Tuesday, 6 January 2026

25 பாவை மொழி

25. ஒருத்திமகனாய்.. 









கவிஞர் கண்ணதாசன் கண்ணன் மீது அபிமானம் கொண்ட ஆண்ஆண்டாள்கண்ணன் மேல் கொண்ட அன்பால் முத்தையா என்னும் தன்இயற்பெயரை கண்ணதாசன் என மாற்றிக்கொண்டவர்தனித் துவம்மிக்கபல கவிதைகளை எழுதியவர் ஆண்டாளின் வரிகளையும் உரிமையுடன் தன்பல பாடல்களில் எடுத்துக் கொண்டார்.


தாய் சொல்லைத் தட்டாதே படத்தில் இடம் பெறும் “ஒருத்தி மகனாய்பிறந்தவனாம்” என்ற இந்தப் பாடல் கவிஞரின் சொந்த வாழ்க்கைப் பற்றியபாடல் என்போரும் உண்டுமுத்தையா என்ற கண்ணதாசன் பெற்ற தாய்தந்தையரால் சுவீகாரம் கொடுக்கப்பட்டவர்அவர் ஒருத்தி மகனாகப் பிறந்துஒருத்தி மகனாக வளர்ந்தவர் என்பார்கள்.


எது எப்படியோ கண்ணனது வாழ்வும் கண்ணதாசன் வாழ்வும் ஒன்றுபோலஅமைந்தது விட்டது ஆச்சரியம் தான்ஆண்களில் பிறந்தவீடு ஒன்று புகுந்தவீடு ஒன்று எனப் பிறந்து வாழ்ந்த அவதாரம் கண்ணன் தான்அதுவும் பிறந்தஅந்த இரவே தான் பிறந்த இடத்தில் இருந்து வளரும் இடத்திற்குமாற்றப்பட்டவன்தேவகி என்னும்.. 


ஒருத்திக்கு பிறந்து யசோதை என்னும் ஒருத்தியிடம் ஒளிக்கப்பட்டு வளர்ந்தஒப்பில்லாதவன்கண்ணனின் தாய்மாமன் கம்சன் தனது தங்கையின்குழந்தையால் உனக்கு மரணம் வரும் என்றறிந்து அவளுக்கு பிறந்தகுழந்தைகளை எல்லாம் கொல்ல இவன் மட்டும் அங்கிருந்து தப்பியவன்கண்ணன் இறக்கவில்லை அவன்..


உயிருடன்தான் இருக்கிறான் என்பதையறிந்த கம்சன் ஒரு கஞ்சனின் வயிறுஎரிவது போல பரிதவித்தான் என்கிறார் ஆண்டாள்உலகில் கஞ்சனின்வயிற்றெரிச்சல் தான் முதலானது என்பதற்கு இதைவிட சிறந்த உவமைஇருக்க முடியுமாஅந்த வயிற்றெரிச்சலில் அவன் உனக்கிழைத்ததீங்குகளை எல்லாம் தவிடு பொடியாக்கினாய்..


வானுக்கும் மண்ணுக்கும் நெடுந்துயர்ந்த திருமாலே உன்னை நினைத்துஉருகி நாங்கள் வேண்டி விரும்பும்  பறையை நீங்கள் எங்களுக்குஅருளினால் அதையிசைத்து உம் வீரத்தைசெல்வத்தை வாயாரப்பாடிஎங்கள் வருத்தங்களைத் தொலைத்து மகிழ்வோம்கண்ணனை வாயாரப்பாடினாலே வருத்தங்கள் தொலையுமாம்


கண்ணனின் விளம்பரத் தூதுவரான ஆண்டாள் எல்லா பாசுரத்திலும் சுற்றிவளைத்து சொல்ல வருவது ஒன்றே ஒன்றை மட்டும் தான்கண்ணனைநினைத்து அவன் பாதங்களில் சரணாகதி ஆகி அவனது  புகழைஅவனதுவீரதீரத்தை மனமுருகப் பாடி  துதித்தால் உங்கள் "கீர்த்திக்கு நான் கேரண்டிஎன உத்திரவாதம் அளிக்கிறார்..


