Tuesday, 16 December 2025

2.பாவை மொழி

2. வையத்து வாழ்வீர்காள்...


பொதுவாக உலக அழகிப் பட்டங்கள் இந்தியாவிற்கு கிட்டும் போதெல்லாம் இதன் பின்னணியில் இருக்கும் உலகளாவிய அழகு சாதனப் பொருட்களின் வணிகம் குறித்து விவாதிக்கப்படும்சித்தூர் ராணி பத்மினியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்ட அலாவுதீன் கில்ஜியே அலாவுதீன் கிளர்ச்சியாகி இந்தியா மீது படையெடுத்து வந்தான் என்னும் செய்தி தீவிர வரலாறு படிக்காதவர்கள் கூட தீபிகா படுகோனேவுக்காகவாவது படித்து அறிந்து இருப்பார்கள்


இந்தியா அழகிகளின் தேசம்எந்த அழகு சாதனமும் இன்றியே இங்கு அழகிகள் அதிகம்நூர்ஜஹானின் அழகில் ஒரு சதவீதம் கொண்ட தாஜ்மஹாலே அதற்கு சாட்சிஇந்தியாவை ஆண்ட பலப்பல பாரசீக மன்னர்களின்  இந்திய மனைவிகளும்அந்தப்புர ராணிகளும் கூட இப்பட்டியலில் உண்டுதம்மை அலங்கரித்துக் கொள்வதில் உலகப் பெண்களுக்கு எல்லாம் முன்னோடி நம் இந்தியப் பெண்கள்கஸ்தூரி மஞ்சளும்சந்தனமும்பயத்தம் மாவும் தடவிக் குளித்து.. 


செம்பருத்தி கலந்த சிகைக்காயைத் தலைக்கு தடவி குளித்து பின்பு அகிலும்சாம்பிராணியும் தூபமிட்டு புகை எழும்ப சிகையை காயவைத்துவாசனைத் திரவியங்களும்எண்ணெயும் தடவி தலை சீவிகண்ணுக்கு மையிட்டுநெற்றியில் மணக்கும் சந்தன குங்கும திலகமிட்டுநறுமண மலர் சூடிபெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டா இல்லையா என ஒரு நீயா நானா நடத்தி கோட்டு கோபிக்கு பதில் கோபக்கார நக்கீரரை நடுவராக்கிப் பார்த்தவர்கள் நாம்.


இப்படி அலங்காரம் செய்வதில் நாட்டமுள்ள பெண்கள் அதை வேண்டாம் எனச் சொன்னால் டிசம்பரில் அடிக்கிற புயல் தினமும் அல்லவா அடிக்கும்அடித்துவிட்டு போகட்டும் எங்களை அந்த மாயக் கண்ணன் எனும் புயல் தாக்கட்டும் அதற்காக எதையும் தியாகம் செய்வோம் என்கிறார் ஆண்டாள்கண்களில் மையிட்டுக் கொள்வதில்லைதலையில் பூச்சூடிக் கொள்வதில்லை என எந்த இந்தியப் பெண்ணாவது சொல்வாளாஆனால் ஆண்டாள் சொல்கிறார்.


பாவை நோன்பு என்னும் விரதத்தை கடை பிடிக்கும் பெண்களாகிய நாங்கள் நெய் உண்ணோம்பால் உண்ணோம் என உண்ணவிரதம் இருப்பது பெரிதல்ல.. தீய சொற்கள் பேசாதிருப்பது பெரிதல்ல.. தான தருமங்கள் செய்வது பெரிதல்ல.. செய்யக் கூடாததை செய்யாமல் இருப்பதும் பெரிதல்ல.. பெண்களின் இயல்பான அலங்கரிக்கும் குணத்தையும் அந்த மாலவனுக்கு அர்ப்பணிப்பது தான் பெரிது.. அதுவே இந்நோன்பின் நோக்கம் என்கிறார் நம்ாண்டாள், கண்ணா நாங்கள் இதை ஏதோ கடமைக்குச் செய்யவில்லை..


 மனமுவந்து உனக்காகச் செய்கிறோம்எம் வாழ்வில் இந்தப் பிறவி எடுத்து வந்த சூழலில் உலகத் துன்பங்களில் இருந்து எம்மை காப்பாய் பரமா என்று பாடுகிறார்.  சரிபரமன் என்பது பரமசிவன் அல்லவா இதில் கண்ணன் எங்கு வருகிறார்இங்கே பரந்தாமனயே பரமன் என்கிறார் நம் ஆண்டாள்கண்ணன் மேல் ஆண்டாள் கொண்ட அளவிலா நேசம் மட்டுமல்லஎந்த ஒப்பனையும் செய்யாமலேயே நம் இந்தியப் பெண்கள் எல்லாரும் பேரழகிகள் என்பதையும் இப்பாசுரத்தில் நமக்குப் புரிய வைக்கிறார் ஆண்டாள்.


