

இந்த உணவை லெபனான் நாட்டு டெஸட் வகை உணவு என்கிறார்கள். ஆனால் இந்த உணவு பண்டைய தமிழர் நிலத்து பாரம்பரிய உணவாகும்! ஆம் இதைப் பற்றி அறிந்து கொள்ள நாம் பாண்டியர்கள் மதுரையை ஆண்ட காலத்திற்கு செல்வோமா..
சுந்தரபாண்டியன் மதுரையை மீட்டான் என்பதை நாம் வரலாற்றில் மட்டுமின்றி எம்.ஜி.ஆர் படமாகவும் பார்த்திருப்போம். இந்த சுந்தர பாண்டியனின் கொள்ளுத் தாத்தா மாறன் வீரகேசரி காலத்தில் தான் இந்த உணவு மதுரையில் கண்டுபிடிக்கப்பட்டது.
வீரகேசரியின் ஆட்சியில் குருவித்துறை நல்லதம்பி பாவலன் என்னும் முறுக்கு மாஸ்டர் வாழ்ந்து வந்தார். அன்றைக்கு சோழவந்தான் எனும் ஊரே இல்லை எல்லாருக்கும் தெரிந்த ஊர் குருவித்துறை தான். ஆண்டு தோறும் அங்குள்ள வைகை ஆற்றிலும் அழகர் இறங்குவார்.
இங்கே சித்திரைத் திருவிழாவிற்கு வருகை தரும் பாண்டிய நாட்டு மக்கள் அழகரை தரிசிக்க மட்டுமல்ல அறுசுவை மிக்க முறுக்கை ருசிப்பதற்கும் அங்கு பெருந்திரளாக கூடினார்கள். பாவலர் நல்லதம்பி தமிழில் சரளமாக பாடல் எழுதும் திறமையும் கொண்டவர்.
முறுக்கு பிழிந்து கொண்டே அருமையாக பாடும் திறனுடையவர் அய்யா நல்லதம்பி. சுவை மிகுந்தது அவர் பாடலா? முறுக்கா? என்று அன்று பல பட்டிமன்றங்களே நடந்திருக்கின்றன. அவரது அன்றைய பல பாடல்கள் பாண்டிய நாட்டின் தேசியகீதங்களாகும்.
முறுக்காற்றுப்படை என்னும் அவரது பாடல் தொகுப்பு அன்று மிகப் பிரபலம். வைகையாற்றுக் கரையில் நிரந்தரமாக கடை போட்டிருந்த நல்ல தம்பி இனிமையான பாடல்களைப் பாடி அருமையாக முறுக்கு சுட்டுத் தரத்தர அதை சுடச்சுட வாங்கி ரசித்து ருசித்து பாண்டிய மக்கள் மயங்கினர்.
முறுக்கு, தேன்குழல், மணகோலம், காராசேவு, இனிப்பு சேவு. ஓமப் பொடி என்று பல வகையான முறுக்கு, கார வகைகள் அங்கு கிடைக்கும். நல்லதம்பியின் புகழ் பாண்டிய நாட்டுக்கு வாணிபம் செய்யவந்த வெளிநாட்டு வணிகர்களிடமும் பரவ அவர்களும் குருவித்துறைக்கு வந்தனர்.
ஒரு முறை மாமன்னர் வீரகேசரியின் பிறந்தநாள் அன்று குருவித் துறை வைகை ஆற்றில் ஒரு பெருவிழா கொண்டாடப்பட்டது. இன்னொரு சித்திரைத் திருவிழா போல தடபுடலான ஏற்பாடுகள் செய்திருந்தனர். விருந்தினர்களாக வெளிநாட்டு வணிகர்கள் குவிந்தனர்.
விடிய விடிய ஆடல், பாடல், கேளிக்கை என்று களை கட்டிய அந்த நிகழ்வை நல்லதம்பியின் முறுக்கு வகைகள் இன்னும் சுவையாக்கின. ஒரு கட்டத்தில் அங்கு முறுக்கு சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் மக்கள் கூட்டம் வந்து தின்று கொண்டே இருந்தது.
