Wednesday, 22 October 2025

#ஜுராசிக்_விரதம் 


இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் பக்திப் படங்கள் வருவதே இல்லை. அவை தினசரி சீரியல்கள் பக்கம் கரை ஒதுங்கி விட்டன. கே.பி.சுந்தராம்பாள் காலத்து பக்தி படங்கள், பிறகு சிவாஜி & APN கூட்டணி, தேவர் பிலிம்ஸ், பக்திப்படப் புகழ் இயக்குநர் சங்கர், KSG,ஜெகதீசன், இராமநாராயணன் போன்ற இயக்குநர்கள் இதில் குறிப்பிடத் தகுந்தவர்கள்.


ஆனால் இவர்கள் காலத்தில் எடுக்கப்பட்டதைவிட இன்றைய காலம் தான் பக்திப்படங்கள் எடுக்க சரியான காலம். ஏனெனில் CG, VFH தொழில்நுட்பங்களை தாண்டி AI கோலோச்சும் காலம் இது நினைத்தால் அந்த கே.பி சுந்தராம்பாளையே இப்படங்களில் நடிக்க வைக்க முடியும். AI தொழில்நுட்பமும் பெரும் பொருட் செலவுகளைத் தராது. 


தேவர் & இராமநாராயணன் பாணியில் யானை, ஆடு, பாம்பு, நாய் போன்ற மிருகங்களை வைத்து படம் எடுப்பதும் கடினம். ஏனென்றால் நீலக் கூட்டல் குறி அமைப்பினர் விதிக்கும் நிபந்தனைகளும், கெடுபிடிகளும் அப்படி, AIயில் இந்தப் பிரச்சனைகள் ஏதும் இல்லை. இந்த AI டெக்னாலஜியில் டைனோசர்களை வைத்து ஒரு பக்திப்படம் எடுக்க என் கதை..


“ஜுராசிக் மங்கலம்” சத்தியமங்கலம் வனப்பகுதியில் அமைந்துள்ள மலை கிராமம். 


இந்த வனப்பகுதியில் ஏராளமான டைனோசர்கள், மற்றும் அவற்றின் இனங்களான டைரொனோசர்கள், அந்த இனத்துப் பறவைகளான ராப்டர்கள்தியோபரோட்டுகள்ப்ராச்சோஸரஸ்அபோடோசரஸ் மற்றும் டிப்ளோடோகஸ்போன்ற உயிரினங்கள் பக்தியுடன் வாழ்ந்து வந்தன


இந்த இடத்தை அரசாங்கம் ‘டைனோசர் ரிசர்வ் ஃபாரஸ்டாக’ அறிவித்திருந்தது. மேலும் காட்டின் நடுவே ஒரு வன பத்திரர் ஆலயமும் அமைந்திருந்தது. ஒவ்வொரு மாசி மாத கடைசி அமாவாசையன்று இங்கு ஒரு திருவிழா நடக்கும். அச்சமயம் அங்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதியில்லை. முழுக்க முழுக்க டைனாஸர்கள் மட்டுமே வழிபடும் திருவிழா இது.


அச்சமயம் டைனோசர்கள் அங்கப் பிரதட்சணம் செய்யும் டைரொனோசர்கள்மண் சோறு சாப்பிடும்ப்ரோச்சோஸரஸ்கள் அலகு குத்தி காவடி எடுத்து டும் அபோடோசரஸ் தீ மிதிக்க பூக்குழி இறங்கும். அந்த தினம் முழுவதும் அங்கே விழா சீரும் சிறப்புமாக நடைபெறும். இதை விடியோவாக எடுத்து யூடியூபில் அப்லோடு செய்ய..


ஒரு சதிகார கும்பல் முடிவு செய்கிறது. திடீரென காட்டில் ஒரு விநாயகர் கோவில் துவங்குகிறது வனபத்திரரை வழி பட்ட டைனோசர்கள் புதுக் கோவிலை கண்டு குழப்பம் அடைந்தாலும் அதையும் பயபக்தியோடு வணங்குகிறது. டைனோசர்களின் மாசி விழா போலவே வன கணபதி ஜெயந்தி என்று ஒரு விழாவே உருவாக்கப்படுகிறது.


