Tuesday, 23 December 2025

6 பாவை மொழி

6. புள்ளும் சிலம்பின.




பறவைகள் இடும் சப்தத்தை புள்ளும் சிலம்பின என்கிறார் ஆண்டாள். இன்றும் மதுரைத் தமிழில் சலம்புவது என்றால் சத்தம் இடுவது என அர்த்தம். இந்த சிலம்புவது தான் சலம்புவதாக மருவியிருக்கும் என்று எண்ணுகிறேன்.!


சிலப்பதிகாரத்தில் கண்ணகி மதுரையை எரிந்து சாம்பல் ஆகட்டும் என்று  சாபமிட்டுவிட்டு அடடா இப்படி கண் மூடித் தனமாக சாபமிட்டு விட்டேனே என வருந்தி இந்தத் தீ யார் யாரையெல்லாம்  மெதுவாகப் போய் பற்ற வேண்டும் என..


திருத்தி ஒரு பட்டியல் தருவார் முதியவர்கள், ஊனமுற்றோர், குழந்தைகள், நோயுற்றவர்கள் என நீளும் அந்த பட்டியலில் இவர்களையெல்லாம் “பையவே சென்று பற்றிடுக என அக்னி பகவானுக்கு ஆணையிட்டு இருப்பார்.


இன்றும் மதுரையில் மெதுவாக என்பது “பைய போ” என்றே பேச்சு வழக்கில் உள்ளது.. சிலப்பதிகாரத் தமிழ், திருப்பாவைத் தமிழ் இவையெல்லாம் தென் தமிழகத்தில் இன்றும் பேசப்படுவது நம் தமிழ் மொழியின் சிறப்பு.


இன்றைய பாசுரத்திற்கு வருவோம்.. எழுந்திருங்கள் பெண் பிள்ளைகளே பறவைகள் கீச்சிடும் அதிகாலையில் கோவிலின் வெண்சங்கு முழங்கும் ஒலி உங்களுக்கு கேட்கவில்லையா.? கண்ணன் பூதகியிடம் பால் குடித்துஅவளைக் கொன்றது,


சகடனை காலால் நிறுத்திக் கொன்றது, பாம்பின் மேல் உறங்கியது என தான் சேர்ந்த கட்சியின் தலைவரை வஞ்சனையின்றி புகழும் நாஞ்சில் சம்பத் போல கண்ணனின் பெருமைகளைப் புகழ்ந்து இறுதியில் இப்படி முடிக்கிறார். 


நமது மனதில் நாரணனை நினைத்து சங்கின் நாதம் போல முனிவர்களும் யோகிகளும் அரி என்று உச்சரிக்கும் பேரொலியைக் கேட்டால் அது நம் காது வழியே மனதிற்குள் சென்று நம்மை குளிரச் செய்யுமாம். அதை கேட்கவாவது எழுந்து வாருங்கள் என்கிறார்ஆண்டாள். 


அரவம் என்றால் சப்தம் என்றும் பாம்பு என்றும் இரு பொருளுண்டு, அரவத்தின் மீது துயில் கொண்டிருக்கும் அரியின் நாமத்தை உச்சரிக்கும் அரவத்தைக் கேட்கப் போகவில்லை என்றாலும்.. நாம் ஆண்டாளின் இனிய பாசுரத்தைக் கேட்க எவ்வளவு அதிகாலையிலும் அரவத்தோடும் ஆர்வத்தோடும் எழுந்து வரலாம்.


மார்கழி 6ம் நாள் பாடல்...


புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?

பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு

கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி

வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ள வெழுந்து அரியென்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!


#திருப்பாவை

#ஆண்டாள்

#மார்கழி

#ஶ்ரீவில்லிப்புத்தூர்

#பாவை_நோன்பு


இதன் ஒலி வடிவத்தை உமா மகியின் “பேச்சு வாக்குல” யூடியூப் சானலில் கேட்கலாம். அதன் லிங்க் கீழே கமெண்ட்டில்…


5 பாவை_மொழி

5. மாயனை மன்னு..





