Sunday, 24 August 2025

பாகுபலி அரண்மனை 🗡️

”உதய்பூர்”- 2



உதய்பூர் Fairmont ஓட்டல் பாகுபலி அரண்மனை போல பரந்து விரிந்து பிரம்மாண்டமாகக் காட்சியளித்தது. அதன் பின்னே தெரிந்த மலைத் தொடருக்கும் தற்போது பாகுபலி ஹில்ஸ் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள் என்பதை மறுநாள் அறிந்தேன். அரண்மனை வாசலின் எதிரேயிருந்த தூணின் உச்சியில் நான்கு சிங்கங்கள் கம்பீரமாக நின்று ஜொலித்தன.

அலங்கார உடையணிந்த அழகிய ராஜபுத்திரிகள் எங்களை வரவேற்றனர். இசைக் கலைஞர்கள் வாசித்த பாரம்பரியமான இசைக்கு இருபது அழகிய நடனப் பெண்கள் நாங்கள் உள்ளே வரும் போது எங்களுக்கு இரு புறமும் துள்ளலாக நடனம் ஆடியபடியே கூடவே வந்தனர்.. சில நொடிகள் எங்களுக்கே கொஞ்சம் கூச்சமாகத் தான் இருந்தது.

தமிழ் சினிமாக்களில் நம் ஹீரோக்கள் எல்லாம் “எஜமான் காலடி மண்ணெடுத்து, நீ பொட்டு வச்ச தங்கக் குடம்., நீ எந்த ஊரு நான் எந்த ஊரு, தல போல வருமா” பாடல்களுக்கு டான்ஸர்களுக்கு நடுவே நடந்து வருவது எவ்வளவு கடினம் என்றும் நமது நிஜ வாழ்க்கைக்கும் சினிமாவுக்கும் பலவித வேறுபாடுகள் உள்ளது என்றும் உணர்ந்த தருணம் அது.

அடுத்து அழகிய 10 பெண்கள் சுயம்வரத்தில் மாலையிடுவது போல் நமக்கு மாலை அணிவித்து அந்த கூச்சத்தை இன்னும் கொஞ்சம் கூட்டினர். அடுத்த 10 பேர் நமது நெற்றியில் திலகமிட்டு நம் தலையில் கீரிடம் போல ராஜஸ்தான் தலைப் பாகை அணிவிக்க ஒரு அரசரைப் போன்ற பெருமிதம் வந்தது என்னவோ உண்மை.. மொத்தத்தில் அங்கு நடந்ததெல்லாம்..

நம்ம வடிவேலு ஒரு படத்தில் சொல்வாரே “மை மம்மி ஆட, மை ஃபாதர் வாசிக்க, என் பிரதர் அதை ரசிக்க” என்று அது போல அந்தக் குழுவினரின் வரவேற்பு மிகச் சிறப்பாக இருந்தது. வரவேற்பு ஹாலுக்குள் நுழைந்தோம்.. கொடுத்த கட்டணம் அதற்கே சரி என்பது போல அத்தனை அலங்காரம்! விளக்குகள், சோஃபாக்கள், திவான்கள் எல்லாமே கலைநயமிக்க பேரழகு.

அதியற்புத சுவையில் எலுமிச்சை, நன்னாரி, ரோஜா இதழ்கள் சேர்த்த வெல்கம் டிரிங் ஜில்லென இனித்தது. ஹாலில் இருந்த சோபாவில் மன்னிக்கவும்.. அரியணையில் அமர்ந்தோம்.. என்பதை விட அமர வைக்கப்பட்டோம். அவர்களுக்கு மட்டும் தமிழ் தெரிந்திருந்தால் நமது கைகளைத் தட்டி ‘யாரங்கே’ என்று கூப்பிட்டால் நிச்சயம் 4 பேர் ஓடி வந்திருப்பார்கள்.

ரெஜிஸ்டிரேஷன் நேரம் முடிந்துவிட்டதால். தற்காலிகமாக எங்களுக்கு QR Code உள்ள ஒரு ரிஸ்ட் பேண்ட் தரப்பட்டது. அங்குள்ள அத்தனை அலிபாபா குகைகளும் அந்த QR கோட் இருந்தால் தான் எங்களுக்குத் திறக்கும். அறைகளை முன்பே புக்கிங் செய்துவிட்டதால் பெட்டிகள் அறைக்கு போய்விட்டன. மொத்தம் ஒன்பது தளங்களைக் கொண்ட அரண்மனை அது!