மக்கள் அந்தக் காடு நோக்கி படையெடுக்க வனப்பகுதியில் ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் கட்டப்படுகின்றன. டைனாஸரின் வாழ்விடங்கள், வழித்தடங்கள் ஆக்ரமிக்கப்படுகின்றன. குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது, மரங்கள் வெட்டப்படுகின்றன டைனோசர் இனங்கள் மடிகின்றன. அமைதியாக வளமாக இருந்த காடு பொலிவிழந்து சுடுகாடாக மாறுகிறது.


டைனோசர்கள் கூடி வன பத்திரர் ஆலயத்திற்கு சென்று மனமுருகி வேண்டுகின்றன. இந்த மனிதக் கூட்டத்திடம் இருந்து எங்களை காப்பீர் என்று மன்றாடி பாடுகின்றன. என்ன ஆச்சரியம்! மறுநாள் காலை அந்த காட்டிற்கு டைனோசர்களின் வன வாழ்வியல் குறித்து பலவித ஆராய்ச்சிகளை செய்து வரும் ஒரு குழுவினர் வருகின்றனர். 


அதன் தலைவர் விஞ்ஞானி “வெங்கட பத்திரன்” அவர் அந்த ஜுராசிக் மங்கலத்தில் பிறந்தவர் தான். அவர் குலதெய்வமும் அந்த வனபத்திரர் தான்! டைனோசர்கள் அக மகிழந்தன. தம் வேண்டுதலுக்கு செவி சாய்த்த வனபத்திரரை போற்றி கர்ஜித்தன. விஞ்ஞானி காடு முழுதும் சுற்றுகிறார் வழியில் மயங்கி கிடக்கும் டைனோசர்களை காப்பாற்றுகிறார்.


மேலும் டைனோக்களை பசியும் தாகமும் தாங்க, வாரா வாரம் வெள்ளிக்கிழமை தோறும் விரதம் இருக்க பழக்குகிறார். டைனோக்களும் சரியானபடி விரதத்தைப் பழகி குறைந்த அளவு நீரிலும், குறைவான உணவிலும் நிறைவாக வாழத் துவங்கின, டைனோசர்கள் வனபத்திரருக்கு இணையாக விஞ்ஞானி வெங்கட பத்திரரை வணங்க ஆரம்பித்தன. 


தற்செயலாக எதிரிகள் மாசி விழாவை படம் பிடிக்க காட்டில் பல இடங்களில் பொருத்தியிருந்த காமிராக்களை இந்த விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்து அதை அகற்றுகின்றனர். கொதித்து போன எதிரிகள் காட்டில் ஒரு ‘கஜேந்திர ஆதரவாளர்கள் மாநாடு’ என்று தேதி அறிவிக்கிறார்கள்.


முன்னைவிட பெருங்கூட்டம் காட்டிற்கு வரும் என்று கணித்த விஞ்ஞானி வெங்கட பத்திரர் உடனடியாக வனபத்திரர் ஆலயத்தின் அருகே முகாமிடுகிறார்! இந்த கூட்டத்தின் ஆட்டத்தை நிறுத்த அவர் என்ன செய்தார்? அவரது திட்டம் என்ன? டைனோசர்கள்  எப்படி அவருக்கு உதவின? அனைத்தையும் வெண் திரையில் காண்பீர்..


வீர வனபத்திரா.. வெற்றி வனபத்திரா.. 

பத்திரா பப்பா மோர்யா.. 

Saturday, 18 October 2025

ஒரு இந்தியனின் கனவு 💨


அந்த அரங்கம் மிக மிக மிக ஆனந்தமாக இருந்தது.. அந்த அரங்கில் பல்வேறுஅறிவிப்புகள் வர மக்கள் உற்சாக மிகுதியுடன் முழக்கமிட்டுக்கொண்டிருந்தனர்..


