Wednesday, 31 December 2025

18 பாவை மொழி

18. உந்து மதகளிற்றன்..





மாதவிப் பந்தல் என்றால் என்னவென்று தெரியுமா? மல்லிகைக் கொடிகள் அடர்ந்து படர்ந்து பந்தல் போல இருப்பதே. அதாவது இன்றைய அரசியல்வாதிகளுக்கு வைக்கும் மலர் அலங்கார வளைவு போன்றது. ஒரு முழம் மல்லிகையே மணம் வீசி நம்மை கிறங்க வைக்கும்.


ஒரு பந்தல் முழுவதும் மல்லிகை.. அதில் மறைந்து வசிக்கும் குயில்கள் பல முறை கூவிவிட்டன, அடிப் பெண்ணே! நறுமணம் வீசும் கூந்தல் உள்ளவளே.. உன் வளையோசை ஒலிக்க, தாமரை மொட்டை கையில் ஏந்தியது போன்ற உனது அழகிய விரல்களால் இந்தக் கதவை திறந்துவிடு என்றழைக்கிறார். யாரை? 


கடந்த 17 பாசுரங்களில் வராது இந்த 18 ஆம் பாசுரத்தில் அறிமுகமாகிறார் “நப்பின்னை” என்னும் பெண்! இவள் கண்ணனின் முறைப் பெண் எனவும் இவளையும் அவர் மணந்து கொண்டார் என்பாரும் உண்டு. 18 ஆம் பாசுரத்தில் கெளரவ தோற்றத்தில் அறிமுகம் ஆகும் இந்த நப்பின்னை பாத்திரம் தொடர்ந்து சில பாசுரங்களில் தலை காட்டுகிறார். 


தமிழ் சினிமாவில் வரும் அமெரிக்க மாப்பிள்ளை போல அரங்கனின் முறைப்பெண் என நப்பின்னையை ஆண்டாள் சித்தரிக்கிறார். ஆண்டாள் அரங்கனை அளவிலாது நேசித்தாலும் நப்பின்னை மீது பொறாமை கொள்ளாது இவள் அழகையும் வர்ணிக்கிறார். உன்மத்தம் பிடித்த யானையையும் ஊதித் தள்ளுபவன் சண்டைன்னு வந்துட்டா பின் வாங்காத சண்டியர்..


வலிமை பாய்ந்த வீரமான தோள்கள் உடைய நந்தகோபன் மருமகளே, ஆயர்பாடியின் குலமகளே, கோழியினங்கள் கூவி பொழுது விடிந்துவிட்டது, வா வந்து கதவைத் திற! உன்னுடைய கணவன் எம் உள்ளம் கவர்ந்த கண்ணன் புகழைப் போற்றிப் பாடிட அதிகாலையில் வந்துள்ளோம்!


இன்னொரு பெண்ணை பந்தார்விரலி என்றும், மணம் கமழும் கூந்தல் உள்ளவள் என்றும், செந்தாமரைக் கைகள் என்றும், அந்தக் கை நிறைய வளையணிந்தவள் என்றும் மனதில் வஞ்சனை இல்லாமல் புகழ்கிறார் ஆண்டாள். அவர் இப்படிப் பாடினால் திறக்காத கதவுகள் தாம் ஏது!!


இந்த 18ஆம் நாள் பாடலின் இன்னொரு விசேஷம் இது இராமானுஜருக்கு மிகப் பிடித்த பாசுரம். இராமானுஜரே தீவிர திருப்பாவை விசிறி எவரும் அவரை இராமானுஜர் என்றழைப்பதை விட திருப்பாவை ஜீயர் என்று அழைப்பதையே அவர் மிகவும் விரும்பினார். 


இன்றும்  இந்தப் பாடலை மட்டும் கோவில்களில் இரு முறை பாடுவது வழக்கம். அதனால் என்ன ஆண்டாளின் அமுதத் தமிழை இரு முறையல்ல கோடி முறைக் கேட்டாலும் நமக்கெல்லாம் திகட்டவே திகட்டாது.!


மார்கழி 18 ஆம் நாள் பாடல்...


உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்

நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய்

கந்தம் கமழும் குழலி கடைதிறவாய்

வந்துஎங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்

பந்துஆர் விரலிஉன் மைத்துனன் பேர்பாடச்

செந்தா மரைக்கையால் சீரார் வளைஒலிப்ப

வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.


Monday, 29 December 2025

17 பாவை மொழி

17.அம்பரமே தண்ணீரே..




ஜாடையான பேச்சு.!  ஆம் ஊடலில் இருக்கும் கணவனும் மனைவியும் தாம் பெற்ற பிள்ளைகளிடம் பேசுவது போல “உங்கம்மா என்ன சொல்றான்னு கேளு” எனக் கணவன் கேட்பதும் “என் முடிவு அதுதான்னு உங்கப்பா கிட்ட சொல்லு” என மனைவி பதிலுரைப்பதும் சாதாரணம்.


நமக்கு மிகப் பிடித்தவர்களைப் பற்றி பேச வெட்கப்படும் வேளையிலும் இதே போல கொஞ்சம் ஜாடையாகப் பேசுவது வழக்கம். இங்கு ஆண்டாள் அவர் உள்ளம் கவர்ந்த கண்ணனை எழுப்ப வேண்டும். ஆனால் முதலில் போய் கண்ணனை நீ எழுந்திரு என்று எழுப்பிவிடக் கூடாது.


ஒவ்வொருவராக எழுப்பி கடைசியில் கண்ணனை எழுப்பி விடச் சொல்கிறார். முதலில் நந்தகோபா நீ எழுந்திரு, தாயே யசோதா நீயும் எழுந்திரு, அப்பா பலராமா அப்படியே நீயும் எழுந்து உன் தம்பி கண்ணனையும் எழுப்பு என்கிறார் ஜாடை மாடையாக. இந்த பரிதவிப்பிலும் அவர் மாலனிடம்..


மனமுருகி என்ன வேண்டுகிறார் பாருங்கள்.. உண்ண உணவு, உடுக்க உடை, குடிக்க நீர் இம்மூன்றையும் தாவென உலகில் முதன் முதலில் கேட்டது ஆண்டாளாகத் தான் இருக்க வேண்டும்! ஆம்! இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை” 


மதங்களை கடந்து நிற்கும் அந்த மந்திரச் சொற்களுக்குச் சொந்தக்காரி நம் நாச்சியார் தான்! உனது அருள் தவிர உயிர் வாழ இந்த அத்யாவசியங்கள் மட்டுமே எனக்குப் போதும் என்கிறார்! ஆனால் பாருங்கள் இதையெல்லாம் கேட்ட ஆண்டாள் தான் இருக்க ஒரு இடம் மட்டும் கேட்கவில்லை? 


ஏன்? ஆண்டாள் கைலாசா போல ஏதும் சொந்தத் தீவு ஒன்றை வைத்திருந்தாரா? அவரிடம் ஏதுமில்லை, அதை அவர் கேட்கவும் இல்லை உலகில் தன் சொந்தமாகச் சில அடிகள் நிலம் கிடைப்பதை விட இந்த உலகையே ஓங்கி தன் திருவடிகளால் அளந்தவன், அவனது காலுக்குக் கீழே..


ஒரிடம் கிடைத்தால் அதுவே அவருக்கு போதும். இதை விட வேறென்ன வேண்டும் எனும் மனநிலையில் மூர்த்தியின் கீர்த்தியை பாடுவதற்காகவே பிறந்தவர் ஆண்டாள்.   பேராசை இல்லாத அந்த மனதின் மீதும், அவரது பாசுரத்தின் மீதும் நம்மையும் பேராசை கொள்ள வைக்கிறார்.


மார்கழி 17 ஆம் நாள் பாடல்...


அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்

எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே

எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய்

அம்பரம் ஊடஅறுத்து ஓங்கி உளகுஅளந்த

உம்பர்கோ மானே உறங்காது எழுந்திராய்

செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா

உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்.




Sunday, 28 December 2025

16 பாவை மொழி

16.நாயகனாய் நின்ற..




