Sunday, 28 February 2016

டெக்ஸாஸ் - டாலஸ்..

#டாலடித்த_டாலஸ்_வெற்றி

மினியாபொலிசில் இருந்து டெக்ஸாஸ் மாகாணத்தின் டாலஸ் நகருக்கு கிளம்பினோம். கெளபாய் சிட்டி என அழைக்கப்படும் டாலசும் இரட்டை நகரங்கள் அமைந்த ஊர்.. ஒன்று டாலஸ் இன்னொன்று ஃபோர்ட் வொர்த்.. அமெரிக்காவில் தமிழர்கள் அதிகம் வாழும் இரண்டாவது பெரிய மாநிலம் டெக்ஸாஸ் முதலிடம் நியூஜெர்சிக்கு. டெக்ஸாசில் 2kk மீடியா சார்பில் நண்பர் சவுந்தர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி அவர் தான் வரவேற்றார்.

டாலஸ் அப்படியே நம்ம சென்னை 21 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.. இந்த கிளைமேட் நம்ம ஊர்க்காரர்களுக்கு மிக மிகப் பிடிக்கும்.. இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும் அதிகம் தமிழர்கள் ஏன் இங்கு வசிக்கிறார்கள் என்று. 20 நாட்களுக்குப் பின் எனக்கு வியர்த்தது இந்த ஊரில் தான்.! இந்த ஊருக்கு வந்த பிறகு ஜெர்கினை மடித்து பெட்டியில் கடாசி பூட்டி விட்டோம்.

டாலஸில் முழுதாக மூன்று நாட்கள் இருந்தோம். டாலஸில் நண்பர் சவுந்தர் வீட்டில் தங்கினோம்.. அருகிலேயே நண்பர் கேசவன் நண்பர் நந்தா என முப்பெரும் தளபதிகள் எங்களை ஓடி ஓடி கவனித்துக் கொண்டனர். கேசவன் திண்டுக்கல் சின்னாளப்பட்டிக் காரர் அவரது மனைவி லேகா அவரது தங்கை சீதா அவரது கணவன் சதீஷ்.. எல்லாரும் அதே ஊர்.. கேசவனின் தம்பியும் அதே ஊர் மொத்த குடும்பமே இப்ப அமெரிக்காவில்.

அதே போல நந்தா வீட்டில் மகேஷ் தங்கிக் கொண்டார்.. சவுந்தர் மனைவி ராஜி கொஞ்சம் மிட்சேல் ஓபாமா சாயலில் இருந்தார்.. ஹேர் ஸ்டைலும் அசப்பில் அவர் போலவே இருந்தது..பெரிய நிறுவனம் ஒன்றில் பொறுப்பான பதவியில் இருந்தாலும் நாங்கள் விளையாட்டாக அவரை கலாய்த்ததை ஸ்பொர்டிவாக எடுத்துக் கொண்டார்..  அருமையாக சமைத்தும் போட்டார்.
இத்தனை பேர் இருந்ததால் அங்கு எங்களுக்கு பொழுது நன்றாக போனது.

அந்த வீட்டில் ப்ரேக் பாஸ்ட் இந்த வீட்டில் லஞ்ச் இன்னொரு வீட்டில் டின்னர் என நான்கைந்து தெருவுக்குள் இருந்ததால் ஈசியாக இருந்தது. ஆனால் டாலஸில் எங்களுக்கு சாப்பாட்டு பிரச்சனையே இல்லை ஏனெனில் அங்கு சென்னை கஃபே மற்றும் மதுரை தட்டுக்கடை இருந்தது. அப்படியே நம்ம மதுரை ஸ்டைலில் இட்லி கொத்து பரோட்டா தோசை, மதியம் சாப்பாடு மீன் குழம்பு மட்டன் சிக்கன் என வெரைட்டியாக தந்தார்கள்.

சுத்த சைவத்திற்கும் ஒரு கிளை இருந்தது இந்தக் கடைகளைபற்றி எல்லாம்
தனிப்பதிவாக போட்டு இருக்கேன்.. டாலஸில் டாலர் அச்சடிக்கும் பிரஸ்.. மற்றும் கெளபாய் சிட்டி மெழுகுச் சிலை கண்காட்சி இங்கெல்லாம் போனதை தனித்தனி பதிவாகத் தான் போட வேண்டும் அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது. நிகழ்ச்சி நடைபெறும் ஹாலுக்கு சென்றோம் சரியாக 4மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பம்.. மேடையில் நிகழ்ச்சி தொடங்கியது.

இங்கும் பழகிவிட்ட அதே வெற்றி ஃபார்மூலாவைத் தொடர சிரிப்பொலியும் கரவொலியும் அடங்க நேரமானது..வழக்கம் போல எங்களை கவுரவப் படுத்தினார்கள் பொன்னாடை மற்றும் நினைவுப்பரிசுகளோடு இங்கிருந்து ஒரு இரும்புப் பெண்மணியை சந்திக்க போனோம் அது பற்றியும் அடுத்து ஒரு தனிப்பதிவில்.. நண்பர் சவுந்தர் உள்ளிட்ட அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி இப்பயணத்தின் ஐந்தாவது சூப்பர் டூப்பர் வெற்றியில் எங்கள் முகங்கள் ஜொலி ஜொலித்தன ஏனெனில் இது டாலடித்த டாலஸ் வெற்றி அல்லவா.!

விஸ்கான்சின் - மேடிசன்..

#விஸ்கான்சினிலும்_வெற்றி

முதலில் விஸ்கான்சின் தமிழ்ச்சங்கத்திற்கு நன்றி.. ஏனெனில் இச் சங்கம் துவங்கி நீண்ண்ண்ண்ட இடைவேளைக்குப் பின் இவர்கள் ஏற்பாடு செய்த முதல் நிகழ்ச்சியே எங்கள் நிகழ்ச்சி தான். அதனால் எங்களுக்கு பொறுப்பு கொஞ்சம் கூடுதல்..ஏனெனில் மற்ற இடங்களில் நிகழ்ச்சி செய்வதை விட இங்கு சூப்பர் டூப்பராக ஹிட் தர வேண்டும்.. இவங்க ஏற்பாடு செஞ்சா அந்த நிகழ்ச்சி நன்றாக இருக்கும்.. நம்பி குடும்பத்துடன் போகலாம்.

அப்படி நினைக்க வைக்கும்படி நிகழ்ச்சி இருக்கவேண்டும். அப்போது தான் இவர்கள் அடுத்து வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் போது உறுப்பினர்கள் நம்பி வருவார்கள். இங்கு நாங்கள் கட்டாயம் 100 மதிப்பெண்கள் பெறவேண்டிய மாணவன் நிலையில் இருந்தோம்..அப்ப கோச்சிங் தரமாக வேண்டும் அல்லவா! அந்த பணியை நண்பர் இளங்கோ எடுத்துக் கொண்டார். தினசரி எங்களுக்கு அலாரம் அவரது அழைப்பு தான்.

அமெரிக்கா கிளம்புவதற்கு 1 மாதத்திற்கு முன் பேச ஆரம்பித்தவர் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பார் அமெரிக்க பயணம் முழுவதும் எங்களுடன் அதிகம் பேசியவர் இளங்கோ மட்டுமே.. நண்பர் சசி கூட "எங்கள் மனைவி பிள்ளைகளிடம் கூட நாங்கள் இவ்வளவு நேரம் பேசியதில்லை என்பார் வேடிக்கையாக.. ஆனால் இளங்கோவிடம்  ஒரு நல்ல குணம் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய அருமையான குணம்.

