங்க..
பாரதி : ரஜினி சார், அவர் உள்ளத்தை அள்ளித்தா காலத்தில் இருந்தே இதே பேட்டர்னில் தான் கதை சொல்லிகிட்டு இருக்காரு. க்ளைமாக்ஸில் ஹீரோவும் காமெடியனும் உருட்டுக் கட்டையோட எல்லார் பின்னாலும் போயி ஓங்கி தலையில் அடிக்கிற காட்சி கண்டிப்பா இருக்குமே! சரி தானே சுந்தர் தம்பி!
சுந்தர் : இங்க பாருங்க் அமித்.. சாரி பாரதி சார் அது தமிழ்நாடே ஏத்துகிட்ட டிரெண்ட்! ஏன் நீங்களும் கமலும் மைக்கேல் மதன காமராஜனில் பேர் வச்சாலும் பாட்டு முழுக்க அதே உருட்டுக்கட்டையோட தானே அலைஞ்சிங்க!
கமல் : ப்ளீஸ் ஸ்டாப்.. என் தோழி ஶ்ரீப்ரியாவுக்காக நான் இவ்வளவு நேரம் பேசாம இருந்துட்டேன். ஏன்னா எனக்குள் ஒருவன் பட ஷுட்டிங் ப்ரேக்ல ஒரு விஷயம் நடந்தது.. உனக்கு ஞாபகம் இருக்கா ஶ்ரீ.. அந்த ஒல்லி அஸிஸ்டெண்ட் டைரக்டர் உங்கிட்ட வந்து..
ரஜினி : கமல் என் படத்துக்கு கதையை கேட்க வந்தேனா? இல்ல உங்க பழைய கதையை கேட்க வந்தேனா? வாட் இஸ் திஸ் நான் சென்ஸ்..
கு.ஞா : ரஜினி சார் உங்களுக்கு புரியற மாதிரி கமலால் சொல்ல முடியாது நீங்க ஆன்மிகவாதி உங்களுக்கு திருப் புகழ் தெரியுமில்லியா அதில் வருமே..
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ... இரவாகப்
இதுக்கு என்ன அர்த்தம்னா..
ரஜினி : (முருகேஷா நான் கேட்டேனா தொனியில்) மிஷ்டர் ஞானசம்பந்தம் நான் கேட்டேனா.. இல்ல இப்போ இதை நான் உங்க கிட்டே கேட்டேனா? அட சுந்தர் சியை கதை சொல்ல விடுங்கப்பா.
சுந்தர் : சார் இவங்க எல்லாம் எனக்கு டிஸ்டர்பா இருப்பதா நினைச்சேன் ஆனா இவங்க எல்லாம் பேசினதை வச்சி ஒரு சூப்பர் கதை ரெடி பண்ணிட்டேன்
கமல் : வெல் இதைத் தான் நானும் ரஜினியும் சிங்கப்பூரில் நினைத்தாலே இனிக்கும் பட காலத்தில் செய்தோம். அப்போது பாலச்சந்தர் இருந்தார் ஓடி வந்து என்னைக் கட்டிக் கொண்டார்.. இல்லியா ரஜினி சொல்லுங்களேன்..
ரஜினி (மைண்ட் வாய்ஸில்) / இப்போ மட்டும் அந்த பாலச்சந்தர் உயிரோடு இருந்திருந்தா மவனே நீ காலி/ ஓ யெஸ் யெஸ் தட் வாஸ் ஃபெண்டாஸ்டிக்.. இப்போ நாம இங்க கதை கேட்போமா! சுந்தர் நீங்க சொல்லுங்க.
சுந்தர் : சார் ஒரு ஆன்மிக்க நாட்டமுள்ள பெரிய தொழிலதிபர் தன் ரெண்டு பெண் குழந்தைகளோடு நிம்மதியா கோவிலுக்கு போய் திருப்புகழ் பாடி வாய் மணக்க வாழ்ந்துட்டு இருக்கார். அப்போ தனுஷ்னு ஒரு வில்லன் அவர் வாழ்க்கையில் குறுக்கிடுறான்..
ரஜினி : வெரி interesting தனுஷ்னா சொன்னிங்க! அந்த தொழிலதிபர் மனைவி?
சுந்தர் : கதைப்படி அவங்க இறந்துடுறாங்க சார்..
ரஜினி : (பெருமூச்சு விட்டு முணு முணுக்கிறார்) வெரி வெரி லக்கி மேன்.. மேல கதை சொல்லுங்க
சுந்தர் : அந்த தொழிலதிபரை பைனான்ஸ் கம்பெனி ஆரம்பிக்க வச்சு அதை திவால் ஆக்குறார்.. மக்கள் அவரை பிடித்து தர்ம அடி அடிக்க அவர் கைதாகி..
பாரதி : என்ன சுந்தர் மகாநதி கதை தானே இது! அப்புறம் அவர் பொண்ணை கடத்தி கொல்கத்தா விபச்சார விடுதிக்கு வித்துடுறான் அது தானே..
சுந்தர் : அண்ணே என்னை கதை சொல்லவிடுங்க.. அதெல்லாம் இல்லை அவர் ஜெயிலுக்கு போன அவமானம் தாங்காம தொழிலதிபரின் ரெண்டு பெண்களும் அந்த வீட்டில் தூக்கு போட்டு செத்துடுறாங்க அவங்க ஆவி அந்த வீட்டிக்குள் குடியேறுது.
