Monday, 17 February 2014

விளம்பர வாசகங்கள்..!

அரசியலுக்கு பொருந்தும் விளம்பர வாசகங்கள்...

கறை நல்லது...காங்கிரஸ்..

சேஞ்ச் தி கேம்... மோடி

இன்னொரு முறை சொல்லுங்க... கெஜ்ரிவால்

அடுத்தவங்க இடத்த யாராலும் பறிக்க முடியாது...ஸ்டாலின்

இப்ப உங்களுக்கு புரியுதா இந்த கட்(டி)சியை ஏன் நான் வாங்கினேன்னு...ஜெயலலிதா..

குடும்பத்தின் ஆரோக்கிய வாழ்விற்கு...கலைஞர்..

எங்க அவமானத்திற்கேற்ற தரமான கூட்டணி...கம்யூனிஸ்ட்..

புதுவீடு,புதுகாரு கலக்குற சந்துரு...கேப்டன்..

பத்து இடத்துக்கான பிரச்சனைகள் இனி இல்லவே இல்லை...வை.கோ...

கோணலா இருந்தாலும் நம்மதாக்கும்...ராமதாஸ்..

நாங்க இருக்கோம்... திருமா,வீரமணி,சரத்,நாஞ்சில்,பரிதி,&பண்ட்ருட்டி...

வாய்க்கு போடுமே பூட்டு... மன்மோகன்...

அரசியலுக்கு பொருந்தும் விளம்பர வாசகங்கள்...

பார்ட் - 2...


Connecting people : தமிழருவி மணியன்

Nothing like anything : நாராயணசாமி

கொஞ்சம் கலாட்டா பண்ணு : சுப்ரமணியசாமி

I feel up : ராகுல்காந்தி

நாக்கை நாட்டியமாடச் செய்யும் : டி.ராஜேந்தர்

பத்திரமா பாத்துக்கோங்க : கனிமொழி

அன்புக்குரியவர்களின் சிபாரிசு: அன்புமணி ராமதாஸ்

பசுக்களின் எமன் : லாலு பிரசாத் யாதவ்

கையில இருக்கு சுங்கம்.... கவலை ஏண்டா சிங்கம் : ப.சிதம்பரம்

அண்டை வீட்டாரின் பொறாமை... சொந்தக்காரரின் பெருமை : சசி தரூர்

நெருங்குவதற்கான வாய்ப்பு : மு.க. அழகிரி

உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா : ஞானதேசிகன்

பெருமை பட்டுக்கோங்க : சச்சின்

இது தங்கமான உறவு : ராபர்ட் வதோரா



Saturday, 15 February 2014

வைக்கோலும்... யானையும்...

கவி காளமேகத்தின் சிலேடை வெள்ள(ல்ல)ம்....

வைக்கோலுக்கும் யானைக்கும்....


பாடல்...


வாரிக் களத்தடிக்கும் வந்துபின்பு கோட்டைபுகும்

போரிற் சிறந்து பொலிவாகும் - சீருற்ற

செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில்

வைக்கோலு மால்யானை யாம்.

இதில் முதலிரண்டு அடிகளே சிலேடை.! கடைசி இரு வரிகளுக்கான அர்த்தம்..சிறப்பு பொருந்திய செந்நிறமான திருமேனியுடைய திருமலைராயனின் மலைச்சாரலிடத்தே வைக்கோலும் யானையும் ஒன்றே..(சீருற்ற செக்கோல மேனித் திருமலைராயன் வரையில்)

வைக்கோல்: வாரிக் களத்து அடிக்கும்- அறுவடை செய்பவரால் வாரிக் களத்தில் அடிக்கப்படும்... வந்த பின்பு கோட்டை புகும் - அதன் பிறகு அரசாங்க களஞ்சியமான கோட்டைக்குள் புகும்... போறிற் சிறந்து பொலிவாகும் - பெரிய வைக்கோற் போரின் தோற்றத்தினால் பொலிவு பெறும்

யானை: வாரிக் களத்து அடிக்கும்- பகைவர்களை வாரி போர்க்களத்தில் துதிக்கையால் அடித்து கொல்லும்... வந்த பின்பு கோட்டை புகும் - அதன் பிறகு பகைவரின் கோட்டையை தகர்த்து உட்புகும்... போறிற் சிறந்து பொலிவாகும் - அதன் வலிமையால் போரில் சிறந்து விளங்கும்..!

என்னுடைய பஞ்ச் :
வைக்கோல் மலை போல் குவிந்திருக்கும்... யானை முதுகில் அமைந்திருக்கும்...அது என்ன?

விடை: #அம்பாரமாய்.       


(அம்பாரி அம்பாரம் என்றும் அழைக்கப்படும்)

கேப்டன் - மன்மோகன்...!

மன்மோகன் - விஜயகாந்த் சந்திப்பு..!

ஒரு கற்பனை உரையாடல்...


பிரதமரின் உதவியாளர்: கேப்டன் உங்களுக்கு15 நிமிடம் தான் டைம் ஒதுக்கப்பட்டு இருக்கு.

கேப்டன்: ஏய்ய்ய் தமிள் நாட்டுல உங்க கட்சியே ஒதுக்கப்பட்டுருக்கு..

