Tuesday, 6 January 2026

24 பாவை மொழி

 24. அன்று இவ்வுலகம்.. 


#பாவை_மொழி


திருமாலை அவதாரங்களின் அரசன் என்று சொல்லலாம். பூவுலகில் தீமைகள் தலையெடுக்கும் போதெல்லாம் அவதாரம் எடுத்து வந்து உலக மக்களை காப்பவன். அவன் காக்கும் கடவுள் அல்லவா. சரி கடவுள் சர்வ வல்லமை படைத்தவர் தானே.. அவர் ஏன் அவதாரம் எடுத்து வந்து தீயவர்களை அழிக்கவேண்டும்? 


அவர் நினைத்தால் தன் சக்தியால் ஒரு நொடியில் தீமை செய்பவர்களை அழித்துவிடலாமே? நியாயமான கேள்வி, கடவுள் ஏன் பூமிக்கு அவதாரம் எடுத்து வருகிறார்? அவரும் ஆசாபாசங்கள் உள்ள மனிதனாகப் பிறந்து பிற மனிதர்கள் மத்தியில் வாழும் போது பிறர்க்கு உதாரணமாக வாழ வேண்டும் எப்படியும் வாழலாம் என்றில்லாமல்.. 


இப்படித்தான் வாழ வேண்டும் என உணர்த்தவும், சகல உறவுகளோடு பிறந்து அவர்களை விட்டுக் கொடுக்காது அரவணைக்க வேண்டும் என்பதற்காகவும் தான். இந்தப் பாசுரத்தில் திருமாலின் அவதாரங்களைப் பற்றி “போற்றிப் பாடடி பெண்ணே” என கிருஷ்ண ‘தேவர்’ கேட்காமலேயே அவரைப் போற்றி அவரது பெருமையைப் பாடுகிறார். 


இக்கால அரசியல்வாதிகள் பதவிக்காக சொல்லும் உங்கள் பொற்பாதங்களை தொட்டு வணங்கி எனும் பொய் போல இல்லாமல் மெய்யாகவே புகழ்கிறார். விஸ்வரூபமெடுத்து உலகைக் காலால் அளந்தவரே, உன் பொற் பாதம் தொட்டு வணங்குகிறோம். இலங்கை தீவிற்கே சென்று அந்த இராவணனை வதைத்த உன் துணிவான வீரத்தை எண்ணிப் பெருமையடைகிறோம்.


சக்கர வடிவில் வந்த சனியன்  சகடையையும்,  கன்று போல் வந்த வென்று வத்சாசூரனையும், மரமாகி நின்ற கபித்தா சூரனையும் அழித்தவரே.. உமது பாதங்களில் அணிந்துள்ள வீரக் கழலை வணங்குகிறோம். மழைக்கு குடை பிடிக்கலாம், ஆனால் நீ மலையையே குடையாகப் பிடித்து மக்களைக் காத்த கோவர்த்தனன்.. உன் அன்பு குணத்தை நினைத்துப் பெருமை அடைகிறோம்.


உனது பகைவனாக எப்படிப்பட்ட மாவீரன் வந்து நின்றாலும் அவனை மோதி வெல்லும் உன் கூரான வேலினைப் புகழ்கிறோம். இப்படி உன் வீர தீரங்களையும் எல்லாப் பெருமைகளையும் போற்றி பறையடித்து பாடவே இங்கு வந்தோம். எங்கள் மேல் இரங்கி உன் ஆசிகளை மட்டும் எமக்கு கொடுத்துவிடு அது ஒன்று மட்டுமே எங்களுக்குப் போதும்.


இப்படியெல்லாம் தினமும் உன்னை நாங்கள் போற்றுவது ஆதாயம் தரும் பதவிக்காக அல்ல, அந்த ஆகாயத்தில் உன்னிடம் வந்து சேரும் வைகுந்தப் பதவிக்கே என்பதை சொல்லாமல் சொல்கிறார் நம் நாச்சியார்.. 


மார்கழி 24 ஆம் நாள் பாடல்...


அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி

சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி

கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி

குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி

வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி

என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்

இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.





No comments:

Post a Comment