Saturday, 24 January 2015

ஒபாமா வந்தாச்சு - 6

ஒபாமா வந்தாச்சு..! 

Episode - 6 (ஒபாமாவின் இந்திய விஜயம் ஒரு கற்பனை)

ஓபாமாவின் அதிநவீன "பீஸ்ட்" கார் தாஜ்மஹால் அருகில் வந்து நின்றது.! சுற்றிலும் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர் புடை சூழ நடந்தவர்.. ஒரு கணம்  தாஜ்மஹாலை நிமிர்ந்து பார்த்தார்.. உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான அது தான் உலகின் முதல் "ஒயிட் ஹவுஸ்" என்பது அவர் நினைவில் வந்து போனது.!

மிச்சேலுக்கும் இனம் புரியாத மகிழ்ச்சி.. இது தன் காதலிக்கு ஷாஜகான் கட்டிய மாளிகையா அல்லது சமாதியா என்ற சர்ச்சைகளில் எல்லாம் கவனம் செலுத்தாது தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க விரைந்தனர். ஒபாமா வருகைக்காக அதன் சுற்றுப் புறங்கள் சுத்தப் படுத்தப்பட்டு இருந்ததை ஓரக்கண்ணால் கவனித்தனர்.!

இதைப்போல அதிபர்கள் அடிக்கடி வந்தால் எனக்கும் நல்லது என்று தாஜ்மஹாலும் கவனித்தது. தாஜ்மஹாலின் பின்புறம் ஓடிய யமுனையும் கொஞ்சம் சுத்தப்படுத்தப் பட்டிருந்தது. ஷாஜகானின் மனைவி பெயர் நூர்ஜஹானா மும்தாஜா என்ற குழப்பத்தில் ஷாஜகான் மனைவி பெயர் என்ன எனக்கேட்டார் ஒபாமா.!

ஒரு வட இந்திய அதிகாரி சட்டென நூர்ஜஹான் எனச்சொல்ல..அப்போ மும்தாஜ்.. அவங்க மல மல மருதமல பாட்டுக்கு ஆடினவங்க என்றார் ஓரு தமிழக பேட்ச் அதிகாரி. அது என்ன என கேட்ட போது சுதாரித்துக் கொண்ட அதிகாரி அது  வந்து மர்த் என்ற பளிங்கு மலையில் இருந்து கல்லெடுத்து கட்டியது தான் தாஜ்மஹால்.!

என்று சமாளித்தார். பப்பு ஐ லவ் யூ,ரோஷன்& கிரண் ஹார்ட்டின், தருண்&மஹிமா மேரா தில், பூனம்& சோனு போன்ற ஏழை இந்தியக்காதலர்கள் தாஜ்மஹால் கட்ட வசதியில்லாததால் ஷாஜகான் கட்டிய மாளிகையில் தங்கள் பெயரை பொறித்து எதிர்கால வரலாற்றில் தாங்களும் இடம் பிடிக்க துண்டு போட்டு இருந்தார்கள்.!

ஒபாமாவிடம் அதெல்லாம் அந்த தாஜ்மஹால் கட்டிய கொத்தனார்களின் பெயர்கள் என்று நம் அதிகாரிகள் அடித்து விட்டுக் கொண்டிருக்க.. எல்லாம் ஏற்கனவே தெரிந்த ஒபாமா ஒன்றும்தெரியாதது போல் கேட்டுக் கொண்டே வந்தார். அங்கு நின்று படம் எடுத்துக் கொண்டனர் அமெரிக்கர்கள் அனைவரும்.

வழக்கம் போல செல்ஃபி பிரியரான ஒபாமா வரிசையாக செல்ஃபி எடுத்துத் தள்ள அவருடன் வந்திருந்த அனைவரும் எடுத்து மகிழ்ந்தனர்.. ஷாஜகான் மும்தாஜ் ஆவிகள் தவிர அத்தனை பேருடனும் அவர் படம் எடுத்துக் கொண்டார். குறிப்பிட்ட இடத்தில் நின்று கையை உயர்த்தினால் தாஜ்மஹால் உச்சியை தொடலாம்...

