ஆரஞ்சு பழத்தை உரிச்சா உள்ள ஒரு ஆரஞ்சு பழம் இருந்தா எப்படி இருக்கும்? அதே மாதிரி வெள்ளை பீங்கான் தட்டின் மேலே அந்த வெள்ளை நிறத்திலேயே இருக்கும் ஆப்பம் பார்த்திருக்கிங்களா சார்?!
அதன் மீது இருந்து வரும் ஆவி மட்டும் தெரியாமல் போனா கொஞ்சம் திணறித் தான் போவோம். சென்னை.. மன்னிக்க அன்றைய மெட்றாஸில் மிலிடரி ஹோட்டல்கள் இருந்த பொற்காலம்.
ஆப்பமும் பாயாவும் தான் அன்றைய மெட்றாஸின் அசைவ உணவின் ஐகான். கலைஞரின் மஞ்சள் துண்டு, மலராத தாமரையின் காவி, TVKயின் சிவப்பு & மஞ்சள், ஆழ்ந்த பழுப்பு, காக்கி, தேன் நிறம் என்று..
பாரதியாரின் தேசபக்தி பூனைப் பாடல் போல இங்கு பாயாக்களின் நிறங்கள் ஏராளம். அவை எதுவுமே தரத்தில் வேறுபட்டதே இல்லை. அன்று மட்டன் சிக்கன் குழம்புகள் எல்லாம் தனித்துவமாக இருக்கும்.
அப்போதெல்லாம் சிக்கன் குழம்பு அவ்வளவு ஃபேமஸ் கிடையாது. 1980களில் ஒரு கிலோ மட்டனே ₹35 தான் அப்போது ஒரு பெரிய முழுக் கோழி ₹20 என்று நினைவு. அன்றைய மிலிடரி ஓட்டல்களின்..
மெனுப் பட்டியலே ரசனையா இருக்கும். அப்போதெல்லாம் யாரும் சிக்கன்னு சொல்ல மாட்டாங்க, கோழி பிரியாணி, கோழிக் குழம்பு, கோழி மசாலா இப்படித்தான் சொல்லுவாங்க.
மட்டனில் தலைக்கறி, மூளைன்னு ஆரம்பிச்சு ஆட்டுக்கால் வரை எல்லா ஸ்பேரையும் பார்ட் பார்ட்டா சமைச்சு வச்சிருப்பாங்க. மிலிடெரி ஓட்டல்களில் அன்று ப்ளேட் டிஸ்ப்ளேன்னு ஒன்று இருந்தது.
தாம்பாளம் மாதிரி பெரிய தட்டில் தலைக்கறி, மூளை, வறுவல், சுக்கா, குடல், பாயா, சாப்ஸ், தொடை என்று சின்னச் சின்னக் கிண்ணங்களில் வைத்து நம் டேபிளுக்கு சர்வ் பண்ண எடுத்துட்டு வருவாங்க.
சிலர் அப்படியே வாங்குவாங்க, சிலர் அதை Fry பண்ணி வாங்குவாங்க. சில ஓட்டல்களில் முயல், புறா, காடை எல்லாம் இருக்கும். அன்று கிரைண்டர் மிக்ஸி இல்லாததால் எல்லாம் கையால் அரைச்சது தான்.
அந்த மசாலாவுக்கு இருக்கிற வாசம் வெட்டி வேரு வாசம் போல நேசமாக வீசும். அந்த வாசத்தை வைத்தே மட்டன் குழம்பு எது, சிக்கன் குழம்பு எது, மீன் குழம்பு எதுன்னு நம் மூக்கு தரம் பிரித்துச் சொல்லிடும்.
கறிக் குழம்புகளின் மணத்தை குழம்பாமல் கண்டுபிடிக்கும் அளவுக்கு அன்றைய சமையல் முறையும் பக்குவமும் இருந்தது. தேங்காய் சில்லு போன்ற நெஞ்சு சாப்ஸில் கறியை சாப்பிட்டு மீதி..
எலும்பை இலையில் வைத்தால் சூபர்வைஸர் நம்மிடம் வந்து அண்ணா இந்த எலும்பை கடிச்சு சாப்பிடலாம், தேங்காய் மாதிரி தான் உடம்புக்கு நல்லது என்று டிப்ஸ் தந்து சாப்பிட வைப்பார்கள்.
சுக்காவை கொஞ்சம் தயிர் சோறுக்கு தொட்டுக்கோங்க.. விரால் மீன் ரசத்துக்கு நல்லா இருக்கும். மூளை ரோஸ்ட் மட்டன் குழம்புக்கு தொட்டுக்க நல்லா இருக்கும் போன்ற டிப்சுகளை..
இன்று எவ்வளவு டிப்ஸ் நீங்க தந்தாலும் கொடுக்க ஆளில்லை. அதே போல உணவில் எதாவது குறை சொன்னால் உடனே அதை எடுத்துட்டு போயிடுவாங்க (அது அன்று பெரும்பாலும் நடக்காது)
இன்று இதுக்கு ஒரு குருஷேத்திரப் போரே நடத்த வேண்டியது இருக்கு. பீங்கான் தட்டில் தரும் இடியாப்பம், ஆப்பம், பாயாவாகட்டும், இலையில் பறிமாறும் சாப்பாடு ஆகட்டும் ஒன்றுக்கு ஒன்று சோடை போகாது.
இன்று கொல மாஸா இருந்துச்சு, டாப் நாட்ச், தட்டி காயப் போட்டாங்க, அல்டியா இருந்துச்சுன்னு சொல்லி கடைசியா வேற லெலவல்னு யூ டியூபில் சொல்ற ரிவ்யூஸ் எல்லாம் உண்மையில் மெகா காமெடி தான்.
ஓட்டலை சேவைத் தொழிலா பார்த்த காலம் அது. இன்று எல்லாம் வணிகமயம் தான், மீடியாக்கள் தரும் ஹைப்பில் ஆட்சியைக் கூட பிடிக்கலாம், ஆனா அறுசுவையில் அது என்றும் நடக்கவே நடக்காது.
🍖 மிலிடெரி ஓட்டல்களின் காலம் பொற்காலம் தான் 🍗❤️❤️

No comments:
Post a Comment