பொதுவாக நமக்கு பிடித்தவர்களுக்கு ஒரு பட்டப் பெயர் வைப்பது இயல்பு. சிலநேரம் வேடிக்கையாக நாம் வைத்த அந்தப் பெயரே அவருக்கு நிலைத்துவிடும். சிலருக்கு பெரிய தலைவர்களாலும், மக்களாலும் பட்டப்பெயர் சூட்டப்பட்டு காலாகாலத்திற்கும் அந்தப் பெயரே நிலைக்கும். அவருடைய உண்மைப் பெயரே மறந்துவிடும்.


உதாரணமாக தந்தை பெரியார் ‘சிவாஜி’ கணேசன் என்று நடிகர் திலகத்தை அழைத்து கவுரவித்தார். அதன் பின் அவர் பெரும்பாலும் கணேசனாக அழைக்கப்படாமல் சிவாஜியாகவே வாழ்ந்து புகழுடம்பு எய்தினார். இப்படி வைக்கப்படும் பெயர்களே, கால காலத்திற்கும் நிலைக்கும் ஆண்டாள் இந்தப் பாசுரத்தில் இதையே பாடுகிறார். 


தனது உள்ளத்தில் வைத்து பூஜிக்கும் கண்ணனுக்கு ஆண்டாள் தரும் பட்டங்களைப் பாருங்களேன் மாயக் காரன், வடமதுரைச் செல்வன், யமுனைத் துறைத் தலைவன், ஆயர்குல அணிவிளக்கு என்றெல்லாம் அவரை விளித்துவிட்டு, முத்தாய்ப்பாக ஒரு தலைவனே அசந்து வியந்து போவது போல அவனை இப்படி விளிக்கிறார்.


 நீ உன் தாய் வயிற்றுக் குடலினை தூய்மை செய்த குலவிளக்கு என்று! தாமோதரனைப் பெற்றதால் அவரது தாயின் வயிறு பரிசுத்தம் அடைந்ததாம்! அரசியலில் கொஞ்சம் கூட தகுதியில்லாத தங்கள் தலைவனைப் போற்றி, வெறும் புகழ் மொழியை மட்டும் தந்து அமைச்சர் பதவியைப் பெறும் இக்கால அரசியல்வாதிகளைப் போல் இல்லாமல்..


தன் மனமுவந்து இந்தப் பட்டங்களை எல்லாம் எந்த பிரதிபலனும் பாராது பெருமாளுக்கு சூட்டி மகிழ்கிறார் ஆண்டாள், மாயக் கண்ணனின் நாமத்தைச் சொல்லி பரிசுத்தமான இதயத்துடன் அவரை பூத்தூவி வணங்கினாலே நாம் செய்த தீமைகள் மட்டுமின்றி, நாம் செய்யவிருக்கும் தீய எண்ணங்கள் கூட தீயிலிட்டது போல் பொசுங்கிவிடும்! 


அவன் நம் பிழைகளை மன்னித்து பிழைக்க வைப்பான். அது ஒன்றே போதும் வேறென்ன வேண்டும். அவனை வேண்டுவது ஒன்றே வேண்டும் என்கிறார். இத்தனை நூற்றாண்டுகள் கடந்தும் இந்தப் பெயர்களில் தானே அனைவரும் அவனை வழிபடுகிறோம். ஆம் தூய மனதோடு ஆண்டாள் அழைத்த பெயர் ஆண்டாண்டுகள் வாழும்.!


மார்கழி 5 ஆம் நாள் பாடல்..


மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்

தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்

தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.


#திருப்பாவை

#ஆண்டாள்

#மார்கழி

#ஶ்ரீவில்லிப்புத்தூர்

#பாவை_நோன்பு

5ஆம் நாள் பாடல் லிங்க் 👇🏿


Wednesday, 17 December 2025

4 பாவை மொழி

4. ஆழிமழைக் கண்ணா.. 




