Friday, 9 January 2026

29 பாவை மொழி

​29. சிற்றம் சிறுகாலே..


கடந்த பாசுரத்தில் ஆயர்குலத்தின் தகுதிகளையும் தாங்கள் செய்யாத தவறுக்கு மன்னிக்கும்படியும் கேட்ட ஆண்டாள், மார்கழி முடிய இன்னும் 1 நாள் தான் இருக்கு கடந்த 28 நாட்களாகப் பாடுகிறோம் ஒரு வேளை ஆயர் குலத்தினர் கண்ணன் மீது கொண்ட அபிமானம் அவருக்கு புரியலையோ எனும் சந்தேகம் எழுகிறது ஆண்டாளுக்கு.

பத்திரிக்கையாளர்களைக் கண்ட பிரதமர் போல கண்ணன் பதிலே பேச மாட்டேங்குறாரே?! ஏன்? சரி! நமது ஆயர் குலத்தின் விஸ்வாசம்  பற்றி இன்னும் விரிவாக இவரிடம் சொல்வோம் என்று  “கண்ணா தினம் அதிகாலையில் வந்து உன் காலில் விழுந்து வணங்குகிறோம்” 

ஏனெனில் நாங்கள் எல்லாரும் பசுக்களை மேய்த்துக் கொண்டே பாடல்களைப் பாடி, வீட்டிலிருந்து சுமந்து வந்த எங்கள் கட்டுச் சோறை சாப்பிட்டு ஜீவனம் நடத்தும் ஆயர்கள். ஆனால் நீயோ பெருமைமிக்க கடவுள். நீ ஏற்றத் தாழ்வின்றி எங்கள் குலத்தில் வந்து பிறந்தாயே அதற்கு தான் உன்னை மதித்து துதிக்கிறோம். 

உன்னிடம் இருந்து எதையாவது கொடுன்னு கேட்டு அதை மட்டும் நாங்கள் வாங்கிக் கொண்டு போக வரவில்லை. உனக்கு நாங்கள் ஏதாவது ஒரு சின்ன உதவியாவது பதிலுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறோம். நாங்கள் அப்படி செய்யாவிட்டால் அது எங்களுக்குத் தான் பெருத்த அவமானம். எமக்கு பெரிய வேலைகள் ஏதும் வேண்டாம்.

உன்னிடம் எடுபிடியாக இருந்து சின்னச் சின்ன வேலை என்றாலும் சரி எங்களை அதைச் செய்ய விடு.. இந்த ஜென்மம் மட்டுமல்ல இன்னும் ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும் நாங்கள் உன்னைச்  சேர்ந்தவர்களாகவே மட்டும் இருப்போம். உனக்கே பணி செய்து கிடப்போம். கடைசியாக ஒன்றை  கேட்கின்றோம்..

எங்களுக்கு உன்னை நினைப்பதைத் தவிர வேறு ஆசை ஏதாவது வந்தால் அப்படி ஒரு எண்ணமே வராத அளவுக்கு நீ அருள் செய்தால் அதுவே போதும் என்கிறார். கண்ணனை நினைப்பதை தவிர வேறு ஆசைகள் வேண்டாம் அப்படி வந்தாலும் அதை அவனே அகற்றவேண்டுமாம்! அதாவது கோவிந்தா உனை நினைக்கும் இந்த மனதில் வேறு நினைவுகளே வரக் கூடாது.

எங்கள் ஆசைக்கு நீயே காவல் இரு! வேறு ஆசைகள் வந்தால் உள்ளே விட்டுவிடாதே என்கிறார். இப்பொழுது கண்ணன் தான்எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இவர்களுக்கு வேறு நினைவுகள் வந்தால் கண்ணனது காவல் சரியில்லை என்று அர்த்தமாகிவிடுமே! 