அதிகாலையில் அரபு தேசத்து வணிகர்கள் குழு ஒன்று அந்த ஆற்றங்கரைக்கு வந்த போது ஒரு முறுக்கு கூட அங்கில்லை. வந்தவர்களுக்கு ஏமாற்றம். என்ன செய்வது என்று அனைவரும் திகைக்க பாண்டிய மன்னர் வீரகேசரி சோகமாக நல்லதம்பியை பார்த்தார்.
மன்னரது பார்வையின் பொருளை உடனே அறிந்து கொண்டார் அய்யா நல்லதம்பி! அப்போது விக்கிரமங்கலத்து பால் வியாபாரிகள் வியாபாரத்துக்கு சந்தைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் கைவசம் தயிர், பாலேடு, வெண்ணெய், நெய் முதலிய பால் பொருட்கள் இருந்தன.
நல்லதம்பி அவர்களிடம் ஓமப்பொடி மட்டுமே இருந்தது. ஆனால் அவர் அதை எடுத்து பால், வெண்ணெய் போன்ற பொருட்களை அவர்களிடம் வாங்கி பரபரவென ஒரு உணவை தயார் செய்து அதன் மீது கருப்பட்டி பாகு ஊற்ற வந்திருந்த ஒரு அரபி தனது பிஸ்தா, முந்திரிகளை அதன் மீது தூவ..
ஒரு அற்புதமான உலக உணவு அந்த வைகையாற்றங் கரையில் அன்று உருவானது. அதன் அற்புத ருசியில் மயங்கிய அரேபியர்கள் அடுத்த ஆறுமாத காலம் அய்யா நல்லதம்பியுடன் தங்கியிருந்து சமையலைக் கற்றுக் கொண்டே தங்களது நாடு திரும்பினர்.
அரேபிய மன்னருக்கு இந்த உணவை சமைத்துத்தர அவர் அதன் ருசியில் சொக்கிப் போய்.. “யா அல்லாஹ்” இது போல ருசியான ஒரு உணவை என் வாழ்நாளில் ருசித்ததில்லை. ஆமாம் இந்த உணவுக்கு என்ன பெயர்? என்றதும் அரபு வணிகர்கள் அனைவரும் திடுக்கிட்டனர்.
அடடா! ஆறு மாதம் அங்கிருந்து இந்த சமையல் செய்முறையை கேட்டறிந்த நாம் இதன் பெயரைக் கேட்காமல் விட்டுவிட்டோமே என வருந்தினர். ஆனால் அரபு மன்னர் ஒரு தீர்வு தந்தார். வணிகப் பெருமக்களே இதை தயாரித்த அந்த மாமனிதரின் பேரென்ன? என்றார்.
ஹொசூர் இதை தயாரித்தவர் பெயர் “குருவித்துறை நல்லதம்பி பாவலர்” என்றனர். அடடா.. நமது அரபு தேசத்தில் இந்தப் பெயரை உச்சரிப்பது மிகக் கடினம் ஆகவே இவரது ஊர், பெயர், பட்டம் மூன்றிலுமுள்ள முதல் ழுத்துகளை வைத்து ‘குநபா’ என்று சூட்டுகிறேன் என்றார்.!
ஆம் நண்பர்களே இன்று அரபு தேசத்து உணவு என்றழைக்கப்படும் “குனாஃபா”(குநபா) குருவித்துறை நல்லதம்பி பாவலரின் சுருக்கமே. இதன் பிறப்பிடம் நமது பாண்டியநாடே! புல்லரிக்கிறது அல்வா! வாருங்கள் இதை அதிகம் பகிர்வோம்.
பின் குறிப்பு : பாவலர் எழுதிய “முறுக்காற்றுப்படை” ஓலைச் சுவடிகளை அரபு வணிகர்கள் ஏறி வந்த குதிரைகள் விரும்பிச் சாப்பிட்டு விட்டனவாம். அவரது முறுக்கை போலவே அந்த ஓலைச் சுவடிகள் மொறு மொறுப்பாக ருசியாக இருந்ததால் குதிரைகள் அதனை ஆர்வத்துடன் சாப்பிட்டு இருக்கலாம் என்று பிரிட்டிஷ் வரலாற்று பேராசிரியர். “வில்லியம் லையர் ஃபால்ஸ்வொர்த்” குறிப்பிடுகிறார்.
No comments:
Post a Comment