மழை உலகிற்கு இயற்கை அளிக்கும் கொடை, ஏன் இந்த உலகமே உருவானது மழையால் தானே! அக்னி மழை, அமில மழை, தூசு மழை, இப்படிப் பல மழைகள் பல நூற்றாண்டுகளாகப் பெய்து பெய்து உருவானது தானே இந்த பூமி. மழை எப்போதும் மகிழ்ச்சியைத் தரும். 


ஆயிரம் புயல்கள் வீசி அதன் பாதிப்புக்கு நாம் அஞ்சினாலும் பேரிடர் தராத மழையை விரும்பாதவர்கள் யார்? தமிழ் சினிமாக்களில் கூட மழைப்பாடல்கள் பிரசித்தம். கதாநாயகி அறிமுகமே மழையில் நனைந்து ஆனந்தமாக துள்ளி ஆடும் பாடலாக, காதல் பாடலாக பல மழைப்பாடல்கள் உள்ளன.


ஆனால் நம் நாச்சியார் எழுதிய இந்த மழைப்பாடல் அறிவியலும் ஆன்மீகமும் கலந்த தனித்துவம் மிக்க பாடல். திருப்பாவையில் மழை பற்றிய இந்த பாசுரத்தை மொழி பெயர்த்து வெளிநாட்டவரிடம் சொன்னால் மிக மிகச் சாதாரணமாக இது உலகில் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தானே என்பார்கள். 


அவர்களிடம் இது 1100 வருடங்களுக்கு முன் தென் தமிழகத்தின் ஒரு சிற்றூரான ஶ்ரீவில்லிப்புத்தூரில் வாழ்ந்த ஒரு இளம்பெண் எழுதியது என்று சொல்லிப் பாருங்கள். அவர்கள் வியப்பில் உறைந்து போவார்கள்! மழை எவ்வாறு உருவாகிறது என்பதை அன்றே சிந்தித்துச் சொன்னார் ஆண்டாள். 


இந்த காலத்து மக்கள் இருந்திருந்தால் “வெதர் உமன்” என்று அவர் போற்றப்பட்டிருக்கலாம். இந்த மழையை வர்ணிக்கும் போதும் கூட அவர் பெருமாளை ஒப்பிட்டு வர்ணிக்கிறார் எனும் போது அவருக்குள்ளே மேகமாய், மின்னலாய், இடியாய், மழையாய் அரங்கனே இருக்கிறார். பாருங்களேன்..


கண்ணனின் கரிய நிறத்தை மேகமாகவும், அவரது சுதர்சன சக்கரத்தை மின்னலாகவும், அவரது பாஞ்சஜன்யம் எனும் சங்கின் முழக்கத்தை இடியாகவும், அவரது சாரங்க வில்லில் இருந்து சீறிப்பாயும் அம்பைமழையாகவும் ரசனையோடு வர்ணிக்கிறார். 


நீர் கடவுளான வருணனை அழைத்து நீ கடலில் இறங்கி அந்நீரை கவர்ந்து அள்ளிக்கொண்டு மேகமாக மாறிவிடு. பின்னர் மின்னலாய் மின்னி இடியாக ஒலித்து பெரும் மழையாக பொழிந்திடுவாய் எனப் பாடுகிறார். மழை பொழிவது நாட்டிற்கு செழிப்பு நீ பெய்தால் செழுமை பொங்கும்.. எங்கும் மகிழ்ச்சி தங்கும்.. 


அந்த மகிழ்ச்சியில் நாங்கள் எங்கள் பெருமானை நினைத்து, துதித்து மார்கழி நீராடி மகிழ்வோம் என்கிறார் குளிர்ந்த மனதுடன்.எப்படி அன்றே மழை பொழிவதை இவ்வளவு துல்லியமாக ஆண்டாள் கணித்தார் என்று பலர் வியக்கிறார்கள்! 