அக்கால அரசர்கள் ஒருவருக்கு வாக்கு கொடுத்துவிட்டால் அதற்கு அத்தாட்சியாக முத்திரை மோதிரமோ, பதக்கமோ தருவார்கள். அதைக் கொண்டு போய் உரியவரிடம் காட்டினால் நமக்குத் திறக்காத கதவுகளும் திறக்கும். நமக்கு வேண்டியதும் கிடைக்கும் எனப் படித்திருப்போம்! 


ஆண்டாள் இப்பாசுரத்தில் நந்தகோபன் மாளிகையின் வாயிற் காப்போனிடம் அத்தாட்சியாக எதைச் சொல்கிறார் தெரியுமா? மாயக் கண்ணன் நேற்றே எங்களிடம் வந்து நீங்கள் என்னிடம் வேண்டியதை பரிசாக அளிப்பேன் என்றார், அந்த வார்த்தையை நம்பி இங்கு வந்துள்ளோம்!


அந்தக் குறும்பன் பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவான். எங்களை வரச்சொல்லிவிட்டு உறங்குவது போல நடிப்பதில் மன்னன்.. அந்த மணிவண்ணன்! ஒரு வேளை அவனை நாங்கள் எழுப்பாமல் விட்டுவிட்டால் அது குற்றமாகிவிடும் எனவே அவனை எழுப்பத்தான், நாங்கள்.. 


எல்லாரும் நோன்பிருந்து, நீராடி தூய மனதோடு இந்தத் தோரண வாயிலுக்கு வந்துள்ளோம். தோரணையோடு இந்த வாயிலைக் காப்போனே..  உன் தோரணையை விட்டுவிடு, எங்களை உள்ளே விடு! நாங்கள் வந்த நல்ல காரியம் நிறைவேற எங்களை உள்ளே சென்று பாட விடு!


அழகிய இம் மணிக்கதவின் தாழை விலக்கித் திறந்துவிடு! இங்கே ஆண்டாள் பாகுபலி ராஜமாதா போல எம்மை வரச் சொன்னது அந்த மாயவனின் கட்டளை! அவரது கட்டளையே எங்களுக்கு சாசனமென.. கண்ணன் அளித்த வாக்கையே அக்காவலனிடம் அத்தாட்சியாக கூறுகிறார்!


இக்காலத்தில் இளம்பெண்கள் கூட்டமாகப் போய் இப்படிக்  கேட்க வேண்டிய அவசியமே இல்லை! வாயிலில் நிற்கும் எந்த வாட்ச்மேனும் தன் வாயில் ஜொள் விட்டு கதவுகளைத் திறந்து இருப்பான். ஆண்டாளின் பாடல்களில் தமிழில் அருகி மறைந்த பல தமிழ்ச் சொற்களைக் காணலாம். 


உதாரணமாக கொண்மூ, எழினி போன்ற தமிழ்ச் சொற்களுக்கு அர்த்தம் என்ன தெரியுமா? இரண்டுமே மேகத்தை குறிக்கும் தமிழ்ச் சொற்கள்! இன்று இந்தச் சொற்கள் மக்களின் பேச்சு வழக்கிலேயே இல்லை. இந்தப் பாடலிலும் நென்னல் என்ற வார்த்தையை கூறுகிறார். 


நென்னல் என்றால் நேற்று என அர்த்தம், (மாணிக்க வாசகரின் திருவெம்பாவையிலும் இந்த வார்த்தை வருகிறது) ஆம்! ஆண்டாள் அன்று இன்னலின்றி எழுதிய தமிழ்.. நென்னலில் மட்டுமன்று என்றென்றும் கன்னல்.


மார்கழி 16 ஆம் நாள் பாடல்...


நாயக னாய்நின்ற நந்தகோ பன்உடைய

கோயில்காப் பானே கொடித்தோன்றும்

தோரண வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய்

ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்

தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ

வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ

நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.



Saturday, 27 December 2025

15 பாவை மொழி

15.எல்லே இளம்கிளியே





கிளிப் பேச்சு கேட்டிருக்கிறீர்களா? அது எப்போதும் கிண்டல் தெறிக்கும் தொனியில் இருக்கும். ஆண்டாள் இந்தப் பாசுரத்தில் கிளியோடு பேசினார் என்று கூட சொல்வார்கள். ஆனால் கிளியே ஆண்டாளுக்குப் பதிலாக பேசி அந்தத் தோழியை எழுப்பியிருக்கலாம். வாருங்கள் பாசுரத்திற்கு..


துங்குபவர்களை எழுப்பலாம், ஆனால் தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்பமுடியாது என்பார்கள். ஆண்டாள் காலத்திலும் இப்படி தூங்குவது போல நடிப்பவரை அல்லது சோம்பலில் எழுந்திருக்க மறுப்பவரை என்னவெல்லாம் தாஜா செய்து அவர் எழுப்புகிறார் பாருங்கள். 


முதல் 14 பாசுரங்களில் பெண்களை எழுப்பியவர் இந்த 15 ஆம் நாள் பாசுரத்தில் தூங்கும் பெண்ணிடம் பேசுவது போல எழுதியிருக்கிறார். பொதுவாகவே ஒருவரை ஒருவர் நன்கறிந்த பெண் தோழிகள் பேசிக் கொண்டால் அங்கு நக்கலும் நையாண்டியும் தெறிக்கும் அல்லவா!


இந்த பாசுரத்திலும் அது தெறிக்கிறது..


எழுப்பும் தோழியர் : அடியே கிளி போன்ற பெண்ணே.. எழுந்திரு.. நீ எவ்வளவு நேரம் தான் தூங்குவே?


படுத்திருப்பவள் : ஏய்ய் பேசாம இருங்கடி நானே வர்றேன்.. ஏன் எல்லாரும் சும்மா தொண தொணன்னு நச்சரிக்கிறிங்க?


எழுப்பும் தோழியர் : அடியே நிஜமாவே நீ பெரிய ஆளு தாண்டி.. நீ இப்படித்தான் பேசிக்கிட்டே மழுப்புவே, இதெல்லாம்  எங்களுக்கு முன்னாடியே தெரியும். உன் வாயில இருந்து எப்பவும் இந்த பதில் தானே வரும்.


படுத்திருப்பவள் : என்னது நானா? நீங்க எல்லாம் தாண்டி பெரிய ஆளுங்க, எனக்கு இதையெல்லாம் சொல்லித் தந்ததே நீங்க தானே, இதெல்லாம் நான் உங்ககிட்ட கத்துகிட்ட வித்தை தானே!


எழுப்பும் தோழியர் : பார்த்தியா எழுந்து வராம படுத்துகிட்டே சும்மா சீன் போட்டுகிட்டு இருக்கே. நீ சீக்கிரமா எழுந்து வாடி விரதம் இருப்பதை விட உனக்கு அப்படி என்ன பெரிய வெட்டி முறிக்கிற வேலை?


படுத்திருப்பவள்  : ம்ம்ம்.. அதை விடு நீங்க எல்லாருமா இங்க வந்துருக்கிங்க?


எழுப்பும் தோழியர் : சரிதான் ஒண்ணும் தெரியாத மாதிரி கேக்குறதைப் பாரேன். நாங்க எல்லாருமே வந்துட்டோம் தாயே! சந்தேகம் இருந்தா நீயே வந்து சரியான்னு எண்ணி பாத்துக்கோம்மா..


மதுராபுரியில் பெரும் யானையை வென்றவன், எத்தனை எதிரிகள் எதிர்த்தாலும் ஒற்றை ஆளாய் நேர் நின்று, அவர்களை அஞ்சி நடுங்கச் செய்பவன், எவரது அச்சுறுத்தலையும் தவிடு பொடியாக்கும் ஆயன், நம் மாயன்! 


அவரைப் போற்றிப் பாடத்தானே உன்னை எழுப்பறோம். நீ பிகு பண்ணாம முதலில் எழுந்து வா.. என்று இப்பாடலில் குறிப்பிடுகிறார். அன்று ஆண்டாள் கிளியோடு பேசினாரோ அல்லது தோழியரோடு பேசினாரோ இன்றைக்கும் இந்தக் கிளிப்பேச்சு கேட்கக் கேட்க எத்தனை இன்பம்.


