Saturday, 12 September 2015

பால்ட்டோ கிரகம்

#பால்ட்டோ_கிரகம்

பால்ட்டோ கிரகம் எங்கும் கடும் பஞ்சம் சுழலும் ப்ரொபல்லர் முன் லூஸ் ஹேராய் பறந்தது.. கிரகவாசிகள் போதிய உணவின்றி அவதிப்பட்டனர். முதலில் பால்ட்டோ கிரகத்தின் உணவுப் பொருட்களைப்பற்றி தெரிந்து கொள்வோம் அவர்கள் விண்ணில் விவசாயம் செய்பவர்கள்.

மக்களின் முக்கிய உணவுப் பொருள் ரிசியாவும் மைதுகோவும் தான். அங்குள்ள தாமாகோ என்னும் மிருகத்தின் மடியில் இருந்து சுரக்கும் நீல நிற ரத்தம் தான் அவர்களது பால்.. பஞ்சத்தில் அந்த மிருகங்களும் இறந்து விட எங்கும் பசி பட்டினி என கிரகமே அகோரப் பசியில் இருந்தது.

கிரகத்தின் சீஃப் ஆன வெலாண்டோ தன் அமைச்சரவையை கூட்டினான். முதலில் ஏனிந்த பஞ்சம்..? அதற்கு காரணம் என்ன..? எனக்கேட்டான்.
பால்ட்டோவின் வேளாண்துறை மந்திரியான பிலூக்கா பதிலுரைத்தார் 
நமது அண்டைக் கிரகம் லிலாவோ என்பது உங்களுக்குத் தெரியும்

கடந்த ஆண்டு அங்கு விண் புழுதிப் புயல் ஏற்பட்டதும் தெரியும் அதன் புகையில் இருந்து கிளம்பிய தூசுக்கள் நம் கிரகத்தில் படிந்துவிட்டன அதுவே காரணம்.மேலும் அந்த தூசினால் நம் விண்வளம் பாதிக்கப்பட்டு எதுவுமே பயிரிட முடியவில்லை என்றார் கவலையாக. 

சரி உணவுக் கையிருப்பு எவ்வளவு? என்றான் வெலாண்டோ.. இன்னும் 1 மாதம் மட்டுமே என்றார் தலைகுனிந்து..ஓ.. பாஜியஸ்..(பால்ட்டோ கடவுள்) என்றவன் இப்போது என்ன செய்ய என்றான் மிகுந்த வேதனையுடன் நான் ஒன்று சொல்லவா என்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் பெகிலோ.

எல்லோரும் அவரைப் பார்த்தனர்.. நமது கிரகத்திற்கு ஏற்ற உணவு பொருட்களை நம் அண்டை கிரகங்களில் இருந்து ஏன் தருவிக்க கூடாது என்றார்.. அருமையான யோசனை நமது கிரகத்திற்கு அந்த உணவு ஒத்து வரவேண்டுமே என்றான் வெலாண்டோ.. அது அல்லவோ சிக்கல்.?

இல்லை நான் முன்பே நமது ஆட்களை அனுப்பி தேடச் சொல்லிவிட்டேன் இப்போது தான் அந்த நல்ல சேதி வந்திருக்கிறது.. நமது உணவைப் போலவே உணவு இருக்கும் ஒரு கிரகத்தை நம் விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்கள் நமக்கு உணவு தரவும் சம்மதித்துவிட்டார்கள் என்றார்.

வெலாண்டோ 'அப்படியா! அது எந்தக் கிரகம்.? அந்த கிரகத்தின் பெயர் பூமி..! ஆம் நாம் ரிசியோ என்கிறோம் அது அரிசி நமது மைதுகோ தான் அங்கு கோதுமை ரித்தகக் காய் என்னும் நமது காய் அங்கு கத்தரிக்காய் நமக்கு விண்ணில் விளைச்சல் அங்கு மண்ணில் விளைச்சல்

முதலில் அவர்கள் நமக்கு 1 மாதத்திற்கான உணவுப் பொருட்களை வழங்க சம்மதித்துள்ளார்கள் என்றார் பெகிலோ. ஓடிவந்து அவரைக் கட்டிக் கொண்டான் வெலாண்டோ அருமை.. அந்நிய கிரக முதலீட்டாளர்களை அழைத்து வந்து அனாசயமாக பஞ்சத்தை முறியடித்து விட்டீர் என்றான்.

எப்போது அவை இங்கு வருகிறது என்றான் நாளை மறுதினம் நம் விண் கப்பல்களில் உணவுகளை ஏற்றிக்கொண்டு விஞ்ஞானிகள் வந்து கொண்டு இருக்கின்றனர்.. எல்லோரும் பெகிலோவிற்கு தங்கள் தலையை கழட்டி கையில் வைத்து மரியாதை அளித்தனர் அது அங்கு உயரிய கவுரவம்.

அடுத்த வரியில் இந்தக் கதை முடிந்துவிடும் என்பதை நீங்கள் நம்ப மாட்டீர்கள். ஆம் பூமியின் ரசாயன விளை பொருட்களை சாப்பிட்ட பால்ட்டோ வாசிகள் அவர்கள் கடவுளான பாஜியஸ் திருவடிகளை அடைந்தார்கள்..அந்த கிரகம் அழிந்தது.

