Thursday, 5 June 2014

குருஜி - ஜூன்

ஜென் வெங்கி வழங்கும்.. குருஜியின் நீதிக்கதைகள்...

ஒரு காட்டில் நரியும் பூனையும் சந்தித்துக் கொண்டன.. நரி பூனையிடம் தன்னைப் பற்றிய பில்டப்புகளை அள்ளி விட்டது.. "பூனையே நான் மிகுந்த தந்திரசாலி பகைவர்களிடம் இருந்து தப்பிக்க எனக்கு ஆயிரம் வழிகள் தெரியும்" அநேகமாக இதை நூலாக எழுதி அடுத்த மாதம் வெளியிடலாம் என்றிருக்கிறேன்.. சரி உனக்கு எத்தனை வழிகள் தெரியும் என்றது..!

பூனை அலட்டிக்கொள்ளாமல்"நரியாரே உங்களைப்போல நான் பெரிய தந்திரசாலி இல்லை.. எனக்கு ஆயிரம் வழிகள் தெரியாது.. எனக்கு தெரிந்து ஒருவழி தான் அந்த ஒரு வழியை வைத்துதான் இதுவரை பல முறை தப்பித்துள்ளேன்.. அந்த ஒரு வழியைத் தவிர வேறு வழி எனக்கு சிறந்ததாக தெரியவில்லை"..." என்வழி - ஒரே வழி "என்று பஞ்சியது..!

அட முட்டாள் பூனையே ஒரே ஒரு வழியை வைத்துக் கொண்டு எப்படி பகைவர்களிடம் இருந்து உயிர் பிழைப்பாய்..? இந்த கேள்வியை நரி கேட்ட போது வேட்டை நாய்களின் குரைக்கும் சப்தமும் அதன் பின்னே வேடர்கள் ஓடிவரும் சத்தமும் கேட்டது.. ஆபத்தை புரிந்து கொண்ட பூனை அருகில் இருந்த மரத்திற்கு தாவி வேகமாக உச்சிக்கு சென்றது.!

ஆயிரம் வழிகள் தெரிந்த நரி எந்த வழியை உபயோகிப்பது என்று குழம்பி .. யோசனை வருவதற்குள் வேட்டை நாய்களால் சூழப்பட்டு வேடர்களிடம் பிடிபட்டது..!

நீதி : சந்தேகத்திற்குரிய நூறு வழிகளை விட பத்திரமான ஒரு வழி சிறந்தது..


ஜென் வெங்கி வழங்கும்.. குருஜியின் நீதிக்கதைகள்...

மாலை நேரம்.! இரு வேடர்கள் பேசிக்கொண்டு போனார்கள்.. அதில் ஒருவன் "நாளை நாம் வேட்டைக்கு வரும் போது ஆமையை பிடிக்க வேண்டும்.. காட்டு ஆமைக்கறி சாப்பிட்டு வெகு நாளாயிற்று என என் மனைவி ஆசைப்பட்டு கேட்டாள்" என்றான்.! "ஆமாப்பா ஆமைக்கறி செமயா இருக்கும் கட்டாயம் நாம நாளை ஆமை பிடிக்கிறோம்" இது இன்னொருவன்.!

இவர்கள் பேச்சை புதருக்குள் ஒளிந்திருந்த ஆமை ஒன்று கேட்டது.. அதற்கு உயிர் பயம் ஏற்பட்டது.. நம்மால் வேகமாக ஓடவும் முடியாது.. ஒளிந்து கொண்டாலும் முதுகு ஓடு நம் இருப்பிடத்தை காட்டி கொடுத்து விடும்.. எப்படி தப்பிப்பது என்று யோசிக்கும் போது நண்பன் கொக்குவின் ஞாபகம் வந்தது.. கொக்கு வசிக்கும் மரம் அருகே சென்றது ஆமை..!

மாலை நேரம் என்பதால் ஸ்னாக்ஸாக ஃபிஷ் பஜ்ஜி சாப்பிட்டு விட்டு அப்போது தான் கூடு திரும்பியிருந்தது கொக்கு.! ஆமையை பார்த்ததும் குட் ஈவினிங் ஆமை மச்சி ஹவ் ஆர் யூ என்றது கொக்கு.! என்னப்பா எல்லார் மாதிரி நீயும் குட் ஈவினிங் ஸ்டேட்டஸ் போடுற.. நாளைக்கு எனக்கு குட்மார்னிங்கே கிடையாது அது தெரியுமா உனக்கு என்றது ஆமை.!

என்னப்பா பிரச்சனை..? ஆமை விளக்கி கூற.. இப்ப என்ன செய்யலாம் என்றது கொக்கு.! எப்படியாவது நாளைக்கு காலையில என்னை இந்த இடத்துல இருந்து தூக்கிட்டு போய் நீங்க மீன் சாப்பிடுற குளத்துகிட்ட பாதுகாப்பா இறக்கி விடு நண்பா அது போதும் என்றது ஆமை..! அது சரி நண்பா.?உன்னை எப்படி நான் தூக்குவது அது கஷ்டமில்லையா..?

ஆமை ஒரு யோசனை சொன்னது "நண்பா நீயும் இன்னொரு கொக்கு நண்பனும்  ஒரு கனமான நீள குச்சியின் இரு முனைகளை ஆளுக்கொருவராக பிடித்துக் கொள்ளுங்கள் குச்சியின் நடுப்புறத்தை நான் கவ்விக்கொள்கிறேன்.. அப்போது என்னை தூக்கி பறந்து விடுங்கள் இருவர் சேர்ந்து என்னை தூக்குவதால் சிரமமும் இருக்காது..ஓகேவா" என்றது..!

ஓகே டன் என்று கொக்கும் ஒப்புக் கொண்டது..! மறுநாள் அதே போல ஆமை ஒரு கம்பை எடுத்து வர அதன் இரு முனைகளை இரு கொக்குகள் அலகில் கவ்விக்கொள்ள ஆமை நடுவில் கவ்விக் கொள்ள ஆமையை தூக்கி கொண்டு பறந்தன..! இந்த காட்சி வேட்டைக்கு வந்து கொண்டிருந்த அந்த வேடர்கள் கண்ணில் பட அவர்களுக்கு மிகுந்த ஆச்சரியம்..!

அட இந்த பறவைகளை பாரேன்..ஒரு ஆமையையே தூக்கிப் பறக்க கற்றுக் கொண்டனவே.. ஒரு குச்சி அதை இரு புறம் பறவைகள் பிடிக்க நடுப்புறத்தை ஆமை பிடிக்க இப்படி ஒரு அறிவு.. இப்படி ஒரு யோசனை எப்படி வந்திருக்கும் புத்திசாலி கொக்குகள் தான்.! என்று வியப்பின் உச்சத்தில் உரக்க பேச இது வானத்தில் இருந்த ஆமை காதில் விழுந்தது..!

"அந்த ஐடியா என்னோடது" என்று அவசரத்தில் ஆமை வாய் திறக்க குச்சியின் பிடியை விட்டு நேராக வேடர்கள் இருக்கும் இடத்திற்கு அருகிலேயே ஓடு சிதற விழுந்து இறந்தது..!

நீதி : சாதுர்யமாக இரு.. சாதுர்யம் பேசாதே..!


ஜென் வெங்கி வழங்கும்.. குருஜியின் நீதிக்கதைகள்...

உங்களுக்கு ஹடயோகம் பற்றித் தெரியுமா.? நீரின் மீது நடந்து செல்லும் சக்தி தான் ஹடயோகம் எனப்படும்.. ஒரு அயல் நாட்டுத் துறவி 20 ஆண்டுகள் கடினப் பயிற்சி எடுத்து இந்த ஹடயோகத்தை கற்றுக்கொண்டார்..! இப்போது அவரால் தரையில் நடப்பது போல சர்வ சாதாரணமாக தண்ணீரில் நடக்க முடியும்.. அவர் ஒரு முறை நம் நாட்டுக்கு வந்தார்..!

இந்தியாவில் ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்தார்..! அந்த துறவி ராம கிருஷ்ணரிடம் "நான் 20 ஆண்டுகள் பாடுபட்டு ஹடயோகத்தை கற்றுக் கொண்டேன்... என் இந்த சக்தியால் இந்தியாவின் பெரிய நதியான கங்கை நதி மீது எளிதில் நடந்து போய் அக்கரையை அடைந்து விடுவேன்", என்றார் பெருமிதமாக..!