திடீரென உலகளவில் இந்தியப் பங்கு சந்தை மதிப்பு கிடுகிடுவென உயர்ந்துஅமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு 0.50 பைசாவுக்கு  வந்ததால் பல வரிகளைரத்து செய்து,ஒரு லிட்டர் பெட்ரோல் இனி 1 ரூபாய் தான் என்று அரசுஅறிவித்தது.


GST வரி இனிமேல் வசூலிக்கவே படாது என்றும் 0% GST நாளை முதல்கமலுக்கு வரும் என்றும்,மேலும் இது நாள் வரை மக்கள் கட்டிய மொத்த GST தொகையும் 56% வட்டியுடன் திருப்பி வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வந்தது.


இது எங்களால் கூட முடியாத சாதனை ஆகவே நாங்கள் உலக அரசியலில்இருந்து விலகுகிறோம் என்று டிரம்ப்பும்புதினும் கூட்டாக அறிக்கைவிடவடகொரியாவும் அதை ஆமோதிக்க..


அமெரிக்காவில் வசிக்கும் ஒட்டு மொத்த இந்தியர்களும் சுந்தர் பிச்சைதலைமையில் இனி அமெரிக்கா பக்கம் தலை என்ன கால் விரல் வைத்து கூடபடுக்க மாட்டோம் என்று இந்தியாவுக்கு திரும்பி வர..


இனி மேல் தமிழக மீனவர்களின் மீது தாக்குதல் நடத்தினால் இலங்கை மீதுபோர் தொடுப்போம்... இதே நிலை தான் சீனா & பாகிஸ்தான் எல்லைநாடுகளுக்கும் எனும் பிரகடனம் வர.. 


கலங்கிய இலங்கை கச்சத்தீவு மட்டுமல்ல அங்குள்ள மிச்சத் தீவுகளையும்இந்தியாவுக்கே என்று அறிவித்து மத்திய அரசிடம் வெற்று ஸ்டாம்ப் பேப்பரில்12 பிளாங்க் செக்குகளுடன் கையெழுத்து போட்டுத் தர.. 


அருணாசல பிரதேசம்முதல் இமயமலை வரை சீனா தான் ஆக்ரமித்தபகுதிகளை இனி இந்தியாவுடன் வாலாட்ட மாட்டோம் என தலை வணங்கிகூறிவிட்டு  இதே போல பத்திரத்தில் கையெழுத்து போட்டு தந்துவிட்டுபத்திரமாக பீஜிங் திரும்பிட..


இனி எங்களால தனியா எதுவும் முடியலண்ணே நாங்க மறுபடியும்இந்தியாவுடன் வந்து இணைஞ்சிக்கிறோம்னு பாகிஸ்தான் கதறிக் கதறிகண்ணீர் விட..


ஆம் ஆத்மி கட்சியைக் கலைத்துவிட்டு கைலாசாவில் போய் குடியேறுகிறேன்என்று கெஜ்ரிவால் அறிவிக்க.. 


தேச ஒற்றுமைக்காக நான் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகிறேன் என்று ராகுல்காந்தி தெரிவிக்க.. 


காவிரியில் இருந்து எவ்வளவு நீர் வேண்டுமானாலும் தமிழ்நாட்டுக்கு எடுத்துக்கொள்ளுங்கள் என கர்நாடகா அரசு நம் காலில் விழுந்து கெஞ்ச..


அந்த விநாடியில் நாட்டு மக்கள் அனைவரின் மொபைலிலும் 15 இலட்சம்கிரெடிட் ஆகிய மெசேஜ் வந்து பலர் அதிர்ச்சியில் மூர்ச்சை ஆகி விழ..


தேர்தலில் எப்போதும் போட்டியிடவே மாட்டேன் என ரஜினி  சூளுரைக்கநாட்டுநலனுக்காக திமுகவும் அதிமுகவும் ஒன்றாக இணைந்து இனி அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் ஆள்வோம் இரு கட்சியிலும்..