ஏலீன் கிரகம்

#ஏலீன்_கிரகம்

ஏலீன் கிரகத்து தலைவன் எல்ஜாவிற்கு கவிதை என்றால் உயிர்.. மஞ்சள் அமில ஆற்றில் கரையும் கப்பல்கள், எல்லா விண்வெளியிலும் என் ஓடம், கேலக்ஸி போர்க்குரல்கள், நைட்ரஜன் உமிழும் அதரங்கள் இப்படி பல (தலைப்புகள் எல்லாம் தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறேன்) கவிதைத் தொகுப்புகளை ஏலீன் மொழியில் எழுதி வெளியிட்டவன்.

அவனது கிரகத்தில் வீட்டுக்கொரு கவிஞன் இருந்தான்.. ஏலீன் கிரகத்து விண்கல்லும் கவிபாடும் என்னும் சொல் வழக்கு அங்கிருந்தது. எப்லி, அஜாக்கின், முஜ்ஜா, ஏக்லான், அவிகான், சோமோ, ஏகாலா, எர்போ போன்ற எட்டு அரசவைக் கவிஞர்கள் அங்கு இருந்தார்கள். 

எப்லி தான் தலைமைக் கவிஞன் அவர்கள் "எஷ்ட எக் எஜாங்கள்" என்று அழைக்கப்பட்டனர். நாம் பூமியில் வரலாற்றில் படித்த அதே அஷ்ட திக் கஜங்கள் தான் இதன் அர்த்தம்.. கவிதைகள் பல புதிது புதிதாக கேட்டுக் கேட்டு கவிதை பித்து பிடித்து அலைந்தான் எல்ஜா.

தினம் புதிது புதிதாக எத்தனை தான் பாடுவது..செய்வதறியாது திகைத்தனர் எ.எ.எக்கள்.. திடீரென ஒரு உத்தரவு போட்டான் எல்ஜா இனி புதிய கவிதை படைக்காவிட்டால் அவர்கள் ஏலீகா நதியில் வீசப்படுவார்கள் என்று அனைவரும் குலை நடுங்கிப் போனார்கள்.

ஏலீகா அங்குள்ள அமில ஆறு அதில் வீசப்படுபவர்களில் சாம்பல் கூட சாம்பலாகும்.. திடீரென எப்லி என்னிடம் ஒரு உபாயம் இருக்கிறது ஏற்கனவே ஏற்பாடு செய்து விட்டேன் கையில் கிடைத்துவிட்டால் அதை செயல்படுத்த வேண்டியது தான்.. என்ன அது..?என்றனர் மற்ற எழுவரும் ஒரே டெசிபலில்.. கொஞ்சம் பொறுங்கள் அதோ பாருங்கள் என்றான்.

வானில் ஒரு பறக்கும் தட்டு பறந்து வந்தது அதில் இருந்து இறங்கிய ஒருவன் விநோத ஜந்து போல இருந்தான்.. அவனுக்கு கண்கள் இருக்கும் இடத்தில் வாய் இருந்தது கால்கள் கை இருக்குமிடத்திலும் கைகள் காலிருக்கும் இடத்திலும் முளைத்திருந்தது முதுகு முன்புறம் இருந்தது.

நீங்கள் இங்கேயே இருங்கள் எனக்கூறிவிட்டு அவனிடம் போய் எதையோ பெற்றுக்கொண்டான் எப்லி.. அவனும் காலாட்டி விடை பெற்றான்.. பறக்கும் தட்டில் ஏறி கதவடைத்து மெல்ல மேலெழுந்து மறைந்தான்.. இப்போது மற்றவர்கள் பரபரப்பாக எப்லியை சூழ்ந்தனர்..

எப்லி யார் அந்த விநோத ஜந்து.. பார்க்கவே படு பயங்கரமாக இருந்தானே என்றார்கள்.. ஓ அவனா அவன் தான் மனிதன் பூமியிலிருந்து வந்திருக்கிறான் பூமியில் இந்தியா எனும் நாட்டில் தமிழ்நாடு என்னும் பிரதேசத்தை சேர்ந்தவன்.. அவன் தான் நம் உயிர்காக்கப் போகிறான்.

எப்படி என்றார்கள்.. இதோ இதைக் கேளுங்கள்.. அவன் தந்த டிஸ்க்கில் உள்ளதை பார்த்து படித்து விட்டு மெல்ல நிமிர்ந்து சொன்னார் எப்லோலில் எப் எப் ஏலில்லே எப்லோல் எய்லறின் எப்லிரவு.... இது எப்படி இருக்கு என்றார் எப்லி எழுவரும் ஆகா அற்புதம் அபாரம் இது யார் எழுதியது என்றார்கள் முதலில் இந்த பாடலை அந்த மொழியில் சொல்லிவிடுகிறேன்.

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.. இதை எழுதியவர் திருவள்ளுவர் என்னும் புலவர்.. இது போல 1330 இருக்கிறது அது மட்டுமல்ல இதைக் கேளுங்கள் எண்ணாலிலோ எக்லியோ.. எண்ணிலேலோ எக்லிலியோ.. இது எப்படி இருக்கு.

ஆஹா இது இன்னும் பிரமாதம் இதை எழுதியவர் யார்.? இதை எழுதியவர் கம்பர்.. அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினால் இதுதான் அந்த வரி, அதுமட்டுமல்ல ஒளவையார், இளங்கோ, சேக்கிழார், நக்கீரர், பாரதி, பாரதிதாசன் பாசுரம், பிரபந்தம், திருப்பாவை, திருவெம்பாவை என பல நூல்கள் இருக்கிறது.