மார்கழி 2ஆம் நாள் பாடல் :


வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்

பையத் துயின்ற பரம னடிபாடிநெய்யுண்ணோம் 

பாலுண்ணோம் நாட்காலே நீராடிமையிட்டு 

எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்செய்யா 

தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.


Monday, 15 December 2025

1. பாவை மொழி

1. மார்கழித் திங்கள்…




நேற்றைய இரவு வீசிய குளிரை நீங்கள் அனுபவித்து இருந்தால் தெரியும். இன்று மார்கழி மாதம் துவக்கம் என்பதற்கு நேற்றே குளிர் கட்டியம் கூறிவிட்டது. ஆம்! குளிரான மார்கழியின் அதிகாலைப் பொழுது.


நாமெல்லாம் தூக்கத்திலிருந்து விழிப்பு வந்தாலும் கூட படுக்கையிலிருந்து எழ மனமில்லாது சுகமாகப் போர்த்திக் கொண்டு படுத்துக் கிடக்கிறோம். சிலருக்கு இந்த அதிகாலையின் குளிர் நீரில் குளிக்கப் பிடிக்காது. 


ஆனால் அந்த நடுக்கத்தை பொறுத்துக் கொண்டு குளித்துப் பாருங்களேன், பரவசமாக இருக்கும்! குளிர் நீரில் குளித்துப் பழகினால் அந்த நாள் முழுவதுமே சுறுசுறுப்பாக இருக்கும். மார்கழி அதிகாலையில் குளிர் நீரில் குளிப்பது பரம சுகம்! 


நூறு ஏசிகளின் காற்று நம் உடல் தழுவுவது போல நம் நரம்பு மண்டலத்தை சிலீரிட வைக்கும் அந்தப் புத்துணர்வை குளித்துப் பார்த்துதான் அனுபவிக்க முடியும். இதைத் தான் முன்னோர்கள் குளிர் விட்டுப் போச்சு என்று சொல்வார்கள்! 


நம்மில் பலர் வெந்நீரில் குளித்து அந்த அனுபவத்தையே பொசுக்குகிறார்கள். மார்கழி மாதத்தின் முதல் தேதி, மதி நிறைந்த நன்னாளின் அதிகாலையில் சில்லென்ற குளத்து நீரில் வந்து நீராட பெண்களை அழைக்கிறார் ஆண்டாள். 


குளிர்மிகு அதிகாலை, நிலவு தன் பணி முடிந்து ஓய்வுக்கு போகின்ற வேளை, இன்றைய கவிஞர்கள் பாடும் குளிர் நிலவே, ஈர நிலாவே என்பதெல்லாம், மார்கழி அதிகாலை நிலவு தான். குளிரை விலக்கி கதிரவன் பணிக்கு வரும்முன்.. 


தண்ணெழில் பொழிந்து விடை பெறும் நேரம், எப்பேர்ப்பட்ட சுறுசுறுப்பானவர்களும் சுகமாய் மயங்கிக் கிடக்கும் இவ்வேளையில் ஏன் இன்னும் சுகமான உறக்கம்? ஏனிந்த பெரும் தயக்கம்?  எழுந்து வாருங்கள், செல்வச் சிறுமிகளே! 


நம் நாராயணன் நமக்கெல்லாம் அருள்தர காத்திருக்கும் போது இந்த அரைத் துக்கம் தகுமா? நம் கார்மேக வண்ணன் சூரியன் போல வெப்பமும்,  நிலா போல் குளுமையும் ஒன்றாக உடையவன். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நீராடி..


அந்த மாயக்காரனை நினைப்போம், கடுங்குளிரை மறப்போம்! மார்கழி மாதத்து நிறைமதி நன்னாளில் நீராடச் செல்வோம். ஆயர்குல செல்வப் பெண்களே! கூரான வேல் ஏந்தி நமக்கு வரும் கொடும் துன்பத்தை அழிக்கும் நந்தகோபனும்..


அழகிய விழிகளுடைய யசோதையும் வளர்த்த இளஞ்சிங்கம் கண்ணன். அவனே நமக்கு பறை தந்து அருள்வான். அதற்கு முன் இந்த தூக்கம் பைசா பெறாத ஒன்றாகும். தூக்கத்தில் இருந்து எழுந்திருங்கள். இவ்வுலகமே அவனை புகழும்படி.. 


பாடிடுவோம் வாருங்கள், என்றழைக்கிறார் ஆண்டாள். அவர் அழைத்தால் அந்தக் கண்ணனே ஓடி வரும்போது, ஆயர்குலப் பெண்கள் வர மாட்டார்களா என்ன! ஆண்டாள் வசித்த திருவில்லிப்புத்தூர் தென் தமிழகத்தில் ஓர் சிறிய ஊர்.