மார்கழி 15ஆம் நாள் பாடல்...


எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோ

சில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்

வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்

வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக

ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை

எல்லாரும் போந்தாரோ போந்தார்போந்து எண்ணிக்கொள்

வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.



14 பாவை மொழி

14. உங்கள் புழக்கடை..





தமிழகத்தில் தாமரை அதிகம் மலர்ந்தது திருப்பாவையில் தான். பாசுரங்கள் எங்கும் செந்தாமரை, போதரி, கமலம், பங்கயம் என தாமரைகளை பல பெயர்களில் மலர விட்டு இருப்பார் ஆண்டாள்.. கமலக் கண்ணனைப் பாடும் போது கமலத்தை பாடாமல் இருக்க முடியுமா.? 


அதைத் தனது “தமிழிசை”யால் இனிமையாக மனமுருகப் பாடி இப்பாசுரத்தில் காவிக் கொடியையும் பறக்க விட்டிருக்கிறார் ஆண்டாள் எனும் தமிழிசை. ஆண்டாள் காலத்தில் வீட்டுக்கு பின் புறத்தில் குளம் அமைந்துள்ளது  


அங்கு செந்தாமரைகள் மலர்ந்தும் அல்லிகள் மொட்டாகவும் காணப்படுகிறது. மார்கழி மாதத்து சில்லென்ற நீர்.. ஆஹா வீட்டுக்கு வீடு நேச்சுரல் பாத்டப் இருந்த காலம் அது அந்த உறங்கும் பெண்ணை எழுப்புகிறார்..


பெண்ணே காலையில் சூரியன் உதிக்க தாமரை மலர்ந்து அல்லி கண் மூடி விட்டது, அதோ தமது வெண்ணிறப் பற்கள் மின்ன காவி அணிந்த துறவிகள் அவர்களின் ஆன்மிகக் கடனான சங்கினை முழங்க கிளம்பிவிட்டனர். 


உங்களையெல்லாம் நானே வந்து எழுப்புவேன் என ஜம்பமாக வாயாடிவிட்டு நீயே இப்படி தூங்கலாமா? இப்படி உறங்க உனக்கு வெட்கமாக இல்லை. எழுந்து வா நீளக் கைகள் இரண்டில் சங்கும் சக்கரமும் தரித்திருப்பாரே.. 


நம் தாமரைக் கண்ணனை அவரின் அழகை, அவர் பெருமையை வாயாரப்பாடலாம் வா.. மலர் மலர்வதை வாய் திறப்பு எனவும் மொட்டு மூடுவதை வாய் மூடி எனவும் ரசனையோடு ஆண்டாள் விளக்கியிருப்பதை பாருங்கள்.


இத்தனை நூற்றாண்டுகளுக்கு பின்னும் மனிதர்கள் திறந்த வாயுடன் ஆவலுடன் வரிசையில் ஏன் நிற்கிறார்கள்? தமிழிசையால் ஆண்டாள் நன்கு பிசைந்தே தந்தாலும் முகஞ்சுளிக்காமல் அந்தப் பாசுர கேக்கினை உண்பதற்கே..


மார்கழி 14 ஆம் நாள் பாடல்...


உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுனீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்

செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.


Friday, 26 December 2025

13 பாவை_மொழி

13. புள்ளின்வாய் கீண்டானை...




அர்த்தராத்திரி, நடுநிசி, மூன்றாம் ஜாமம், நள்ளிரவு, பின்னிரவு, அதிகாலை இப்படியேல்லாம் முன்னிரவு & பின்னிரவு நேரங்களைக் குறிப்பிடுகிறோம், விடிவதை வானில் வெள்ளி முளைத்தது எனக் கூறும் வழக்கம் இன்றும் தென் தமிழகத்தில் உள்ளது.


மதுரையில் சர்வ சாதாரணமாக காலையில “வெள்ளென” வந்துடுய்யா என்பார்கள் அதற்கு அதிகாலையில் வந்துவிடு என அர்த்தம். இன்று நாம் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் வைத்து இரவு பகலை கணிக்கின்றோம். 


பிற கோள்களின் உதய அஸ்தமன நேரங்களும் இன்றைய அறிவியல் முன்னேற்றத்தால் கண்டுபிடித்து வைத்து இருக்கிறோம். ஆனால் எந்த அறிவியல் முன்னேற்றமும் இல்லாத காலத்தில் ஆண்டாளின் வான சாஸ்திர அறிவைப் பார்த்து இன்றைய விஞ்ஞானம் வியந்து நிற்கிறது.


நிலவு மறைந்து சூரியன் உதித்தது, வெள்ளி முளைத்தது இப்படியெல்லாம் உவமை படுத்தி இருந்தால் அது எளிய உதாரணமாக இருக்கும். ஆனால் ஆண்டாள் அழகாக “வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று” என்கிறார். அதாவது வியாழன் கோள் உறங்கும் வேளையாம்! 


பூமியின் அதிகாலையே வியாழனில் இரவு என இன்றைய விஞ்ஞானம் சொன்னது பெரிதல்ல அதை அன்றே சொன்னவர் ஆண்டாள். மார்கழி 6 ஆம் நாள் பாசுரத்தின் முதல் அடியில் புள்ளும் சிலம்பினகாண் என்னும் அதே வார்த்தையை 13 ஆம் நாள் பாசுரத்தின் 5 வது வரியில்.. 


அப்படியே உபயோகிக்கிறார். கொக்கின் வடிவெடுத்து வந்த அசுரன் பகாசூரனின் வாயைப் பிளந்தவன், ராவணனின் பத்துத் தலைகளை கிள்ளியெறிந்தவன் அவன் புகழ்பாடி மற்ற பெண்கள் எல்லாம் நோன்பிருக்க சென்று விட்டனர். வெள்ளி முளைக்க வியாழன் மறையும் வேளை இது. 


கூட்டில் இருக்கும் பறவைகளும் சப்தம் எழும்புகின்றன போதரிக் கண்ணுடைய பெண்ணே (போதரிக் கண் என்றால் வண்டமர்ந்த தாமரைப்பூ போன்ற கண்களாம்! கரு விழிகளை வண்டாகவும் அவள் முகத்தை தாமரையாகவும் உவமைப் படுத்துகிறார் ஆண்டாள். 


இம் மார்கழி நன்னாளில் எங்களோடு வந்து குளிரக்குளிர குளிக்காமல் ஏன் இப்படிப் பள்ளி கொண்டு உறங்குகிறாய்? நீ உறங்குகிறாயா அல்லது கள்ளத்தனமாக உறக்கம் வருவது போல நடிக்கிறாயா.? எங்களுடன் வந்து சேர்ந்து கொள் எம்பாவாய் என செல்லமாகவும்..


உறங்குபவளை அதட்டுகிறார் ஆண்டாள். ஆண்டாளின் திருப்பாவை ஒரு டூ-இன்- ஒன் அதில் தான் இராமாயணம் மகாபாரதம் இரண்டையும் ஒன்றாகப் படிக்கலாம்.


மார்கழி 13 ஆம் நாள் பாடல்...


புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் 

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்

குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே

பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்நாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.


Thursday, 25 December 2025

12 பாவை மொழி

12. கனைத்து இளம் கற்றெருமை..





நினைத்தவுடன் நடந்துடும்னு எதிர்பார்க்காதே, நீ நினைச்சா மட்டும் அது நடந்துடுமா? நாம நினைச்சிகிட்டே இருந்தா செய்யறது யாரு? இவையெல்லாம் ஒரு செயலைச் செய்யாமல் நினைத்துக் கொண்டிருப்பவர்களை பார்த்து நாம் கேட்பது..ஆனால் தாய்ப்பாசம் அப்படியல்ல! 


மனதால் நினைத்தாலே போதும்.அதனால் ஏற்படும் விளைவுகள் தானே நடக்கும். அது மனிதனோ விலங்கோ அனைவருக்கும் பொதுவானது என்கிறார் நமது ஆண்டாள்.  பிரசவ வார்டில் நள்ளிரவில் அன்று தான் குழந்தையை பிரசவித்த அலுப்பால் அயர்ந்து உறங்குகிறாள் ஒரு தாய். 


