“பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ்”
(SPL : சின்ன வெங்காயம்,நெத்திலித் துவையல், தயிர் சாதம்)
கடந்த மாதம் கும்பகோணம் செல்லும் போது தஞ்சாவூர் வந்தவுடன் இந்தக் கடை நினைவுக்கு வந்தது! கிட்டத்தட்ட 8 முறையாவது இங்கு சாப்பிடலாம் என நினைத்து அது ஏனோ நடக்கவில்லை. சரி ஒரு சிறந்த அசைவ மெஸ்ஸிற்கு எது அளவுகோல் மட்டன், சிக்கன், மீன் குழம்புகள், வறுவல், சுக்கா, பொரித்தல் வகைகள் இதுதானே எல்லா இடத்திலும்! இங்கு அப்படி என்ன சிறப்பு இருக்கு?!
இந்தக் கேள்வியைக் கேட்டால் தான் நாம் ருசியான உணவுகளை, சிறந்த உணவகங்களை, நல்ல பக்குவமான சமையலைத் தேடிக் கண்டடைய முடியும்! மேலும் ஒரு கடையின் வெற்றிக்கு அந்த ஊர் பாணி சமையல் முறையும் அமைந்துவிட்டால் அதன் வெற்றியை கடவுள் கூட தடுக்க முடியாது. உதாரணமாக மதுரையில் வைக்கும் கோழிக் குழம்பிற்கும் ஈரோட்டில் வைக்கும் கோழிக் குழம்பிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும்!
ஆனால் அவை ருசியில் அந்தந்த ஊரின் மண்மணத்தை கொண்டு வந்திருக்கும். இதில் ஒண்ணு விஜய்னா இன்னொண்ணு அஜீத்! மண் மணத்தில் பட்டுக்கோட்டையின் பாரம்பரிய ருசியை காமாட்சி உணவகத்தார் தங்கள் உணவில் கொண்டு வந்து அசத்துகிறார்கள். பொதுவாக அசைவ மெஸ் என்றால் எனது சாய்ஸ் முதலில் சாப்பாடு சொல்லி விட்டு பிறகு அந்த ஊரின் சிறப்பான அந்த உணவகத்தின் புகழ் பெற்ற குழம்பு & வறுவல் வகைகளைக் கேட்பேன்.
எத்தனை நபர்கள் என்னோடு வந்தாலும் ஆளுக்கொரு வெரைட்டி ஆர்டர் செய்து அதை அனைவருமே பகிர்ந்து கொள்வோம்! இந்த முறையில் ஆர்டர் செய்தால் தான் அதிக உணவு வகைகளை நாம் ருசிக்கவும் வயிற்றில் இடம் இருக்கும். இந்த முறை என்னுடன் வந்தவர்கள்2 பேர்! ஆக மொத்தம் 3 பேர்! சாப்பாடு சொல்லிவிட்டு மட்டன் சுக்கா, ஈரல் குழம்பு, நாட்டுக்கோழி குழம்பு சொல்லிவிட்டு என்ன மீன் வருவல் இருக்கிறது எனக் கேட்டதற்கு..
சீலா மீன் (இவரு வஞ்சிரம் குடும்பத்தார் வகையறா) என்றனர்! சீலா மீன் அதிராம்பட்டினத்தில் கிடைக்கும் ருசியான மீன்! இவர்கள் பட்டுக்கோட்டை என்பதால் அந்த மீனை அங்கு தருவித்து சமைத்து தருவதாகச் சொன்னார்கள். இரண்டு மீன்கள் தான் அப்போது இருந்தன! சட்டுன்னு அதை ஆர்டர் செய்தோம். சூடான சாதம் இலையில் விழுந்தது! கீரை கூட்டும் முட்டைகோஸ் பொரியலும் கொண்டு வந்த சர்வரை விஜயகாந்த் போல..
கண் சிவக்க முறைத்து எங்கள் விழியாலே கோ பேக் சொன்னோம்! பிரம்ம பாத்திரம் ஒன்றில் (4 குழம்புகள் ஊற்றி வைக்கும் 4 அறை பாத்திரம்) மீன், கோழி, மட்டன் குழம்புகள் முதலில் கறிக்குழம்பு தக்காளியும் தேங்காயும் அரைத்து ஊற்றிய அதிக காரமில்லாத கறிக் குழம்பு. அதற்குள் சுக்கா, நாட்டுக் கோழி, ஈரல் குழம்பும் வந்துவிட ஷேர் செய்து கொண்டோம்! மட்டன் குழம்பு சாதுவான மாணிக்கம் என்றால் சுக்கா வறுவல் அதிரடி பாட்ஷா!
