Sunday, 21 February 2016

ஹலோ அமெரிக்கா - 8

#அமெரிக்கவாழ்க்கையும்_தமிழர்களும்

பார்ட் - 8

அமெரிக்காவில் நம்ம ஊரு போல.. நந்தனம் சிக்னல் தாண்டி சைதாபேட்டை பிரிட்ஜ் வழியா ராஜ்பவன் வந்து அப்படியே ரைட்டுல திரும்பி வேளச்சேரி மெயின் ரோட்டை பிடிச்சு இப்படியெல்லாம் வழி சொல்ல முடியாது. அங்கு எப்படி தெரியுமா.? சுரேஷ் எங்க இருக்கிங்க.? ஏர்போர்ட்டுல இருந்து கிளம்பிட்டிங்களா.. ஓ.கே நைன்ட்டி போர்ல வந்துட்டே இருங்க.. அதுல இருந்து எக்ஸிட் 9 எடுத்து எய்ட்டி டூக்கு மாறுங்க அதுல வரும் போது எக்ஸிட் டென் ஏ டென் பி விட்டுட்டு டென் சியில் எக்ஸிட் எடுங்க ரைட்ல கேஸ்ஸ்டேஷன் பக்கத்துல வாங்க அங்க வால்க்ரீன்ஸ் கிட்ட நிக்குறேன்.

அங்கு சாலைகளுக்கு எல்லாம் எண்கள் அதே போல எக்ஸிட்டுகளில் சரியாக வெளியேற வேண்டும்.. ஒரு எக்ஸிட் விட்டாலும் சர்க்கஸ் கூண்டுக்குள் சுற்றும் சாகச வீரனைப் போல சுற்றிக் கொண்டே இருப்பீர்கள். சாலை விதிகளில் அவ்வளவு துல்லியம்.. ஒரு தவறு செய்தாலும் போச்சு..அமெரிக்கர்கள் பயப்படும் ஒரு சொல் டிக்கெட்..! போலீசாரால் கொடுக்கப்படும் இந்த டிக்கெட்டை மூன்று முறை பெற்றுவிட்டால் போச்சு.

லைசென்ஸ் பறிமுதல் சிறிது காலம் வண்டி ஓட்டத்தடை மீண்டும் புதிதாக விண்ணப்பித்து லைசென்ஸ் பெற்று மறுபடியும் முதல் புரோட்டாவில் இருந்து வரணும்..ஆகவே எச்சரிக்கையாக இருக்கிறார்கள். ஸ்டாப் போர்டு என்னும் ஒரு போர்டு இருக்கிறது ரெசிடன்சியல் ஏரியாவில் 100 அடிக்கு ஒன்று என்னும் வீதம் அந்த பலகை இருக்கும் சிவப்பு பின்னணியில் வெள்ளை எழுத்துகள் உள்ள போர்டு இதன் அருகே வந்து சில நொடிகள் வண்டியை நிறுத்திவிட்டு பிறகு மெல்ல மெல்ல நகர வேண்டும்  பகலில் மட்டுமல்ல..

இரவு 12 மணிக்கு சாலையில் யாரும் இல்லாதபோதும் அதை கடை பிடிக்கிறார்கள்.. அவ்வளவு துல்லியம் நீங்கள் அதிவேகமாக ஓட்டினாலும் விரட்டி வந்து டிக்கெட் தந்துவிடுவார்கள்..கிரிக்கெட்டில் விக்கெட் விழாதது எவ்வளவு முக்கியமோ அதே அளவு இங்கு டிக்கெட் விழாதது மிக முக்கியம். இங்கு எல்லா கார்களுக்கும் நம்பர் ப்ளேட்டில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பர். அதை ஸ்கேன் செய்தால் உங்கள் ஜாதகம் அப்படியே வந்துவிடும்.
 