அதில் பல்லாயிரக்கணக்கான பாடல்களும் இருக்கிறது.. எல்லாவற்றையும் ஏலீன் மொழியில் மொழி பெயர்த்து எழுதவேண்டும் இப்போதைக்கு சில பாடல்கள் எழுதியிருக்கிறேன் இனி அனைத்தையும் மொழி பெயர்த்தால் நம் போல பல கவிஞர்கள் இந்த கிரகத்தில் இன்னும் பல நூறாண்டுகள் உயிர் பயம் இன்றி வாழலாம் என்றார் எப்லி. 

அது சரி இவ்வளவு எழுதிய தமிழர்கள் இதை நன்கு படித்து பயன்படுத்துகிறார்களா என்றனர் எழுவர், நிறைய தொகைக்கு என்னிடம் விற்றுவிட்டார்கள் ஒருவேளை நமக்கு வந்தது போல உயிர் பயம் வந்தால் தான் பயன்படுத்துவார்கள் என நினைக்கிறேன்என்ற போது...

ஏலீன் கிரகத்து சேவலான எக்லோ கூவ அடடே பாருங்கள் நேரம் போனதே தெரியவில்லையே மேற்கில் சந்திரன் உதித்துவிட்டான் விடிந்துவிட்டது வாருங்கள் நாம் காற்றாடிவிட்டு அரண்மனைக்கு செல்வோம் எனக்கூற எ.எ.எக்கள் கையில் இருந்த டிஸ்க்குளில் இருந்து மெல்லச் சிரித்தது தமிழ். சிரிப்பு எனக்கு கேட்டது உங்களுக்கு.????

அவிலா கிரகம்

#அவிலா_கிரகம்

அவிலா கிரகத்தில் வடக்கே சூரியன்கள் உதித்தன.. ஆம் அங்கு மூன்று சூரியன்கள்.. வெளிர் மஞ்சள் நிறத்து மரங்களில் ப்ளோரசண்ட் ஆரஞ்சு இலைகள் ஒளிர்ந்தன.. மரத்தில் அமர்ந்திருந்த பச்சை நிற காகங்கள் இனிமையாகக்கூவின அதிகாலை உடற்பயிற்சிக்கு அவிலா கிரகவாசிகள் அனைவரும் கிளம்பிக்கொண்டிருந்தனர். ஆம் அங்கு அது கட்டாயம்.

உடற்பயிற்சி செய்யாதது தேசத் (கிரகத்) துரோகம்.. அஜ்லாவும் கிளம்பினான் அவன் மனைவி அஜிலாவும் மகள் சிண்ட்லாவும் கிளம்பிக் கொண்டிருந்தனர். அவிலா கிரகவாசிகள் அனைவரின் பெயரும் லா என்றே முடியவேண்டும் இதுவும் அந்த கிரக லா"க்களில் ஒன்று. அரசு உடற்பயிற்சி கூடங்களில் அனைவரும் அவர்களின் ஹாய் ஆன  ஹவ்லா சொல்லிக் கொண்டார்கள். அங்கு தூரத்தில் அவளைப்பார்த்து திடுக்கிட்டான் அஜ்லா.

அது..அது.. சிண்ட்லா போல இல்லை... அவளா... ச்சே ச்சே.. இருக்காது அவள் தான் போன ஒளியாண்டில் டெஸ்ட்ராய் செய்யப்பட்டவள் ஆயிற்றே.. அவ்லா கிரகத்தில் எல்லாருக்கும் இறக்கும் நாள் தெரியும் அங்கு அந்த நாளில் அவர்களை நாற்காலிகளில் அமரவைத்து லேசர் பாய்ச்சி அழித்து விடுவார்கள். கிரக விதிகளை மீறினாலும் அதே தண்டனை தான் சிண்ட்லா தண்டனை பெற்றவள் அதுவும் உடற்பயிற்சி செய்யாதக் குற்றத்திற்காக.

லேசர் நாற்காலியில் அவன் கண் முன்னே பொசுக்கப்பட்டவள் அவள்.. அவன் முன்னாள் காதலி அவள்..! அவள் நினைவாகத்தான் அவன் குழந்தைக்கும் அவளின் பெயரிட்டு இருந்தான். இவள் எப்படி இங்கு கொஞ்சம் வியந்து போனான்.. மெல்ல நெருங்கி அவ்லா என்றான்.. அவள் புன்னகைத்து திரும்பி ஒரு நிமிடம் என்பது போல கைகாட்டிவிட்டு காதுகளில் ஒரு ப்ளூடூத் போன்ற செட்டை அணிந்து கொண்டாள்.

அவள் கண்களில் இவன் நமக்கு தெரிந்தவன் என்பது போலவே எதுவும் காட்டிக் கொள்ளவில்லை.. இப்போது சொல்லுங்கள் என்றாள்.. நீ..நீ.. நீங்கள் சிண்ட்லா தானே... புன்னகைத்தாள் என் பெயர் அகிலா நான் பூமியைச் சேர்ந்தவள்.. அவிலா கிரகம் பூமியில் நடத்திய விண்வெளிப் புதிர் போட்டியில் வென்று முதல் பரிசும் மூன்று மாதம் இந்த கிரகத்தின் சிறப்பு விருந்தினராக சுற்றிப்பார்க்கும் வாய்ப்பும் பெற்றிருக்கிறேன்.