ஆனால் என்னிடம் யாராவது இந்தக் கேள்வியை கேட்டால் சொல்வேன் “பத்மநாபன் மேல் தீராத மையல் கொண்ட மயில் இந்த ஆண்டாள்.. அந்த மயிலுக்கு மழை வருவது தெரியாதா என்ன.! 


மார்கழி 4 ஆம் நாள் பாடல்..


ஆழிமழைக்கண்ணா!ஒன்று நீ கைகரவேல்;

ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்

பாழியம் தோளுடைய பற்பநா பன்கையில்

ஆழி போல் மின்னி,வலம்புரி போல நின்றதிர்ந்து,

தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்

வாழ உலகினில் பெய்திடாய்,நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.


Tuesday, 16 December 2025

3 பாவை மொழி

3. ஓங்கி உலகளந்த உத்தமன்…



வருடத்தில் ஏதாவது ஒரு மாதத்தில் நல்ல மழை பெய்தாலே நமது ஊர்கள் தண்ணீரில் மிதக்கின்றன. மாதம் 3 முறை மழை பெய்தால் என்ன ஆகும்? தெருவுக்குள் கடல் போல நீர் தேங்கும், எல்லா வீட்டிலும் நீச்சல் குளம் தோன்றும், கரண்ட் இருக்காது, நெட் வேலை செய்யாது, பால் தட்டுப்பாடாகும், மெழுகுவர்த்தி கிடைக்காது..


கழிவு நீர் பெருக்கெடுக்கும், நமது பைக் & கார்கள் நீரில் மூழ்கிப் பழுதாகும், படகுகள் தேவைப்படும், கொசுத் தொல்லை அதிகரிக்கும், காய்ச்சல், கண் வலி வரும், சமூக ஆர்வலர்களால் தண்ணீர் பாட்டில் உணவுப் பொட்டலம் வீடு தேடி வரும். EMI கவலை வாட்டும் தற்காலிகமாய் விலைவாசி ஏறும்! ஆனால் ஆண்டாள் காலத்தில்..


மாதம் மும்மாரி பொழிந்ததும் சாலைகள் அழியாமல் தீமைகள் அழிகிறது, செந்நிற நெல்கள் செழிப்பாக வளர்கிறது. அந்த வயல்வெளியில் ஓடுகின்ற கால்வாயில் கொழுத்த மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. மேனியில் புள்ளியுள்ள வண்டுகள் கரைகளில் இருக்கும் கருங்குவளை மலர்களில் தேன் உண்ணுகின்றன.


குபேரனின் தொப்பை போல் மடி நிறைந்திருக்கும் பசுக்கள் வள்ளல்கள் போல கறப்பதற்கு முன்பு தானாகவே பாலை சுரக்கின்றன. எங்கும் செல்வம் செழிக்கும். இத்தனைச்  செல்வங்களும் தன் காலை ஓங்கி இவ்வுலகை அளந்தானே வாமன அவதாரக் கண்ணன், அவன் பேரை நோன்பிருந்து நீராடி நாம் பாடினால் கிடைக்கும் என்கிறார்! 


அன்று அவ்வளவு மழை பெய்தும் ஆறு குளங்கள் மட்டுமே நிரம்பின,  ஏனெனில் அவை ஒன்று கூட ஆக்ரமிக்கப்படவில்லை. எந்த ஆற்றிலும் அன்று மண் அள்ளவில்லை. நிறைய மரங்கள் வளர்க்கப் பட்டன, புகை, மாசு, தூசு எதுவுமே அன்று தமிழ்நாட்டில் இல்லை மேலும் அன்றைய டிரைனேஜ் சிஸ்டங்களும் சிறப்பாக இருந்தன. 


அதை அமைக்க எத்தனை கோடி எஸ்டிமேட் என பாசுரத்தில் எந்தக் குறிப்புகளும் இல்லை. முக்கியமாக ஆண்டாள் காலத்தில் பிளாஸ்டிக் பாலிதீன் குப்பைகள் அறவேயில்லை. ஆம் நமது ஆண்டாள் கண்ணன் மீது கொண்ட அன்பு வெள்ளத்தைவிட இந்த மழை வெள்ளம் ஒன்றும் பெரிதல்ல! அதில் மூழ்கிட எவர் தான் மறுப்பர்!


