Wednesday, 8 October 2014

தீனா - அக்டோபர்

"தீனா கொரலு"

நம்பளை புர்ஞ்சிகினு நம்ம மேல உசுரியே கொடுக்குற அன்பான மன்சங்க இல்யாத ஊருல வாழுறது பேஜாரான்து.. அத்தவுட பேஜார் இன்னா தெரிமா? மன்சார காதலிச்சவங்களை பிர்ஞ்சி வாழ்றது தான்..! குஜாலா சொல்லிக்கீரார்பா"தல"

இன்னாது இனனில்ஊர் வாழ்தல் அதனினும்

இன்னாது இனியார்ப் பிரிவு.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : பிரிவாற்றாமை : குறள் எண் : 1158]


"தீனா கொரலு"

இந்த யானைகீதே அத்துகிட்ட கையில வேல் வச்சிகினு எம்மாம் பெர்ய பிஸ்தா அல்லாம் சேந்து கூட்டமா வந்தாலும் அல்லாத்தையும் தில்லா நின்னு தொம்சம் பண்ணிடும்..ஆன்யா அத்தே யானை சேத்துக்குள்ள காலவுட்டு மாட்டிக்கிச்சுன்னு வை அத்த ஒரு நரிகூட கொன்னுரும்..!  சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா

வேலாள் முகத்த களிறு.

[ பொருட்பால் : அதிகாரம் : இடனறிதல் : குறள் எண் : 500 ]


"தீனா கொரலு"

விதிய மாத்தவே மிடியாது சிலரு புலம்பிகினு இர்ப்பாங்கோ.. ஆனா இன்னா ட்ரபுள் வந்த்யாலும் அத்தக் கண்டு மெர்சலாகாம அட்த்தட்த்து ட்ரை பண்ணிகினே கீறான் பாரு அவன் விதியவே விரட்டியட்ச்சுடுவான்.! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்.

[ பொருட்பால் : அதிகாரம் : ஆள்வினையுடைமை : குறள் எண் : 620 ]


"தீனா கொரலு"

சொம்மா தக தகன்னு ஜொலிச்சுனுகீறாளே என் ஆளு.. இவ எம்மேல இன்னும் கோச்சுகட்டும் அப்ப தான் நான் அவுளோட சமாதான்மா போக கெஞ்சிகினே இர்ப்பேன் அப்றோம் நாங்க குஜாலா இர்ப்போம்.. இந்தொ ஒண்ணுகோசரமே இந்தய நைட்டு நீண்டுகினே போவட்டும்.. குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப

நீடுக மன்னோ இரா.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : ஊடலுவகை : குறள் எண் : 1329 ]



பாவாடை சட்டை..

#பாவாடை_சட்டை

பெண்களுக்கான ஆடை குறித்து கிளம்பும் சர்ச்சைகளை தவிர்த்து விட்டு நான் எனது டீன்-ஏஜ் காலத்தில் பார்த்த பெண்களின் ஆடைகளை சொல்லவே இப்பதிவு..

சீட்டிப்பாவாடை என ஒன்று அப்போது பெண்களின் விருப்ப உடையாகவும் பெற்றோர்களின் பொருளாதாரத்திற்கு உகந்ததாகவும் வலம் வந்தது.. காடா துணி போல கெட்டித்துணியில் இருக்கும் டார்க் கலர் பின்னணியில் ரோஜா, சாமந்தி, செம்பருத்தி போன்ற பூக்கள் பெரிது பெரிதாக பிரிண்ட் செய்யப்பட்டு அமர்க்களமாக இருக்கும்..!

வயதுக்கு வராத பெண்கள் பஃப் கை வைத்த பின் பக்கம் ஊக்குகள் உள்ள சட்டையும் பலூன் போல விரியும் முழுப்பாவாடையும் அணிவார்கள்.. தெருவில் விளையாடும் போது இரு கை விரித்து கிறு கிறுவென சுற்றி சட்டென்று தரையில் அமர்வார்கள்.. காற்று புகுந்த அப்பாவாடைத்துணி கவிழ்த்து வைத்த கிண்ணம் போல அவர்களை சுற்றி தரையில் நிற்கும்..! 

எனக்கு அதை பார்க்கும் போதெல்லாம் தாமரைப்பூவில் அமர்ந்திருக்கும் லட்சுமியோ சரஸ்வதியோ நினைவுக்கு வரும். இத் துணிகளின் நல்ல உழைப்பால்  சில வருடங்கள் இந்த துணி தாங்கும் என்பதை அணியும் பெண்களின் முழுப்பாவாடை முக்கால் பாவாடை ஆவதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.. கிழிந்து போனாலும் வீட்டில் அடுப்படியில் கரித்துணியாகவும்..சைக்கிள் & சுவேகா துடைக்கவும் இந்தத் துணி பயன்படும்.!

மென்மையான பெண்களுக்கு முரட்டுத்தனமான இத்துணி தன் மேல் பட்டுக் கொண்டே இருப்பது ஏதோ ஒரு வகையில் மனரீதியான பாதுகாப்பு உணர்வு அளித்திருக்கக்கூடும் என நினைக்கிறேன்.. நான் நினைத்தது சரியா என யாராவது பெண்கள் தான் பதில் தர வேண்டும்.. இதே அப்பெண்கள் வயதுக்கு வந்தபின்
பாவாடை ஜாக்கெட் சீட்டித்துணியிலும் காட்டன் அல்லது ஃபுல்வாயிலில் தாவணியும் அணிவார்கள்..!

