Thursday, 16 January 2025

4 டி.எஸ். பாலையா

“சுண்டங்கோட்டை சூரர்” பார்ட் - 4

TSபாலையா என்னும் அற்புத நடிகனுக்காகவே உருவாக்கப் பட்ட கதாபாத்திரம் தான் தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் தவில் வித்வான் ‘முத்துராக்கு’ இதை யாரேனும் மறுக்கமுடியுமா பின்னாளில் சிவாஜி மிருதங்கச் சக்ரவர்த்தி படத்தில் நடித்தபோது கூட தில்லானா மோகனாம்பாள் பாலையாவின் மேனரிஸங்களை பார்த்து அந்த பாதிப்பை தவிர்த்து மிருதங்க வித்வானாக மாறி நடித்தாராம்.!

ஓரு வருடத்திற்கு முன்பு வெளியான ஊட்டி வரை உறவில் தந்தை மகனாக நடித்த அதே நடிகர்கள் அடுத்த ஆண்டே சககலைஞர்களாக அண்ணன் தம்பியாக மக்களுக்கு எந்தவொரு முரணும் தெரியாதபடி இப்படத்தில் நடித்திருப்பார்கள் என்பது தான் விந்தையே! இந்தப் படத்திற்கு சிவாஜி நாதஸ்வர வித்வானாக மதுரை சேதுராமன் பொன்னுச்சாமி சகோதரர்களிடம் பிரத்யேக பயிற்சி பெற்றது போல..

பாலையாவும் தவில் வாசிக்க பயிற்சி செய்தார். திருவிடைமருதூர் வெங்கடேசன் என்பவரே பாலையாவின் தவில் வாத்தியார், படத்தில் வரும் தவில் இசையும் அவருடையதே! மதுரை டி.ஶ்ரீனிவாசன் என்பவரிடமும் சிறப்பு பயிற்சி பெற்றார் பாலையா இந்தப் படத்தில் நடிப்பதற்காக பல கச்சேரிகளுக்கு மறைவாக சென்று தவில் கலைஞர்களின் முக பாவங்களை கற்றுக் கொண்டார் பாலையா!

இப்படத்தில் வரும் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன பாடலைக் கேட்டதும் என்ன நாகராஜா என்னை மறைஞ்சி நின்னு பாத்து எழுதின பாட்டா இது என்று பாலையா கிண்டல் செய்தாராம். இந்தப் படத்தில் எந்தக் காட்சியை விவரிக்காமல் செல்வது! ஓடும் இரயிலில் குளிரில் நடுங்கும் குரலில், ‘ஆட்டம் ரொம்ப ஜாஸ்தியா இருக்குதே’ என்ற சிலேடை! எனக்கு அங்க ஒரு சோடாக் கடைக்காரரை தெரியுமென சிவாஜியை மடக்குவது, அடேய் வைத்தி விஷப்பயலே என்று..

நாகேஷை ஆத்திரமாக திட்டுவது, நைஸாக சிவாஜிக்கு பின் வந்து நின்று கொண்டு பத்மினியின் நாட்டியத்தை பார்ப்பது.. நலம் தானா பாடலில் பத்மினி சிவாஜியை நலம் விசாரிக்க அதைக் கண்டு கொள்ளாது நாதஸ்வரம் வாசிக்கும் சிவாஜியிடம் தவில் வாசித்துக் கொண்டே கண்ணால் சைகை காட்டி ‘உன்ன நெனச்சு தான் பாடுறா உன் ஆளு’ என உணர்த்தும் அழகு இப்படிக் கண்ணாலும் உடல் மொழியாலும் பரவசமான நடிப்பை தந்திருப்பார்.

பாலையா ஒரு நடிப்பு அரக்கன்! இப்படத்தின் அறிமுகப் பாடலாக வரும் தியாகைய்யரின் கீர்த்தனையான நகுமோமு கலனேனிக்கு அச்சு அசலாக நாதஸ்வரமும் தவிலும் வாசித்தது சிவாஜியும் பாலையாவும் என்றால் அப்படியே நம்பலாம் அவ்வளவு தத்ரூபமான நடிப்பு! இவா நாட்டு இசை உம்மால வாசிக்க முடியுமா என வைத்தி சவடாலடிக்க வெள்ளைக்காரர்கள் முன் பாலையா வாசிக்கும் ஸ்டைல் அடடா!