சாலையில் ஒரு விபத்து என்றால் சைடில் உள்ள எமெர்ஜென்சி ரோட்டில் ஆம்புலன்ஸ் போலீஸ் வரும் அந்த நேரத்தில் அந்த ரோட்டை அடைத்து விடாமல் எல்லாரும் வரிசையாக நிற்கிறார்கள் அந்த ஒழுங்கு நம் ஊரில் எல்லாம் சாத்தியமே இல்லை.. ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரும் இருப்பதால் துரித கதியில் முதலுதவியும் கிடைக்கிறது போக்குவரத்தும் சில நிமிடங்களில் சீர்படுத்தப்படுகிறது.. இது போன்ற தாமதங்களை அலுவலகங்கள் மறு கேள்வி கேட்காது ஏற்றுக் கொள்வதால் யாருக்கும் அவசரம் இல்லை.. ரிலாக்சாக இருக்கிறார்கள்.

மேலும் காரில் எலக்ட்ரானிக் சிப்புகள் பொருத்தப்பட்டு இருக்கும்.. அது நீங்கள் வண்டி ஓட்டும் முறையை பதிவு செய்து கொண்டே இருக்கும் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் சென்று ஓட்டி விபத்தாகி விட்டால் தவறு எதுவென்று துல்லியமாக காட்டிக் கொடுத்துவிடும்.. தவறு நம் மீது என்றால் இன்சூரன்ஸ் கிடைக்காது. அமெரிக்காவில் இன்சூரன்ஸ் மிக மிக முக்கியம்.

அதுபற்றி அடுத்த பதிவில்...

வரும்...

ஹலோ அமெரிக்கா - 7

#அமெரிக்க_வாழ்_தமிழர்கள்

பார்ட் - 7

பீரோ உயரத்தில் டபுள் டோர் ரெஃப்ரிஜிரேட்டர் மைக்ரோவேவ் ஓவன் இது இரண்டும் இல்லாத ஒரு அமெரிக்கத் தமிழரின் வீட்டைக் காட்டினால் அவர்களுக்கு ஒரு ரோல்ஸ்ராய்ஸ் கார் பரிசு தருகிறேன் என தாராளமாக அறிவிக்கலாம். பரிசு யாருக்கும் போகாது.. மெகா சைஸ் டிவி ஹோம் தியேட்டர்... சிட் அவுட்டில் க்ரில் சிக்கன் அடுப்பு, பியானோ, பில்லியர்ட்ஸ் & டேபிள் டென்னிஸ் இதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் நாங்கள் பார்த்தவை.

சகல வசதிகளுடன் அழகான மாடுலர் கிச்சன்.. வீட்டில் மல்டிபர்ப்பஸ் சீலிங் ஃபேன்.. இது இரண்டு விதமாகவும் சுற்றும் அதாவது நம்ம ஊர் போல சுற்றி காற்றை வீசும் எதிர்புறமாக சுற்றி காற்றை உறிஞ்சும்.. அதேபோல கேஸில் எரியும் கணகண அடுப்பு.. முக்கியமாக வீட்டு சீதோஷ்ண நிலையை குளிரவோ வெப்பமூட்டவோ செய்யும் சாதனம் இவெயெல்லாம் உண்டு. அமெரிக்கர்களுக்கு தின வாழ்வில் மிக மிக முக்கியமானது எது தெரியுமா.? 

வானிலை அறிக்கைதான்.! ஆமாம் தினமும் சாட்டிலைட்டுகள் கண்காணித்து துல்லியமாக கூறும் வானிலை அறிக்கைக்கு ஏற்றபடி தான் ஆடைகள் அணிகிறார்கள்.. வீட்டு சீதோஷணத்தை கட்டுப்படுத்துகிறார்கள், தங்கள் போக்குவரத்தை தீர்மானிக்கிறார்கள். நம்ம ஊர் போல மழை பெய்தாலும் பெய்யலாம் போன்ற வழ வழ விளக்கெண்ணெய் வெண்டைக்காய் அறிவிப்பு அங்கு ஆகாது.. ஒரு சிலரையாவது சாலையில் குடையுடன் பார்த்துவிட்டால்..நிச்சயம் மழை பெய்யும் என அறிந்து கொள்ளலாம். மழையும் பெய்யெனப் பெய்கிறது.