பி.உதவி: அய்யய்யோ சார்... உங்களை மாதிரி இன்னும் பல பேர் அவர சந்திக்க வருவாங்க அவங்களுக்கும் டைம் ஒதுக்கி இருக்கு அடுத்து அருண்ஜி வர்றாரு அததான் சொன்னேன்..

கேப்டன்:(மனதிற்குள் அருண்பாண்டியன் மைக்கேல் ராயப்பன் முகங்கள் வந்து போகிறது) அப்ப ஒப்புக்கு தான் என்னை கூப்பிட்டு இருக்காங்களா?) அவங்க தான் என் கட்சியிலேயே இல்லியே...அவங்களை ஏன் கூப்புட்டீங்க?

பி.உதவி : அய்யோ நீங்க நினைக்குற அருண் இல்ல கேப்டன் இது அருண்ஜேட்லி...

கேப்டன்: ஜெட்லியா அவரும் என்னை மாதிரியே பறந்து பறந்து உதைக்கற நடிகராச்சே அவர் எப்ப கட்சி ஆரம்பிச்சாரு?

பி.உதவி: இது அந்த ஜெட்லி இல்லை ஜேட்லி...ம்ம் கேப்டன்..நீங்க டெரரா பேசுவிங்கன்னு கேள்விப்பட்டு இருக்கேன் இப்பதான் பாக்குறேன்....(மணி ஒலிக்கிறது) போங்க பிரதமர் கூப்புட்டாரு.. (பி.உதவி முகத்தில் தப்பித்த நிம்மதி)

அறைக்குள் நுழைகிறார் கேப்டன் அவரை வரவேற்கிறார் மன்மோகன்...

மன்: ஆயியே..ஆயியே கேப்டன் ஜி இதர் பைட்டோ...

கேப்: ஒரு நிமிசம் ஜி... நான் ஆயி அப்பனோட வரவும் இல்ல..இப்ப பைட் பண்ற மூடுமில்ல...

மன்: (சுதாரித்து) இருங்க அப்ப நான் ஒரு மொழி பெயர்ப்பாளர கூப்பிடுறேன்... ஈ.வி.கே.எஸ் ஓகேவா?

கேப்: அதுக்கு நீங்க என்னை வெளிய போன்னு கூட சொல்லியிருக்கலாம்... அவர் வேணாம் நானே சமாளிக்கிறேன்...

மன்: சொல்லுங்க கேப்டன் பார்ட்டி எப்படி போகுது?

கேப்: இல்லிங்கஜி இப்பல்லாம் நான் எந்த பார்ட்டிக்கும் போகுறதில்ல..

மன்: (தன் தலையிலடித்து கொண்டே) அதில்லிங்க கேப்டன் ஜி உங்க கட்சி எப்படி போகுது?

கேப்: உள்ளுக்குள்... (என் கண்ட் ரோல்ல இல்லாம போகுது) அதாவது... அடுத்த பிரதமர நிர்ணயிக்க போறது கேப்டன் தான்னு தமிளக மக்கள் பூரா பேசிக்குறாங்க...ஜி

மன்: நம்ம தமிழக மக்களா கேப்டன் ஜி?

கேப்: ஆமா ஜி... பிரேமலதா,என் மச்சான் சுதீசு,என் பசங்க பிரபாகரன்,சம்முக பாண்டி இவங்க எல்லாம் தினமும் 100 தடவை என் முன்னாடியே இப்டி பேசுறாங்கன்னா பாருங்களேன்!

மன்: இவங்க உங்க வீட்டு ஆளுங்க இல்ல!

கேப்: அதனால என்ன ஜி? அவங்களும் தமிள் நாட்டு மக்கள் தானே! நான் வீடு வேற நாடு வேறன்னு என்னிக்கும் பிரிச்சு பாத்ததில்லை..

மன்: ம்ம் அதே மாதிரி தான் இங்கயும்... அடுத்து காங் ஆட்சி தான்னு அறிக்கை விடச் சொல்றாங்க நம்ம அன்னை..குபீர்ன்னு வர சிரிப்ப அடக்கிக்கிட்டு அத சொல்றதுகுள்ள என் உயிர் போகுது.. அதுக்கு இது ஒண்ணும் அவ்ளோ பெரிய காமெடி இல்ல..

கேப்: ஆமா நீங்க ஏன் இன்னும் பிரியங்கா வீட்டுக்காரரை அரசியலுக்கு கொண்டு வரலை?மச்சான் கூட இருந்தா அது எவ்வளவு நல்லதுன்னு நம்ம ராகுலுக்கு தான் தெரியலை நீங்க சொல்லக்கூடாதா?

மன்:கேப்டன் ஜி...நீங்க என்ன பேசறங்கன்னு தெரியாம பேசுவிங்கன்னு கேள்விபட்டு இருக்கேன் இப்பதான் பாக்குறேன்... நான் சொல்றத அவங்க கேக்க மாட்டாங்க... அவங்க சொல்றத தான் நான் கேக்கணும் அதான் எங்க டீலிங்! பட் இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது...

கேப்: (கோபமாக) ஜி பாத்திங்களா எனக்கு பிடிக்காத ஆளு பட டயலாக்க சொல்லி என்ன கடுப்பேத்துறிங்க..

மன்: ஓகே கேப்டன் ஜி நம்ம டீலிங் பேசறதுக்கு முன்னாடி கூலிங்கா எதும் சாப்பிடலாம் ஒகே..