மார்கழி 3 ஆம் நாள் பாடல்..


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி 

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரிபெய்து

ஓங்கு பெருங் செந்நெல் ஊடு கயலுகளப்

பூக்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோ எம்பாவாய்.


2.பாவை மொழி

2. வையத்து வாழ்வீர்காள்...


பொதுவாக உலக அழகிப் பட்டங்கள் இந்தியாவிற்கு கிட்டும் போதெல்லாம் இதன் பின்னணியில் இருக்கும் உலகளாவிய அழகு சாதனப் பொருட்களின் வணிகம் குறித்து விவாதிக்கப்படும்சித்தூர் ராணி பத்மினியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்ட அலாவுதீன் கில்ஜியே அலாவுதீன் கிளர்ச்சியாகி இந்தியா மீது படையெடுத்து வந்தான் என்னும் செய்தி தீவிர வரலாறு படிக்காதவர்கள் கூட தீபிகா படுகோனேவுக்காகவாவது படித்து அறிந்து இருப்பார்கள்


இந்தியா அழகிகளின் தேசம்எந்த அழகு சாதனமும் இன்றியே இங்கு அழகிகள் அதிகம்நூர்ஜஹானின் அழகில் ஒரு சதவீதம் கொண்ட தாஜ்மஹாலே அதற்கு சாட்சிஇந்தியாவை ஆண்ட பலப்பல பாரசீக மன்னர்களின்  இந்திய மனைவிகளும்அந்தப்புர ராணிகளும் கூட இப்பட்டியலில் உண்டுதம்மை அலங்கரித்துக் கொள்வதில் உலகப் பெண்களுக்கு எல்லாம் முன்னோடி நம் இந்தியப் பெண்கள்கஸ்தூரி மஞ்சளும்சந்தனமும்பயத்தம் மாவும் தடவிக் குளித்து.. 


செம்பருத்தி கலந்த சிகைக்காயைத் தலைக்கு தடவி குளித்து பின்பு அகிலும்சாம்பிராணியும் தூபமிட்டு புகை எழும்ப சிகையை காயவைத்துவாசனைத் திரவியங்களும்எண்ணெயும் தடவி தலை சீவிகண்ணுக்கு மையிட்டுநெற்றியில் மணக்கும் சந்தன குங்கும திலகமிட்டுநறுமண மலர் சூடிபெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டா இல்லையா என ஒரு நீயா நானா நடத்தி கோட்டு கோபிக்கு பதில் கோபக்கார நக்கீரரை நடுவராக்கிப் பார்த்தவர்கள் நாம்.


இப்படி அலங்காரம் செய்வதில் நாட்டமுள்ள பெண்கள் அதை வேண்டாம் எனச் சொன்னால் டிசம்பரில் அடிக்கிற புயல் தினமும் அல்லவா அடிக்கும்அடித்துவிட்டு போகட்டும் எங்களை அந்த மாயக் கண்ணன் எனும் புயல் தாக்கட்டும் அதற்காக எதையும் தியாகம் செய்வோம் என்கிறார் ஆண்டாள்கண்களில் மையிட்டுக் கொள்வதில்லைதலையில் பூச்சூடிக் கொள்வதில்லை என எந்த இந்தியப் பெண்ணாவது சொல்வாளாஆனால் ஆண்டாள் சொல்கிறார்.