நாலணா கொடுத்தால் எந்தப் படகோட்டியும் உங்களைக் கொண்டு போய் அக்கரையில் விடுவானே..! இதற்காகவா 20 ஆண்டுகளை வீணடித்தீர்கள் என்றார் பரமஹம்சர்.. அந்தத் துறவி வெட்கி தலை குனிந்தார்..!

நீதி : உண்மையான ஞானம் இது போன்ற சக்திகளை விரும்பாது..!


ஜென் வெங்கி வழங்கும்.. குருஜியின் நீதிக்கதைகள்..

காட்டில் கொம்புள்ள கலைமான் ஒன்று இருந்தது... ஒரு நாள் அது அழகான குட்டி ஒன்றை ஈன்றது.. பிறந்த அந்த குட்டியை கண்ணும் கருத்துமாக மிகவும் பாதுகாப்பாக வளர்த்தது.. கொடிய மிருகங்களிடம் இருந்து அதை பாதுகாப்பது தானே சவால்..! குட்டியும் வளர்ந்தது..!

பயமறியாது துள்ளித்திரிந்த அக்குட்டிமானுக்கு தினசரி அறிவுரை சொல்லும் தாய்மான்..! சிங்கம், புலி போன்ற கொடிய மிருகங்களின் குணநலன்கள், அவை தாக்கும் முறை, அதில் இருந்து எப்படி ஓடி தப்புவது.. இவற்றையெல்லாம் சொல்லிக் கொடுத்தது தாய்மான்..!

ஒரு நாள் ஓநாயிடம் இருந்து தப்புவது பற்றிய பேச்சு வந்தது.. அப்போது குட்டி மான் கேட்டது.. அம்மா உனக்கு நாய் உடலை விட பெரிய உடல், அதை விட வேகமாய் ஓடுகிறாய், தலையில் நீள கொம்புகளும் உள்ளது அப்புறம் ஏன் அதைக்கண்டு பயம்.?

தாய்மான், "மகனே நீ சொல்வதெல்லாம் சரிதான்.. நான் ஓநாயை விட நீ சொன்ன அத்தனை தகுதியும் உடையவன் தான்.. ஆனால் என்ன செய்ய ஒற்றை ஓநாய் குரைத்தாலும் குலை நடுங்கி ஓடும் குணமும் இருக்கிறதே.. அது எப்படி மாறும் என்றது..!

நீதி : எந்த தகுதி இருந்தாலும் கோழைக்கு தைரியம் வராது..!


ஜென் வெங்கி வழங்கும்.. குருஜியின் நீதிக்கதைகள்...

ஒரு அரசியல்வாதி இருந்தார்.. அசகாய சூரர் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அந்தக் கட்சியில் இருப்பார்..! பணம் சம்பாதிப்பது மட்டுமேஅவரது குறிக்கோள்.. எல்லா நெளிவு சுளிவுகளும் தெரிந்தவர்.. இனிக்க இனிக்க பேசுவார் உள்ளுக்குள் விஷம் இருக்கும் அது அரசியல்வாதிகளுக்கு பிரத்யேக குணம் அல்லவா..! 

ஒரு வெளிநாட்டு நிறுவனம் தொழிற்சாலை கட்ட இவர் உதவியை அணுகியது.. அவர்கள் கிட்டத்தட்ட 5000 ஏக்கர் நிலம் வேண்டும் என்றார்கள்.. பெரும் தொகை கமிஷன் தருவதாக சொன்னார்கள். சிக்கல் என்னவென்றால் அவர்கள் சொன்ன இடத்தில் 5000 ஏக்கரில் 4000 ஏக்கர் நிலத்தை வாங்கிவிட்டார்கள் அதில் 1000 ஏக்கர் ஒரு பெரும் தொழிலதிபருடையது.!

அவர் அதை விலைக்கு தர மறுத்துவிட்டார்.. எனவே அரசியல்வாதியை அணுகினார்கள்..! அந்த தொழிலதிபரை அரசியல்வாதி நன்கு அறிவார்.. நான் இதை முடித்து தருகிறேன் என வெளிநாட்டு நிறுவனத்திடம் உறுதியளித்துவிட்டு தொழிலதிபரை சந்திக்க சென்றார்.. அவரும் செல்வாக்கு உடையவர் என்பதால் மிரட்டியெல்லாம் பணிய வைக்க முடியாது...!

ஆகவே, இனிதாக பேசி காரியத்தை சாதித்து கொள்ள முடிவுசெய்தார் அரசியல்வாதி..! தொழிலதிபரை சந்தித்தார்.. வேறு சில விஷயங்களை பேசிவிட்டு மெதுவாக விஷயத்தை சொன்னார்.. அந்த தொழிலதிபரோ இல்லை என்னால் அந்த இடத்தை தர முடியாது என்று மறுக்க.. சரி நீங்க எதிர்பார்க்காத தொகை வாங்கித்தரவா என்றார்..!

தொழிலதிபர் அதை மறுக்க.. சரி உங்கள் தொழிலுக்கு அரசியல் ரீதியாக எந்த பிரச்சனை வந்தாலும் அதை நான் பார்த்து கொள்கிறேன் என்று நமக்குள் எழுதாத ஒப்பந்தம் போடுவோம்.. உங்க தொழிலில் நானும் ஒரு பங்குதாரரா இருக்கேன் அப்ப ஓகேவா என்றார்.. தொழிலதிபர் சற்று யோசித்து.. சரி அப்ப அதை சட்டப்படி எழுதிதாங்க என்றார்..!

சட்டப்படியா ஏன் எம்மேல நம்பிக்கையில்லையா.? என அரசியல்வாதி கேட்க.. தொழிலதிபர்.. அய்யா! அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை கட்சி மாறிடுறிங்க.! நாளைக்கு ஆட்சிக்கு வர்றவங்க அந்தத் தொழிற்சாலையை மூடணும்ன்னா அப்ப அந்த கட்சிக்கு மாறிப் போன நீங்க அதுக்கு சாதகமா பேசுவிங்க உங்களை எப்படி நம்புறது.?என்றார்..!

அப்ப உங்க முடிவுதான் என்ன? அரசியல்வாதி,.. சட்டப்படி எழுதி பத்திரம் போடுங்க அப்புறம் பேசலாம் என அதிபர் கூற.. பத்திரமெல்லாம் எதுக்கு என் வாக்குல நம்பிக்கையில்லையா என்றார் அரசியல்வாதி.. குபீரென சிரித்த தொழிலதிபர் இதை வாக்குன்னு நம்ப நான் என்ன கேனையனா என்றார்..! அரசியல்வாதி தலைகுனிந்து வீடு திரும்பினார்..!

நீதி : நம்புவதற்கு முன் கட்டாயம் சோதிக்க வேண்டும்..!


ஜென் வெங்கி வழங்கும்.. குருஜியின் நீதிக்கதைகள்...

ஹரி பூட்டு சாவிகள் விற்பனை செய்பவன்.. எல்லாவிதமான சாவிகளுக்கும் அவை தொலைந்தால் டூப்ளிகேட் சாவி செய்து தரும் சேவையும் அவனிடம் உண்டு.. ஆனால் இந்த தொழிலில் வரும் லாபத்தில் அவனுக்கு திருப்தி இல்லை.. இன்னும் அதிகமாக சம்பாதிக்க வேண்டும்.. நிறைய பணம் இருக்க வேண்டும் என்பது அவனது ஆசை..!

ரவி..பிரபலத் திருடன் 5 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெரிய வங்கியை கொள்ளையடித்து தப்பியவன்... கடந்த வருடம் தான் கைதானான்.. இந்த வழக்கில் பிடிபடாத நான்கு வருடங்களில் பெருந்தொகையை தான் உல்லாச வாழ்க்கைக்கு செலவிட்டதாக நீதிமன்றத்தை நம்ப வைத்தான்..! 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றான்..!

ஆனால் அவன் கொள்ளையடித்த பெரும் பணத்தை நம்பிக்கையானவர்களிடம் தந்து வைத்துள்ளான்.. ஒருநாள்... சிறைக்கு அவனை பார்க்க வந்த ஒரு உறவினர் மூலம் தான் பணம் கொடுத்து வைத்த நபர்கள் அந்த பணத்தை சுருட்டிக் கொண்டு வேறு ஊருக்கு போகப் போகிறார்கள் என்பதை அறிந்து சிறையிலிருந்து தப்ப திட்டமிட்டான்..!

