Wednesday, 11 February 2015

காக்காயும்.. நரிக்குட்டியும்

5. பாட்டி வடை சுட்ட கதையை நம் தமிழ் சினிமா இயக்குநர்கள் இயக்கியிருந்தால் ஒரு ஜாலி கற்பனை...

இயக்குநர் மிஷ்கின்...

தூரத்தில் சிறியதாக தெரியும் ஒரு சிறு வெளிச்சப்பொட்டு பெரிதாகிக் கொண்டே வர அது ஒரு போலீஸ் வாகனம் அதிலிருந்து கை விலங்கோடு இறங்குறான் அவன்.! கண்ணை ஒரு பக்கம் தலைமுடி மறைத்திருக்க மெல்ல ஜெயில் காம்பவுண்ட்கதவு திறக்கப்படுகிறது காரிடாரில் நடந்து செல்லும் பூட்ஸ் ஒலிகள் மட்டும் பின்னணியில் ஒலிக்க இருளும் ஒளியும் கலந்த அந்த சிறைக்குள் அடைக்கபடுகிறான் அவன்.!

அவனை அழைத்து வந்த அதிகாரி அவன் கைவிலங்கை அவிழ்த்து விட்டு சிறைக்குள் அவனை தள்ளி பூட்டுகிறார்.. ஏதாவது சாப்பிடுறயா நீ? என்ற கேள்விக்கு அவனிடம் பதிலில்லை எங்கோ வெறித்து பார்க்கிறான்.. உன்னை தான் கேக்குறேன் சாப்பிடுறியா.? ஒரு வினாடி அவன் திரும்பி அவர் முகத்தை பார்த்துவிட்டு கண்ணை மறைத்த முடியை ஒதுக்கிக் கொண்டு மீண்டும் பழைய இடத்திலேயே பார்க்கிறான்.

சாப்பிடாட்டி போஎன்றவர் திரும்பி ஜெயில் காவலரிடம் ஏம்பா எனக்கு சாப்பிட எதும் வாங்கிருக்கியா என்கிறார். யெஸ் ஸார் இட்லியும் வடையும் இருக்கு வாங்க சாப்பிடலாம்ன்னு சொல்லிக்கிட்டே அங்கிருந்து போறாங்க.. அந்த ஜெயிலர் வடைன்னு சொன்ன அதே செகண்ட் அந்த கைதியிடம் ஒரு சின்ன சிலிர்ப்பு அப்படியே சுவரில் சாய்ந்து கண் மூட திரையும் இருட்டாகிறது (ப்ளாஷ் பேக்)

இப்போ திரை வெளிச்சமாக அழகிய பூங்கா ஒன்றின் பென்ஞ்சில் நம்ம கைதி (இனிமே இவரை ஹீரோன்னு சொல்லிக்குவோம்) படுத்து இருக்க வாசலில் ஒரு கண்தெரியாத பாட்டி வடை சுட்டுகிட்டு இருக்கா.. பக்கதிலியே ஒரு நரிக்குட்டி அவங்க சுட்ட வடையை கவ்விகிட்டு தெரு முனைக்கு போவுது திரும்ப ஒரு வடையை கொண்டுவந்து வச்சிட்டு போகுது.! ஹீரோவுக்கு ஆச்சரியம்.!

இந்த நரிக்குட்டி ஏன் ஒவ்வொரு வடையா எடுக்குது திரும்ப ஏன் வைக்குது ஒரு வடைக்கும் இன்னொரு வடைக்கும் ஒரு கால் மணி நேரம் ஏன் கேப் விடுது.. சஸ்பென்சோட ஹீரோ அதை மெதுவா போயி பாக்க தெரு முனையில கருப்பு ஹெல்மெட் போட்ட ஆளுகிட்ட அந்த வடையை நரி குடுக்க அவர் அதை தான் கொண்டு வந்த ஹாட் பேகில் போட்டுட்டு இன்னொரு பேகில் இருந்து வடையை எடுத்து நரிக்குட்டி கிட்ட தர.. 

அப்ப இன்னொரு ஆச்சரியம்..! ஒரு காக்கா வடையை கொண்டு வந்து அதே ஹெல்மெட் காரர் கிட்ட தர அதையும் அந்தாளு வாங்கிட்டு வேற வடை தர்றாரு அந்த காக்கா அதை அடுத்த  தெருவில் இருக்கும் ரெண்டு காலும் இல்லாத ஒரு அப்பாவி பாட்டிக்கடையில வச்சிட்டு மறுபடி அங்கிருந்து ஒரு வடையை தூக்கிட்டு வருது. இதுல என்ன சதியிருக்க முடியும்ன்னு சந்தேகத்தோட பாலோ பண்ணி பாக்குறாரு ஹீரோ.!

அப்போ தான் ஹீரோக்கு அந்த பயங்கர உண்மை தெரிய வருது..!அந்த ஹெல்மெட் காரன் இந்த மாதிரி உடல் ஊனமுற்ற ஆட்களை வச்சி வட போட சொல்லுவான்.. அந்த வடைக்குள்ள போதை மருந்தை வச்சி நரிக்குட்டி கிட்டயும் காக்கா கிட்டயும் கொடுத்துடுவான் அதுங்க போய் வச்சிடும் வயதானவங்க ஊனமுற்றவங்க எந்த அனுதாபத்தில் யாரும் சந்தேகிக்க மாட்டாங்கன்னு தெளிவான ப்ளான் அது.!

இதை கண்டுபிடிச்ச ஹீரோ மெதுவா அந்த பாட்டிங்க வீட்டை கண்டுபிடிச்சு போயி உண்மையை சொல்றான்.. அதை கேட்டு அதிர்ச்சி அடைஞ்ச பாட்டிங்க ஹெல்மெட் காரன் கிட்ட இனி நாங்க வடை சுடலை இந்த கூட்டத்தில இருந்து விலகிக்கிறோம்ன்னு சொல்ல ஒழுங்கா வடைய சுடறிங்களா இல்ல உங்களை சுடவான்னு பாட்டிகளை மிரட்ட பாட்டிங்க ஹீரோ உதவியால தப்பிக்கிறாங்க.

கையில ஒரு பாட்டியை தூக்கிகிட்டு கண்ணு தெரியாத பாட்டியோட ஊரு முழுக்க ஓடுறாரு ஹீரோ.. ஹெல்மெட் காரனும் விரட்ட வில்லனுக்கு துணையா அந்த காக்காவும் நரிக்குட்டியும் உதவி செய்யுது.. இரவு முழுக்க ஓடுற ஹீரோ ஒரு இடத்துல நரியை கொன்னுட்டு ஒரு சுடுகாட்டுக்குள்ள போயி ஒளிஞ்சுக்கிறாரு.. விடியும் போது மரத்துல இருந்த காக்கா ஹீரோவை பார்த்துட்டு குரல் கொடுக்குது.

பாய்ஞ்சு வந்த வில்லன் கண்ணில்லாத பாட்டியை கொன்னுடுறான்.. காலில்லாத பாட்டியை தூக்கிட்டு மறுபடி ஓடுறான் ஹீரோ.. ஒடிகிட்டே ஒரு வடையை அவன் தூக்கி போட அந்த காக்கா அதை திங்குது.! அதுல அவன் ஏற்கனவே வச்ச விஷத்தால காக்காவும் செத்துடுது.. ஒரு பில்டிங் கார் பார்க்கிங்கில் நுழையுற ஹீரோ அங்க நடக்குற சண்டையில கண்ணில்லா பாட்டியையும் இழக்கிறான்..!