என்றபோது அங்கும் போய் படம் எடுத்துக் கொண்டனர். ஒரு அழகிய சிறிய மினியேச்சர் தாஜ்மஹாலை தன்னுடைய மும்தாஜான மிச்சேலுக்கு பரிசளித்தார் ஓபாமா.! கண்ணில் காதல் மின்ன அதை வாங்கிக் கொண்டார் மிச்சேல்.. இந்நேரம் எதாவது ஒரு சினிமா டைரக்டர் இங்கிருந்து இக்காட்சியைப் பார்த்திருந்தால்..

தாஜ்மஹாலில்"ஓ மை மிச்சேல் நீ தான் மை கேர்ள்"என்று இருவரையும் டூயட் பாடி ஆட விட்டிருப்பார்.. நல்லவேளை அப்படி ஏதும் நடக்கவில்லை.தாஜ்மஹாலை விட்டு கிளம்ப மனமில்லாமல் கிளம்பினார்கள் இருவரும்.. நாளை அமெரிக்கா திரும்புகிறார்கள் நாளை அவர்களை வழியனுப்ப.. (தொடர்வோம்)

ஒபாமா வந்தாச்சு - 5

ஒபாமா வந்தாச்சு..! 

Episode - 5 (ஒபாமாவின் இந்திய விஜயம் ஒரு கற்பனை)

மோடி விளக்கும் புதிய பட்டு ரகங்கள்.. இனி மோடி விவரிக்கிறார்...

முதலில் நாம் அறிமுகப்படுத்துவது நமோத்திரிக்கா பட்டு.. சுத்தமான பட்டு சூப்பரான பட்டு ஆரஞ்சு கலர் பட்டு ஆரவார பட்டு பொது நிகழ்ச்சிகளில் அணிந்து கொள்ளலாம் எல்லார் கண்கள் மட்டுமல்ல எல்லா காமிராவும் உங்கள் மேல் தான்,டீ கொட்டினாலும் கறை படியாத ஸ்டெயின் ரிமூவர் டெக்னாலஜி பட்டு இது என்றார்.!

சூப்பர்.. அடுத்து என்றார் மிச்சேல், அடுத்தது அஸ்த்திரகலா பட்டு.. எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை அஸ்திரம் போல தொடுத்தாலும் அது பற்றி கவலைப்படாமல் வெளிநாடு செல்லும் போது அணிய வேண்டிய பட்டு.. மிக மிக லேசானது ஆனால் எதையும் தாங்கும் உறுதியானது பேக் செய்வது சுலபம் என்பதால் டூருக்கு ஏற்றது.!

அடுத்து ஆயுதரா பட்டு.. அதென்ன அர்த்தம்ன்னா நம் அதிருப்தியாளர்கள் யாரும் குரல் கொடுத்தால் அவர்களது குரலை அமுங்கச் செய்யும் பட்டு இது.. இதை அணிந்து கொண்டாலே யாரையும் எதிர்க்கும் துணிவு வரும் ஆறு இழைகளால் செய்யப்பட்ட கனமான பட்டு அவ்வப்போது ஆயுதமாகவும் பயன்படுத்தலாம்.!

ஆஹா.. அடுத்தது.. என்றார் மிச்சேல் "அடுத்து ரகசியா பட்டு.. இது அணிந்திருப்பது பிறர் கண்ணுக்கு அதிகம் தெரியாது நல்லவன் போல் நண்பன் போல நடிக்கும் எதிரியை கை காட்டும் பட்டு..! எல்லைப் புறத்திலும் சில அமைச்சர்கள் வீட்டு கொல்லைப் புறத்திலும் நடக்கும் சதியை கண்டுபிடிக்க உதவும்.. சென்சார்களிலும் ராடாரிலும் சிக்காத பட்டு இது என்றார் மோடி.!