அங்கிருக்கும் அத்தனை குழந்தைகளில் தன் குழந்தையின் அழுகுரல் கேட்டால் மட்டும் சட்டென உறக்கம் கலைந்து எழுவார். இது இயற்கை மனிதனுக்கு அளித்த வரம்! இந்த வரத்தை இறைவன் மனிதர்களுக்கு மட்டும் இன்றி விலங்குகளுக்கும் அளித்துள்ளது தான் சிறப்பே. 


ஆறறிவு, ஐந்தறிவு எனப் பாகுபாடு வைத்தவன், தாய்ப் பாசத்தில் மட்டும் அதை வைக்கவில்லை. வெளியூரில் தங்கி படிப்பவர்கள், வேலை பார்ப்பவர்கள் தங்கள் அம்மாவை நினைக்கும் அதே வேளையில் அவர்கள் அம்மாவிடமிருந்து அவர்களுக்கு தொலைபேசி அழைப்பு வரும்! 


இதுபோல பலருக்கு நடந்துள்ளது. மனிதன் எதையும் சாதிக்க நம்மைப் பெற்ற அம்மாவின் குரல் ஒன்று போதும். அதுவே உலகின் ஆகப்பெரும் புத்துணர்வு சக்தியாகும். இது போல நூறு மடங்கு சக்தி தன் பிள்ளைகளின் குரல் கேட்டால் தாய்க்கு வரும் என்பதே மெய்! அதெல்லாம் சரி! 


பிள்ளைகளின் குரல் கேட்டால் பாசம் பொங்கும் ஆனால் பால் பொங்குமா? பொங்கும் என்கிறார் ஆண்டாள்! இந்தப் பாசுரத்தில் தம் கன்றுகளின் குரல் கேட்ட நொடியில் எருமைகள் தாய்ப்பாசத்தில் உருகி தம் மடியில் இருந்த பாலை யாரும் கறப்பதற்கு முன் தாமாகவே சுரக்கின்றன! 


அப்படிச் சுரந்த பால் வீடெங்கும் வெள்ளமென ஆறாகப் பாய்ந்து அந்த வீடே வெண்ணிற பால் சகதியாக உள்ளது. இவ்வளவு பால் செல்வம் மிக்க, வீட்டிலேயே பாலாறு பாயும் செல்வந்தனின் தங்கையே! மார்கழி மாதத்து அதிகாலை பனித் துகள்கள் எங்கள் தலைமீது படிந்திருந்தாலும்..


நாங்கள் உன் வீட்டருகே வந்து உனக்காக நிற்கின்றோம். ஒற்றைத் தலை கொண்டு பத்துத் தலை இராவணனை வதம் செய்த எங்கள் ‘தல’ ராமன் பேர் பாடுகிறோம்! வா நீயும் வந்து பாடு,  எழுந்து வந்து கதவைத்திற.. ஏனிந்த பெரும் தூக்கம்? நீ இன்னும் எழவில்லை என்பது..


அக்கம் பக்கம் வசிக்கும் எல்லார்க்கும் தெரிந்துவிட்டது. பெருமாளைப் பாடுவதை விடவா இந்தத் தூக்கம் முக்கியம் எழுந்துவா பெண்ணே. இந்தப் பாசுரத்தில் நாம் நுகர்வது பாலின் மணத்தை மட்டுமல்ல.. ஆண்டாள் கண்ணன் பால் கொண்ட காதலின் மணத்தையும் தான்! 


ஆம் அது கறந்த பாலைப் போல் அவ்வளவு தூய்மையானது! 


மார்கழி 12ஆம் நாள் பாடல்..


கனைத்துஇளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி 

நினைத்து முலைவழியே நின்றுபால் சோர 

நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் 

பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச் 

சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற 

மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய்

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம் 

அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்



11 பாவை மொழி

11 கற்றுக் கறவை கண்டங்கள்..




“எற்றுக்கு உறங்கும்” என்றால் அதன் அர்த்தம் அசைவே இன்றி படுத்துக் கிடப்பதாகும். பாம்புகளும், முதலைகளும் மட்டும் தான் உயிர் இருந்தும் அசையாமல் உறைந்தது போல கிடக்கும். கிடத்தல் என்றாலே படுத்து இருப்பது தானே! கிடந்த கோலத்தில் இருக்கும் திருவரங்கன் மீது பெரும் மையல் கொண்டவளுக்கு அது தெரியாதா என்ன. 


அந்தப் பாம்பை அசைவின்றி இருப்பதற்கு மட்டுமல்ல அப்பாம்பின் படம் போல விரியும் அழகிய இடுப்பினையும் இங்கு உதாரணமாகச் சொல்லி உறங்குகின்ற அப்பெண்ணை எழுப்புகிறார் ஆண்டாள். இடைக்கு ஏன் பாம்பின் படத்தை உதாரணமாக சொல்ல வேண்டும்? ஆண்டாள் வர்ணனைப் பேரரசி! சினிமா பாடல் ஆசிரியர்கள் எழுதுவார்களே..


“இடையோ இல்லை இருந்தால், முல்லைக் கொடி போல் மெல்ல அசையும்.. இல்லாதது போல இருக்குமாம், இல்லை என்றாலும் அது இருக்குமாம்.  புரியலையா? அட இருங்க.. ஆண்டாள் அதற்கு இப்பாடலில் சொல்லும் உவமையைப் பாருங்க, நாகத்தின் தலை சாதாரணமாகத் தான் இருக்கிறது. ஆனால் அது படம் எடுக்கும் போது அந்தத் தலை..


சடாரென விரிகிறதல்லவா. அது போல குறுகி விரியும் அழகிய இடுப்பைக் கொண்டவளே என்று வர்ணிக்கிறார்! இல்லாதது போல இருக்கின்ற இடைக்கு இது நல்ல உவமை தானே, இருக்கு ஆனா இல்லன்னு SJ சூர்யாவுக்கு சொல்லும் முன்பே ஆண்டாள் சொல்லிவிட்டார். செல்வந்தன் பெற்ற செல்வியே, பாம்பின் படம் போல வளைந்த மெல்லிடையாளே


உன் அக்கம் பக்கத்து தோழியர் நாங்கள் உன் வீட்டு முற்றம் வரை வந்து நிற்கின்றோம். அந்த கார்வண்ணன் புகழைப் பாடுகின்றோம். நீ அசைவின்றி தூங்குவது நியாயமா? மயில் போன்ற பெண்ணே எழுந்திடு, அந்த மணிவண்ணன் புகழ் பாடிடு. நீ ஆயர் குலத்தில் வந்து பிறந்த தங்கக்கொடி..


நீ பிறந்த ஆயர் குலம், குற்றமில்லாத குலம். கறவை மாடுகளிடமிருந்து பாலை கறப்பதும், தமக்கு பகை செய்யும் பகைவர் குலத்தின் வேர் அறுப்பதும் அவர்களின் சிறப்பு. அந்த வீர குலத்தில் பிறந்த நீ இப்படிக் கிடந்து  உறங்கலாமா? இதுவா உன் நோக்கம்? தேவையா இந்தத் தூக்கம்? தூங்கியது போதும் பெண்ணே எழுந்துவா! எனப்பாடுகிறார். 


ஆண்டாள் பாடினாள் அவள் தமிழில் அசைவற்றுக் கிடக்கும் பாம்புகள் கூட எழுந்துவந்து ஆடுமல்லவா! 


மார்கழி 11ஆம் நாள் பாடல்...


கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றம்ஒன் றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே
புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வபெண் டாட்டிநீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.


#திருப்பாவை

#ஆண்டாள்

#மார்கழி

#ஶ்ரீவில்லிப்புத்தூர்

#பாவை_நோன்பு



Wednesday, 24 December 2025

10 பாவை மொழி...

10 நோற்றுச் சுவர்க்கம்..




வார்த்தை தவறிவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிடும். “வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா “என்று பாரதி பாடுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆண்டாள் பாடி விட்டார். தமிழ் ஒரு செறிவான செழுமையான செம்மொழி. 