தங்க நிற லிஃப்டில் ஏறி புஷ்பக விமானப் பயணம் போல 7வது மாடியிலுள்ள ரிசப்ஷனுக்குப் போனது, அங்கிருந்து எங்கள் அறைக்கு போனது எல்லாவற்றையும் கொஞ்சம் வேகமாக ஓட்டிவிடுவோம். மணி அப்போது 7:45 இரவு ஒன்பது மணிக்கு மாடியில் கண்கவர் நிகழ்ச்சிகளுடன் இரவு விருந்து என்றார்கள். அறைக்கு சென்று தயாரானோம்.

அற்புதமான அந்த அறையின் அழகை அடுத்த எபிசோடில் பார்ப்போம். மாடியில் நடைபெறவுள்ள விதவிதமான நிகழ்ச்சிகளின் நிகழ்ச்சி நிரலை அழகாக பிரிண்ட் செய்து வைத்திருந்தனர். பலூன் ஷோ, ட்ரோன் ஷோ, சிதார் & டிரம்ஸ் இசை, பாப் & சினிமா பாடல்கள் என அந்த நிகழ்ச்சி நிரல் நிரம்பி வழிய எங்கள் மனமும் மகிழ்ச்சியில் நிரம்பி வழிந்தது.

பார்ட்டியில் கருப்பு & சில்வர் நிற டிரஸ் கோட் என ஏற்கனவே தெரியும். உடைகள் மாற்றி அந்த மாடிக்குச் சென்றோம்! வாவ் அதை மாடி என்று சொல்லக்கூடாது.. அரண்மனையின் உப்பரிகை என்றே சொல்லவேண்டும். நடுவில் பெரிய நீரூற்று அதன் இரு புறமும் அழகிய பளிங்கு மண்டபங்கள். எங்கும் அழகிய விளக்குகளில் அலங்காரம், 300 நபர்கள் அமரலாம்.

இமயம் முதல் குமரி.. அட இருங் பாய்.. அம்பானி வீட்டுத் திருமணம் முதல் அரியலூரில் திருமணம் நடத்துபவர் வரை எல்லா ஈவண்ட் மேனேஜர்களும் அங்கே குவிந்திருந்தனர். இங்கே நடைபெறவுள்ள கலை நிகழ்ச்சிகள் வெட்டிங் துறைக்கு முற்றிலும் புதியது என்பதால் எல்லார் முகத்திலும் பரபரப்பும், அளவு கடந்த மகிழ்ச்சியும், ஆர்வமும் தெரிந்தது.

விதவிதமான ஸ்டார்டர் வகை உணவுகளை தட்டிலேந்தி உலா வரும் 50 நபர்கள், 4 மதுக் கூடங்கள், 6 பஃபே கவுண்ட்டர்கள், அமர்ந்து சாப்பிட 2 கவுண்ட்டர்கள், ஹுக்கா புகைக்க இரண்டு, ஜுஸ் & ஐஸ்க்ரீமிற்கு தலா 2 கவுண்ட்டர்கள்.. அடடா! இந்திர லோகம் இப்படித்தான் இருக்கும் என்றால் நம்பலாம். அந்த உப்பரிகையெங்கும் காற்றில் உற்சாகமும் கலந்திருந்தது…

கலை நிகழ்ச்சிகள் துவங்கின.. வாவ் ‼️

ரசிப்போம்…

Saturday, 23 August 2025

“உதய்பூர்”- 1

#இராஜஸ்தானின்_சோலைவனம் 



இராஜஸ்தான்னாலே பாலைவனம் தானே! அதென்னய்யா சோலைவனம்? இது உன் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா இல்ல ‘வளக்கணங்கள்’ போல உச்சரிப்பு மிஸ்டேக்கா? என்று நீங்க கேட்குறது எனக்கும் கேட்குது. ஆம் சோலைவனமே தான். 


எங்கு பார்த்தாலும் ஏரிகள், பச்சைப் பசேல்னு மரங்கள், ஊரைச் சுற்றி வேலி போல அமைந்துள்ள ஆரவல்லி மலைத் தொடர்கள்னு அழகான ஊர் தான் இராஜஸ்தானின் உதய்பூர்.  ராஜபுத்திரர்களின் மேவார் சாம்ராஜ்ய தலைநகரம் இதுதான்.