அவர் ஊர் நிகழ்ச்சி என்றில்லாமல் எல்லா ஊர் நிகழ்ச்சிக்கும் எங்களை ஊக்குவித்தார். அது எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. எவ்வளவு கடின உழைப்பில் அவர்கள் ஊர் தமிழ்ச்சங்கம் உருவானது, நாங்கள் எப்படி நிகழ்ச்சி தரவேண்டும் எங்களிடம் அவர்களது எதிர்பார்ப்பு என்ன..? இந்த எல்லா விஷயங்களையும் சொல்லி எங்களை தயார் படுத்தி இருந்தார். இந்த பயணத்தில் சாலைவழியாக பயணித்துச் சென்று நிகழ்ச்சி செய்த ஒரே ஊர் விஸ்கான்சின் தான்..அங்குள்ள மேடிசன் நகரில் எங்கள் நிகழ்ச்சி.

பயணத்திற்கு முன் இந்த பனி பற்றி.. சிகாகோ பனி, டெட்ராய்ட் பனி, மிசவுரி பனி, இதெல்லாம் எலந்தப்பழம் ஆனா பெரிய அன்னாசிப்பழம் மின்னசோட்டா பனி என்றார்கள்.. இது நான்கும் போய் பார்த்து அனுபவித்து விட்டோம்... இப்போ விஸ்கான்சின் பனி என்ன பெருசா இருக்கப் போகுது என நினைத்து கிளம்பினோம்.. எங்களுக்கு பலாப்பழம் காத்திருப்பது தெரியாமல்.. அதிகாலைப் பயணம் காரில் மினியாபொலிஸ் நகரிலிருந்து..

ஏனெனில் முதல் நாள் மினியாபொலிஸ் நகரில் எங்கள் நிகழ்ச்சி அது முடிந்து வந்து உறங்கவே 1 மணி ஆகிவிட்டது வெறும் 4 மணிநேர ஓய்வு தான்.. அடுத்த நாள் மதியம் 2 மணிக்கு விஸ்கான்சின் நிகழ்ச்சி அலாரம் வைத்து எழவேண்டிய அவசியமில்லை அதுதான் இளங்கோ இருக்கிறாரே. மிகச்சரியாக அதிகாலை 4:30க்கு எழுப்பி விட்டார். பரபரவென தயாரானோம் அந்தப் பனியில் அதிகாலை குளிக்க நடுங்கி கிளம்பினோம்.

மின்னசோட்டா தமிழ்ச்சங்கத்தை சேர்ந்த சிவானந்தம் சார் கார் ஓட்ட மற்ற நண்பர்கள் சுந்தரமூர்த்தி, சச்சிதானந்தம் எங்களுடன் இணைந்து கொள்ள கார் கிளம்பியது. அங்கிருந்து 300 மைல் தூரம்.. கிட்டத்தட்ட சென்னை - மதுரை தூரம் 5 மணிநேரப் பிரயாணம்.. குளிர் என்றால் அப்படி ஒரு குளிர்.. இடையில் மழை கூட பெய்தது பனிக் காலத்தில் நல்ல வெயில் அடித்தால் அது பேட் வெதர் என்கிறார்கள். நல்ல வெயிலுக்கு பின் குளிர் ஏறுமாம்.

காருக்கு வெளியே மைனஸ் 7 முதல் 10 வரை குளிர் அடுத்த 3 நாட்களுக்கு மைனஸ் 3 என்றது வானிலை அறிக்கை.. அலட்சியமாகத்தான் போனோம் ஆனால் அது மைனஸ் 18 வரை போனது. கார் நேராக விஸ்கான்சின் சங்கத்தலைவர் மனோ வீட்டிற்கு சென்றது.. பிரம்மாண்டமான புத்தம் புதிய அழகான வீடு.. சகல வசதிகளும் நிறைந்த அவ்வீட்டில் எதாவது குறை இருக்கா குறை இருந்தா சொல்லுங்கன்னு எங்களிடம் மனோ கேட்டார். 

அவர் எங்க கிட்ட அப்படி கேட்டது தான் குறையாக இருந்ததே ஒழிய வேறு எதுவும் குறை இல்லை.. அங்கு அருமையானதொரு குளியல் போட்டு புத்துணர்வுடன் தயாராகி அடுத்த அரைமணியில் புரவலர் டாக்டர் பாலச்சந்திரன் வீட்டிற்கு கிளம்பினோம்அவர் அங்கு 40 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர். அவரது வீட்டில் தான் உணவு.. அற்புதமான தமிழக சைவ அசைவ உணவுகளுடன் ஒரு பஃபே விருந்து ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

ஒரு பிடி பிடித்தோம் வயிறு நிறைந்தது.. கிளம்பும் போது எல்லாருக்கும் ஒரு நினைவு பரிசு அளித்தார்.. இந்த இடத்தில் ஒன்று இந்த பயணத்தில் மக்கள் அதிகம் எங்களுக்கு பரிசளித்தது மேடிசனில் தான்.. அந்தக் கைராசி டாக்டர் பாலச்சந்திரனுடையது என்பதை பின்னர் தெரிந்து கொண்டோம். அங்கிருந்து விழா நடைபெறும் அரங்கிற்கு புறப்பட்டோம். நேரடியாக எங்கள் நிகழ்ச்சி தான் மதியம் 2:30 க்கு ஆரம்பித்தது நிகழ்ச்சி.

சசியின் பளீர் சிரிப்பு வெடிகள், கிறிஸ்டோபரின் கலாய்ப்பு, ஈரோடு மகேஷின் கலகலப்பு, இவை அப்படியே ஜிவ்வென்று நிகழ்ச்சியை மேலே தூக்கி செல்ல வழக்கம் போல எனது பணியும் அதில் எளிதானது.. ஆனால் இளங்கோ மட்டும் பிரசவ வார்டுக்கு வெளியே நிற்கும் கணவன் போல பரபரப்பாக அலைந்து கொண்டே இருந்தார்..அவ்வப்போது வந்து நிகழ்ச்சி அடடா சூப்பர், பிரமாதம், அருமை என எங்களை பாராட்டி விட்டும் செல்வார்.

மாலை 5 மணிக்கு நிகழ்ச்சி முடிவில் எங்களுக்கு நினைவுப்பரிசும் பொன்னாடையும் அணிவித்து கவுரவித்தார்கள்.. நடிகர் சத்யராஜ் அவர்களின் உடன் பிறந்த தங்கையான ரூபா மேடம் இங்கு தான் வசிக்கிறார்கள்.. அனைவரின் பாராட்டு மழையிலும் நனைந்தோம். இப்படி ஒரு நல்ல நிகழ்ச்சியை பார்த்து வெகு நாளாகிறது என பலர் சொல்ல மனோ ஸார் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளின் முகத்திலும் பெருமிதம்.