அதிலும் எங்கள் தெருவில் இருந்த விஜி அதில் தேவதை..(பெயர் மாற்றியுள்ளேன்) அவளது ரசனை அபாரமானது.. கறுப்பு பின்னணியில் சூரியகாந்தி பூ தெளித்த பாவாடை ஜாக்கெட்டும் வெளிர் மஞ்சள் நிற தாவணியும் அணிவாள் காதோரம் மஞ்சள் ரோஜாவுடன் அவள் நடந்து வரும் போது தான் தேவதைகள் நடந்தும் வரும் என நான்(ங்கள்) அறிந்து கொண்டேன்(டோம்).

அதே உடையில் தாவணியை மட்டும் வெள்ளையாக அணிந்து வெள்ளை ரோஜாவுடன் வந்து மிகப்பெரிய சேஞ்ச் ஓவர் தருவாள்.. அடர் சிவப்பில் மஞ்சள் பூக்கள் உள்ள பாவாடை சட்டை அதற்கு மஞ்சள் தாவணி.. ஆகாய நீலத்தில் கருநீலப்பூக்கள் பாவாடை சட்டைக்கு கருநீல தாவணி என துவம்சம் செய்வாள்.!

அநேகமாக பலர் எழுதும் கவிதைகளுக்கு காரணமாகவோ அல்லது பல கவிஞர்கள் உருவாக காரணமாகவோ இருந்திருக்கிறாள் அவள்... என்பதை விட அவள் ஆடை என்பது பொருத்தமாக இருக்கும்.. 24 ஆண்டுகளுக்கு பிறகு இன்றும் என் கண் முன்னே விரிகிறது அவள் நடையும் அந்த உடையும்..!

அதன் பிறகு வந்தது சட்டை கலாச்சாரம்.! அதாவது பாவாடை மேலே அணிவது ஆண்களின் சட்டை.. இதில் ஒரு தகவல் ஒளிந்திருக்கும் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அண்ணன் இருக்கிறான் என்பதை சட்டையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும்.! ஓல்டாக இருந்தால் அப்பா..! லேட்டஸ்ட்டாக இருந்தால் சகோதரன் என இனம் கண்டு தைரியமாய் (!?!) சைட் அடிக்க முடிந்தது.!

என்னது ஜீன்ஸ் லெக்கின்ஸா..! ஒன்று சொல்ல விரும்புகிறேன் அவரவர் வாழும் காலகட்டங்களில் இருக்கும் ஆடைகள் அவரவர்க்கு பிடித்ததாய் அமையும்.. என் காலத்தில் இந்த ஜீன்சோ லெக்கின்சோ அணிந்திருந்தால் இவ்வளவு ரசிப்புடன் நான் எழுதியிருப்பேனா என தெரியாது. அதேபோல இப்போது இருக்கும் இளைய சமுதாயமும் அந்த காலத்து ஆடையை விரும்பியிருக்காது.

ஆடை அவரவர் செளகரியமும் அவரவர் விருப்பமுமே.. இதை அணி இதை அணியாதே என யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது.. ஆணோ பெண்ணோ அவரவர்க்கு பிடித்ததை அணியும் உரிமையுண்டு.. ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வோம் அல்லது விமர்சிக்காமலாவது இருப்போம்..!

பாவாடை தாவணியை நான் எழுதியது போல எதிர்காலத்தில் ஜீன்ஸ் லெக்கின்ஸ் பற்றி யாரேனும் எழுதலாம் ஆனால் அப்போதும் இப்படி இதை அணியாதே அதை அணியாதே என்ற பிரச்சனை இல்லாமலிருக்குமா..!? தெரியவில்லை.......

Saturday, 27 September 2014

ஒரு பேருந்தின் குரல்.

#ஒரு_பேருந்தின்_குரல்...

பத்து வருசத்துக்கு முன்னே பளபளன்னு பாடிகட்டி பவிசாக வந்து நின்னோம். உள்ளுக்குள்ள ஏசியும் மெத்து மெத்துன்னு சீட்டும் சொகுசா தான்யா இருந்துச்சி. கம கமன்னு சந்தனம் தெளிச்சு குறுவாழை மரத்தை கட்டி அமைச்சரே ஓட்டுனரா சீட்டுல ஏறி ஆரம்பிச்சு வச்ச எங்க வாழ்க்கை சொகுசாத்தான் துவங்கிச்சு.எங்க பேரும் அது தான்யா சொகுசுப்பேருந்து.! 

நீண்ட தூர பயணத்துல நாங்க போகாத ஊருமில்ல பாக்காதஆளுமில்ல. தேசிய நெடுஞ்சாலையில கத்தி போல ஓடியிருக்கோம் உள்ளூர் சாலையிலும் தத்தி தத்தி நடந்து இருக்கோம் ஆணியோ கல்லோ குத்தி டயர் வெடிச்சி நின்னிருக்கோம் பராமரிப்பு இல்லாம பைய மூச்சிரைத்து பயணத்தில் பல நேரம் பாதியிலே நின்னுடுவோம் வருசம் 5 ஆகி மேனி அழகெல்லாம் அது குலைஞ்சு பணி மனையில் பல நாளா பரிதவிச்சு படுத்திருந்தோம். 