வானிலை அறிவிப்புக்கு ஏற்ப வாழும்  வகையில் அவர்களது வாழ்க்கை பழகி விட்டிருக்கிறது.. அதே போல வெளியே அலுவலகம் செல்ல காரில் ஏறியதும் இக்னீஷியனை ஆன் செய்கிறார்களோ இல்லையோ அதற்கு முன்  ஜி.பி.எஸ். கருவியை ஆன் செய்து விடுகிறார்கள்.. அது துல்லியமாக வழி காட்டுகிறது.. தினமும் போகும் அதே பாதை தானே இதுக்கு எதுக்கு ஜி.பி.எஸ்.? உங்கள் கேள்வி நியாயம் தான் ஆனால் அமெரிக்க சாலைப் போக்குவரத்து கொஞ்சம் கடுமையானது சிக்கலானது ஆனால் கட்டுக்கோப்பானது.

அது பற்றி தெரிந்து கொள்ளலாம் அடுத்த பதிவில்...

வரும்...


ஹலோ அமெரிக்கா - 6

#அமெரிக்க_வாழ்_தமிழர்கள்

பார்ட் - 6

முதலில் ஒரு ரிசப்ஷன் அறை, பெரிய ஹால் அதனை ஒட்டி டைனிங் ஹால்  அப்படியே எதிரே ஒரு பெரிய மரபால்கனி அல்லது சிட் அவுட்.. டைனிங் ஹால் முடியும் இடத்தில் மாடுலர் கிச்சன் கிச்சனுக்கு இடது புறம் ஸ்டோர் ரூம், வாஷிங்மெஷின் ரூம் எதிர்புறம் டாய்லெட் அப்படியே கார் ஷெட்டுக்கு போக ஒரு கதவு.. மாடியில் 4 படுக்கையறைகள்.. விருந்தினருக்கென்றே 2 அவர்கள் உபயோகத்திற்கு 2 இதுதான் பெரும்பாலும் எல்லார் வீட்டிலும் உள்ள அமைப்பு.

வீட்டு அமைப்பில் கொஞ்சம் அளவுகள் வேண்டுமானால் மாறுபடலாம் மற்றபடி வீட்டை சுற்றி வேலி அழகான புல்வெளி விளையாட வசதி என ஸ்பேஸ் விட்டு கட்டப் பட்டிருக்கும்.அபார்ட்மெண்ட் வீடுகளில் இந்த வசதி இல்லை இருப்பினும் முதலில் அங்கு வாழ்ந்தவர்கள் தான் இது போல வீடு வாங்கி வரிகட்டி இன்சூரன்ஸ் கட்டி டொர்னாடோவை விட சக்தி வாய்ந்த அமெரிக்க வாழ்க்கை என்னும் சுழலுக்குள் அமுங்குகிறார்கள். மின்சாரம் நெட் இரண்டும் அளவில்லாத அளவு தங்கு தடையின்றி கிடைக்கிறது.

கார் காரேஜில் ஸ்டோர்ரூம் உண்டு. அண்டர் கிரவுண்ட் இருக்கும் வீடுகளில் கீழேயும் இருக்கும். காரை எடுக்கும் போதே டிரைவர் சீட்டுக்கு மேலே இருக்கும் ரியர் வியூ மிரரில் உள்ள ரிமோட்டை அழுத்தினால் அலிபாபா குகை போல கதவு மேலேறுகிறது.. இரண்டு கார்கள் நிற்கும் அளவு பெரிய காரேஜ்.. அதன் வழியாக வீட்டிற்குள் போகவும் வசதி இருக்கிறது. தனிக்கதவும் உண்டு.பனிக்காலத்தில் பெரும்பாலும் வாசல் கதவு  இதுவே.மெயின் வாசலை பயன்படுத்துவது குறைவு. 