ஆனால் அந்த ஊரையே ஆயர்பாடியாகவும், அங்குள்ள சிறுமிகளை ஆயர் குலச் சிறுமிகளாகவும் எண்ணி பாவை நோன்பை துவக்கி வைத்தவர் ஆண்டாள். ஆம்! தமிழகத்தில் ஆயர் குலப் பெண்களின் முதல் மேயர் நம் ஆண்டாள் தான்! 


இன்று மார்கழி முதல் நாள்! பயணிப்போம் அடுத்த 30 நாட்களும்.!


மார்கழி 1ஆம் நாள் பாடல்..


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்

கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாரா யணனே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.



Tuesday, 9 December 2025

​#GoSlow_boys



நம்ம ஊரில் சிக்னலில் வியாபாரம் செய்பவர்களை பார்த்து இருப்போம். கார் கண்ணாடியில் வெயில் தடுப்புக்கு ஒட்டும் விண்டோ ஷேடு, கார் துடைக்க ஸ்பிரேயர் இப்படி காரை குறிவைத்து நடக்கும் வணிகம் தனி. சென்னையில் சிக்னலில் புத்தகம் விற்கும் கலையை கெவின்கேர் அதிபர் ரங்கநாதன் உலகின் ஆகச் சிறந்த வணிகம் என்பார்.


இன்று சிக்னலில் தேர்ட் குவாலிட்டியில் இயர் பட்ஸ், ஓவிய புத்தகம், அடாசு ஸ்டிக்கர்னு கொண்டு வந்து விற்கிறேன் எனும் போர்வையில் வாங்கு இல்லாட்டி காசு கொடுன்னு நம்மிடம் பிச்சை கேட்டும் அட்ரா சிட்டியான ஆட்களை விட்டுவிடுவோம். இந்தப் பதிவில் நீங்கள் படிக்கப் போவது நைஜீரியா சிக்னல் வணிகர்களைப் பற்றிய செய்திகளையே.


நைஜீரியாவில் இவர்களுக்கு பெயர் Go Slow Boys பொதுவா நம்ம ஊரு சிக்னலில் கிடைக்கும் சில பொருட்களைப் பற்றி மேலே சொல்லியிருந்தேன். ஆனால் இங்கு பெற்ற தாய் தந்தையைத் தவிர எல்லாம் வாங்கலாம். நான் பார்த்தபோது ஒருவர் ஃபர்னீச்சர்களே விற்றுக் கொண்டிருந்தார். நைஜீரிய டிராபிக் ஜாம் ஒன்றும் அத்தனை இனிப்பாக இருக்காது. 


சில நேரங்களில் 5 மணிநேரம் கூட சர்வ சாதாரணமாக அந்த வாகனக் குவியலில் சிக்கிக் கொள்ளலாம். அப்படி சிக்கிக் கொண்டவர்களுக்கு இந்த வியாபாரிகள் தான் உணவளிக்கும் கடவுள். சாண்ட்விச், கூல்டிரிங்ஸ், ஸ்நாக்ஸ், மட்டுமின்றி கூலிங்கிளாஸ், வாட்ச், போட்டோ ப்ரேம்கள், கார் சார்ஜர்கள், மொபைல் சார்ஜர்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள்..


துணி மணிகள், செருப்புகள், அப்பப்பா.. அப்போது கூலான பீர் பாட்டில்கள், மது பானங்கள் விற்க வந்தார் ஒருவர்! நம்ம டாஸ் மாக் அதிகாரிகள் இதைப் பார்த்தால் இங்கும் இச்சேவை வரலாம்! Go Slow பெயர்க் காரணம் டிராபிக் ஜாம் நகர நகர அதற்கு ஈடாக கிளம்பும் காரின் வேகத்தை கணித்து கூடவே மெதுவாகவும், வேகமாகவும் நடந்து வந்து விற்கவேண்டும். 


ஆனால் இங்கே பணம் தராமல் யாரும் ஏமாற்றுவதில்லை. டிராஃபிக் கிளியராகி விட்டால் வேகம் எடுக்கும் கார்கள் தாங்கள் வாங்கிய பொருளின் தொகையை ஜன்னல் வழியே சாலையில் எறிந்துவிட்டுப் போகின்றனர். எனக்கு முன் சென்ற காரில் ஒருவர் தான் வாங்கிய பொருளுக்கான பணத்தை சாலையில் வீசினார். சாலையில் விழுந்த ரூபாய் நோட்டுகள் இலக்கின்றி பறக்க ஆரம்பித்தன.


அதையும் அவர்கள் வணிகத்தை விட்டுவிடாமல் விரட்டி ஓடிப் போய் சேகரித்ததைப் பார்த்தேன்! இவர்கள் இப்படித்தான் பல நேரங்கள் ஓட வேண்டும். ஓடி ஓடி உழைக்கணும் பாடல் இவர்களுக்கு அப்படியே பொருந்தும். டிராஃபிக்கில் பலரின் பசியைப் போக்குவது மட்டுமின்றி அவர்களது பசிக்காகவும் நிற்காமல் ஓடி ஓடி உழைக்கிறார்கள். 