அதன்பின் இரண்டு நாட்கள் அங்கே தங்கி சுற்றிப்பார்த்து விட்டு பலர் அளித்த பரிசுப் பொருட்களை சுமந்து கொண்டு இருந்தபோது மீண்டும் டாக்டர் பாலச்சந்திரன் வந்து குளிர் தாங்கும் நீளக் கோட்டுகளை மயிலுக்கு போர்வை தந்த பேகன் போல தந்துவிட்டு போனார்.. மனோ அவர்கள் கிப்ஃட் பர்ச்சேஸ் கார்டுகளை பரிசு வழங்கினார்.. திருவாரூர் புதுமணத் தம்பதியர் சாக்லேட் பரிசளித்தனர்.. திக்குமுக்காடி கிளம்பினோம்.

மீண்டும் மின்னசோட்டா பயணம் இளங்கோ தான் எங்களைக் காரில் அழைத்து போக வேண்டும்.. கிளம்பினோம்.. மீண்டும் 5 மணிநேரப் பயணம். மனம் நிறைய மகிழ்வுடன் பேசிக்கொண்டு வந்தார் இளங்கோ.. அடடா ஒன்று சொல்ல மறந்து விட்டேன் அன்னைக்கு நிகழ்ச்சியன்று முடிவில் எங்கள் நிகழ்ச்சி எப்படி இருந்தது என சசி மேடையில் இருந்து கேட்க அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் இடைவிடாது கைத்தட்டினர்.. 

எங்களுக்கு ஆனந்தத்தில் கண்ணீர் மல்கியது மெல்ல அதை யாரும் அறியாதபடி துடைத்துக் கொண்டோம்.அப்போது இன்னொருவரும் யாரும் அறியாதபடி கண்களைத் துடைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தோம். அது இளங்கோ தான் என நாங்கள் சொல்லவும் வேண்டுமா.. விஸ்கான்சின் வெற்றிக்கு காரணம் நாங்கள் மட்டுமல்ல தலைவர் மனோ, டாக்டர் பாலச்சந்திரன், தேசிகன், கார்னிலியஸ் இவர்கள் அனைவருமே இந்த வெற்றிக்கு காரணமானவர்கள். 

இன்னும் பல வெற்றிகளை அவர்கள் பெற்று இடையறாத தமிழ்ப்பணிகள் பல ஆற்றி சிறக்க எங்கள் குழு சார்பில் மனதார வாழ்த்துகிறோம். வாழ்க தமிழ்..!

மின்னசோட்டா - மினியாபொலிஸ்..

#குளிர்ந்த_மினியாபொலிசில்_மிளிர்ந்த_வெற்றி

அலபாமாவில் இருந்து மீண்டும் டெட்ராய்ட் வந்து அங்கிருந்து மினியாபொலிஸ் போக இரண்டு விமானங்கள் மாற வேண்டும். இந்த பயணத்தில் கிட்டத்தட்ட ஒரு 15 விமான நிலையங்களில் கால் பதித்து இருப்போம். பிற மாநிலங்களில் எலந்தைப்பழம் கொய்யாப்பழம் அளவில் இதுவரை நாங்க பார்த்த பனிப் பொழிவு மினியாபொலிசில் அன்னாசிப்பழ சைஸ் என பீதியை ஏற்படுத்தினார்கள் போய் இறங்கினோம்.. அடங்கப்பா..

ஏர்போர்ட் பார்க்கிங் பில்டிங்கே பிரம்மாண்ட ஃப்ரீசராக இருந்தது.. குளிர் வாட்டியது.. பெட்டிகளை வண்டியில் ஏற்றிய அந்த சில நிமிடங்களிலேயே க்ளவுசை மீறி கை விறைத்தது..வாயில் குபு குபு வென புகை பறக்க வண்டியில் ஓடிப் போய் ஏறி அங்கிருந்து வெளியேறினோம்.. வெளியே நட்டுவைத்த ஆல்ப்ஸ் போல ஆங்காங்கே குட்டிப் பனி மலைகள் இருந்தன.. தெருவோரம் அள்ளிய பனியை எவரெஸ்ட்டுகளாகக் கொட்டியிருந்தனர்.

இதற்கிடையே பளீர் வெண்மையில் சமதளம் தெரிந்தது அநேகமாக ஐஸ் ஹாக்கி மைதானமாக இருக்கும் என நாங்கள் நினைத்தோம் அதுதான் சாலை என்றார்கள்..  அந்த ஐஸ் ரோட்டில் எங்களை அழைத்து சென்றார் சிவானந்தம் சார். 40 நிமிடப்பயணம்.. ஊரே உஜாலாவுக்கு மாறியிருக்க நாங்கள் குளிரில் நாறியிருந்தோம்.. ஒரு வழியாக கார் ஹீட்டரில் வெப்பக் காற்று முன்பை விட நன்கு வேலை செய்ய கொஞ்சம் உயிர் வந்து குளிர் பெருமூச்சு விட்டோம்.

அமெரிக்காவின் உச்சியில் இருக்கும் மினியாபொலிஸ் அதிக குளிர் மிகுந்த நகரம் மின்னசோட்டா மாகாணத்தில் இருக்கிறது.. செயின்ட்பால் மற்றும் மினியாபொலிஸ் இரண்டும் இரட்டை நகரங்கள்.. ஒரு பாலம் தான் இதை பிரிக்கிறது.. மின்னசோட்டாவில்  மட்டும் 20 ஆயிரம் ஏரிகள் இருக்கிறதாம். இந்த ஊருக்கு டென் தவுசண்ட் லேக் சிட்டி என்று பெயர்.. யாரோ ஒரு கணக்குத் தெரியாத அமெரிக்க குமாரசாமி பேர் வைத்திருக்கலாம்.

தஞ்சாவூர்க்காரரான சிவானந்தம் ஸார் வீடு.. வழக்கம் போல அருமையான தமிழ்க் குடும்ப உபசரிப்பு விருந்தோம்பல் அவரது துணைவியார் ப்ரியா அவரும் தஞ்சாவூர். அமெரிக்காவில் பிறந்து அங்குள்ள பள்ளியில் பயிலும் அவரது பிள்ளைகள் ஆதவன்&ஆதித்யா இருவரும் கை கூப்பி வணக்கம் என வரவேற்று எங்களை வியப்பில் ஆழ்த்தினார்கள். மினியாபொலிஸ் தமிழ்ச் சங்கத் தலைவி ராணி மேடம் வந்தார்கள்... சிக்கன் தந்தார்கள்.. பின் சென்றார்கள்... அவ்வளவு தான்..!

எப்படி நிகழ்ச்சி பண்ணுவிங்க? எவ்ளோ நேரம் ஆகும்? நிகழ்ச்சி எப்படி இருக்கும்? இப்படி எதுவுமே கேள்வி இல்லை.. எங்கள் ஊர் தமிழர்கள் எல்லாம் சேர்ந்து சங்கமம் என்னும் பெயரில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை அரங்கேற்றம் பண்ணப் போறோம்.. எல்லாரும் கடந்த 2 மாதமா ப்ராக்டிஸ் பண்றாங்க ஒரு மணிநேரம் அந்த நிகழ்ச்சி நடக்கும் அதற்குப்பின் உங்க நிகழ்ச்சி தான் என சொல்லி விட்டு அங்கிருந்து மறைந்து விட்டார்.