சரிபாதி எண்ணிக்கையில் அமைச்சரவை அமையும் அதில் ஐந்தாண்டுகளுக்குமாற்றமே கிடையாது என்றும் இன்று நள்ளிரவு முதல் தமிழகத்தில் டாஸ்மாக்மூடப்படுகிறது என்று ஸ்டாலினும் எடப்பாடியும் கூட்டாக  அறிவிக்க..


இனி எந்த கட்சியுடனும் கூட்டணியில் இருக்க மாட்டோம் என வீரமணியும்திருமாவும்பிரேமலதாவும்  இணைந்து சபதமேற்க.. இனி காதல் திருமணம்செய்வோருக்கு புகலிடமே நாங்கள் தான் என அய்யா முழங்கஅன்புமணியும்அதை கைத்தட்டி வரவேற்க..


காங்கிரசில் இனி கோஷ்டிகளே இல்லை என கார்த்தி சிதம்பரம் அறிவிக்கஅதை திருநாவுக்கரசர் முன்மொழிய,வாசன் வழிமொழியபீட்டர் அல்போன்ஸ்உறுதியேற்கரவிக்குமார் செயல்படுத்த...


இனி ஒரு பைசா கூட வாங்காமல் IPL கிரிக்கெட் ஆடுவோம் என காம்பிர்தலைமையில் அனைவரும் சொல்ல.. நடிகர்கள் அனைவரும் ஒழுங்காகவரிசெலுத்த ஒப்புக் கொள்ள..


அம்பானி தலைமையில் தொழிலதிபர்கள் இனி கறுப்பு பணம் பதுக்கமாட்டோம்.. எந்த அரசியல் கட்சிகளுக்கும் நிதி வழங்க மாட்டோம் எனஉறுதியேற்க..


இந்த மகிழ்ச்சியைக் கொண்டாட ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சி நடைபெறும்என்ற அறிவிப்பை தொடர்ந்து மாஸ் பிஜீஎம் ஒலிக்க அந்த அரங்கம் அதிர நடந்துவந்தவரைப் பார்த்து கைத்தட்டல் சப்தம் காதைப் பிளந்தது


அவன் கனவும் அத்தோடு கலைந்தது...

Friday, 17 October 2025

“பாண்டிநாட்டு குனாஃபா”


இந்த உணவை லெபனான் நாட்டு டெஸட் வகை உணவு என்கிறார்கள். ஆனால் இந்த உணவு பண்டைய தமிழர் நிலத்து பாரம்பரிய உணவாகும்! ஆம் இதைப் பற்றி அறிந்து கொள்ள நாம் பாண்டியர்கள் மதுரையை ஆண்ட காலத்திற்கு செல்வோமா..

சுந்தரபாண்டியன் மதுரையை மீட்டான் என்பதை நாம் வரலாற்றில் மட்டுமின்றி எம்.ஜி.ஆர் படமாகவும் பார்த்திருப்போம். இந்த சுந்தர பாண்டியனின் கொள்ளுத் தாத்தா மாறன் வீரகேசரி காலத்தில் தான் இந்த உணவு மதுரையில் கண்டுபிடிக்கப்பட்டது.

வீரகேசரியின் ஆட்சியில் குருவித்துறை நல்லதம்பி பாவலன் என்னும் முறுக்கு மாஸ்டர் வாழ்ந்து வந்தார். அன்றைக்கு சோழவந்தான் எனும் ஊரே இல்லை எல்லாருக்கும் தெரிந்த ஊர் குருவித்துறை தான். ஆண்டு தோறும் அங்குள்ள வைகை ஆற்றிலும் அழகர் இறங்குவார்.

இங்கே சித்திரைத் திருவிழாவிற்கு வருகை தரும் பாண்டிய நாட்டு மக்கள் அழகரை தரிசிக்க மட்டுமல்ல அறுசுவை மிக்க முறுக்கை ருசிப்பதற்கும் அங்கு பெருந்திரளாக கூடினார்கள். பாவலர் நல்லதம்பி தமிழில் சரளமாக பாடல் எழுதும் திறமையும் கொண்டவர்.