அவங்க சாப்பிட்டுட்டு வருவாங்க நாமளும் போய்ட்டு வருவமா... 

தொடரும்....



மன்மோகன் - விஜயகாந்த் சந்திப்பு..!

ஒரு கற்பனை உரையாடல்... பார்ட் - 2.

தேநீர் இடைவெளிக்குப் பின்... (சத்தியமாக தேநீர் தான் என நம்பவும்) தொடர்கிறது உரையாடல்...

மன்:ஓகே கேப்டன் ஜி.. கூட்டணி யார் கூடன்னு இப்பவாவது "தெளிவா" முடிவெடுத்துட்டிங்களா?

கேப்: அததான் உளுந்தூர்பேட்டை மாநாட்டில் "தெளிவா" சொல்லிட்டேனே தலைமை எடுக்கும் முடிவுக்கு தொண்டர்கள் கட்டுப்படுவாங்க ஆனால் அவங்க ஆசை தனிச்சு நிக்கறது தான்னு... இதவிடத் தெளிவா யாருங்க சொல்ல முடியும்...நீங்க என்னா நினைக்குறிங்க ஜி?

மன்: காங் கட்சியில பிரதமரா இருக்கறத விட உங்க கட்சி தொண்டனா இருக்குறது சிரமம்ன்னு சொல்ல வரேன் கேப்டன் ஜி..!

கேப்: பாத்திங்களா என் கட்சி தொண்டனா இருக்கறதுக்கே சிரமம்ன்னா தலைவனா இருக்குற எனக்கு எவ்வளவு சிரமமம் இருக்கும்..!

மன்: அத விடுங்க கேப்டன்.. ஊழல் எதிர்ப்பு மாநாடுன்னு நடத்திட்டு எங்க கூட சேந்தா உங்களை மக்கள் நம்புவாங்களா?

கேப்: அதுக்கு ஒரு ஐடியா இருக்கு... உங்க ஆளு நாராயணசாமி கிட்ட ஆமா நாங்க ஊழல் கட்சி தான்னு சொல்ல சொல்லி ஒரு அறிக்கை விடச் சொல்லுங்க... மக்கள் அத வழக்கம் போல நம்பவே மாட்டாங்க... எப்புடி!

மன்: ஆஹா! சூப்பர் ஐடியா கேப்டன் இதுக்காகவே உங்க கூட நாங்க கூட்டணி வைக்க விரும்பறோம்..

கேப்: வைக்கலாம் ஆனா எவ்வளவு தருவிங்கன்னு தெரிஞ்சா மேற்கொண்டு பேசலாம்..

மன்: அது சரி நீங்க பிடி கொடுத்து போக மாட்டேங்குறிங்கன்னு தமிழகத்துல பல பேரு சொல்றாங்களே ஜி..

கேப்: ஜி... நல்லா தெரிஞ்சுக்குங்க நட்புக்கு பாலம் போடறேன்னு இப்ப சொல்றவங்க தான் அன்னிக்கு பாலத்துக்காக என் மண்டபத்தையே இடிச்சாங்க (கண் சிவக்கிறது) 

மன்: சரி விடுங்க கேப்டன் ஜி பாலம் தான போச்சு.. உங்க தன்மானம் போகலியே..

கேப்: (சாந்தமாகி புன்னகைக்கிறார்) அட பரவால்லையே நீங்க இவ்வளவு நல்லா பேசறிங்க ஆனா நீங்க பேசவே மாட்டிங்கன்னு ஊரு ஃபுல்லா பேச்சிருக்கு...அது ஏன் ஜி?

மன்: அதான் சொன்னேனே டீல் அப்டின்னு.!எனக்கும் எங்காவது கண் காணாத இடத்துக்கு போயி நின்னு நல்லா பேசிப்பாக்கணுன்னு ஆசை ம்ம்ம் விடுங்க இன்னும் ஒரு 3 மாசத்துல அது நடக்காமயா போயிடும்..? ( சொன்னதன் விபரீதம் புரிந்து நாக்கை கடிக்கிறார்)

கேப்: என்ன ஜி நான் தான் எப்பவும் நாக்கை கடிப்பேன் இன்னிக்கு நீங்க கடிக்கிறிங்க?

மன்: இல்ல நான் தனியா அது வந்து நான் இப்ப சொன்னது... அர்த்தம் அதில்ல ஏன்னா...

கேப்: அட ஏன் தடுமாறுறிங்க ஜி இந்த தேர்தலில் பிரதமர் வேட்பாளரா நிக்க உங்களுக்கு விருப்பம் இல்ல அதானே...

மன்: ஆமாங்க ஜி.. இந்த முடிவக்கூட என்னால சொல்ல முடியலை...சரி விடுங்க ஆமா எங்க கூட்டணிக்கு வந்தா உங்களுக்கு எத்தன சீட் வேணும்?

கேப்: எனக்கு 20 உங்களுக்கு 20 அதை நீங்க யாருக்கு வேணா குடுங்க ஜி?

மன்: 20 எங்களுக்கா அத யாருக்குன்னு பிரிக்கறது? எங்களுக்கு 2 கூட தேறாதே...