பக்தர்களை ஓடவும் முடியாமல் ஒளியவும் விடாமல் 360 டிகிரியிலும் அவர்களை கண்காணித்து அவர்களுக்கு பற்பல டாஸ்குகளை கொடுத்து சோதிக்கும் அந்த பிக்பாஸ் ‘கமல’க்கண்ணனுக்கே இப்படி ஒரு டாஸ்க்கை கொடுத்து பரிசோதிக்கிறார் நம் லேடி பிக்பாஸ் ஆண்டாள்!


மார்கழி 29 ஆம் நாள் பாடல்...


சிற்றம் சிறுகாலே வந்துஉன்னை சேவித்துஉன்

பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய்

பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்துநீ

குற்றுஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது

இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா

எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்

மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.


28 பாவை மொழி

​28. கறவைகள் பின்சென்று..




இதிகாசங்களில் புகழப்பட்ட முதல் வளர்ப்பு மகன் கண்ணன் தான். அவன் திடீரென ஒருவரால் வளர்ப்பு மகனாக தத்தெடுக்கப்பட்டவன் இல்லை. மதுராபுரியில் பிறந்த சில மணி நேரங்களிலேயே பிருந்தாவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வளர்ந்தவன். பால் மணம் மாறாத சிசுவாக பெற்ற தாயின் தாய்ப் பாலைக்கூட அருந்தும் பாக்கியம் பெறாதவன்! 


அதனால் தான் என்னவோ பிருந்தாவன கோகுலத்தில் அவன் பாலையும் வெண்ணையையும் திருடி திருடித் தின்றிருக்கலாம். யது குலத்தில் பிறந்த கண்ணனை ஆயர்குல மன்னனாக.. தங்கள் அன்பு ரமணனாகவே அவர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். “மன்னிப்பு” ஏய்.. தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை.. ரமணா படத்தில் கேப்டனின் புகழ் பெற்ற பஞ்ச் டயலாக் இது. 


கோலிவுட் ரமணாவுக்கு வேண்டுமானால் இது பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் கோகுலத்து ரமணனுக்கு அது மிகப் பிடிக்கும் என்கிறார் ஆண்டாள். சரி ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? தவறு செய்ததால்! ஆமாம் ஏன் தவறு செய்ய வேண்டும்? அது தெரிந்து செய்த தவறல்ல தெரியாமல் நடந்த தவறுகள், ஆக்சுவலி எங்க ஆயர்குலத்தோட குவாலிட்டி தெரியுமா.?


காலையில மாடு கன்னு மேய்க்க ராமராஜன் மாதிரி பாடிக் கிட்டே கிளம்புவோம் பசிச்சா இருக்கிறதை பகிர்ந்து கிட்டு லஞ்ச் சாப்பிடுவோம். நாங்க அவ்வளவா கல்வியறிவு அதிகமில்லாத படிக்காத இடையர் குலத்து ஆளுங்க.. ஆனா நீ எங்க குலத்துல வந்து குறையில்லாம பிறந்த கோவிந்தன், நீ பெரிய அறிவாளி. நீ எங்க குலத்துல நீ பிறந்ததே எங்களுக்கு பெரும் புண்ணியம்.


உனக்கும் எங்களுக்கும்  இருக்குற உறவை யாராலும் பிரிக்கவே முடியாது. இதையும் மீறி எப்பவாவது சின்னப் புள்ளத்தனமா நாங்க எதாவது தெரியாம பேசியிருந்தாலோ இல்ல.. உன்னை தப்பா பேர் சொல்லிக் கூப்பிட்டு இருந்தாலோ அதுக்கெல்லாம் கோவப்படாம நாங்க செஞ்சத எல்லாம் மன்னிச்சு நாங்க கேட்டதை கொடுத்துடு அப்படி கொடுத்துட்டா அதுவே போதும்.


உன்னையே நினைச்சு பாடிகிட்டு இருக்கிறதவிட நாங்க வேற என்னத்த புதுசா செஞ்சிடப் போறோம். ஆண்டாள் கண்ணனிடம் தான் அறியாமல் செய்த தவறுக்கெல்லாம் மன்னிப்பு கேட்கிறார். அவன் மன்னிப்பான் என்று மிகவும் ஆணித்தரமாக நம்புகிறார். மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன், மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்ன்னு சொல்லுவாங்க. 