பாவை நோன்பு என்னும் விரதத்தை கடை பிடிக்கும் பெண்களாகிய நாங்கள் நெய் உண்ணோம்பால் உண்ணோம் என உண்ணவிரதம் இருப்பது பெரிதல்ல.. தீய சொற்கள் பேசாதிருப்பது பெரிதல்ல.. தான தருமங்கள் செய்வது பெரிதல்ல.. செய்யக் கூடாததை செய்யாமல் இருப்பதும் பெரிதல்ல.. பெண்களின் இயல்பான அலங்கரிக்கும் குணத்தையும் அந்த மாலவனுக்கு அர்ப்பணிப்பது தான் பெரிது.. அதுவே இந்நோன்பின் நோக்கம் என்கிறார் நம்ாண்டாள், கண்ணா நாங்கள் இதை ஏதோ கடமைக்குச் செய்யவில்லை..


 மனமுவந்து உனக்காகச் செய்கிறோம்எம் வாழ்வில் இந்தப் பிறவி எடுத்து வந்த சூழலில் உலகத் துன்பங்களில் இருந்து எம்மை காப்பாய் பரமா என்று பாடுகிறார்.  சரிபரமன் என்பது பரமசிவன் அல்லவா இதில் கண்ணன் எங்கு வருகிறார்இங்கே பரந்தாமனயே பரமன் என்கிறார் நம் ஆண்டாள்கண்ணன் மேல் ஆண்டாள் கொண்ட அளவிலா நேசம் மட்டுமல்லஎந்த ஒப்பனையும் செய்யாமலேயே நம் இந்தியப் பெண்கள் எல்லாரும் பேரழகிகள் என்பதையும் இப்பாசுரத்தில் நமக்குப் புரிய வைக்கிறார் ஆண்டாள்.


மார்கழி 2ஆம் நாள் பாடல் :


வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்

பையத் துயின்ற பரம னடிபாடிநெய்யுண்ணோம் 

பாலுண்ணோம் நாட்காலே நீராடிமையிட்டு 

எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்செய்யா 

தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.


Monday, 15 December 2025

1. பாவை மொழி

1. மார்கழித் திங்கள்…




நேற்றைய இரவு வீசிய குளிரை நீங்கள் அனுபவித்து இருந்தால் தெரியும். இன்று மார்கழி மாதம் துவக்கம் என்பதற்கு நேற்றே குளிர் கட்டியம் கூறிவிட்டது. ஆம்! குளிரான மார்கழியின் அதிகாலைப் பொழுது.


நாமெல்லாம் தூக்கத்திலிருந்து விழிப்பு வந்தாலும் கூட படுக்கையிலிருந்து எழ மனமில்லாது சுகமாகப் போர்த்திக் கொண்டு படுத்துக் கிடக்கிறோம். சிலருக்கு இந்த அதிகாலையின் குளிர் நீரில் குளிக்கப் பிடிக்காது. 


ஆனால் அந்த நடுக்கத்தை பொறுத்துக் கொண்டு குளித்துப் பாருங்களேன், பரவசமாக இருக்கும்! குளிர் நீரில் குளித்துப் பழகினால் அந்த நாள் முழுவதுமே சுறுசுறுப்பாக இருக்கும். மார்கழி அதிகாலையில் குளிர் நீரில் குளிப்பது பரம சுகம்! 


நூறு ஏசிகளின் காற்று நம் உடல் தழுவுவது போல நம் நரம்பு மண்டலத்தை சிலீரிட வைக்கும் அந்தப் புத்துணர்வை குளித்துப் பார்த்துதான் அனுபவிக்க முடியும். இதைத் தான் முன்னோர்கள் குளிர் விட்டுப் போச்சு என்று சொல்வார்கள்! 


நம்மில் பலர் வெந்நீரில் குளித்து அந்த அனுபவத்தையே பொசுக்குகிறார்கள். மார்கழி மாதத்தின் முதல் தேதி, மதி நிறைந்த நன்னாளின் அதிகாலையில் சில்லென்ற குளத்து நீரில் வந்து நீராட பெண்களை அழைக்கிறார் ஆண்டாள். 


குளிர்மிகு அதிகாலை, நிலவு தன் பணி முடிந்து ஓய்வுக்கு போகின்ற வேளை, இன்றைய கவிஞர்கள் பாடும் குளிர் நிலவே, ஈர நிலாவே என்பதெல்லாம், மார்கழி அதிகாலை நிலவு தான். குளிரை விலக்கி கதிரவன் பணிக்கு வரும்முன்.. 