உங்கள் மொழி எனக்கு தெரியாது நான் காதில் அணிந்திருக்கும் இந்த டிரான்ஸ்லேட்டர் இருந்தால் தான் நான் பேசுவது உங்களுக்கும் நீங்கள் பேசுவது எனக்கும் புரியும் என்றாள். அஜ்லாவால் நம்பவே முடியவில்லை இது எப்படி என எண்ணி எண்ணி வியந்தான்.. பரஸ்பரம் தன்னையும் தன் குடும்பத்தையும் அறிமுகப்படுத்திக் கொண்டான். அதற்கடுத்த நாட்களில் அடிக்கடி அவளை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றான்.

அக்கிரகத்தின் கோவிலான ஜெகலா அம்மன் கோவிலில்.. கோயில் மிருகமான ரோஸ் நிறத்து தும்பிக்கை வைத்த சிங்கத்திடம் ஆசி பெரும் போது.. அங்கு இருக்கும் மஞ்சள் நிறத்து கடலின் பச்சை நிற பீச் மண்ணில் அவள் விளையாடிய போது.. கிரகத்தின் பெளர்ணமி தினத்தில் ஆரஞ்சு நிற வானில் தெரிந்த மஞ்சள் சதுர நிலா வெளிச்சத்தில் இரவு நேர வாக்கிங்..

இப்படி அவளை சந்திக்கும் வாய்ப்பு பெருகப் பெருக மீண்டும் அவன் காதல் துளிர் விட்டது. அகிலாவும் அஜ்லாவிடம் நெருங்கிப் பழகலானாள்.. கிரகத்தின் விருந்தாளி ஊர் திரும்பும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது இன்னும் இரண்டே தினங்கள் இருந்த போது இனி தாமதிக்க வேண்டாம் என நினைத்து அவளுக்கு அவளது அவிலா கிரக மொபைலான வோடோலாவை எடுத்தான் திரையில்  முப்பரிமாணத்தில் அகிலா என ஒளிர்ந்தது.

அட என்ன அவளே அழைக்கிறாள்!எடுத்து பேசியவன் இன்னும் குஷியானான் ஆம் அவனை நாளை சந்திக்க விரும்புவதாக அகிலா அழைத்தாள்.. அப்படியென்றால் அவளும் என்னை.. உற்சாகமானான் அவர்கள் தேசத்து உற்சாகப்பாடலான ஹேப்பிலா எனும் பாடலை மூக்கில் சீட்டியடித்து பாடினான்.. விடிந்தது.. பரபரப்பாக தன்னை அலங்கரித்து கொண்டு கிளம்பினான்.. அகிலாவை பார்த்ததும் மீண்டும் அவன் மூக்கில் ஒரு விசில்.

புடவையில் இருந்தாள்.. நான் நாளையே பூமி திரும்பவேண்டும் அதற்கு முன் நான் உங்களுக்கு ஒரு பரிசு தரவேண்டும் என்றாள். காதல் பொங்க அவளைப் பார்த்தான்... தன் கைப்பையில் இருந்து மஞ்சள் கயிறொன்றை எடுத்தாள் அகிலா..  (இந்த இடத்திலிருந்து இன்னொரு முடிவு படிக்க விரும்பினால் அடுத்த நான்கு பாராவை தாவி கடைசி 5வது பாராவை மட்டும் படிக்கவும்***** )

அவிலா கிரகத்தின் புனித நிறம் மஞ்சள் அதை இடுப்பில் கட்டுவது தான் அங்கு திருமணம் குதூகலித்தான் அஜ்லா.. மெல்ல அவனை நெருங்கி அவன் இடுப்பைத் தொட்டாள் அகிலா.. மெய்மறந்து கண்களை மூடினான்

சிறிது நேரம் ஆனது...என்ன இது ஒன்றும் ஆகவில்லையே கண்களைத் திறந்தான் அவன் இடுப்பின் மீது ஊன்றி இருந்த அவன் கைகளில் அதைக் கட்டிக் கொண்டிருந்தாள் அகிலா.. ஒரு வேளை பூமி முறைப்படி திருமணமோ.. என நினைத்து என்ன இது கைகளில் கட்டுகிறாய் அகிலா என்றான். இன்று பூமியில் ரக்ஷா பந்தன் என் சகோதரனாக நினைத்து உனக்கு கட்டினேன்... என்றாள் அகிலா.

அஜ்லாவின் மஞ்சள் ரத்தம் வெளிறிப் போய் அவன் முகம் சிவந்தது.. பை பை அண்ணா உன்னை இந்தத் தங்கை என்றும் மறக்க மாட்டாள்.. அவன் புறங்கையில் முத்தமிட்டாள் மெல்லக் கையசைத்து விடை பெற்றாள்.. அஜ்லாவின் முதுகில் இருந்த இதயம் ஒரு கணம் நின்று துடித்தது.. மறுநாள் பூமிக்கு செல்ல கலத்தில் ஏறினாள் அகிலா..

 அதற்கு அடுத்த நாள்அஜ்லா உடற்பயிற்சிக்கு போகாததால் டெஸ்ட்ராய் செய்யப்பட்டான்.