வெளியே உறைபனி பெய்ய அதற்குள் கால் வைத்து வீட்டிற்குள் புழங்காது காரேஜ் வழியாக உள்ளே செல்வதே உகந்தது. வீட்டுக்கு எதிரே புல்வெளி பல வீடுகளில் உண்டு சில வீடுகளில் பேஸ்கட் பால் போஸ்ட்டும் இருக்கும்.. இங்கெல்லாம் பெய்யும் பனியை நாம் தான் சுத்தப்படுத்த வேண்டும் சாலையில் உள்ள பனியை மட்டும் தான் நகராட்சி எடுக்கும். வீட்டின் வெளிப் புறத்தை அவ்வளவு சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

வீட்டில் திராஷ் என்னும் மெகா குப்பைத்தொட்டிகள் உண்டு அவற்றிற்குள் குப்பைகளை கொட்டி வாரா வாரம் குறிப்பிட்ட நாளில் வரும் குப்பை வண்டியில் போடவேண்டும் அல்லது அவர்கள் எடுத்துச் செல்வார்கள்.. குப்பையை கண்ட இடங்களில் போட முடியாது.. குப்பைத் தொட்டியும் மட்கும் மட்காத என இருவகைகளாக பிரிக்கப்பட்டு இருக்கும். அதற்கு ஏற்றபடி பிரித்து போடவேண்டும். குப்பைகளைக் கொட்ட வேறுவழியே இல்லை.

அமெரிக்கா வாழ் தமிழர்களின் வீட்டில் காணப்படும் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் வானிலை அறிக்கை பற்றி அடுத்த பதிவில்..

வரும்..

ஹலோ அமெரிக்கா - 5

#அமெரிக்க_வாழ்_தமிழர்கள்

பார்ட் - 5

அமெரிக்காவில் வீடுகள்.. பெரும்பாலும் நம் ஆட்களை அங்கேயே கட்டிப் போடுவது இந்த சொந்த வீடுகள் தான்.. இங்கு வீடு வாங்கிவிட்டால்  அந்த ஈ.எம்.ஐக்காவே வாழ்ந்து கடினமாக  உழைத்து அதை அடைத்து முடியும் போது இதை விட்டுட்டு எப்படி போக என அவர்கள் வாழ்க்கை அங்கேயே பிடித்து வைக்கப்படுகிறது. அமெரிக்காவில் இடம் வாங்குவது பெரிய விஷயமே இல்லை ஒரு ஏக்கர் இடமே 30 இலட்சத்துக்கு கிடைக்கிறது.

நிலம் விலை உயரும் என்பது போல கான்செப்டுகள் ஒரு சில இடத்தில் தான் மற்றபடி 30 இலட்சரூபாய் இடத்தை 10 வருடம் கழித்தும் அதே விலைக்குதான் விற்கமுடியும். சரி இடம் வாங்கியாச்சு வீடு கட்டுவது.. அமெரிக்காவில் வீடு கட்டுவதற்கு பதில் ஐந்து பெண்டாட்டிகளை கட்டி விடலாம். சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம்ன்னு ஒரு பழமொழி கேள்விப் பட்டு இருப்பிங்க அது இதுக்கு சரியாகப் பொருந்தும்.

30 இலட்சரூபாய்க்கு இடம்.. 1 கோடி ரூபாய்க்கு கட்டுமானப் பொருட்கள் சரி அவ்ளோ தானேன்னு கேட்டா கட்டுமான கூலி இருக்கே அது 1.5 கோடி ரூபாய்.. அதாவது 1 கோடி ரூபாய்க்கு ஒன்றரை கோடி ரூபாய் கூலி. இது பட்ஜெட்டுக்கு ஏற்றபடி மாறுபடும்.. வீடுகள் பெரும்பாலும் மரத்தில் தான் கட்டப்படுகின்றன 3 அல்லது 4 மாதத்தில் வீடு கட்டப்படுகிறது. வேறிடத்தில் வீட்டை செய்து கொண்டு வந்து பொருத்தும் சிஸ்டமும் இருக்கிறது.