எங்கள் மீது அவ்வளவு நம்பிக்கை.! அல்லது இதற்கு முன் நிகழ்ச்சி நடந்த 3 இடங்களில் இருந்து வந்த ரிசல்ட்.. அல்லது கலைஞர்களை அவங்க போக்கில் சுதந்திரமா விட்டுடுவோம் நிகழ்ச்சியை வெற்றிகரமாக்குவது அவங்க பொறுப்பு இந்த மூன்றில் மூன்றாவது தான் காரணமாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். மினியாபொலிசில் முழுதாக 2 நாட்கள் இருந்தது.முதல் நாள் மால் ஆஃப் அமெரிக்காவிற்கு அழைத்துப்போனார்கள்.. அருமையாக இருந்தது.

இரண்டாவது நாள் நிகழ்ச்சி.. மாலை அரங்கிற்கு சென்றோம்..வாயடைத்து நின்றோம்.. உள்ளூர் தமிழர்கள் நிகழ்ச்சியை பள்ளிகளில் நடக்கும் மேடை நிகழ்ச்சிகள் லெவலில் இருக்கும் என அலட்சியமாக நினைத்திருந்தோம்.. ஆனால் தப்பாட்டம், மாடாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கூத்து, குறவன் குறத்தி, வில்லுப்பாட்டு, புலியாட்டம், கும்மி கோலாட்டம் என எல்லா நடனங்களையும் பிரமாதமாக ஆடினார்கள். 

அவர்கள் எல்லாரும் அங்குள்ள ஐ.டி மற்றும் வங்கிகளில் உயர் பதவிகளில் பணிபுரியும் தமிழர்கள்.. ஆனால் தமிழகத்தில் உள்ள தொழில்முறை கலைஞர்களுக்கு இணையாக ஆடி அசத்தினார்கள்..எங்களுக்கு ஏதோ தமிழக அரசு நடத்தும் பொங்கல் விழா போல இருந்தது அந்தளவு அற்புதம். அங்குள்ள அத்தனை தமிழர்களையும் இதற்காக நாங்கள் பாதம் பணிந்து பாராட்டுகின்றோம். மண்ணின் பாரம்பரியத்தை கடல் கடந்தும் போற்றுகின்ற உங்கள் அத்தனை பேருக்கும் தாயகத்தின் வணக்கங்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு சங்கமம் எனப் பெயரிட்டதற்கு பொருத்தமாய் அந்த நிகழ்ச்சியோடு எங்கள் நிகழ்ச்சியும் கலந்தது.. இப்போது தான் எங்களுக்கு கவலை அதிகரித்தது. உள்ளூர்காரர்களை விட கைத்தட்டல் வாங்க வேண்டுமே என்று.. வழக்கம் போல சசி ஆரம்பித்து கிறிஸ்டோபரும் நானும் அதைத் தொடர இங்கும் ஈரோடு மகேஷ் மெருகேற்ற இரண்டுமணிநேரம் போனது தெரியாமல் நிறைவுற்றது. இங்கும் பொன்னாடை நினைவுப்பரிசு வழங்கப்பட போட்டோ வைபவங்கள் தொடர அவசர அவசரமாக கிளம்பினோம்.ஏனெனில் அடுத்த நாள் மதியமே மேடிசன் நகரில் நிகழ்ச்சி.

சிவானந்தம் சார் சச்சிதானந்தம் ஸார் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட அனைவரும் பாராட்ட இப்போதும் ராணி மேடம் அந்த ஊர் க்ளைமேட் போல கூலாக மேடிசன் போய்ட்டு பத்திரமா வாங்க திரும்பிப் போகும் போது இங்க ஒரு டின்னர் அரேஞ்ச் பண்ணியிருக்கேன் அப்போ நிறைய பேசிக்கலாம் என்று கூறிவிட்டு வழியனுப்பினார். அவர் முகத்தில் தெரிந்த திருப்தியே எங்களுக்கு அவர் நினைப்பதை சொல்லிவிட்டது.
இப்பயணத்தில் தொடர்ந்து  நான்காவது நிகழ்ச்சியும் சக்ஸஸ்.!ஆம்.! குளிர்ந்த மினியாபொலிசில் மிளிர்ந்த வெற்றி.

அலபாமா - பர்மிங்காம்..

#அலபாமாவில்_அசத்தல்_வெற்றி

மிசெளரியில் இருந்து அட்லான்டா போய் அங்கிருந்து அலபாமாவில் உள்ள பர்மிங்காம் நகரில் எங்கள் நிகழ்ச்சி.. இரண்டு விமானங்கள் மாற வேண்டும் இந்த பயணத்தில் மிகச்சவாலாக இருந்தது ஞாயிற்றுக் கிழமை நிகழ்ச்சிகள் தான் ஏனெனில் சனிக்கிழமை நிகழ்ச்சி முடிந்த மறு நாளே கிளம்பணும். உதாரணமாக முதல் நாள் மதுரை அடுத்த நாள் அங்கிருந்து சென்னை இது போல இருக்கும். சில நேரம் சென்னை to குவைத் தூரமும் இருக்கும்.

போய் இறங்கியவுடன் பரபரப்பாக தயாராகி மின்னல் வேகத்தில் நிகழ்ச்சி செய்ய வேண்டும் பழகிவிட்டிருந்தது பர்மிங்காம் போய் இறங்கியதும் அன்பே வா எம்.ஜி.ஆர் போல ஆடத்தோன்றியது.. கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு பிறகு பனியே இல்லாது கொடைக்கானல் குளிரில் ஒரு ஊர்.. முதலில் ஜெர்கின் கையுறைகளை கழட்டி எறிந்ததிலேயே பாதி களைப்பு ஓடி விட்டது.. மதுரையின் மைந்தன் அன்பு அண்ணன் சாம்பியன் எங்களை வரவேற்றார்.

சாம்பியன் அண்ணன் கிறிஸ்டோபரின் உறவினர் இந்தியா வந்தபோது எல்லாம் அவரைப் பலமுறை சந்தித்திருக்கிறேன். ஆனால் எங்கள் முகத்து களைப்பு பார்த்து அவர் அதிர்ந்து போனார்.. என்னங்கடா இப்படி டயர்டாகி வந்து நிக்குறிங்க.? நிகழ்ச்சி பண்ணிடுவிங்களா என்றார் அக்கறையுடன். நாங்கள் அங்கு போய் இறங்கியது காலை 11:30 க்கு நிகழ்ச்சி மதியம் 2 மணிக்கு.. பண்ணிடுவோம் அண்ணே என்றோம்.. சரி வாங்கடான்னாரு.

காரில் சுகமான பயணம் பர்மிங்காம் நகரம் சுற்றிலும் மலை சூழ்ந்த நகரம் அப்படியே கொடைக்கானல் ஃபீலிங் அமைதியான ஊரும் கூட ஆண்டு முழுவதும் வெயிலோ பனியோ எப்போதும் கடுமையாக இல்லாத ஒரு தட்பவெப்பம் கொண்ட ஊர்.. தமிழர்கள் 60 குடும்பங்கள் இருக்கிறார்கள். அண்ணன் வீட்டில் அண்ணி வரவேற்றார்கள் அவர்களையும் முன்பே தெரியும் பரபரவென குளித்துவிட்டு வந்தால் மீன் குழம்பு சிக்கன் ரசம் தயிர் மோர்க்குழம்பு என அருமையான மதுரைச் சாப்பாடு.