அந்த ஆவேசத்தோட வில்லனை அடிச்சு கொலை பண்ணிட்டு சரண்டர் ஆயிடுறான். இப்ப திரை மறுபடி இருள... வெளிச்சமாகும் போது சிறையில் மறுபடி ஹீரோ..! மெல்லிய வயலின் ஒலி இசைக்க கவலப்படாதே ராசா என்ற கோரஸ் குரல் ஒலிக்கிறது சிறைக்குள் தானாக ஒரு தட்டு நகர்ந்து வர அதில் சூடா 4 வடைகள்... பாட்டிகள் தான் பிசாசாக..!! இனி அடுத்து பாகம் 2 இல் சந்திப்போம் என முடிகிறது படம்.

காக்கா ப்ரேம்ஸ் வழங்கும்...

மிஷ்கினின்.. #காக்காயும்_நரிக்குட்டியும்


Tuesday, 10 February 2015

அக்னி வடசித்திரம்.

4. பாட்டி வடை சுட்ட கதையை நம் தமிழ் சினிமா இயக்குநர்கள் இயக்கியிருந்தால் ஒரு ஜாலி கற்பனை...

இயக்குநர் மணிரத்னம்...

கும்மிருட்டு (பாஸ் அதான் டைரக்டர் பேரு சொல்லிட்டிங்களே கதைக்கு வாங்க) ஒரு தீக்குச்சி மட்டும் பற்ற வைக்கிறார்கள். அந்த ஒளியில் ஒரு பாட்டியின் முகம் தெரிகிறது.. அந்த பாட்டி அந்த குச்சியால் இப்பொது விறகடுப்பை பற்ற வைக்கிறாள் இப்போது வெளிச்சம் நன்கு பரவ ரியலாக அடுப்பு எரிக்கும் ஒளியில் அந்த குடிசை தெரிகிறது.. வெளியே சோ வென மழை.. மழையை சபித்துக்கொண்டே பாட்டி...

வடை சுடுகிறார்.! அப்போ வாசலில் ஹஸ்கி வாய்ஸில் ஒரு குரல் "வேணும்.. வடை வேணும்" அதற்கு பாட்டியும் ஹஸ்கியாக "எத்தனை" குரல் "நாலு" பாட்டி "பத்து ரூபா" குரல் "இல்ல எங்கிட்ட இல்ல" பாட்டி "ஏன்" குரல் "அதான் இல்லேங்கறேன் இல்ல" பாட்டி "அதான் ஏன்னு கேக்கறேன் இல்ல" குரல் "ஏன்னா..ஏன்னா.. நான் காக்கா" இதைக்கேட்டதும் பாட்டி காக்காவா பேசுதுன்னு பாக்க வெளியே வர..

அது எதிர் வீட்டு டிவியில் ஓடுற இன்னொரு மணிரத்னம் பட சவுண்டுன்னு தெரிய வருது.! இந்த கேப்புல அந்த அஷோக் காக்கா ஷோக்கா ஜன்னல் வழியா வந்து வடையை தூக்கிட்டு பறந்துடுது... பாட்டிக்கு அதிர்ச்சி..! வடையோட போன அஷோக் காக்கா வழக்கம் போல தன் பிரண்ட்ஸோட அதை ஷேர் பண்ண எல்லா காக்காவும் "காக்கா காக்காதி காக்கனிந்த காக்கா" என ஆடிப்பாடுகின்றன.!

அஷோக் காக்காவோட கொட்டத்தை அடக்க பாட்டி கெளதம்ன்னு ஒரு காக்காவை வளக்குறா.. அந்த காக்காவும் அஷோக்க்கு எதிரா நிறைய நடவடிக்கை எடுக்குது அதுவும் அஷோக் காக்காவும் சந்திக்கும் போதெல்லாம் மோதிக்கிறாங்க.. அஷோக் காக்காவுக்கு ஏன் பயம் இல்லைன்னா கெளதம் காக்காக்கு முன்னாடி பாட்டிகிட்ட வளர்ந்த காக்கா தான் அஷோக்.. கெளதமும் அஷோக்கும் சகோதரர்கள்.!

பாட்டி கடைக்கு அடிக்கடி வந்து போற வில்லன் "நரியாபதி"அக்கவுண்ட்ல சாப்பிட்டுட்டு ஏப்பம் விட்டுட்டு போவார். ஒரு நாள் பாட்டி பாக்கியை செட்டில் பண்ண கேட்டப்ப அவரு பணம் தர மறுக்கிறாரு.. அப்ப தான் பாட்டிக்கு அவர் ஏப்பம் விட்டதுக்கான உண்மையான அர்த்தம் புரியுது.. தன்கிட்ட காக்காவை விட அதிக வடையை சுட்ட இந்த நரியாபதி தான் பெரிய நரின்னு பாட்டிக்கு தெரியவருது.!

விஷயத்தை அஷோக் கெளதம் காக்காக்களிடம் பாட்டி சொல்ல.. இதுவரை எதிரும் புதிருமா நின்ன ரெண்டு காக்காக்களும் தீயைப்போல வெகுண்டு எரி(ழு)ந்து.. ஒண்ணா சேர்ந்து போய் அந்த நரியாபதியுடன் பொறி பறக்க மோதுகிறார்கள்.. தப்பி ஓடிய நரியாபதி ஒரிடத்துல ஒளிஞ்சுகிட்டு பாட்டியை அடிக்க ஒரு நரிக் கூட்டத்தை அனுப்பி விடுறாரு.. அந்த நரிகளிடம் அடிபட்ட பாட்டி ஆஸ்பத்திரியில் அட்மிட ஆக..

பாட்டியின் வடைகளோடு நரியாபதி ரயிலில் ஏறி வேறு ஊருக்கு ஓட பார்க்க அஷோக் காக்காவும் கெளதம் காக்காவும் பறந்து போயி ஓடும் ரயிலிலின் ஜன்னல் வழியாக நுழைந்து அந்த வடைகளை எடுத்துகிட்டு திரும்பி வரும்போது நரியாபதியின் கண்ணிலயும் கொத்திவிட்டு வருகிறார்கள்.. கண்ணில் ரத்தம் வடிய நரியாபதி அடுத்த ஸ்டேஷனில் டிரெயினை விட்டு இறங்குகிறார்..

கண் தெரியாது நடக்கும் போது தடுமாறி பிளாட்பாரத்தில் இருக்கும் டீக்கடையின் அடுப்பில் விழ அவர் உடல் பற்றி எரிந்து சாம்பலாகிறது..! வானத்தில் பறந்தபடியே இதை பார்க்கும் சகோதர காகங்கள் வடையோடு பாட்டியிடம் திரும்புகின்றன. ஆஸ்பத்திரியில் இப்ப பாட்டி கண்முழிக்க காகங்கள் கண்ணீருடன் வடையை அவருக்கு ஊட்ட.. ஆனந்தமாக மூவரும் சிரிக்க தூரத்தில் ரயிலின் சத்தம்.!

வண்ணாரப்பேட்டை டாக்கீஸ் வழங்கும்...

மணிரத்னத்தின்.. #அக்னி_வடசித்திரம்

வடதேசி

3. பாட்டி வடை சுட்ட கதையை நம் தமிழ் சினிமா இயக்குநர்கள் இயக்கியிருந்தால் ஒரு ஜாலி கற்பனை...

இயக்குநர் பாலா...

சுடுகாட்டில் உள்ள ஒரு மரத்தில் வசிக்கிறது அந்த பிணந்தின்னி காக்கா.! ஒரு கட்டத்தில் அங்கு வரும் பிணங்களை ஒரு நரிக்கூட்டமே அகோரிகள் போல வந்து தின்றுவிட்டு சுடுகாட்டிலேயே குடியேறி விடுகிறது.! நரிகளின் வரவால் பசியில் வாடிய காகம் பித்துப்பிடித்த சித்தன் போல"உன்னையே எண்ணி நீ பாரு, இந்த நரியால நான் இப்ப பட்னின்னு கூறு" என்று கத்திய படியே சுடுகாட்டை விட்டு பறக்கிறது.!

