Sunday, 27 December 2015

5. மாயனை மன்னு...

#ஆண்டாள்_பெருமை

நாளைய வரலாறே.. இளஞ்சிங்கமே, புதுமை விரும்பியே, மாவீரனே, வாழும் வள்ளுவரே, இப்படி எல்லாம் பல அரசியல் தலைவர்களுக்கு அடைமொழி கொடுத்து அவர்களது தொண்டர்கள் போஸ்டர்கள் பேனர்கள் அடித்திருப்பதை பார்த்திருப்போம்.

இதற்கும் முன்னோடி ஆண்டாள் தான். தன் தானைத் தலைவன் கண்ணனுக்கு பாசுரத்தில் அவர் தரும் அடை மொழிகளைப் பாருங்கள் மாயனே, வடமதுரை மைந்தனே, யமுனைத் துறைவனே, ஆயர்குல அணிவிளக்கே, என்றெல்லாம் விளித்து விட்டு..முத்தாய்ப்பாக கூறுகிறார்...

தாயை குடல்விளக்கம் செய்த தாமோதரனே என்று அதாவது கண்ணனைப் பெற்றதால் அவரது தாயின் வயிறு பரிசுத்தம் அடைந்ததாம்.. எப்படி ஒரு கற்பனை பாருங்கள் தற்போதைய தமிழகத்தில் ஆண்டாள் அரசியல்வாதியாக  இருந்திருந்தால் நிச்சயம் இந்த வார்த்தைக்காக அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும்.

ஆனால் எவரும்  தூய மனதோடு மலர் தூவி கண்ணன்பேரை சொல்லி பூஜிப்பதே போதும் அப்படிச் செய்தாலே நம் செய்த செய்ய நினைக்கிற கேடுகள் எல்லாம் தீயினால் தூசாகும் என்கிறார். இந்தத் தீயினால் தூசாகும் என்னும் தொனியில்..

தன் தலைவன் கண்ணனால் நம் பாவங்கள் பஸ்பமாகும் பொசுங்கும் பொடிப் பொடியாகிவிடும்  என பிறருக்கு உத்திரவாதம் அளிக்கிறார்.. தனக்கு அதுவே போதும் என்கிறார் பதவியை எதிர்பாராத அப்பாவித் தொண்டரான ஆண்டாள்.

மார்கழி 5 ஆம் நாள் பாடல்..

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

4. ஆழிமழைக் கண்ணா...

#ஆண்டாள்_பெருமை

கடல் நீர் ஆவியாகி மேகத்தில் சேர்ந்து மழையாகப் பொழிகிறது என்பது இன்றைய அறிவியல் மனிதர்களான நமக்கெல்லாம் தெரியும்.. ஆனால் இது ஆண்டாள் வாழ்ந்த காலத்திலும் தெரிந்திருக்கிறது என்பது தான் வியப்பான செய்தி. எந்த ரமணனும் இல்லாத காலத்திலும் ஆண்டாள் வாசித்த வானிலை அறிக்கை தான் இந்த பாடல்.. 

கருமை நிற கண்ணனை மேகமாக உருவகப்படுத்துகிறார் ஆண்டாள். மழைக் கடவுளான வருணா நீ கடலுக்குள் நுழைந்து நிறைய நீரை எடுத்துக் கொண்டு பெரும் ஒலியுடன் மேலெழுந்து மேகமாக மாறி மின்னல் ஒளிர அம்பு போல் சரம் சரமாய் மாலவன் அடியவர்களுக்கு  அருள்வது போல மழையை பொழிவாயாக என்கிறார்.

இதில் பெருமாளின் சங்கினை இடியாகவும் அவரது சக்கரத்தின் ஒளியை மின்னலாகவும் அவரது சாரங்கம் என்னும் வில் அம்பை மழையாகவும் ரசனையோடு உவமைப் படுத்துகிறார்.  மார்கழியிலும் அக் காலத்தில் மழை இருந்திருக்கிறது என்பது இன்றைய சென்னை வாசிகளுக்கு திகிலூட்டும் சேதி.

மார்கழி 4 ஆம் நாள் பாடல்...

ஆழிமழைக்கண்ணா!ஒன்று நீ கைகரவேல்;

ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்

பாழியம் தோளுடைய பற்பநா பன்கையில்

ஆழி போல் மின்னி,வலம்புரி போல நின்றதிர்ந்து,

தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்

வாழ உலகினில் பெய்திடாய்,நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

3. ஓங்கி உலகளந்த...