#இன்னொரு_முடிவு *****

தன் கைப்பையில் இருந்து மஞ்சள் நிறக்கயிறு ஒன்றை எடுத்தாள்.. இப்போது அவள் கண்ணில் காதல் மின்ன இதை என் கழுத்தில் கட்டுங்கள் அஜ்லா என்றாள்... மறுகணம் வீலா" என அலறி தலை வெடித்து இறந்து போனான் அஜ்லா.. 

அவிலாவில் பெண்கள் கழுத்தில் ஆண்கள் கயிறுகட்டுவது தான் அந்த கிரகத்தின் ரக்ஷா பந்தன் என்பதை அறியாத அகிலா அஜ்லா ஏன் தலை வெடித்து இறந்தான் என்பது புரியாமல் திகைத்து நின்றாள்.


Friday, 11 September 2015

விரல் மனிதர்கள்

#விரல்மனிதர்கள்

விஞ்ஞானி ப்ரொபசர் ராஜ் அந்த கண்ணாடிக்குடுவையை ஆவலாகப் பார்த்தார்.. சிறிய மீன் தொட்டி போல இருந்த அக்குடுவையில் ஃபேண்டஸி கதைகளில் வருவது போல விரலளவு மனிதர்கள் அமர்ந்து இருந்தார்கள்.. இவர் அவர்களுக்கு கட்டளையிட அவர்கள் பதிலுக்கு சொன்னதை செய்வார்கள் இது தான் அவரது கண்டுபிடிப்பு.. !

கிறுக்குத்தனமாக வித விதமான உயிரினங்கள் வளர்க்கும் ஹாபிகள் கொண்ட சில உலகக் கோடீஸ்வரர்களுக்காக அவர் இதை உருவாக்கி இருந்தார். ஒரு மனிதனின் விலை 50 இலட்சம் கிட்டத்தட்ட இதுவரை 50 பேரை தயாரித்து தந்துவிட்டார்.. முதலில் குடுவையில் அடைக்கப்பட்டு கோமாளித்தனங்கள் செய்து வந்த அவர்களை முதன் முதலில் மனைவி மீது சந்தேகப்பட்ட ஒரு கோடீஸ்வரன்..

அந்தக்குடுவையில் இருந்து ஒரு விரல் மனிதனை மட்டும் வீட்டுப்படுக்கையறையில் இறக்கிவிட கையும் களவுமாக பிடிபட்டாள் அந்த அம்மணி.. இதன் பிறகு விரலளவு மனிதர்கள் போட்டிக்கம்பெனி ரகசியங்கள் அறியவும்  ஃபைல்களைத் திருடவும் நைசாக பின்னால் வந்து லேப்டாபில் டைப் அடிக்கும் பாஸ்வேர்டை பார்த்து சொல்லவும் இதையே ஏ.டி.எம் போன்ற இடங்களில் வேவு பார்க்கவும் அனுப்பப்பட்டார்கள்.

இதனால் அதிக மவுசு கூடிப்போனதும் ஒரு மனிதனை ஒரு கோடிக்கு விலை நிர்ணயம் செய்தார்.. அப்படியும் 1000 மனிதர்களை தயாரிக்கும் ஆர்டர் கிடைத்தது இதோ முதல் ஆள் தயாரித்தாகிவிட்டது போன முறை 2 மனிதர்களை வாங்கிப்போன ஜம்னாலால் போன மாதமே ஒரு கோடி கொடுத்து இருந்தான். முழுதாக இன்னும் மூன்றே மாதம்..!

தான் ஆயிரம் கோடிக்கு அதிபதி... கனவில் மிதந்தார்.. கதவு தட்டப்பட்டது திறந்தார்.. ஜம்னாலால் புன்னகையுடன் நின்றான்.. அடடே வா வா லால் உள்ளே அழைத்துப்போனார்.. என்ன ப்ரொபசர் மெட்டீரியல் ரெடியா என்றான் லால்.. ஓ காலையிலேயே .. இதோ பார் குடுவையை காட்டினார் வாங்கிக் கொண்டு சரி ப்ரொபசர் கிளம்புகிறேன் என்றான் லால்.

என்ன அவசரம் லால் எதும் சாப்பிடுகிறாயா என்றார் ராஜ்.. இல்லை ப்ரொபசர் மெட்டீரியலை இப்போதே சப்ளை செய்தாக வேண்டும் பார்ட்டி இன்னும் 3 மணிநேரத்தில் அமெரிக்கா போக இருக்கிறார்கள் நான் போகவேண்டும் என்றான்.. சரி லால்1000 நபர்கள் கேட்டிருந்தாயே அதற்கு பாதித்தொகை அட்வான்ஸ் கேட்டு இருந்தேனே அதைத் தருகிறாயா என்றார் விரிந்த விழிகளுடன்.

ஹா..ஹா.. ப்ரொபசர் ஆர்டர் கேன்சலாகி விட்டது.. தேவையில்லை என்றான் லால்.. ஒரு நிமிடம் சுனாமியில் அடிபட்டார் ராஜ்... என்ன..???? ஏன் கேன்சல்???? என்றார்.. புரொபசர் உங்களிடம் ஏற்கனவே நான் வாங்கிய 2 விரல் மனிதர்களை உங்கள் லேப்பிலேயே வேவு பார்க்க அனுப்பி இந்த மனிதர்களை உருவாக்குவது பற்றி தெரிந்து கொண்டேன்.