மார்கழி 25 ஆம் நாள் பாடல்...


ஒருத்தி மகனாய்ப் பிறந்துஓர் இரவில்

ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்

தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த

கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை

அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.




24 பாவை மொழி

 24. அன்று இவ்வுலகம்.. 


#பாவை_மொழி


திருமாலை அவதாரங்களின் அரசன் என்று சொல்லலாம். பூவுலகில் தீமைகள் தலையெடுக்கும் போதெல்லாம் அவதாரம் எடுத்து வந்து உலக மக்களை காப்பவன். அவன் காக்கும் கடவுள் அல்லவா. சரி கடவுள் சர்வ வல்லமை படைத்தவர் தானே.. அவர் ஏன் அவதாரம் எடுத்து வந்து தீயவர்களை அழிக்கவேண்டும்? 


அவர் நினைத்தால் தன் சக்தியால் ஒரு நொடியில் தீமை செய்பவர்களை அழித்துவிடலாமே? நியாயமான கேள்வி, கடவுள் ஏன் பூமிக்கு அவதாரம் எடுத்து வருகிறார்? அவரும் ஆசாபாசங்கள் உள்ள மனிதனாகப் பிறந்து பிற மனிதர்கள் மத்தியில் வாழும் போது பிறர்க்கு உதாரணமாக வாழ வேண்டும் எப்படியும் வாழலாம் என்றில்லாமல்.. 


இப்படித்தான் வாழ வேண்டும் என உணர்த்தவும், சகல உறவுகளோடு பிறந்து அவர்களை விட்டுக் கொடுக்காது அரவணைக்க வேண்டும் என்பதற்காகவும் தான். இந்தப் பாசுரத்தில் திருமாலின் அவதாரங்களைப் பற்றி “போற்றிப் பாடடி பெண்ணே” என கிருஷ்ண ‘தேவர்’ கேட்காமலேயே அவரைப் போற்றி அவரது பெருமையைப் பாடுகிறார். 


இக்கால அரசியல்வாதிகள் பதவிக்காக சொல்லும் உங்கள் பொற்பாதங்களை தொட்டு வணங்கி எனும் பொய் போல இல்லாமல் மெய்யாகவே புகழ்கிறார். விஸ்வரூபமெடுத்து உலகைக் காலால் அளந்தவரே, உன் பொற் பாதம் தொட்டு வணங்குகிறோம். இலங்கை தீவிற்கே சென்று அந்த இராவணனை வதைத்த உன் துணிவான வீரத்தை எண்ணிப் பெருமையடைகிறோம்.


சக்கர வடிவில் வந்த சனியன்  சகடையையும்,  கன்று போல் வந்த வென்று வத்சாசூரனையும், மரமாகி நின்ற கபித்தா சூரனையும் அழித்தவரே.. உமது பாதங்களில் அணிந்துள்ள வீரக் கழலை வணங்குகிறோம். மழைக்கு குடை பிடிக்கலாம், ஆனால் நீ மலையையே குடையாகப் பிடித்து மக்களைக் காத்த கோவர்த்தனன்.. உன் அன்பு குணத்தை நினைத்துப் பெருமை அடைகிறோம்.


உனது பகைவனாக எப்படிப்பட்ட மாவீரன் வந்து நின்றாலும் அவனை மோதி வெல்லும் உன் கூரான வேலினைப் புகழ்கிறோம். இப்படி உன் வீர தீரங்களையும் எல்லாப் பெருமைகளையும் போற்றி பறையடித்து பாடவே இங்கு வந்தோம். எங்கள் மேல் இரங்கி உன் ஆசிகளை மட்டும் எமக்கு கொடுத்துவிடு அது ஒன்று மட்டுமே எங்களுக்குப் போதும்.