அமெரிக்காவின் சில பகுதிகளில் டொர்னாடோ எனும் சுழல் காற்று அபாயம் உண்டு மணிக்கு 70 மைல் வேகத்தில் சுழல் காற்று சர்வசாதாரணமாக அடிக்கும்.. தொப்பியை கழட்டுவது போல கூரைகளை அடித்து போய்விடும் அந்த ஊர்களில் மட்டும் மரவீடுகளின் அண்டர்கிரவுண்ட் காங்க்ரீட் சுவர்களால் எழுப்பப்பட்டிருக்கும். குளிர் தாங்க வேண்டும் பெய்கின்ற பனிப் பொழிவைத் தாங்கவேண்டும் சரி பனியில் நனைந்தால் மரம் ஊறிவிடாதா? நியாயமான கேள்வி ஆனால் இங்கிருக்கும் மரங்கள் அப்படிப்பட்டதல்ல.

கெமிக்கல் கோட் கொடுத்து பனி, வெயில், பூச்சிகள் அரிக்காத சேஃப்டி ஃப்ரூப் மரங்கள். 25 வருடங்கள் வரை தாங்கும் உறுதியுடன் தயாரித்த மரங்கள் அவை.. ஒவ்வொரு வீட்டிலும் கீழே நான்கு பக்கமும் காங்கீரிட் சுவர் உள்ள அண்டர் கிரவுண்ட் கட்டப்பட்டு அதன் மேலே மரத்தில் வீடு எழுப்பப்படுகிறது. அதாவது சுழல் காற்று வந்தால் பாதுகாப்பாக குடும்பம் பதுங்கிக் கொள்ள அந்த அறை. அதன் பிறகு தரையிலும் மரங்கள் அதன் மீது மெத்தென்ற விரிப்பு போடப்படுகிறது.. அது சப்தம் வராதும் காக்கிறது.

அமெரிக்க வீட்டு அமைப்பு பற்றி அடுத்த பதிவில்.. 

வரும்...

ஹலோ அமெரிக்கா - 4

#அமெரிக்க_வாழ்_தமிழர்கள்

பார்ட் - 4

அமெரிக்காவில் பட்டப்படிப்பு வரை கல்வி இலவசம். அதுவும் வீடு இருக்கும் இடத்திற்கு அருகிலேயே ஸ்கூல் இருக்கும்.. வேறு பகுதியில் போய் சேர்க்க முடியாது.. உதாரணமாக மேற்கு மாம்பலத்தில் வசிப்பவர் அண்ணாநகரில் உள்ள பள்ளியில் சேர முடியாது..  பள்ளிப் பேருந்து, நோட்டுப் புத்தகங்கள் எல்லாமே இலவசம்.. தேர்வுகள், பாடங்கள், சீருடை, ரேங்க் கார்டுகள் என எதுவுமே இல்லை. அரசு பள்ளிகளில் தான் பெரும்பாலானோர் படிக்கின்றனர்.

தனியாரில் படிக்கத் தான் கட்டணம்.. இருப்பினும் அரசுப்பள்ளிகள் தான் பலரது சாய்ஸ். இங்கும் நம் தமிழர்களை பாராட்ட வேண்டிய ஒரு விஷயம்.. தனியாக இலவசமாக தமிழ்ப்பள்ளிகள் நடத்துகிறார்கள்.. பலர் என்.ஜி.ஓக்களாக இருந்து தமிழ்ப் பாடம் சொல்லித்தருகிறார்கள். இதற்காக ஒரு தொகையை சொந்தமாக செலவழித்தும் புரவலர்களிடம் நிதி திரட்டியும் தமிழ் வளர்க்கிறார்கள்.. பல தமிழ்ச் சங்கங்களும் இதற்கு பேருதவி செய்கின்றன. இதில் ஃபெட்னா எனப்படும் வட அமெரிக்க தமிழ்ச்சங்கத்தின் பணிகள் அளப்பரியது.. பாராட்டத்தக்கது.