இறுதியாக அந்த இசை முடியும் தருவாயில் தவிலின் ஒரு பக்கத்தில் ‘டட்டட் டர்ர்ர்ர்ர்ர்’ என ஒற்றை குச்சியால் அடித்து முடிக்கும் லாவகம் ஒரு நிஜ தவில் வித்வானாகவே மாறியிருப்பார் பாலையா. கொடுத்த காசுக்கு மட்டும் நடிக்காமல் ஆத்மார்த்தமாக நடித்ததால் தான் இப்படம் இன்னும் காலம் கடந்த காவியமாக நிலைத்து நிற்கின்றது. பாலையாவின் குரல் ஒரு அவரது நடிப்புக்கு பெரிய ப்ளஸ்.!

அதை 5 விதமான ஏற்ற இறக்கங்களில் பேசுவார், முக்கியமாக அந்த தனித்துவமான உச்சரிப்பும், ஒரே டயலாக்கின் இரு வார்த்தைகளின் வேகத்தை கூட்டிக் குறைப்பதும், இரட்டை கிளவி போல சொன்ன வார்த்தயை இன்னொரு முறை சொல்லுவது ‘படார்னு கால்ல விழு’ படார்னு கால்ல விழு’ இதை அவர் உச்சரிக்கும் வேகம், உயரும் குரல் திடீரென ஹஸ்கியாவது எனும் குரல் வித்தைக்காரர் பாலையா.

டி.எஸ். பாலையா ஆங்கிலப் படத்திலும் நடித்திருக்கிறார் என்பது பலருக்கு தெரியாத செய்தி! எல்லீஸ் ஆர்.டங்கன் எவ்வளவோ வற்புறுத்தி அழைத்தும் அமெரிக்கா செல்லவில்லை. அதே போல எம்.ஜி.ஆர் இவரை அரசியலுக்கு அழைத்தும் நாசூக்காக மறுத்தவர். சிவாஜிக்கு இவர் என்றும் பெரிய சகோதரர், எம்.ஆர்.ராதாவும் இவரும் நெருங்கிய தோழர்கள். பாலையாவிற்கு 3 மனைவிகள் 7 பிள்ளைகள்.

இவரது மகன் (ரகு) ஜுனியர் பாலையாவும், மகள் மனோசித்ராவும் திரைத் துறையில் இவரது வாரிசுகளாக வந்தனர். இன்னொரு மகன் சாய்பாபா பின்னணிப் பாடகர்! மற்றவர்கள் இத்துறைக்கு வரவில்லை, டி.எஸ்.பாலையாவைப் பற்றிய பல தகவல்களை அவரது தீவிர ரசிகரான திருநின்றவூர் தி.சந்தானகிருஷ்ணன் அவர்கள் ‘நூற்றாண்டு கண்ட TSபாலையா என்னும் நூலில் சுவாரஸ்யமாக எழுதியுள்ளார்.

பாலையா தில்லானா மோகனாம்பாள் படத்திற்காக சிறந்த குணச் சித்திர நடிகருக்கான தமிழக அரசின் விருது பெற்றவர்! இவர் நடித்த கடைசித் திரைப்படம் அகத்தியர்! ஒரு விசித்திரம் என்னவென்றால் அகத்தியர் போல குள்ளம் என கிண்டலடிக்கப் பட்டதாலேயே ஆறாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டு சர்க்கஸ் மீது கனவு கண்டு, நாடகத்தில் நடித்து சினிமாவில் நுழைந்து எல்லா உயரங்களையும் புகழையும் தொட்ட உன்னத நடிகர் பாலையா!

அவர் மறைந்தது ஜுலை 22 1972 அன்று! என்னால் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத தேதி! ஆம்! நான் அன்று தான் பிறந்தேன்”

பாலையா என்னும் நிகரில்லா கலைஞனுக்கு மலரஞ்சலி💐💐

நிறைந்தது.

🩷 இந்தப் பதிவின் முதல் மூன்று பாகங்களும் படிக்க லிங்க் கமெண்ட்டில் 🩷👇🏿

No comments:

Post a Comment