துப்பாக்கி முனையில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை செய்பவர்களும் இங்குண்டு. ஆனால் இது போல ஓடி ஓடி உழைக்கும் நைஜீரியர்கள் மீது பெரு மதிப்பு வந்தது. எனக்கு அவசியத் தேவை இல்லை என்றாலும் எங்கள் அருகே வந்த ஒரு வியாபாரியிடம் ஒரு கார் மொபைல் சார்ஜரும், 2 பெப்சி பெட் பாட்டில்களும் வாங்கிக் கொண்டோம்!


அந்த வியாபாரி சிரித்தார்.. இறைவனைக் கண்டோம் 🙏

Thursday, 13 November 2025

கமல் ஆலோசனை

கமல், ரஜினி, சுந்தர்.சி இவர்களோடு அவரது ஆஸ்தான குழுவான சந்தானபாரதி, கு.ஞானசம்பந்தன், நாசர், ஶ்ரீப்ரியா ஆகியோருடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்


கமல் : (சந்தான பாரதியைப் பார்த்து) வெல்.. நீங்க ஆரம்பிங்க பாரதி..


பாரதி : எனக்கு நல்லா நினைவிருக்கு 33 வருஷத்துக்கு முன்னால டெல்லியில் ஒரு ஓட்டலில் மகாநதி படக் கதையை கமல் எங்கிட்ட சொன்னார் கேட்டவுடன் நான் கதறி அழுதுட்டேன். யாரு இதுக்கு டைரக்‌ஷன் கமல்னு கேட்டேன். சிரிக்காம நீங்க தான் சொன்னாரு அப்புறம் அன்னிக்கு ராத்திரி பூரா நான் கதறிக் கதறி அழுதேன். 


கமல் : நீங்க மட்டுமா அன்னிக்கு, நமக்கு உணவு கொண்டு வந்த ரூம் பாய், ரூமை க்ளீன் பண்ண வந்த ஸ்வீப்பர், ஓட்டல் மேனேஜர் எல்லாமே கதறி அழுதாங்க. இங்கே அழுகை என்பது ஒரு உணர்வு அதை சந்தானபாரதியும் உணரலாம், ஓட்டல் சர்வரும் உணரலாம். ஆனா அங்கே எல்லாருமே அழுதாங்க. அந்த உணர்வு முக்கியம். எல்லார் அழுகைக்கு பின்னாலும் ஒரு காரணம் இருந்தது. அந்த ஒரே காரணம் என் கதை! இதை நான் நேர்மையாக ஒப்புக் கொண்டு தான் ஆகணும். இதை நான் நன்கு உணர்ந்த போது எனக்கும் அழுகை வந்தது. ஆனா நான் அழுது அதைப் பார்த்து மத்தவங்க அழுதா அவங்க உடம்பு தாங்காதுன்னு அன்னைக்கு நான் அழலை. இந்தப் படம் மட்டும் வந்தா தியேட்டரில் மக்கள் எல்லாமே அழுவாங்க என்பதற்கான விதை அங்கே தான் விழுந்தது. பின்னர் அது கொல்கத்தா சோனா கஞ்சில் “எழுந்தது” மனிதன் ரத்தத்தில் மட்டுமல்ல அழுகையிலும் ஜாதி மதம் இல்லை எங்கே கண்ணீரை வைத்து ஒருத்தரோட மதத்தை சாதியை யாராவது கண்டுபிடிக்க முடியுமா? எல்லா மத மக்களும் கண்ணீர் சிந்திக் கொண்டு தான் இருக்கிறார்கள் அந்தக் கண்ணீர் ஆறாகப் பெருகி பல கிளைகளிலும் ஓடி ஓரிடத்தில் பெரும் நதியாக கலந்தால் அதில் கலந்துள்ள கண்ணீர் எந்த ஜாதி அல்லது எந்த மத மனிதரின் கண்ணீர் என்று நான் நம்பாத கடவுளால் கூட கணிக்க முடியாது இது தானே மெய்யான நிதர்சனம்.


கு.ஞா : ஆஹா அதுதான் படத்துக்கு மகாநதின்னு பேரு வச்சிங்களா கமல்?


கமல் : இது இன்னும் அற்புதம் பேராசிரியரே! இது நானே சிந்திக்காத கோணம்.. இப்படி ஒரு கோணம் 33 ஆண்டுகளுக்கு பின்பும் தோன்றுகிறது.. இதே போலத் தான் நான் பி.லெனின் இயக்கத்தில் எத்தனை கோணம் எத்தனை பார்வை என்கிற படத்தில் நடித்த போது..