வெகுநேரம் பறந்த அந்த காக்கா களைப்புடன் இறங்கிய இடம் ஒரு தேயிலைத் தோட்டம். அங்கு கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் பசியாற ஒரு பாட்டி வடை சுட்டு விற்கிறாள்.. இது வரை சதையின் ருசி மட்டுமே அறிந்த காகத்துக்கு வடையின் ருசி அறிய ஆசை பிறக்கிறது. அப்ப பரதேசி போல நியாயமாரேரேரேரேரேன்னு கத்திகிட்டு ஒருத்தன் அங்கு வர பாட்டி அவனுக்கு கை நிறைய வடை தருகிறாள்.!

அந்த பையன் தான் பாட்டியின் பேரன்.. அவன் கையில் உள்ள மேளத்தை கீழே வச்சிட்டு ஒரு பாறையில் உட்காந்து வடையை சாப்பிடும் போது காக்காவை பார்க்குறான் பரிதாபப்பட்டு காக்காய்க்கு வடை போட  பசியில இருந்த காக்கா அவசரமா வந்து வடையை சாப்பிடுது.. அதோட ருசி ரொம்ப புடிச்சு போகுது அந்த பையனுக்கு காக்காவை பிடிச்சி போகுது..ரெண்டு பேரும் நல்ல தோஸ்த்தாகுறாங்க!

அடுத்த காட்சியில் இளங்காத்து வீசுதே, வடை கேட்டு பேசுதேன்னு ரெண்டு பேரும் பாடிக்கிட்டே பிரண்ட்ஷிப்பை டெவலப் பண்ணிக்கிறாங்க.. அந்த எஸ்டேட் கங்காணி அவனோட கடையில் வடைபோட்டு எல்லோரும் அங்கதான் வாங்கணும் அப்டின்னு சொல்றான்.! விலையும் அதிகம் கொதிச்சு போனாலும் கொத்தடிமையான நாம என்ன செய்யறதுன்னு நொந்து கிட்டே மக்கள் வாங்குறாங்க.

வாங்கி சாப்பிட்ட எல்லோருக்கும் உடம்பு முடியாம போகுது.. அவங்க சாகறதுக்கு முன்னாடி அவங்க எல்லோருடைய கிட்னியையும் திருடி விக்க திட்டம் போட்டு இருக்கான் கங்காணி.. இது தெரிஞ்ச பரதேசி ஊரு புல்லா அதை தண்டோரா போட்டு சொல்ல மக்கள் அந்த தேயிலை தோட்டத்த விட்டு கிளம்புறாங்க காக்கா தான் பங்குக்கு கங்காணி போட்ட வடையை எல்லாம் தூக்கிட்டு போகுது..

காண்டான கங்காணி பரதேசி கெண்டைக்கால் நரம்பை அறுத்து அவனை நடைபொணமா ஆக்கிடுறான்.. தன் நண்பனுக்கு இப்படி ஆயிடுச்சேன்னு வெகுண்டெழுந்த காக்கா பாட்டியை பத்திரமா ஒரு இடத்துல கொண்டு போய் விட்டுட்டு நேரா பழைய சுடுகாட்டுக்கு போய் அகோரி நரிங்க கிட்ட இந்த கதையை சொல்லுது.. காக்காவுக்கு உதவ அகோ(ந)ரிகள் ஒப்புக்கொள்கின்றன.

க்ளைமாக்சில் நரிக்கூட்டம் தேயிலைத் தோட்டத்தில் பதுங்கியிருக்க அது தெரியாமல் வரும் கங்காணியை அவை விரட்டி விரட்டி கடித்து குதறுகின்றன.. உயிருக்கு பயந்து ஓடும் கங்காணியை அவை வேட்டையாட கங்காணியின் குரல் அவலக்குரலாக ஒலிக்க வானத்தில் டாப் ஆங்கிளில் இருந்து காகம் சர்ரென பறந்து வந்து மிகச்சரியாக கங்காணியின் குரல் வளையில் கொடூரமாக ஒரு கொத்து...

குரல் வளையில் தன் அலகை நுழைத்து அவன் ரத்தத்தை குடிக்கிறது.அப்போது அதன் கண் முன்னால் பாட்டி கடை மூடியது,  வடை தின்னவர்களுக்கு வயிறு வலித்தது, நண்பனின் கால் நரம்பை அறுத்தது எல்லாம் நினைவுக்கு காட்சிகளாக வந்து போக காக்கா இன்னும் ஆங்காரமாக அழுத்த கங்காணி இறந்து விடுகிறான்.

தூரத்தில் அந்த பரதேசி காலை விந்தி விந்தி நடந்து வருவது அவுட் ஆஃப் போகஸில் தெரிய.. கிளியராக தெரியும் காட்சியில், பச்சை நிற தேயிலைத் தோட்டம் ரத்தக்களறியாய் சிவப்பாய் மாறி ஆங்காங்கே சதைத் துண்டுகள் எலும்புகள் சிதறி கிடக்க மூக்கெல்லாம் ரத்தம் வடிய காக்கா வெறித்த பார்வையுடன் அமர்ந்திருக்க திரையில்... Film By பாலா.

காகா பிலிம் ஃபேக்டரி பெருமையுடன் வழங்கும்..

பாலாவின் #வடதேசி

ஏழாவது வடை.

2. பாட்டி வடை சுட்ட கதையை நம் தமிழ் சினிமா இயக்குநர்கள் இயக்கியிருந்தால் ஒரு ஜாலி கற்பனை...

இயக்குநர் முருகதாஸ்...

காப்பி அடிப்பது என்றாலே வேப்பங்காயாய் கசக்கும் இவரின் சொந்த கற்பனையில் உருவான கதை இது...!!!!

தஞ்சை டெல்டா பகுதிகளில் போதி தர்மர் வம்சத்தின் வழி வந்த ஒரு ஏழைப் பாட்டி வடை சுடுகிறாள். பல நூறு ஆண்டுகளுக்கு முன் சீனா சென்ற தன் தாத்தா போதி தர்மர் சீனர்களுக்காக சமைத்த உணவு தான் இன்றைய சைனீஸ் ஃபுட் என்பதும், அதன்பின் இந்தியாவுக்கு வரும் அதே சீன ஃபாஸ்ட் ஃபுட் கடைகளின் வியாபரத்தால் அவளது வடை வியாபாரம் பாதிக்கப்படும் என்பதும் அப்போது அவளுக்குத்தெரியாது!

தினமும் பல வடைகள் பாட்டி சுட்டாலும் நாலு வடைக்கு மேல் சுடும் வடை உன்னுடையது அல்ல எனும் கம்யூனிச கோட்பாடு கொண்ட கத்தி ச்ச்சீ காக்கா ஒன்று அங்கு வருகிறது.. ஒவ்வொரு முறையும் பாட்டி சுடும் ஏழாவது வடையை அது சுடுகிறது.! ஏற்கனவே ஃபாஸ்ட் ஃபுட் கடைகளின் இடையூறால் வியாபாரம் இழந்த பாட்டி காக்காவின் திருட்டு செயலால் நஷ்டமடைந்து பாதிக்கப்படுகிறாள்.!

இந்நிலையில் பாட்டி வடை சுடுவது போல ஊரில் நிலங்களைச் சுடும் ஒரு வெள்ளைக்கார கம்பெனி... நரி போல உள்ளே நுழைகிறது. ஊரில் உள்ள எல்லா காக்காய்கள் சுடும் வடைகளையும் அது சுரண்டுகிறது. இதில் கம்யூனிச காக்காவின் ஏழாவது வடையும் பறிபோகிறது இப்போது தான் பாட்டியிடம் தான் வடை சுட்டது எவ்வளவு பெரிய தவறு என அந்த காகம் உணருகிறது..!

