29. சிற்றம் சிறுகாலே..
கடந்த பாசுரத்தில் ஆயர்குலத்தின் தகுதிகளையும் தாங்கள் செய்யாத தவறுக்கு மன்னிக்கும்படியும் கேட்ட ஆண்டாள், மார்கழி முடிய இன்னும் 1 நாள் தான் இருக்கு கடந்த 28 நாட்களாகப் பாடுகிறோம் ஒரு வேளை ஆயர் குலத்தினர் கண்ணன் மீது கொண்ட அபிமானம் அவருக்கு புரியலையோ எனும் சந்தேகம் எழுகிறது ஆண்டாளுக்கு.
பத்திரிக்கையாளர்களைக் கண்ட பிரதமர் போல கண்ணன் பதிலே பேச மாட்டேங்குறாரே?! ஏன்? சரி! நமது ஆயர் குலத்தின் விஸ்வாசம் பற்றி இன்னும் விரிவாக இவரிடம் சொல்வோம் என்று “கண்ணா தினம் அதிகாலையில் வந்து உன் காலில் விழுந்து வணங்குகிறோம்”
ஏனெனில் நாங்கள் எல்லாரும் பசுக்களை மேய்த்துக் கொண்டே பாடல்களைப் பாடி, வீட்டிலிருந்து சுமந்து வந்த எங்கள் கட்டுச் சோறை சாப்பிட்டு ஜீவனம் நடத்தும் ஆயர்கள். ஆனால் நீயோ பெருமைமிக்க கடவுள். நீ ஏற்றத் தாழ்வின்றி எங்கள் குலத்தில் வந்து பிறந்தாயே அதற்கு தான் உன்னை மதித்து துதிக்கிறோம்.
உன்னிடம் இருந்து எதையாவது கொடுன்னு கேட்டு அதை மட்டும் நாங்கள் வாங்கிக் கொண்டு போக வரவில்லை. உனக்கு நாங்கள் ஏதாவது ஒரு சின்ன உதவியாவது பதிலுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறோம். நாங்கள் அப்படி செய்யாவிட்டால் அது எங்களுக்குத் தான் பெருத்த அவமானம். எமக்கு பெரிய வேலைகள் ஏதும் வேண்டாம்.
உன்னிடம் எடுபிடியாக இருந்து சின்னச் சின்ன வேலை என்றாலும் சரி எங்களை அதைச் செய்ய விடு.. இந்த ஜென்மம் மட்டுமல்ல இன்னும் ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும் நாங்கள் உன்னைச் சேர்ந்தவர்களாகவே மட்டும் இருப்போம். உனக்கே பணி செய்து கிடப்போம். கடைசியாக ஒன்றை கேட்கின்றோம்..
எங்களுக்கு உன்னை நினைப்பதைத் தவிர வேறு ஆசை ஏதாவது வந்தால் அப்படி ஒரு எண்ணமே வராத அளவுக்கு நீ அருள் செய்தால் அதுவே போதும் என்கிறார். கண்ணனை நினைப்பதை தவிர வேறு ஆசைகள் வேண்டாம் அப்படி வந்தாலும் அதை அவனே அகற்றவேண்டுமாம்! அதாவது கோவிந்தா உனை நினைக்கும் இந்த மனதில் வேறு நினைவுகளே வரக் கூடாது.
எங்கள் ஆசைக்கு நீயே காவல் இரு! வேறு ஆசைகள் வந்தால் உள்ளே விட்டுவிடாதே என்கிறார். இப்பொழுது கண்ணன் தான்எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இவர்களுக்கு வேறு நினைவுகள் வந்தால் கண்ணனது காவல் சரியில்லை என்று அர்த்தமாகிவிடுமே!
பக்தர்களை ஓடவும் முடியாமல் ஒளியவும் விடாமல் 360 டிகிரியிலும் அவர்களை கண்காணித்து அவர்களுக்கு பற்பல டாஸ்குகளை கொடுத்து சோதிக்கும் அந்த பிக்பாஸ் ‘கமல’க்கண்ணனுக்கே இப்படி ஒரு டாஸ்க்கை கொடுத்து பரிசோதிக்கிறார் நம் லேடி பிக்பாஸ் ஆண்டாள்!
மார்கழி 29 ஆம் நாள் பாடல்...
சிற்றம் சிறுகாலே வந்துஉன்னை சேவித்துஉன்
பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றுஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.





No comments:
Post a Comment