இப்படியெல்லாம் தினமும் உன்னை நாங்கள் போற்றுவது ஆதாயம் தரும் பதவிக்காக அல்ல, அந்த ஆகாயத்தில் உன்னிடம் வந்து சேரும் வைகுந்தப் பதவிக்கே என்பதை சொல்லாமல் சொல்கிறார் நம் நாச்சியார்.. 


மார்கழி 24 ஆம் நாள் பாடல்...


அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி

சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி

கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி

குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி

வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி

என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்

இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.





Monday, 5 January 2026

23 பாவை மொழி

 23. மாரி மலைமுழஞ்சில்.. 


#பாவை_மொழி


இன்றைக்கு ஒருவரை சிங்கம் போல இருக்கிறார் என்ற உவமையை அதற்கு துளியும் பொருத்தமில்லாத ஆட்களுக்கு பயன்படுத்துவதை பரவலாகப் பார்க்கிறோம்.

ஏரியா கவுன்சிலரின் ஒன்று விட்ட சித்தப்பா மகனுக்கு கூட “சிலிர்த்தெழுந்த சிங்கமே”ன்னு பிளக்ஸ் அடிக்கும் அல்லக் கைகள் இருக்கிறார்கள். ஆண்டாள் கண்ணனை சிங்கம் என்று அழைப்பது அதுபோல அல்ல.. அவர் நரசிம்மமாக அவதாரம் எடுத்தவன் என்பதால்! 

அவன் சிங்கம் போன்ற வீரத்தால் எதிரிகளை அழித்தவன், மக்களை காத்தவன். அடை மழைக் காலத்தில் தன் மலைக் குகையில் உறங்கி ஓய்வெடுத்த சிங்கம் அக்காலம் முடிந்ததும் துயிலெழுந்து கண்ணில் தீ பறக்க வீரமாய் அதன் பிடரியை சிலிர்த்து உடம்பை உதறி நெட்டி முறித்து.. 

நாலா பக்கமும் பார்த்து பின்னர் கம்பீரமாக கர்ஜனை செய்து தன் குகையை விட்டு வெளியேறுவது போல காயாம்பூ நிறத்தானே நீயும் எழுவாயாக. உன் பரந்த மாளிகையில் இருந்து வெளியேறி உன் சிங்காசனத்தில் அமர்ந்து அடியவர் நாங்கள் உன்னிடம் கேட்ட கோரிக்கைகளை..

நீ சீர் தூக்கிப் பார்த்து எங்களுக்கு அதை அருள வேண்டும் என்கிறார். இதில் வியப்பான விஷயம் அந்த காலத்திலேயே ஆண்டாளுக்கு சிங்கங்கள் பற்றித் தெரிந்திருந்தது! இந்திய நாட்டின் புவியியல் அமைப்புப்படி குஜராத் காடுகள் தான் சிங்கங்கள் வாழ்வதற்கான சூழல் அமையப் பெற்றவை.

தமிழகத்திலோ ஶ்ரீவில்லிப்புத்தூரிலோ சிங்கங்கள் வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் மலைக் குகையில் இருந்து வெளிப்பட்ட சிங்கம் என்பதை அவர் காலத்தில் யாத்ரீகர்கள் யாரோ சொல்லக் கேட்டு எழுதி இருக்கலாம். இருப்பினும். சிங்கத்தின் பார்வை..

அதன் சுபாவம் இதெல்லாம் யாரோ சொல்லக் கேட்டு அதை அப்படியே உள்வாங்கி தன் சொந்தக் கற்பனையில் இப்படி எழுதியதும் மிகுந்த ஆச்சர்யம் தான்! சிங்கத்தின் பிடரி மயிர்க்கு வேரி மயிர் எனப்பெயர். அது வேர்க்கும் போது ஏற்படும் அரிப்பில் தான் அது தலையை சிலிர்க்கும்.