ஆகவே எங்கு பார்த்தாலும் அழகிய பிரம்மாண்டமான அரண்மனைகள் இங்கு ஏராளம். இன்றைக்கு இந்தியாவின் டாப்5 வெட்டிங் டெஸ்டினேஷனில் உதய்பூரும் ஒன்று. ராஜா வீட்டு கல்யாணம் மாதிரி திருமணத்தை இங்கே நடத்தலாம். 


அதுக்காகவே மன்னர் உதய்சிங் மஹா’ராணா கட்டிய அழகிய பல அரண்மனைகளை வீணா’ போகாமல் திருமணங்கள் நடத்த வாடகைக்குத் தருகிறார்கள். மணமகன், மணமகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் இங்கு வந்தாலே போதும்.


சீரும் சிறப்புமாக க்ராண்டியராக ஒரு திருமணம் நடத்த சகல வசதிகளும் இங்குண்டு. இங்குள்ள அரண்மனைகளையும், அதில் நடைபெறும் திருமணங்களை எத்தனை விமரிசையாக நடத்தலாம் என்பது பற்றியும் அறிய ஒரு ஈவண்ட் நடந்தது.


இந்தியா முழுவதும் உள்ள ஈவண்ட் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அதில் ஒருவராக நாங்களும் கலந்து கொண்டோம். ஆகஸ்ட் 1,2 &3 ஆகிய மூன்று தினங்களும் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் ஏற்பாடு செய்த ஈவண்ட் இது! 


நாங்கள் கோவையில் இருந்து மும்பை பிறகு அங்கிருந்து உதய்பூர் என இரு விமானங்களில் சென்றோம். இதில் மும்பையில் 6 மணி நேரம் காத்திருந்த பின்பே உதய்பூர் விமானம். மும்பை அனுபவத்தை தனியாக எழுதவுள்ளேன்.


அதனால இப்போ உதய்பூர் போவோமா! உதய்பூரில் வந்து இறங்கிய போது மாலை 6மணி. அங்கிருந்து நாங்கள் தங்க வேண்டிய Fairmont ஓட்டல் ஒரு மணிநேர கார் பயணம். இது தான் உதய்பூரிலுள்ள மிகுந்த காஸ்ட்லியான 5 ஸ்டார் ஓட்டல்.


தினசரி வாடகை (12 மணி நேரத்திற்கு) 30 ஆயிரம் முதல் 1 இலட்சம் வரை. அந்த அறைகளை நம்ம ஊரு பஸ்ஸில் வந்து பேனா விற்பவர்கள் சொல்வாங்களே நம்ம “கம்பெனி விளம்பரத்துக்காக” நம்ம “கம்பெனி விளம்பரத்துக்காகன்னு..


அது போல அவங்க கம்பெனி விளம்பரத்துக்காக எங்களுக்கு 15 ஆயிரம் ரூபாய்க்கு தந்திருந்தார்கள். நீச்சல் குளத்துடன் அறை, மூன்று வேளை உணவு, ஊர் சுற்ற வசதி, கலை நிகழ்ச்சிகள் கட்டணம் அத்தனையும் இதில் அடங்கும்.


இதற்குப் பிறகும் பசுபதி எடுறா வண்டியைன்னு சொல்லாம இருந்தா நாம என்ன பெரிய நாட்டாமை?! உதய்பூர் ஏர்போர்ட், ஸ்டார் பக்ஸ் கடை இல்லாத நம்ம தூத்துக்குடி ஏர்போர்ட் போல சிறியது. எங்களை அழைத்து செல்ல ஒரு கார் வந்தது.


அதிகாலை எழுந்தது விமானம் ஏறி, மும்பை வந்தது, மெட் ரோவில் மும்பையை சுற்றியது, மீண்டும் உதய்பூர் விமானம் என உடல் சோர்வாக இருந்தாலும் மனம் ஏனோ உற்சாகத்தில் இருந்தது. உதய்பூர் சாலையில் எங்கள் கார் விரைந்தது.


