“யூபி மால் அனுபவங்கள்”
பெங்களூரு யூபி மால் சென்றிருந்த போது ஒரு விண்டோ ஷாப்பிங் செய்தேன். நிச்சயம் பார்க்க மட்டுமே முடியும் வாங்க முடியாது என்பது அந்தக் கடைகளுக்குள் சென்ற பின்பே தெரிந்தது. இயல்பிலேயே நான் கைக்கடிகாரப் ப்ரியன். என் நெருங்கிய நண்பர்களுக்கு நன்கு தெரியும்.. அங்கிருந்த வாட்ச் ஷோரூமிற்குள் நுழைந்தேன்.ஷோரூம் சேல்ஸ்மேனே ஐ.பி.எல் டீம் ஓனர் போல ரீட் அண்ட் டைலர் கோட் சூட் அணிந்து சாதாரண டிசர்ட் அணிந்த என்னை வரவேற்றார்.
என்ன இங்கெல்லாம் ஒரு ஒன்றரை இலட்சம் 2 லட்சம் இருக்குமா? கையில் 4 இலட்சம் மதிப்பிற்கு கிரெடிட் கார்டு இருந்த தைரியத்தில் அலட்சியத்துடன் அங்கு இருந்த வாட்சுகளை நோட்டமிட்டேன். Petak Philippe, Hublot, Sewor, Richard Mille, Jaeger Lecoultre, Greubel Forsey போன்ற பிராண்டுகள் துவக்க விலையே 10 இலட்சம் என்றதும் ரஜினி சார் போல தலை சுழன்றது! இந்த ரேடோ, டிஸ்ஸாட், டீஸல், போலீஸ் இதெல்லாம் என்றேன் பரிதாபமாக!
அதற்கு அந்த சேல்ஸ்மேன் என்னிடம் அதெல்லாம் பெங்களூரில் சாதாரணமா எல்லா மாலிலும் கிடைக்குமே என்பதை “கோன் ஐஸாமா அது பண்டிகை காலத்துல கோவிலுக்கு வெளியே விப்பாங்க” வடிவேலு ஸ்டைலில் சொன்னார்! ஒரு ரோலக்சையே ரோலிங்கில் விட்ட அந்தக் கடையில் ஒரு போட்டோ எடுக்கக்கூட அனுமதிக்கவில்லை! நேராக மாலின் உச்சியில் உள்ள ஓப்பன் ரெஸ்ட்டாரெண்ட் சென்றதும் தென்றல் வீசியது! ஆம்!
பெங்களூரின் அத்தனை அல்ட்ரா மாடன் பெண்களும் அங்கு தான் இருந்தனர்! யூ.பி மாலில் ஷாப்பிங் செய்யப் போகக்கூடாது என்பதை அங்கு தான் அறிந்து கொண்டேன்! அங்கிருந்து அடுத்த பில்டிங் விஜய் மல்லையாவின் வீடு! வாசலிலேயே ஹெலிபேடு தெரிந்தது! சர்வ சாதாரணமாக பீரும் ஒயினும் சீப்பிக் கொண்டு உயர்ரக அசெண்ட்டில் ஆங்கிலத்தோடு கன்னடமும் கலந்து மாத்தாடிக் கொண்டிருந்தனர்! அவர்களது ஆடைகள் ஆத்தாடி என அபாயகரமாக இருந்தது.
மொட்டை மாடியில் வீசிய காற்றில் அவர்கள் ஆடைகள் இலக்கின்றி பறக்க லக்கடித்த எங்கள் மனதில் காத்தாடி பறக்கலாயிற்று! தேன் குடித்த நரி போல அந்த ரெஸ்ட்டாரெண்டுகளைச் சுற்றி வந்து கொண்டிருந்தோம்! 45 நிமிடங்களாக எதுவும் வாங்கமால் வைத்த கண் வாங்காமல் அங்கிருந்த பெண்களையே பார்த்துக் கொண்டிருந்த எங்களை ஒரு பேரர் பார்த்து விட்டார் “வாட் யூ வாண்ட் சார் ஒயின் ஆர் பீர்? என்றார் வார்த்தையில் துண்டிலாக!