இந்த ரகசியம் தெரிந்த பின்பும் உங்களுக்கு 1000 கோடி கொடுக்க நான் என்ன மடையனா.. என்றதும் தலை சுற்றி தடுமாறி கீழே விழுந்தார் ராஜ்... அவர் லேபின் ஜன்னல் திரையில் இருந்து இரு விரல் மனிதர்கள் சர சரவென இறங்கி ஓடிப்போய் ஜம்னாலாலின் கால்களில் ஏறுவது செருகிய அவர் கண்களில் மங்கலாகத்தெரிந்தது.

Wednesday, 9 September 2015

ரெவாட்டோ..

பரபரப்பாக இருந்தது நாசா அத்தனை விஞ்ஞானிகளும் ஒரு சேரக் கூடியிருந்தார்கள் நாசாவின் தலைமை அதிகாரி பெஞ்சமின் பெல்ப்ஸ் அழைப்பில் மிக மிக அவசரமாக கூடியிருந்தனர்.. அவர் முகம் பயங்கர பீதியில் இருந்தது.. சற்று செருமிவிட்டு நடுங்கும் குரலோடு ஆரம்பித்தார் டியர் கைஸ்.! இந்த பூமிக்கு மிகப்பெரும் ஆபத்து வந்து கொண்டிருக்கிறது இன்னும் 48மணிநேரத்தில் மிகப்பெரிய யுத்தம் நடக்க உள்ளது என்றார்.

இப்போது அனைவரும் திகிலுடன் அவரைப்பார்க்க.. ஒரு இளம் விஞ்ஞானி மிஸ்டர் சீஃப்.. எந்தெந்த நாட்டுக்கு நடுவே போர் என்றார்.. விரக்தியாக அவரைப்பார்த்து புன்னகைத்து இது நாடுகளுக்கு இடையேயான போர் அல்ல யங்மேன் நம் பூமியின் மீது ஒரு வேற்றுகிரக தாக்குதல்... அதாவது கேலக்ஸி வார்.. என்றார். அனைவரும் ஓஹ்....மைகாட் என்றனர் சேர்ந்திசையாக.

மிஸ்டர் சீஃப்.. அது எந்தக்கிரகம்.?தகவல் உண்மையானது தானா எனக் கேட்டார் நாசாவில் வேலை பார்க்கும் தமிழரான கிருஷ்ணமூர்த்தி.. கிருஷ்ணமூர்த்தி என்னும் க்ருஷ் 15 ஆண்டுகளாக இங்கு பணி புரிகிறவர் மிஸ்டர் கூல் எனப் பேரெடுத்தவர் தன் அபாரத்திறமையால் உதவி தலைவர் பதவிக்கு வந்தவர்.. ஏன் அடுத்த நாசா தலைமை பதவிக்கு அவர் பெயரும் பரிசீலனையில் உள்ளது. ஆம் உண்மைதான் மிஸ்டர் க்ருஷ் என்றார் சீஃப்.

பூமியின் மீது தாக்குதல் நடத்தவரும் கிரகம் ரெவாட்டோ என்னும் கிரகம் பால் வெளியில் யுரெனசின் தெற்கு பகுதியில் இருக்கிறது அதை ஆராய்ச்சி மேற்கொள்ள பூமியில்240 ஆண்டுகள் செலவழிக்க வேண்டும் இப்போது தான் ஒரளவு நாம் விஞ்ஞானத்தில் உயர்ந்திருக்கிறோம்.. அங்கு உயிரினங்கள் இருப்பதும் அவர்கள் நம்மை தாக்கவருவதும் இப்போது தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நமது 100 வருடங்கள் அவர்களுக்கு 1மாதம்.

அவர்களது கணக்கில் 2மாதங்களுக்கு முன்பே புறப்பட்டு விட்டனர் தற்போது இன்னும் 48 மணிநேரம் அதாவது அவர்களுக்கு 4விநாடிகள் நாம் தாக்கப்படுவோம் நேற்று நமது சாட்டிலைட்டுகளை அவர்கள் கடந்த போது தான் இவையெல்லாம் நமக்கு தெரிந்தன என்றார் கவலையுடன்.. என்ன நடக்கும் என எதிர்பார்க்கிறீர்கள் சீஃப் என்றார் க்ருஷ். 

அதுதான் தெரியவில்லை அவர்கள் எப்படி இருப்பார்கள் என்ன விதத்தில் தாகுவார்கள் எப்படி ஆயுதங்கள் வைத்திருப்பார்கள் எனத் தெரியவில்லை கையறு நிலையில் இருக்கிறோம்.. என்று சொன்ன போது வேகமாக அறை திறக்கப்பட்டது கண்ட்ரோல் பானலின் தலைமை அதிகாரி ஜேம்ஸ் பரபரப்பாக நுழைந்தார்.. சீஃப் ஆபத்து அவர்கள் பூமியைத் தாக்கிக் கொண்டே வருகிறார்கள் ஆயுதங்களை வீச ஆரம்பித்துவிட்டார்கள்.