முறுக்கு பிழிந்து கொண்டே அருமையாக பாடும் திறனுடையவர் அய்யா நல்லதம்பி. சுவை மிகுந்தது அவர் பாடலா? முறுக்கா? என்று அன்று பல பட்டிமன்றங்களே நடந்திருக்கின்றன. அவரது அன்றைய பல பாடல்கள் பாண்டிய நாட்டின் தேசியகீதங்களாகும்.

முறுக்காற்றுப்படை என்னும் அவரது பாடல் தொகுப்பு அன்று மிகப் பிரபலம். வைகையாற்றுக் கரையில் நிரந்தரமாக கடை போட்டிருந்த நல்ல தம்பி இனிமையான பாடல்களைப் பாடி அருமையாக முறுக்கு சுட்டுத் தரத்தர அதை சுடச்சுட வாங்கி ரசித்து ருசித்து பாண்டிய மக்கள் மயங்கினர்.

முறுக்கு, தேன்குழல், மணகோலம், காராசேவு, இனிப்பு சேவு. ஓமப் பொடி என்று பல வகையான முறுக்கு, கார வகைகள் அங்கு கிடைக்கும். நல்லதம்பியின் புகழ் பாண்டிய நாட்டுக்கு வாணிபம் செய்யவந்த வெளிநாட்டு வணிகர்களிடமும் பரவ அவர்களும் குருவித்துறைக்கு வந்தனர்.

ஒரு முறை மாமன்னர் வீரகேசரியின் பிறந்தநாள் அன்று குருவித் துறை வைகை ஆற்றில் ஒரு பெருவிழா கொண்டாடப்பட்டது. இன்னொரு சித்திரைத் திருவிழா போல தடபுடலான ஏற்பாடுகள் செய்திருந்தனர். விருந்தினர்களாக வெளிநாட்டு வணிகர்கள் குவிந்தனர்.

விடிய விடிய ஆடல், பாடல், கேளிக்கை என்று களை கட்டிய அந்த நிகழ்வை நல்லதம்பியின் முறுக்கு வகைகள் இன்னும் சுவையாக்கின. ஒரு கட்டத்தில் அங்கு முறுக்கு சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் மக்கள் கூட்டம் வந்து தின்று கொண்டே இருந்தது.

அதிகாலையில் அரபு தேசத்து வணிகர்கள் குழு ஒன்று அந்த ஆற்றங்கரைக்கு வந்த போது ஒரு முறுக்கு கூட அங்கில்லை. வந்தவர்களுக்கு ஏமாற்றம். என்ன செய்வது என்று அனைவரும் திகைக்க பாண்டிய மன்னர் வீரகேசரி சோகமாக நல்லதம்பியை பார்த்தார்.

மன்னரது பார்வையின் பொருளை உடனே அறிந்து கொண்டார் அய்யா நல்லதம்பி! அப்போது விக்கிரமங்கலத்து பால் வியாபாரிகள் வியாபாரத்துக்கு சந்தைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் கைவசம் தயிர், பாலேடு, வெண்ணெய், நெய் முதலிய பால் பொருட்கள் இருந்தன.

நல்லதம்பி அவர்களிடம் ஓமப்பொடி மட்டுமே இருந்தது. ஆனால் அவர் அதை எடுத்து பால், வெண்ணெய் போன்ற பொருட்களை அவர்களிடம் வாங்கி பரபரவென ஒரு உணவை தயார் செய்து அதன் மீது கருப்பட்டி பாகு ஊற்ற வந்திருந்த ஒரு அரபி தனது பிஸ்தா, முந்திரிகளை அதன் மீது தூவ..

ஒரு அற்புதமான உலக உணவு அந்த வைகையாற்றங் கரையில் அன்று உருவானது. அதன் அற்புத ருசியில் மயங்கிய அரேபியர்கள் அடுத்த ஆறுமாத காலம் அய்யா நல்லதம்பியுடன் தங்கியிருந்து சமையலைக் கற்றுக் கொண்டே தங்களது நாடு திரும்பினர்.