#ஆண்டாள்_பெருமை

சினிமாவில் மாண்டாஜ் ஷாட்டுகள் என்னும் ஒரு வகை உண்டு.. ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத வெவ்வேறு காட்சிகள் ஆனால் அனைத்தும் அது தொடர்பானவை. உதாரணமாக முதல்வன் திரைப்படத்தில் ஒரு நாள் முதல்வராக அர்ஜுன் இருந்துவிட்ட பின் நாடெங்கும் வெவ்வேறு ஊர்களில் மக்கள் அவரது ஆட்சியின் சிறப்பைப் பற்றி டிவியில் கூறுவார்கள். இது மாண்டாஜில் ஒரு வகை.

பாலுமகேந்திரா மணிரத்னம் படங்களில் மாண்டாஜ் காட்சிகள் பாடலில் இடம் பெறும் கலைஞன் படத்தில் வரும் எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா பாடல் மாண்டாஜுக்கு நல்ல உதாரணம்.இந்த மாண்டாஜ் உத்தியை ஆண்டாளும் கையாள்கிறார். 

ஓங்கி இவ்வுலகை அளந்த பெருமாளை வணங்கி குளித்து விரதம் இருக்கிறார்கள் பெண்கள் அவரை வணங்குவதால் என்னவெல்லாம் நடக்கும்? அப்படியே ஷாட்டை இங்க கட் பண்ணா.. நாட்டில் தீயவை அழிகிறது மாதம் மும்மாரி பொழிகிறது நெல்கள் செழிப்பாக வளர்கிறது.. அந்த வயல்களிடையே ஓடும் கால்வாயில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன.. அதன் கரைகளில் இருக்கும் கருங்குவளை மலர்களில் தேன் உண்ணுகிறது..

மடி நிறைய பால் நிறைந்திருக்கும் பசுக்கள் கறப்பதற்கு முன் தானாகவே கொடுத்த வள்ளல் போல பாலை சுரக்கிறது.. எங்கும் செல்வம் செழிக்கிறது. இத்தனயும் மார்கழி விரதத்தின் மகிமைகள் என்கிறார் இயக்குநர் இமயம் ஆண்டாள்.

மார்கழி 3 ஆம் நாள் பாடல்...

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி 

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரிபெய்து

ஓங்கு பெருங் செந்நெல் ஊடு கயலுகளப்

பூக்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோ எம்பாவாய்.




2. வையத்து வாழ்வீர்காள்...

#ஆண்டாள்_பெருமை

Universal என்னும் வார்த்தைக்கு உலகெங்கும் பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வதில் காட்டும் அக்கறையை உதாரணமாகச் சொல்லலாம்.பெண்கள் மேக்கப் போட உடை மாற்றி கிளம்ப ஆகும் நேரம் இதையெல்லாம் கிண்டலடித்து துணுக்குகள் படித்திருப்போம்.

இன்று பல வீடுகளிகளில் அழகு சாதனப் பொருட்கள் அத்யாவசியப் பொருட்களாகி விட்டன. மாதம் சில பல ஆயிரங்கள் அதற்குச் செலவும் ஆகிறது. ஆனால் அதிகாலை எழுந்து குளித்துவிட்டு அதன் பின் கண்ணில் மையிட்டுக் கொள்வதில்லை தலையில் பூச்சூடிக் கொள்வதில்லை என எந்தப் பெண்ணும் சொல்வாளோ..!!

பாவை நோன்பு என்னும் விரதத்தை கடைபிடிக்கும் ஆண்டாள் சொல்கிறார். நெய் உண்ணோம் பால் உண்ணோம் என சாப்பாடும் விஷயத்தில் மட்டும் விரதம் இருப்பது பெரிதல்ல.தீய சொற்கள் பேசாதிருப்பது பெரிதல்ல.. தான தருமங்கள் செய்வது பெரிதல்ல.. 

செய்யக் கூடாததை செய்யாமல் இருப்பது பெரிதல்ல
பெண்ணின் இயல்பான அலங்கரிக்கும் குணத்தையும் அந்த மாலவனுக்கு அர்ப்பணிப்பது தான் பெரிது.. அதுவே இந்நோன்பின் நோக்கம் என்னும் போது கண்ணன் மேல் ஆண்டாள் கொண்ட அளவிலா நேசம் புரியும்.