ரஜினி : சாரி மிஸ்டர் கமல்.. நீங்க 33 வருஷம் கழிச்சு மஹாநதியைத் தான் எடுக்கப் போறிங்கன்னா என்ன எதுக்கு கூப்டிங்க.. நீங்களே நடிக்கலாமே.. ஐ திங்க் வேஸ்ட் ஆஃப் மை டைம் ஹியர்.


ஶ்ரீப்ரியா : ரஜினி டென்ஷன் ஆயிட்டார் கமல் நீங்க கொஞ்ச நேரம்  பேசாம இருங்க. நடிகர் சங்கத்தில் இருந்து நாசர் வந்திருக்கார் அவர் கருத்தை கேட்போம்! நாசர் சார் நீங்க என்ன சொல்றிங்க? 


நாசர் : எனக்கொரு நல்ல ஐடியா தோணுது பேசாம மகளிர் மட்டும் படத்தை ரீமேக் பண்ணுங்க கமல்.. நான் பண்ண கேரக்டரை வேணா ரஜினி சார் பண்ணட்டும். கிட்டத்தட்ட அது அவர் ஏற்கனவே பண்ண நெற்றிக்கண் பட கேரக்டர் தானே! வேணுமுன்னா இந்த படத்தில் நாகேஷ் சார் பண்ண கேரக்டரில் நான் நடிக்கிறேன். படத்துக்கு நெற்றிக்கண் 2.0 னு பேர் வைப்போம். 


சுந்தர் சி : சார் ஒண்ணு சொன்னா எல்லாரும் தப்பா நினைக்காதிங்க இந்தப் படத்தை டைரக்ட் பண்ண என்னை மட்டும் தான் கூப்பிட்டிங்கன்னு நினைச்சேன். இத்தனை பேரை ஏன் கூப்பிட்டிங்க? ஒரேயொரு உணவை சமைக்க இத்தனை சமையல்காரங்களா? 


ரஜினி : வெல் செட் சுந்தர்! மெனி குக்ஸ் ஸ்பாயில் த ஃபுட்னு சொல்வாங்க டைரக்டர் உங்களை கூப்டுட்டு நாம பேசக் கூடாது. நீங்க என்ன கதை வச்சிருக்கிங்க? அதைச் சொல்லுங்களேன்..


சுந்தர் சி : ரஜினி சார் நீங்க ஒரு பணக்கார வீட்டு பிள்ளை பொறுப்பில்லாம சுத்துறிங்க, உங்களைத் திருத்த உங்க அப்பா கிராமத்துல இருக்குற அவர் நண்பர் ரிடையர் மிலிடரி ஆபிசர் ராஜசேகர் கிட்ட..


ரஜினி : மிஷ்டர் சுந்தர்! இவங்களே பரவாயில்லை போல..  தம்பிக்கு எந்த ஊரு கதையை இப்போ ஏன் சொல்லிட்டு இருக்கிங்க.. 


பாரதி : ரஜினி சார், அவர் உள்ளத்தை அள்ளித்தா காலத்தில் இருந்தே இதே பேட்டர்னில் தான் கதை சொல்லிகிட்டு இருக்காரு. க்ளைமாக்ஸில் ஹீரோவும் காமெடியனும் உருட்டுக் கட்டையோட எல்லார் பின்னாலும் போயி ஓங்கி தலையில் அடிக்கிற காட்சி கண்டிப்பா இருக்குமே! சரி தானே சுந்தர் தம்பி! 


சுந்தர் : இங்க பாருங்க் அமித்.. சாரி பாரதி சார் அது தமிழ்நாடே ஏத்துகிட்ட டிரெண்ட்! ஏன் நீங்களும் கமலும் மைக்கேல் மதன காமராஜனில் பேர் வச்சாலும் பாட்டு முழுக்க அதே உருட்டுக்கட்டையோட தானே அலைஞ்சிங்க!


கமல் : ப்ளீஸ் ஸ்டாப்.. என் தோழி ஶ்ரீப்ரியாவுக்காக நான் இவ்வளவு நேரம் பேசாம இருந்துட்டேன். ஏன்னா எனக்குள் ஒருவன் பட ஷுட்டிங் ப்ரேக்ல ஒரு விஷயம் நடந்தது.. உனக்கு ஞாபகம் இருக்கா ஶ்ரீ.. அந்த ஒல்லி அஸிஸ்டெண்ட் டைரக்டர் உங்கிட்ட வந்து..


ரஜினி : கமல் என் படத்துக்கு கதையை கேட்க வந்தேனா? இல்ல உங்க பழைய கதையை கேட்க வந்தேனா? வாட் இஸ் திஸ் நான் சென்ஸ்..


கு.ஞா : ரஜினி சார் உங்களுக்கு புரியற மாதிரி கமலால் சொல்ல முடியாது நீங்க ஆன்மிகவாதி உங்களுக்கு திருப் புகழ் தெரியுமில்லியா அதில் வருமே..