அந்நிய நரிகளின் ஆதிக்கத்தை ஒடுக்க.. கொதித்தெழுந்த காகம் அந்த நரியின் முகத்திரையைக் கிழிக்க நியாயமாகப் போராட துணிகிறது. ஆனால் அப்பாவி காகத்தை நரி ஆள் வைத்து கொல்லப் பார்க்க அந்த தாக்குதலில் காக்கா தப்பித்து ஓடி விடுகிறது.. இதையெல்லாம் பார்த்த இன்னொரு காக்கா அந்த ரியல் காக்காவின் இடத்துக்கு வருகிறது.! ஆனால் இது அதிரடி காக்கா.!

நம் மூதாதையர் நினைவாக சைனாவில் சுட்ட வடையை இந்தியாவிற்கு கொண்டு வர முடிவு செய்கிறது அதிரடி காகம். அங்கும் ஒரு சீனப்பாட்டி வடை சுடுவதை தெரிந்து கொண்ட காகம் அவளிடமிருந்து வடை சுட நினைக்கிறது. அந்த பாட்டியின் பேரன் தான் டாங்லீ எனும் சைனா வடை மாஸ்டர்.! டாங்லீ இருக்கும் வரை வடையை சுட முடியாது என்பதை தெரிந்து கொண்டது காகம்.

அவர் இல்லாத போது மேப் போட்டு அதை டேபிளுக்கு அடியில் பார்த்து ஸ்கெட்ச் போட்டு சீனாவில் இருந்து வடையை தூக்கிக் கொண்டு இந்தியா வந்துவிடுகிறது. வடையை இழந்த வேதனையில் சீன பாட்டி உயிரே போனது போல் சீன் போட அதை தாங்காத பேரன் டாங்லீ சீன வடையை திரும்ப பெற சபதம் போட்டு இந்தியா வருகிறார். அவருக்கு அந்த வெள்ளைக்கார நரி எல்லா உதவிகளும் செய்கிறது. 

டாங்லீ இந்தியாவில் சுட்ட வடை பலரை மயக்குகிறது. எல்லா வடைக் கடைகளுக்கும் வியாபாரம் நொடித்து போகிறது. இந்த நிலை நீடித்தால் வடை சுடும் தொழிலே முடங்கும் அபாயம் ஏற்படுகிறது.. சென்னை, மதுரை,நெல்லை, திருச்சி என சகல நகரங்களும் வடையின்றி ஸ்தம்பிக்க டாங்லீ காகத்தை பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறார்அது தெரிந்தும் அவனுக்கு உடன் பட மறுக்கிறது காகம். 

டாங்லீ காகத்திற்கு எதிராக நோக்கு வர்மம் உபயோகிக்க.. அதை நோக்காமல் தவிர்க்கிறது காகம்.டோங்லீயின் சதி என்ன.? காக்கா சைனாவில் பறந்ததா?வெள்ளைக்கார நரி யார்? காகம் செய்தது துரோகமா? பாட்டி என்ன ஆனார்? திரையரங்கம் அதிரும் ஆரவாரத்துடன் காணத்தவறாதீர்கள்.. 

குரோஸ் பிலிம் கார்ப்பரேஷன் வழங்கும்

A.R.முருகதாஸின் #ஏழாவது _வடை

விரைவில்...

வ.போ. வடை போச்சே.

பாட்டி வடை சுட்ட கதையை நம் தமிழ் சினிமா இயக்குநர்கள் இயக்கியிருந்தால் ஒரு ஜாலி கற்பனை...

முதலில் இயக்குநர் ஷங்கர்...

பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான கண்ணாடி மாளிகை செட்டின் முன் ஒரு நவீன ஹெலிகாப்டர் வந்து இறங்குகிறது..! வடைசட்டி, மாவு, எண்ணை சகிதம் அதிலிருந்து தன் சிறிய ரோபாட் உதவியுடன் இறங்கும் பாட்டி நவீன சோலார் இண்டெக்ஷன் ஸ்டவ்வை பற்ற வைக்க அந்த உதவி ரோபோ வடை மாவு பிசைந்து தருகிறது. பாட்டியும் வடை சுடுகிறாள்.!

பாட்டி வடைகளை போட்டோ எடுத்து ஆன்லைனில் அப்லோடு செய்ய கிரெடிட் கார்டுகள் மூலம் வடைகள் பரபரப்பாக விற்க ஆரம்பிக்கிறது. ஆர்டர்களை ரிசீவ் செய்யும் ரோபோ தன் மெமரியில் சேவ் செய்து டெலிவரி ரோபோக்களுக்கு சொல்ல டெலிவரி ஆகிறது.! இந்த காட்சி முழுவதும் பின்னணியில் கொலம்பஸ் கொலம்பஸ் சுட்டாச்சு வடா..கொண்டாட நீயும் அதை இங்கே கொண்டாடா..என்ற பாடலுடன்!

பாடல் முடிவில் யூயூயூயூயூயூயூவ்வ்வ்வ்வ் என பின்னணிக்குரல் ஒலிக்க 360 டிகிரி மாட் ரிக்ஸ் ஷாட்டில் 64 கேமிராக்களால் ஒரு காகம் பறந்து வந்து அந்த கண்ணாடி மாளிகைக்கு எதிரில் உள்ள மரத்தில் அமர்கிறது. அது அமர்ந்த அடுத்த நொடி உதவி ரோபோவின் சென்சாரில் அலாரம் அடிக்கிறது.. மேடம் பீ கேர்ஃபுல், மேடம் பீ கேர்ஃபுல் என்னும் சிந்தைசர் வாய்ஸ் ஒலிக்க துவங்க பாட்டி உஷாராகிறாள்.!

தன்னிடம் உள்ள சேஃப்டி ரிமொட்டை அழுத்த வடை வைத்திருக்கும் தட்டை சுற்றி ஒரு லேசர் வளையம் சூழ்கிறது.! அந்த வளையத்துக்குள் எது நுழைந்தாலும் பஸ்பமாகிவிடும். உடனே பாட்டி கட்டைவிரல் தூக்கிக்காட்ட ரோபோவும் விரல் உயர்த்துகிறது.. நடந்ததை எல்லாம் அந்த காகம் மெல்ல தன் கண்களில் உள்ள காமிராவில் படம் பிடிக்கிறது..! ஆம் அது ஒரு ரோபோ காகம்.!

எல்லாவற்றையும் படம் பிடித்த காகம் மீண்டும் 360 டிகிரி மாட் ரிக்ஸ் ஷாட்டில் கிளம்பி போகிறது.! மீண்டும் யூயூயூயூயூவ்வ்வ் மியூசிக். பறந்து சென்ற காகம் காகங்களின் உலகிற்குள் நுழைகிறது (இதுவும் பிரம்மாண்டமான பல கோடி செட்) ஃபுல் பிளாக் கலரான அவ்வுலகில் காகத்தின் தலைவன் அமர்ந்திருக்க மற்ற பெண் காகங்கள் ஆடிப்பாடிக்கொண்டிருந்தன. (பாடல்:காதல் காகம் வருகிறதே ரெமோ)

பாடல் முடிந்ததும்.. காகத்தின் தலைவனிடம் ஒற்றன் ரோபோ காகம் எடுத்த படங்களை தன் டேப்லட்டில் காட்ட தலைவன் காகம் டன் என்கிறது. அடுத்து தலைவன் காகம் ஒரு போர்டு மீட்டிங் ஸ்டைலில் பிற ரோபோ காகங்களை அழைத்து அந்த வீடியோவை காட்ட ஆன்ட்டி லேசர் மாஸ்க் அணிந்து அவை எல்லாம் புறப்படுகின்றன.. மீண்டும் 360 டிகிரி மாட்ரிக்ஸ் ஷாட்டில்.!