அவனை பார்க்க வந்த அதே உறவினனை திரும்பு வரவழைத்து நீ உடல்நிலை சரியில்லாதது போல் மருத்துவமனையில் படுத்துக் கொண்டு சிறைக்கு தகவல் அனுப்பு.. நான் உன்னை பார்க்க வரும் போது தப்பிவிடுகிறேன் என்று திட்டத்தை சொன்னான்.. அதே போல் அவனும் செய்ய... ரவி நீதிமன்றத்தில் முறையிட்டு அனுமதி பெற்றான்...!

அவனை கைவிலங்கிட்டு போலீஸ் அழைத்து சென்றது.. மருத்துவமனை போகும் வழியில் ரவி சந்தர்ப்பம் பார்த்து சாமர்த்தியமாக தப்பிவிட்டான்..போலீஸ் விரட்டியது.. ரவிக்கு கைவிலங்கோடு ஓடுவது கடினமாக இருந்தது.. இந்த வாய்ப்பில் மாட்டினால் இனி அவ்வளவு தான் என்ற உத்வேகம் அவனை செலுத்தியதால் புது சக்தியுடன் ஓடி மறைந்தான்..!

விரட்டி வந்த போலீசார் இவன் எங்கே போனான் என்று தெரியாது குழம்பி தலைமை நிலையத்துக்கு தகவல் அனுப்பினார்கள்.. போக்குவரத்து உஷார் படுத்தப்பட்டது.. பேருந்து ரயில் நிலையங்கள் கண்காணிக்கப்பட்டன.. 5 நிமிடத்திற்கு ஒருமுறை டிவியில் ரவியின் புகைப்படத்தோடு செய்தி வந்துகொண்டே இருந்தது..!

பூட்டுக்கடையில் அமர்ந்திருந்த ஹரியும் டிவியில் அதை பார்த்தான்.. இரவு 9 மணி கடையை மூடப்போகும் போது ஒரு நபர் வேகமாக கடைக்குள் புகுந்து கதவை மூடினார்.. அது தப்பி ஓடிய ரவி..! ஹரி பதட்டமானான் முதலில் யாரோ திருடன் என்று நினைத்தான்.. பிறகு தான் டிவியில் பார்த்த ரவியின் முகம் நினைவுக்கு வர... அவசரமாக செல்போனை எடுத்தான்.!

செல்போனை பாய்ந்து பிடிங்கினான் ரவி.! நண்பா இரு என்னை காட்டி கொடுத்தால் உனக்கு என்ன பெருசா கிடைக்கப் போகுது.? ஆனால் எனக்கு உதவி செஞ்சா உனக்கு பெரும் பணம் கிடைக்கும் என்ன சொல்கிறாய்.? என்றான் பணம் என்றவுடன் சபலப்பட்ட ஹரி என்ன உதவி.? என்றான்...!

பூட்டு சாவிக்கடைக்கு எதுக்கு வந்தேன்.. இந்த விலங்கை கழட்டு அந்த உதவி போதும் என ரவி சொல்ல அடுத்த அரைமணி நேரத்தில் அதை கழட்டி விட்டான் ஹரி.. ரொம்ப நன்றி நண்பா நான் வர்றேன் என ரவி கிளம்ப முற்பட எனக்கு பணம் எப்ப தருவே என ஆவலுடன் கேட்டான் ஹரி..! பணமா.! உனக்கா.! எதுக்கு.? என ரவி அலட்சியமாக கேட்டான்..!

அதிர்ந்து போன ஹரி "விலங்கை கழட்டினால் தருவேன்னு நீ தானே சொன்னே..? என்றான் நண்பா நீ இந்த உதவி செஞ்சது போலீசுக்கு தெரிஞ்சா நீயும் உள்ள தான் போகணும்.. நான் இப்ப நினைச்சா கூட உன்னை கட்டிப்போட்டுட்டு இங்க இருக்குற காசை கொள்ளையடிக்க முடியும் அப்படி செய்யாததே நான் உனக்கு செஞ்ச பேருதவி.. புரியுதா..!

இதை தைரியமிருந்தா வெளிய சொல்லிப்பாரேன்..! உன்னால என்னை ஒண்ணுஞ் செய்ய முடியாது.. வரட்டுமா என்று சொல்லி கதவை திறந்து வெளியேறினான் ரவி.!

நீதி : கெட்டவனுக்கு பலனை எதிர்பார்த்து செய்யும் சேவை பலன் தராது..!

ஜென்வெங்கி வழங்கும்.. குருஜியின் நீதிக்கதைகள்...

ரவி கடின உழைப்பாளி.. நேரத்தை வீணடிப்பது அவருக்கு பிடிக்கவே பிடிக்காது..! காலை 5 மணிக்கே எழுந்துவிடுவார் டாய்லட் போகும் போதே பேப்பர் படிப்பார், ஜிம்மில் ஓடிக் கொண்டே டிவி பார்ப்பார், குளிக்கும் போதே பல் துலக்குவார், உணவு அருந்தும் போது படித்துகொண்டே ஹெட்போனில் இசை கேட்பார்.. அவருக்கு ஒவ்வொரு மணித்துளியும் முக்கியம்.. அத்தனையும் பணம்.. நேரத்தை யாரும் வீணடித்தால் அவரால் தாங்கிக்கொள்ள முடியாது..வாழ்க்கையில் அப்படி ஓடிக்கொண்டிருந்தார்.!

ஒருநாள் தனது அலுவலகத்தில் தனது மொபைலை சார்ஜ் போட்டுவிட்டு லேப்டாபில் மும்முரமாக மெயில் அனுப்பிக்கொண்டிருந்தார்.. செல்போன் ஒலித்தது பிளக்கிலிருந்து சார்ஜை உருவினால் அதற்கு சில வினாடிகள் தாமதமாகுமே என்று அப்படியே அதை கழற்றாமல் பேசினார்..அப்போது திடீரென அப்பகுதியில் ஏற்பட்ட உயர் மின் அழுத்தத்தினால் அவரது கையிலிருந்த செல்போன் வெடித்து விட்டது ஒரு விரலும் காதும் துண்டாகி விட்டது.. அலுவலகமே பரபரப்பாகி அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தது..!

அதோ..அங்கே பூங்காவில் நீண்டநேரம் அமர்ந்திருப்பது யார் தெரிகிறதா.? நம் ரவியே தான்.! இப்போதெல்லாம் பூங்காவில் வந்து அமர்கிறார்..பூக்களை ரசிக்கிறார்..தன் ஒரு காதால் பறவையின் குரல்களை கேட்கிறார்.. நேரம் பொன்னானது என்றால் மெலிதாக ஒரு அலட்சிய சிரிப்பு சிரிக்கிறார்.. அவ்வப்போது கேமிராவை எடுத்துக்கொண்டு வனப்பகுதிக்கு செல்கிறார்.. மணிக்கணக்கில் காத்திருந்து உயிரினங்களை புகைப்படம் எடுக்கிறார்.. எதையும் நிதானமாக அணுகுகிறார்..செய்ய வேண்டிய வேலையை மட்டும் செய்கிறார்.. இப்போதெல்லாம் அவர் ஒரு வேலை செய்யும் போது இன்னொரு வேலை செய்வதே இல்லை.. வாழ்க்கையை ரசித்து வாழ்கிறார்..!

நீதி : நேரம் பொன்னானது தான் ஆனால் வாழ்க்கை அதை விட பொன்னானது..!


நீதிக்கதை - 2

காட்டில் புதிய அரசு பதவியேற்றது.. ஆப் கி பார் சிங்கம் சர்க்கார் என்று தேர்தல் கோஷமிட்ட சிங்கராஜா முடி சூடிக்கொண்டார்..! புலி, யானை, கரடி,சிறுத்தை போன்ற அமைச்சர் பெருமக்களும் பதவி ஏற்றுக் கொண்டார்கள்..! காட்டு நலத்திட்டங்கள் இயற்றப்பட்டன.. விலங்குகள் சொந்தத்தொழில் செய்ய அரசு உதவி உண்டு என்று அறிவிக்கப்பட்டது..!

கேரட் பண்ணை அமைக்க லோன் கேட்டது முயல், டான்ஸ் ஸ்கூலுக்கு லோன் கேட்டது மயில், கன்சல்டண்ட் ஏஜென்சிக்கு நரி லோன் கேட்க, ஹேண்டிகிராப்ட் பள்ளிக்கு தூக்கனாங்குருவியும், ஸ்போக்கன் கோர்சுக்கு கிளியும், பாட்டு கிளாசுக்கு குயிலும் லோன் கேட்க.. "எனக்கு ப்யூட்டி பார்லர் அமைக்க லோன் வேண்டும்"என சத்தமாக ஒரு குரல்..!