வயிறார சாப்பிட்டதும் தூக்கம் கண்ணை கட்டியது.. அலறிப் புடைத்து குளிர்ந்த நீரில் மீண்டும் ஒரு முறை முகம் கழுவிக் கொண்டு நிகழ்ச்சி நடக்கும் லைப்ரரி அரங்கிற்கு கிளம்பினோம். 60 குடும்பங்கள் தான் மிகச்சிறிய கூட்டம் நாங்கள் போனதும் நிகழ்ச்சி துவங்கியது சில குடும்பங்கள் 180 கி.மீ தூரத்திலிருந்து வேறு வந்து சேர்ந்தனர்.. அவர்கள் வந்த பின்பு சரியாக மதியம் 2:30 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பித்தது.

மற்ற ஊருக்கும் இங்கும் ஒரு வித்யாசம் சிறிய அரங்கம் என்பதால் கிட்டத் தட்ட பார்வையாளர்கள் அருகில் நின்றபடி தான் நிகழ்ச்சி நடந்தது.. அற்புதமான ரசிகர்கள் அவர்கள் ரசிப்புத் தன்மை அபாரமாக இருந்ததால் எங்கள் வேலை சுளுவானது.. இந்த ஊரிலும் ஈரோடு மகேஷ் எங்களுடன் வரவில்லை.. 3 மணிநேரம் கல கலவென முடிந்தது.. சாக்லெட் பொக்கே என்னும் இனிப்பும் கொத்தும் நினைவுப் பரிசும் வழங்கினார்கள்.

பிறகு அனைவரும் எங்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். வெகு விரைவில் வீடு திரும்பி ஓய்வெடுத்தோம்.மறுநாள் அலபாமா பல்கலைக் கழகம் சிட்டியிலுள்ள மால் எல்லாம் பார்த்துவிட்டு.. இந்திய ரெஸ்டாரெண்ட்  ஒன்றில் மதிய உணவு.. அன்றிரவு நண்பர் சார்ல்ஸ் வீட்டில் தமிழ்ச்சங்கத்தினர் ஒன்று கூடி ஒரு மெகா விருந்து என பர்மிங்காமில் ஒரே விருந்து மழை. ஊர் திரும்பும் கடைசி நாள் சாம்பியன் அண்ணன் வீட்டில் விருந்து.

அன்றிரவு அது இசை விருந்தானது.. அண்ணனும் சார்லசும் அருமையாக கிடார் வாசிக்க நான் கிறிஸ்டோபர் பர்மிங்காம் சங்கத் தலைவர் சதீஷ் முதலானவர்கள் இளையராஜாவின் எண்பதுகளின் ஹிட் பாடல்களை பாடி மகிழ்ந்தோம்.. நல்ல இசை அறுசுவை என நாவும் மனதும் நிரம்பியது. பர்மிங்காமில் நாங்கள் கண்ட ஒரு விஷயம் அங்கிருக்கும் 60 தமிழ்க் குடும்பங்களும் அவ்வளவு அந்நியோன்யமாக இருக்கிறார்கள்.

நல்ல தகவல் தொடர்பு.. குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் நன்கு தெரிந்து ஒரு யூனிட்டியாக வாழ்கிறார்கள் சிறிய அளவு மக்கள் வசிப்பதால் தான் இது சாத்தியம் என்றாலும் இப்படி அவர்கள் ஒன்று பட்டு வாழ்வது கொஞ்சம் பொறாமையாக இருந்தது.. ஆகவே இதைப் படித்து விட்டு ஒருமுறை அவர்களுக்கு திருஷ்டி சுத்திப் போடச்சொல்லுங்கள். இங்கு சாம்பியன் அண்ணன் பற்றி ஒன்று சொல்ல வேண்டும்.

அமெரிக்கா நாங்கள் வருகிறோம் என்றதும்.. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் விஜய் மணிவேலிடம் பேசி நாங்கள் இருக்கும் செயின்ட்லூயிசில் இருந்து அவர் சொந்த செலவில் விமான டிக்கெட் எடுத்துத்தந்து அழைத்தார். அவர் நினைத்திருந்தால் அவர் உறவினரான கிறிஸ்டோபரை மட்டும் கூட அழைத்து இருக்கலாம்.. அதுபற்றி கவலைப்படாது மனதாரச் செலவு செய்தார். மேலும் அண்ணி அவர்களும் அங்கு பெரிய பதவியில் பணிபுரிகிறார்கள்.

எங்களுக்காக 2 நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பிள்ளைகள் போல எங்களை கவனித்து சமைத்துப் போட்டார்கள்.. அதுமட்டுமின்றி அண்ணன் பல பாடங்களை எனக்குச் சொல்லித்தந்தார்.. நான் செய்த பல தவறுகளை அழகாக சுட்டிக்காட்டி அதை திருத்திக்கொள்ளவும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்க மக்களின் குணநலன்கள் என்ன என்பது பற்றியும் அழகாக ஒரு பாடம் போல நடத்தி அதன்படி நடக்கச் சொன்னார். 

அது எனக்கு அடுத்த ஊர்களில் பேருதவியாக இருந்தது. அதன் பிறகு அவ்வாறான தவறுகள் நடக்கவே இல்லை.. இனி எப்போது அமெரிக்கா வந்தாலும் அப்படியே நடந்து கொள்வேன் தேங்ஸ் அண்ணே.. உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. அண்ணன் எங்களை விமான நிலையத்தில் ஏற்றிவிட்டுவிட்டு பிரிய மனமின்றி கண்கலங்கினார். எங்களுக்கு இப்பயணத்தில் இது ஹாட்ரிக் வெற்றி... நாங்களும் கண் கலங்கியபடியே விடை பெற்றோம். பை பை பர்மிங்காம்..!

Saturday, 27 February 2016

மிசெளரி - செயின்ட் லூயிஸ்..

#மிசெளரியில்_மீண்டுமொரு_வெற்றி

டெட்ராய்ட் நகரில் இருந்து விடை பெற்றுக்கொண்டு நாங்கள் விமானம் ஏறியது மிசெளரி மாகாணத்தின் செயிண்ட் லூயிஸ் நகருக்கு. இந்த மொத்த  அமெரிக்கப் பயணத்தையும் ஏற்பாடு செய்த நண்பர் விஜய் மணிவேல் வசிக்கும் ஊர். மிசெளரி தமிழ்ச்சங்கத்தின் தலைவரும் அவரே. 

அதீத பனிப் புயலால் வாஷிங்டன் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதால் பரபரப்பின்றி கொஞ்சம் ரிலாக்ஸாக கிளம்பினோம். இந்த பயணத்தில் நாங்கள் அதிக நாள் இருந்த ஊர் செயிண்ட் லூயிஸ். விமான நிலையத்திற்கே நண்பர் சுரேஷுடன் வந்து எங்களை வரவேற்றார் விஜய்.

செயிண்ட் லூயிசும் குளிர் மிகுந்த ஊர்.. மரங்கள் வீடுகள் எல்லாமே ஜகன்மோகினிப் பேய் போல வெள்ளை வெள்ளையாக பனி படர்ந்து நின்றது.. கைகிளவுசிற்குள்ளும் காது மடல்களிலும் வந்து கிச்சு கிச்சு மூட்டியது குளிர். 40 நிமிட பிரயாணத்திற்குப் பின் விஜய் வீடு வந்து சேர்ந்தோம் வந்தவுடன் டைனிங் டேபிளை பார்த்து மலைத்து நின்றோம்.!