பறந்து வந்த காகங்கள் தங்கள் பாட்டியின் மாளிகைக்கு வந்து லேசர் வளையத்தை தகர்த்து வடையை தூக்கிக் கொள்ள முயல பாட்டியின் ரோபோ தன் டெலிவரி ரோபாக்கள் படையுடன் அதை எதிர்க்க.. பீட்டர் ஹெய்ன் அமைத்த மயிர் கூச்செரியும் சண்டைக்காட்சி 10 நிமிடங்கள் நடக்கிறது.! முடிவில் காகங்கள் ஜெயித்து ஆளுக்கொரு வடையோடு அங்கிருந்து வெற்றியுடன் கிளம்புகின்றன.!

மயங்கி கிடந்த பாட்டி விழித்த போது வடை திருடு போனது தெரிந்து கதறி அழுது போலீசில் புகார் செய்ய சிபிஐ ஆபிசர் பிரகாஷ் நரி எண்ட்ரி ஆகிறது.! பாட்டிக்கு வடை கிடைக்குமா சிபிஐ நரியின் திட்டம் என்ன காகத்தின் உலகில் நரி நுழையும் கிராபிக்ஸ், ஹெலிகாப்டர் சேஸ், ரோபோ நரிகளின் அட்டாக், இவற்றோடு காகத்தின் மகளான எமி காக்சனுடன் டூயட் அனைத்தும் வெண்திரையில் காண்க.!

ஆஸ்காகார் பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் ஷங்கரின் வ.போ. (வடை போச்செ)
விரைவில்

Saturday, 7 February 2015

சாத்தமுது...

#சாத்தமுது_என்கிற_ரசம்சாதம்

ரசம்சாதம் சாப்பிட பிடிக்காதவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம்.. படித்தால் அது பிடித்துப் போகும் அபாயம் இருக்கிறது.. அட சொல்லச் சொல்ல என்ன பண்றிங்க.. சரி இனி நான் ஒன்றும் பண்ணமுடியாது... வாங்க என் கூட..

ரசம் சாதம் என்பது எனக்கு 3 வயதில் அறிமுகமானது (பாட்டி சொன்னது) வெங்கி ரசஞ்சாதம் சாப்பிடுறியா என்று கேட்டாலே என் முகத்தில் நவரசமும் மிளிருமாம்.! சூடான சாதத்தில் கொஞ்சம் தக்காளி அதிகம் போட்டு புளிப்பு லேசாக இருக்கும் ரசம் எனது ஃபேவரிட். அதிலும் சூடாக ரசஞ்சாதம் சாப்பிடுவதே திவ்யம்.

பருப்பு ரசம், மிளகு ரசம், தக்காளி ரசம், பூண்டு ரசம், எலுமிச்சை ரசம், கொத்தமல்லி ரசம், இப்படி பல ரசங்கள் என் வாழ்வின் சுவையான பரவசங்கள். பொதுவாக ரசம் சாதத்திற்கு உருளைக் கிழங்கு காரக்கறி/ பொரியல் இரண்டும் திகிரி தோஸ்த்து.! சுட்ட அப்பளம் ரசத்தின் தாய்.! பொரித்த வடாம்/ அப்பளம் காதலி.! 

கூட்டு என்பது ரசத்தை பொறுத்து தொட்டுக் கொள்ள சில காம்பினேஷன்கள் உள்ளது... எலுமிச்சை ரசம் என்றால் தக்காளி கூட்டு, மிளகு ரசத்திற்கு முட்டை கோஸ் பருப்பு கூட்டு, பூண்டு ரசத்திற்கு பூசணிக்காய் கூட்டு இப்படி சாப்பிட வேண்டும்.. எலுமிச்சை ஊறுகாயும் பிரமாதம் அது கார சாரர்களின் விருப்பம்.!

எனக்கு மாவடு சாறுடன் எல்லா ரசஞ்சாதங்களும் சாப்பிட மிகப் பிடிக்கும்.. அடுத்த இடத்தில் மாகாளி கிழங்கும் மாங்காய் தொக்கும்.! அப்பளம் வந்த பிறகு எனது மிக மிகப் பிடித்த உணவாகிப்போனது ரசம்.! பூண்டு மற்றும் மிளகு ரசங்களுக்கு அப்பளம் செம ஜோடி.! அரிசி வடாம், வெங்காய வடாம் எலுமிச்சை ரசத்திற்கு.!

அரிசி அப்பளம் தக்காளி ரசத்திற்கு.! அசைவம் சாப்பிட பழகிய பின் ஆம்லேட்டுடன் ரசம் சாதம் புது அனுபவத்தை தந்தது.!அதிலும் வெங்காயம் சோம்பு வத்தல் பொடி மசாலுடன் அவித்த முட்டை பிரட்டல் எங்க வீட்டு ஸ்பெஷல்.! பருப்பு சாதம் ரசம் அவித்த முட்டை மசால் எங்கள் வீட்டு வாரத்தில் ஒரு நாளாவது இருக்கும்.!

பருப்பு போட்டு ரசம் என்றால் முதலிடம் மிளகு ரசத்திற்கு.! அடுத்த இடம் பூண்டு ரசத்திற்கு.! சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு பருப்பு போட்டு பிசைந்து பிறகு ரசம் ஊற்றி சாப்பிட்டுப் பாருங்கள்.. இதைத்தான் தேவலோகத்தில் அமிர்தம் என்று அழைத்திருப்பார்கள் என்பீர்கள்.!அவ்வளவு ருசி.!

ரசம் சாதத்துடன் சாப்பிடத்தான் அப்பளம் கண்டுபிடிக்கப்பட்டது என்று யாரேனும் சொன்னால் நான் மறுக்காமல் ஒப்புக்கொள்வேன்.! ரசமும் அப்பளமும் அவ்வளவு இஷ்டம் எனக்கு. அதை விட ஒரு செளகரியம் சாதம் குழைந்து விட்டால் ரசம் அதகளம் தான்.. குழைந்த சாதத்தில் ரசம் என்றால் விசம் என்றாலும் சாப்பிடுவேன்.!

மதுரையில் குடியேறிய போது அங்கு எனக்கு துவையல் அறிமுகமானது.! கடலை பருப்பு துவையல், புதினா துவையல், இஞ்சி துவையல், பொட்டுகடலைத் துவையல் எல்லாமே ரசத்தின் காதலிகள் அதில் எலுமிச்சை ரசம் புதினா துவையல் பெஸ்ட் காதலர்கள்.! அதே போல பாகற்காய் பிட்லை தக்காளி ரசத்தின் ஆசை நாயகி.!

என் மனைவியை காதலித்த போது அவள் எனக்கு சாதம் வடிக்க மட்டுமே தெரியும் வேறு எதுவும் தெரியாதே என்ற போது.. நீ ரசம் வைக்க மட்டும் கற்றுக் கொள் ஆயுள் முழுவதும் அது போதும் எனக்கு என்றவன் நான்.. ( ஆனா இப்ப மேடம் சமையல் எக்ஸ்பர்ட்..! கேட்டரிங் படிச்சு முடிச்சு டிப்ளமோ வாங்கிட்டாங்க)

ரசத்தில் ஒரு ஸ்பெஷல் இதைத் தான் சூப்பாக குடிக்க முடியும்.. நீங்கள் சாப்பிடும் போது 2 கரண்டி ரசம் ஊற்றிக் கொள்கிற அதே அளவு சூடான குழைவான சாதத்தில் நான் 6 கரண்டி ஊற்றி தட்டெங்கும் அலையடிக்க பிசைந்து சாப்பிடுவேன்..!

அது என் வழக்கம்..! கூடவே அப்பளமும்.. அதிலும் கடைசியில் தட்டோடு எடுத்து வாய் வைத்து சுர்ர்ர்ன்னு உறிஞ்சிக் குடிக்கும் சுகம் இருக்கே... ஸ்ஸ்ஸ்ஸ் அப்பப்பா.. சொர்க்கம்.! அலோ எங்க ஓடுறிங்க ரசம் சாதம் சாப்பிடத்தானே..!