இப்போது உஷாரான ஒபாமா இந்த பட்டு அணிந்தவர்கள் யாரேனும் கடந்த 3 நாட்களாக நம்முடன் இருந்தார்களா என சற்று கோபமான (பயத்துடன்) கேட்க.. அதைப் புரிந்து கொண்ட மோடி.. இல்லை மிஸ்டர் ஒபாமா இங்கு தயாராகும் முதல் புடவையே இது தான் ஆகவே உங்களுக்கு கவலை வேண்டாம் என்றார். 

இதெல்லாம் உங்களுக்காக ஸ்பெஷலா நாங்க நெய்தது.! இந்த புடவைகளை அப்படியே அள்ளிக்கோங்க.! இது ஆடி விற்பனை அல்ல.. இந்தியாவின் அதிரடி விற்பனை..இதை வாங்கிகிட்டு அமெரிக்கா இந்தியாவுக்கு தந்த கடனில் 40 முதல் 50% தள்ளுபடி தாங்களேன் என்று தன் தந்திர வலையை மோடி விரித்தார்.!

அதற்கு பதில் கூறாமல் பனாரஸ் உள்ளிட்ட 100 புடவைகளை பேக் செய்து தன் மனைவியிடம் தரச்சொன்னார் ஒபாமா.. மிச்சேல் அதை பூரிப்புடன் வாங்கிக் கொண்டார்.. அவர் நெக்ஸ்ட் என்று கேட்க பிட்" என்றார் ஜவுளி அமைச்சர்.. புரியாமல் பார்த்த மிச்சேலிடம் அது மேட்சிங் ப்ளவுஸ் எனப்படும் ஜாக்கெட் பிட்டை குறிக்கும் என மோடி விளக்க..

எங்களுக்கு அதிலெல்லாம் பழக்கமில்லை, அதற்கு நேரமும் இல்லை உங்கள் நாட்டு பெண்களை வைத்தே தேர்வு செய்யுங்கள் ஒகே என்றார் ஒபாமா. மோடியும் ஓகே சொன்னார். அடுத்து எங்கே என மிச்சேல் கேட்க..ஒபாமா லேசாக தலை சாய்த்து கன்ணடித்து சொன்னார் தாஜ்மஹால் டியர் என்று.! நாளை தாஜ்மஹாலில்... 

(தொடர்வோம்)

ஒபாமா வந்தாச்சு - 4

ஒபாமா வந்தாச்சு..! 

Episode - 4

(ஒபாமாவின் இந்திய விஜயம் ஒரு கற்பனை)

ஒபாமா குழுவினர் சென்ற புடவைக்கடை மத்திய ஜவுளி அமைச்சகத்தால் போத்தீஸ் ஆரெம்கேவி போல செட் போடப்பட்டு அதி நவீன பாதுகாப்பு வசதிகளுடன் இருந்தது. இனி அந்த பிரத்யேக ஷோரூமில்....

வெல்கம் டூ அவர் இண்டியன் சில்க் ஷோரூம் என்ற அலங்கார டிஜிட்டல் பேனர்கள் வரவேற்க  உள்ளே நுழைந்தனர் ஒபாமா தம்பதியர்..நேராக புடவை பிரிவுக்கு போனார்கள்..அந்தப் பிரிவில் வந்ததும் உற்சாகத்தில் மிச்சேலே ஒரு பெரிய விசிலடித்தார்..புடவைகளில் இத்தனைரகங்களா.!இவ்வளவுவண்ணங்களா! வியப்பில் விழிகள் விரிய பார்த்தவர், உங்க ஊர் பெண்கள் கொடுத்து வைத்தவர்கள் இவ்வளவு சாய்ஸ் எங்க நாட்டில் கூட இல்லை என்றவரிடம்...