கேப்: மனதிற்குள் ( இந்த தேர்தல்ல உங்க கட்சியே தேறாது) 20 சீட்ன்னா 20 தான் அதுல மாற்றமே இல்ல..ஏன் இத தர முடியாதா?

மன்: உங்க அப்பாயிண்ட்மெண்ட வேணா 20 நிமிஷம் கூட்டித்தர்ரேன். இறங்கி வாங்க ஒரு 10 சீட் வாங்கிக்கங்க ஜி..

கேப்: (சிரிக்கிறார்) பிஜேபி 11 சொன்னத வேணாம்ன்னு சொல்லிட்டு வந்துருக்கேன் நீங்க 10 சொல்றிங்க இது என்ன நியாயம் ஜி?

மன்: சரி அதே11 தர்றோம் ஓகேவா கேப்டன்...

கேப்: நீங்க பிரதமரா இருக்கிங்கன்னு பாக்கிறேன் சரி உங்களுக்காக சொல்றேன் கடைசியா 15 சீட்டுன்னா ஓகே..

மன்: 15 ஆ..! சரிங்க மேலிடத்துல தான் இதை முடிவு பண்ணணும் எனக்கு அவங்க சொல்ல சொன்னது 11 தான்..

கேப்: அப்ப முடிவு பண்ணிட்டு சொல்லுங்க நான் வர்றேன்.. (கிளம்புகிறார்)

மன்: வெளிய பத்திரிக்கைகாரங்க கிட்ட என்ன சொல்லுவிங்க கேப்டன்?

கேப்: ஹா ஹ்ஹா... சம்முகபாண்டி நடிக்குற பட ஆடியோ ரிலீசுக்கு உங்களை அளைக்க வந்தேன்னு சொன்னா சிரிச்சுக்கிட்டே நம்புவாங்க... வரட்டுமா... ஆங்க்...

பிரதமர் மூர்ச்சையாகிறார்...





Wednesday, 12 February 2014

டிவிட்டுறள்....!

தாய்மொழியில் பிழையாய் எழுதுவது என்றும்

பெற்றதாயை உதைப்பது போல்.

பிறமொழியை கற்பது தவறில்லை எப்போதும்

தாய்மொழியில் கற்பது இனிது.

பிறமொழி ஆதிக்கம் எந்நாளும் தேசத்தின்

பண்பாட்டை அழித்து விடும்.

தன்மொழி நேசிக்கா மனிதன் இவ்வுலகில்

கண்விழி அற்றவன் ஆகும்.

நம்மொழி நலமாய் வெகுகாலம் வாழ்ந்திட

தாய்மொழியில் பேசுவ தழகு.

தாய்மொழி என்ற மரத்திற்கு எப்போதும்

இலக்கியமும் இலக்கணமும் வேர்.

பன்மொழி அறிஞனாய் இருந்தாலும் பழித்திடுவார்

தாய்மொழி தெரியா தவனை.

மொழியே தன்னுயிரென்று வாழ்வோர் என்றென்றும்

இழிவாய் போனது இல்லை.

தாய்மொழி என்றும் உயர்ந்தது என்றாலும் 

பிறமொழியும் மதிப்பது அழகு.

தாய்மொழியை காத்து வைப்பதே எதிர்கால

தலைமுறைக்குச் செய்யும் சேவை.



டிவிட்டுறள்...!

ஒரு புதிய முயற்சி...!


திருக்குறள் பாணியில் இரு அடியில் நச்சென சொல்ல முயன்று இருக்கிறேன்,விளக்கவுரை தேவையில்லாமலேயே புரியும் வகையில் எழுதிக் கொண்டு வருகிறேன்..குறள் வார்த்தைகள் சில இடங்களில் அப்படியேவும் இன்றைய ஆங்கில வார்த்தைகள் சில இடங்களிலும் பயன் படுத்தி உள்ளேன்..

ஒண்ணே முக்கால் அடி முதல் இரண்டு அடி வரை என்ற கட்டுப்பாடு மிகாமல் குறளின் ஓசை நயத்தில் சொல்ல முயன்று உள்ளேன் குறள் யாப்பிலக்கணம் பல இடங்களில் தவறியிருக்கலாம் அதை கருத்தில் கொள்ளவில்லை இக்கால சந்ததியினருக்கு குறள் போல இருக்கிறது என ஒப்புக் கொண்டால் போதும்.. இப்போதைக்கு ஒரு 500 டிவிட்டுறள் எழுத ஆசை..! பார்க்கலாம்...500 வருகிறதா என்று.. இதற்கு நான் எதிர் பார்ப்பது வழக்கம் போல் உங்கள் ஆதரவு..! டிவிட்டருக்காக எழுதினாலும் முகனூலிலும் பதிவிடுகிறேன்... இன்று முதல் தொடங்குகிறது..

முதல் டிவிட்டுறள்...

குடியினிது புகையினிது என்பர் குடிமக்கள்

வெகுகாலம் வாழா தவர்.


டிவிட்டுறள்....

சீரியல்பேய் பிடித்தாட்டும் மாந்தர் தம்வாழ்வு

சீரழிந்தே சிதறி விடும்.

பிறர்க்கென்று கண்மூடி ஜாமீனேற்பின்; நமக்கென்று

ஜாமீன் நாளை வரும்.

நட்புக்கு கடனளித்து செய்கின்ற உதவி

அன்றே மறத்தல் நலம்.