கேட்டது ஒரு தவளை.! "நீ எதற்கு ப்யூட்டி பார்லரை தேர்ந்தெடுத்தாய்"அமைச்சர் புலி கேட்க.."காடு முன்பு போல் தூய்மையாக இல்லை, காட்டுக்கருகே உள்ள வீடுகள், தொழிற்சாலை கழிவுகளால் பாதிப்பு, பாலிதீன் குப்பைகளால் பாதிப்பு இப்படி பல பாதிப்புகளால் வனச்சூழலே மாறி விட்டது.. வாட்டர் பொல்யூஷனும் இருக்கு..!

விலங்குகளின் தோலில் 10 விதமான ஸ்கின் பிராப்ளம் வந்து எல்லா விலங்கும் அழகிழந்து விட்டன.. அவர்களுக்கு பேஷியல் செய்து அரோமாதெரபி செய்து முகத்தை ப்ளீச் செய்து அவர்களை கொழுக் மொழுக் என ஹன்சிகா போல அழகு படுத்ததான் என்றது தவளை..!

சிங்கம்"தவளையே உன்னை நீ நன்றாக பார் நீயே அவலட்சணமாக சொறி பிடித்த தோலுடன் சொர சொரவென்று இருக்கிறாய் உன்னையே அழகுபடுத்திக் கொள்ள முடியாத நீ பிறரை எப்படி அழகு படுத்துவாய்..உன் மீது யாருக்கும் நம்பிக்கை வராது போய் உனக்கு பொருத்தமான தொழிலை தேடு.. இப்போதைக்கு உன் லோன் கேன்சல்", என்றது..!

நீதி : நம் தகுதியை யோசிக்காமல் பேசக்கூடாது..


சுற்றுச்சூழல் - டிவிட்டுறள்கள்

#இன்று_உலக_சுற்று_சூழல்_தினம் JUNE 5

மீள் பதிவாக சுற்றுசுழல் பற்றி எழுதிய டிவிட்டுறள்கள் ...மரங்கள் வளர்ப்போம் வனங்களை காப்போம் நீர் ஆதாரத்தை  முறைப்படுத்துவோம் வன விலங்குகளை வாழ வைப்போம்


#டிவிட்டுறள் - 27

மரம் வளர்ப்போர் அனைவரும் எதிர்கால

நலம் வளர்ப்போரெனச் சொல்.


#டிவிட்டுறள் - 32

வெட்டிச் சாய்த்த மரங்கள் வளமையை

கட்டிப் போட்டு விடும்.


#டிவிட்டுறள் - 37

எறியும் பாலிதீன் குப்பைகள் எரித்திடும்

நிலத்தடி மண் வளத்தை.


#டிவிட்டுறள் - 38

மழையின்றி உழவின்றி உலகம் வாடுதல்

மரங்களை அழிப்பதன் பரிசு.


#டிவிட்டுறள் - 54

பிள்ளையை போற்றி வளர்ப்பதும் மரங்களை

நீருற்றி வளர்ப்பதும் ஒன்று.


#டிவிட்டுறள் - 56

வீழுகின்ற மரங்கள் வேண்டாம்; வேண்டுமே

விழுதுகள் வீழுகின்ற மரம்.


#டிவிட்டுறள் - 60

மனிதர் நம்கடமை இவ்வுலகில் மரம்

வளர்த்து செழிக்க விடல்.


#டிவிட்டுறள் - 65

மரம்வெட்டி சாய்ப்பதும் மனிதர் உயிர்வெட்டி

சாய்ப்பதும் ஒன்றான செயல்.




Wednesday, 4 June 2014

ஒரு துளி காமம்...

நீ உதடு குவித்து ஊதும் அழகை

காண்பதற்கென்றே திரும்பத் திரும்ப

முன்னால் வந்து விழுகிறது உன் 

கற்றைக்கூந்தல்.!


ஒரு குடை க்குள் இருவரும் 

இருந்த போது

வந்த மழை வரம்

நின்ற மழை சாபம்..!


நான் தேநீர் அருந்திய அதே கோப்பையில்

நீயும் அருந்துகிறாய்... அட இதுவும் முத்தம் தான்.!


முத்தத்தை நெற்றியோடு நிறுத்திக்

கொள்ளலாம் என்ற என் முடிவு 

ஒவ்வொரு முறையும் வெற்றி 

பெறுவதே இல்லை.!


என் அருகில் அமர்ந்து கொண்டு

எந்த இனிப்பு உங்களுக்கு பிடிக்கும்

என்று கேட்கிறாய்.... இது உனக்கு 

அபத்தமாக தெரியவில்லை..?


உன்னுடனான எந்த போட்டியிலும்

வெற்றியோ தோல்வியோ... நான் 

நிச்சயிக்கும் ஒரே பரிசு..!முத்தம்.


உன் பத்து விரலிலும் காயாத மருதாணி 

இருந்ததால் தடை இருக்காதென நான்

துணிச்சலுடன் முத்தமிட முனைந்தேன்

இப்போது என் முகமெல்லாம் மருதாணி.


உன் வீடு செல்ல நீ ஏறும் பேருந்தை

மிகத்தாமதமாக ஓட்டி வந்த ஒட்டுனர்

தான் எனக்கான காதல் தெய்வம்..!


மழை வரும் அடையாளம்.. மாடியில் 

உலர்ந்த துணிகளோடு உன்னையும் 

காணவில்லை..!


உன்னை மறக்க முயன்று 

உன்னையே நினைத்துக்

கொண்டிருக்கிறேன்..!

ஒரு துளி காதல்.

உன் தோளில் வந்தமர்ந்தது ஒரு

முட்டாள் வண்ணத்துப் பூச்சி தேன் 

உன் இதழிலல்லவா இருக்கிறது..!


நீ வெட்கப்பட்டாய்

பூக்களுக்கு 

பாடம் புரிந்தது..!


பயங்கர ஆயுதங்கள் வைத்திருக்கும்

உன்னை ஏன் கைது செய்யக் கூடாது.

அந்தக் கண்கள்..!


உன் பல்லிடுக்கில் மாட்டிக் 

கொண்ட என் மீசை முடி

மோட்சத்திற்கு போனது.


உன் முகத்தில் பரு

ரோஜாவில் முள்.!


இரு கைகளில் காபி கோப்பையைப் பிடித்து

அருந்தும் போதெல்லாம் உன்னை முத்தமிட்டது

நினைவுக்கு வருகிறது..!


சிறுவயதில் தட்டாம்பூச்சி வாலில் 

நூல் கட்டி துன்புறுத்தியவனை 

இறந்து கிடக்கும் பட்டாம்பூச்சிக்கு

அழ வைத்துவிடுகிறது காதல்.


நீ இருக்கும் போது எனக்கு புரையேறினால்

உன் கண்ணில் கோபம் தெரிவது ஏன்.?


நான் கேட்ட ஏதோ ஒரு கேள்விக்கு

உதடு பிதுக்கி இல்லை என்கிறாய்

இந்த அழகுக்காகவே இது போல 

நிறைய கேள்விகள தயார் செய்ய வேண்டும்..


உன் கொலுசில் இருந்து ஒரு முத்து 

உதிர்ந்து விட்டது என்கிறாய்..தவறு

அது இறந்து விட்டது..!


சோப்பு நுரை குமிழிகளை ஊதி விளையாடுகிறாய்

உன் உதட்டருகே ஒவ்வொரு முறை வரும் போதும்

அந்த வட்டக்கம்பி சொர்க்கத்தை தரிசிக்கிறது..!


அலைபேசியில் நீ அழைத்தால் உன் எண்ணுக்கு

என்ன பெயர் கொடுக்கலாம்.. ரோஜா, தென்றல்,

செல்லம், ஹனி, குட்டிமா, புஜ்ஜி, சிந்தனை நீண்டு

கொண்டிருக்க அலைபேசி ஒலிக்கிறது.. திரையில்

உன் எண்..! எண்ணத்தில் உன் எண்களெல்லாம்

பதிந்திருக்க எப்பெயரும் வேண்டாம் என முடிவெடுத்தேன்.


சூரியன் உதித்த போது பூமியில் ஒரு

நிலா கோலமிட்டுக்கொண்டிருக்கும் 

அதிசயத்தை இன்று தான் பார்க்கிறேன்.


வானவில்

எப்போது

கருப்பானது?

அவள் புருவங்கள்!


ம்ம் என்ற சொல் உதிர்த்து சம்மதம் தெரிவித்த 

பின் வேறு எதுவும் பேசமுடியாது அவள் இதழ்கள்

என்னிதழ்களால் சிறைபிடிக்கப்பட்டது..