அமெரிக்கப் பள்ளியில் கற்றுக் கொண்டு நுனிநாக்கில் அமெரிக்க  அசெண்ட் ஆங்கிலம் மட்டுமே பேசும்படி தமிழ்க் குழந்தைகளை விட்டு விடாமல் தமிழ் மொழியை அவர்களுக்கு நன்கு பயிற்றுவித்து தமிழை அழியாது பாதுகாக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் பாதங்கள் தொட்டு வணங்கலாம். எல்லா வீடுகளிலும் நாங்கள் நுழைந்ததும் அங்குள்ள பிள்ளைகள் இருகரம் கூப்பி வணக்கம் எனச் சொன்னது நெகிழ வைத்தது.

பொதுவாக பாடங்கள் ப்ளே ஸ்கூல் போலத்தான் சொல்லித்தரப்படுகின்றது விளையாட்டு ரொம்ப முக்கியம். பிள்ளைகளுக்கு ரேங்க் இல்லை ஆனால் க்ரேடு உண்டு ஒரு குழந்தை என்ன ஆகவேண்டும் என்பதை அவர்கள் போக்கிலேயே விட்டு விடுகிறார்கள்.. பள்ளி இறுதியில் 54 சப்ஜெக்டுகளில் படிக்க வேண்டுமாம்.. அதில் நாம் எடுக்கும் க்ரேடுக்கு ஏற்றபடி நம் விருப்பப் பாடத்தை நாமே தேர்ந்தெடுத்து மேற்படிப்பு படிக்கலாம்.

ஃப்ர்ஸ்ட் க்ரூப் செகண்ட் க்ரூப் குழப்பங்கள் இல்லை. எக்ஸ்டிரா கரிகுலர் ஆக்டிவிட்டிகளுக்கு தனியிடம் தருகிறார்கள்.. பள்ளியில் பேண்ட் குழுவில் சேரலாம் ஸ்கவுட் இருக்கிறது.. முக்கியமாக பள்ளியில் ஏதாவது ஒரு விளையாட்டு அணியில் பிள்ளைகள் இருக்க வேண்டுமாம்.. அது மட்டுமின்றி அங்கு பிள்ளைகளுக்கு LKGயில் முதல் பால பாடமே மஞ்சள், சிவப்பு, பச்சை டிராபிக் லைட்டுகள் தான் இவற்றை மதிக்க சொல்லித் தருகிறார்கள்.

அதற்கடுத்த பாடம் 911க்கு போன் செய்வது அதென்ன 911?அமெரிக்காவின் அவசர உதவி எண்.. அங்கு பிள்ளைகளை அடிக்கக்கூடாது துன்புறுத்தக் கூடாது.. ஏன் சத்தமாக அதட்டக் கூடாது.. அப்படி செய்வதை பக்கத்து வீட்டில் ஒருவர் பார்த்தால் உடனே 911க்கு போன் செய்து விடுவார்.. நீங்கள் விசாரிக்கப்பட்டு குற்றம் இருந்தால் தண்டிக்கப்படுவீர்கள். அங்குள்ள பிள்ளைகளே 911க்கு போன் செய்யவா அப்பா என செல்லமாக மிரட்டுவார்களாம்.

பிள்ளைகளும் நன்கு படிக்கிறார்கள் நடனம் கராத்தே என தனித்தனி திறமைகளை வளர்த்துக் கொள்கிறார்கள். நான் பார்க்க நிறைய பிள்ளைகள் கூடைப்பந்து ஆர்வலர்களாக இருந்தனர். இன்னும் 10வருடங்களில் ஆதவன்,ஆதித்யா, தமிழ்வாணன், அமுதன் போன்ற தமிழ்பெயர்களை ஸ்போர்ட்ஸ் சானலில் அமெரிக்க NBA தொடரில் பார்க்க நேரிட்டால் அது ஆச்சரியம் இல்லை.. அவ்வளவு நேர்த்தியாக பிள்ளைகள் ஆடுகிறார்கள். நிற்க..

அமெரிக்க வீடுகள் பற்றி அடுத்த பதிவில்...

வரும்....