புது உதிரி பாகங்கள் அது கிடைக்க கோப்புகள் அரசு ஆணைக்கு காத்திருக்க ஆப்பசைத்த குரங்காட்டம்அங்கனயே மாட்டிகிட்டோம்.அருமை தெரியா புருசங் கிட்ட வாக்கப்பட்டா பொண்ணு போல அதிகாரிங்க அலட்சியத்தில் ஓய்ஞ்சு போனோம். வருசம் 5 ஆச்சு..ஆட்சி மாறியாச்சுன்னு அதிகாரிங்க திடீர்னு வந்தாக 

எங்களை சுத்தி வந்து பார்த்தாக நமக்கு விடிவு காலம் பொறக்குதுன்னு தப்பா நினைச்சிட்டோம். அடுத்த நாளே ஏசியை கழட்டிபுட்டு இருக்கை எல்லாம் மாத்தி எங்க பழைய பட்டுசேலைக்கு பதிலா ஒரு நூல் சேலையக்கட்டி விட்டாக. ஏன்னா இனி நாங்க டவுன்பஸ்ஸாம்.! நீண்ட தூரம் ஓட எங்களுக்கு வக்கில்லையாம். 

மறுபடி பயணம்.. ஆடு மாடுகோழி முதல் அத்தனையும் ஏத்திக்கிட்டு ஒரு பக்கம் குடை சாய ஊரெல்லாம் சுத்தி வந்தோம் நிறுத்தத்துல பிரேக் போட்டா நிக்க திராணியில்ல கொஞ்சம் தள்ளிதான் போய் நிப்போம். வயசாகி போயிடுச்சு இல்ல..

படியில தொங்கி தொங்கி எங்க படியெல்லாம் பிஞ்சிடுச்சு.. சொறி வந்த நாய் போல எங்க பெயிண்ட்டெல்லாம் உதிர்ந்திருச்சு சீட்டெல்லாம் கிழவன் பல்லாட்டம் ஆடிடுச்சு.. எங்க உடம்பெல்லாம்துரு வந்து செதில் செதிலா மாறிடுச்சு சொகுசு பேருந்து அது எங்க பழைய பேரு..இப்ப எங்க பேரு ரிப்பேரு.!

மறுபடி பணிமனை....மறுபடியும் அதிகாரி..கோப்பு ...கையெழுத்து.! எப்ப மாறும் எங்க தலையெழுத்து.? நல்ல மவராசன் ஒருத்தன் ஒருவழியா வேகமா ஒப்புதல் தந்ததால ரிப்பேரு நடந்து ஓரளவு குணமாகி மறுபடி பயணத்தை ஆரம்பிச்சோம்.. 

தெருவோரம் ஒரு நிறுத்தத்தில் நிக்கையிலே திமு திமுன்னு கும்பலா பல பேரு வந்தாக இருந்த ஆளுங்களை இறங்க சொல்லிபுட்டு என் மேல கேன் கேனா டீசலை ஊத்துனாக.. ஐயோ இதை இங்க ஊத்தக்கூடாது டாங்கில தான் ஊத்தணும்ன்னு சொல்ல ஆசைதான்..ஆனா எனக்கு தான் பேச தெரியாதே.!

யார் யாரோ வாழ்கன்னும் யார் யாரோ ஒழிகன்னும் கத்தி கோஷம் போட்டு கிட்டே என்னை பத்த வச்சுட்டாக.. அடிக்கிற காத்துல வேகமா தீ பரவி நடுத்தெருவில் நின்னு சொக்கப் பனையாட்டம் எரியுறேன்.. எரிச்சிட்டு ஓடுறவங்களே ஒரு நிமிசம் நில்லுங்க.. உங்க கிட்ட கேக்குறேன் வாய் தொறந்து சொல்லுங்க..

உங்களை எல்லாம் நான் ஒரு தாயைப்போல சுமக்கலையா? நான் ஒரு பொது சொத்துன்னு உங்க மனசுல நினைக்கலையா? எரியுறது உங்க பணமய்யா அது இன்னும் விளங்கலையா.?எனக்கு கொள்ளி வச்ச பாவிகளா எதுக்கு என்னை கொளுத்துனிங்க.? நான் என்னா பாவம் செஞ்சேன்.? உங்க கிட்ட பதில் இருக்கா.?யாராச்சும் சொல்லுங்களேன்.?

Tuesday, 9 September 2014

வைதேகி காத்திருந்தாள்...

பழைய படங்களை திரும்ப எடுக்கும் தமிழ் சினிமாவின் விதிப்படி நம்ம கேப்டனுக்காக ஒரு ரீ- மிக்ஸ் திரைப்படம்.... இனி படத்தின் கதை..!


புரட்சிகலைஞர் கேப்டன் பெருமையுடன் 

                      வழங்கும்

            வைதேகி காத்திருந்தாள் -II
                   (கேப்டனுக்காக)


வெள்ளைச்சாமி (விஜயகாந்த்-1) அந்த ஊரில் வீடு வீடாக மினரல் வாட்டர் சப்ளை செய்பவர்.. அந்த ஊரில் வசிக்கும் இளம் விதவை வைதேகி (ஹன்சிகா) அந்த ஊருக்கு வேலை தேடி வருகிறார் ராஜா (விஜயகாந்த்-2) அவருக்கு செல்போன் கடையில் வேலை வாங்கித் தருகிறார் ஆல் இன் ஆல் அழகு ராஜா (சந்தானம்) ராஜா வைதேகி வீட்டில் ஒரு போர்ஷனில் குடியேறுகிறார்.. ராஜாவை ஒரு தலையாக விரும்புகிறாள் வைதேகி.. ஆனால் ராஜா வைதேகியை விரும்பவில்லை..!