முதல் குறியே நம் அலுவலகம் தான் என்ற போது ப்ப்ப்ப்ப்பூம் என்ற பேரொலியோடு ரோஜா நிறக் கதிர் கற்றை ஒன்று நாஸாவின் எதிரே உள்ள கட்டிடத்தை அப்படியே கபளீகரம் செய்தது.. அங்கு ஒரு புல் பூண்டு கூட இல்லை.. நாம் கணித்ததற்கும் மேல் தாக்குதல் அனைவரும் ஓடுங்கள் என்றார் சீஃப்.. தலை தெறிக்க ஓடினார்கள் அடுத்த 48 மணிநேரத்தில் பூமி ரெவாட்டோ கிரக வாசிகளின் பிடிக்கு போனது.

அவர்கள் வந்தகலங்கள் நாம்அணியும் கூலிங்கிளாஸ் வடிவத்தில் இருந்தன. செதில் செதிலான மஞ்சள் தோலும் பிங்க் கலரில் ஆட்டு முகமும் பயங்கரமாக இருந்தன ஆக்சிஜனை சுவாசிக்காதவர்கள் என்பதால் அவர்கள் பிரத்யேக மாஸ்க் அணிந்து இருந்தனர் ஒவ்வொருவரும் மூன்றடி உயரமே இருந்தனர்.. காதுகள் மடிந்து தொங்கின..

நெஞ்சிலும் ஒரு கை இருந்தது வாய் வயிற்றில் இருந்தது. அவர்களின் ஆயுதங்கள் நவீனமாக இருந்தன. பதுங்கி இருந்த மனிதர்களை வீடு வீடாக சென்று பிடித்து இழுத்து வந்து ஒரு பெரிய மைதானத்தில் நிறுத்தி வைத்துக் கொண்டிருந்தார்கள்.. தலை தெறிக்க ஓடிய விஞ்ஞானிகள் அனைவரும் வெகுதூரம் ஓடி விஞ்ஞானி க்ருஷ் வீட்டில் ஒளிந்திருந்தனர். என்ன செய்யலாம் என சீஃப் பை பார்த்து கேட்க அவர் உதடு பிதுக்கினார்.

கிருஷ் பார்த்தார் சரி இன்றோடு நம் வாழ்வு முடிந்தது இனி நொந்து என்ன ஆகப்போகிறது மனைவி வைதேகியை அழைத்து உன் கையால நம்ம ஊர் சாப்பாடு செய் நிம்மதியாக அதை சாப்பிட்டுட்டு போறேன் என்றவரை ஆச்சர்யமாக பார்த்தனர் விஞ்ஞானிகள் இவரு மிஸ்டர் கூல் தான் அதுக்காக இப்படியா.. என்றவர்கள் சாப்பாடு வேண்டாம் என்றார்கள்.

சரி நீங்க இருங்க நான் போய் குளிச்சுட்டு ஃபிரெஷ்ஷா வந்துடறேன்னு போனார்.. அவர் குளிக்கப் போன கொஞ்ச நேரத்தில் ரெவாட்டோ வாசிகள் அந்த வீட்டை சுற்றி வளைத்து நுழைய அதற்குள் க்ருஷ்ஷின் மனைவியும் சமையலையறையில் இருந்து வெளிப்பட வேற்றுகிரக வாசிகளைக் கண்டு அலறி தான் சமைத்ததை கீழே கொட்டிவிட யாரும் எதிர்பாரா அந்தப் பேரதிசயம் நடந்தது..

ரெவாட்டோ வாசிகள் அனைவரும் உயிர் போவது போல அலறி அடித்து ஓடினார்கள் அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் வந்த கலங்கள் எல்லாம் சர் சர்ரென்று விண்ணில் ஏறி தப்பிப் பறந்தன.. எதுவுமே தெரியாத க்ருஷ் தலை துவட்டியபடி குளியலறையில் இருந்து வெளிப்பட அனைவரும் பட படவென கையைத்தட்டி அவரை தூக்கிக் கொண்டார்கள்.

சீஃப் ஒருபடி மேலே போய் முத்தமே தந்துவிட்டார்... யூ மேட் எ ஒண்டர் ஜாப் க்ருஷ்.. கத்தியின்றி ரத்தமின்றி ரெவாட்டோவாசிகளை கதிகலங்கடித்து விட்டீரே.. உங்கள் ஐடியாவால் ரெவாட்டோவாசிகளின் பிடியில் இருந்து பூமி தப்பியது அவர்கள் ஓடிவிட்டனர் என்றார் சீஃப்.. என்ன ஓடிவிட்டார்களா எப்படி என்றார் ஆச்சர்யத்துடன் க்ருஷ்..!

ஆம் நம்மை சிறைபிடிக்க வந்தாரகள் உங்கள் மனைவி அவர்களை பார்த்து அலறி கையில் இருப்பதை கொட்டிவிட அவர்கள் ஓடிவிட்டனர் என்றபோது அது என்ன என ஆவலுடன் பார்த்தார் க்ருஷ்..! அங்கு தரையில் கொட்டிக் கிடந்தது உப்புமா..!

Saturday, 5 September 2015

அரவிந்தனுக்கு...

#யாதுமாகி_நின்றேன்

தம்பி இரா.அரவிந்த் எழுதிய புத்தகம்.. கவி இளவல் தமிழ் என்றால் முகநூலில் அனைவருக்கும் தெரியும். மிக இளைஞர் அவரது எழுத்துகளில் ரெளத்திரம் தெரியும்.. அவரது சொல்லாடலும் கற்பனைத்திறனும் பலரை இங்கு வியக்க வைத்திருக்கிறது. சிலாகிக்க வேண்டிய கவிஞன் அவன்.