சிங்கக் கூட்டத்து தலைவனை அதன் பிடரி மயிர் மணத்தை கொண்டு தான் பிற சிங்கங்கள் தெரிந்து கொள்ளுமாம். இந்த உண்மைகள் எல்லாம் தாண்டி ஆண்டாள் கண்ணனை சிங்கம் எனப்பாட அவர் எடுத்த நரசிம்ம அவதாரமே முதல் இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கும். 

ஏன்னா அந்தச் சிங்கம் கோபத்தில் ஓங்கி அடிச்சா எத்தனை டன் வெயிட்டோ! அதை இந்த உலகம் தாங்குமா? 

மார்கழி 23 ஆம் நாள் பாடல்...

மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி

மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்

கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய

சீரிய சிங்கா சனத்துஇருந்து யாம்வந்த

காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.



Saturday, 3 January 2026

22 பாவை மொழி

 22. அங்கண்மா ஞாலத்து..


#பாவை_மொழி


ஹே.ஹே.ஹே.. இந்த பாட்ஷா யாருக்கும் கெட்டது செய்யமாட்டான்.. தன்ன நம்பி வந்தவங்கள கைவிடவே மாட்டான்.. என்னை நம்பாம கெட்டவங்க அதிகம், நம்பிக் கெட்டவங்க யாருமில்லை இப்ப முடிவு பண்ணிக்கோங்க இந்த பாட்ஷாவா இல்ல அந்த மார்க் ஆண்டனியா? 


இப்படி பாட்ஷா படத்தில் ரஜினி கேட்கும் காட்சி உங்களுக்கு நினைவிருக்கிறதா? அப்படி டான் பாட்ஷா கேட்டவுடன் உடனே அந்த ஊரிலுள்ள எல்லா டான்களும் பாட்ஷாவின் புறங்கையில் முத்தமிட்டு ஏற்றுக் கொள்ளுவார்கள். அப்படி ஒரு காட்சியை ஆண்டாளும் பாசுரத்தில் வைத்திருக்கிறார்! 


உலகின் பெரும் அரசர்கள் யாவரும் திருமால் வசம் சரணடைய அவன் காலடியில் வந்து காத்திருக்கிறார்கள் என்கிறார் ஆண்டாள் பார்த்தால் பசி தீருமா? பாவம் தீருமா? மாலனின் கண் பார்வை நம்மீது பட்டால் அவை சாத்தியம் என்கிறார் அதற்கு அவனைச் சரணாகதி அடையவேண்டும். 


அதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார். ஆண்டாளின் உவமைத் திறன் மிளிரும் மற்றொரு பாடல் இது. அலைகள் தாலாட்ட திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளார் நாராயணன் அவரைக் காண அவர் பார்வை நம் மீது படாதா? என்று உலகைக் கட்டியாளும் பெரும் சக்ரவர்த்திகள்.. 


அனைவரும் தங்கள் பராக்கிரமங்களை மறந்துவிட்டு வந்து அவன் செம்பாதங்களை தொழுது நிற்கிறார்கள். அங்கே அடியவர்களாகிய நாங்களும் வந்து  நிற்கின்றோம் எங்களை மெல்ல கண் திறந்து பார் கண்ணா என சொல்லி வைக்கிறார் பாருங்கள் ஒரு அழகிய உவமானம்.. அடடா!!


மெல்லக் கண்விழிப்பாய் கண்ணா மெல்ல, மெல்ல.. கால் சலங்கை மணியின் வாய் பிளவினைப் போல, அழகிய செந்தாமரைப் பூ மலர்வதைப் போல.. மெல்லக் கண் திற.. சூரியனும் சந்திரனும் ஒன்றாக உதித்தது போல,  நீ கண் விழித்து உன் பார்வை எங்கள் மீது பட்டாலே போதும். 


நாங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தொலைந்து போய்விடும் என்கிறார். இது ஆண்டாள் கண்ணனை துயில் எழுப்பும் மூன்றாம் நாள் பாடல். எனக்கென்னவோ இந்தப் பொல்லாத கண்ணன் முதல் நாளே விழித்துக் கொண்டு ஆண்டாளின் தமிழமுதைப் பருகுவதற்காகத் தான்.. 