செல்போன் கடைக்கு ரீ-சார்ஜ் செய்ய அடிக்கடி வரும் உள்ளூரில் உள்ள செங்கமலத்தை (ஶ்ரீதிவ்யா) விரும்புகிறார் ராஜா.. செங்கமலமும் ராஜாவை விரும்புகிறாள்.. இதை அறிந்த செங்கமலத்தின் அண்ணன் வெள்ளிக்கிழமை ராமசாமி (பிரகாஷ்ராஜ்) அந்தக் காதலை பிரிக்கப்பார்க்கிறார்.. இடையில் ப்ளாஷ்பேக்..

வெள்ளைச்சாமி (விஜயகாந்த்-1) தனது முறைப்பெண் ராசாத்தியை (லட்சுமிமேனன்) சீண்டிக்கொண்டே இருப்பார்.. ஒரு நாள் பேஸ்புக்கில் உள்ள ஒரு பெண்ணைக் காட்டி (சமந்தா) இவளைத்தான் நான் திருமணம் செய்யப் போகிறேன் என விளையாட்டாக கூற ராசாத்தி விஷம் குடித்துவிடுகிறார்...

அப்போது வெள்ளைச்சாமி பரபரப்பாக ஓடி வந்து அவளுக்கு மினரல் வாட்டரில் உப்பு கரைத்துக்குடுக்க அது போலி மினரல் வாட்டர் என்பதால் விஷம் அதிகமாகி ராசாத்தி இறந்துவிடுகிறாள்.. அவள் ஞாபகமாகத்தான் ஊருக்கு மினரல் வாட்டர் கேன் சப்ளை செய்கிறார் வெள்ளைச்சாமி.. ஆனால் போலி மினரல் வாட்டர் கம்பெனிமேல் அவருக்கு தீராத கோபம் உண்டு..! இனி வைதேகி...

வீட்டில் பார்த்து வைத்த மாப்பிள்ளையை பல கனவுகளுடன் கைப்பிடிக்கும் வைதேகி திருமணம் முடிந்து ஊருக்கு செல்ல ரயில் ஏறுகிறாள் ரயிலில் வரும் நண்பர்கள் எல்லாம் மேகம் கருக்கையிலே பாடல் பாட ஜங்ஷனில் மினரல் வாட்டர் வாங்கப்போன வைதேகியின் கணவன் ரயிலை விட்டுவிட ரயில் கிளம்பும் போது ஓடி வந்து ஏற முற்பட்ட போது தண்டவாளத்தில் விழுந்து பலியாகிறார்..! 

கையில் மினரல் வாட்டர் பாட்டில் இருந்ததால் தான் வைதேகியின் கணவன் ரயிலில் பிடி நழுவி விழுந்து இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.! ஆக வைதேகிக்கும் மினரல் வாட்டர் நிறுவனத்தின் மீது கோபமுண்டு..! இந்நிலையில் செங்கமலத்தின் அண்ணன் வெள்ளிக்கிழமை ராமசாமி ஒரு போலி மினரல் வாட்டர் கம்பெனி ஆரம்பிக்க வெகுண்டு எழுகிறார்கள் வெள்ளைச்சாமியும் வைதேகியும்..!

ஊரை விட்டு ஓடும் செங்கமலத்தையும் ராஜாவையும் ஊர் எல்லையில் வழிமறிக்கிறார் வெள்ளிக்கிழமை ராமசாமி அவரை அடித்து துவம்சம் செய்கிறார் வெள்ளைச்சாமி.. அந்த நேரத்தில் ராமசாமியின் ஆட்கள் மினரல் வாட்டர் ஃபேக்டரியில்  வைதேகியை சிறைவைக்க அவரை காப்பாற்ற வருகிறார்கள் வெள்ளைச்சாமியும் ராஜாவும்..!

அங்கு நடக்கும் சண்டையில் ராஜாவை  கொல்லவரும் போது நடுவில் வந்து உயிரை விடுகிறார் வைதேகி.. ஆத்திரத்தில் வெள்ளைச்சாமி ராமசாமியைக் கொல்ல அவரை போலீஸ் கைது செய்கிறது...கட் பண்ணா இந்தக்கதையை இதுவரை ராஜாவும் செங்கமலமும் சமந்தாவிடம் (இவர் பேரும் வைதேகி) சொல்லி முடிக்கிறார்கள்..!

இந்தக்கதையை கேட்டு மனமுருகிய வைதேகி (சமந்தா) தன்னால் தானே வெள்ளைச்சாமியின் காதலி இறந்தாள் என அழுது தனது பேஸ் புக் ஐடியை டி-ஆக்டிவேட் செய்துவிட்டு ஊர் எல்லைக்கு போய் வெள்ளைச்சாமிக்காக காத்திருக்க ஆரம்பிக்கிறாள்..! பேக்கிரவுண்ட்டில் வாய்ஸ் 

"இந்த வைதேகி காத்திருப்பாள் வெள்ளைச்சாமி வரும் வரை அதுவரை இவளே இவ்வூரின் எல்லைச்சாமி".....


            சுபம்.


