Thursday, 16 January 2025

பீலே பீலா🤪🤪

{இது ஒரு உண்மைச் சம்பவம் - சிரிக்காமல் படிக்கவும்}

#பீலேவும்_நானும்

2014ஆம் ஆண்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்திய நாடு பிரேசில் என்பது உங்களுக்கு நன்கு தெரியும்! அப்போட்டிகளை காண உலகெங்கும் கால்பந்தை நேசித்து அதையே சுவாசித்து விளையாடும் ஒரு சிறிய நாட்டின் வார்டே இல்லாத பகுதிகளைக் கூட தன் விருந்தினராக அழைத்திருந்தது பிரேசில்!

அப்படித்தான் இராமநாதபுரம் மாவட்ட கால்பந்து அணியின் கேப்டனான ‘கமுதியின் மாரடோனா’ எனும் பட்டப் பெயர் கொண்ட என்னையும் அழைத்திருந்தது பிரேசில்! எனக்கு அங்கு போக விருப்பமே இல்லை! ஆனால் அண்ணன் துங்கா எனக்கு போன் போட்டு தம்பி பரமக்குடி லீகில் நீ ஆடியதை பார்த்தேன்!

வியந்துபோனேன்! உனக்குள் ஆயிரம் பீலே, இரண்டாயிரம் மாரடோனா, மூவாயிரம் ரொனால்டோ, நான்காயிரம் மெஸ்ஸி இருக்காங்க! கண்டிப்பாக நீ பிரேசில் வரவேண்டும் எனக் கண்ணீர் விட்டு கதறி அழ மனமிரங்கி பிரேசில் செல்ல ஒப்புக் கொண்டேன்! ஒரு சுப நாளில் என் விமானம் ரியோடி ஜெனிரோவில் இறங்கியது!

இயல்பிலேயே கால்பந்து இரத்தம் ஊறிய எனக்கு ஒரு விநாடி கூட கால்பந்தில்லாமல் இருக்கமுடியாது! பறக்கும் விமானத்திலேயே நான் பரபரப்பாக கால்பந்தை வைத்து கண்ட மேனிக்கு உதைக்க, அவர்கள் என்னை நன்கு உதைத்து படுக்கவைத்தனர், என்பதை இங்கு பெருமையோடு உதைத்து குறிப்பிட விரும்புகிறேன்!

இது கிட்டத்தட்ட 38 மணிநேரப் பிரயாணம்! என் வாழ்வில் முதல் முறையாக இவ்வளவு நேரம் நான் கால்பந்து ஆடாமல் இருந்ததே இல்லை! பிரேசில் வானூர்தி நிலையத்தின் அருகிலேயே ஒரு மிகப் பெரிய பொது கால்பந்து மைதானம் உள்ளது என அப்பா மால்டினி ஒரு முறை என்னிடம் சொன்னது நினைவுக்கு வந்தது!

வானூர்தி நிலையம் விட்டு வெளியேறி என் மகிழுந்தில் ஏறி ராபர்டோ மைதானம் என்றேன்! மகிழுந்தின் ஓட்டுநர் ‘அண்ணே உங்க பேச்சு எல்லாம் எனக்கு பிடிக்கும்ணே’ எப்போண்ணே பிரேசில் தேர்தலில் நின்னு ஜெயிச்சு இந்த நாட்டு அதிபர் ஆவிங்க? எங்க ஓட்டு நிச்சயம் உங்களுக்குத் தான்! நான் உங்கள் பரம இரசிகன் என்றார்.

அவருக்கு கிராஸியஸ் என அவர்கள் மொழியிலேயே நான் நன்றி தெரிவித்துவிட்டு மைதானத்தில் வந்து இறங்கினேன்! பிரேசில் நாட்டு கால்பந்து வெறியர்கள் 12 முதல் 60 வயது வரை அங்கே கூடி கோலடித்துக் கொண்டிருந்தனர்! அவர்களோடு போய் நானும் சேர்ந்தேன்! அடுத்த 2 மணிநேரம் அந்த மைதானத்தில்..

பந்து என் கால்வசமே இருந்தது! கிட்டத்தட்ட 2347 கோல்கள் அடித்திருந்தேன்! களைத்துப் போன எதிரணியினர் தங்கள் தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்து என்மீது பொய் புகார் செய்ய மேட்ச் பாதியில் கைவிடப்பட்டது! ஒரு வழியாக பிரேசில் நீதிமன்றம் போய் 3 மணிநேரத்தில் நான் நிரபராதியாக தீர்ப்பு பெற்று..