டிஷ் ஆன்டெனாவாக அவள் அழகை

ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது

காதோரத்து ஒற்றை ரோஜாப்பூ.


கோப்பை நிறைய தேநீர் தந்து 

உபசரிக்கிறாய்.. ததும்ப ததும்ப 

அருகில் நீயும் இருக்க... நான் 

எதைப்பருக.!?


உன் காதோரம் சுருண்டிருப்பது

குழல் அல்ல என்னை சுருட்டிய சுழல்.!


இதயத் திருட்டுக்கு 

நேச நீதிமன்றத்தின்

தண்டனை.. காதல்..!


மீன்களும் வலைவீசும் என்பதை

அவள் விழிகளை பார்த்தபின்பு

அறிந்துகொள்ளலாம்.


உன்னைக் காணவில்லை என்றேன்

உன்னைத் தான் காணவில்லை என்றாள்

இரண்டுமே சரிதான்.! நானும் நீயும் ஒன்றல்லவா.!


உன் மேலுதட்டுக்கு 

மேலே மீசையாய்

அரும்பியிருக்கும்

வியர்வை முத்துக்கள்

கோர்த்து ஒரு மாலை 

செய்து தருவாயா..!


உன்னைப் பிரிந்து வேலைக்காக வேறு ஊர் போவதை 

சொன்னவுடன் கண்ணீருடன் இழுத்தணைத்து முத்தமிட்டாய்

நான் அந்த வேலையில் சேரவே இல்லை.


ரூபாய் நோட்டைக் இதழில் கவ்விக்கொண்டு

கைப்பையில் சில்லறை தேடிக் கொண்டு

இருக்கிறாய் எனக்கு அந்த ரூபாய் மேல்

பொறாமை வருகிறது..


தொலைபேசி வழியாக குடியேறிவிட்டது

என் செவிகளுக்குள் உன் குரல்..


என்ன ஆச்சரியம்..! உன்னை புகைப்படம் 

எடுக்கும் போதெல்லாம் காமிரா சிரிக்கிறது.!



நீ கழற்றி வைத்துப்போன

காதணிகள் கதறி அழுகின்றன..!



என் உடைக்குள் புகுந்த 

எறும்பாக உறுத்துகிறது

உன் மெளனம்..!



விரைகிற பேருந்தின் சன்னலோர இருக்கை.. என் தோள் மீது 

தலை சாய்த்து சலனமின்றி உறங்குகிறாய்.... உன் நாசியின்

சூடான மூச்சுக்காற்று என் சட்டையை ஊடுருவி என் நெஞ்சில் 

சுடுகிறது..ஒரு கையால் என் ஒரு கையைச் சுற்றிக் கொண்டு நீ 

தரும் அழுத்தத்திலேயே... நான் உன்னிடம் பாதுகாப்பாய் 

இருக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்துகிறாய்... சன்னல் 

காற்றில் கூந்தல் பாம்புகள் எழுந்தாடிக் கொண்டிருக்கிறது.. 

அனிச்சையாய் உன் கரம் விலகும் ஆடையை சரி செய்து 

கொண்டிருக்கிறதுமூடிக்கிடக்கும் இமையின் அழகையும் நாசி 

நூனியின் குங்குமச்சிவப்பையும்  ரசித்துக் கொண்டிருக்கிறேன்.. 

வெளியே மழை வரலாம் என வீசும் குளிர்க் காற்று கட்டியம் 

கூறுகிறது.. மெல்ல அரை விழி திறந்து சினேகமாய் புன்னகைத்து 

மீண்டும் உறங்குகிறாய்.. பிறிதொரு நாளில் உன்னொரு தோளில் 

நான் தூங்க நேரிட்டாலும் உன் நேசத்தை நீ உணர்த்தியது போல் 

நான் உணர்த்த முடியுமா..? தெரியவில்லை..!



Monday, 2 June 2014

கலைஞருக்கு...

உயிர்மெய் எழுத்தின் முதல் எழுத்து க"என்பது தமிழுக்கு பெருமை

கழகத்தின் உயிர் மெய் நீ என்பது உலகறிந்த உண்மை..! தலை

வெற்றியை குளித்தலை"யில் கண்ட தலைவன் நீ.. பல போராட்டங்களுக்கு 

தலை" தந்து வெற்றி தந்தவன் நீ..! பெரியார் பல்கலைக்கழகம் வரும் 

முன்பே பல்கலையும் அங்கு கற்ற கழகம் நீ.. அண்ணாவின் உடன் பிறவா 

தம்பி நீ... உடன் பிறப்பே என்று நீ அழைக்கும் ஒரு மந்திரச் சொல்லே 

உலகத்தின் உற்சாக பானம் என்பார்.. அந்த உறவு முறை சொல்லிலேயே

இரும்புக்கம்பியையும் வளைத்திடும் வல்லவன் நீ.. உன் பேனா தலை குனிந்த

போதெல்லாம் தமிழ் தலை நிமிர்ந்திருக்கிறது.. கர கர குரலில் உன் பேச்சு

கரகரப்ரியா ராகம் கேட்ட இசைப் பிரியனாய் தொண்டர்களை ஆக்கியிருக்கிறது..

சோதனைகளை கண்டு சோர்ந்ததில்லை சாதனை செய்ததும் ஆர்ப்பரித்ததில்லை

ஃபினிக்ஸ் என்ற பறவையினம் இல்லாதிருந்தால் அழிவிலிருந்து எழுச்சிக்கு 

உன்னை தான் உலகம் உதாரணம் காட்டியிருக்கும்.. சேற்றை வாரி இறைத்தாலும்

சந்தனம் பூசினாலும் ஒரே இன்முகம் காட்ட உன்னால் தான் முடியும்.. இருபதாம் 

நூற்றாண்டிலும் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலும் இந்திய அரசியல் வரலாறு

உன் பேர் இல்லாது எழுதப் பட்டிருக்காது.. முதுமையிலும் உழைப்பு, நக்கல் 

நையாண்டி, சிலேடை என நீ என்றும் இளைஞனாகவே இருக்கிறாய்.. உலகிலேயே

ஓய்வுக்கு ஓய்வளித்தவன் நீ தான் என்பதை எந்த ஆய்வும் இன்றி சொல்லலாம்...

பழித்தாலும், துதித்தாலும், பதவி இருந்தாலும், போனாலும் செய்திகளின் நாயகன் நீ.!

உன் அரசியல் எதிரிகளும் ஒப்புக் கொள்ளும் அளப்பரிய ஆற்றல் பெற்றவன் நீ.. 

துயர் எனும் இருள் சூழும் போது இரவு வந்தால் தானே பகல் வரும் என்று எதையும்

சாதாரணமாக கடக்கும் சூரன் நீ.. கழகத்தின் சூரியன் நீ.. சில அரசியல் காரணங்களுக்கு

நீ விமர்சிக்கப்பட்டாலும் தமிழகம் விமரிசையாக கொண்டாடும் தலைவர்களுள் ஒருவன் நீ.!

தள்ளாத வயதில் நினைவுகள் தவறுமாம்.. உனக்கு மட்டும் இது பொருந்தாது... 

எல்லோருக்கும் மெமரி மைனஸ்... ஆனால் உனக்கு அது மெமரி ப்ளஸ்

அகவை 91 என்பது உலகுக்கு ஆனால் உனக்கு அது 19.. எத்துணை சிக்கல் என்றாலும் 

கதிரவனுக்கு முன் கரையும் பனித் துளியாய் அதை கரைத்துவிடும் சக்தி பெற்றவன் நீ

ஆற்றல் மிக்க இளைஞனே.. கழகத்தின் தலைவனே.. கலைஞர் எனும் ஒருவனே... 

கலைஞர் என்றால் கழகம்... கழகம் என்றால் கலைஞர் இதைத் தவிர வேறென்ன..!

முத்தமிழே உனை வந்து வாழ்த்தும் போது... என் வாழ்த்து அதற்கு ஈடாகுமா..!

பறக்கும் விமானத்தை கீழிருந்து பார்ப்பது போல இங்கிருந்தே பார்த்து வியக்கிறேன் ..!



Sunday, 1 June 2014

தீனா - ஜுன்

தீனா "கொரலு"....