அட இதுவே அவங்களுக்கு திருப்தி தராதுங்க சேலை எடுக்க எங்க ஊர்ப்பெண்கள் எடுத்துக் கொள்ளும் அக்கறையை கணவனை தேர்ந்தெடுக்ககாட்டியிருந்தால் நாங்க எப்பவோ வல்லரசாகி இருப்போம் என்றார் ஜவுளித்துறை அமைச்சர். ஓ இதுவே அவங்களுக்கு போதாதா.! ஆச்சர்யமா இருக்கே! என்றவர் மோடி படம் போட்ட புடவைகளை பார்த்து வியந்தார்.! என்ன உங்க ப்ரைம் மினிஸ்டர் படம் போட்டுருக்கு என்றார்.!

ஓ அதுவா எங்க பிரதமர் மக்களால் அதிகம் விரும்பப்படுபவர் என்பதற்காகவே.. இப்புடவைகளை தயாரிக்கிறோம் என்றார் ஜவுளி அமைச்சர்.! அப்படின்னா அவரைப் புடிக்காதவங்க வாங்கி தொவை தொவைன்னு தொவைச்சா என்று மனதில் எழுந்த கேள்வியை நமட்டு சிரிப்போடு அடக்கிக் கொண்டு எங்கே உங்க பிரதமர் என்றார்..! அவர் அதோ அடுத்த பிரிவில் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி ஆகும் புடவைப் பிரிவை பார்வையிடப் போயிருக்கிறார் என்றதும்..

ஒபாமாவுக்கு வியப்பு!என்ன பாகிஸ்தானுக்கு தயாராகும் புடவையா.! அதிலென்ன சிறப்பு என்று ஒபாமா கேட்க.. நானே சொல்றேன் என்றபடி அங்கு வந்தார் மோடி. மிஸ்டர் ஒபாமா நாங்க பாகிஸ்தானுக்கு தயாரிப்பது எல்லாமே "பார்டர்"வைத்த புடவைகள்!பார்டர் இல்லாத புடவைகளை அங்கு அனுப்புவதில்லை  பார்டரை மீறக்கூடாது என்ற அர்த்தம் பொதிந்த எச்சரிக்கைப் புடவைகள் அவை என்றார்.

அட..! பார்டரை வைத்து பார்டருக்கே பாடமா.! ஒரு பட்டுச்சேலையின் பார்டரில் பாரதத்தின் பார்டர் பிரச்சனையை மறைமுகமாக சொல்லி எச்சரிக்கும் உங்க ஐடியா சூப்பர் என்றார் ஒபாமா. இதென்ன பிரமாதம் இதோ உங்கள் மனைவிக்காக நாங்கள் தயாரித்த புடவை ரகங்களின் சிறப்பைக் கேட்டால் அசந்து விடுவீர்கள் என மோடி சொல்ல.. சொல்லுங்க என்றார் ஒபாமா.!

அந்த அதிரி புதிரி ரகங்களைஅவருடன் நாளை நாமும் கேட்க.. (தொடர்வோம்)


ஒபாமா வந்தாச்சு - 3

ஒபாமா வந்தாச்சு..! 

Episode - 3 (ஒபாமாவின் இந்திய விஜயம் ஒரு கற்பனை)

ஓபாமா சோனியா குழுவினரை நோக்கி வந்து வணக்கம் சொன்னார். கடந்த முறை என்னுடன் பேச்சுவார்த்தை நடத்திய நீங்கள் இன்று எதிர்கட்சி கூட இல்லையே என்று வருத்தமாக ஒபாமா கேட்க.. சோனியா நோ மிஸ்டர் ஒபாமா உங்களுடன் பேச்சு வார்த்தைக்கு மன்மோகனை அனுப்பியது தான் நான் செய்த பெருந்தவறு.!

எப்படி என்றார் ஒபாமா? பேச்சு வார்த்தை எனும் போது மன்மோகனை அங்கு அனுப்பியதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இவரெல்லாம் எப்படி பேசுவார் என்ற சந்தேகத்திலியே மக்கள் எங்களைத் தோற்கடித்துவிட்டனர் என்றவுடன், ஒபாமா மன்மோகனைப் பார்க்க அவரும் ஒரு ஞானி போல மெலிதாக புன்னகைத்தார்.