மார்கழி 2ஆம் நாள் பாடல் :

வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்

பையத் துயின்ற பரம னடிபாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே 
நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் 
முடியோம் செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் 
சென்றோதோம் 
ஐயமும் பிச்சையும் 
ஆந்தனையும் கைகாட்டி
 உய்யுமாற் எண்ணி 
உகந்தேலோர் எம்பாவாய்.

1. மார்கழித் திங்கள்..

#ஆண்டாள்_பெருமை

ஒரே வார்த்தையில் பல விஷயங்களை  சொல்லிவிடுவார்கள் சிலர். ஆண்டாளும் அப்படியே நிலா சூரியன் மேகம் மூன்றுமே கண்ணன் ஒருவனே என்கிறார்.. கார்மேக வண்ணமும் சூரியன் போல சூடும் நிலா போல் குளிர்ச்சியும் ஒன்றாக உடையவன் என்கிறார்.. மார்கழி மாதத்து நிறை நிலா நன்னாளில் நீராடச் செல்வோம் 

ஆயர்குல செல்வப் பெண்களே கூரான வேலினால் கொடுமையை அழிக்கும் நந்தகோபனும் அழகிய கண்ணுள்ள யசோதையும் வளர்த்த இளம் சிங்கம் கார்மேகவண்ண சூரிய சந்திரன் போல முகமுடைய கண்ணன் நமக்கு பறை தந்து அருள்வான் உலகமே அவனை புகழும்படி பாடிடுவோம் வாருங்கள்.

இந்தப் பாடலில் ஏரார்ந்த கண்ணி என்று அழகான கண் உடையவள் என யசோதையையும் வர்ணிக்கிறார்.. உலகில் மாமியாரின் அழகை வர்ணித்த ஒரே பெண் ஆண்டாளாகத் தான் இருக்க முடியும்.. சரிதானே!

மார்கழி 1ஆம் நாள் பாடல்..

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ 
நேரிழையீர்
 சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச்
சிறுமீர்காள்
 கூர்வேல் கொடுந்தொழிலன் 
நந்தகோ பன் குமரன் 
ஏரார்ந்த கண்ணி யசோதை 
இளம் சிங்கம்
 கார்மேனி செங்கண் கதிர்மதியம் 
போல் முகத்தான் 
நாரா யணனே நமக்கே 
பறை தருவான்
 பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.


Sunday, 20 December 2015

T3

#தோழா_தோழி_திருவிழா

T 3 என சுருங்க அழைக்கப்படும் இவ்விழாவிற்கான அழைப்பு முதலில் ஷாஜகான் ஸார் பதிவில் நண்பர்களுக்கு பொதுவில் வைக்கப்பட்டிருந்தது.. ஏற்கனவே இருமுறை அவரை சந்திக்க இருந்து அது முடியவில்லை.. இம்முறை அவரை சந்திக்கும் வாய்ப்பை தவறவிடக்கூடாது அதனால்  நிச்சயம் ஒருநாளாவது அங்கு போவது என முடிவெடுத்து இருந்தேன்.

இடையில் பெருமழையால் சென்னையில் பல வேலைகள் தள்ளிப்போக 2 நாட்களும் போகும் சூழல் ஏற்பட்டது.. நான் முகநூலில் குருவாக ஏற்றுக் கொண்டிருக்கும் நான் ராஜா மகள் நிச்சயம் 2 நாளும் வரவேண்டும் என என்னிடம் கேட்டுக் கொண்டார்.. நிச்சயம் 2 நாட்களும் வருகிறேன் என உத்திரவாதம் அவருக்கு தந்துவிட்டேன். ஆனால் அதற்கும் வினை வந்தது.

நிகழ்ச்சிக்கு சரியாக 4 தினங்களுக்கு முன் புதிய திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு 16,17 &18 ஆகிய மூன்று தினங்களும் எனக்கு படபிடிப்பு கொஞ்சம் படபடப்பும் வந்தது.லதா அருணாச்சலம் அங்கு போகிறார் எனத்தெரிந்ததும் ராஜாமகளிடம் நான் 18 ஆம் தேதி வரமுடியாது ஆனால் நிச்சயம் 19 ஆம் தேதி வருகிறேன் எனத் தகவல் சொல்லச் சொன்னேன்.