அ.கி.ப தொடர்.

அ.கி.ப.

#தமிழ்_அன்றும்_இன்றும் 22

அ.கி.பரந்தாமனார்...

ட - டகரம் சொல்லுக்கு முதலில் வாராது.. ஆனால் இது தமிழ்ச் சொற்களுக்கு மட்டுமே பொருந்தும். டங்கன் துரையை இடங்கன் துரை என்று எழுதலாமா? டயர் என்ற சொல்லை இடயர் என்று சொன்னால் பொருள் மாறாதா? டில்லி என்று எழுதாமல் இடில்லி என்று எழுதினால் என்ன பொருள் ஏற்படும்.?

டென்மார்க் என்னுஞ் சொல்லை இடென்மார்க்கு என்று எழுதினால் பொருள் மாறுபடாதா? பிறமொழிச்சொற்களை தமிழில் எழுதும் போது இ சேர்க்க தேவையில்லை ஏனெனில் அவர்கள் மொழியில் டகரம் சொல்லுக்கு முன் வரும். இதேபோலத்தான் ரகரமும் பிறமொழிகளில் முதல் எழுத்தாக வருகிறது.

தொன்று தொட்டு அரங்கநாதன்,இராமன், இராமாயணம் என்று எழுதுவதை நாம் இன்றும் மேற்கொள்வதில் தவறில்லை. ஆனால் எல்லாவற்றையும் அப்படி எழுத வேண்டுவதில்லை. ரதம் என்ற சொல்லை இரதம் என எழுத வேண்டுவதில்லை. ரப்பர் என்னும் சொல்லை இரப்பர் என்று எழுதினால் யாசிப்பர் என்றன்றோ பொருள் படும்.

லகரத்திலும் பிறமொழிச் சொற்கள் வரும் லங்காஷயரை இலங்காஷயர் என்று எழுதுவது தவறு. லூக்கா என்பதை உலூக்கா என்று எழுதினால் நன்றாயிராது. லூயிபிஷர் என்பதை உலூயிபிஷர் என்று எழுதுவது கூடாது. லட்டு என்பதை இலட்டு என்று எழுதுவது நன்றாக இருக்காது.

ஆகவே பிறமொழி சொற்களுக்கும் புதிய சொற்களுக்கும் இகரம் அகரம் பெய்து எழுதுவது தவறு. நம் பழைய சொற்களுக்கு மட்டுமே அதை பயன்படுத்தலாம். 
(மீண்டும் நாளை..)


#தமிழ்_அன்றும்_இன்றும் 23

அ.கி.பரந்தாமனார்...

போலி ( Interchange of Letters ) ஒரு சொல்லில் இயல்பாய் இருக்கும் எழுத்துக்கு ஈடாக மற்றொரு எழுத்து வந்து அந்த பொருள் வேறுபடாது  நின்றால் அவ்வெழுத்து போலி எழுத்து எனப்படும். இது தமிழ்ச் சொல்லில் மட்டுமே வரும். 

இதை எளிமையாக விளக்க ஒரு உதாரணம்..(வெங்கடேஷ் ஆறுமுகத்தின்)

தினசரி பார்க்கும் டிவி சீரியல்களில் பல எபிசோடுகள் நடித்து மக்கள் மனதில் பதிந்த சில நடிகையையோ நடிகரையோ திடீர் என மாற்றிவிட்டு அவருக்கு பதில் இவர் என்று கார்டு போட்டு மாற்றிவிடுவார்கள்.. 

அன்றிலிருந்து அவர் ஏற்கனவே நடித்தவரின் அதே பாத்திரத்தை தொடர்வார்.. இந்த வேறுபாட்டால் கதை ஒன்றும் மாறாது அர்த்தத்தை புரிந்து கொள்வோம் அல்லவா.! சினிமாவில் ஹீரோக்களுக்கு போடும் டூப்பை கூட இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். போலி எழுத்து என்பது இப்போது புரிந்திருக்கும்.(ஓவர் டூ அ.கி.ப.)

போலி மூவகைப்படும் அவை முதற்போலி, இடைப்போலி, கடைபோலி என்பவை. 

1(முதற்போலி Initial Interchange) சொல்லுக்கு முன் ந"கரத்துக்கு ஞ"கரம் போலியாக வரும். நாயிற்றுக்கிழமை - ஞாயிற்றுக்கிழமை. நயம்பட உரை - ஞயம் பட உரை. சொல்லுக்கு முதலில் ஒள"க்கு போலியாக அவ்" வரும். ஐ"காரத்தித்திற்கு அய்"போலியாக வரும்.. ஐயன் - அய்யன்

இனி மற்ற போலிகளை நாளை காண்போம்..


#தமிழ்_அன்றும்_இன்றும் 24

அ.கி.பரந்தாமனார்...

 
(இடைப்போலி Medial Interchange) 

சொல்லுக்கு இடையில் அ"கரத்திற்கு ஐ" போலியாக வரும். அரயன் (அரசன்) - அரையன். 

(கடைப்போலி Final Interchange) சில சொற்களின் இறுதியில் ம்" என்னும் எழுத்துக்கு"ன்" போலியாக வரும்... நலம் - நலன். அறம் - அறன் 

(இதுவே புலம் - புலன் என்று எழுதும் போது அர்த்தம் மாறுவதை கவனிக்கவும் போலியில் அர்த்தம் மாறக்கூடாது.)

சில சொற்களின் இறுதியில் உள்ள ல்" என்னும் மெய்யெழுத்துக்கு ர்"எனும் எழுத்து போலியாக வரும்.. குடல் - குடர், பந்தல் - பந்தர், சாம்பல் - சாம்பர், சுவல் - சுவர். சில சொற்களின் இறுதியில் ல்" எனும் எழுத்துக்கு ஈடாக ள்" எனும் எழுத்து போலியாக வரும்.. மதில் - மதிள், செதில் - செதிள்.

இச்சொற்களை இரு வகையாக எழுதினாலும் தவறில்லை.. இதற்காகவே போலியைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.. (மீண்டும் நாளை...)


#தமிழ்_அன்றும்_இன்றும் 25

அ.கி.பரந்தாமனார்...

போலிகளை பற்றி தெரிந்து கொண்டோம்.. இதில் இருவகையாக எழுதக்கூடிய வார்த்தைகளுக்கும் எழுதக்கூடாத வார்த்தைகளுக்கும் உதாரணம்... இருவகையாக எழுதக்கூடிய வார்த்தைகள் : கறுப்பு - கருப்பு, சிவப்பு - சிகப்பு, குடல் - குடர், மதில் - மதிள், செதில் - செதிள், ஐயர் - அய்யர், அவ்வையார் - ஒளவையார்.

எழுதக்கூடாத வார்த்தைகள் : வரட்சி - வறட்சி, அக்கரை - அக்கறை, சில்லரை - சில்லறை, நிலயம் - நிலையம், வேண்டா - வேண்டாம்.

கருமை - பண்புச்சொல்.. கறுப்பு - பெயர்போலி ஆகவே இரண்டும் உபயோகிப்பதில் தவறில்லை. வரட்சி வறட்சி என்பவை அகராதியில் காணப்படினும் வறட்சி என எழுதுவதே மொழி நூற்படி பொருத்தமாகும்.அக்கரை அக்கறை என்னும் சொற்களின் அர்த்தம் வேறு.. அக்கறை என்பது கன்னடச்சொல்.!