இதிலுள்ள சொற்களில் ஒரு எழுத்து இல்லை ஒரு துணைக் கால், அல்லது ஒரு மூன்று சுழி எழுத்து அவ்வளவு ஏன் சொற்களுக்கு நடுவே வரும் நிறுத்தற் குறியை எடுத்தால் கூட அதன் அர்த்தம் மாறிவிடும். 


இன்றைக்கும் பல அரசியல்வாதிகள் மேடைகளில் வாய் குழறிப் பேசி அது மீம்ஸ் விடியோக்களாக வைரல் ஆகி வருவதை நாம் அறிவோம். ஆனால் இராமயண காலத்திலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. 


ஆம்! அன்று எமதர்மனை மனமுருக வேண்டித் தவமிருந்த கும்பகர்ணன் வரத்தை தன் வாய் தவறிக் கேட்டு தூக்கத்தையே வரமாக பெற்றானாம். அதன் பின் அவன் வாழ்நாள் முழுவதும் தூங்கியே கழிந்ததாம். 


அவனை எழுப்புவது என்பது ஒலிம்பிக்கில் இந்தியா தங்கப்பதக்கம் வாங்குவது போல அரிது. அப்படிப்பட்ட கும்பகர்ணனிடம் இருந்து பெரும்தூக்கத்தை நீயும் கடனாக வாங்கி தூங்குகிறாயோ என்று ஐயம் எழுப்புகிறார் ஆண்டாள்! 


ஆம் நல்லத் தூக்கம் என்பது வரம்,ஆனால் அதையே கும்பகர்ணன் பெறுவது போல் பெற்றால் அது நீ பெறுகின்ற பெரும் சாபம், சொர்க்கம் செல்வதற்காக விரதமிருக்கும் பெண்ணே நீ இப்படி ஆழ்ந்து உறங்கலாமா? 


நறுமண துளசியை மாலையாய் அணிந்திருக்கும் நம் நாராயணனை வந்து பாடிட மூடிக் கிடக்கும் உன் வாசலை திறந்துவிடு, அல்லது உன் வாய் திறந்தாவது ஒரு சொல் சொல்லிவிடு. அவனைப் போற்றிப் பறை பெறவேண்டும் என்றால் அதற்கு உன் அறை திறக்கவேண்டுமல்லவா! 


இப்படியா நீ கும்பகர்ணனுடன் போட்டி போட்டுத் தூங்குவது? வா.. வந்துக் கதவைத் திற என்கிறார். ஆண்டாள் இப்படி இன் தமிழில் பாடி எழுப்பினால் அந்த கும்பகர்ணனே கூட எளிதாக தூக்கத்திலிருந்து எழுந்து வருவான் போலத் தோன்றுகிறது! 


மார்கழி 10 ஆம் நாள் பாடல்..


நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்

நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்

போற்றப் பறைதரும் புண்ணியனால்

பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த

கும்ப கருணனும் தோற்றும் உனக்கே

பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற

அனந்தல் உடையாய் அருங்கலமே

தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.



Tuesday, 23 December 2025

9 பாவை மொழி

9. தூமணி மாடத்து..


#பாவை_மொழி


சினிமாவில் புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர்கள் படமாக்கும் காட்சிகள் கலைநயம் மிக்கதாக இருக்கும். அதற்கு முக்கியக் காரணம் காட்சிகளுக்கேற்ற அழகான லைட்டிங்! படபிடிப்பில் இயற்கையாகவோ, செயற்கையாகவோ ஒளியை உருவாக்குவதன் மூலம் அந்தக் காட்சியை மெருகு ஏற்றுவார்கள். ஆண்டாளும் ஒரு ஒளிப்பதிவாளர் தான்.


ஆம்! ஆண்டாள் இப்பாடலில் நம் கண்முன்னே படமாக விரியும்படி எப்படி லைட்டிங் அமைக்கிறார் பாருங்கள் (வைட் ஆங்கிளில்) ஒரு வீடு இருளும் ஒளியும் கலந்த அதிகாலை நேர லைட்டிங் வீட்டில் ஒரு அழகான விளக்கு மாடம், அங்கு மணிகளுடன் வெண்ணிற திரைச் சீலைகள் அசைய அதனைச் சுற்றி அலங்காரமான விளக்குகள் எரிகின்றன. 


அறை முழுதும் மணம் கமழும் சாம்பிராணிப் புகை  பரவிக் கிடக்க, காமிரா பார்வேர்டில் ஜூம் ஆகிறது. இலவம் பஞ்சு மெத்தையில் சுகமாக அயர்ந்து உறங்கிக் கொண்டு இருக்கிறாள் ஒருத்தி. அப்படியே இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பார்த்தால்.. அடடா..! ஒரு ஷங்கர் அல்லது மணிரத்னம் படத்தின் காட்சி போல இருக்கிறதல்லவா.


ஆண்டாள் ரசனை ராணி.. அவளது அழகியல் மிகுந்த பார்வை பாசுரங்களின் பல இடத்தில் பிரதிபலிக்கும் வார்த்தைகளிலேயே இந்தக் காட்சியை வர்ணித்து அமைத்த அவள் திறனைப் பாருங்கள், வளமானகற்பனை, ஆழ்ந்த ரசனை, கண்ணன் மேல் கொண்ட அளவிலாக் காதல் அத்தனையும் இந்தக் காட்சிகளாக நம் கண்முன் விரியும்.


இங்கே இந்த காட்சியை நிறுத்திவிட்டு அடுத்த ஷாட் அப்படியே கதவிற்கு இந்தப்பக்கம் நாம் மாற்றுவோம்.. அங்கே தினமும் இந்த வீட்டிற்கு வரும் அப்பெண்ணின் தோழிகள் கதவுக்கு வெளியில் இருந்து இவளை கூப்பிட்டு எழுப்புகிறார்கள். “மாமன் மகளே என்ன உறக்கம்? உன் வீட்டின் மணிக் கதவை திறந்துவிடு அட மாமியே..


நீ உன் மகளை எழுப்ப மாட்டாயா? உன் மகள் என்ன பேசா மடந்தையா? செவித்திறன் அற்றவளா? இல்லை மயங்கிக் கிடக்கிறாளா? அல்லது யாராவது அவளை மந்திரத்தால் மயக்கி விட்டார்களா? மாயவர்களுக்கு எல்லாம் பெரிய மாயன், மாதவன்,வைகுந்தன் என்று அவன் பல நாமங்களை சொல்லிப் பாடுவோம் அவளை சீக்கிரம் எழுப்பு.! 


ஆண்டாள் இது போல வர்ணித்துப் பாடி கூப்பிட்டு நம்மை எழுப்பினால், அதற்காகவே நன்கு தூங்கலாம் போல..


மார்கழி 9 ஆம் நாள் பாடல்.


தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்

தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்

மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்

மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்

ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

நாமன் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.


#திருப்பாவை

#ஆண்டாள்

#மார்கழி

#ஶ்ரீவில்லிப்புத்தூர்

#பாவை_நோன்பு


இதன் ஒலி வடிவத்தை உமா மகியின் “பேச்சு வாக்குல” யூடியூப் சானலில் கேட்கலாம். அதன் லிங்க் கீழே கமெண்ட்டில்…


8 பாவை மொழி

8. கீழ்வானம் வெள்ளென்று...


#பாவை_மொழி


கண்ணன் புரிந்த லீலைகளில் அவன் ஆ வென்று வாய் பிளந்த போது அவனது அன்னைக்கு அன்று உலகில் உள்ள எல்லாம் தெரிந்தது ஆம் அது தான் உலகின் முதல் கூகுள்! காட்டியது நம் கோகுல்!ஆ வென்றால் பசுக்கள் என்றும் அர்த்தம் அந்தப்பசுக்கள் பாலைப் பொழிவது போல அவன் பக்தர்களுக்கு அன்பைப் பொழிவான்..


தேர்தலில் அந்தந்த கட்சிகளின் சக்திக்கு ஏற்றபடி 

செலவு செய்வது போல நம் வேண்டுதலுக்கு ஏற்றபடி அதை ஆராய்ந்து அருள்பவன் அவன். நம்மை ஆ வென்று அழைத்து ஆட்கொள்வான் கண்ணன். பெண்கள் குளிக்கையில் எட்டிப் பார்த்து குறும்புகள் செய்த முதல் கவர்னர் அவனல்லவா!