வெளியே பார்த்த காட்சிகளில் உதய்பூர் அப்படி ஒன்றும் ராஜாக்கள் வாழ்ந்த ஊர் போல தெரியவில்லை. கருமாத்தூர், கண்டரமாணிக்கம் போன்ற சிற்றூர்கள் போல இருந்தது. இது அரசப்பட்டின்னு பார்த்தா ஆண்டிப்பட்டியா இல்ல இருக்கு!


அந்த நகர அமைப்பு நம்ம மதுரை மேலூர் போலவே இருந்தது சிட்டிக்குள் நுழைந்ததும் முதலில் கண்ணில் பட்ட கடை அந்த ஊர் டாஸ்மாக் தான். வரிசையாக 3 கடைகள் அதன்பின் 100 அடியில் இன்னும் 3 கடைகள்! எல்லாரும் நல்லா கவனிங்க..


என்னடா 6 டாஸ்மாக் கடை இருப்பதை எல்லாம் இப்பதிவில் சொல்லியாகணுமான்னு கேட்குறிங்க இல்லியா? அடுத்த 35 நிமிட பிரயாணத்தில் நாங்கள் பார்த்த டாஸ்மாக் கடைகள் 87 அதாவது எங்கள் கண்ணில் பட்டு நான் எண்ணிய கடைகள். 


உதய்பூரில் அரண்மனைகளும், ஏரிகளும் தானே அதிகம்னு படிச்சோம்! என்ன இத்தனை ஒயின் ஷாப் இருக்கு? உதய் பூரில் தண்ணீர் வசதி அதிகம்னு சொன்னது இதைத் தானோ என்று டாஸ்மாக்கினுள் நுழையாமலேயே கிறுகிறுத்தது.


டிரைவரிடம் பேச்சு கொடுத்தேன். அரேஜி நிம்பள் உதய்பூர் மே படா படா தண்ணி வண்டி ஆத்மி நெறைய இர்க்காங்ளா ஹை என்றதும் sir I know english என்றார் அந்த டிரைவர். அவர் பெங்காலியாம்.. அவர் சொன்ன விவரங்கள் இதுதான்..


நம்ம தமிழ்நாடு & பாண்டிச்சேரி பார்டர் போல உதய்பூர் நமது பிதாமகரின் மாநிலமான குஜராத் பார்டரில் அமைந்துள்ள்து. குஜராத்தில் பூரண மதுவிலக்கு இருப்பதால் பூரா பயலும் கூட்டம் கூட்டமா குடிக்க வருவது இந்த உதய்பூருக்கு தான். 


அதுதான் இங்கே கடைகள் அதிகம்! உதய்பூருக்கு தினசரி அபார வருமானம் குஜராத் குடிகாரர்களால் வருகிறது என்றார். அகமதாபாத்தே அங்கிருந்து 150 மைல் தூரம் தான். இப்போது கவனித்தால் சாலையில் நிறைய குஜராத் கார்கள் தெரிந்தன.


உதய்பூர் வந்து தங்கி குடித்து போதை தெளிந்த பின்பு ஊர் திரும்புபவர்களும் உண்டு. குஜராத் மாப்பிள்ளைகளுக்கு அம்புட்டு வெறி.. ஏனோ நீரின்றி அமையாது உலகுன்னு எழுதிய வள்ளுவன் வாக்கு என் நினைவுக்கு வந்து போனது.


எனது கடைசி 20 நிமிட பயணத்தில் மின்சார வசதியில்லாத சில ஊர்களையும் பார்க்க முடிந்தது. ஒரு வழியாக மொத்த மின்சாரத்தையும் குத்தகைக்கு எடுத்தது போல தூரத்தில் ஜொலி ஜொலித்தது Fairmont 5 ஸ்டார் ஓட்டல் அரண்மனை..


நுழைவோம்…

🍋 லெமன் ட்ரீ 🍋

#லெமன்_ட்ரீ 


கடந்த வாரம் ஈரோட்டில் 4  நாட்கள் தங்கியிருந்தேன். Lemon tree ஓட்டலில் அறைகள் முன்பதிவு செய்திருந்தனர். ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள பழைய லீ ஜார்டியன் தான் இப்போது Lemon tree ஆக மாறியிருக்கிறது. ஏற்கனவே லீ ஜார்டியனில் பல முறை தங்கியுள்ளேன். ஆஹா.. ஓஹோனு..