இவருக்கு பதில் எங்கள் கட்சியை சேர்ந்த நாசாவை அனுப்பியிருக்கலாம் என்று சோனியா சொல்ல.. என்ன நாசா உங்கள் கட்சியில் இணைந்து விட்டதா.! எனக்கு பெண்டகனில் இருந்து கூட இத்தகவல் வரவில்லையே.! என ஒபாமா வியக்க இது அந்த நாசா அல்ல எங்க கட்சி நாராயணசாமி என்றார் ராகுல்.! 

அவரை பார்த்து ராகுல் ஹவ் ஆர் யூ? என்றார் ஒபாமா.. ராகுலும்"ஐயாம் ஃபைன்" என்றவர் வாங்களேன் இன்று எங்களுடன் விருந்து சாப்பிடலாம் என அழைக்க.. குடிசையோ குடியரசுத்தலைவரோ யாராயிருந்தாலும் இவருக்கு உணவுதான் ஒரே குறிக்கோள் போல என எண்ணிக் கொண்டே நோ தேங்ஸ் என அதை மறுத்தார்.!

அந்நேரம் திபு திபு வென கூட்டமாக வந்தவர்கள் அப்படியே சாஷ்டாங்கமாக ஒபாமா காலில் விழ என்ன செய்வது.? இது என்ன புது மரியாதை.? இதற்கு பதில் மரியாதை எப்படி செய்வது.?என குழம்பிய ஒபாமா பதிலுக்கு அவர்களைப் போலவே செய்ய முடிவெடுத்து அவர்கள் எழுந்தவுடன் அவர்கள் காலில் விழப்போனார்.!

ஓடி வந்து ஒபாமாவை தடுத்தார் மோடி மிஸ்டர் ஒபாமா என்ன இது.? என்ன காரியம் செய்ய துணிந்தீர்கள்..! இது வேண்டாம் என்றார்.. இவர்களெல்லாம் யார் என ஒபாமா கேட்க இவர்களெல்லாம் தமிழக எம்பிக்கள் காலில் விழுவது என்பது இவர்கள் ஜீனிலேயே புரொகிராம் செய்யப்பட்ட விஷயம் என்றார்.!

ரோபோ டெக்னாலஜியில் கூட இப்படி ஒரு புரொகிராம் இல்லையே.. தமிழர்கள் மிகுந்த புத்திசாலிகள்(!?) என்று எண்ணியபடியே அவர்களுக்கும் வணக்கம் சொல்லி திரும்ப மிச்சேல் இப்போது உள்ளே நுழைய வர மோடி அவரை வரவேற்று.! வாங்கம்மா நாம் இப்ப புடவை கடைக்கு போறோம் ரெடியா என்றார்.! 

முதல்ல சேலைகளை பார்க்கணும்ன்னு மிச்சேல் சொல்ல.. ஒபாமா தன் புடை சூழ மோடியுடன் புடவைக் கடைக்கு கிளம்ப.. நாளை புடவைக் கடையில் சந்திக்கலாம்..

(தொடர்வோம்)

ஒபாமா வந்தாச்சு - 2

ஒபாமா வந்தாச்சு..! 

Episode - 2 (ஒபாமாவின் இந்திய விஜயம் ஒரு கற்பனை)

ஒபாமா மோடியுடன் நடந்த கூட்டத்தில் மிச்சேல் சொன்னது போல சமாளித்து அருமையாக பேசி பின்னர் மீட்டிங் முடிந்து மோடியுடன் வெளியே ஹாலுக்கு வருகிறார்..! அங்கு மொத்த கட்சியினரும் எம்பிகளும் கூடி நிற்க மோடி எல்லா அமைச்சர்களையும் எம்பிகளையும் அறிமுகப்படுத்துகிறார்...