இன்னமும் தூங்குவது போல நடிக்கிறான் என்றே நினைக்கிறேன். படிக்கும் நமக்கே இவ்வளவு இன்பம் என்றால் பாடு பொருளான அவனுக்கு.! நிஜத்தில் கண்ணனை பாசக் கயிறால் கட்டிப் போட்டது யசோதை என்றால் பாசுரக் கயிறால் கட்டிப் போட்டது ஆண்டாளே..



மார்கழி 22 ஆம் நாள் பாடல்...


அம்கண்மா ஞாலத்து அரசர் அபிமான

பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே

சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்

கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே

செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ

திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்

அம்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்

எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.



Friday, 2 January 2026

21 பாவை மொழி

  21. ஏற்ற கலங்கள்..





பாசுரங்கள் முழுவதும் பசுக்களை வள்ளல்கள் என்று ஆண்டாள் விளிக்கிறார். இயக்குநர். விசு படத்தின் எல்லா படங்களிலும் தவறாமல் வரும் ஆஸ்தான நடிகர்கள் போல பல பாசுரங்களில் யாராவது அதிகாலையில் எங்காவது பாலை கறந்து கொண்டு இருப்பார்கள் அல்லது பசுக்கள் கூட்டம் கூட்டமாக மேய்ந்து கொண்டிருக்கும்.


செல்வம் தரும் பால் வளம் மிக்க பசுக்கள் அடிக்கடி வந்து போகும்! தன் கன்றின் குரல் கேட்ட பாசத்தில் தானாகப் பாலைப் பொழியும் மாடுகள், எருமைகள், கன்றுகள் வீட்டை பால் சகதியாக்கும்! இப்படிப் பெரும் பால் வளத்தையும், பசு & எருமைகளையும் திருப்பாவையின் ஆஸ்தான பாத்திரங்களாக பாசுரமெங்கும் காணலாம்.


இந்தப் பாத்திரங்களில் வரும் பசுக்களின் பாலை பாத்திரம் வைத்து கறக்கும் போது அந்தப் பால் பாத்திரத்தில் அதி வேகமாய் வீழ்ந்து அடுப்பில் பொங்குவது போல எதிர்த்து பொங்குகிறது என்கிறார்! {நியூட்டனின் விதி} கடந்த இரு நாட்களாக பாடிய பாசுரங்களுக்கு  கண்ணன் சிறிதும் செவி சாய்க்கவில்லை! அப்போது என்ன செய்ய?


சடாரென சரணாகதி தானே! இதோ ஆண்டாள் உருகிப் பாடுகிறார்.. பசுக்களிடம் இருந்து கலத்தில் கறக்கும் பாலானது அடுப்பில் பொங்குவது போல் வீழ்ந்து பொங்குகிறது, அவ்வளவு பால் தரும் வளமான பல பசுக்கள் வைத்திருக்கும் நந்தகோபரின் மைந்தனே, உலகைக் காக்கும் பெரிய மனிதனே, அவதாரப் புருஷனே..


ஒளியின் வடிவே நீ உறங்கலாமா உன் பலமறிந்த எதிரிகளே உன்னை நன்கறிந்து உன்னுடன் மோத அஞ்சி உன் வாசலில் வந்து உனக்காக காத்திருப்பது போல அடியவர்கள் நாங்களும் உன் வாசலில் வந்து உன்னைப் புகழ்ந்து பாட காத்து நிற்க நீ உறங்குதல் நியாயமா? நீ எழுந்து எமக்கு அருள் புரியாவிட்டால் எமக்கு யார் அருள் புரிவார்? 


