Wednesday, 7 January 2026

26 பாவை மொழி

26. மாலே மணிவண்ணா..





மனிதர்களில் பேராசைகள் ஏதுமின்றி தனக்கு இதுபோதும் என்ற மனநிறைவு அடைகிறவர்கள் அரிதினும் அரிது. உனது ஆசை என்ன எனப் பொதுவாக யாரிடமாவது கேட்டால் சொகுசான கார், பெரிய பங்களா, தங்க & வைர நகைகள், வித விதமான ஆடைகள், கோடி கோடியாக பணம், எஸ்டேட், தோட்டம், பண்ணை வீடு, வெளிநாட்டில் ஒரு தீவு எனப் பட்டியலிடுவார்கள். 

ஏனெனில் இவர்கள் தனது ஒரு ஓட்டுக்கே பத்தாயிரம் வாங்குபவர்கள் அல்லவா! ஆனால் ஆண்டாள் இவற்றில் ஒன்று கூட கேட்கவில்லை! அவளது பட்டியலில் இதெல்லாம் இல்லை. அவர் பட்டியல் வேறு அதைப் படிப்போமா.. மணிவண்ணா! இம்மார்கழி நீராட எமக்கு எம் முன்னோர்கள் செய்த நெறிகளின் படி உமக்கு என்ன வேண்டும் என நீ கேட்டால், “இதோ இது தான் என் தேவைகள்..

உலகமதிர முழங்கும் உன் பாஞ்சசன்யம் போல பல வெண் சங்குகள் வேண்டும், பெரும் ஒலி தரும் பறைகள் வேண்டும், பல்லாண்டு உன்னைப் போற்றிப் பாடிட ஓதுவார்கள் வேண்டும், அழகிய விளக்குகள் வேண்டும், கொடி மரங்கள் வேண்டும், அக்கொடி மரத்தில் கட்டிட வெண் சீலைகள் வேண்டும் ஆலிலைக் கண்ணா இவை எல்லாம் எமக்கு நீ அருளினாலே போதும் அவ்வளவுதான்!

பாருங்கள் இப்பட்டியலில் சராசரி மனிதனின் ஒரு ஆசை கூட இருக்காது! ஆண்டாளின் ஒரே ஆசை கண்ணன் மட்டும் தான்! தனக்கு கிடைக்கும் பெரும் செல்வத்தையும் புகழையும் விட கண்ணனைப் புகழ்ந்து பாடிட இப்பொருட்களே கொடுத்தாலே போதும் என்கிறார் நாச்சியார்.. மிகச் சிம்பிளாகவும் ஹம்பிளாகவும்.

மார்கழி 26ஆம் நாள் பாடல்...

மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன

பால்அன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே

சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே

கோல விளக்கே கொடியே விதானமே

ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.


No comments:

Post a Comment