தண்ணெழில் பொழிந்து விடை பெறும் நேரம், எப்பேர்ப்பட்ட சுறுசுறுப்பானவர்களும் சுகமாய் மயங்கிக் கிடக்கும் இவ்வேளையில் ஏன் இன்னும் சுகமான உறக்கம்? ஏனிந்த பெரும் தயக்கம்?  எழுந்து வாருங்கள், செல்வச் சிறுமிகளே! 


நம் நாராயணன் நமக்கெல்லாம் அருள்தர காத்திருக்கும் போது இந்த அரைத் துக்கம் தகுமா? நம் கார்மேக வண்ணன் சூரியன் போல வெப்பமும்,  நிலா போல் குளுமையும் ஒன்றாக உடையவன். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நீராடி..


அந்த மாயக்காரனை நினைப்போம், கடுங்குளிரை மறப்போம்! மார்கழி மாதத்து நிறைமதி நன்னாளில் நீராடச் செல்வோம். ஆயர்குல செல்வப் பெண்களே! கூரான வேல் ஏந்தி நமக்கு வரும் கொடும் துன்பத்தை அழிக்கும் நந்தகோபனும்..


அழகிய விழிகளுடைய யசோதையும் வளர்த்த இளஞ்சிங்கம் கண்ணன். அவனே நமக்கு பறை தந்து அருள்வான். அதற்கு முன் இந்த தூக்கம் பைசா பெறாத ஒன்றாகும். தூக்கத்தில் இருந்து எழுந்திருங்கள். இவ்வுலகமே அவனை புகழும்படி.. 


பாடிடுவோம் வாருங்கள், என்றழைக்கிறார் ஆண்டாள். அவர் அழைத்தால் அந்தக் கண்ணனே ஓடி வரும்போது, ஆயர்குலப் பெண்கள் வர மாட்டார்களா என்ன! ஆண்டாள் வசித்த திருவில்லிப்புத்தூர் தென் தமிழகத்தில் ஓர் சிறிய ஊர்.


ஆனால் அந்த ஊரையே ஆயர்பாடியாகவும், அங்குள்ள சிறுமிகளை ஆயர் குலச் சிறுமிகளாகவும் எண்ணி பாவை நோன்பை துவக்கி வைத்தவர் ஆண்டாள். ஆம்! தமிழகத்தில் ஆயர் குலப் பெண்களின் முதல் மேயர் நம் ஆண்டாள் தான்! 


இன்று மார்கழி முதல் நாள்! பயணிப்போம் அடுத்த 30 நாட்களும்.!


மார்கழி 1ஆம் நாள் பாடல்..


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்

கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாரா யணனே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.



Tuesday, 9 December 2025

​#GoSlow_boys



நம்ம ஊரில் சிக்னலில் வியாபாரம் செய்பவர்களை பார்த்து இருப்போம். கார் கண்ணாடியில் வெயில் தடுப்புக்கு ஒட்டும் விண்டோ ஷேடு, கார் துடைக்க ஸ்பிரேயர் இப்படி காரை குறிவைத்து நடக்கும் வணிகம் தனி. சென்னையில் சிக்னலில் புத்தகம் விற்கும் கலையை கெவின்கேர் அதிபர் ரங்கநாதன் உலகின் ஆகச் சிறந்த வணிகம் என்பார்.


இன்று சிக்னலில் தேர்ட் குவாலிட்டியில் இயர் பட்ஸ், ஓவிய புத்தகம், அடாசு ஸ்டிக்கர்னு கொண்டு வந்து விற்கிறேன் எனும் போர்வையில் வாங்கு இல்லாட்டி காசு கொடுன்னு நம்மிடம் பிச்சை கேட்டும் அட்ரா சிட்டியான ஆட்களை விட்டுவிடுவோம். இந்தப் பதிவில் நீங்கள் படிக்கப் போவது நைஜீரியா சிக்னல் வணிகர்களைப் பற்றிய செய்திகளையே.