அரேபிய மன்னருக்கு இந்த உணவை சமைத்துத்தர அவர் அதன் ருசியில் சொக்கிப் போய்.. “யா அல்லாஹ்” இது போல ருசியான ஒரு உணவை என் வாழ்நாளில் ருசித்ததில்லை. ஆமாம் இந்த உணவுக்கு என்ன பெயர்? என்றதும் அரபு வணிகர்கள் அனைவரும் திடுக்கிட்டனர்.

அடடா! ஆறு மாதம் அங்கிருந்து இந்த சமையல் செய்முறையை கேட்டறிந்த நாம் இதன் பெயரைக் கேட்காமல் விட்டுவிட்டோமே என வருந்தினர். ஆனால் அரபு மன்னர் ஒரு தீர்வு தந்தார். வணிகப் பெருமக்களே இதை தயாரித்த அந்த மாமனிதரின் பேரென்ன? என்றார்.

ஹொசூர் இதை தயாரித்தவர் பெயர் “குருவித்துறை நல்லதம்பி பாவலர்” என்றனர். அடடா.. நமது அரபு தேசத்தில் இந்தப் பெயரை உச்சரிப்பது மிகக் கடினம் ஆகவே இவரது ஊர், பெயர், பட்டம் மூன்றிலுமுள்ள முதல் ழுத்துகளை வைத்து ‘குநபா’ என்று சூட்டுகிறேன் என்றார்.!

ஆம் நண்பர்களே இன்று அரபு தேசத்து உணவு என்றழைக்கப்படும் “குனாஃபா”(குநபா) குருவித்துறை நல்லதம்பி பாவலரின் சுருக்கமே. இதன் பிறப்பிடம் நமது பாண்டியநாடே! புல்லரிக்கிறது அல்வா! வாருங்கள் இதை அதிகம் பகிர்வோம்.

பின் குறிப்பு : பாவலர் எழுதிய “முறுக்காற்றுப்படை” ஓலைச் சுவடிகளை அரபு வணிகர்கள் ஏறி வந்த குதிரைகள் விரும்பிச் சாப்பிட்டு விட்டனவாம். அவரது முறுக்கை போலவே அந்த ஓலைச் சுவடிகள் மொறு மொறுப்பாக ருசியாக இருந்ததால் குதிரைகள் அதனை ஆர்வத்துடன் சாப்பிட்டு இருக்கலாம் என்று பிரிட்டிஷ் வரலாற்று பேராசிரியர். “வில்லியம் லையர் ஃபால்ஸ்வொர்த்” குறிப்பிடுகிறார்.

Tuesday, 14 October 2025

அக்பரும் பிரியாணியும்

மாமன்னர் அக்பர் வித விதமாக உணவுகள் உண்ணுவதிலும் மிக ரசனை மிக்கவர். தினசரி அசைவ உணவு, அதிலும் புதுப் புது ரெசிபிக்கள் கண்டு பிடிக்க 11 பேர் கொண்ட குழுவாக பலப்பல குழுக்கள் வேலை பார்த்தார்களாம்.

வார இதழ்களோடு இலவசமாகத் தரும் 16பக்க ரெசிபி புத்தகம் போல 10 வருடங்கள் கொடுத்தால் எத்தனை புத்தகம் வருமோ அதைவிட 10 மடங்கு அதிக ரெசிபிக்கள் கண்டுபிடித்தும் அவரது உணவுப்பசி அடங்கவில்லையாம்.!

அரண்மனை தலைமை சமையல்காரர் கொஞ்சம் ஆடிப்போய் என்னா நாக்குய்யா இந்தாளுக்கு என்று சலித்துக் கொள்ளும் அளவுக்கு அக்பரது உணவு ரசனை இருந்ததாம். சமையல்காரர் ஆப்கானின் காபூல் நகரை சேர்ந்தவர்.

அவருக்கு லீவில் சொந்த ஊர் போக ஆசை, வாக்கப்பட்டு வந்த பெண் கூட வருடத்தில் 3 முறையாவது அம்மா வீட்டுக்கு போகலாம். ஆனால் இவர் வந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டது.. கிட்டத்தட்ட வனவாசம் மாதிரி சமையலறை வாசம்.