சில்லரை சில்லறை என்னும் சொற்களில் சில்லறை என்று எழுதுவது நலம்.. சில்லறை என்பது தெலுங்குச் சொல்.! (சிலவாக அறுத்தல் என்பது பொருள்) நிலயம் நிலையம் இவற்றுள் நிலையம் என்று எழுதுவதே சிறந்தது. வேண்டாம் என்பது தவறாயினும் இன்று அது ஒப்புக்கொள்ளும் நிலையை அடைந்து விட்டது.

வேண்டாவாம் என்பதே வேண்டாம் என மருவிற்றுப்போலும். பழமை என்பதை விட பழைமை என எழுதுவது சிறப்பு.பழமை என்னும் சொல்லின் வடிவம் பழைமை ஆகும். எனினும் பழமை எனும் சொல்லே பெரு வழக்காக வழங்கி வருகிறது. இது மரூஉ.

நாம் அன்றாடம் எழுதும் சொற்களில் பிழையானது எது.? திருத்தமானது எது.? நாளை அதை காணலாம் (வரும்)


#தமிழ்_அன்றும்_இன்றும் 26

அ.கி.பரந்தாமனார்...

கீழே பலர் அடிக்கடி செய்யும் எழுத்துப் பிழைகளுக்குத் திருத்தங்கள் தரப்பட்டுள்ளன:

#பிழை.                       #திருத்தம்.

அடமானம்                    அடைமானம்.
அடமழை                      அடைமழை
அனியாயம்                    அநியாயம்
அருவெறுப்பு                  அருவருப்பு
இராமனாதபுரம்             இராமநாதபுரம் 
இடது பக்கம்                 இடப்பக்கம்
உத்திரவு                        உத்தரவு
உடமை                          உடைமை
ஊரணி                           ஊருணி
எண்ணை (Number)        எண்ணெய் (Oil)
எல்லோரும்                    எல்லாரும்
ஏமாந்து போனான்          ஏமாறிப் போனான்
ஒருவள்                          ஒருத்தி
கத்திரிக்கோல்               கத்தரிக்கோல்
கர்ப்பூரம்                        கருப்பூரம்
குத்துதல் (நெல்)             குற்றுதல்
கோர்த்தான் (முத்து)        கோத்தான்
கோடாலி                        கோடரி
சம்மந்தன்                       சம்பந்தன்
சம்பாரித்தான்                 சம்பாதித்தான் 

செய்யுளில் மட்டுமே எல்லாரும் என்பது எல்லோரும் என்று வரும். உரைநடையில் எல்லாரும் என்று எழுதுவதே சிறப்பானது. ( மீண்டும் நாளை வரும்..)


#தமிழ்_அன்றும்_இன்றும் 27

அ.கி.பரந்தாமனார்...

#பிழை                                    #திருத்தம்

சித்தரிக்கிறாள்                        சித்திரிக்கிறாள்
சுவற்றில்                                 சுவரில்
சித்தரம்                                  சித்திரம்
சோத்துப்பானை                     சோற்றுப்பானை
திரேகம்                                  தேகம்
துகை                                     தொகை
துளிர்                                      தளிர்
துவக்கம்                                 தொடக்கம்
துடங்கிவத்தார்                       தொடங்கிவைத்தார்
தொந்திரவு                             தொந்தரவு
தோற்கடித்தான்                      தோல்வியுற அடித்தான்
நாகரீகம்                                 நாகரிகம் 
நாத்தம்                                   நாற்றம்
பண்டகசாலை                        பண்டசாலை
பீத்தல்                                     பீற்றல்
புத்து                                       புற்று
புண்ணாக்கு                            பிண்ணாக்கு
புணையம்                               பிணையம்
புழுக்கை                                பிழுக்கை
பூசிணிக்காய்                          பூச்சுணைக்காய்
மண்எண்ணை                         மண்எண்ணெய்
முழுங்கு                                  விழுங்கு
மெள்ள                                   மெல்ல
மென்மேலும்                           மேன்மேலும்

இங்கே தமிழ்ச்சொல் வட சொல் பாராமல் பிழையாக எழுதும் சொற்களுக்கு திருத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. (மீண்டும் நாளை வரும்...)


#தமிழ்_அன்றும்_இன்றும் 28

அ.கி.பரந்தாமனார்...

#பிழை                                    #திருத்தம்

மோவாக்கட்டை                    முகவாய்க்கட்டை
வயறு                                     வயிறு
வரட்சி                                   வறட்சி
வரவுசிலவு                              வரவு செலவு
வினாயகர்                              விநாயகர் 
வெய்யில்                                வெயில்
வென்னீர்                                வெந்நீர் 
வைக்கல்                               வைக்கோல்
அருகாமை                            அருகண்மை,அருகில்
இன்னாளில்                          இந்நாளில்
ஈர்க்குளி                                ஈர்கொல்லி
எல்கை                                  எல்லை
கிடாய்                                   கடா
கம்மனாட்டி                           கைம் பெண்டாட்டி
வருவல்                                  வறுவல்
குத்துயிர்                                குற்றுயிர்
குருக்குத்தெரு                       குறுக்குத்தெரு
கெவுளி                                  கெளளி
கைமாத்து                              கைம்மாற்று
சிலது                                      சில
சீயக்காய்                                சிகைக்காய்
தேனீர்                                     தேநீர்
நோம்பு                                    நோன்பு
பெரிசு                                     பெரிது
முந்தாணி                                முன்தானை
வல்லுனர்                                வல்லுநர்
வெங்கலம்                               வெண்கலம்
விரை                                      விதை
மேநாடு                                   மேனாடு (மேல் + நாடு)
வெத்திலை                              வெற்றிலை
மார்வலி                                   மார்பு வலி
வேர்க்குரு                                வேர்க்குறு

நாளை இருவகையாய் எழுதும் சொற்களைப் பார்க்கலாம்.. (வரும்..)


#தமிழ்_அன்றும்_இன்றும் 29

அ.கி.பரந்தாமனார்...

இருவகையிலும் எழுதும் சொற்கள் : சுருசுருப்பு - சுறுசுறுப்பு, பவழம் - பவளம், துளை - தொளை, வியர்வை - வேர்வை, கோவில் - கோயில், யாண்டு - ஆண்டு, யார் - யாவர்,ஆர், யாறு - ஆறு, யானை - ஆனை, சாம்பல் - சாம்பர், பொழுது - போது, போழ்து, எமன் - யமன் கருப்பூரம் - கற்பூரம்.

ரி" மற்றும் றி" குழப்பம் தீர ஒரு எளிய வழி... பெரிய என்னும் சொல்லில் சிறிய ரி" இருக்கும் சிறிய என்னும் சொல்லில் பெரிய றி" இருக்கும் இதை நினைவில் வைத்துக்கொண்டால் தவறு வருமோ.? வாராதே.! நீக்ரோ என்னும் சொல்லை தமிழில் கறுப்பர்,கரிய நிறத்தினர், கரு நிறத்தவர்,என்றே எழுதவேண்டும்.!

கருப்பர் என்று எழுதுவது பிழையாகும். குறிலுக்கும் நெடிலுக்கும் ஒரே பொருள் தருவனவும் உண்டு. அங்கு,ஆங்கு - இவ்விரண்டும் அவ்விடம் எனும் பொருளையே தருவன. இங்கு,ஈங்கு - இவ்விரண்டும் இவ்விடம் என்னும் பொருளையே தரும். ஓர் எழுத்துக்கு மாறாக மற்றோர் எழுத்தை எழுதினால் பொருளே மாறுபடும்.

அறை என்பதற்கு மாறாக அரை என்றெழுதினால் பொருள் மாறுபடாமல் இருக்குமா? ஆதலால் பொருளுக்கு ஏற்றவாறு எழுத்தறிந்து எழுத வேண்டும். எழுத்து வேறுபாடு அறிவதற்கு உதவி செய்யும் சொற்களை நாளை காண்போமா.?! 

மீண்டும் நாளை.... (வரும்...)