எனக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது 18 ஆம் தேதி மதியமே படபிடிப்பு முடிய உடனே கிளம்பிவிட்டேன். சரியாக மாலை 5 மணிக்கு மண்டபத்தை நெருங்க ஷான் கருப்பசாமியும் ஶ்ரீதர் சுப்ரமணியமும் ஒரு கடையில் காபி அருந்திக் கொண்டிருந்தார்கள் உங்களைப்பத்தி தான்பேசிகிட்டு இருந்தோம் கரெக்டா வர்றீங்க என்றார்ஷான் சேர்ந்தே மண்டபத்திற்குள் நுழைந்தோம். மேடையில் ஷாஜகான் ஸார் பேசிக்கொண்டிருந்தார்.

பிரபா சுப்ரமணியன் தேநீருடன் வரவேற்றார்.. ஆதித்யா ஆதித்யா, கார்த்திக் புகழேந்தி, தமிழ் அரசி, லதா அருணாச்சலம், மரியா சிவானந்தம் என அறிந்த முகங்களும் பல அறியாத முகங்களும் இருந்தனர்.. ராஜாமகள் மேடையில் பம்பரமாக சுழன்று கொண்டிருந்தார்.. அவருக்கு உதவியாக அவரது குடும்பத்தினரும்.. மாலை ஞானி அவர்களின் பரிட்சார்த்தா குழுவினரின் நாடகம் இருப்பதாக அறிவித்து விட்டு ஷாஜகான் ஸார் மேடையிலிருந்து கீழிறங்கி

என்னைப் பார்த்ததும் விழிகள் விரிய புன்னகைத்தார்.. விரைந்து அவரை தழுவி கை குலுக்கிக் கொண்டேன்.. வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி என்றார்.. வாங்க சாப்பிட போகலாம் என்னும் குரலுக்கு திரும்பினால் ராஜாமகள்.! குருவை வணங்கினோம் பிரமாதமான சுண்டல் வாழைக்காய் பஜ்ஜி டீ என எளிய சுவையான சிற்றுண்டி.. இங்கு பரிமாறிய உணவுகளை தனிப்பதிவாக போட உத்தேசம்..ஆகவே வாங்க ஞானி ஸார் நாடகம் பார்க்க போலாம்.

வரும்...

Thursday, 10 December 2015

பாரதிக்கு

#பாரதிக்கு_சமர்ப்பணம்

செந்தமிழ்நாடெனும் போதினிலே- மழை வெள்ளமும் பாயுது வீட்டினிலே- எங்கள் அமைச்சர்கள் யாவர்க்கும் பேச்சும் இல்லே- பெருமூச்சும் பிறக்குது மக்கள் மூக்கினிலே..

சோகம் நிறைந்த தமிழ்நாடு- வீண் விளம்பரம்  நிறைந்த தமிழ்நாடு- நிலவினில் கண்டிடும் குழிகளைப் போல் நெடுஞ்சாலைகள் கொண்ட தமிழ்நாடு..

காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்க் கண்டதோர் வையை பொருனைநதி- மணல் வாரி எடுத்து பின் வெள்ளத்திலே நன்கு மூழ்கிக் கிடக்கும் தமிழ்நாடு..

முத்தமிழ் பின்தள்ளி நல் ஆங்கிலத்தில் கல்விச் சாலைகள் கொண்ட தமிழ்நாடு-செல்வம் எத்தனை யுண்டோ அத்தனையும் விற்று கல்வி வியாபாரமான தமிழ்நாடு...

நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று மீனவர் வருவதை எதிர்பார்த்திருந்து அண்டை நாட்டிடம் அவர் மாட்டியதும் ஒரு கடிதம் எழுதுகின்ற தமிழ்நாடு...

வள்ளுவன் சிலப்பதி காரமென்று-மணியாரம் படைத்த தமிழ்நாடு
இதை புத்தகத்தில் மட்டும் படித்துவிட்டு வெட்டி ஜம்பம் அடிக்கும் தமிழ்நாடு...

சிங்கள நாட்டுக்கு கச்சத்தீவையுமே தாரையும் வார்த்த தமிழ்நாடு
புலிக்கொடி மீன்கொடி பறந்த இந்நாட்டினில் கட்சிக் கொடிகள் பறக்கவிட்ட திருநாடு..

ஏரிகள் எல்லாம் ஆக்ரமிப்பு அதை கேட்கவும் தைரியம் எழவும் இல்லை பிறர் வெள்ளத்து நிவாரணப் பொருட்களிலும் நன்கு ஸ்டிக்கர்கள் ஒட்டும் தமிழ்நாடு. 

<{புதிய பாரதி}>