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

எப்படி துண்ணா ஒடம்புக்கு நல்லது தெரிமாபா..? நீ துண்ண சோறு நல்யா ஜீர்ணமா ஆக சொல்லோ அத்த தெரிஞ்சுகினு அப்பால துண்ணுறத தேவயா அளவா துண்ணியினா உன் ஒடம்புக்கும் நல்லது உனுக்கு ஆயுசும் கெட்டி..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"பசிச்சதுக்கு அப்புறம் அளவா துண்ணு.. நீ பல வர்சம் வாழ்ந்திடு கண்ணு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

[ பொருட்பால் : அதிகாரம் : மருந்து : குறள் எண் : 943 ]


தீனா "கொரலு"....

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

புர்சன் பொஞ்சாதி 2 பேரும் கட்டில்ல சந்தோஸ்மா இர்க்குறதுக்கு மின்னாடி சின்யதா ஒரு சண்ட போட்றது ஒரு சொகம் தான்..ஆனா அந்த கோவம் எப்டி இர்க்கணும் தெரிமா?துண்ற சோத்துல போட்ற உப்பு மேறி அள்வோட தான் இர்க்கணும்.. அத்து அள்வுக்கு மீறுனா உன் சந்தோசம் நெறியா உப்பு போட்யா மேறி கர்ச்சிடும்..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"ஊடலு அள்வா போட்ற உப்பு.. அளவு அதிகமான அது தப்பு"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது

மிக்கற்றால் நீள விடல்.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : புலவி : குறள் எண் : 1302 ]


தீனா "கொரலு"....

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..

அன்பா பண்பா ஒழுக்கமா ரீஜண்டா இருக்குறவரு கொணம் இன்னா மேறி இர்க்கும் தெரிமா.? அவ்ரோட பழகுனவங்க விஷத்த கொட்த்து இத்த துண்ணுபான்னாலும் அத்த தன் கண்ணாலேயே புர்ஞ்சுகினு வோணான்னு சொல்யாம சந்தோஸ்மா வாங்கி துண்ணுடுவாங்களாம்..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"நம்புனவன் நஞ்சே கொட்த்தாலும்... நல்லவனுக்கு அது நன்னாரி சர்பத்து"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்.

[ பொருட்பால் : அதிகாரம் : கண்ணோட்டம் : குறள் எண் : 580 ]


தீனா "கொரலு"....

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

எனுக்கு தும்மலு வர்ற மேறி இர்ந்து அப்டியே அத்து வர்றாம நின்னு போச்சே! ஒருவேள என் ஆளு என்னிய நெனிக்கிறா மேறி ஆக்ட் கொட்த்து நெனிக்காம போய்ட்டானோன்னு டவுட்டாகீது.. இல்லின்னா தும்மலு வந்துர்க்குமே.! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"தும்மலு வந்து அடங்குது.. அத்த நென்ச்சு மன்சு மடங்குது"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்

சினைப்பது போன்று கெடும்.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : நினைந்தவர் புலம்பல் : குறள் எண் : 1203 ]


தீனா "கொரலு"....

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

ஒல்கத்துல யாரோட துட்ட ரொம்ப நல்யா மதிப்பாங்க தெரிமா? அகங்காரம் புட்ச்ச குணம், காண்டு, ஈனத்தனமான செய்கை இத்தெல்லாம் இல்யாத நல்ல மன்சன் துட்டு கீதே அத்து தான் அல்லாரும் மதிக்கிற துட்டு..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"கெட்ட கொணம் இல்யாதவன் துட்டு... ஒலகம் மதிக்கும் அதை தொட்டு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்

பெருக்கம் பெருமித நீர்த்து.

[ பொருட்பால் : அதிகாரம் : குற்றம் கடிதல் : குறள் எண் : 431 ]


தீனா "கொரலு"....

வண்க்கம்ப்பா இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

பொண்ணு சொல்றா, "அவரு என்ன வுட்டு பிர்ஞ்சி இர்ந்த அல்லா நாளயும் சொவத்தில கோடு போட்டு வச்சி.. அவுர நென்ச்சிகினே அத்த தடவி தடவி என் விரலெல்லாம் தேஞ்சுட்ச்சு.! அவுரு வர்வாரா மாட்டாரான்னு வர்ற வழிய பாத்து பாத்து கண்ணு ரெண்டும் அயகெல்லாம் கெட்டு ஒளியில்லாம பூட்ச்சு..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"பிர்ஞ்சு போனவர நென்ச்சி... "சொவத்தை தடவி விரலு தேயுது... வழிய பாத்து கண்ணு காயுது" குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற

நாளொற்றித் தேய்ந்த விரல்.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : அவர்வயின் விதும்பல் : குறள் எண் : 1261 ]


தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

வொர்த்தன அழிவு வர்றாம காத்துகினு இர்க்குற கருவி அவுனோட அறிவு தான்..அத்து மட்யுமில்ல அவுனோட எதிரி உள்ய வந்து பூந்து அத்த அழிக்க மிடியாத கோட்டை கணக்கா காத்துகினு இர்க்குறதும் அத்தே அறிவு தான்.! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"அழியாம காக்குற அறிவு கோட்டை.. அத மீறி எவனும் செய்யமிடியாது சேட்டை"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்கல் ஆகா அரண்.

[ பொருட்பால் : அதிகாரம் : அறிவுடைமை : குறள் எண் :421 ]


தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

இந்த ஆசப்பட்ற மன்சுகீதே அதுக்கு வெக்கங்குற தாப்பாள போட்டு ஒரு கதவு கணக்கா பூட்டி வைக்க சொல்லோ.. அவுரு மேல நான் வச்சிக்கீற காதலு ஒரு கோடாலி மேறி ஆகி அந்த கதவயே ஒட்ச்சு போட்டுறுத்து..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"வெக்கம் தான் மன கதவுக்கு தாப்பா...காதலு அத ஒடச்சுடுது போப்பா"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்

நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : நிறையழிதல் : குறள் எண் :1251 ]


தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

ஒர்த்தன் உண்மிய பத்தி பெர்சா பேஸ்லனாலும்.. உண்மிக்கு ஒத்து வர்றாத வேலயே செஞ்சாலும்..அவன் இன்னொர்த்தன பத்தி கோள் சொல்யாம ராங்கா பேஸாத்து வாழ்றவனா இர்ந்தா ஒலகம் அவனை நல்யவன்னு சொல்லும்.! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"அடுத்தவனை சொல்லாத கோளு.. அப்பத்தான் நீ உலகத்துக்கேத்த ஆளு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்

புறம்கூறான் என்றல் இனிது.

[ அறத்துப்பால் : அதிகாரம் : புறங்கூறாமை : குறள் எண் :181 ]


தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

காதலிக்கிறவங்கோ ரெண்ட்யு பேரும் ஒரு அளவா கோச்சிக்கினு பேசாமயே இர்ந்து.. அப்றம் சமாதான்மா போய் கட்டில்ல ஒண்யா சேர்றது கீதே.. அடாடாடாடா.. அத்து மேறி ஒரு சொகம் ஒல்கத்துல எத்யுமே கெடியாத்து...! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"லைட்டா இர்க்கணும் ஊடலு.. பிரைட்டா இருக்கும் காதலு"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின்.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : ஊடலுவகை : குறள் எண் :1330 ]


தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

உன்னால ஒர்த்தன் ஊருக்குள்ள வெக்கப்பட்டு தலிய குனிஞ்சி நிக்குறான்னா அத்த நென்ச்சி நீ வெட்கப்பட்யே ஆவுணும்.! அப்டி நீ வெக்கபடாம இர்ந்தின்னா ஒல்கத்துல நாயம்ன்னு ஒண்ணு கீதே அது உன்னாண்ட இர்ந்து வெக்கப்பட்டுகினு போய்டும்..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா..

"மனுசனுக்கு வோணும் வெக்கம்..இல்லாட்டி நாயம் வராது உம்பக்கம்"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

பிறர்நாணத் தக்கது தான் நாணா னாயின்

அறம்நாணத் தக்கது உடைத்து.

[ பொருட்பால் : அதிகாரம் : நாணுடைமை : குறள் எண் : 1018 ]


தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

மன்சால நென்ச்சுனு இர்க்குறவரை பிர்ஞ்சு இர்க்க சொல்லோ..என்யோட அயகான தோளு ரெண்ட்யும் அயகெல்லாம் கொர்ஞ்சி அப்டியே இள்ச்சி போச்சு..! இளச்சு அசிங்கமா போன உன்னாண்ட ஏன் இர்க்குணும்ன்னு.. என் கய் வளயலு அல்லாம் கயண்டு கீய உயுந்துர்ச்சு.. சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா... 