முதலை வாய்க்குள் சென்றதும் திரும்பிவிடும்

திரும்பாதே கொடுத்த கடன்.

மிஸ்டுகால் தருவது லவ்வரெனில்; விரைந்து

டாப்-அப் செய்யெனப் பொருள்.

ஈ.சி.ஆர் செல்கின்ற காதலெல்லாம்;விரைவில்

ஈசியாய் கழண்டு விடும்.

மனைவி சொல்லே நலமென்பார்;அவர்வாழ்வு

சிறக்குமே சிக்கல் இன்றி.

மெய்யான காதல் மணக்குமே;நெய்யோடு

சேர்ந்த சோற்றைப் போல்.

பல்சரோ ஹோண்டாவோ உனதெனினும்;எந்நாளும்

ஹெல்மெட்டே காக்கும் தலை.

சீட்பெல்ட் அணியாது செல்கின்ற பயணம் 

சீட் தருமே எமனுலகிற்கு.

சாலை விதிகளை மதித்திடுவோர் தலைவிதிகள்

என்றும் இன்பத்தால் எழுதப்படும்.

சிக்னலை மதியாதோர் வாகனம் என்றும்

சிக்கலைச் சேர்த்து விடும்.

போதையில் செலுத்திடும் வாகனம்;விரைந்து

சேர்த்திடும் இறைவ னடிக்கு.

கண்கூசும் வாகன விளக்கொளி நம்வாழ்வில்

மண்ணள்ளிப் போட்டு விடும்.

மிதவேகத்தில் செல்லும் பயணம்;என்றென்றும்

தந்திடுமே ஆயுள் பலம்.

எரிபொருள் சிக்கனம் மறப்பின்;எதிர்காலம்

எரிந்தே கருகி விடும்.

முன்சென்று கேட்கும் மன்னிப்பு உன்வாழ்வில்

பின்னின்று உயர்த்தி விடும்.

பண்பும் பணிவும் உடனிருந்தால்;எப்போதும்

பறித்திடலாம் வெற்றிக் கனி.

ஆத்திரத்தில் எடுக்கும் முடிவானது; தந்திடுமே

ஆறாத புண்ணின் வலி.

கிணற்றில் விழுந்த கல்லைப்போல் மூழ்கடிக்கும்

சினத்தில் உதிர்த்த சொல்.

ஐந்தறிவு என்பது யாதெனில் ; ஒருவன்

சினத்தோடு செய்யும் செயல்.

கோபம் அடக்கக் கற்பவர் தம்வாழ்வில்

சோகம் விலகிடும் சிறப்பு.

முதுகுக்கு பின்நின்று பேசுதல் எந்நாளும்

கொலையினும் கொடிய செயல்.

பெருங் கள்வனையும் நம்பலாம்; நம்பாதே

துரோகம் செய்த நட்பை.

பிறர்க்குதவும் நற்குணமும் பெருஞ்செல்வம்;அச்செல்வம்

மானிடர்க்கு எல்லாம் தேவை.

பொருத்தம் இல்லா வார்த்தை உதிர்ப்பின் 

வருத்தம் வாசல் வரும்.

பொறாமைக் கண்ணால் பார்த்தால் தெரியாது

நல்லவை நான்கும் உனக்கு.

உள்ளத்துள்ளே விஷம் வைத்து;நாவினிக்க

பேசுவார் தம்நட்பை விலக்கு.

அலுவலில் உறங்கும் ஒருவன் எந்நாளும்

அடைவதில்லை வெற்றியின் படி.

சோம்பலில் தள்ளிவைத்த பணிகள் எப்போதும்

சோகத்தை அள்ளித் தரும்.

வட்டமிட்டு வாழ்வது வாழ்வல்ல;இவ்வுலகில்

திட்டமிட்டு வாழ்வதே சிறப்பு.

அஞ்சாதவர்க்கு சாவென்பது ஓர்முறை;அஞ்சுவோர்

வாழ்வில் தினந்தினம் சாவு.

சிரித்த முகத்தோடு பழகும் குணமுடையோர்

சிறப்பாய் வாழ்வ துறுதி.

முகத்தில் புன்னகையும் அகத்தில் நற்குணமும்

நிகரில்லா செல்வம் உனக்கு.

பெரியவர்க்கு தந்திடும் மதிப்பு எந்நாளும்

பெருமையைச் சேர்க்கும் உனக்கு.

மூத்தோர் சொல்கேட்டு வாழ்கின்ற வாழ்க்கை

முன்னேற்றம் தருமே நமக்கு.

விட்டுக் கொடுத்து வாழ்கின்ற தெப்போதும்

கெட்டழிந்து போவ தில்லை.

பிறர்பற்றி பழிபேசும் குணமிருந்தால்;வெறுத்திடுவாள்

பெற்றத் தாயும் உனை.

ஏழையின் பசிதீர்க்க பேசுகின்ற பொய்யுனக்கு

ஏற்றத்தை தந்து விடும்.

பிறர்க்குதவ பணம் தேவையில்லை:அதற்கான

மனமிருந்தால் அதுவே சிறப்பு.

நண்பனின் துன்பத்திற்கு செய்யும் உதவி

நட்பை செழிக்க விடும்.