அதனால் சிறிதும் தயங்காமல் தான் மனித பிறப்பு என்பதை மன்னிப்புக் கேட்டு நிரூபிக்கிறார் ஆண்டாள். நிச்சயம் அவன் மன்னிப்பான்னு அவருக்கு நன்றாகத் தெரியும். ஏன்னா ரமணன் பெரிய மனுஷன் அல்லவா. 


மார்கழி 28 ஆம் நாள் பாடல்...


கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம்

அறிவுஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்

பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம்உடையோம்

குறைஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு

உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது அறியாத

பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை

சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே

இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.



Wednesday, 7 January 2026

27 பாவை மொழி

​27. கூடாரை வெல்லும்..


#பாவை_மொழி


திருப்பாவை நோன்பிற்கும், ரமலான் நோன்பிற்கும் ஓர்ஒற்றுமையிருக்கிறது! நாங்கள் நெய், பால், இதெல்லாம் உண்ண மாட்டோம், தலையில் பூச்சூட மாட்டோம், கண்ணுக்கு மையிட மாட்டோம், எங்களைஅலங்கரித்துக் கொள்ள மாட்டோம் என்றெல்லாம் இந்த பாவை நோன்பைதுவக்கும் போது 2வது பாசுரத்தில் சூளுரைத்த ஆண்டாள்.. 


நோன்பு துவங்கி 27 ஆவது நாளில் தான் கூறிய விரதத்தை விடச்சொல்கிறார் எப்படி? தட்டு நிறைய பால் சோறிட்டு அதிலே கரண்டிகரண்டியாய் நெய்யை விட்டு அந்தப் பாலும் நெய்யும் முழங்கை வழியேசறுக்குப் பலகையில் சரிவது போல வழிய வழிய சாப்பிட வேண்டுமாம். பாலும் வேண்டாம் நெய்யும் வேண்டாம் என்றவர் இப்போது இரண்டையும்ஒன்றாகவே சாப்பிடச் சொல்கிறார். 


அது மட்டுமா! கண்களில் மை தீட்டக்கூடாது, அலங்காரம் செய்து கொள்ளக்கூடாதென்று சொன்னவர் இந்த உணவை சாப்பிடப் போகும் முன்என்னென்ன ஆடை ஆபரணங்கள் அணியவேண்டும் என ஒருபட்டியலிடுகிறார். கைகளில் தங்கவளைகள், இரு தோள்களிலும் கைவங்கிகள், தங்கப்பூ போன்ற பெரிய தோடுகள், அதற்கு மாட்டல்கள், காலணிகள், இன்னும் பல நகைகள்..


அதுக்கு மேட்ச்சா உயர்ந்த ஆடைகள் இப்படி நகைக் கடை மாடல் போலஅலங்கரித்து வந்து அதன் பிறகே அந்த பால் சோறை அனைவரும் ஒன்றாகக்கூடி சாப்பிட வேண்டுமாம்! இவை அனைத்தும் எதிரிகளை வெல்லும்கோவிந்தனைப் பற்றி பாடி பயனைடைந்து நாங்கள் பெறும் பரிசுகள்என்கிறார். மார்கழி முதல்நாளில் துவக்கிய இந்தப் பாவை நோன்பை  27ஆம்நாளில்.. 


அனைவரும் விரும்பிய உணவுகளை உண்டு, புதிய ஆடை ஆபரணங்கள்அணிந்து கொண்டாடுவோம் என்று நம் ஆண்டாள் பாடியதற்கும் ரமலான்நோன்பிற்கும் இந்த இடத்திலும் ஓர் ஒற்றுமை வருகிறது! ஆம்! இதே போலத்தான் அவர்களும் புனித நோன்பிருந்து ரமலான் மாதத்தின் 27வது நாளைபுனித மிக்க இரவு எனும் ‘லைத்துல் கதர்’ விழாவைக் கொண்டாடுகிறார்கள். 