நண்பர் ஷான் கருப்பசாமி அவர்களின் பார்வதி படைப்பகம் மூலம் வெளி வந்த முதல் புத்தகம் யாதுமாகி நின்றேன்.. இப்புத்தகத்தில் கவிதையின் பல பரிணாமங்களை தொட்டிருப்பார்.. மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைகூ எல்லா வடிவங்களும் அதில் இருக்கும். வியக்க வைக்கும் சிந்தனை வரிகள்..

வேலத்தில் கிளையினிலே விழித்ததொரு காகம்
வேளைக்கேற்றபடி வெயில் கீற்றிங்கில்லை
மேலே கீழ்த்திசையில் மிசையில் சுடரில்லை
மேகக்கூட்டமதில் ஏனோ ஒளியில்லை
மேதினி மேவுமொளி மேனி நொந்ததுவோ..

என்று உயிர்த்துளி என்னும் கவிதையில் மகாகவி பாரதியாரின் எழுத்து தெரியும் இதை பல கவிதைகளில் காணலாம் அதே போல தீதும் நன்றும் என்ற கவிதையில்..

தண்நிறை வாடைக்காற்று.. கார் இறை கருக்கங்கூட..
வெண்நரைப் பூவிதழன்ன.. மென்பறை மேகம் புழைய..
பட்சியால் பரவை கூட.. பேய்மழை பெய்யுது என்பார்

இப்படி மரபுக் கவிதைகளிலும்..

கசிந்துருகி நீ எழுதிய கவிதை காகிதத்தின் மேல் 
என் கண்ணீர்த்துளிகளைத் தூவிவிட்டிருக்கிறேன்
பறந்து விடாமலிருக்க...

தாஜ்மகால் வேண்டாம் - தாலி கட்டி விடு என்னும் புதுக் கவிதை இப்படித் தான் முதல் பந்திலேயே சிக்சர் அடித்தது போல ஆரம்பித்து வாசிக்கத் தூண்டுகிறது. தெருவோர தேவதை கவிதையை இப்படி துவக்குகிறார்....

கஞ்சி ஊத்த ஆளுமில்ல.. கட்டிக்கிட துணியுமில்ல..
வக்கத்த ஜென்மத்துக்கு.. வெக்கமுன்னு ஒண்ணுமில்ல..
கையேந்தி பிச்ச கேட்டும்.. காசு போட யாருமில்ல..

மண் மணக்கும் வட்டாரத் தமிழில் அந்தக் கவிதை.. முரண் என்னும் தலைப்பில் எழுதிய கவிதைகள் சில ஹைகூவுக்கு நிகராக வருகிறது..

மரங்களை வெட்டாதே
எழுதிப்போடப்பட்டிருந்தது
மரப்பலகையில்.       

மெழுகுத் திரி டப்பாவிற்குள்ளும் 
மென்மையாய் படர்ந்திருக்கிறது 
ஒரு இருட்டு.
                
இன்னும் ரசிக்க வைக்கும் கவிதைகள் பல இருக்கிறது  இப்புத்தகத்தில்.. இந்த இளைஞனுக்கு வாய்ப்பளித்த நண்பர் ஷான் கருப்பசாமிக்கு பூங்கொத்துடன் வாழ்த்துகள்.. நீங்கள் படிக்கவும் பரிசளிக்கவும் ஒரு நல்ல புத்தகம். வாழ்த்துகள்டா தம்பி அரவிந்த் நீ இன்னும் பல சிகரம் தொடுவாய்.

மதுரை புத்தக கண்காட்சி அரங்கு எண்134 & 122 இந்த புத்தகம் கிடைக்கிறது வளரும் கலைஞனை வாழ்த்துவதோடு அல்லாமல் புத்தகங்களை வாங்கி ஆதரிப்போம் நண்பர்களே.

லைக் வெறி

#தீயா_வேலை_செய்யணும்_குமாரு

ஒரு சாலை விபத்து ஏராளமான பேருக்கு படுகாயம் ஒருவருக்கு இரண்டு கையும் முறிந்து கிடக்கிறது..

நல்ல உள்ளம் படைத்த சிலர் ஓடி வந்து உதவி செய்து கொண்டு இருக்க கை முறிந்தவர் உதவிக்கு வந்த ஒருவரை அழைக்கிறார்...

சார்.. என் மொபைல் போன் அதோ அங்க இருக்கு அத கொஞ்சம் எடுத்து தர்றீங்களா?

(உதவிக்கு வந்தவர் தேடி எடுத்து ....) இதுவா சார்? 

ஆமாம் சார் அது ஒர்க் ஆகுதா பாருங்க...

ஆமா சார் ஆகுது...

அப்ப ஒரு உதவி செய்விங்களா? 

சொல்லுங்க சார் உங்களுக்கு விபத்துன்னு வீட்டுக்கு தகவல் சொல்லணுமா?

வேணாம் சார் விபத்துக்கு முன்னால ஃபேஸ்புக் பாத்துகிட்டே வந்தேன்.. நான் கடைசியா படிச்ச அந்த தோழி போஸ்ட்டுக்கு லைக் பட்டனை மட்டும் பிரஸ் பண்ணுங்க ப்ளீஸ்.....