Sunday, 31 August 2014

தீனா - செப்டம்பர்

"தீனா கொரலு"

மன்சுக்குள்ளாற கோவம் வர்சொல்லோ எவன் காண்டாகாம கீறானோ அவன் தான் கில்லி.. தான் இன்னா நென்ச்சானோ அத்த உடனே அடஞ்சுடுவான்.! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்

உள்ளான் வெகுளி எனின்.

[ அறத்துப்பால் : அதிகாரம் : வெகுளாமை : குறள் எண் : 309 ]


"தீனா கொரலு"

தெளிவான அறிவும் தடுமாறாம உறுதியா இர்க்குற மன்சும் இர்க்குறவங்கோ அவுங்களுக்கு ஆராச்சும் கெட்டது செஞ்சா கூடொ அத்த தாங்கிகினு இர்ப்பாங்ளே தவுரொ கேவலமா நட்ந்துக்கவே மாட்டாங்கோ.! சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்

நடுக்கற்ற காட்சி யவர்.

[ பொருட்பால் : அதிகாரம் : வினைத்தூய்மை : குறள் எண் : 654


தீனா "கொரலு"

ஒர்த்தர் கிட்ட பேசிகினு இர்க்க சொல்லோ குறையே இல்யாம கொஞ்சமா வார்த்த பேசி தெளிவா புர்ய வைக்கணும்.! அந்த திறமை இல்யாத ஆளுங்க தான் தேவயே இல்லாம திர்ம்ப திர்ம்ப நெறியா பேசிகினே இர்ப்பாங்கோ.! சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற

சிலசொல்லல் தேற்றா தவர்.


[ பொருட்பால் : அதிகாரம் : சொல்வன்மை : குறள் எண் : 649 ]



தீனா "கொரலு"

யாருக்காச்சும் நீ கெடுதல நென்ச்சியானா அந்த கெடுதி உனுக்கே வந்து சேரும்.! மன்சன் வாழ்க்கிய நிம்மதியா வாழணும் இன்னா பண்ணணும் தெரிமா? யாருக்கும் கெட்டது நெனிக்காம வாழ்ந்தாலே போதும்.! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்

நோயின்மை வேண்டு பவர்.


[ அறத்துப்பால் : அதிகாரம் : இன்னா செய்யாமை : குறள் எண் : 320 ]



தீனா "கொரலு"

ஒரு விஸ்யத்தை கரீட்டா செஞ்சி முடிக்கணுமின்னா நல்லா அல்சி ஆராஞ்சி அத்த ஆரு கைல கொட்த்தா சொம்மா கில்லியா நின்னு கரீட்டா கச்சிதமா முடிப்பானோ அவங்கைல கொட்த்துருணும்.! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.

[ பொருட்பால் : அதிகாரம் : தெரிந்து வினையாடல் : குறள் எண் : 517 ]


தீனா "கொரலு"

நல்லா பெர்ய பெர்ய படிப்பெல்லாம் பட்ச்சி முட்ச்சி மன்சார ஆரு மேலியும் காண்டாகாம அடக்கமா ஒர்த்தன் வாழ சொல்லோ அவுன எதிர்பார்த்து அவன் போற வழியில நீதி வந்து குந்திகினு இர்க்குமாம்.! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

[ அறத்துப்பால் : அதிகாரம் : அடக்கமுடைமை : குறள் எண் : 130 ]


தீனா "கொரலு"

காதலிக்கிறவங்கோ ரெண்ட்யு பேத்துக்குமே ரொம்பொ புட்ச்ச விஸ்யம் இன்னா தெரிமா.? கட்டிபுடிச்சினு இர்க்க சொல்லோ நடுவால காத்து கூட நொழயாத மேறி இர்க்கமா கட்டி புட்சிகினு இருக்குறது தான்.! குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை

போழப் படாஅ முயக்கு.


[ இன்பத்துப்பால் : அதிகாரம் : புணர்ச்சிமகிழ்தல் : குறள் எண் : 1108 ]


தீனா "கொரலு"

மன்சுக்குள்ள வெக்கமே இல்யாத மன்சனுங்கோ அல்லாம் மன்ச ஜென்மே இல்ல.. அவுங்க அல்லாம் இந்த கயிற கட்டி ஆட்டுற மரப்பொம்மை மேறி தான் சும்மா உதார் வுடறது கணக்கா ஊருக்குள்ள ஆடிகினு திரிவாங்கோ..! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை

நாணால் உயிர்மருட்டி அற்று.

[ பொருட்பால் : அதிகாரம் : நாணுடைமை : குறள் எண் : 1020 ]

Sunday, 10 August 2014

புத்தகங்கள் - 100

படிக்க வேண்டிய 100 புத்தகங்கள்....