ஹலோ அமெரிக்கா - 2

#அமெரிக்க_வாழ்_தமிழர்கள்

பார்ட் - 2

அமெரிக்காவில் வீடுகள் அமைந்திருக்கும் பகுதியை ரெசிடென்சியல் ஏரியா என்கிறார்கள்... சிட்டியை டவுண்டவுன் (Down Town) என்று அழைக்கிறார்கள். டவுனிலேயே வீடு என்பது அபூர்வம்.. வேலை பார்க்க சிட்டிக்கு வந்துவிட்டு பிறகு வீடு திரும்பவேண்டும் குறைந்தது 30 கிலோ மீட்டர் முதல் 80 கிலோ மீட்டர் தூரம் வீட்டுக்கும் ஆபிசுக்கும் தூரம் இருக்கும். டவுன் பஸ், டிராம், டிரெயின் போன்ற வசதிகள் டவுனில் மட்டுமே.

நகருக்கு வெளியே வர பஸ் டிரைன் வசதிகள் குறைவு.. அமெரிக்காவை பொறுத்தவரை கார் அத்யாவசியம்... அங்கு காரின்றி அமையாது உலகு.. மேலூர், சின்னாளப்பட்டி போன்ற சிறு கிராமங்களில் பிறந்து வளர்ந்து இங்கு வாக்கப்பட்டு வந்திருக்கும் நம் தமிழ்ப் பெண்கள் அநாசியமாக லெக்சஸ், பென்ஸ்களை ஓட்டுவது நமக்கு மிகுந்த வியப்பாக இருக்கும்..ஆண் பெண் இருவருக்கும் கட்டாயம் டிரைவிங் தெரிந்து இருத்தல் அவசியம்.

அமெரிக்காவில் ஐ.டி துறையில் வேலை பார்க்கும் தமிழர்கள் தான் அதிகம் என்றாலும் ஆட்டோ மொபைல், பேங்க், இன்சூரன்ஸ், ஆடிட்டிங் துறையிலும் பரவலாக வேலை செய்கிறார்கள். பெரும்பாலும் மனைவி கணவன் இருவருமே வேலைக்குப் போகிறார்கள். அமெரிக்காவில் நம் தமிழர் இல்லங்களில் இன்னொரு பாராட்டப்பட வேண்டிய விஷயம்.. கணவன் மனைவி இருவரும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்வது.

மனைவி சமைப்பார் கணவன் பாத்திரங்கள் கழுவி வீடு துடைத்து கழிவறை சுத்தம் செய்வார்..அல்லது கணவன் சமைக்க பிற வேலைகளை மனைவி செய்வார்.. மார்க்கெட் போவது பிள்ளைகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவது எல்லாமே மாற்றி மாற்றி பகிர்ந்து கொள்கிறார்கள்.. நாங்கள் தங்கியிருந்த பல வீடுகளில் ஆண்களே அற்புதமாக சமைத்து எங்களுக்கு பரிமாறினர். அங்கு அவரவர் வேலையை அவரவர் பார்க்க வேண்டும்.

ஏனெனில் இங்கு வேலைக்காரர்கள் கிடைப்பது அரிது..அல்லது காஸ்ட்லி உதாரணமாக 4 ஆயிரம் டாலர்கள் சம்பளம் வாங்கும் ஒருவர் டிரைவர் வேலைக்கு ஆள் வைத்தால் குறைந்தது 2 ஆயிரம் ரூபாய் சம்பளம் தர வேண்டும்.! அமெரிக்காவில் வேலைக்கு ஆட்கள் கிடைப்பது சிரமம் அதிக செலவும் கூட வீட்டுவேலை, தோட்டவேலை, முதற்கொண்டு நாம் தான் பார்க்கவேண்டும் வேலைக்கு ஆட்களை எதிர்பார்க்க முடியாது.

வரும்..

