Tuesday, 9 December 2025

​#GoSlow_boys



நம்ம ஊரில் சிக்னலில் வியாபாரம் செய்பவர்களை பார்த்து இருப்போம். கார் கண்ணாடியில் வெயில் தடுப்புக்கு ஒட்டும் விண்டோ ஷேடு, கார் துடைக்க ஸ்பிரேயர் இப்படி காரை குறிவைத்து நடக்கும் வணிகம் தனி. சென்னையில் சிக்னலில் புத்தகம் விற்கும் கலையை கெவின்கேர் அதிபர் ரங்கநாதன் உலகின் ஆகச் சிறந்த வணிகம் என்பார்.


இன்று சிக்னலில் தேர்ட் குவாலிட்டியில் இயர் பட்ஸ், ஓவிய புத்தகம், அடாசு ஸ்டிக்கர்னு கொண்டு வந்து விற்கிறேன் எனும் போர்வையில் வாங்கு இல்லாட்டி காசு கொடுன்னு நம்மிடம் பிச்சை கேட்டும் அட்ரா சிட்டியான ஆட்களை விட்டுவிடுவோம். இந்தப் பதிவில் நீங்கள் படிக்கப் போவது நைஜீரியா சிக்னல் வணிகர்களைப் பற்றிய செய்திகளையே.


நைஜீரியாவில் இவர்களுக்கு பெயர் Go Slow Boys பொதுவா நம்ம ஊரு சிக்னலில் கிடைக்கும் சில பொருட்களைப் பற்றி மேலே சொல்லியிருந்தேன். ஆனால் இங்கு பெற்ற தாய் தந்தையைத் தவிர எல்லாம் வாங்கலாம். நான் பார்த்தபோது ஒருவர் ஃபர்னீச்சர்களே விற்றுக் கொண்டிருந்தார். நைஜீரிய டிராபிக் ஜாம் ஒன்றும் அத்தனை இனிப்பாக இருக்காது. 


சில நேரங்களில் 5 மணிநேரம் கூட சர்வ சாதாரணமாக அந்த வாகனக் குவியலில் சிக்கிக் கொள்ளலாம். அப்படி சிக்கிக் கொண்டவர்களுக்கு இந்த வியாபாரிகள் தான் உணவளிக்கும் கடவுள். சாண்ட்விச், கூல்டிரிங்ஸ், ஸ்நாக்ஸ், மட்டுமின்றி கூலிங்கிளாஸ், வாட்ச், போட்டோ ப்ரேம்கள், கார் சார்ஜர்கள், மொபைல் சார்ஜர்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள்..


துணி மணிகள், செருப்புகள், அப்பப்பா.. அப்போது கூலான பீர் பாட்டில்கள், மது பானங்கள் விற்க வந்தார் ஒருவர்! நம்ம டாஸ் மாக் அதிகாரிகள் இதைப் பார்த்தால் இங்கும் இச்சேவை வரலாம்! Go Slow பெயர்க் காரணம் டிராபிக் ஜாம் நகர நகர அதற்கு ஈடாக கிளம்பும் காரின் வேகத்தை கணித்து கூடவே மெதுவாகவும், வேகமாகவும் நடந்து வந்து விற்கவேண்டும். 


ஆனால் இங்கே பணம் தராமல் யாரும் ஏமாற்றுவதில்லை. டிராஃபிக் கிளியராகி விட்டால் வேகம் எடுக்கும் கார்கள் தாங்கள் வாங்கிய பொருளின் தொகையை ஜன்னல் வழியே சாலையில் எறிந்துவிட்டுப் போகின்றனர். எனக்கு முன் சென்ற காரில் ஒருவர் தான் வாங்கிய பொருளுக்கான பணத்தை சாலையில் வீசினார். சாலையில் விழுந்த ரூபாய் நோட்டுகள் இலக்கின்றி பறக்க ஆரம்பித்தன.


அதையும் அவர்கள் வணிகத்தை விட்டுவிடாமல் விரட்டி ஓடிப் போய் சேகரித்ததைப் பார்த்தேன்! இவர்கள் இப்படித்தான் பல நேரங்கள் ஓட வேண்டும். ஓடி ஓடி உழைக்கணும் பாடல் இவர்களுக்கு அப்படியே பொருந்தும். டிராஃபிக்கில் பலரின் பசியைப் போக்குவது மட்டுமின்றி அவர்களது பசிக்காகவும் நிற்காமல் ஓடி ஓடி உழைக்கிறார்கள். 


துப்பாக்கி முனையில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை செய்பவர்களும் இங்குண்டு. ஆனால் இது போல ஓடி ஓடி உழைக்கும் நைஜீரியர்கள் மீது பெரு மதிப்பு வந்தது. எனக்கு அவசியத் தேவை இல்லை என்றாலும் எங்கள் அருகே வந்த ஒரு வியாபாரியிடம் ஒரு கார் மொபைல் சார்ஜரும், 2 பெப்சி பெட் பாட்டில்களும் வாங்கிக் கொண்டோம்!


அந்த வியாபாரி சிரித்தார்.. இறைவனைக் கண்டோம் 🙏

No comments:

Post a Comment