வருடா வருடம் வரும் ரம்ஜான், பக்ரீத் லீவுகள் கூட சாங்ஷன் ஆகவில்லை. ஒரு நாள் அக்பரிடமிருந்து ஒரு உத்தரவு. இது வரை நான் ருசிக்காத அளவுக்கு ஒரு ருசியான உணவை சமைத்தால் 13 வருட போனசுடன் 6 மாதம் விடுமுறை.!

அப்படி இல்லாவிட்டால் 5 ஆண்டு ஜெயில் சமையல்காரருக்கு ஜெயில் ஒன்றும் பெரிதாக பயமுறுத்தும் தண்டனை அல்ல. (ஆல்ரெடி13 வருஷம் அது தானே) 13 வருட போனஸ் 6 மாத விடுமுறை என்ற அறிவிப்பு தான் அவரை குஷியாக்கியது.

இரவு பகல் பாராது வெறி பிடித்தது போல் புதுசு புதுசாக சமைத்து அனுப்பத் துவங்கினார். ஆனால் அக்பரோ இது போன வாரம் செய்த மீன் வறுவல் மாதிரி இருக்கு, இது போன ரம்ஜான் அன்று சாப்பிட்ட சுக்கா மாதிரி இருக்கு.

இந்த சிக்கன் தான் எப்பவும் சாப்பிடுறனே, இது என்ன மூளை ரோஸ்ட் கொழ கொழன்னு, பீஃப் வால் சூப், கூல் சூப் போல ஆறியிருக்குன்னு கமெண்ட்ஸ் போட்டுக் கொண்டிருந்தாரே ஒழிய அவரிடமிருந்து ஒரு லைக்ஸ் கூட விழவே இல்லை.

இந்தக் கொடுமையை யாரிடமும் ஷேர் செய்ய முடியாத சமையல்காரர் மனதிற்குள் தன் புலம்பல் ஸ்டேட்டஸ்களை டர்ன் ஆஃப் நோட்டிபிகேஷனில் வைத்து புலம்பிக் கொண்டு இருந்தார் திடீரென தான் அந்த சோகச் செய்தி வந்தது.

இன்று மதிய உணவில் தான் எதிர்பார்த்த புதிய உணவு வகை சமைக்காவிட்டால் சமையல்காரரை உடனே சிறையில் அடைத்துவிடு என அக்பர் உத்தரவிட்டு இருப்பதாக. சமையல் காரர் விரக்தி அடைந்தார், இனி இருப்பது 3 மணி நேரம்..

மனம் போன போக்கில் சமைக்க துவங்கினார். வெட்டிய கறியை கொதிக்கும் சோற்றில் போட்டு அரைத்த மசாலா கலவையை கொட்டிக் கிளறி பாத்திரத்தை நன்றாக மூடி வைத்து விட்டார். நன்றாக வெந்ததும் அந்த அடுப்பிலுள்ள..

தீயைக் குறைக்க எரியும் விறகுகளை வெளியே எடுத்தவர் ஏதோ நினைப்பில் அதை மூடி வைத்த தட்டுக்கு மேல் வைத்து விட்டு அமர்ந்துவிட்டார். 1மணி நேரம் ஆயிற்று. மன்னருக்கு பரிமாறும் பணியாளர்கள் அங்கே வந்து வியந்தார்கள்.

என்ன இது அடுப்பில் உள்ள எரிந்த விறகுகள் பாத்திரத்தின் மேல் இருக்கே?! சரி எதோ புதுவித சமையல் போலும் என நினைத்து ஐயா உணவு தயாரா? சமையல்காரர் இப்போது தான் சுயநினைவுக்கு வந்தார். திரும்பி பார்த்து திடுக்கிட்டார்.

அடுப்பின் மேலுள்ள பாத்திரத்தின் மீது விறகு! அய்யய்யோ இப்படி செய்து விட்டேனே என அதிர்ந்து, சரி நமக்கு ஜெயில் நிச்சயம் இவர்கள் முன் காட்டிக் கொள்ளக் கூடாது என்று ஆம் நண்பர்களே மன்னருக்கு உணவு தயார் எடுத்துச் செல்லவும்..