1. என் சரித்திரம் -உ.வே.சாமிநாத ஐயர் .
2. புத்தரும் அவர் தம்மமும் – அண்ணல் பி.ஆர். அம்பேத்கர்
3. சுந்தர ராமசாமி சிறுகதைகள் [முழுத் தொகுப்பு]
4. வண்ணநிலவன் சிறுகதைகள் [முழுத் தொகுப்பு]
5. வண்ணதாசன் சிறுகதைகள் [முழுத் தொகுப்பு]
6. அம்மா வந்தாள் – திஜானகிராமன் .
7. ஜே.ஜே. சில குறிப்புகள் ..– சுந்தர ராமசாமி
8. சிந்தா நதி – லா.ச. ராமாமிருதம்
9. கல்லுக்குள் ஈரம் – ர.சு. நல்லெபருமாள்
10. பொன்னியின் செல்வன் – கல்கி
11. புதுமைப்பித்தன் கதைகள் [முழுத்தொகுப்பு]
12. வேடந்தாங்கல் – ம.வே.சிவகுமார்
13. எனது சிறைவாசம் – அரவிந்தர்
14. கரீபியன் கடலும் கயானா தீவுகளும் – ஏ.கே.செட்டியார் .
15. ஒற்றன் – அசோகமித்திரன்
16. ரத்த உறவு - யூமா.வாசுகி
17. தோட்டியின் மகன் - தகழி சிவசங்கரன் பிள்ளை.
18. பசித்த மானுடம் – கரிச்சான் குஞ்சு
19. அவன் ஆனது – சாகந்தசாமி .
20. வனவாசம் – கண்ணதாசன்
21. நுண்வெளிக் கிரணங்கள் – சு.வேணுகோபால்.
22. பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை – அண்ணல் பி .ஆர்.அம்பேத்கர்
23. காமராஜைர சந்தித்தேன் – சோ
24. பள்ளிகொண்டபுரம் – நீல.பத்மநாபன் .
25. பாரதியார் வரலாறு – சீனி விசுவநாதன்
26. இந்திய சரித்திரக் களஞ்சியம் – ப.சிவனடி .
27. ஆதவன் சிறுகதைகள் [முழுத்தொகுப்பு]
28. சுப்பிரமணிய ராஜு கதைகள் [முழுத்தொகுப்பு]
29. பட்டாம்பூச்சி – ஹென்றி ஷாரியர் [மொழிபெயர்ப்பு :– ரா .கி. ரங்கராஜன்]
30. காந்தி – லூயி ஃபிஷர் மி : ரங்கநாதன்
31. பாரதியார் கட்டுரைகள்
32. நானும் இந்த நூற்றாண்டும் – வாலி
33. பண்டைக்கால இந்தியா - ஏ.கே.டாங்கே.
34. குருதிப்புனல் – இந்திரா பார்த்தசாரதி
35. பயணியின் சங்கீதம் – சுகுமாரன்
36. குள்ளச்சித்தன் சரித்திரம் – யுவன் சந்திரேசகர்
37. ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் – சி.புஸ்பராஜா.
38. மோகமுள் – தி ஜானகிரா .மன்
39. மதிலுகள் – பஷீர் [நீல.பத்மனாபன் மொழி பெயர்ப்பு மட்டும்]
40. எட்டுத் திக்கும் மதயானை  – நாஞ்சில் நாடன்
41. ஜனனி – லா.ச. ராமாமிருதம்
42. பஞ்சபூதக் கதைகள் – லா.ச. ராமாமிருதம்
43. கி.ராஜநாராயணன் கதைகள். [முழுத்தொகுப்பு[
44. அசோகமித்திரன் கட்டுரைகள் [இரண்டு பாகங்கள்]
45. இரா.முருகன் கதைகள் . [முழுத்தொகுப்பு]
46. ஜீரோ டிகிரி  – சாரு நிவேதிதா
47. பின் தொடரும் நிழலின் குரல் – ஜெயேமாகன்
48. ராஜிவ் காந்தி படுகொலை புலனாய்வு – ஆர்.கார்த்திகேயன்
49. வாடிவாசல் - சி.சு.செல்லப்பா
50. குட்டியாப்பா – நாகூர் ரூமி
51. சார்லி சாப்ளின் கதை – என். சொக்கன் .
52. வைரமுத்து கவிதைகள்[முழுத்தொகுப்பு]
53. இரும்புக் குதிரைகள் – பாலகுமாரன்
54. மதினிமார்கள் கதை – கோணங்கி
55. காற்றில் கலந்த பேராசை– சுந்தர ராமசாமி
56. புலிநகக் கொன்றை  – பி.ஏ.கிருஷ்ணன் 
57. கொரில்லா - ஷோபா சக்தி
58. ஸ்... [அண்டார்டிகா [– முகில்
59. அங்க இப்ப என்ன நேரம் – அ.முத்துலிங்கம் .
60. முத்துலிங்கம் கதைகள் [முழுத் தொகுப்பு]
61. தீ - எஸ்.பி. பொன்னுத்துரை
62. சடங்கு - எஸ்.பி. பொன்னுத்துரை.
63. வரலாற்றில் வாழ்தல் – எஸ். பி.பொன்னுத்துரை
64. காந்திஜியின் இறுதி 200 நாட்கள் – வி.ராமமூர்த்தி .
65. பிரம்ம ரகசியம் – ர சு. நல்லெபருமாள் .
66. அதர்வ வேதம்
67. இலியட் – தமிழில்நாகூர் ரூமி :
68. புயலிலே ஒரு தோணி கடலுக்கு அப்பால் /– பசிங்காரம் .
69. (சந்திரபாபு )கண்ணரும் புன்னைகயும் :– முகில்
70. வெக்கை  - பூமணி
71.கடல் புரத்திலே - வண்ணநிலவன்
72. சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்
73. நாளை மற்றுமொரு நாளே - ஜி.நாகராஜன்
74. கிருஷ்ணபருந்து - ஆ.மாதவன்
75. ஒரு கடேலார கிராமத்தின் கதை -தோப்பில் முகமது மீரான்.
76. காகித மலர்கள் - ஆதவன்
77. என் பெயர் ராமேசஷன் - ஆதவன்
78. மாதொருபாகன் - பெருமாள் முருகன்
79. தொட்டால் தொடரும் - பட்டுக்கோட்டை பிரபாகர்
80. விசும்பு - ஜெயேமாகன்
81. சிலுவை ராஜ் சரித்திரம் –
82. ஆஸ்பத்திரி – சுதேசமித்திரன்
83. அரசூர் வம்சம் - இரா.முருகன்
84. குறத்திமுடுக்கு - ஜி.நாகராஜன்
85. பொய்த் தேவு - கா.நா.சு
86. அசுரகணம் - கா.நா.சு
87. நகுலன் கவிதைகள் - காலச்சுவடு வெளியீடு
88. வட்டியும் முதலும் - ராஜு முருகன்
89. பாரீசுக்கு போ  – ஜெயகாந்தன்
90. கி.மு.கி.பி - மதன்
91. வந்தார்கள் வென்றார்கள் - மதன்
92. மூங்கில் மூச்சு - சு.கா
93. சுஜாதா சிறுகதைகள் & குறு நாவல்கள் (எல்லா தொகுப்பும்)
94. காமத்திலிருந்து கடவுளுக்கு – ஓஷோ
95. நாய்கள் - நகுலன்
96. கதாவிலாஸம் - எஸ்.ராமகிருஷ்னன்
97. தலைமுறைகள் - நீல.பத்மநாபன்
98. அபிதா - லா.சா.ராமமிர்தம்
99. மஞ்சள் வெயில் - யூமா.வாசுகி
100. சிதம்பர நினைவுகள் - வம்சி.வெளியீ