"அவுர நென்ச்சு மெலியுது தோளு.. கய் வளயலும் கழலுது கேளு"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்

தொல்கவின் வாடிய தோள்.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : உறுப்பு நலன் அழிதல் : குறள் எண் :1234 ]


தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

ஊர்ல நல்யா மதிப்பும் மர்யாதியுமா வாழ்ந்துனுகீற மன்சன் வாய தொர்ந்து பேஸ் கூடாத்த வார்த்திய பேஸ்னா.. அத்து வரிக்கும் அவுரு மேல வச்சிர்ந்த அல்லா மர்யாதியும் அப்டியே அம்பேலாய்டும்..அப்றம் ஒரு ஆளு கூட அவுர மதிக்காது.! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா..

"நல்லத பேஸ்னா உனுக்கு சிறப்பு.. இல்லாட்டி நீ கால் செர்ப்பு"

சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல

நீர்மை உடையார் சொலின்.

[ அறத்துப்பால் : அதிகாரம் : பயன்இல சொல்லாமை : குறள் எண் :195 ]


தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

கண்ணுல மய்ய வய்க்க சொல்லோ அந்த மய்ய வெக்கிற குச்சிய கண்ணுக்கு தெர்யாது.. அத்தே மேறி தான் என்ன வுட்டு பிர்ஞ்சி போனவரு திரும்ப என்னாண்ட வர் சொல்லோ அவுரு பிர்ஞ்சு போன தப்பு எனக்கு தெர்யறதில்ல.. சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா..

"மை வய்க்கிற குச்சி கண்ணுக்கு தெர்யாது..காதலன் செஞ்ச குத்தம் பொண்ணுக்கு தெர்யாது"

குஜாலா சொல்லிகீரார்பா "தல"

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்

பழிகாணேன் கண்ட விடத்து.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : புணர்ச்சி விதும்பல் : குறள் எண் :1285 ]


தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

நாட்ட ஆண்டுகினு இர்க்க ராஜாவா இர்ந்தாலும் அவுரு ஏதாவது தப்பு செய் சொல்லோ... "தோ பாரு நீசெய்றது ஏதும் சரியில்ல..ராங்கு பண்ணா அப்றம் அல்லாமே ராங்காவே பூடும்ன்னு" சொல்ல நாலு பெர்ய மன்சனுங்க வோணும்.! அப்டி சொல்ல ஆருமே இல்லின்னா எதிரியே இல்லாட்டி கூடொ அவரு கெட்டயிஞ்சுருவாரு.! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா.

"நல்லத சொல்ற பெருசு.. அவரு இல்லாட்டி நீ தருசு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானுங் கெடும்.

[ பொருட்பால் : அதிகாரம் : பெரியாரைத் துணைக்கோடல் :குறள் எண்:448 ]


தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

என் மன்சுல நென்ச்சிகினு இர்க்குறபரு என் கண்ணுக்குள்ளயும் கீறாரு.! கண்ண இமய்க்க சொல்லோ அவுரு மூஞ்சி மறயுமேன்னு பீலாகி நான் கண்ண இமிக்கமேயே இருக்கேன்.. இது எனுக்கு சந்தோஸ்மா இர்ந்தாலும் அது தெரியாம.. இந்த புள்ள இப்படி கீதே.. அத்தும் மேல உனுக்கு அன்பே கெடியாதான்னு அவுர ஊர்ல அல்லாரும் திட்டுறாங்க ! 
சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா.. 

"என்கண்ண இமிச்சா நீ அங்க இல்ல.. உன்ன ஊரு திட்டுது இன்னா சொல்ல"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே

ஏதிலர் என்னும் இவ்வூர்.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : காதற் சிறப்புரைத்தல் : குறள் எண் : 1129 ]


தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

வாய் தொர்ந்து பொய்யே சொல்யாம உண்மியா ஒர்த்தரு வாழறாருன்னா அத்த வுட ஜபர்தஸ்து வேற எத்துவும் கெடியாது.. அப்டி வாழ சொல்லோ அவுருக்கு தெர்யாமலேயே அல்லா புண்ணியமும் தானா வந்து சேரும்..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"பொய் சொல்லாத வீணா.. புண்ணியம் வரும் தானா"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை

எல்லா அறமும் தரும்.

[ அறத்துப்பால் : அதிகாரம் : வாய்மை : குறள் எண் 296 ]


தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

காதலி சொல்றா..! "இந்த சாய்ங்கால நேரம் கீதே... அது அப்டியே காதலனோட குஜாலா பேசிகினு இர்ந்தப்போ சோக்கா தெர்ஞ்சது.. இப்ப அவுரை பிர்ஞ்சி இர்க்க சொல்லோ அத்தே சாய்ங்கால நேரம் எப்டி கீதுன்னா.. என்னிய உசுரோட துண்ணுற வேல் கணக்கா கொல்லுது..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"அவுரு இர்ந்தா சாய்ங்காலம்.. அவுரு இல்லாட்டி உசுர சாய்க்கிற காலம்"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்

வேலைநீ வாழி பொழுது.

[ இன்பத்துபால் : அதிகாரம் : பொழுது கண்டு இரங்கல் : குறள் எண் :1221 ]


தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

நாட்டை ஆள்ற ராஜாவே உனுக்கு தோஸ்த்து ஆவணும்ன்னு தேடி வந்து தோஸ்த்தா இர்ந்தாலும்.. நீ ஒரு சோம்பேறியா இர்க்க சொல்லோ.. அந்த ராஜாவோட உனுக்கு கிட்ச்ச ஒறவுக்கு ஒரு சின்ய பிரியோஜ்னம் கூட கெடியாத்து..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"ராஜா உன் தோஸ்த்துன்னாலும்.. சோம்பேறியா இர்ந்தா நீ கூஜா

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

படியுடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் மடியுடையார்

மாண்பயன் எய்தல் அரிது

[ பொருட்பால் : அதிகாரம் : மடி இன்மை : குறள் எண் : 606 ]


தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

இந்த முளவுட்ட செடி கீதே அத்த பாத்தவுட்னே சொல்லலாம் இது எந்த மேறி நெல்த்துல முள்ச்சதுன்னு... அத்தே மேறி தான் மன்சன் வாய தொர்ந்து பேசற வாய் பேச்ச வச்சி அவன் பொர்ந்த பொறப்பயும் அவன் வம்சித்தயும் ஈசியா கண்டுக்லாம்..! 

சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"நெல்த்த வச்சு செடிய சொல்லு.. பேச்ச வச்சு குடிய சொல்லு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும்; காட்டும்

குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.

[ பொருட்பால்: அதிகாரம்: குடிமை : குறள் எண் - 959 ]

பந்தி-1 மதுராந்தகம் ஹை வே இன்

#பந்திக்கு_முந்துங்க

ஒரு கோப்பை இட்லி..!  (மதுராந்தகம் ஹை-வே-இன் ஓட்டல்)

சென்னை மதுரை நெடுஞ்சாலையில் பிரயாணிப்பவர்களே (சொந்த வாகனத்தில்) உங்களுக்கு ஒரு வரப்பிரசாதம் மதுராந்தகத்தில் அமைந்துள்ள ஹை-வே-இன் ஹோட்டல்.! பொதுவாக வெளியூர் பயணங்களில் நல்ல ஓட்டல் அமைவது கர்ணப் பரம்பரையில் பிறந்தவர்க்கு கூட அமையாது அதற்கு ஸ்பெஷல் புண்ணியங்கள் செய்து இருக்க வேண்டும்.!

இந்தக் கடை உண்மையில் அந்த புண்ணியம் செய்தவர்க்கு அமைந்த கடை.. உயர்தர சைவக்கடை என இவர்கள் எழுதலாம் ஆனால் இவர்கள் அப்படி ஏதும் தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை.. பெரு நகரத்தின் உயர்தர சைவ உணவகங்களை விட விலை குறைவு... உணவின் தரமும் அதன் சுவையும் அதை தயாரிக்கும் நேர்த்தியும் பாராட்டத்தக்கது..!

எண்ணெய் குடிக்காத பூரி மசித்த உருளைக்கிழங்கு மசால், நெய் மணக்கும் குழைந்த முந்திரி வெண்பொங்கல், புளிக்காத பொன்னிறத்தில் வார்த்த தோசை, மிளகும் முந்திரியும் சேர்த்த ரவா தோசை, முறுகலான மசால் தோசை, சுடச்சுட கிடைக்கும் ஸ்பெஷல் வடை இப்படி பல இருந்தாலும் ஹை லைட் ஒரு கோப்பை இட்லி தான்!அதென்ன கோப்பை இட்லி

இட்லி எப்படி கோப்பையில் வரும் என்று கேட்கிறீர்களா.. ஆம் அது தான் அக்கடையின் பிரசித்தமான சாம்பார் இட்லி..! ஹை-வே-இன் ஓட்டலின் சிறப்பே அதன் சாம்பார் தான்.. பொதுவாக நல்ல சாம்பாரை வைத்தே அந்த ஓட்டலின் இதர உணவுகளைப் பற்றி சொல்லி விடலாம்.. சாம்பார் வைப்பது ஒரு கலை..அதை ரசித்து செய்பவரே சிறந்த மாஸ்டர்..!