சொல்லமுடியாவிட்டாலும் பெரும் குறைகள் ஏதும் இல்லை.


இப்போ அது தான் Lemon tree ஆக மாறியிருக்கிறது. காரில் வந்து இறங்கும் போது ஓட்டலின் அதே பழைய வெளித் தோற்றம் தென்பட்டது சரி, பேரில் மட்டும் தான் மாற்றம் என்றெண்ணி உள்ளே நுழைந்து அசந்து போனேன். வெளியே தான் மாற்றங்கள் ஏதுமில்லை ஆனால் ஓட்டலின் உள்ளே 100% கச்சிதமாக அழகாக மாற்றியிருந்தனர். 


சமீபத்தில் ஜெய்ப்பூர், மும்பை, ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களில் 5 நட்சத்திர ஓட்டல்களில் தங்க வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட அதே போன்ற அறை அமைப்பு, குளியலறை, படுக்கைகள், இதர வசதிகள் என்னை ஆச்சரியப்படுத்தின. அறைகள் வெகு சுத்தமாக இருந்தன, டவல்கள், தலையணை, படுக்கை விரிப்புகளும் முதல் தரம்! 


துல்லியமான ஏசி, டிவி, வைஃபை கனெக்‌ஷன் எல்லாமே கனக் கச்சிதம். நான் ஜெய்ப்பூரில் தங்கியிருந்த அதே சொகுசு அறையின் மினியேச்சராக இந்த அறையிருந்தது. ஜெய்ப்பூர் ஹோட்டலில் அறையின் ஒரு நாள் வாடகை 30000 ரூபாய் ஜெய்ப்பூருக்கு க்ரூப்பாக நாங்கள் போனதால் இந்த வாடகை தனியாக என்றால் அதன் வாடகை இன்னும் ஒரு மடங்கு.


ஈரோட்டில் வாடகை ₹3000/- +tax மட்டுமே. இங்கு 24 மணி நேர செக்கவுட். ஆனால் ஜெய்ப்பூரில் செக்கவுட் 12 மணி நேரம் மட்டுமே. இந்த 3000 ரூபாய்க்கு காம்ப்ளிமெண்ட் ப்ரேக் ஃபாஸ்டும் உண்டு என்றனர். ஏதோ இட்லி, பொங்கல், உப்புமா, வடை, காபி என நான்கைந்து உணவுகள் தான் தருவார்கள் என நினைத்து உணவகத்தில் நுழைந்தேன்.


வாவ்! தினமும் 3 வகையான ஜூஸ், 3 வகையான மில்க் ஷேக், பல வகையான பழங்கள், பிரெட், பட்டர், ஜாம், கேக், டோநட்ஸ், ஆம்லெட், சிக்கன்/ மீன் சாஸ், பொங்கல், இரு வகை இட்லி, பொடி & நெய், வடை, பொங்கல், பூரி மசால், கிச்சடி, பேன் கேக் & சோயா சாஸ், அவித்த முட்டை, டீ, காபி என அமர்க்களமான மெனு! சூடாக தோசையும் தருகிறார்கள்.


தோசையில் மசாலா, பொடி, ஆனியன் & முட்டை தோசை வகைகள் நாம் கேட்க கேட்க சூடாக வார்த்து பரிமாறுகின்றனர் அன்றைய ஸ்பெஷலில் கிச்சடி, உப்புமா, கோதுமை உப்புமா என மெனுக்கள் மாறுகின்றன. பூரி/சோலா பூரியும் அப்படித் தான் நாம் கேட்டதும் சூடாக வருகிறது. ஆம்லெட், முட்டை பொரியல்னு எது கேட்டாலும் சூடாக செய்து தருகின்றனர். 


சட்னி வகைகளில் தேங்காய் சட்னியுடன், காரச்சட்னி, புதினா சட்னி, கடலை சட்னி என்று ஏதாவது ஒரு சட்னி தினம் தினம் மாறுகிறது. சாம்பார் தான் இங்கே அல்டிமேட்! என் அப்பா சொன்ன அதே சாம்பார் வைக்கும் முறை! யாருங்க இங்கே செஃப்னு கேட்டதும், இருங்க வரச் சொல்றேன் என்றனர். வந்த செஃப்பை பார்த்து வியந்து போனேன். செஃப் முரளி! 