நைஜீரியாவில் இவர்களுக்கு பெயர் Go Slow Boys பொதுவா நம்ம ஊரு சிக்னலில் கிடைக்கும் சில பொருட்களைப் பற்றி மேலே சொல்லியிருந்தேன். ஆனால் இங்கு பெற்ற தாய் தந்தையைத் தவிர எல்லாம் வாங்கலாம். நான் பார்த்தபோது ஒருவர் ஃபர்னீச்சர்களே விற்றுக் கொண்டிருந்தார். நைஜீரிய டிராபிக் ஜாம் ஒன்றும் அத்தனை இனிப்பாக இருக்காது. 


சில நேரங்களில் 5 மணிநேரம் கூட சர்வ சாதாரணமாக அந்த வாகனக் குவியலில் சிக்கிக் கொள்ளலாம். அப்படி சிக்கிக் கொண்டவர்களுக்கு இந்த வியாபாரிகள் தான் உணவளிக்கும் கடவுள். சாண்ட்விச், கூல்டிரிங்ஸ், ஸ்நாக்ஸ், மட்டுமின்றி கூலிங்கிளாஸ், வாட்ச், போட்டோ ப்ரேம்கள், கார் சார்ஜர்கள், மொபைல் சார்ஜர்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள்..


துணி மணிகள், செருப்புகள், அப்பப்பா.. அப்போது கூலான பீர் பாட்டில்கள், மது பானங்கள் விற்க வந்தார் ஒருவர்! நம்ம டாஸ் மாக் அதிகாரிகள் இதைப் பார்த்தால் இங்கும் இச்சேவை வரலாம்! Go Slow பெயர்க் காரணம் டிராபிக் ஜாம் நகர நகர அதற்கு ஈடாக கிளம்பும் காரின் வேகத்தை கணித்து கூடவே மெதுவாகவும், வேகமாகவும் நடந்து வந்து விற்கவேண்டும். 


ஆனால் இங்கே பணம் தராமல் யாரும் ஏமாற்றுவதில்லை. டிராஃபிக் கிளியராகி விட்டால் வேகம் எடுக்கும் கார்கள் தாங்கள் வாங்கிய பொருளின் தொகையை ஜன்னல் வழியே சாலையில் எறிந்துவிட்டுப் போகின்றனர். எனக்கு முன் சென்ற காரில் ஒருவர் தான் வாங்கிய பொருளுக்கான பணத்தை சாலையில் வீசினார். சாலையில் விழுந்த ரூபாய் நோட்டுகள் இலக்கின்றி பறக்க ஆரம்பித்தன.


அதையும் அவர்கள் வணிகத்தை விட்டுவிடாமல் விரட்டி ஓடிப் போய் சேகரித்ததைப் பார்த்தேன்! இவர்கள் இப்படித்தான் பல நேரங்கள் ஓட வேண்டும். ஓடி ஓடி உழைக்கணும் பாடல் இவர்களுக்கு அப்படியே பொருந்தும். டிராஃபிக்கில் பலரின் பசியைப் போக்குவது மட்டுமின்றி அவர்களது பசிக்காகவும் நிற்காமல் ஓடி ஓடி உழைக்கிறார்கள். 


துப்பாக்கி முனையில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை செய்பவர்களும் இங்குண்டு. ஆனால் இது போல ஓடி ஓடி உழைக்கும் நைஜீரியர்கள் மீது பெரு மதிப்பு வந்தது. எனக்கு அவசியத் தேவை இல்லை என்றாலும் எங்கள் அருகே வந்த ஒரு வியாபாரியிடம் ஒரு கார் மொபைல் சார்ஜரும், 2 பெப்சி பெட் பாட்டில்களும் வாங்கிக் கொண்டோம்!


அந்த வியாபாரி சிரித்தார்.. இறைவனைக் கண்டோம் 🙏