அக்கறையில்லா நட்பானது சுடுநீரில் கரையும்

சர்க்கரையாய்க் கரைந்து விடும்.

பூக்கும் காய்க்கும் செடிகளில் எந்நாளும்

பூக்காதே வெள்ளிப் பணம்.

முறையின்றி முளைத்திட்ட முகநூல் நட்பு

துயரத்தில் முடித்து விடும்.

சாட்டிலே செய்கின்ற சேட்டைகள் பின்னாளில்

சாட்டையாய் மாறி விடும்.

நற்பதிவு முகநூலில் யாதெனில் படிப்போரை

எழுதத் தூண்டும் பதிவே.

நிலைக்கும் பதிவுகள் எழுதுவோர்க்கு எந்நாளும்

லைக்குகள் பொருட் டில்லை.

அளவோடு அளவளாவும் நற்பண்பு உள்ளவரால்

ஃபேஸ்புக்கும் பெருமை பெரும்.


மின் சிக்கனம்:

சி.எப்.எல் பல்புகள் இல்லத்தில் ஒளிர்ந்தால்

சீராகும் மின்சக்தி யங்கு.

குண்டுபல்பு எரிகின்ற வீடெப் போதும்

இருண்ட எதிர்காலந் தரும்.

எல்லா விளக்கும் விளக்கல்ல சிறப்பான

சி.எப்.எல் விளக்கே விளக்கு.

பொன்சேமிக்க மறப்பினும் குற்றமில்லை பெருங்குற்றம்

மின்சேமிக்க மறப்ப தின்று.

தேவையின்றி பயன்படுத்தும் மின்சாரம் குறைப்பது

தேனாய் இனித்து விடும்.

குண்டாயிருப்பது ஆரோக்யத்தின் கேடு குண்டுபல்பு

மின் சிக்கனத்தின் கேடு.

குறைவாய் பயன்படுத்தும் மின்சாரம் நம்வீட்டில்

நிறைவாய் நிலைத்து விடும்.

மின்சிக்கனம் என்றும் உடனிருந்தால் மின்வெட்டை

காணலாம் கல் வெட்டில்.

வருங்காலம் உணராது வீணாக்கும் மின்சக்தி

உலகிற்குச் செய்யும் துரோகம்.

மின்சிக்கனம்  கொள்ளாதோர் வாழ்வு தள்ளாடும்

சம்சாரமிழந்த முதியவன் போல்.



மரம் வளர்ப்போம்....

உலகம் தகித்து கொதிப்பது தடுக்க 

மரங்கள் வளர்ப்ப தறிவு.

எறியும் பாலிதீன் குப்பைகள் எரித்திடும்

மரத்தடி மண் வளத்தை.

மழையின்றி உழவின்றி உலகம் வாடுதல்

மரங்களை அழிப்பதன் பரிசு.

மரம் வளர்ப்போர் அனைவரும் எதிர்கால

நலம் வளர்ப்போ ரெனச்சொல்.

பிள்ளையை போற்றி வளர்ப்பதும் மரங்களை

நீருற்றி வளர்ப்பது மொன்று.

மனிதர் நம்கடமை எந்நாளும் மரம்

வளர்த்து செழிக்க விடல்.

விதையிட்டு மரம் வளர்த்து விட்டோர்க்கு

மழையால் நன்றி வரும்.

வெட்டிச் சாய்த்த மரங்கள் வளமையை

கட்டிப் போட்டு விடும்.

விழுகின்ற மரங்கள் வேண்டாம்; வேண்டுமே

விழுதுகள் விடுகின்ற மரம்.

மரம்வெட்டி சாய்ப்பதும் மனிதர் உயிர்வெட்டி

சாய்ப்பதும் இரண்டு மொன்று.



புத்தக வாசிப்பு...

புத்தகம் படிப்பது பரவசம் அதென்றும்

காட்டிடும் புது உலகு.

புத்தகம் வாசிக்க விரும்பாதோர் பின்னாளில் 

யாசிப்பர் நல் அறிவை.

புத்தகமே உயிர்த் தோழன் என்பாருக்கு

புவியெங்கும் கிடைத்திடும் சிறப்பு.

நூலறிவின்றி பெறுகின்ற பட்டம் எப்போதும்

நூல் அறுந்த பட்டம்.

பள்ளிப்பாடம் மட்டும் கற்றவன் சிறியோன்

புத்தகம் படிப்பவன் முன்.

புத்தகம் படிப்பது அருந்தவம் படிக்காதோர்

உயிர் வாழ்கின்ற சவம்.

பண்டிதனாக படிப்பது நன்று அதனினும்

பண்படப் படித்தல் நன்று

தாய்மொழியில் படிப்பதன் சிறப்பு எந்நாளும்

தாய்ப்பால் குடிப்பதற் கிணை.

நன்னூல்கள் படிக்காது வாழ்கின்ற வாழ்வு

நல்லறிவை மறைத்து விடும்.

கற்றறிந்த பாடங்கள் மேன்மை பெறும்

புத்தக வாசிப்பிருப் பின்.






























Thursday, 6 February 2014

பாம்பு& எலுமிச்சை...

கவி காளமேகத்தின் சிலேடை வெ(ல்ல)ள்ளம்...!

பாம்புக்கும் எலுமிச்சைபழத்திற்கும்....