உன் உறக்கத்தைக் களைந்து எழுந்து வா மன்னா.. என் ஆசைக் கண்ணா என்கிறார். கோபமாய், தாபமாய், செல்லமாய், காதலாய், ஊடலாய் கண்ணனைப் பாடுபவர் ஆண்டாள். அவன் எதற்கும் மசியவில்லை என்றால் தன் ஊடலை மறந்து தயக்கமின்றி, சிறிதும் யோசிக்காமல் சடாரென்று அவனது பாதங்களில் விழுந்துவிடுவாள். 


அவள் ஆதாயத்திற்காகவும் பதவிக்காகவும் அரசியல்வாதிகள் போல் காலில் விழுபவள் அல்ல! கண்ணன் மேல் காதலில் விழுந்தவள்❤️❤️


மார்கழி 21 ஆம் நாள் பாடல்...


ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப 

மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் 

ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய் 

ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில் 

தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய் 

மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண் 

ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலே 

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.

 









Thursday, 1 January 2026

20 பாவை மொழி

20. முப்பத்து மூவர்..






“திருப்பாவையில் பஞ்ச் டயலாக்”


“நான் சொல்றதை தான் செய்வேன்.. செய்யறதை தான் சொல்வேன்”


“ஒரு தடவை முடிவு பண்ணிட்டா எம் பேச்ச நானே கேக்க மாட்டேன்”


“நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி” 


இவை அனைத்தையும் விட ஒரு அருமையான பஞ்ச் டயலாக்கை ஆண்டாள் இந்தப் பாசுரத்தில் வைக்கிறார்.


கடந்த பாசுரத்தில் கட்டிலில் நப்பின்னையின் மார்பில் தலை வைத்து ரொமாண்டிக்காக உறங்குகிறான் கண்ணன் என்றவர். அப்படி ஒரு சுகமான தூக்கத்தில் அந்த ஒரு பாட்டுக்கே எழுந்துவிட்டால் நன்றாக இருக்குமா? ஆகவே இந்தப் பாடல் அவர்களை எழுப்பும் 2வது பாடல்.. 


இந்தப் பாடலில் அவர் கண்ணனின் வீர தீர பராக்ரமத்தை சொல்லி ஆரம்பிக்கிறார். இதன் உள் குத்து, “இவ்வளவு வீரமுள்ள ஆளு நீ ஒரு பொண்ணு மார்ல சாஞ்சிகிட்டு தூங்கிட்டு இருக்கியேய்யா” என உசுப்பிவிடத்தான். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் ஒரு பிரச்சனை என்றால் யாரும் சொல்லாமல் அங்க வருகின்ற வீரா..


ஓழுக்கத்தில நீ கில்லி, துணிச்சலா நீ அடிப்ப சொல்லின்னு ஆரம்பிச்சு, வைக்குறார் பாருங்க ஒரு பஞ்ச்.. "உன் பேரைக்கேட்டாலே எதிரிகளுக்கு காய்ச்சல் வரும் தூயவனே" அடடா என்னா ஒரு பஞ்ச் டயலாக் இது! இப்படி பஞ்ச்சாக சொல்லிவிட்டு சில வர்ணனைகளை அப்படியே..


நப்பின்னைக்குச் சொல்கிறார், செப்புக் கவச வடிவில் மென் மார்பும், செவ்விதழ்களும் அழகிய வளைவான சிறு இடையும் உள்ள நப்பின்னையே! நீ எழுந்து நோன்பிற்குரிய விசிறியையும் கண்ணாடியையும் உன் அத்தானிடம் தந்து அதை எங்களுக்கு தரச்செய்ய அவரை எழுப்புவாயாக, எங்களை மார்கழி நீராட விடுவாயாக என்கிறார். 


இந்தப் பாசுரத்தில் கப்பம், செப்பம், வெப்பம் என்று அடுக்குமொழியிலும் அந்தக் காலத்து லேடி டி.ஆராக எழுதியிருக்கிறார். ஒன்று நிச்சயம் பாசுரத்தில் பஞ்ச் டயலாக் எல்லாம் இருப்பது தெரிஞ்சா சினிமாக் காரர்கள் பாசுரத்தின் பக்கம் பாய்ந்து விடும் அபாயம் இருக்கிறது! 


