#அரசன்_பேக்கரி
❤️ 🍰 🥧 🧁 🥮 🍔 🥪 🍕 ❤️
அல்வா, சொதி போன்ற நெல்லையின் மண் மணக்கும் அடையாளங்களில் இன்னும் ஒரு சுவையான அடையாளம், “அரசன்” பேக்கரி.. பெயரில் மட்டுமல்ல ருசியிலும் தரத்திலும் இவன் பேரரசன்.
திருநெல்வேலி குறுக்குத் துறை முருகன் போல, இருட்டுக் கடை அல்வா போல ஒரு தனித்த புகழ் கொண்டவன் அரசன். நெல்லை ஜங்ஷன் & பஸ் ஸ்டாண்டில் பஸ் - ரயில் ஏறப்போகிற மனிதர்களை விட..
அதிக மக்கள் ஏறுவது அரசன் பேக்கரி கடைக்குத் தான். பாளையங்கோட்டை, சாந்தி நகர் பக்கம் வேலை இருந்தாலும் ஜங்ஷன் வந்து அரசனில் ஒரு கேக்,பப்ஸ் & டீ குடிச்சிட்டு போனா தான் திருப்தி ஆகும்.
அரசனில் கேக் சாப்பிடும் முகங்களில் தான் ஆனந்தம் என்பது என்ன என்பதைக் காண முடியும். அத்தனை மென்மையா, மணமா, க்ரீமியா இருக்கும். அன்று வெனிலா, பிஸ்தா போன்ற ஃப்ளேவர்களின் காலம்.
அதைத் தவிர வேறு ஃப்ளேவர்கள் அதிக மக்களுக்குத் தெரியாது. அன்றே (1993) ஸ்டிராபெர்ரி, பட்டர் ஸ்காட்ச், லெமன், க்ரேப், பைனாப்பிள், மேங்கோன்னு வெரைட்டியான கேக்குகள் கிடைக்கும்.
க்ரீம் கேக் வகைகள் எல்லாமே கிடைக்கும். டீ கேக்கும் சரி, ப்ளம் கேக்கும் சரி அவ்வளவு மணமா இருக்கும். கேக்கில் க்ரீம் குறைவாகவும் இருக்காது அதிகமாகவும் வழியாது அளவாயிருக்கும்.
ஜுஸ்கேக்னு ஒரு வகை கேக்கை நான் அங்கு தான் சாப்பிட்டேன். ஹனி கேக்னு சொல்வாங்க. கடித்தால் அப்படியே தேன் போல சாறு வரும். கேக் மேலே தேங்காய் பூ தூவி சர்ச் மணப்பெண் போல இருக்கும்.
இந்த ஹனி கேக் வகைகளில் ஜாம் கேக், லெமன் கேக், ஆப்பிள் கேக்னு இருந்தாலும் எனது ஃபேவரிட் ஆரஞ்சு ஹனி கேக் தான். ஆரஞ்சு ஜூசும் கேக்கும் சாப்பிட்ட டூ இன் ஒன் அனுபவத்தை தரும்.
கேக் சாப்பிட்டவுடன் முட்டை பப்ஸ் என்பது நான் எழுதி வைத்த சாசனம். எனது டாப் டென்னில் பல வருடங்கள் அரசன் பேக்கரி முட்டை பப்ஸ் தான் முதலிடத்திலிருந்தது. அத்தனை தனித்துவமாக அது இருக்கும்.
பொதுவா முட்டை பப்ஸை ஓவனிலிருந்து வெளியே எடுத்தால் முட்டை வெப்பத்தில் சற்று பழுப்பாகிவிடும். இங்க அந்தக் கதையே இல்லை. பப்ஸை பிய்த்தால் பளீர் வெள்ளை & மஞ்சளில் நம்மை பார்த்து..
முட்டை சிரிக்கும், அதிலே அபார சூட்டுடன், ஆனியன் மசாலாவும் இருக்கும். அரசன் பப்ஸில் சேர்ந்திடத் தான் கோழி முட்டையே போட்டுச்சுன்னு சொல்லிக்கலாம். அடுத்து அந்த பப்ஸின் பேஸ்டரி ஷீட்டோட தரம்.
எல்லா பேக்கரியிலும் பப்ஸின் பேஸ்டரி ஷீட் எப்போதும் அட்சதை போல துகள் துகளா உதிரும் இங்கு ஷூட் அப்படி பஸ்பமாகாது.. நல்ல வேக்காட்டிலிருக்கும். கடித்தால் கீழே உதிராமல் நாவில் கரையும்.
இன்னொரு பப்ஸ் சொல்லாமல் டீ பக்கம் நகர முடியாது. ஒரு முறை முட்டை பப்ஸ் இல்லைன்னு வெஜ் பப்ஸ் வாங்கினேன். அடடா அந்த காய்கறி மசாலா மிக மிகப் பிரமாதம். காரட், வெங்காயம், பட்டாணி..
எல்லாம் போட்டு பிரமாதமான பப்ஸ். அதன் பின் இரண்டு பப்ஸ் என்றால் ஒரு எக் ஒரு வெஜ்னு தான் வாங்குவேன். ஜப்பனீஷ்னு ஒரு க்ரீம் கேக், மசாலா பன், பன் பட்டர் ஜாம் இப்படி பலப்பல ருசியான உணவுகள்.
எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி, சிறந்த தரம், அபார ருசியை அனுபவிக்கலாம். அங்கு சிக்கன் பப்ஸ், மட்டன் பப்ஸ் இருப்பது தெரியும். என் பர்ஸ் அப்போது அந்தளவு பணக்காரனாக இல்லை. காலம் மாறியது..
பணத்தை சேர்த்து வைத்து மட்டன் பப்ஸ் சாப்பிடுவது லட்சியமானது. இப்போது ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்குகள், ஐஸ் கேக் போன்றவையும் வந்துவிட்டன. என் பர்சும் பணக்காரனாகிவிட்டது, ருசித்”தேன்”
நான் சேல்ஸ் ரெப்பாக இருந்த 1991 முதல் 1996 கால கட்டம் அரசன் என் நாவில் அரசாங்கம் நடத்திய ஆட்சிகாலமாகும். 2005 வரை இந்த பந்தம் தொடர்ந்தது. இப்போது எப்படி என்று தெரியவில்லை.
இங்கு நான் வடை, பஜ்ஜி, பக்கோடா, கப் கேக், தேங்காய் பன், மசாலா பிரெட், அல்வா.. போன்ற உணவுகளைப் பற்றி அதிகம் சொல்லவில்லை. உங்கள் அரசன் பேக்கரி அனுபவங்களை சொல்லலாமே.. ❤️❤️ 🍰 🥧 🧁 🥮 🍔 🥪 🍕












No comments:
Post a Comment