அவனைச் சேவிக்க என்ன செய்யவேண்டும்? உறங்கும் பெண்ணே பார் கீழ் வானம் விடிந்துவிட்டது எருமைகள் புல் வெளியில் பரந்து மேய்கின்றன.. பாவை விரதம் இருக்கின்ற இடத்திற்கு பலர் போய்விட்டனர் சிலர் அங்கு கிளம்பத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களை தடுத்து நிறுத்தி உன் வீட்டு வாசலில் நிற்கின்றோம்.


நீ எழுந்து வா.. குதிரையாக உருமாறி வந்த கேசி என்னும் அரக்கனின் வாயைப் பிளந்தவன்.. சாணுகன் முஷ்டிகன் என்ற இருமல்லர்களை கோதாவில் வீழ்த்தியவன்.. தேவாதி தேவன் அவன்.. அவனை சேவிப்போம் அப்போது தான் அவன் வா வென்று அழைத்து நம்மை அருள்வான். தன்னை வணங்குபவனை அருள்வது கடவுளின் குணம். 


ஆனால் நம்மை வா வா என்றழைத்து அருளும் கடவுள் இருக்கிறாரா.! கண்ணன் இருக்கிறான் என்கிறார் ஆண்டாள். அவருக்கு கண்ணனின் அருள் வருகிறதோ இல்லையோ ஆண்டாள் ஆ வென்று அழைத்தால் கண்ணனே வருவான் போல.!


மார்கழிப் பாடல் - 8


கீழ்வானம் வெள்ளென்று எருமைசிறுவீடு

மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ளபிள்ளைகளும்

போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை

கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய

பாவாய்! எழுந்திராய் பாடிப்பறை கொண்டு

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்

ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.


#திருப்பாவை

#ஆண்டாள்

#மார்கழி

#ஶ்ரீவில்லிப்புத்தூர்

#பாவை_நோன்பு


இதன் ஒலி வடிவத்தை உமா மகியின் “பேச்சு வாக்குல” யூடியூப் சானலில் கேட்கலாம். அதன் லிங்க் கீழே கமெண்ட்டில்…

7 பாவை மொழி

7.கீசு கீசு என்று...




ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வரும் பாடல்களில் சில தனித் துவங்கள் இருக்கும். அதற்குக் காரணம் பாடல் ஒலிப்பதிவு முடிந்ததும் அவர் சேர்க்கும் சில பின்னிணைப்பு ஒலி வடிவங்கள் இதற்கு நிறைய பாடல்களை உதாரணம் கூறலாம்.


கருத்தம்மா படத்தில் “பச்சக்கிளி பாடும் ஊரு” பாடலில் வரும் கோழி, ஆடு, மாடு சப்தங்கள் ஒரு உதாரணம்.. இசைப் புயல் ரஹ்மான் என்றால், இசைச் சுனாமி ஆண்டாள். ஆம் தனது பாசுரங்களில் எழுத்திலேயே சவுண்ட் எஞ்சினியர் ஆனவர்.


ஒரு அதிகாலையை சூரியன் எழுவது, சேவல் கூவுவது, கோலம் போடுவது.. இப்படி காட்சியாகக் காட்டலாம் இதெல்லாம் விஷுவல், ஆனால் ஆண்டாள் சவுண்ட் எஃபெக்டில் அதிகாலையை விவரிக்கிறார். இப் பாசுரத்தில் அவர் கோத்த இசை ஒலிகளைக் கேளுங்கள்.


ஆண்டாள் காலத்து விடியலே பல சப்தங்கள் கலந்து ரசனையோடு விடிகிறது. கீசு கீசுவென ஆனைச் சாத்தான் குருவிகள் கத்த, வாசமிகு கூந்தலுள்ள ஆயர் பெண்கள் தயிரை கடைகிறார்கள். மண் சட்டியில் அதைக் கடையும்போது எழும் சப்தத்தை பேரரவம் என்கிறார். 


பஞ்சாப் அரியானா பகுதிகளில் இன்றும் லஸ்ஸி கடைகளில் வாஷிங் மெஷின் வைத்து லஸ்ஸி கடையும் போது ஒரு இரைச்சல் கேட்கும். தயிர் கடையும் போது பேரிரைச்சல் எனில் ஆயர்பாடியின் அபாரமான பால்வளத்தை அறியலாம்.


தயிர் கடையும் மத்தை ஆச்சியர் முன்னும் பின்னும் இழுக்கும் போது அப்பெண்களின் உடல் அசைய அவர்கள் அணிந்துள்ள அணிகலன்களான கலகலவென ஒலிக்கும் கழுத்துத் தாலியும், காசுமாலையும் ஒன்றொடு ஒன்று மோதும் சத்தம்.. 


இவற்றோடு கேசவனின் புகழை நாங்கள் பெருங்குரலெடுத்து பாடி வருகிறோம்.. இத்தனை சப்தங்களுமா உன் காதில் விழவில்லை? இல்லை கேட்டும் கேட்காதது போல படுத்துக் கொண்டு இருக்கின்றாயா பேய்ப் பெண்ணே (ஆண்டாள் காலத்து பக்கி)


இவ்வளவு சத்தங்களிலும் தூங்குகிறாய் என்றால் நீ மனுஷியே இல்லை பேய் தான் இப்படித் தூங்கும்.. என கோபமாகச் சொல்கிறார்.. ஆனால் நிஜத்தில் பேய்ப் பெண் ஆண்டாள் தான். கண்ணன் மேல் ப்ரியம் கொண்டு பேய் போலத் திரிந்தவள் அவள் தானே.!


மார்கழி 7ஆம் நாள் பாடல்..


கீசுகீசு என்றுஎங்கும் ஆனைச்சாத் தன்கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து

வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ

நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி

கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ

தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்.


#திருப்பாவை

#ஆண்டாள்

#மார்கழி

#ஶ்ரீவில்லிப்புத்தூர்

#பாவை_நோன்பு


இதன் ஒலி வடிவத்தை உமா மகியின் “பேச்சு வாக்குல” யூடியூப் சானலில் கேட்கலாம். அதன் லிங்க் கீழே கமெண்ட்டில்…


6 பாவை மொழி

6. புள்ளும் சிலம்பின.




பறவைகள் இடும் சப்தத்தை புள்ளும் சிலம்பின என்கிறார் ஆண்டாள். இன்றும் மதுரைத் தமிழில் சலம்புவது என்றால் சத்தம் இடுவது என அர்த்தம். இந்த சிலம்புவது தான் சலம்புவதாக மருவியிருக்கும் என்று எண்ணுகிறேன்.!


சிலப்பதிகாரத்தில் கண்ணகி மதுரையை எரிந்து சாம்பல் ஆகட்டும் என்று  சாபமிட்டுவிட்டு அடடா இப்படி கண் மூடித் தனமாக சாபமிட்டு விட்டேனே என வருந்தி இந்தத் தீ யார் யாரையெல்லாம்  மெதுவாகப் போய் பற்ற வேண்டும் என..


திருத்தி ஒரு பட்டியல் தருவார் முதியவர்கள், ஊனமுற்றோர், குழந்தைகள், நோயுற்றவர்கள் என நீளும் அந்த பட்டியலில் இவர்களையெல்லாம் “பையவே சென்று பற்றிடுக என அக்னி பகவானுக்கு ஆணையிட்டு இருப்பார்.


இன்றும் மதுரையில் மெதுவாக என்பது “பைய போ” என்றே பேச்சு வழக்கில் உள்ளது.. சிலப்பதிகாரத் தமிழ், திருப்பாவைத் தமிழ் இவையெல்லாம் தென் தமிழகத்தில் இன்றும் பேசப்படுவது நம் தமிழ் மொழியின் சிறப்பு.