மிகச் சிறப்பாக சாம்பார் வைப்பவர் தான் எல்லா உணவுகளையும் சிறப்பாக செய்வார் என்பார் என் தந்தை.. எங்கள் கடைக்கு வேலைக்கு வரும் மாஸ்டர்களுக்கு முதல் பரீட்சையே அதுதானாம்..! சாம்பார் சிறப்பாக அமைந்து விட்டால் உணவுக்கு தனி ருசி வந்துவிடுமாம்.! அந்த சாம்பாரில் தான் எத்தனை வகை..! சாப்பாட்டு சாம்பார் வேறு டிபன் சாம்பார் வேறு..!

கொஞ்சம் தண்ணீராக  நிறைய காய்கறிகள் இருந்தால் அது சாப்பாட்டு சாம்பார்.. அதாவது இலையில் ஊற்றினால் ஓடுவது சாப்பாட்டு சாம்பார்.. டிபன் சாம்பார் அப்படி அல்ல கெட்டியாக இருக்க வேண்டும்..இலையில் ஊற்றினால் ஓடாமல் மெதுவாக பாயாசம் போல பரவவேண்டும் ஒரிரு காய்கள் தான் இருக்கும்.. நிறைய காய்கள் இருக்காது..!

பொதுவாக டிபன் சாம்பார் சிவாஜி மாதிரி... சிங்கம் சிங்கிளாக வரும் என்பது போல ஒரு காய் சாம்பாராக தான் செய்வார்கள் வெங்காய சாம்பார், பூசணி சாம்பார், முருங்கை சாம்பார், பருப்பு சாம்பார், தக்காளி சாம்பார் என ஏதாவது ஒரு காயை மட்டுமே சார்ந்திருக்கும்..! இதற்கெல்லாம் பேரரசனாக ஒரு சாம்பார் உள்ளது.. !

அதுதான் அரைத்துவிட்ட சாம்பார்..! அதாவது கையால் மசாலா அரைத்து வைப்பது.. இதற்கு தான் ஈடு இணையில்லை.. சரியாக அமையாவிட்டால் சமையலும் சொதப்பிவிடும்.. பொதுவாக அரைத்த சாம்பாரில் சின்ன வெங்காயம் பரங்கிக்காய் போடுவார்கள்.. அதை சாப்பிடும் போது சிணுங்கும் குழந்தையின் பிடிவாதம் போல மெல்லிய இனிப்பு இருக்கும்.!

ஆனால் ஹை-வே-இன் ஓட்டலின் சிறப்பே அந்த இனிப்பு சுவை இல்லாது.. சாம்பார் நல்ல சுவையுடன் மணமாக இருப்பது தான்.. அவர்கள் பூசணி பயன் படுத்துவதில்லை சின்ன வெங்காயம், முருங்கை, அவரை என்று பயன் படுத்துகிறார்கள்.. சின்ன வெங்காயத்தை சாப்பிடும் போது கூட அந்த இனிப்பு தெரியாத அளவு பக்குவமாக சமைக்கிறார்கள்..!

ஒரு பெரிய கோப்பையில் சூடாக 3 இட்லிகள் கோப்பை நிறைய சாம்பார் ஒரு ஸ்பூன் நெய்.. அதிலும் சாம்பாரின் சூடு அபாரமாக இருக்கும்.. மெல்ல ஸ்பூனால் அதை விண்டு சாம்பாரில் நனைத்து ஊதி ஊதி முதல் வாய் சுவைப்பது முதல் காமத்திற்கு ஈடானது.. அவ்வளவு ருசி.! சூடான உணவு எப்போதும் சுவையாக இருக்கும் அதிலும் இந்த காம்பினேஷன் சூப்பர்..!

இதற்கு தரும் தேங்காய் சட்னி.. பெரிய ஹீரோ படத்தில் நடித்த ஹீரோயின் போல.! அதிக ஸ்கோப் இருக்காது..யாரும் அதை தீண்ட மாட்டார்கள்.. ஆனால் கூடுதலாக சாம்பார் வாங்காமல் சாப்பிடுபவர்கள் அரிது.! இந்த சாம்பார் இட்லி ஜோடியை சிவாஜி -பத்மினிக்கு இணையாக சொல்லும் அளவிற்கு மிகச் சிறப்பாக இருக்கும்..!

இங்கு எந்த அரசுப் பேருந்தும் நிற்பதில்லை எனும் போதே இதன் தரம் உங்களுக்கு தெரியும்..! தென்னிந்திய வட இந்திய உணவுகளும் சூப்பர் என்றாலும் இந்த ஓட்டலின் ஹீரோ - ஹீரோயின் சாம்பார் இட்லி தான்  காலை 10 மணிக்கு மேல் கிடைக்காது.. என் பயணங்கள் சரியாக அங்கு ஒன்பது மணிக்கு இருப்பதை போல திட்டமிட்டு போவேன்..!

அடுத்த முறை மதுராந்தகம் வழியாக சென்றால் ஹை-வே-இன்னின் சாம்பார் இட்லியை சுவைக்க மறக்காதீர்கள்..!


மொதலாளி அந்த தொழில் ரகசியம் என்னன்னா..!

சமையலுக்கு தேவையானவை: 

அரைத்த சாம்பார் 5 அல்லது 6 பேருக்கு சமைக்க..

துவரம் பருப்பு - 100கி... க.பருப்பு - 25 கி... வரகொத்தமல்லி - 20கி... வரமிளகாய் - 20 கிராம்... ஒரு முழு கேரட்... ஒரு சிறிய அல்லது பாதி முருங்கைக்காய்... பரங்கிக்காய் துண்டு சிறியது... உரித்த சின்ன வெங்காயம் 10... அரைமூடி துருவிய தேங்காய்... தக்காளி 3... ஒரு ஸ்பூன் நெய்... நல்லெண்ணெய் 50 மிலி... முழு மிளகு & சீரகம் - இரண்டும் தலா ஒரு சிட்டிகை.. கருவேப்பிலை கொத்தமல்லி கடுகு உளுத்தம் பருப்பு - தாளிக்க... உப்பு -தேவைக்கு... காய்கறிகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்...

சமைக்கும் முறை : துவரம் பருப்பை நன்கு குழைவாக வேக வைத்து எடுத்து தனியாக வைத்து.. பிறகு வாணலியில் 25 ml எண்ணை விட்டு மிளகு,க.பருப்பு, வரகொத்தமல்லி, வரமிளகாய் போட்டு நன்கு சிவக்க வறுக்கவும்.. சிவந்த பின்பு அடுப்பை அணைத்து விட்டு துருவி வைத்த தேங்காயை இதில் கொட்டி வறுக்கவும்.. தேங்காய் சேர்க்கும் போது அடுப்பு எரியக்கூடாது தேங்காயும் நன்கு கலந்தவுடன் கடைசியாக சீரகம் சேர்த்து இறக்கி வைக்கவும்.. இதை நன்கு ஆற வைத்து மிக்சியில் தேவையான தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.. இப்போது மீண்டும் வாணலியில் கடுகு உளுத்தம்பருப்பு,கருவேப்பிலை கொத்தமல்லி போட்டு தாளித்து வெட்டி வைத்துள்ள முருங்கை, தக்காளி, பரங்கி காய்கறித்துண்டுகளை வாணலியில் கொட்டி வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேக வைக்கவும்.. காய்கறிகள் வெந்ததும் மிக்சியில் அரைத்த கலவையை சேர்த்து கொதிக்க விடவும்... நன்கு கொதித்ததும் து.பருப்பை சேர்த்து கிளறி நுரை அடங்கும் அளவில் உப்பு சேர்த்து நெய்விட்டு இறக்கி விடவும்.. சுவையான அரைத்த சாம்பார் ரெடி..! இட்லி, தோசை, வெண்பொங்கல், உப்புமா, பணியாரம் அனைத்திற்கும் ஏற்றது..!


மசாலாவை அம்மியில் கையால் அரைத்தால் சுவை இன்னும் அலாதி..!