குருஷேத்திரப் போர் நிறைந்த மறுநாள்! அதிகாலையில் எழுந்துவிட்டார் கிருஷ்ணர், இன்றைக்கு பாஞ்சஜன்யம் ஒலிக்க வேண்டியதில்லை என்பதால் அதை அவர் படுக்கை அறைக்கே கொண்டு வரவில்லை. பாமாவும் ருக்மிணியும் சமையல் அறையில் சண்டையிட்ட சத்தம் காற்றில் ஒலித்தது.
காலை உணவாக இட்லியும், தக்காளி சட்னியும் என்ற பாமாவின் கருத்தை மறுத்து பொங்கலும், தேங்காய் சட்னியும் தான் என்று ருக்மிணி வாதம் செய்து மோத.. கிடைத்த இடை வெளியில் கோகுலப் பசுக்களிடம் கறந்த பாலில் ஸ்டிராங் காபி போட்டு தந்த ராதை கிருஷ்ணரின் மனதை வென்றாள்!
பத்து சிங்கங்களின் கர்ஜனை போல சேர்ந்திசையாக ஒலித்த பீமனின் குறட்டைச் சத்தம் ஊர் எல்லை வரை எதிரொலிக்க அர்ஜுனன் அறையில் ஒலித்த பெண்ணின் சிணுங்கல்கள் அதில் அடங்கிப் போனது! தர்மரின் அறை முன்பு நியாயம் கேட்டு போரில் உயிரிழந்தவர்களின் கூட்டம் அமர்ந்திருந்தது.
குதிரை லாயத்திலிருந்த குதிரைகள் மகிழ்வோடு கனைக்க அவற்றோடு அன்புடன் குதிரைகள் மொழியில் பேசியபடி தீவனம் கொடுத்துக் கொண்டிருந்தான் நகுலன்! சகுனியின் பகடைகளை சுக்கு நூறாக நொறுக்கிவிட்டு தர்மர் முடிசூட நல்ல நாளை கணித்துக் கொண்டிருந்தான் சகாதேவன்.
கர்ணன் இறந்த சோகத்தில் இருந்து இன்னும் மீளாத குந்தி மாளிகையின் ஓரமாக குந்தியிருக்க, பாண்டு குதுகலத்தில் இருந்தார். கண்களைக் கட்டி இவை எதையும் பார்க்காத காந்தாரியும், பார்வையற்ற திருதராட்டிரரும் வேறு வழியின்றி தனது தம்பி மகன்களின் வெற்றியை போற்றினர்.
பீஷ்மரும், துரோணரும், சகுனியும் இல்லாத காரணத்தால் வேறு வழியின்றி தர்மர் சொல்வதே தர்மம் என்ற நிலை உருவாகியிருந்தது! போர் முடிந்த மறுநாள் இத்தனையும் சத்தமின்றி நடந்து கொண்டிருக்க, குருஷேத்திரப் போர் இன்னும் முடிவடையவில்லை இன்றும் தொடர்கிறது..
கிருஷ்ணரின் புதிய பறக்கும் தேர்.. கெளரவர்கள் அச்சம்! ஒரே நேரத்தில் 100 அம்புகள் விடும் அர்ஜூனனின் புதிய வில்! கர்ணனின் குலை நடுக்கம்.. பாண்டவர்களின் புதிய போர் தந்திரங்கள் வகுத்துக் கொடுத்தது யார்? துரோணாச்சாரியார் பீதி.. பீமனிடம் 500 கிலோ பேரழிவு கதாயுதம்..
போன்ற போர் செய்திகள் அஸ்தினாபுரமெங்கும் பரவியது! தாக்குதலில் அர்ஜூனன் உயிருக்குப் போராடுகிறார் என்ற செய்தியை அர்ஜூனனே படித்துக் குழம்பினார். பீமனை உணவு அறையில் சிறை வைத்ததாக ஒரு தகவல்! தர்மரை நிராயுதபாணியாக நிறுத்தியது கெளரவர்களின் இராணுவம்!