#தமிழ்_அன்றும்_இன்றும் 30

அ.கி.பரந்தாமனார்... #ரகர_றகர_வேறுபாடுகள்

அரம் - ஒரு கருவி, அறம் - தருமம், உரை - சொல், உறை - தலையணை உறை, அஞ்சலுறை, அரன் - சிவன், அறன் - தருமம், எரி - தீ, எறி - வீசு, அரி- வெட்டு, விஷ்ணு, ஏரி - நீர்நிலை, ஏறி - மேலே போய், அரை - மாவாக்கு, பாதி, அறை - வீட்டுப்பகுதி,கன்னத்தில் அடி, ஒரு - ஒன்று ஒறு - தண்டி, ஆர - நிறைய (வயிறாற) ஆற - சூடு குறைய, கரி - யானை,அடுப்புக்கரி, கறி - காய்கறி, இறைச்சி.

இரை - தீனி, இறை - அரசன்,கடவுள்,வரி,நீர் இறை, சீரடி - சீர்மையுடைய அடி, சீறடி - சிறிய அடி, சொரி - பொழி, சொறி - தினவு, கரையான் - வலைஞன், கறையான் - வெள்ளெறும்பு, துரவு - பெருங்கிணறு (தோட்டம் துரவு நினைவில் கொள்க) துறவு - துறந்துவிடுதல், குரவர் -பெரியோர், குறவர் - குற சாதியினர், துரை - பிரபு, துறை - நீர் நிலையில் இறங்குமிடம் (படித்துறை, பரிசல் துறை)

நரை - வெண்மயிர், நறை - வாசனை, நிரை - பசு,வரிசை, மந்தை, நிறை - எடை,  திருப்தி, பரவை - கடல், பறவை - பட்சி, பிரை - உறை, பிறை - கீற்று, புரம் - நகரம், புறம் - பக்கம்,கிராமம், மாரன் - மன்மதன், மாறன் - பாண்டியன், பெரு - பெரிய, பெறு - அடை,வாங்கு, விரகு - தந்திரம், விறகு - மரத்துண்டு, பொருப்பு - மலை, பொறுப்பு - உத்திரவாதம் பொரி - நெற்பொரி, பொறி - எந்திரம். 

மருப்பு - யானைத்தந்தம், மறுப்பு - மறுத்துப்பேசுதல், மரம் - விருட்சம், மறம் - வீரம் மருகன் - வழிவந்தோன், மருமகன் - மாப்பிள்ளை, மறுமகன் - வேறுமகன்.

நாளை லகர ளகர ழகர வேறுபாடுகள்.. (வரும்...)


#தமிழ்_அன்றும்_இன்றும் 31

அ.கி.பரந்தாமனார்... #லகர_ளகர_ழகர_வேறுபாடுகள்

உலவு - சுற்றி வா, உளவு - வேவு பார்த்தல், உழவு - பயிர்த்தொழில், ஒலி - சப்தம், ஒளி - வெளிச்சம், ஒழி - நீக்கு, வலி - நோய், வளி - காற்று, வழி - பாதை, வால் - கடைப்பகுதி உறுப்பு, வாள் - கத்தி,ரம்பம், வாழ் - வாழி, விலா - விலாஎலும்பு, விளா - விளாமரம், விழா - திருவிழா, மூலை - ஓரம், மூளை - உடலுறுப்பு, மூழை - அகப்பை,கரண்டி, தால் - நாக்கு, தாள் - காகிதம்,கால்,முயற்சி, தாழ் - தாழ்வடை.

#லகர_ளகர_வேறுபாடுகள்

குலம் - சாதி, குளம் - நீர்நிலை, கொல் - கொன்று விடு, கொள் - பெறு, சூல் - கர்ப்பம், சூள் - சபதம், நால் - நான்கு, நாள் - தினம், புல் - தாவரம், புள் - பறவை, விலக்கு - நீக்கு, விளக்கு - விவரி, ஒளி தரும் தீபம், வேல் - ஆயுதம், வேள் - மன்மதன், அரசன், வேலை - தொழில், வேளை - பொழுது, காலை - பொழுது, காளை -எருது, கோல் - கம்பு, கோள் - கலகம், கிரகம்.

#னகர-ணகர_வேறுபாடுகள்

அன்னாள் - அவள், அந்நாள் - அந்த நாள், அன்னம் - பறவை, அண்ணம் - வாயின் மேற்பகுதி, ஆண் - ஆடவன், ஆன் - பசு,சுண்ணம் - வாசனைப்பொடி, சுன்னம் - சுழி,  தன் -தனது, தண் -குளிர்ச்சி, உண்ணல் - புசித்தல், உன்னல் - நினைத்தல், ஊன் - மாமிசம், ஊண் - உணவு, கான் - காடு, காண் - பார்,

 மான் - விலங்கு, மாண் - சிறப்பு,கன்னன் - கர்ணன், கண்ணன் - கிருஷ்ணன், வன்மை - வலிமை, வண்மை - வள்ளல்தன்மை. இவ்வேறுபாடுகளை அறிந்தால் ஒருவர் எழுத்துப்பிழையின்றி எழுதலாம் என்பது உறுதி. 

நாளை நம் தமிழின் முக்காலமும் பார்க்கலாமா.?!  மீண்டும் நாளை... (வரும்...)



#தமிழ்_அன்றும்_இன்றும் 32

அ.கி.பரந்தாமனார்...

தமிழில் பன்னெடுங்காலமாக இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று காலங்களே சொல்லப்பட்டு வருகின்றன. ஆங்கிலத்தில் காலவேறுபாடுகள் காட்டும்  சொற்கள் இருப்பது போல தமிழ் இலக்கணங்களில் கூறப்படவில்லை. ஆனால் கால வேறுபாடுகள் காட்டும் சொற்கள் உண்டு என எழுதியுள்ளார்கள் இரு தமிழறிஞர்கள்.

வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார் (பரிதிமாற்கலைஞர்) தமது "தமிழ் மொழி வரலாறு"நூலிலும், டாக்டர் மு.வரதராசனார் தமது  "மொழி நூலிலும்"  இறப்பு, இறப்பில் இறப்பு, இறப்பில் நிகழ்வு, இறப்பில் எதிர்வு, தொடரும் இறப்பு எனவும் நிகழ்வு, தொடரும் நிகழ்வு, எனவும் எதிர்வு, தொடரும் எதிர்வு எனவும் கால வேறுபாடுகளைக் காட்டியுள்ளார்கள். இதோ அந்த உதாரணங்கள்...

#இறந்த_காலம் 
எழுதினான் - இறப்பு, எழுதிவிட்டான்/எழுதியுள்ளான் - இறப்பில் இறப்பு, எழுதியிருக்கிறான் - இறப்பில் நிகழ்வு, எழுதியிருப்பான் - இறப்பில் எதிர்வு, எழுதிக் கொண்டிருந்தான் - தொடரும் இறப்பு.

#நிகழ்காலம்
எழுதுகிறான் - நிகழ்வு, எழுதிக் கொண்டிருக்கிறான் - தொடரும் நிகழ்வு.

#எதிர்காலம்
எழுதுவான் - எதிர்வு, எழுதிக் கொண்டிருப்பான் - தொடரும் எதிர்வு

இதில் பரிதிமாற்கலைஞர் நிகழ்வு மூன்று (நிகழ்வில் நிகழ்வு) எதிர்வு ஒன்றே என்று எழுதியிருக்கிறார்.. மு.வ அவர்களே நிகழ்வு 2 எதிர்வு 2 என "எழுதியுள்ளார்" (எழுதியுள்ளார் என்பது இறப்பு)

இவ்வாறு துணை வினைகளை பயன்படுத்துவதால் வினைச் சொற்களின் கால வேறுபாடுகள் தோன்றுவதை காணலாம். (மீண்டும் நாளை...)