சுடச்சுட மதுரை இட்லி, அருமையான மட்டன் குழம்பு சிக்கன் என இரவு உணவு... ஆரம்பமே அசத்தலாக இருந்தது.. அமெரிக்காவில் ஓட்டலை விட வீடுகளில் தங்குவது தான் பெஸ்ட் ஏனெனில் பெரிய விருந்தே காத்திருக்கும் பொருளாளர் வீட்டிலிருந்து சிக்கன் குழம்பு..செயலர் வீட்டிலிருந்து ஃபிஷ்..

இப்படி ஒவ்வொருவரும் ஒரு மெனு செய்து நம் டைனிங் டேபிளை நிறைத்து விடுவார்கள்.. இதை அமெரிக்கா முழுவதும் எல்லா ஊர்களிலும் கண்டோம். நல்ல ஓய்வு சாப்பிடுவது தான் எங்கள் வேலை. நாங்கள் அங்கு போனது திங்கள் இரவு அடுத்த 4 நாட்கள் முறை வைத்து விடுப்பு எடுத்துக் கொண்டு கவனித்தனர்.

அதிலும் விஜய் வீட்டில் விதவிதமாக சமைத்து போட்டு எங்களை கவனித்துக் கொண்டதை மறக்க இயலாது..விஜயின் திருமதி சுமதி மதுரைப் பெண் என்பதால் சமையலில் ஊர்மணம் இருந்தது.. அதிலும் எந்த நேரத்திலும்
கேட்கக் கேட்க ஆப்பாயிலும் முட்டை தோசையும் தங்கு தடையின்றி சப்ளை செய்வார்.. கொஞ்சமும் முகம் சுளிக்கமாட்டார்.

செவ்வாயன்று எங்கும் போகவில்லை விஜய் ஓய்வு எடுக்கச் சொல்லிவிட்டார் நான் ஜெட் லாகில் இருந்து பரிபூரணமாக வெளி வந்து விட்டேன்.. கிறிஸ்டோபர் மட்டும் மதியம் மாலை வேளைகளில் தூங்கிவிட்டு இரவு முழுவதும் கொட்டக்கொட்ட விழித்துக் கிடந்தார். புதன்கிழமை விடிந்தது.

இன்று மெராமெக் என்னும் குகைக்கு நண்பர் கணபதி அழைத்துச் சென்றார் மதுரைக்காரர்.. அருமையான அனுபவம்.. அடுத்த நாள் லிங்கன் நினைவிடம் இதற்கு விஜயே வந்திருந்தார்..ஆபிரகாம் லிங்கனை நேரில் பார்த்த உணர்வு இரவு பஃபல்லோ விங்சில் அருமையான டின்னர் கொடுத்தார்.

அடுத்தநாள் வெள்ளிக்கிழமை ஈரோடு மகேஷ் எங்களுடன் வந்து இணைந்து கொண்டார்.. மதியம் எங்களை மெராமெக் அழைத்துச் சென்ற மதுரைக் காரர் கணபதி சார் வீட்டில் ஒரு சேஞ்சுக்காக சுத்த சைவ விருந்து.. வீட்டில் ஒரு பெரும் சரவணபவனே திறந்திருந்தார் திருமதி கணபதி.

அசைவ உணவு சாப்பிட்டு பீடா சாப்பிடும் உணர்வு வருவது இயல்பு.. சைவ உணவு சாப்பிட்டு பீடா சாப்பிடும் உணர்வு எழுந்தால் சமையல் மிக மிகப் பிரமாதம்ன்னு அர்த்தம். பீடா தேவைப்பட்டது. விடை பெறும் போது சாக்லெட் உள்ளிட்ட சில பரிசுப்பொருட்களை எங்களுக்குஅளித்தனர்.

மறுநாள் நிகழ்ச்சி என்பதால் அன்று இரவு விருந்து தமிழ்ச்சங்கத்தின் குடும்பத்தினரோடு ஏற்பாடு.. அதுவும் களை கட்டியது. மறுநாள் மாலை நிகழ்ச்சி விழா அரங்கிற்கு சென்றோம்.. 600 பேர் அமரும் அரங்கு நிரம்பி வழிந்தது.. குழந்தைகள் கலை நிகழ்ச்சிக்குபிறகு எங்கள் நிகழ்ச்சி.

டெட் ராய்ட்டில் கிறிஸ்டோபர், நான் சசி மூவரும் மட்டும் தான் நிகழ்ச்சி செய்தோம்...இம்முறை ஈரோடு மகேஷ் இணைந்து கொண்டதால் நிகழ்ச்சி இன்னும் மெருகேறியது அரங்கம் அதிர கைத்தட்டல்கள் ஒலிக்க, அலை அலையாய் சிரிப்பொலி எழுந்த வண்ணம் இருந்தது.

தமிழ்ச்சங்கத்துடன் அய்யா அப்துல் கலாம் நினைவு அமைப்பும் ஒரு அங்கமாக இருந்து சென்னை வெள்ள நிவாரணத்திற்கு  நிதி திரட்டப் பட்டது. எங்களுக்கு நினைவுப்பரிசும் பொன்னாடைகளும் வழங்கி கவுரவித்தனர்.. அடுத்த நாள் அலபாமாவில் நிகழ்ச்சி அதிகாலைப் பயணம் என்பதால் விரைந்து கொண்டிருந்தோம்.

நண்பர் விஜய் பெருமிதத்துடன் நிற்க அங்கிருந்த  முன்னாள் தலைவர் பாண்டியன், சுரேஷ், கார்த்திக், புவனா, உள்ளிட்ட தமிழ்ச்சங்க நிர்வாகிகள் அனைவரும் எங்களை வாழ்த்து மழையில் நனைத்துக் கொண்டிருந்தனர்.. எங்களுக்கு நண்பர் விஜய்யின் அபார உழைப்பு அப்படியே பற்பல மாண்டாஜ் காட்சியாக கண் முன் விரிந்தது.

நான்கு மாதத்திற்கு முன் போனில் எங்களை அழைத்தது, யார் யார் அங்கு வரவேண்டும் என தேர்வு செய்தது, நிகழ்ச்சி தேதிகளை முடிவு செய்தது, மற்ற தமிழ்ச்சங்கங்களை ஒன்றிணைத்தது, எங்களுக்கு விசா அப்ளை செய்து விசா கிடைத்ததும் மகிழ்ந்தது, பயண ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தது எங்களுக்கு போதிய தகவல்கள் தந்தது...

பயணத்திற்கு தேவையான பொருட்களை எடுத்து வரச்சொன்னது.. குளிர் பற்றி கூறி தற்காப்பு உடைகள் அணியச் சொன்னது, பயண விவரங்களை எல்லா விமான டிக்கெட்டுகளை முறையாக புத்தகம் போல கொடுத்தது, எங்களது அதிக லக்கேஜ் பெட்டிகளுக்கு கட்டணம் கட்டியது, முக்கியமாக எங்கள் லூசுத்தனங்களை சகித்தது. 

அப்பப்பா இத்தனையும் இந்த ஒரு மனிதர் தான் ஏற்பாடு.. அந்த உழைப்பிற்கு பலன் கிடைத்த மகிழ்ச்சியும் அவர் முகத்தில் பிரதிபலித்தது. நாங்கள் அவரிடம் விடை பெறும் போது சொன்னார் நான் அடுத்த நிகழ்ச்சிக்கு விஸ்கான்சின் வருவேன் அப்போ விடை பெற்றுக் கொள்ளலாம் என எங்களை அன்போடு அணைத்து விடை தந்தார்.