பாடல்:

பெரியவிட மேசேரும் பித்தர் முடி யேறும்

அரியுண்ணு முப்புமே லாடும் - எரிகுணமாம்

தேம்பொழியும் சோலைத் திருமலைரா யன்வரையில்

பாம்பு மெலுமிச்சம் பழம்.


தேன் பொழியும் சோலைகளுடைய திருமலை ராயன் மலைச்சாரலிலே பாம்பும் எலுமிச்சம்பழமும் ஒன்று எப்படி என்றால்.. (இது கடைசி இரு வரிகளுக்கான விளக்கம்)

பாம்பு..... பெரிய விடமே சேரும்...மிகுந்த விஷம் உடையதாக இருக்கும், பித்தர் முடி ஏறும்... பித்தனான சிவனின் முடியிலும் இருக்கும், அரி உண்ணும்... காற்றைப் புசிக்கும், உப்புமேலோடும்.... அதனால் தன் மேல் உடலை உப்ப வைத்து கொள்ளும், மேல் ஆடும்... தலை தூக்கி மேல் எழுந்து ஆடும், எரி குணமாம்.... சீற்றம் செய்யும் சினம் கொண்ட குணம் உடையது.!

எலுமிச்சை.... பெரிய விடமே சேரும்... பெரியவர்களிடம் கொடுக்கப்பட்டு அவர்களை சேர்ந்து இருக்கும், பித்தர் முடி ஏறும்.... பித்து பிடித்தவர்கள் தலையில் தேய்க்கப்பட்டு மருந்தாகவும் இருக்கும், அரியுண்ணும்.... சிறு துண்டங்களாக அரிந்து வைக்கப்படும் உப்புமேலோடும்.....மேலாக உப்பு தூவி வைக்கப்படும் (ஊறுகாய்க்காக)  எரிகுணமாம்.... அதன் சாறு பட்டால் எரிச்சல் தரும் குணம் உடையது.!

என்னுடைய பஞ்ச் :  எலுமிச்சையை பிழிவது ஏன்..? புற்றில் பால் ஊற்றுவதேன்..?

விடை: "சர்பத்துக்காக"

சந்துக்குள் ஒரு தாஜ்மகால்...!

சந்துக்குள் ஒரு தாஜ்மகால்...!


மெல்லிய முத்துக்களாய் மேலுதட்டு வியர்வைத்துளிகள்

மருண்ட விழிகளுக்குள் உருண்ட திராட்சைகள்

துடிக்கும் உதடுகளை உள் பக்கம் மடித்தாய் திறந்தாய்

காதோர கூந்தல் இழை நீரில் நனைந்த மயிலிறகாய்

விம்மி தணிகின்ற நெஞ்சை நீவுகின்றது உன் கரம்

விக்கல் எடுப்பது போல் திக்கி சிக்கலாய் பின்னிப் பிணைந்து 

வந்து விழுந்த வார்த்தைகள் தெளிவற்று இருந்தாலும்...

தேனாக விழுந்தது என் காதில் "வழிய விடுங்க நான் போகணும்"

என்று சொல்லி விட்டு நான் வழிவிட்டதும் மின்னலாய் ஓடிவிட்டாய்

வாழ்வில் நாம் இருவரும் ஒன்று சேராமல் போனாலும் எனக்கு

சற்று இருளான நம் தெருவின் குறுகல் சந்திற்குள் அன்று நடந்த 

சந்திப்பின் நினைவுகள் இன்றும் அத்தெருவை கடக்கும் போதெல்லாம் 

வந்து போகும்.. நான் மட்டும் தான் அப்படி என்று நினைத்திருந்த போது

அம்மாவின் குரல் "டவுனுல கட்டி கொடுத்துருக்காங்களே நம்ம டீச்சர் மக 

அவ எப்ப வந்தாலும் இந்த சந்துக்குள்ளயே வந்து நின்னுகிட்டு போறாடா!

அப்டி இங்க என்னாத்த கண்டாளோ! என்றவுடன் என் மனதிற்குள் நம் காதல்

புதைந்த இடமாக தோன்றியது அந்தத் தெரு! 

சட்டென்று எனக்கு அச்சந்து தாஜ்மகாலாக தெரிந்தது...!
,







மெல்லிய முத்துக்களாய் மேலுதட்டு வியர்வைத்துளிகள்

மருண்ட விழிகளுக்குள் உருண்ட திராட்சைகள்

துடிக்கும் உதடுகளை உள் பக்கம் மடித்தாய் திறந்தாய்

காதோர கூந்தல் இழை நீரில் நனைந்த மயிலிறகாய்

விம்மி தணிகின்ற நெஞ்சை நீவுகின்றது உன் கரம்

விக்கல் எடுப்பது போல் திக்கி சிக்கலாய் பின்னிப் பிணைந்து 

வந்து விழுந்த வார்த்தைகள் தெளிவற்று இருந்தாலும்...

தேனாக விழுந்தது என் காதில் "வழிய விடுங்க நான் போகணும்"

சற்று இருளான நம் தெருவின் குறுகல் சந்திற்குள் அன்று நடந்த 

சந்திப்பின் நினைவுகள் இன்றும் அத்தெருவை கடக்கும் போதெல்லாம் 

வந்து போகும்.. நான் மட்டும் தான் அப்படி என்று நினைத்திருந்த போது

அம்மாவின் குரல் டவுனுல கட்டி கொடுத்துருக்காங்களே நம்ம டீச்சர் மக 

அவ எப்ப வந்தாலும் இந்த சந்துக்குள்ளயே வந்து நின்னுகிட்டு போறாடா!