Friday, 8 August 2014

தீனா - ஆகஸ்ட்

தீனா "கொரலு"

இந்த காதலிக்கிறவங்கோ அல்லாத்துக்கும் பொதுவா ஒரு கொணம் இர்க்குது.! அது இன்னா தெரிமா.? எங்கியாச்சும் பொது இட்த்துல பாக்க சொல்லோ இதுக்கு மின்னாடி ஒர்த்தர ஒர்த்தர் தெரியாத மேறியும் அப்பத்தான் பார்க்குற மேறியும் ஆக்ட் குடுப்பாங்க பாரு.. அடாஅடாஅடா இன்னா நடிப்புடா சாமி.! குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

காதலார் கண்ணே உள.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : குறிப்பறிதல் : குறள் எண் : 1099 ]


தீனா "கொரலு"

கரீட்டான நேர்த்துல கரீட்டான இடத்துல இங்க இத்த செஞ்சா கரீட்டா இருக்கும்னு நல்லா அல்சி ஆராஞ்சு பாத்து... அதுக்கு ஏத்தா மேறி கில்லியா நட்ந்துகினினா இந்த ஒலகமே உன் கைக்குள்ள வந்துர்மாம்..! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்

கருதி இடத்தாற் செயின்.

[ பொருட்பால் : அதிகாரம் : காலமறிதல் : குறள் எண் : 484 ]


தீனா "கொரலு"

இந்த ஒலகத்துல நேர்மியா நாயமான வழியில நட்ந்து.. ஆ.. ஊன்னு சவுண்டுவுட்டு ஆர்ப்பாட்டம் பண்ணாம எப்யுமே நல்ல கொணத்தோட நல்ல மன்சோட இருக்குறவன் பெரிய மலைய வுட உசரமானவன்.! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது.

[ அறத்துப்பால் : அதிகாரம் : அடக்கமுடைமை : குறள் எண் : 124 ]


தீனா "கொரலு"

ஏ மனசே.. நீ நல்லாருப்ப.. ஓன் மேல தம்மாத்தூண்டு கூட அன்பே இல்யாத ஒர்த்தர்ட்ட போயி உன் கஸ்டத்தை சொல்லினு இர்க்குறதவுடொ.. பீச்சுக்கு போயி அந்த அம்மாம் பெர்ய கடலை தூர் வாருறது ரொம்ப ஈஸி.! குஜாலா சொல்லிக்கீரார்பா"தல"

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்

செறாஅஅய் வாழிய நெஞ்சு.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : தனிப்படர்மிகுதி : குறள் எண் : 1200 ]



தீனா "கொரலு"

ஊரையே அட்ச்சிக்கினு போற வெள்ளம் கணக்கா கஸ்டம் வந்தாலும் அறிவாளிங்க ஒன்யும் கலங்க மாட்டாங்கோ.! ஏன்னா கஸ்டம் வர்ம்போதே அத்த கண்டுக்கினு மன்சு நெறியா தெம்பா நின்னு அந்த கஸ்டத்தை தொர்த்திடுவாங்கோ.! சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்

உள்ளத்தின் உள்ளக் கெடும்.

[ பொருட்பால் : அதிகாரம் : இடுக்கணழியாமை : குறள் எண் : 622 ]


தீனா "கொரலு"

இது போதாது இன்னும் வோணும் வோணும்ன்னு நென்ச்சிகினே இர்க்குற அந்த பேராசை கொணம் கீதே.. அத்த மட்டும் ஒரு மன்சன் ஒழிச்சிட்டான்னா இந்த உல்கத்துலியே அவன் வாழ்றது தான் சந்தோஸ்மான வாழ்க்கியாம்.! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும்.