எனக்கு முன்பே பரிச்சயமானவர். அய்யா அப்துல்கலாமிடம் பணி புரிந்தவர். சிங்கப்பூர், துபாய்,ஜெர்மன் உட்பட பல நாடுகளில் பணியாற்றியவர். அட நீங்களா என என்னை அடையாளம் கண்டு கொண்டார். அங்கு பரிமாறிய உணவுகளைப் பற்றி பாராட்டினேன். தன்னடக்கமாக ஏற்றார். இங்கே வேறென்ன ஸ்பெஷலா இருக்குன்னு கேட்டேன்.


உங்களுக்கு என்ன வேணும்னு கேட்டார். உங்க ஸ்பெஷல் என்னன்னு பந்தை அவரிடமே திருப்பினேன், சின்ன வெங்காயம், வர மிளகாய் போட்ட மட்டன் குழம்பும், கறிவேப்பிலை மசாலா போட்ட மாஷா ஃபிஷ் வருவல் இரண்டும் தான் என்றார். என்னிடம் இன்னும் இரண்டு கட்டை விரல் இருந்தால் அதிலும் டன் என்றிருப்பேன். டன் என்றேன்.


மதியம் 1 மணி சாப்பாட்டு மேசையில் ஆவி பறக்க வெள்ளை சோறும், மட்டன் குழம்பும் முதலில் வந்தது. ஈரோட்டில் வைத்த அந்தக் குழம்பின் மணத்தை அதே நேரத்தில் கரூரிலுள்ள மக்களும் நுகர்ந்திருப்பார்கள் என்று சத்தியமே செய்வேன். கறிக் குழம்பின் மணம் அத்தனை ரம்யமாக மட்டுமின்றி ஜின்னியம், விஸ்கியம், பிராந்தியமாக மண மணத்தது.


முழுதாக போட்ட சின்ன வெங்காயம் கரும் திராட்சைகளாக ஜொலிக்க வர மிளகாயின் சாறு இறங்கி காரமாக கறிச் சோறுன்னா குழம்பு இப்படித்தாண்டா இருக்கணும் என்று சூளுரைத்தது. கறி வெந்த பக்குவம் தான் இங்கே அடுத்த ஹைலைட்! இளநீரில் வழவழப்பான தேங்காய் சாப்பிட்டு இருக்கிறீர்களல்லவா அதே போல மென்மையாக இருந்தது.


குழம்பினுள் கரண்டியால் கலக்கினால் கறி கரைந்து விடும் என்றால் உடனே நம்பலாம். அத்தனை அற்புதப் பக்குவம். கறி வேப்பிலை மீன் ரோஸ்ட் இன்னுமொரு அட்டகாசம்! அதை தட்டுவடை தடிமனில் பொரித்துத் தந்திருந்தார். மொறு மொறுனு நல்ல ருசியில் வித்யாசமாக இருந்தது. அடுத்த 2 நாட்களும் சிக்கன், சில்லி மீன், வறுத்த கறின்னு மெனுக்கள்.


இதே தரத்தில் அறைகளின் பராமரிப்பும், சமையல் பக்குவமும்  இதே சுவையும் நீடித்தால் ஈரோட்டின் சிறந்த தங்கும் & சாப்பிடும் ஓட்டல்களில் தனியிடம் பிடிக்கும் ஓட்டல் Lemon tree செஃப் முரளியின் எண் தந்திருக்கேன் அவரிடம் உங்கள் தேவையை முன்கூட்டியே கேட்டு ஆர்டர் செய்து நேரில் போய் அந்த ஆம்பியன்ஸில் அனுபவித்து சாப்பிட்டு மகிழுங்கள்.


ஈரோட்டில் வணிகம் / தொழில் நிமித்தமாக அடிக்கடி பயணிப்பவர்களுக்கு நிச்சயம் நல்ல அனுபவத்தை தரும். மொத்தமாக விழாக்கள், விசேஷங்கள் என்றால் அறை வாடகையில் சலுகைகளோடு கிடைக்கும். பழைய லீ ஜார்டியன் வாடிக்கையாளர்களுக்கும் இது புது அனுபவமாக இருக்கும். நன்றி முரளி ஸார் & நன்றி Lemon Tree Team..