அன்று புத்தாடை உடுத்துவதும் வித விதமான பண்டங்களை உண்பதும்அவர்கள் வழக்கம். பாவை நோன்பு கூட மார்கழி மாத மதி நிறைந்த நாளில்துவங்குகிறது. ரமலான் பிறை தெரிந்ததும் நிறைகிறது. நிலவின் வளர்பிறைதேய்பிறையை ஒட்டியே இவ்விரு நோன்புகளும் மனிதர்களால்கொண்டாடப்படுகின்றன!


வைணவமோ, இஸ்லாமோ நோன்பிருப்பதே மாண்பு என்பதை பாங்குஓதுவதிலும், பாசுரம் பாடுவதிலும் அறிந்து கொள்ளலாம் என உணர்த்துகிறதுஆண்டாளின் இந்தப் பாசுரம். 


மார்கழி 27 ஆம் நாள் பாடல்...


கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்

பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்

நாடு புகழும் பரிசினால் நன்றாகச்

சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே

பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்

ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு

மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்

கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.


26 பாவை மொழி

​26. மாலே மணிவண்ணா..





மனிதர்களில் பேராசைகள் ஏதுமின்றி தனக்கு இதுபோதும் என்ற மனநிறைவு அடைகிறவர்கள் அரிதினும் அரிது. உனது ஆசை என்ன எனப் பொதுவாக யாரிடமாவது கேட்டால் சொகுசான கார், பெரிய பங்களா, தங்க & வைர நகைகள், வித விதமான ஆடைகள், கோடி கோடியாக பணம், எஸ்டேட், தோட்டம், பண்ணை வீடு, வெளிநாட்டில் ஒரு தீவு எனப் பட்டியலிடுவார்கள். 

ஏனெனில் இவர்கள் தனது ஒரு ஓட்டுக்கே பத்தாயிரம் வாங்குபவர்கள் அல்லவா! ஆனால் ஆண்டாள் இவற்றில் ஒன்று கூட கேட்கவில்லை! அவளது பட்டியலில் இதெல்லாம் இல்லை. அவர் பட்டியல் வேறு அதைப் படிப்போமா.. மணிவண்ணா! இம்மார்கழி நீராட எமக்கு எம் முன்னோர்கள் செய்த நெறிகளின் படி உமக்கு என்ன வேண்டும் என நீ கேட்டால், “இதோ இது தான் என் தேவைகள்..

உலகமதிர முழங்கும் உன் பாஞ்சசன்யம் போல பல வெண் சங்குகள் வேண்டும், பெரும் ஒலி தரும் பறைகள் வேண்டும், பல்லாண்டு உன்னைப் போற்றிப் பாடிட ஓதுவார்கள் வேண்டும், அழகிய விளக்குகள் வேண்டும், கொடி மரங்கள் வேண்டும், அக்கொடி மரத்தில் கட்டிட வெண் சீலைகள் வேண்டும் ஆலிலைக் கண்ணா இவை எல்லாம் எமக்கு நீ அருளினாலே போதும் அவ்வளவுதான்!

பாருங்கள் இப்பட்டியலில் சராசரி மனிதனின் ஒரு ஆசை கூட இருக்காது! ஆண்டாளின் ஒரே ஆசை கண்ணன் மட்டும் தான்! தனக்கு கிடைக்கும் பெரும் செல்வத்தையும் புகழையும் விட கண்ணனைப் புகழ்ந்து பாடிட இப்பொருட்களே கொடுத்தாலே போதும் என்கிறார் நாச்சியார்.. மிகச் சிம்பிளாகவும் ஹம்பிளாகவும்.

மார்கழி 26ஆம் நாள் பாடல்...

மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன

பால்அன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே

சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே

கோல விளக்கே கொடியே விதானமே

ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.


Tuesday, 6 January 2026

25 பாவை மொழி

25. ஒருத்திமகனாய்.. 