பத்துத்தலை தத்தக் கணைதொடு

ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு

பட்டப்பகல் வட்டத் திகிரியில் ... இரவாகப்


இதுக்கு என்ன அர்த்தம்னா..


ரஜினி :  (முருகேஷா நான் கேட்டேனா தொனியில்) மிஷ்டர் ஞானசம்பந்தம் நான் கேட்டேனா.. இல்ல இப்போ இதை நான் உங்க கிட்டே கேட்டேனா? அட சுந்தர் சியை கதை சொல்ல விடுங்கப்பா.


சுந்தர் : சார் இவங்க எல்லாம் எனக்கு டிஸ்டர்பா இருப்பதா நினைச்சேன் ஆனா இவங்க எல்லாம் பேசினதை வச்சி ஒரு சூப்பர் கதை ரெடி பண்ணிட்டேன்


கமல் : வெல் இதைத் தான் நானும் ரஜினியும் சிங்கப்பூரில் நினைத்தாலே இனிக்கும் பட காலத்தில் செய்தோம். அப்போது பாலச்சந்தர் இருந்தார் ஓடி வந்து என்னைக் கட்டிக் கொண்டார்.. இல்லியா ரஜினி சொல்லுங்களேன்..


ரஜினி (மைண்ட் வாய்ஸில்) / இப்போ மட்டும் அந்த பாலச்சந்தர் உயிரோடு இருந்திருந்தா மவனே நீ காலி/ ஓ யெஸ் யெஸ் தட் வாஸ் ஃபெண்டாஸ்டிக்.. இப்போ நாம இங்க கதை கேட்போமா! சுந்தர் நீங்க சொல்லுங்க.


சுந்தர் : சார் ஒரு ஆன்மிக்க நாட்டமுள்ள பெரிய தொழிலதிபர் தன் ரெண்டு பெண் குழந்தைகளோடு நிம்மதியா கோவிலுக்கு போய் திருப்புகழ் பாடி வாய் மணக்க வாழ்ந்துட்டு இருக்கார். அப்போ தனுஷ்னு ஒரு வில்லன் அவர் வாழ்க்கையில் குறுக்கிடுறான்..


ரஜினி : வெரி interesting தனுஷ்னா சொன்னிங்க! அந்த தொழிலதிபர் மனைவி?


சுந்தர் : கதைப்படி அவங்க இறந்துடுறாங்க சார்..


ரஜினி : (பெருமூச்சு விட்டு முணு முணுக்கிறார்) வெரி வெரி லக்கி மேன்.. மேல கதை சொல்லுங்க


சுந்தர் : அந்த தொழிலதிபரை பைனான்ஸ் கம்பெனி ஆரம்பிக்க வச்சு அதை திவால் ஆக்குறார்.. மக்கள் அவரை பிடித்து தர்ம அடி அடிக்க அவர் கைதாகி..


பாரதி : என்ன சுந்தர் மகாநதி கதை தானே இது! அப்புறம் அவர் பொண்ணை கடத்தி கொல்கத்தா விபச்சார விடுதிக்கு வித்துடுறான் அது தானே..


சுந்தர் : அண்ணே என்னை கதை சொல்லவிடுங்க.. அதெல்லாம் இல்லை அவர் ஜெயிலுக்கு போன அவமானம் தாங்காம தொழிலதிபரின் ரெண்டு பெண்களும் அந்த வீட்டில் தூக்கு போட்டு செத்துடுறாங்க அவங்க ஆவி அந்த வீட்டிக்குள் குடியேறுது.


ரஜினி : வாவ்.. வாவ்.. எனக்கு அப்டியே சந்திரமுகி நினைவுக்கு வருது.. மேலே சொல்லுங்க..


சுந்தர் : அந்த வீட்டில் யாருமே வசிக்க முடியலை. இந்த நேரம் ஹீரோ ஜெயிலில் இருந்து விடுதலையாகி அந்த வீட்டுக்கு வர்றார். 2 பொண்ணுங்க ஆவியும் அப்பாவை கண்டு மகிழ்ச்சியாகுறாங்க .. அவங்க ரெண்டு பேரும் தற்கொலை செய்துகிட்டதை அப்பாகிட்ட சொல்ல..


அவர் அழுகிறார் அந்த தனுஷை பழி வாங்க தேடுறார். பல பெண்களோடு உல்லாசமா வெளிநாட்டில் வாழ்ந்த தனுஷ் கடைசியா ஒரு நாள் இந்தியா வந்து அந்த வீட்டுக்கே குடி வர்றான்.. அப்பாவும் ஆவிகளும் குஷியாகுறாங்க.. அவனை எப்படி எல்லாம் பழி வாங்குறாங்க என்பது தான் சார் க்ளைமாக்ஸ்..படத்துக்கு பேரு “அரண்முகி”


ரஜினி : வெல் வெல் எனக்கு இந்தக் கதை ஒகே! வில்லன் காரெக்டர் பேருக்காகவே இந்தப் படம் பண்றேன். கமல்ஜி பேமெண்ட் கூட ஏதும் டிமாண்ட் பண்ணலை டீகே.