இது போன்ற தகவல்களாலும் குழம்பிய பஞ்ச பாண்டவர்களும் இதற்கு விளக்கமளிக்க கீதை சொன்ன கண்ணன் தான் சரியானவன் என்றெண்ணி அவரது மாளிகையை நோக்கி விரைந்தனர். ராதையின் ஸ்டிராங்கான காபியையும், பாமா தந்த இட்லியையும் மீறி ருக்மிணி செய்த பொங்கலால்..
கிட்டத்தட்ட மூர்ச்சையானது போல உதட்டில் மோகனப் புன்னகையுடன் நித்திரையில் ஆழ்ந்திருந்தார் கண்ணன். பேரானந்தத் தூக்கத்தில் இருந்த கண்ணனைப் பார்த்ததும் வழக்கம் போல அர்ஜூனன் கால்மாட்டில் அமர, அடேய் தம்பி இப்போது நாம் போருக்கு உதவி கேட்டு வரவில்லை புரியுதா?
தர்மரான நான் தான் அங்கே அமரவேண்டும் என்றதும் வெட்கித் தலை குனிந்து அர்ஜூனன் எழ தர்மர் அமர்ந்தார். போர் தான் முடிந்துவிட்டதே அவர் 18நாட்கள் ஓயாது போரிட்டு.. போதா குறைக்கு வண்டி வண்டியாய் உங்களுக்கு கீதோபதேசம் சொல்லிய களைப்பில் ஆழ்ந்த நித்திரையில் இருக்கிறார்.
தயவுசெய்து அவரை தொட்டு எழுப்பாதீர்கள் என்றனர் பாமாவும் ருக்மிணியும்! கண்ணனின் ஆனந்த சயனத்தை பார்த்தால் அவர் பல மாதங்கள் தூங்குவார் போல தர்மருக்குத் தெரிந்தது! அவர்.. பாற் கடலில் பள்ளிக் கொண்ட பெருமாளின் அவதாரம், நித்திரையில் முத்திரை பதித்த கடவுள் அல்லவா!
கிருஷ்ணரை எப்படி எழுப்ப என தர்மர் தர்மசங்கடத்தில் விழிக்க, மனைவிகள் பாமா, ருக்மிணியை தாண்டி அவரது பெஸ்டியான ராதை இங்கு உதவிக்கு வந்தார். வெண்ணெய்யை உருக்குங்கள் அந்த வாசனையில் எழுந்துவிடுவார் என்றார். ஆஹா! அது பாலகோபாலனின் பால்ய காலத்து பால் திருட்டு!
வெண்ணெய் உருகியதும் கண்ணைத் திறந்தார் கண்ணன்! பஞ்ச பாண்டவர்களும் அவரது பாதம் பணிந்து நிற்பதைப் பார்த்து ‘அட நீங்களெல்லாம் ஓய்வெடுக்கவில்லையா’ என்றார். போர் முடிந்தும் போர் நடப்பதாக வரும் தகவல்களைப் பற்றிச் சொன்னார் தர்மர்! கண்ணன் கலகலவென நகைத்தார்!
தர்மா! இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை! இந்தத் தகவல்களை பரப்புவது நமது சங்கத்து தீவிர ஆதரவாளர்களே! நாமே போரை நிறுத்தினாலும் அவர்கள் நிறுத்தமாட்டார்கள்! போர் பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் போர் நடக்கிறது என்பார்கள்! நாம் எதைச் சொன்னாலும் கண் மூடி அப்படியே ஏற்பார்கள்!
பாஞ்சஜன்ய சங்கு ஒலித்து நாம் போர் துவங்குவோம் என்பது மட்டும் தான் நமது சங்கத்தார்க்கு நன்கு தெரியும்! அவர்களுக்கு வேறு ஒன்றுமே தெரியாது! நம் சங்கு சத்தம் ஓய்ந்தாலும் நமது சங்கத்தார் சத்தம் ஓயாது! இது பெருமைக்காக பரப்பும் தகவல்கள் அதைக் கேட்டு குழம்ப வேண்டாம் என்றார்..
“ஓ!! இது சங்கத்தார் போடும் சங்கிச் சத்தமா” என்றார் அர்ஜூனர்..
அனைவரும் ‘கொல்’லென்று சிரித்தனர்… கிழக்கு வானில் கதிரவன் உதித்தது 🩷
No comments:
Post a Comment