கவிஞர் கண்ணதாசன் கண்ணன் மீது அபிமானம் கொண்ட ஆண்ஆண்டாள்! கண்ணன் மேல் கொண்ட அன்பால் முத்தையா என்னும் தன்இயற்பெயரை கண்ணதாசன் என மாற்றிக்கொண்டவர். தனித் துவம்மிக்கபல கவிதைகளை எழுதியவர் ஆண்டாளின் வரிகளையும் உரிமையுடன் தன்பல பாடல்களில் எடுத்துக் கொண்டார்.


தாய் சொல்லைத் தட்டாதே படத்தில் இடம் பெறும் “ஒருத்தி மகனாய்பிறந்தவனாம்” என்ற இந்தப் பாடல் கவிஞரின் சொந்த வாழ்க்கைப் பற்றியபாடல் என்போரும் உண்டு. முத்தையா என்ற கண்ணதாசன் பெற்ற தாய்தந்தையரால் சுவீகாரம் கொடுக்கப்பட்டவர்! அவர் ஒருத்தி மகனாகப் பிறந்துஒருத்தி மகனாக வளர்ந்தவர் என்பார்கள்.


எது எப்படியோ கண்ணனது வாழ்வும் கண்ணதாசன் வாழ்வும் ஒன்றுபோலஅமைந்தது விட்டது ஆச்சரியம் தான்! ஆண்களில் பிறந்தவீடு ஒன்று புகுந்தவீடு ஒன்று எனப் பிறந்து வாழ்ந்த அவதாரம் கண்ணன் தான்! அதுவும் பிறந்தஅந்த இரவே தான் பிறந்த இடத்தில் இருந்து வளரும் இடத்திற்குமாற்றப்பட்டவன். தேவகி என்னும்.. 


ஒருத்திக்கு பிறந்து யசோதை என்னும் ஒருத்தியிடம் ஒளிக்கப்பட்டு வளர்ந்தஒப்பில்லாதவன். கண்ணனின் தாய்மாமன் கம்சன் தனது தங்கையின்குழந்தையால் உனக்கு மரணம் வரும் என்றறிந்து அவளுக்கு பிறந்தகுழந்தைகளை எல்லாம் கொல்ல இவன் மட்டும் அங்கிருந்து தப்பியவன். கண்ணன் இறக்கவில்லை அவன்..


உயிருடன்தான் இருக்கிறான் என்பதையறிந்த கம்சன் ஒரு கஞ்சனின் வயிறுஎரிவது போல பரிதவித்தான் என்கிறார் ஆண்டாள். உலகில் கஞ்சனின்வயிற்றெரிச்சல் தான் முதலானது என்பதற்கு இதைவிட சிறந்த உவமைஇருக்க முடியுமா! அந்த வயிற்றெரிச்சலில் அவன் உனக்கிழைத்ததீங்குகளை எல்லாம் தவிடு பொடியாக்கினாய்..


வானுக்கும் மண்ணுக்கும் நெடுந்துயர்ந்த திருமாலே உன்னை நினைத்துஉருகி நாங்கள் வேண்டி விரும்பும்  பறையை நீங்கள் எங்களுக்குஅருளினால் அதையிசைத்து உம் வீரத்தை, செல்வத்தை வாயாரப்பாடிஎங்கள் வருத்தங்களைத் தொலைத்து மகிழ்வோம். கண்ணனை வாயாரப்பாடினாலே வருத்தங்கள் தொலையுமாம். 


கண்ணனின் விளம்பரத் தூதுவரான ஆண்டாள் எல்லா பாசுரத்திலும் சுற்றிவளைத்து சொல்ல வருவது ஒன்றே ஒன்றை மட்டும் தான்! கண்ணனைநினைத்து அவன் பாதங்களில் சரணாகதி ஆகி அவனது  புகழை, அவனதுவீரதீரத்தை மனமுருகப் பாடி  துதித்தால் உங்கள் "கீர்த்திக்கு நான் கேரண்டி" என உத்திரவாதம் அளிக்கிறார்..


மார்கழி 25 ஆம் நாள் பாடல்...


ஒருத்தி மகனாய்ப் பிறந்துஓர் இரவில்

ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்

தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த

கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை

அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.​