நான் சற்று ஓய்வில் என் அறைக்கு போகிறேன் என அவர் அறைக்கு திரும்பிய 15வது நிமிடம் அவர் அறை வாசலில் திபு திபுவென 15 வீரர்கள், உடனே அழைத்து (இழுத்து) வரச் சொல்லி மன்னரிடம் இருந்து அழைப்பு என்று..

நடுநடுங்கி பதறியபடி கிளம்பினார், மன்னர் அறை நெருங்க நெருங்க அக்பர் கர்ஜிக்கும் குரல் காதில் விழுந்தது. என்ன சமையலடா இது..எங்கே அந்த சமையல்காரன்? ராஸ்கல் இப்படி பண்ணிட்டானே, அவனை நான் சும்மா விடமாட்டேன்..

இதைக் கேட்ட சமையல்காரருக்கு இன்னும் உதறலெடுத்தது மன்னரின் அறைக்குள் நுழைந்ததும் "ஹொசூர் இந்தப் பாவியை" என்று குரலெடுக்க ஆவேசமாக ஓடி வந்து அவரைத் தழுவிக் கொண்ட அக்பரை கண்டு குழம்பினார்..

அவனது கன்னங்களில் முத்தமிட்டு அவன் கைகுலுக்கி அவன் தோளில் அறைந்து அக்பர் சிறு பிள்ளை போல குதூகலத்தில் இருந்தார். அவரது உதடுகள் வாரேஹ் வா, அச்சா, சப்பாஷ் பல்லே, பலேஹ் என்று உச்சரித்துக் கொண்டே இருந்தது.

எப்படியடா இப்படி ஒரு சமையல் செய்தாய்! உண்மையில் நீ கலைஞனடா, அற்புதம்! இதுதான் நான் சாப்பிட்டதிலேயே சிறந்த உணவு. இனி இது தான் நம் அரச உணவும் என்றார் குஷியுடன். சமையல்காரர் இன்னும் குழம்பித்தான் இருந்தார்.

“ஏய் என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலையே” என்ற டயலாக் உலகில் அந்த சமையல்காரருக்கு தான் முதலில் தோன்றியிருக்கும் போல! அப்போது தான் உணர்ந்தார் அந்த அறையெங்கும் இதுவரை அவரே அறிந்திராத ஒரு வாசனை!

அனைவரின் மனம் விரும்பும் வகையில் கும்மென்று மசாலா மணம் வீசியது. நம்பமுடியாமல் டைனிங் டேபிளை பார்த்தார். அந்த உணவினை கிட்டத்தட்ட மொத்த மன்னர் குடும்பமே ராஜ்கிரண் ஸ்டைலில் ஃபுல் கட்டு கட்டிக்கொண்டிருந்தனர்.

இப்போது அவருக்கு ஒரு தெம்பு வர “ஷாஹென்ஷா என் புது உணவு எப்படி.? நன்றாக இருந்ததா? என்றார்.

நன்றாகவா.. அற்புதம் ஏதோ பாத்திரத்திற்கு அடியிலும் பாத்திரத்திற்கு மேலும் நெருப்பு மூட்டி சமைத்தாயாமே பணியாளர்கள் சொன்னார்கள் இன்று நம் அரண்மனையில் இரவுக்கும் இதே உணவு செய்து தா.

நாளை முதல் உனக்கு ஓராண்டு விடுமுறை! இந்த அக்பரின் அன்புப் பரிசாக 26 வருட போனஸ்! உன் ஊருக்கு போய்வா என்றார். இதைக் கேட்டு அகமகிழ்ந்த சமையல்காரரும் ஆனந்தமாக மன்னரை வணங்கி விடைபெற்றார்.

நண்பர்களே! சிரத்தையின்றி ஏனோ தானோ என்று குருட்டாம் போக்கில் அந்த சமையல்காரர் செய்த உணவு தான்..

#தம்_பிரியாணி