யார் கண்டது ஒருவேளை அவர் காலத்தில் சினிமா கண்டு பிடிக்கப்பட்டு இருந்திருந்தால் அதிலும் தன் வெற்றிக் கொடியை பறக்கவிட்டிருப்பார் நம் ஆண்டாள்.


மார்கழி 20 ஆம் நாள் பாடல்....


முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே துயில்எழாய்

செப்பம் உடையாய் திறல்உடையாய் செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா துயில்எழாய்

செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்

நப்பின்னை நங்காய் திருவே துயில்எழாய்

உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.

 


19 பாவை மொழி

19. குத்து விளக்கெரிய..






இவ்வுலகிலேயே மக்களை தூக்கத்திலிருந்து எந்திரிக்கச் சொல்லி அதிக விழிப்புணர்வை ஊட்டியது ஆண்டாளாகத் தான் இருக்கும். நீங்கள் தூங்கியது போதும் விழித்து எழுங்கள். என்னும் முழக்கத்தை திருப்பாவை முழுவதும் முழங்கிக் கொண்டே இருக்கிறார் போராளி ஆண்டாள்! 


அப்படித் தூங்குவது போல தூங்கினால் ஆண்டாள் நம்மை அழகுத் தமிழில் பாடி எழுப்புவார் என்று எண்ணி கூட பலர் தூங்கியிருக்கலாம். இன்றைய தினம் நப்பின்னையையும் அவளோடு ஆனந்தமாக உறங்கிக் கிடக்கும் கண்ணனையும் எழுப்புகிறார். அவர்கள் தூங்கும் அறையை பாருங்கள்.. 


வாசல் நிலை விளக்குகள் நின்றெரியும் உறுத்தாத ஒளி யானை தந்தத்தில் செய்த டபுள் காட் கட்டில்,மேலே அன்னப் பறவையின் சிறகு, இலவம் பஞ்சு, செம்பஞ்சு எல்லாம் நிரம்பிய மென் மெத்தை, அழகிய வெண் திரைச் சீலைகள், சுகமாகச் சில்லிடும் மார்கழிக் குளிர் இத்தனைக்கும் நடுவே,  


கொத்தான நறுமண மலர்களை சூடிய நப்பின்னை படுத்து உறங்க இத்தனை மென்மெத்தைகள் இருந்தும் போதாது என அவள் மார்பகங்களில் தலை சாய்த்து உறங்கும் கண்ணா! நீவாய் திறந்து பேசு, அழகிய மையிட்ட பெரிய விழிகளை உடைய நப்பின்னையே, நீயாவது கண் விழி..


உன் கணவனை விட்டு விலகி எழுந்திரு அவனது அணைப்பில் இருந்து விலகு அவனது பிரிவை சிறிது நேரம் கூட நீ பொறுக்கமாட்டாயா?அவனை எழுப்பிவிடு நீ இப்படி இருப்பது நியாயமும் இல்லை அது நல்ல குணமும் இல்லை சில்லென்ற குளிர், மெல்லிய ஒளி, தந்தக் கட்டில்..


கொத்து மலரின் நறுமணம், இலவம் பஞ்சு, இளம்பெண் நெஞ்சு ஆஹா, கண்ணன் தூங்குவது போல இப்படி ஒரு சுகமான தூக்கத்திலிருந்து நாமெல்லாம் எழுந்திருப்பதே கஷ்டம். அதையும் மீறி மனிதர்கள் அன்று எழும்பியது ஆண்டாளின் பாசுரத் தமிழால் என்பதே உண்மை.


மார்கழி 19 ஆம் நாள் பாடல்...


குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறிக்

கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்

வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்

மைத்தடம் கண்ணினாய் நீஉன் மணாளனை

எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்

எத்தனையேலும் பிரிவுஆற்ற கில்லாயால்

தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.