மீண்டும் கால்பந்து ஆட கோர்ட் உத்தரவு பெற்று அந்தக் கால்பந்து மைதானத்திற்கே சென்றேன். நான் உதைத்த பந்துகளை அந்த பிரேசில் நாட்டு கோல் கீப்பர்களால் தடுக்க முடியவே இல்லை மீண்டும் 35 நிமிடத்தில் 248 கோல்கள்! 249 ஆவது கோலை அடித்த போது என் பந்தை அங்கு ஒருவர் தடுத்து நிறுத்திவிட்டார்!

நான் உதைத்த பந்தையே தடுத்து நிறுத்திய அந்த நபர் யார் என நிமிர்ந்து பார்த்தேன்! அப்படியே மனமுருகி கதறிவிட்டேன்! ஆம் நான் அடித்த பந்தை தடுத்து நிறுத்தியவர் வேறு யாருமல்ல அய்யா பீலே தான்! அவரும் என்னைப் பார்த்து கண்கலங்கி நின்றார்! அப்போது ஒரு குரல் “நானும் ஆட்டத்துக்கு வரலாமான்னு”

திரும்பிப் பார்த்தால் அப்பா மாரடோனா!! ஆனந்த அதிர்ச்சியில் நான் உறைந்து நிற்க ஏன் நாங்க மட்டும் என்ன தொக்கா? நாங்களும் வர்றோம் என்று கோரஸாக குரல் கேட்டால் அங்கே ரொனால்டோ, ஜிடேன், பெக்காம், மெஸ்ஸி, குளோஸ் ஆகியோர் நின்று இருந்தனர்! அங்கே நாங்கள் ஆடிய ஆட்டத்தைக் கண்ட பிரேசிலே அதிர்ந்தது!

உலகக் கோப்பை போட்டிகள் அனைத்தும்1 நாள் தள்ளி வைக்கப் பட்டது! இங்கும் 90 நிமிடம் பந்து என் வசமே இருந்தது! ஆனால் 35 நிமிடத்தில் 248 கோல் அடித்த என்னால் இந்த 90 நிமிடத்தில் வெறும் 400 கோல்களே அடிக்க முடிந்தது! ஆட்டம் முடிந்ததும் ஓடி வந்த அய்யா பீலே என்னை அப்படியே ஆரத்தழுவிக் கொண்டார்!

நீ பிரேசிலில் பிறந்து இருக்கவேண்டியவன் தவறி தமிழ்நாட்டில் பிறந்துவிட்டாய் என மனதார வாழ்த்தினார்! கண்ணீர் மல்க அதை ஆமோதித்த மாரடோனா அப்பா வேறு மயக்கத்தில் இருந்தார்! ரொனால்டோ உள்ளிட்ட பிறர் என்னிடம் ஆட்டோகிராஃப் வாங்கிக் கொண்டு வரிசையாக செல்ஃபி எடுத்துக் கொண்டனர்!

அடுத்து என்ன செய்யப்போகிறாய் என்றார் அய்யா பீலே, அய்யா இனி நான் இங்கே பிரேசிலிலேயே இருந்துக்கிறேன் அய்யா உங்க சீருடையான ப்ளூ டவுசரும் மஞ்ச பனியனும் மாட்டிவிட்டுட்டா நானும் பிரேசில் அணிக்காக ஆடிக்கிறேன் என்றேன்! ஒரு கணம் அய்யா என்னை கவனமாக கூர்ந்து பார்த்தார்! பிறகு சொன்னார்..

இல்லை தம்பி உலகில் உன்னைப் போல கால்பந்து ஆட்டத்தில் செஞ்சுரி அடிக்கும் ஒரு வீரன் இந்த பிரேசிலில் இருப்பதைவிட கிரிக்கெட் மோகம் அதிகம் இருக்கும் இந்தியாவில் இருப்பதே சிறந்தது, அங்கிருந்து நீ கால்பந்துக்கு சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு நீ இந்தியாவுக்கே போ! உரிய காலம் வரும்.!

அப்போது நானே உன்னை அழைக்கிறேன் என வழிச் செலவுக்கு பணமும் கொடுத்து என்னை இந்தியாவிற்கு அனுப்பினார் ஆனால் அய்யா உங்களை காலன் அழைத்துச் சென்றுவிட்டானே!

இனி யாருடன் நான் கால்பந்தாடுவேன்!!

கண்ணீருடன் உங்கள் - கமுதியின் மாரடோனா

No comments:

Post a Comment