அவர் முகத்தில் மிசெளரி நிகழ்ச்சி வெற்றிக் களிப்பும் அடுத்த ஊர் நிகழ்ச்சிகளும் இதே போல அமையவேண்டுமே என ஒரு எதிர்பார்ப்பும் கலவையாக தெரிந்தது.. ஆனால் அவர் நினைத்தபடியே அது அடுத்தடுத்து நிறைவேறியது.. எங்கள் அமெரிக்கப் பயணத்தில் மிசெளரியில் (செயின்ட் லூயிஸ்)சொந்தமானது மீண்டும் ஒரு வெற்றி. 

மிச்சிகன் - டெட்ராய்ட்..

#ரெடி_ஸ்டார்ட்_கோ
(ஒரு வெற்றிப் பயணம்)

சிகாகோ..! ஸ்வாமி விவேகானந்தருக்கு மட்டுமல்ல எங்களுக்கும் மறக்க முடியாத நகரம். யெஸ் எங்கள் முதல் அமெரிக்க பயணத்தில் நாங்கள் கால் பதித்த முதல் அமெரிக்க நகரம்.! பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் என அனைவரையும் சகோதரத்துவத்துடன் அழைத்த வீரத்துறவியின் அதிர்வலைகள் எம்மீது மோத மெய்மறந்து நின்றோம்.எங்களை வந்து சந்தித்தார் நண்பர் வெற்றி. ஆம் அமெரிக்காவில் நாங்கள் முதன்முதலில் சந்தித்தது வெற்றியைத்தான்.!

அது அந்தப் பயணம் முழுவதும் தொடர்ந்தது. அமெரிக்காவில் எங்கள் முதல் நிகழ்ச்சி டெட்ராய்ட் நகரில்! மிச்சிகன் மாநில தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா. எங்களை சிகாகோவிலிருந்து டெட்ராய்ட்டுக்கு  வழியனுப்பத்தான் வெற்றி வந்திருந்தார். ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் தொடங்கியது. அவர் எங்களுக்காக சிகாகோ சர்வதேச டெர்மினலில் காத்திருந்தார் அது தெரியாமல் நாங்கள் டிரைன் ஏறி டொமஸ்டிக் டெர்மினல் வந்துவிட்டோம்.

வைபை சற்று தாமதமாக கனெக்ட் ஆக ஒரு வழியாக எங்களை அந்த டெர்மினலில் வந்து பிடித்தார். அமெரிக்க காபியை ஆளுக்கு ஒரு வாளியில் வாங்கித்தந்தார்.. (அம்மாம் பெருசு) 21 மணிநேரப் பிரயாணக் களைப்பை அந்த வாளியில் போட்டு கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டோம். அங்கிருந்து டெட்ராய்ட் சங்கத் தலைவர் அண்ணாதுரையிடம் போனில் பேசினோம் அவர் கார்த்திக் என்பவர் உங்களை அழைத்துச் செல்ல வருவார் என்றார்.

வெற்றியிடம் விடை பெற்றுக் கொண்டு விமானம் ஏறினோம். மீண்டும் 1மணி நேரப் பயணம் வந்தது டெட்ராய்ட்... லக்கேஜுகளை கைப்பற்றிக் கொண்டு வெளியேறி உறைந்து நின்றோம். அவ்வளவு பனி பெய்து கொண்டிருந்தது அவசர அவசரமாக கையுறை குல்லாக்களை அணிந்து கொண்டு கார் ஏறினோம். வழியெங்கும் பனிதூவி எங்களை வரவேற்றது 40 நிமிட கார்ப் பயணம் தலைவர் அண்ணாதுரை அவர்களின் இல்லத்தில் முடிந்தது.

அவர் வீட்டில் தான் எங்களுக்கு தங்கும் வசதி செய்யப்பட்டு இருந்தது. நள்ளிரவு என்பதாலும் அமெரிக்காவில் அந்த வழக்கம் இல்லை என்பதாலும் யாரும் ஆரத்தி எடுக்காமலேயே அவரது வீட்டிற்குள் வலதுகாலை எடுத்து வைத்தோம். அந்த இரவிலும் சூடான உருளைக் கிழங்கு காரக்கறி லெமன் சாதம் வெள்ளை சாதம் ரசம் அப்பளம் என கிராண்ட் அண்ட் சிம்பிள் உணவு. முக்கியமாக வயிற்றுக்கு கெடுதல் தராத அருமையான உணவு.

அந்த இரவிலும் குளித்துவிட்டு தான் நான் சாப்பிடுவேன் என அவர்களை கிலியேற்றிவிட்டு குளிக்கப் போனேன். சசியும் கிறிஸ்டோபரும் நான் தலை துவட்டும் போதே சாப்பிட்டு தூங்கிவிட்டனர் என அவர்கள் அறையில் இருந்து வந்த மெல்லிய குறட்டை ஒலி என் காதில் சொல்லிப்போனது.. அடுத்த 10 நிமிடத்தில் அதே குறட்டை மொழியில் நானும் சாப்ட்டாச்சு என அவர்களுக்கு நான் பதில் தந்தேன். நிம்மதியாக உறங்கினோம்.( அவர்கள்?!)

காலை அவர் வீட்டுக்கு வெளியே வந்து மெய் மறந்தோம். சுற்றிலும் பனி படர்ந்திருந்தது மரம், புல்தரை,சாலை, வீட்டுக்கூரை என கடவுள் போல எங்கும் வியாபித்திருந்த  பனியை ரசித்தோம். சூடான காபியுடன் அதை ரசித்தது இன்னும் அருமை. காலையில் சூடான வெண்பொங்கல் இட்லி வடை என அருமையான சமையல் சுகுமாரி மேடத்தின் கோபிசெட்டி கொங்கு ஸ்டைல் குழம்பு வேறு. திருப்தியாக சாப்பிட்டு கிளம்பினோம்.

டெட்ராய்ட்டில் நடக்கும் கார் எக்ஸ்போ மிகப் பிரபலம். அங்கு செல்லும் அருமையான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. ஓடுகிற (கொஞ்சம் உறைந்த) டெட்ராய்ட் ஆற்றின் அந்தப்பக்கம் கனடாவின் ஆண்டாரியோவும் இந்தப்பக்கம் டெட்ராய்ட்டும் அதை வேடிக்கைபார்த்துக் கொண்டே கார் எக்ஸ்போவிற்குள் நுழைந்தோம். ஆகா உலகின் எல்லா பிராண்ட் கார்களும் அணிவகுத்து நின்றன. வண்ணமயமான கர்னிவலும் நடந்தது.ஆசை தீர கால் வலிக்க சுற்றிப் பார்த்தோம்..

 நண்பர் ப்ரகாஷ் வந்து எங்களுடன் இணைந்து கொண்டார். இனிய நினைவுகளுடன் அடுத்த நாள் நிகழ்ச்சி என்பதால் விரைவில் கிளம்பினோம். ஜனவரி 23 சனிக்கிழமை மீண்டும் அருமையான காலை உணவு நல்ல ஓய்வு எங்கள் நிகழ்ச்சி குறித்த திட்டமிடுதல் என மதியம் வரை நேரம் போனது மீண்டும் மதிய உணவுக்குப் பின் ஒரு குட்டித்தூக்கம் போட்டு நன்கு ஃபிரெஷ் ஆகி கிளம்பினோம். நிகழ்வு நடை பெறும் பேவர்லி ஹில்ஸ் பள்ளியை அடைந்தோம்.. 