அதே சமயம் எதிர் டேபிளில் மினி ஸ்கர்ட் அணிந்த 4 அல்ட்ரா மாடர்ன் தேவதைகள் வந்து அமர, அப்படியே பந்தாவாக அதே டேபிளில் அமர்ந்தோம். என் நண்பர் அப்பெண்களை கவர கேன் ஐ ஸ்மோக் என்றார் சத்தமாக! டன் சார் என்றார் பேரர்! நண்பர் தன் 555 சிகரெட்டை தன் உதடுகளில் பொருத்தி தன் லைட்டரில் ஸ்டைலாக பற்ற வைக்க எதிர் டேபிளில் ப்ளூ ஜீன்ஸ் மினி ஸ்கர்ட் & யெல்லா டாப்ஸ் அணிந்த பெண் டேபிளில் இருந்து சட்டென எழுந்தாள்!
அலை போல புரண்ட தன் பர்கண்டி நிற கூந்தலை கோதிக் கொண்டே எங்கள் டேபிள் நோக்கி வர ஆரம்பித்தாள்! போச்சுடா ஸ்மோக் பண்ணாதிங்கன்னு சொல்லப் போறா பாரு என்பதற்குள் எங்கள் டேபிளை நெருங்கி எக்ஸ்க்யூஸ் மி லைட்டர் ப்ளீஸ் என்ற போது அவள் கையில் ஒடிசலாக நீண்ட கேமல் லைட்ஸ் சிகரெட் பாக்கெட் தெரிந்தது! நண்பனை விட ஸ்டைலாக அதை பற்ற வைத்து விட்டு போனஸாக அவன் கன்னத்தை தட்டிவிட்டுப் போனாள்!
மெனு கார்டை புரட்டிய எனக்கு அப்படியே வயிற்றையும் பிரட்டியது! முதல் பக்கத்திலேயே பெப்பர் ஷிரிம்ப் 1 பிளேட் 2985 + டாக்ஸ் என்றிருந்தது! எத்தனை பீஸ் வரும் என்றோம் 6 பீஸ் என்றார்கள்! அந்தப் பெண்களின் அரட்டையை அவ்வப்போது கவனித்துக் கொண்டே ஆஸ்திரியா வைன் 1 பாட்டிலும் (18 ஆயிரம்) 2 பெப்பர் ஷிரிம்ப் ஆர்டர் செய்ய! இவை எங்கள் டேபிளுக்கு வருவதற்குள் எதிர் டேபிளில் அந்தப் பெண்களின் பாய் ஃபிரண்டுகள் வந்து சேர்ந்தனர்!
அட என்னடா இப்படி ஆகிடுச்சேன்னு நண்பர் புலம்பி ஒரு வழியாக வழிந்தபடி சாப்பிட்டு முடித்து டாக்சுடன் 26 ஆயிரத்து சொச்சத்துக்கு கார்டை விசுக்கென தேய்த்து விட்டு அங்கிருந்து விருட்டென கிளம்பினோம்! ஆனாலும் யூபி மாலில் கையில் ஒரு ஐந்தாயிரமாவது இருந்தால் தான் அட்லீஸ்ட் இந்த அனுபவங்களை எல்லாம் பெற முடியும்! சும்மா சொல்லக் கூடாது அந்த பெப்பர் ஷிரிம்பும் ஒயினும் செம ருசி! கண்களுக்கு விருந்தளித்த யூபி மால் எங்கள் நாவுக்கும் விருந்தளித்தது என்பதே உண்மை.. ஆனா ரொம்ப காஸ்ட்லி!
வாய்ப்பிருந்தா நிச்சயம் ஒரு முறை யூபி மால் போயிட்டு வரலாம்! உங்கள் மனசு மகிழ்ச்சியில் திளைக்கும் ஆனால் உங்கள் மணிபர்ஸ் அங்கேயே இளைக்கும்! ஆனா வொர்த்!
No comments:
Post a Comment