Sunday, 3 January 2016
19. குத்து விளக்கெரிய...
Saturday, 2 January 2016
18.உந்து மதகளிற்றன்...
18. உந்து மதகளிற்றன்
#ஆண்டாள்_பெருமை
அழகானப் பெண்ணைப் பெண் வர்ணிக்கும் போது எப்படி இருக்கும்? ஆண் கவிஞர்களை விட அழகிய உவமையோடு பெண் கவிஞர்கள் இன்னொரு பெண்ணை பாராட்டுவதெல்லாம் அரிதினும் அரிது.. அதுவும் இன்னொருத்தி அழகு என்றெல்லாம் அவ்வளவு எளிதில் புகழ மாட்டார்கள்.. ஆனால் ஆண்டாள் இந்தப்பாடலில் நந்தகோபரின் மருமகளை எழுப்புகிறார் இப்படி.
மதங் கொண்ட யானையை மோதித் தள்ளும் ஆற்றலும் போரில் பின் வாங்காத வலிமை மிகு தோளும் உடைய நந்தகோபன் மருமகளே.. நப்பின்னையே.. நறுமணம் மிகுந்த கூந்தல் காரியே வந்து கதவைத் திற.. கோழிகள் கூவி பொழுது புலர்ந்துவிட்டது மல்லிகைப்பூ கொடி பந்தலாக படர்ந்திருக்க அதற்குள் வசிக்கும் குயில்கள் பல முறை கூவிவிட்டன.
பந்தை தாங்கிய கைபோல் கச்சிதமாய் விரலழகு கொண்டவளே..
உன் கணவன் பேர் பாட வந்துள்ளோம் உன் செந்தாமரைக் கைகளில் வளையல் குலுங்க மகிழ்வோடு வந்து கதவைத்திற.
முகத்தை அல்லது விழிகளை தாமரை மலருக்கு ஒப்பிடுவார்கள் ஆனால் ஆண்டாள் தாமரை போன்ற கைகள் என்கிறார்..பந்தார் விரலி என்கிறார் மணம் வீசும் கூந்தல் என்கிறார் கூந்தலுக்கு மணம் இருக்கிறதோ இல்லையோ ஆண்டாளுக்கு வஞ்சனையின்றி இன்னொரு பெண்ணை போற்றுகின்ற மனம் இருக்கிறது.
ஆனால் இந்த நப்பின்னை பற்றி பாசுரங்களில் மட்டுமே வருகிறது.. ஒரு வேளை கிருஷ்ணனை காதலித்த முறைப் பெண் கேரக்டரா அல்லது இந்த எபிசோடு ஆழ்வார்கள் காலத்தில் மட்டும் இருந்து பின் நீக்கப்பட்டதா என்பதெல்லாம் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. தெரிந்தவர்கள் கூறலாம்.
இந்த 18ஆம் நாள் பாடலின் இன்னொரு விசேஷம் இது இராமானுஜருக்கு மிகப் பிடித்த பாசுரம். இராமானுஜரே தீவிர திருப்பாவை விசிறி எவரும் அவரை இராமானுஜர் என்றழைப்பதை விட திருப்பாவை ஜீயர் என்று அழைப்பதையே அவர் மிக விரும்பினார். இன்றும் இந்தப் பாடலை மட்டும் கோவில்களில் இரு முறை பாடுவது வழக்கம்.. ஆண்டாளின் தமிழை இரு முறையல்ல கோடி முறை பாடினாலும் கேட்டாலும் திகட்டவே திகட்டாது.
மார்கழி 18 ஆம் நாள் பாடல்...
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடைதிறவாய்
வந்துஎங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்துஆர் விரலிஉன் மைத்துனன் பேர்பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளைஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
Friday, 1 January 2016
17. அம்பரமே தண்ணீரே...
Wednesday, 30 December 2015
16. நாயகனாய் நின்ற...
#ஆண்டாள்_பெருமை
பெரிய மனிதர்களை சந்திக்கச் செல்லும் போது அவர்களது செக்யூரிட்டிகளுக்கு நாம் பெரும் மரியாதை தருவோம் கிட்டத்தட்ட அந்த வி.ஐ.பி.யாகவே அவரும் பிகு செய்வார். இந்த பூசாரிகள் வரமளித்தால் தான் நீங்கள் கடவுளையே காண முடியும். இவ்வளவு ஏன் ஏ.வி.எம் ஸ்டுடியோ வாட்ச்மேன் காலில் விழுந்து அனுமதி கேட்ட எத்தனையோ பேர் இன்று மிகப் பெரிய பிரபலங்கள் ஆகியிருக்கின்றனர்.
இந்தப் பாடலில் விழித்தெழுந்த பெண்கள் நந்தகோபனின் மாளிகை வாசலுக்கு வந்து வாயில் காப்போனிடம் கேட்கிறார்கள் எங்கள் நாயகன் நந்தகோபனின் கொடி பறக்கும் தோரண வாயிலை காவல் காப்போனே ஆயர்குலப் பெண்கள் எங்களுக்கு வேண்டியதை தருவேன் என நேற்றே சொன்னார் மாய மணிவண்ணர் அவரை எழுப்ப வந்துள்ளோம்.
நோன்பிருந்து நீராடி தூய்மையாக வந்துள்ளோம் நாங்கள் வந்த இந்த நல்ல காரியம் நிறைவேற எங்களை உள்ளே சென்று பாட விடு அழகிய இம் மணிக்கதவின் தாழ்ப்பாளை திறந்துவிடு.. இந்த காலத்தில் இவ்வளவு இளம்பெண்கள் கூட்டமாகப் போனால் இப்படியெல்லாம் பாட வேண்டாம் வாட்ச்மேனே வாயில் ஜொள்ளு விட்டு கதவுகளைத் திறந்து இருப்பான்.
ஆண்டாளின் பாடல்களில் தமிழில் அருகி மறைந்த பல தமிழ் வார்த்தைகளை காணலாம். உதாரணமாக கொண்மூ, எழினி என்ற தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தம் என்னவென்று தெரியுமா? இவை இரண்டுமே மேகத்தை குறிக்கும் தமிழ்ச் சொற்கள்.. இன்று மேகம் முகில் போன்ற வார்த்தைகள் மட்டுமே வழக்கில் உள்ளன.
இந்தப் பாடலிலும் நென்னல் என்ற வார்த்தையைக் குறிப்பிடுகிறார். நென்னல் என்றால் நேற்று என அர்த்தம், மாணிக்கவாசகரின் திருவெம்பாவையிலும் இந்த வார்த்தை வருகிறது. ஆண்டாள் எழுதிய தமிழ் நென்னலில் மட்டுமன்று என்றும் கன்னல்.
மார்கழி 16 ஆம் நாள் பாடல்...
நாயக னாய்நின்ற நந்தகோ பன்உடைய
கோயில்காப் பானே கொடித்தோன்றும்
தோரண வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ
வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.