ஹலோ அமெரிக்கா -1

#அமெரிக்க_வாழ்_தமிழர்கள்

பார்ட் - 1

பொதுவாக அமெரிக்க வாழ் தமிழர்களைப் பற்றி இங்கிருக்கும் அனைவரும் அவனுக்கென்னய்யா கொடுத்து வச்சவன் சொகுசா வாழுறான் நல்லா காசு வருதுன்னு வெளிநாட்டுல செட்டில் ஆயிட்டாங்க இப்படி விமர்சிப்போம். இந்தக் கரையிலிருந்து பார்த்தால் பச்சையாகத் தெரிந்த அந்த பிம்பத்தை அக்கரையில் போய் பார்த்த போது நிஜ வண்ணம் தெரிந்தது.

முதலில் அமெரிக்க வாழ்க்கையே ஒரு மாயவலை... இங்கு செட்டிலாகி இருக்கும் பலர் முதலில் ஒரு அஞ்சு வருஷம் கஷ்டப்பட்டு உழைச்சு பணம் சேர்த்துட்டு அப்படியே இந்தியா போய் செட்டில் ஆகிடலாம் என்பதாகத் தான் நினைத்து வருவார்களாம்.. வந்த பின்பு 5 ஏழு ஆகி 10 ஆகி வேணாம் இங்கேயே இருந்துவிடலாம் என மாறிவிடுவார்கள்.

ஏனெனில் அமெரிக்கச் வாழ்க்கைச் சூழல் அப்படி.. நீங்கள் நம் தமிழர்களை ஒரு விஷயத்தில் பாராட்ட வேண்டும் ஏனெனில் அமெரிக்காவின் பருவநிலை அப்படி மொத்த அமெரிக்காவிற்கும் ஐந்து நேர மண்டலங்கள் ஈஸ்டர்ன் நேரம், சென்ட்ரல் நேரம், மவுண்ட்டன் நேரம், பசிபிக் நேரம் மற்றும் அலாஸ்கா நேரம்.. அமெரிக்கா உள்ளேயே ஒரு ஊருக்கும் மறு ஊருக்கும் 3மணிநேர வித்யாசங்கள் உண்டு.

பனியும் வெய்யிலும் விக்ரமாதித்தன் வாழ்க்கை போல காடாறு மாதம்  நாடாறுமாதம் ஆட்சி செய்கின்றன.. இடையில் மழைக்காலமும் கோடையும் உண்டு.. நான்கு பருவநிலைகளும் தவறாது இன்றும் இருக்கும் அதிர்ஷ்டநாடு அமெரிக்கா.. அமெரிக்க மன்னர் என ஒருவர் இருந்திருந்தால் அவர் தாராளமாக மாதம் மும்மாரி பொழிகிறதா என கேட்கலாம்.. 

சென்னை வெயிலுக்கு இணையாக கோடையிலும் சைபீரிய குளிருக்கு இணையாக குளிரிலும் பட்டையை கிளப்பும் பருவநிலையில் நம் தமிழர்கள் வாழப் பழகிக் கொண்டதையே பாராட்ட வேண்டும்.. எவ்வளவு வெயிலையும் தாங்கிக் கொள்ளலாம் ஆனால் குளிர் அப்படி அல்ல ஆளை உருக்கிவிடும்.. எலும்பை கரைக்கும்.. இந்தக் குளிரில் காலை 6 மணிக்கு எழுந்து 9 மணிக்குள் வேலைக்கு போக வேண்டும்.

என்னய்யா பெரும் குளிர் நம்ம ஊட்டி கொடைக்கானல் சிம்லாவை விடவா பெரியது என்போருக்கு.. இது அதற்கெல்லாம் தா(த்)தா.. நான் அங்கு போன மூன்றாவது நாள் காலை முகம் கழுவும் போது மூக்கில் குறுகுறுப்பாக கூசிட திடீரென மூக்கு சூடாகியது.. வாஷ்பேசின் கண்ணாடியில் பார்த்தால் என் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது.. தமிழ்நாடு போன்ற வெப்ப நிலத்தில் இருந்து அங்கு ஒரு மாதம் போன எனக்கே இப்படி என்றால் அங்கேயே வாழ்பவர்களுக்கு..

இப்போது அந்த ரத்தம் என் கண்ணில் வடிந்தது...

வரும்..