இன்றைய பாசுரத்திற்கு வருவோம்.. எழுந்திருங்கள் பெண் பிள்ளைகளே பறவைகள் கீச்சிடும் அதிகாலையில் கோவிலின் வெண்சங்கு முழங்கும் ஒலி உங்களுக்கு கேட்கவில்லையா.? கண்ணன் பூதகியிடம் பால் குடித்துஅவளைக் கொன்றது,


சகடனை காலால் நிறுத்திக் கொன்றது, பாம்பின் மேல் உறங்கியது என தான் சேர்ந்த கட்சியின் தலைவரை வஞ்சனையின்றி புகழும் நாஞ்சில் சம்பத் போல கண்ணனின் பெருமைகளைப் புகழ்ந்து இறுதியில் இப்படி முடிக்கிறார். 


நமது மனதில் நாரணனை நினைத்து சங்கின் நாதம் போல முனிவர்களும் யோகிகளும் அரி என்று உச்சரிக்கும் பேரொலியைக் கேட்டால் அது நம் காது வழியே மனதிற்குள் சென்று நம்மை குளிரச் செய்யுமாம். அதை கேட்கவாவது எழுந்து வாருங்கள் என்கிறார்ஆண்டாள். 


அரவம் என்றால் சப்தம் என்றும் பாம்பு என்றும் இரு பொருளுண்டு, அரவத்தின் மீது துயில் கொண்டிருக்கும் அரியின் நாமத்தை உச்சரிக்கும் அரவத்தைக் கேட்கப் போகவில்லை என்றாலும்.. நாம் ஆண்டாளின் இனிய பாசுரத்தைக் கேட்க எவ்வளவு அதிகாலையிலும் அரவத்தோடும் ஆர்வத்தோடும் எழுந்து வரலாம்.


மார்கழி 6ம் நாள் பாடல்...


புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?

பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு

கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி

வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ள வெழுந்து அரியென்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!


#திருப்பாவை

#ஆண்டாள்

#மார்கழி

#ஶ்ரீவில்லிப்புத்தூர்

#பாவை_நோன்பு


இதன் ஒலி வடிவத்தை உமா மகியின் “பேச்சு வாக்குல” யூடியூப் சானலில் கேட்கலாம். அதன் லிங்க் கீழே கமெண்ட்டில்…


5 பாவை_மொழி

5. மாயனை மன்னு..





பொதுவாக நமக்கு பிடித்தவர்களுக்கு ஒரு பட்டப் பெயர் வைப்பது இயல்பு. சிலநேரம் வேடிக்கையாக நாம் வைத்த அந்தப் பெயரே அவருக்கு நிலைத்துவிடும். சிலருக்கு பெரிய தலைவர்களாலும், மக்களாலும் பட்டப்பெயர் சூட்டப்பட்டு காலாகாலத்திற்கும் அந்தப் பெயரே நிலைக்கும். அவருடைய உண்மைப் பெயரே மறந்துவிடும்.


உதாரணமாக தந்தை பெரியார் ‘சிவாஜி’ கணேசன் என்று நடிகர் திலகத்தை அழைத்து கவுரவித்தார். அதன் பின் அவர் பெரும்பாலும் கணேசனாக அழைக்கப்படாமல் சிவாஜியாகவே வாழ்ந்து புகழுடம்பு எய்தினார். இப்படி வைக்கப்படும் பெயர்களே, கால காலத்திற்கும் நிலைக்கும் ஆண்டாள் இந்தப் பாசுரத்தில் இதையே பாடுகிறார். 


தனது உள்ளத்தில் வைத்து பூஜிக்கும் கண்ணனுக்கு ஆண்டாள் தரும் பட்டங்களைப் பாருங்களேன் மாயக் காரன், வடமதுரைச் செல்வன், யமுனைத் துறைத் தலைவன், ஆயர்குல அணிவிளக்கு என்றெல்லாம் அவரை விளித்துவிட்டு, முத்தாய்ப்பாக ஒரு தலைவனே அசந்து வியந்து போவது போல அவனை இப்படி விளிக்கிறார்.


 நீ உன் தாய் வயிற்றுக் குடலினை தூய்மை செய்த குலவிளக்கு என்று! தாமோதரனைப் பெற்றதால் அவரது தாயின் வயிறு பரிசுத்தம் அடைந்ததாம்! அரசியலில் கொஞ்சம் கூட தகுதியில்லாத தங்கள் தலைவனைப் போற்றி, வெறும் புகழ் மொழியை மட்டும் தந்து அமைச்சர் பதவியைப் பெறும் இக்கால அரசியல்வாதிகளைப் போல் இல்லாமல்..


தன் மனமுவந்து இந்தப் பட்டங்களை எல்லாம் எந்த பிரதிபலனும் பாராது பெருமாளுக்கு சூட்டி மகிழ்கிறார் ஆண்டாள், மாயக் கண்ணனின் நாமத்தைச் சொல்லி பரிசுத்தமான இதயத்துடன் அவரை பூத்தூவி வணங்கினாலே நாம் செய்த தீமைகள் மட்டுமின்றி, நாம் செய்யவிருக்கும் தீய எண்ணங்கள் கூட தீயிலிட்டது போல் பொசுங்கிவிடும்! 


அவன் நம் பிழைகளை மன்னித்து பிழைக்க வைப்பான். அது ஒன்றே போதும் வேறென்ன வேண்டும். அவனை வேண்டுவது ஒன்றே வேண்டும் என்கிறார். இத்தனை நூற்றாண்டுகள் கடந்தும் இந்தப் பெயர்களில் தானே அனைவரும் அவனை வழிபடுகிறோம். ஆம் தூய மனதோடு ஆண்டாள் அழைத்த பெயர் ஆண்டாண்டுகள் வாழும்.!


மார்கழி 5 ஆம் நாள் பாடல்..


மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்

தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்

தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.


#திருப்பாவை

#ஆண்டாள்

#மார்கழி

#ஶ்ரீவில்லிப்புத்தூர்

#பாவை_நோன்பு

5ஆம் நாள் பாடல் லிங்க் 👇🏿


Wednesday, 17 December 2025

4 பாவை மொழி

4. ஆழிமழைக் கண்ணா.. 




மழை உலகிற்கு இயற்கை அளிக்கும் கொடை, ஏன் இந்த உலகமே உருவானது மழையால் தானே! அக்னி மழை, அமில மழை, தூசு மழை, இப்படிப் பல மழைகள் பல நூற்றாண்டுகளாகப் பெய்து பெய்து உருவானது தானே இந்த பூமி. மழை எப்போதும் மகிழ்ச்சியைத் தரும். 


ஆயிரம் புயல்கள் வீசி அதன் பாதிப்புக்கு நாம் அஞ்சினாலும் பேரிடர் தராத மழையை விரும்பாதவர்கள் யார்? தமிழ் சினிமாக்களில் கூட மழைப்பாடல்கள் பிரசித்தம். கதாநாயகி அறிமுகமே மழையில் நனைந்து ஆனந்தமாக துள்ளி ஆடும் பாடலாக, காதல் பாடலாக பல மழைப்பாடல்கள் உள்ளன.


ஆனால் நம் நாச்சியார் எழுதிய இந்த மழைப்பாடல் அறிவியலும் ஆன்மீகமும் கலந்த தனித்துவம் மிக்க பாடல். திருப்பாவையில் மழை பற்றிய இந்த பாசுரத்தை மொழி பெயர்த்து வெளிநாட்டவரிடம் சொன்னால் மிக மிகச் சாதாரணமாக இது உலகில் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தானே என்பார்கள். 


அவர்களிடம் இது 1100 வருடங்களுக்கு முன் தென் தமிழகத்தின் ஒரு சிற்றூரான ஶ்ரீவில்லிப்புத்தூரில் வாழ்ந்த ஒரு இளம்பெண் எழுதியது என்று சொல்லிப் பாருங்கள். அவர்கள் வியப்பில் உறைந்து போவார்கள்! மழை எவ்வாறு உருவாகிறது என்பதை அன்றே சிந்தித்துச் சொன்னார் ஆண்டாள். 