அமெரிக்க வாழ் தமிழர்களின் குழந்தைகள் பெரியவர்கள் கலந்து கொண்ட பொங்கல் விழா போட்டிகள் நிறைவுற்று அனைவரும் அறுசுவை உணவை ருசித்து எங்கள் நகைச்சுவையை ரசிக்கக் காத்திருந்தனர். மேடையில் சசி முதலில் தன் நகைச்சுவையை ஆரம்பித்து கைத்தட்டல்கள் அள்ள மெல்ல மெல்ல பார்வையாளர்களை கிறிஸ்டோபர் ஆக்ரமிக்க நிகழ்ச்சி களை கட்டியது. 

பிறகு என் பணி மிகச் சுலபமாகிப் போக நிகழ்ச்சி முழுவதும் கரவொலியும் சிரிப்பொலியும் எழுந்து கொண்டே இருந்தது. நிறைவாக நிகழ்ச்சியை முடிக்கும் போது 2மணிநேரம் ஆகிவிட்டது என மேடையில் நாங்கள் சொன்ன போதுதான் பலர் கைக் கடிகாரத்தையே பார்த்தனர்.. அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி எங்களை பெருமை படுத்தினர். எங்கள் அனைவருக்கும் பொன்னாடை நினைவுப் பரிசுகளும் வழங்கி கவுரவித்தனர்.

இதை அப்படியே 6ஜெராக்ஸ் காப்பி எடுத்தது போலத்தான் அடுத்த 6 நிகழ்ச்சிகளும் பிறகு நடந்தன. ஆனால் இனி எங்கு நடந்தாலும் எத்தனை முறை அமெரிக்கா போனாலும் மிச்சிகன் தமிழ்ச்சங்கத்தையும் டெட்ராய்ட்டையும் மறக்க இயலாது. எங்கள் முதல் நிகழ்ச்சி அல்லவா.! தலைவர் அண்ணாதுரை முருகேசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும்  மகேஷ் பாஸ்கரன், கார்த்திக் சாமிவேல், ஜகதீஷ் ஈரையன்,ராஜ் பழனிவேல், சாய்பிரபு, ஸ்ரீதர் லட்சுமிநாராயணன், சேதுராமலிங்கம் சுந்தரம்,கார்த்திக் லிங்கநாதன், ப்ரியா மகேஷ், வித்யா சதீஷ், அபர்ணா ஸ்ரீராம் உள்ளிட்ட அனைத்து தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கும்..

போர்டு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நண்பர் பிரகாஷ் அவர்களுக்கும் எங்கள் இதயங்கனிந்த நன்றி. டெட்ராய்ட்டை உலகக் கார்களின் நகரம் என்பார்கள்.. நாங்கள் இங்கு வெற்றிகரமாக ஸ்டார்ட் ஆனோம் இந்தப் பயணம் முழுவதும் அவ்வெற்றி எங்களுடன் இடையூறின்றி தொடர்ந்து கொண்டே இருந்தது. நாளையும் பல வெற்றிகளை குவிக்கும். எங்களால் என்றும் மறக்க முடியாது அமெரிக்காவில் எங்கள் முதல் காலடி பட்ட மிச்சிகன் மாகாண நினைவுகளை.

Tuesday, 23 February 2016

ஹலோ அமெரிக்கா - 3

#அமெரிக்கவாழ்க்கையும்_தமிழர்களும்

பார்ட் - 3

வேலைக்காக யாரும் யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது. வேலைக்குப் போகாத பெண்கள் கூட பிள்ளைகளை அழைத்து வருவது டாக்டரிடம் போவது போன்ற காரியங்களுக்குத் தன் கணவனை எதிர்பார்த்து இருக்கக்கூடாது என்பதற்காக டிரைவிங் அவசியம் கற்றுக் கொள்கிறார்கள். ஸ்கூல் பஸ் வசதியும் உண்டு.காலை 6 மணிக்கு எழுந்து குளித்து சமைத்து பிள்ளைகளை கிளப்பி 7:30க்குள் அவர்களை அனுப்பிவிட்டு கிளம்பினால்..

மீண்டும் வீடு வர 6:30 மணி ஆகிவிடும் திங்கள் முதல் வெள்ளி வரை ஓட்டம் சனி & ஞாயிறு விடுமுறை கொண்டாட்டம்.. தலை போகிற அவசரம் என்றாலும் சனி ஞாயிறு லீவு தான்.. டாக்டர் க்ளினிக்குகளே லீவுன்னா பார்த்துக்கோங்க. அவசரத்திற்கு எமெர்ஜென்சி மருத்துவமனைகளைத் தான் நாட வேண்டும். அந்தளவு விடுமுறை முக்கியம் ஒரு வருடத்திற்கே 10 நாட்கள் தான் அரசு விடுமுறை. அங்குள்ள நிறுவனங்களின் விதிகளுக்கேற்ப விடுமுறைகள் மாறுபடும்.

ஒருவருக்கு வருடத்திற்கு 20 நாட்கள் தான் அதிகபட்ச விடுமுறை.. இதை சேமித்துக் கொள்ளலாம்..அதனால் தான் நம் மக்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை விடுமுறையை குருவி போல சேமித்து தாயகம் வந்து செல்கிறார்கள் அதிலும் தாய்நாட்டில் ஒரு அசம்பாவிதமோ ஒரு மரணமோ நிகழ்ந்தால் உடனடியாக டிக்கெட் கிடைத்தாலும் அங்கிருந்து கிளம்பி வந்து சேர குறைந்தது 40 மணிநேரம் ஆகும்.. 2 நாட்களும் ஆகலாம்.. இதற்கு நண்பர் மதுரை முத்து வீட்டில் நடந்த துயரச் சம்பவம் ஒரு உதாரணம்..

ஒரு மனிதன் சோகத்தை சுமந்து கொண்டு உலகின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு பிரயாணிப்பதை விட ஒரு கொடூரம் என்ன இருக்க முடியும்.. இது போன்ற அவர்களின் பல இன்னல்களை அறியாமல் நாம் அவர்களை சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் என சொன்னது எவ்வளவு தவறு என இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். மேலும் அலுவலகத்திற்கு தாமதமாக செல்வது 3 முறைக்கு மேல் ஆனால் மெமோ வழங்கப்படும் ப்ரொமோஷன் தாமதமாகும்.. அங்கு நேரத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம்.

Work from home என்னும் ஒரு ஆப்ஷன் இருக்கிறது.. வீட்டிலிருந்தபடியே வேலை.. ஆனால் பெண்டு நிமிர்த்தி விடுவார்கள்.. சும்மா ஓ.பி அடிக்க முடியாது இதுக்கு ஆபீசே போயிருக்கலாம் என்பது போல தொடர்ந்து பணிச்சுமை இருக்கும் எங்கேயும் நகர முடியாது. அதை கண்கூடாக பல இடங்களில் கண்டேன்.

அமெரிக்க கல்வி முறையையும் நம் பிள்ளைகளின் கல்வியையும் பற்றி அடுத்த பதிவில்

வரும்...