மிஸ்டர் ஒபாமா இவர் தான் அமித் ஷா எனது ஆருயிர் நண்பர்.. இந்தியாவின் வளர்ச்சிக்கு நானும் கட்சியின் வளர்ச்சிக்கு இவரும் பாடுபடுகிறோம் என்று சொல்லி முடித்த வினாடி பக்கென்று சிரித்து விட்டார் நிதின் கட்காரி" மோடி அவரை முறைக்க அந்த சிரிப்பை கட்காரி அடக்க.. யார் இவர் என ஒபாமா கேட்க...

இவரா இவர் எங்க கட்சியின் முன்னாள் தலைவர் கொஞ்சம் அதிகபிரசிங்கியாக இருந்ததால் இவரை நீக்கிவிட்டோம் என்றார் அடுத்து அருண் ஜேட்லியை அறிமுகப் படுத்தினார்.. குங்ஃபூவுக்கு ஒரு ஜெட்லி.. எங்கள் கட்சியின் குங்குமம் போன்றவர் ஜேட்லி.! ஒத்தை ஆளாய் நின்று பலரை சமாளிக்கும் வித்தைக்காரர் என்றார்.!

அடுத்து சுப்ரமணியன் சுவாமி நின்று கொண்டிருந்தார்.. ஒபாமாவே சற்று ஒடுங்கி அவரை வணங்கினார்..அவர் காதருகே குனிந்து என்ன ஓய் பாகிஸ்தான் பிரதமர் கிட்ட பேசின அதே டேப் தான் இங்கேயும் ஓடித்தாமே என்றார் கிசு கிசுப்பாக.! அதிர்ந்த ஒபாமா என்ன சொல்வது எனத்தெரியாது விழிக்க.. சரி போமய்யா..

இதை நான் யார்கிட்டயும் சொல்லலை.. ஆனா அந்த ஆதாரம் எங்கிட்ட இருக்கு அதை மறந்துடாதேள்... பீ கேர் ஃபுல் என்று வழக்கம் போல எச்சரித்தார்.! ஓபாமா வியர்த்த முகத்தை துடைத்துக் கொண்டு அங்கிருந்து மெல்ல நகர.. மோடியும் அடுத்து ராஜ்நாத்சிங், சுஷ்மாஸ்வராஜ், ஸ்மிருதிஇரானி,என ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்தவர் அத்வானியிடம் வந்ததும் கொஞ்சம் திணறினார்.!

ஆனால் அவரை ஒபாமா ஏற்கனவே அறிந்து இருப்பதால் ஓ.. தெரியும் இவர் தானே அத்வானி நியாயமாக பார்த்தால் இவர் தானே இந்தியாவின்.. என ஆரம்பிக்க சட்டென்று..குறுக்கிட்ட மோடி..ஆமாம் நியாயமா இவருக்கு தான் இந்தியாவின் உயரிய விருதான பாரதரத்னா தந்திருக்க வேண்டும்..!

ஆனால் சீனியாரிட்டி அடிப்படையில் வாஜ்பாய்க்கு இன்னும் தராததால் இவருக்கு பத்மவிபூஷண் தர உள்ளோம் என்றார். ஆமாமா இங்க சீனியாரிட்டி அடிப்படையில தானே எல்லாம் நடக்குது என்று.. நக்கலாக நினைத்துக்கொண்ட அத்வானி.
என்னைவிட மோடி தான் பிரதமராகும் முழுத்தகுதி கொண்டவர் என்ற வெறுப்பான பதிலை சிரிப்போடு பொறுப்பாக உதிர்த்தபடி ஒபாமாவின் கையை குலுக்கினார்.!

மோடியும் என்ன செய்வது என்று விழிக்க அந்நேரம் சோனியா மன்மோகன் ராகுல் சகிதம் உள்ளே நுழைந்தனர்.! மோடி ஒபாமா அத்வானி மீது கொண்ட கவனத்தை திருப்ப அதோ எங்கள் எதிர்கட்சியினர்..! ஆனால் அந்த தகுதி இல்லாதவர்கள் வருகிறார்கள் என்று கிண்டலாக கூற.. இருக்கலாம் ஆனால் அவர்களும் முன்னாள் ஆட்சியாளர்கள் தானே அவர்களை மதிப்பதே மரபு கொஞ்சம் இருங்கள் என்று ஓபாமா சொல்ல.. இனி நாளை காங்கிரசாரோடு சந்திக்கலாம்... (தொடர்வோம்)


Friday, 23 January 2015

முகநூல் தயாரிப்பாளர்..