இரண்டுமே பட்டையைக் கிளப்பியது! மட்டனை பொறுத்தவரை அதை மெல்லத் தேவையின்றி வாயில் கரைந்தாலே அது மிகச் சிறந்த கறிப்பக்குவம்! மசாலா கலவையில் பட்டை கிராம்பு கூடிவிட்டால் அந்த மசாலாவில் கார்ப்பும் நெடியும் தெரியும்! அப்படி இல்லாமல் கச்சிதமாக இருந்தது! ஈரல் எல்லாம் பஞ்சு போல வெந்திருந்தது! ஈரலுக்குள் வெங்காய மசாலா நன்கு பிடித்திருந்தது! முறையான பக்குவத்தில் தான் இது நிகழும்!
நல்லெண்ணெய் விட்டு சமைத்த நாட்டுக்கோழி சாப்பிட்டு எத்தனை நாளாயிற்று? அந்த ஏக்கம் இங்கு தீர்ந்தது! இடையில் மீன் குழம்புக்கு வரும் போது சீலா மீனை சீவி சிங்காரித்து கொண்டுவந்தனர்! மீன் வறுவல் மீது கனகாம்பரம் வைத்தது போல் குவியலாக பூப்போல தெரிந்தது! இதை முதன் முதலாக இங்கு தான் பார்க்கிறேன்! வியந்து போய் இது என்ன என்றேன்! துருவிய தேங்காயை வறுத்து மசாலா சேர்த்து பிரட்டி மீன் மீது தூவியிருந்தனர்!
மீன் இறைச்சி இளசான நுங்கு போல பொரிந்திருக்க அதோடு இந்த தேங்காய் மசாலாவும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருந்தது! இன்னும் இரண்டு மீன் சொல்லியிருப்போம் அந்த குறையை கோலா உருண்டை தீர்த்து வைத்தது! அருமையான ரசத்தோடு சாதத்தை பிசையும் போது சர்வர் எங்கள் இலையில் உரித்த 8 சின்ன வெங்காயங்களை வைத்தார்! வந்ததே கோபம் நாங்க என்ன இங்கே பழைய சோறா சாப்பிடுறோம்!
எதுக்கு உரித்த பச்சையான வெங்காயம்னு கேட்க நினைத்த போது ஒரு பெரிய கரண்டி நிறைய துவையலை அதன் அருகில் வைத்தார்! என்னங்க இதுன்னு புரியாது கேட்பதற்குள் ஒரு பெரிய மண்சட்டியில் கெட்டித்தயிர் வந்தது! கூடவே கடை சூபர்வைசரும் வந்தார்! சார் இது எங்க காமாட்சி மெஸ் ஸ்பெஷல் நெத்திலி கருவாடு துவையல், சோற்றில் தயிர் விட்டு பிசைந்து சின்ன வெங்காயத்தோ இந்தத் துவையலும் சேர்த்து சாப்பிடுங்க என்றார்!
அவர் எடுத்த ஷார்ட் டைம் கோச்சிங்கின் படி சரி அப்படி என்ன தான் இருக்கு பார்த்திடலாமுன்னு கொஞ்சமா சோறு வாங்கி அதுக்கு கெட்டித் தயிர் வாங்கி நீர்விட்டு தளதளன்னு பிசைந்து ஒரு வெங்காயம் கொஞ்சம் நெத்திலித் துவையல் ஒரு வாய் அள்ளி வாயில் வச்சதும்.. நம்தன நம்தன நம்தன என ருசி மொட்டு தேவதைகள் நாவின் மேல் ஆடத் துவங்கினர்! சத்தியமா இப்படி ஒரு காம்போ இப்படி ஒரு ருசி அனுபவித்ததே இல்லை!
என் வாழ்நாளில் சாப்பிட்ட ஒரு சில மறக்க முடியாத உணவுகளில் இதுவும் ஒன்று என்பேன்! அந்தளவுக்கு சிறப்பு! காமாட்சி மெஸ் என்றில்லை தரத்திலும் பக்குவத்திலும் இதுபோல நல்ல உணவுகளில் மட்டுமே வெற்றி பெற முடியும்! அந்தத் தரம் தொடர்ந்து இருப்பதும் மிகமிக முக்கியம். தஞ்சையில் புதிய பேருந்து நிலையம் அருகில் இவர்கள் கடை உள்ளது. பட்டுக் கோட்டையில் இவர்கள் கடை மதிய உணவுக்கு மிகவும் பிரசித்தம்!
தற்போது இவர்களது கிளை சென்னை, திருச்சி, கோவை நகரங்களிலும் செயல்படுகிறது. இந்தப் பகுதியில் இருப்பவர்களும் சரி கடப்பவர்களும் சரி மறக்காமல் ஒரு முறையாவது ருசிக்க வேண்டிய இடம் காமாட்சி மெஸ்!
🔴 ❌ டிஸ்கி : இது தஞ்சைக் கிளையில் நேரடியாக சாப்பிட்டு நான் பெற்ற அனுபவம்! மற்ற எந்தக் கிளைகளிலும் நான் சாப்பிட்டது இல்லை! ஆகவே மற்ற ஊர் கிளைகளில் நம் மக்கள் பெற்ற மோசமான அனுபவங்களுக்கு இந்த கம்பெனி பொறுப்பேற்காது!
No comments:
Post a Comment