பாரதி : என்ன டீகே? இங்க வந்து எல்லாருடமும் கேட்ட மகாநதி, மகளிர் மட்டும், சந்திரமுகி, திருப்புகழ், இவரோட அரண்மனை எல்லாம் ஒரு டப்பாவுக்குள் போட்டு குலுக்கி ஒரு கதை சொல்லியிருக்கார். இதுக்கு நாசர் சார் சொன்ன மகளிர் மட்டும் படத்தையே எடுக்கலாம்.


கமல் : வெல்! பாரதி நீங்க சொல்றது தான் கரெக்ட் இன்னிக்கு நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை சொல்றாங்க அந்த நிலை மாறணும்னு ஒரு கருத்து வச்சி அதையே படமாக எடுப்பது தான் சிறந்த வழி.


ரஜினி : (மிகுந்த கடுப்புடன்) அரே கமல்ஜி மகளிர் மட்டும் படத்தில் நடிக்க நான் எதுக்கு நீங்களே நடிக்கலாமே? 


கமல் : யெஸ்! அதே தான்.. நான் சொல்ல நினைத்ததை நீங்க சொல்லிட்டிங்க. கலைஞர் அவர்களிடம் அவரை கதாநாயகனாக வைத்து ஒரு கதை சொன்னேன்.. கேட்டுக் கொண்டார். அது என் மீது அவர் வைத்திருந்த அபிமானம்.. அண்ணன் எம்ஜிஆருக்கு ஒரு கதை சொல்லியிருக்கிறேன்.. என்.டி.ஆருக்கு சொல்லி இருக்கிறேன் ஏன் சிவாஜிக்கு கூட சொல்லியிருக்கிறேன் ஆனால் யாரும் அதில் நீயே நடி என்று சொன்னதில்லை. ஆனால் என் நண்பர் ரஜினி சொல்லிவிட்டார். அதை மறுத்தால் அது அவருக்கு மரியாதையாக இருக்காது என்பதால் நானே நடிப்பதாக முடிவெடுத்து விட்டேன். 


நாசர் : ஹைய்யா ஜாலி அப்போ அந்த நாகேஷ் கேரக்டர் எனக்கு தான்.


கு.ஞா : ஏன் கமல் நான் அந்த கேரக்டரில் நடிக்கிறேனே.. 


பாரதி : ஐ திங் எனக்கு அது ஈஸியா இருக்கும் நாகேஷ் கேரக்டரை எனக்கு கொடுங்களேன்..


ஶ்ரீப்ரியா : படத்துக்கு மகளிர் மட்டும்னு பேர் வச்சுட்டு அந்த கேரக்டரை ஏன் நடிகர்களுக்கு தரணும் நான் நடிக்கிறேன் கமல் அதான் சரியா இருக்கும்.


கமல் : இல்ல இப்பவும் எனக்கு நாகேஷ் சாரை நினைச்சு பொறாமையா இருக்கு. அவர் மறைந்த பிறகும் என்னிக்கோ அவர் இறந்த மாதிரி நடிச்ச கேரக்டருக்கு இவ்வளவு போட்டி இருக்குன்னா அதுக்கு நியாயம் செய்ய எங்கிட்ட ஒரு ஐடியா இருக்கு!


அனைவரும் : என்ன கமல் அது????


கமல் : இந்த படத்தில் நான் ஹீரோவா பண்றேன்.. நாகேஷ் கேரக்டரை வேணா நம்ம ரஜினி பண்ணட்ட்டுமே!! (டமார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) 


[ கமல் திடுக்கிட்டு பார்க்க அவரைத் தவிர அனைவரும் மூர்ச்சையாகி விழுந்து கிடக்கின்றனர்] 







Sunday, 2 November 2025

#வெங்கலிமாமா_கதைகள்

சுந்தராபுரி என்னும் நாட்டை சுந்தரவர்மன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். கல்வி கேள்விகளில் சிறந்தவனான அம்மன்னன் சிறந்த புலமையும் பெற்றவன் ஆவான். சுந்தரவர்மன் அறிவில் மட்டுமல்ல அழகிலும் மன்மதன்.

அவனை திருமணம் செய்து கொள்ள பல நாட்டு இளவரசிகள் விரும்பி போட்டி போட்டனர். சுந்தரவர்மனுக்கு ஒரே ஒரு நிபந்தனை தான். அவனுக்கு மனைவியாக வரப்போகிறவள் ராஜகுமாரியாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.