சார் நம்ம படத்துல முதல் காட்சி சூரியன் உதிக்குது.!

யோவ் சூரியன் எல்லா நாளும் தான் உதிக்குது புதுசா ஏதாவது சொல்லு..

ஒரு கிராமத்து வயல்வெளிய காட்டுறோம்..

யோவ் கிராமம்ன்னாவே வயல்வெளி தான்.. வேற

ஒரு தாய் தன் குழந்தையோட நடந்து வர்றாங்க..

லூசா நீ குழந்தை இருந்தா தானே தாய்.! வேற..

இப்ப வில்லன் எண்ட்ரி அவன் தான்கெட்டவன்..

வில்லன்னாலே கெட்டவன் தானே புதுசா சொல்லு

சார் ஹீரோ தங்கச்சி கற்பழிக்கப் படுறா.. யோவ் 

அந்த தங்கச்சி இருக்குறதே அதுக்கு தானய்யா.!

டூயட் சீனை வெளிநாட்டுல எடுக்குறோம் ஆனா

கதை கிராமத்துல நடக்குது.! இதுல என்னய்யா..

புதுமை இருக்கு.! ஆல்ரெடி அப்படி தானேய்யா

இருக்கு.! சார் மியூசிக்ல தான் புதுமை 6 பாட்டு..

அத்தனயும் ஹாலிவுட் ரிபீட்டு.! சரி தானே...

ஸார் இவ்வளவு தெளிவா இருக்கிங்களே நீங்க

இதுவரை எத்தனை படம் தயாரிச்சு இருக்கிங்க?

படமா? நானா? அது பத்தி எல்லாம் எனக்கு எதும்

தெரியாதுங்க.! அப்ப இவ்ளோ விஷயம் எப்படி

கேக்குறிங்க..!?!!  தம்பி நான் முகநூலில் பதிவர்.!

நான் விமர்சனம் எழுதாத படமா.!!! வேணுமுன்னா 

லிங்க் தரவா..! தம்பி ஏன் மயங்கிட்டிங்க...!!!!!?

ஒபாமா வந்தாச்சு - 1

ஒபாமா வந்தாச்சு..!

(ஒபாமாவின் இந்திய விஜயம் ஒரு கற்பனை)

அரசு முறை அதிகாரப் பூர்வமான அனைத்து சந்திப்புகளும் அன்று நிறைவடையும் நாள்.. இதோ இந்த மீட்டிங்கிற்கு பிறகு ஒபாமா இந்தியாவை சுற்றிப் பார்க்க வேண்டும்.! பரபரப்பாக தயாராகிக் கொண்டிருந்தார் ஒபாமா.. வழக்கம் போல் மிச்செல் ஒபாமா கடந்த 2 மணிநேரமாக ஒப்பனை செய்து கொண்டிருக்கிறார்.!

உலகம் முழுவதும் பெண்கள் அப்படித்தானே.. துண்டை மறந்து விட்டு தேடும் கணவனின் குரல் போல ஒபாமாவின் குரல் ஒலிக்கிறது டியர் இன்று கூட்டத்தில் பேசுவதற்காக தயாரித்து தந்த காகிதங்கள் எங்கே.? ஓ.அதுவா உங்கள் ஃப்ரீப்கேசில் தான் இருக்கு பாருங்க.. டிபிக்கல் இந்திய மனைவி போல பதில்.!

அடடா இல்லையே இது கடந்த முறை நான் பாகிஸ்தான் அதிபரோடு பேசிய கூட்டத்தின் காகிதங்கள் தான் இங்கிருக்கிறது என்றார் பதட்டத்துடன்.. வேகமாக உள்ளே நுழைந்தார் ஒபாமாவின் பி.ஏ"மிஸ்டர் பிரசிடெண்ட் மன்னிக்கவும் சிறிய தவறு நிகழ்ந்துவிட்டது இந்தியாவில் பேச வேண்டிய காகிதங்கள் மாறிவிட்டது....