ரஜினி : வாவ்.. வாவ்.. எனக்கு அப்டியே சந்திரமுகி நினைவுக்கு வருது.. மேலே சொல்லுங்க..
சுந்தர் : அந்த வீட்டில் யாருமே வசிக்க முடியலை. இந்த நேரம் ஹீரோ ஜெயிலில் இருந்து விடுதலையாகி அந்த வீட்டுக்கு வர்றார். 2 பொண்ணுங்க ஆவியும் அப்பாவை கண்டு மகிழ்ச்சியாகுறாங்க .. அவங்க ரெண்டு பேரும் தற்கொலை செய்துகிட்டதை அப்பாகிட்ட சொல்ல..
அவர் அழுகிறார் அந்த தனுஷை பழி வாங்க தேடுறார். பல பெண்களோடு உல்லாசமா வெளிநாட்டில் வாழ்ந்த தனுஷ் கடைசியா ஒரு நாள் இந்தியா வந்து அந்த வீட்டுக்கே குடி வர்றான்.. அப்பாவும் ஆவிகளும் குஷியாகுறாங்க.. அவனை எப்படி எல்லாம் பழி வாங்குறாங்க என்பது தான் சார் க்ளைமாக்ஸ்..படத்துக்கு பேரு “அரண்முகி”
ரஜினி : வெல் வெல் எனக்கு இந்தக் கதை ஒகே! வில்லன் காரெக்டர் பேருக்காகவே இந்தப் படம் பண்றேன். கமல்ஜி பேமெண்ட் கூட ஏதும் டிமாண்ட் பண்ணலை டீகே.
பாரதி : என்ன டீகே? இங்க வந்து எல்லாருடமும் கேட்ட மகாநதி, மகளிர் மட்டும், சந்திரமுகி, திருப்புகழ், இவரோட அரண்மனை எல்லாம் ஒரு டப்பாவுக்குள் போட்டு குலுக்கி ஒரு கதை சொல்லியிருக்கார். இதுக்கு நாசர் சார் சொன்ன மகளிர் மட்டும் படத்தையே எடுக்கலாம்.
கமல் : வெல்! பாரதி நீங்க சொல்றது தான் கரெக்ட் இன்னிக்கு நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை சொல்றாங்க அந்த நிலை மாறணும்னு ஒரு கருத்து வச்சி அதையே படமாக எடுப்பது தான் சிறந்த வழி.
ரஜினி : (மிகுந்த கடுப்புடன்) அரே கமல்ஜி மகளிர் மட்டும் படத்தில் நடிக்க நான் எதுக்கு நீங்களே நடிக்கலாமே?
கமல் : யெஸ்! அதே தான்.. நான் சொல்ல நினைத்ததை நீங்க சொல்லிட்டிங்க. கலைஞர் அவர்களிடம் அவரை கதாநாயகனாக வைத்து ஒரு கதை சொன்னேன்.. கேட்டுக் கொண்டார். அது என் மீது அவர் வைத்திருந்த அபிமானம்.. அண்ணன் எம்ஜிஆருக்கு ஒரு கதை சொல்லியிருக்கிறேன்.. என்.டி.ஆருக்கு சொல்லி இருக்கிறேன் ஏன் சிவாஜிக்கு கூட சொல்லியிருக்கிறேன் ஆனால் யாரும் அதில் நீயே நடி என்று சொன்னதில்லை. ஆனால் என் நண்பர் ரஜினி சொல்லிவிட்டார். அதை மறுத்தால் அது அவருக்கு மரியாதையாக இருக்காது என்பதால் நானே நடிப்பதாக முடிவெடுத்து விட்டேன்.
நாசர் : ஹைய்யா ஜாலி அப்போ அந்த நாகேஷ் கேரக்டர் எனக்கு தான்.
கு.ஞா : ஏன் கமல் நான் அந்த கேரக்டரில் நடிக்கிறேனே..
பாரதி : ஐ திங் எனக்கு அது ஈஸியா இருக்கும் நாகேஷ் கேரக்டரை எனக்கு கொடுங்களேன்..
ஶ்ரீப்ரியா : படத்துக்கு மகளிர் மட்டும்னு பேர் வச்சுட்டு அந்த கேரக்டரை ஏன் நடிகர்களுக்கு தரணும் நான் நடிக்கிறேன் கமல் அதான் சரியா இருக்கும்.
கமல் : இல்ல இப்பவும் எனக்கு நாகேஷ் சாரை நினைச்சு பொறாமையா இருக்கு. அவர் மறைந்த பிறகும் என்னிக்கோ அவர் இறந்த மாதிரி நடிச்ச கேரக்டருக்கு இவ்வளவு போட்டி இருக்குன்னா அதுக்கு நியாயம் செய்ய எங்கிட்ட ஒரு ஐடியா இருக்கு!
அனைவரும் : என்ன கமல் அது????
கமல் : இந்த படத்தில் நான் ஹீரோவா பண்றேன்.. நாகேஷ் கேரக்டரை வேணா நம்ம ரஜினி பண்ணட்ட்டுமே!! (டமார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)
[ கமல் திடுக்கிட்டு பார்க்க அவரைத் தவிர அனைவரும் மூர்ச்சையாகி விழுந்து கிடக்கின்றனர்] 