அவளும் கல்வியில் சிறந்தவளாக, ஏன் அவனை விட மிகுந்த புத்திசாலியாக இருக்கவேண்டும் என்று விரும்பினான். பல தேசங்களில் தேடியும் அவன் எதிர்பார்த்த அளவு அறிவிற் சிறந்த அரசகுமாரிகள் ஒருவரும் கிடைக்கவேயில்லை.

பல நாடுளில் இந்தத் தேடல் நடந்தது. சுந்தராபுரிக்கு அருகில் இந்திராபுரி என்னும் ஒரு நாடு இருந்தது. அங்கே வீரபாகு என்னும் தச்சர் வசித்து வந்தார். வீரபாகுவின் வீடு ஊரின் நடுவே இருந்த குருகுலம் ஒன்றின் பக்கத்தில் இருந்தது.

வீரபாகுவிற்கு ஒரே மகள், அவள் பெயர் இந்திரா, மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதால் அவளால் ஆரம்பக் கல்விக்கு மேல் படிக்க இயலவில்லை. ஆனால் அவளுக்கு கல்வியின் மீது தீராக் காதல் இருந்தது. அதிகம் படிக்க ஆசைப்பட்டாள்

அவளது வீடு, குருகுலம் பக்கம் அமைந்தது அவளுக்கு மிகவும் வசதியாக இருந்தது! வீட்டில் தந்தை வீரபாகு செய்யும் தச்சு வேலைக்கு உதவிக் கொண்டே பக்கத்தில் குரு குலத்தில் நடத்தும் பாடங்களை தன் காதால் கேட்டே கற்று வந்தாள்.

அந்த குருகுலத்தில் பெரிய செல்வந்தர்கள், பிரபுக்கள், அமைச்சர்களின் பிள்ளைகள் படித்து வந்தனர். அடிக்கடி அவர்களுக்கு அங்கு தேர்வு நடக்கும். பரமானந்தர் என்பவர் தான் அந்த குருகுலத்தின் தலைமை ஆசிரியர் ஆவார்.

ஒரு முறை அந்த குருகுலத்தில் படிக்கும் மாணவர்களை அயல் தேசத்தில் இருந்து வந்த அறிஞர் ஒருவர் கடினமான தேர்வுகளை வைத்து சோதித்தார் அதற்கு பதில் கூற முடியாமல் அம்மாணவர்கள் திணறிப் போய் நின்றனர்.

அதை பக்கத்து வீட்டிலிருந்து கவனித்து வந்த இந்திரா அந்த அறிஞரிடம் போய் ஐயா இந்தக் கேள்விகளுக்கு நான் பதில் கூறட்டுமா என்று பணிவுடன் கேட்டாள். இந்திராவை பார்த்த பரமானந்தர் அம்மா தச்சன் மகளான உன்னால் முடியுமா?

இந்த குருகுலத்தில் பல ஆண்டுகளாக படிக்கும் பெரும் செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகளே இங்கு பதில் தெரியாமல் திணறும் போது நீ எப்படி விடையளிப்பாய் என்றார் அவநம்பிக்கையாய். வெளிநாட்டு அறிஞர் இதைக் கேட்டதும்..

பரமானந்தரே யாரையும் குறைவாக எண்ணாதீர்கள் அந்தப் பெண்ணுக்கு ஒரு வாய்ப்பளிப்போமே என்றார். அவரும் தலை அசைக்க அத்தனை கேள்விகளுக்கும் தயங்காது அழகாக பதிலளித்தாள் இந்திரா. அனைவரும் வியந்தனர்!

எப்படியம்மா இதெல்லாம் உனக்குத் தெரியும் என்று கேட்ட போது ஐயா நான் தினமும் என் வீட்டிலிருந்து பாடங்களை காதால் கேட்டே கற்றுக் கொண்டேன் என்றாள். அயல் தேசத்து அறிஞர் அம்மா நீ இன்னும் வாழ்வில் உயர்வாய் என்றார்.

அடுத்த வாரமே அந்த அறிஞர் சுந்தராபுரிக்கு விஜயம் செய்தார். அங்கு சுந்தரவர்மனை சந்தித்து சகலமும் அறிந்தவர் சுந்தரனை மணக்கப் பொருத்தமானவள் இந்திராவே என்று கணித்து நடந்ததை அவனிடம் சொன்னார்.

சுந்தரவர்மனும் இந்திராபுரிக்கு நேரில் சென்று இந்திராவின் குடும்பத்தினரை சந்தித்து அவளை மணமுடித்து சுந்தராபுரிக்குத் திரும்பினான். பிள்ளைகளே கல்வியே சிறப்பு கல்வியால் வாழ்வில் மிகப் பெரும் உயரத்தை அடையலாம்.

இதுவே இக்கதையின் நீதி.. சரிதானே குழந்தைகளே 📕📖📚