என்றார் குற்ற உணர்வுடன், புல்ஷிட் ஏன் இப்படி இந்திய காங்கிரஸ் போல சொதப்புகிறீர்கள் இன்னும் 1 மணிநேரத்தில் மீட்டிங்.! எப்படி நான் தயாராவது.? என்றார் கோபத்துடன்.. கூல் மிஸ்டர் பிரசிடெண்ட் எனது பென் டிரைவில் அந்த பைல்கள் இருக்கிறது இன்னும் 20 நிமிடத்தில் பிரிண்ட் அவுட் வந்துவிடும் என்றார்.!

20 நிமிடமா.! இம்பாசிபிள்  எனக்கு 10 நிமிடத்தில் வேண்டும் அதை படிக்க வேண்டாமா.? எனது உரையை தயாரிக்க வேண்டாமா.? என்ன செய்வீர்களோ தெரியாது 10 என்றால் மிகச்சரியாக 10 நிமிடங்களில் வேண்டும் என்றார் ஒபாமா.
10 நிமிடத்தில் முடியாதே பிரசிடண்ட் என்று தலையை சொறிந்தார் உதவியாளர்.!

ஏன் முடியாது.? என்று ஒபாமா கேட்க.."பிரசிடண்ட் இங்கு நெட்டெல்லாம் செம ஸ்லோ.. நேற்று ஒரு 3 மணிநேர இந்திப்படத்தை பார்க்க டவுன் லோடு செய்தேன் அதற்கே 6 மணிநேரம் ஆயிற்று.. இப்போது கூட இதை 2 மணி நேரமாக முயற்சித்து கொண்டிருக்கிறேன் மன்னிக்கவும் என்றார்.! ஆத்திரமடைந்தார் ஒபாமா.!

என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.. நம் அமெரிக்க மக்கள் என்ன நினைப்பார்கள்.? ஒரு அமெரிக்க அதிபர் திட்டமிடாது பேசுவதா.? இது வரலாற்று பிழை அல்லவா.? எப்படி இந்த அவப் பெயர் நீங்கும்.? என்று படபடத்தார்.. அப்போது "கூல் டார்லிங் நான் ஒரு ஐடியா சொல்லவா என்றார் மிச்சேல்.!

என்ன ஐடியா நம்பமுடியாதது போல திரும்பினார் ஒபாமா.? நீங்கள் தற்போது வைத்திருக்கும் பைல் பாகிஸ்தான் பிரதமரிடம் பேசியது என்று தானே சொன்னீர்கள் ஆமாம் என்றார் ஒபாமா.. அப்ப வெரி சிம்பிள் இந்த பைலில் எங்கெல்லாம் பாகிஸ்தான் என்று வருகிறதோ அங்கெல்லாம் இந்தியான்னு போட்டுக்கோங்க.!

எங்கெல்லாம் இந்தியான்னு வருதோ அங்கெல்லாம் பாகிஸ்தான்னு போட்டுக்கோங்க மேட்டர் ஓவர் என்றார் குணா பட கமல் போல.. இதைக்கேட்ட  ஓபாமாவும் அபிராமி அபிராமி ஸ்டைலில் மிச்சேலு மிச்சேலு என்று கூவி கட்டிக் கொண்டார். மேடத்தின் ராஜதந்திரத்தை பார்த்தால் அடுத்த அதிபராகக் கூட வரலாமே என்று உதவியாளர் தம் பங்குக்கு ஜிங் சாக் வார்த்தைகள் உதிர்த்தார்.

சரி நேரமாகி விட்டது எனக் கூறி மீட்டிங்கிற்கு ஓபாமா கிளம்ப.. இனி அங்கு சந்திப்போம்...

( தொடர்வோம்)