அப்டி இங்க என்னாத்த கண்டாளோ! உயிரற்று போன மனங்களுக்கு நடுவே 

உயிருள்ள இடமாய் மாறியது என் தெரு! சட்டென்று எனக்கு அச்சந்து 

தாஜ்மகாலாக தெரிந்தது...
,


Saturday, 1 February 2014

காளமேகப் புலவர்...!

சிலேடை...கவி காளமேகம்.!

( முதல் வாரம் என்பதால் கவி பற்றி அறிமுகம் )

கவி காளமேகத்தை அறியாதோர் சிலேடை பற்றியும் அறிந்து இருக்க முடியாது.! இவர் திருக்குடந்தையில் பிறந்தவர் என்றும் திருமோகூரில் பிறந்தவர் என்றும் இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. திருமோகூர் பெருமாளின் பெயரும் காளமேகமே! 

இருப்பினும் இவர் இயற்பெயர் வரதன் என்பதும் ஶ்ரீரங்கம் கோவிலில் பரிசாரகராக பணி புரிந்தவர் என்பதும் அவ்வூரில் தேவதாசியாக இருந்த மோகனா என்பவளை காதலித்து அவளுக்காக சைவ மதத்திற்கு மாறினார் என்பதும் சுவையான விஷயங்கள்...

தேவி உபாசகர் ஒருவர் தவமிருந்த போது தேவி தோன்றினாராம் வந்தது தேவி எனத்தெரியாது அவர் அலட்சியப்படுத்த தேவி கோவிலில் படுத்திருந்த காளமேகத்திற்கு தன் அருளை தந்துவிட்டாராம்! அன்றிலிருந்து தான் வரதன் கவி காளமேகமானாராம்.!

புலவரான பின்பு தமிழகம் முழுவதும் பயணப்படலானார் கவி. நாகைக்கு அருகில் உள்ள திருமலைராயன் பட்டினத்தின் சிற்றரசன் தனது அவையில் தண்டிகை புலவர்கள் என்று 64 பேரை வைத்திருந்தான்.. அதன் தலைமைப் புலவன் அதிமதுர கவிராயன்..!

செருக்கோடு இருந்த இந்த தண்டிகை புலவர்களோடு முதலில் மோதலில் துவங்கியது காளமேகத்தின் முதல் சந்திப்பு..! அவர்களுடன் போட்டியிட்டு வென்ற போதும் அம்மன்னன் உரிய மரியாதையை கவிக்கு தராததால் அவனை வசை மாறி பாடி அகன்றார் கவி.

அவர் வசை பாடியது போலவே கடற்சீற்றத்தால் அழிந்தது அந்நாடு.! ஆனால் அங்கு தப்பி பிழைத்த அதிமதுரர் மட்டும் கவியின் பெருமையை தானும் தம் மன்னனும் உரிய படி மதிக்கவில்லையே என மனம் வருந்தினார்.

பின்னாளில் அதிமதுர கவிராயர் காளமேகத்தை புகழ்ந்து பாடினார் என்பது தனிக்கதை.. இவ்வாறாக வாழ்ந்து தன் முதுமை காலத்தில் திருவானைக்காவில் மறைந்தார் கவி.. 

அவர் எழுதிய நூல்கள் மூவர் அம்மானை, திருவானைக்கால் உலா, சித்திர மடல், பரப்பிரம்ம விளக்கம் முதலியவை ஆகும்.. இதில் அம்மானை முழுவதும் முற்றுப் பெறவில்லை..


இனி சிலேடை..

திருமலைராயன் பட்டினத்தில் கவி நுழைகையில் பல்லக்கில் ஊர்வலமாக அரசர்களைப் போல அதிமதுர கவிராயர் வந்து கொண்டிருந்தார் மக்கள் சாலையின் இரு புறமும் நின்று வாழ்த்து கோஷங்களிட்டு வரவேற்றது கவியை முகஞ்சுளிக்க வைத்தது . அப்போது....

காவலன் ஒருவன் கவியை பார்த்து நீயும் வாழ்த்திப்பாடு என கட்டாயப் படுத்தினான்.. ஆத்திரத்துடன் கவி பாடிய பாடல் இதோ...

அதிமதுரம் என்றே அகிலம் அறியத் 
துதிமதுர மாயெடுத்துச் செல்லும்-புதுமையென்ன
காட்டுச் சரக்குலகிற் காரல் லாச்சரக்குக்
கூட்டுச் சரக்கதனைக் கூறு.

அதிமதுரம் என்பது ஒரு காட்டுச் சரக்கு அதை ஏன் துதி பாடி தூக்கிச் செல்லவேண்டும் அதை ஏன் போற்றி புகழ்ந்திட வேண்டும்... என்பதே இதன் அர்த்தம். 

இந்நாளிலும் சிலேடை சொல்வதில் பெண்கள் வல்லவர்கள்.. இதோ இன்னும் 5 நிமிஷத்தில் ரெடியாகிவிடுவேன் என்று மனைவி சொல்வதும் சிலே(ட்)டையே..