[ அறத்துப்பால் : அதிகாரம் : அவாவறுத்தல் : குறள் எண் : 370 ]


தீனா "கொரலு"

அவுரோட செல்லமா சண்ட இய்த்து கோச்சுக்கலாம்ன்னு தான் போனேன்.! ஆனா அது இன்னா மாயமோ தெரில.. அவுர பாத்தவுட்னே என் மன்சு என்பேச்ச கேக்காம அவர சேரணும்ன்னு நினைக்க சொல்லோ அப்டியே அவுர கட்டிபுட்ச்சிக்கினேன்.! குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்

கலத்தல் உறுவது கண்டு.

[இன்பத்துப்பால் : அதிகாரம் : நிறையழிதல் : குறள் எண் : 1259 ]


தீனா "கொரலு"

இன்னா தான் நீ எடுக்குற பசிய தாங்கிகினுகீற பெரிய உஸ்தாதா இர்ந்தாலும் உன் பசிய தாங்குறது பெர்சு கெடியாத்து.! வவுறு பசின்னு துடிச்சினுக்குற ஒர்த்தன் துண்றதுக்கு ஒரு வா சோறு நீ வாங்கி கொட்த்தா அதான் பெர்சு.! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின்.

[ அறத்துப்பால் : அதிகாரம் : ஈகை : குறள் எண் : 225 ]


தீனா "கொரலு"

நம்க்கு தோதான நேரம் வர வெரிக்கும் அவஸ்ரப்படாம பொர்மியா கொக்கு கணக்கா காத்துகினு சய்லண்ட்டா இர்க்கணும்.. அத்தே சான்ஸ் கிட்ச்ச வொடனே அந்த கொக்கு குறி தவுறாம கொத்துறா மேறி கபால்ன்னு குத்திட்ணும்.! சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து.

[ பொருட்பால் : அதிகாரம் : காலமறிதல் : குறள் எண் : 490 ]


தீனா "கொரலு"

காதலிக்கிறவங்கோ ஒர்த்தர் மேல ஒர்த்தர் எந்த தப்புமே இல்யாம இர்ந்தா கூடொ.. அப்பப்ப சின்னுதா செல்லமா கோச்சிகினு சண்ட போட்றது.. அவுங்களுக்கு நடுவால வச்சிர்க்குற அன்பை நெரியா வளத்துகினே இர்க்குமாம்..! குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்

வல்ல தவரளிக்கும் ஆறு.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : ஊடலுவகை : குறள் எண் : 1321 ]


தீனா "கொரலு"

இந்த ஒலகத்துல நெலயா இல்யாத விஸ்யத்தை அல்லாம் இத்து நெலயா நெலிக்கும்ன்னு நம்புறான் பாரு அவன் தான் பெர்ய முட்டாளு.. அப்டி நம்புறவன் வாழ்க்க ரொம்ப கேவலமான வாழ்க்க..! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மை கடை.

[ அறத்துப்பால் : அதிகாரம் : நிலையாமை : குறள் எண் : 331 ]


தீனா "கொரலு"

இன்னாதான் நீ மேல்சாதியோ கீழ்சாதியோ இஸ்கோலுக்கு போயி படிக்கலின்னா இஸ்கோலுல நல்யா பட்ச்சவனவுட நீ மட்டந்தான்.. பட்ச்சவனுக்கு இர்க்குற பெருமை படிக்காதவனுக்கு கெடியாத்து.! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்

கற்றார் அனைத்திலர் பாடு.

[ பொருட்பால் : அதிகாரம் : கல்லாமை : குறள் எண் : 409 ]


தீனா "கொரலு"

ஒரு பொண்ணை இவ மெய்யாலுமே பொண்ணுதான் அப்டின்னு பெருமயா சொல்றது எப்ப தெரிமா? அவ தன் மன்சுக்கு புட்ச்சவன் கிட்ட என் ஆசைய தீக்கணும்ன்னா நீ என் கூடவே இருக்கணும்ன்னு கண்ணாலியே கேப்பா பாரு, அடாடாடா..! அந்த வெக்கப்படுற அயகு ஒண்ணே போதும் அந்த பெருமைக்கு..! குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்

காமநோய் சொல்லி இரவு.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : குறிப்பறிவுறுத்தல் : குறள் எண் : 1280 ]


தீனா "கொரலு"

அடக்கவே மிடியாத கோவத்துல இர்க்குற ஆளு உசுரோட இர்ந்தாலும் அவன் செத்ததுக்கு சமானம்..! அத்தே நீ கோவத்த அடியோட ஒழிச்சு கட்டுன ஆளா இர்ந்தா நீ தவம் இர்க்குற மினிவருக்கு சமானம்..! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்

துறந்தார் துறந்தார் துணை.

[ அறத்துப்பால் : அதிகாரம் : வெகுளாமை : குறள் எண் : 310 ]


தீனா "கொரலு"

நீ இன்னாதான் அல்லா வகையிலியும் உறுதியானவனா இர்ந்தாலும்.. நீ செய்ற காரியத்துல உறுதி இல்லாங்காட்டி ஒன்னிய இந்த ஒலகம் மதிக்கவே மதிக்காது.! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்

வேண்டாரை வேண்டாது உலகு.

[ பொருட்பால் : அதிகாரம் : வினைத்திட்பம் : குறள் எண் : 670 ]