இந்த காலத்து மக்கள் இருந்திருந்தால் “வெதர் உமன்” என்று அவர் போற்றப்பட்டிருக்கலாம். இந்த மழையை வர்ணிக்கும் போதும் கூட அவர் பெருமாளை ஒப்பிட்டு வர்ணிக்கிறார் எனும் போது அவருக்குள்ளே மேகமாய், மின்னலாய், இடியாய், மழையாய் அரங்கனே இருக்கிறார். பாருங்களேன்..


கண்ணனின் கரிய நிறத்தை மேகமாகவும், அவரது சுதர்சன சக்கரத்தை மின்னலாகவும், அவரது பாஞ்சஜன்யம் எனும் சங்கின் முழக்கத்தை இடியாகவும், அவரது சாரங்க வில்லில் இருந்து சீறிப்பாயும் அம்பைமழையாகவும் ரசனையோடு வர்ணிக்கிறார். 


நீர் கடவுளான வருணனை அழைத்து நீ கடலில் இறங்கி அந்நீரை கவர்ந்து அள்ளிக்கொண்டு மேகமாக மாறிவிடு. பின்னர் மின்னலாய் மின்னி இடியாக ஒலித்து பெரும் மழையாக பொழிந்திடுவாய் எனப் பாடுகிறார். மழை பொழிவது நாட்டிற்கு செழிப்பு நீ பெய்தால் செழுமை பொங்கும்.. எங்கும் மகிழ்ச்சி தங்கும்.. 


அந்த மகிழ்ச்சியில் நாங்கள் எங்கள் பெருமானை நினைத்து, துதித்து மார்கழி நீராடி மகிழ்வோம் என்கிறார் குளிர்ந்த மனதுடன்.எப்படி அன்றே மழை பொழிவதை இவ்வளவு துல்லியமாக ஆண்டாள் கணித்தார் என்று பலர் வியக்கிறார்கள்! 


ஆனால் என்னிடம் யாராவது இந்தக் கேள்வியை கேட்டால் சொல்வேன் “பத்மநாபன் மேல் தீராத மையல் கொண்ட மயில் இந்த ஆண்டாள்.. அந்த மயிலுக்கு மழை வருவது தெரியாதா என்ன.! 


மார்கழி 4 ஆம் நாள் பாடல்..


ஆழிமழைக்கண்ணா!ஒன்று நீ கைகரவேல்;

ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்

பாழியம் தோளுடைய பற்பநா பன்கையில்

ஆழி போல் மின்னி,வலம்புரி போல நின்றதிர்ந்து,

தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்

வாழ உலகினில் பெய்திடாய்,நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.


Tuesday, 16 December 2025

3 பாவை மொழி

3. ஓங்கி உலகளந்த உத்தமன்…



வருடத்தில் ஏதாவது ஒரு மாதத்தில் நல்ல மழை பெய்தாலே நமது ஊர்கள் தண்ணீரில் மிதக்கின்றன. மாதம் 3 முறை மழை பெய்தால் என்ன ஆகும்? தெருவுக்குள் கடல் போல நீர் தேங்கும், எல்லா வீட்டிலும் நீச்சல் குளம் தோன்றும், கரண்ட் இருக்காது, நெட் வேலை செய்யாது, பால் தட்டுப்பாடாகும், மெழுகுவர்த்தி கிடைக்காது..


கழிவு நீர் பெருக்கெடுக்கும், நமது பைக் & கார்கள் நீரில் மூழ்கிப் பழுதாகும், படகுகள் தேவைப்படும், கொசுத் தொல்லை அதிகரிக்கும், காய்ச்சல், கண் வலி வரும், சமூக ஆர்வலர்களால் தண்ணீர் பாட்டில் உணவுப் பொட்டலம் வீடு தேடி வரும். EMI கவலை வாட்டும் தற்காலிகமாய் விலைவாசி ஏறும்! ஆனால் ஆண்டாள் காலத்தில்..


மாதம் மும்மாரி பொழிந்ததும் சாலைகள் அழியாமல் தீமைகள் அழிகிறது, செந்நிற நெல்கள் செழிப்பாக வளர்கிறது. அந்த வயல்வெளியில் ஓடுகின்ற கால்வாயில் கொழுத்த மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. மேனியில் புள்ளியுள்ள வண்டுகள் கரைகளில் இருக்கும் கருங்குவளை மலர்களில் தேன் உண்ணுகின்றன.


குபேரனின் தொப்பை போல் மடி நிறைந்திருக்கும் பசுக்கள் வள்ளல்கள் போல கறப்பதற்கு முன்பு தானாகவே பாலை சுரக்கின்றன. எங்கும் செல்வம் செழிக்கும். இத்தனைச்  செல்வங்களும் தன் காலை ஓங்கி இவ்வுலகை அளந்தானே வாமன அவதாரக் கண்ணன், அவன் பேரை நோன்பிருந்து நீராடி நாம் பாடினால் கிடைக்கும் என்கிறார்! 


அன்று அவ்வளவு மழை பெய்தும் ஆறு குளங்கள் மட்டுமே நிரம்பின,  ஏனெனில் அவை ஒன்று கூட ஆக்ரமிக்கப்படவில்லை. எந்த ஆற்றிலும் அன்று மண் அள்ளவில்லை. நிறைய மரங்கள் வளர்க்கப் பட்டன, புகை, மாசு, தூசு எதுவுமே அன்று தமிழ்நாட்டில் இல்லை மேலும் அன்றைய டிரைனேஜ் சிஸ்டங்களும் சிறப்பாக இருந்தன. 


அதை அமைக்க எத்தனை கோடி எஸ்டிமேட் என பாசுரத்தில் எந்தக் குறிப்புகளும் இல்லை. முக்கியமாக ஆண்டாள் காலத்தில் பிளாஸ்டிக் பாலிதீன் குப்பைகள் அறவேயில்லை. ஆம் நமது ஆண்டாள் கண்ணன் மீது கொண்ட அன்பு வெள்ளத்தைவிட இந்த மழை வெள்ளம் ஒன்றும் பெரிதல்ல! அதில் மூழ்கிட எவர் தான் மறுப்பர்!


மார்கழி 3 ஆம் நாள் பாடல்..


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி 

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரிபெய்து

ஓங்கு பெருங் செந்நெல் ஊடு கயலுகளப்

பூக்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோ எம்பாவாய்.


2.பாவை மொழி

2. வையத்து வாழ்வீர்காள்...


பொதுவாக உலக அழகிப் பட்டங்கள் இந்தியாவிற்கு கிட்டும் போதெல்லாம் இதன் பின்னணியில் இருக்கும் உலகளாவிய அழகு சாதனப் பொருட்களின் வணிகம் குறித்து விவாதிக்கப்படும்சித்தூர் ராணி பத்மினியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்ட அலாவுதீன் கில்ஜியே அலாவுதீன் கிளர்ச்சியாகி இந்தியா மீது படையெடுத்து வந்தான் என்னும் செய்தி தீவிர வரலாறு படிக்காதவர்கள் கூட தீபிகா படுகோனேவுக்காகவாவது படித்து அறிந்து இருப்பார்கள்


இந்தியா அழகிகளின் தேசம்எந்த அழகு சாதனமும் இன்றியே இங்கு அழகிகள் அதிகம்நூர்ஜஹானின் அழகில் ஒரு சதவீதம் கொண்ட தாஜ்மஹாலே அதற்கு சாட்சிஇந்தியாவை ஆண்ட பலப்பல பாரசீக மன்னர்களின்  இந்திய மனைவிகளும்அந்தப்புர ராணிகளும் கூட இப்பட்டியலில் உண்டுதம்மை அலங்கரித்துக் கொள்வதில் உலகப் பெண்களுக்கு எல்லாம் முன்னோடி நம் இந்தியப் பெண்கள்கஸ்தூரி மஞ்சளும்சந்தனமும்பயத்தம் மாவும் தடவிக் குளித்து.. 


செம்பருத்தி கலந்த சிகைக்காயைத் தலைக்கு தடவி குளித்து பின்பு அகிலும்சாம்பிராணியும் தூபமிட்டு புகை எழும்ப சிகையை காயவைத்துவாசனைத் திரவியங்களும்எண்ணெயும் தடவி தலை சீவிகண்ணுக்கு மையிட்டுநெற்றியில் மணக்கும் சந்தன குங்கும திலகமிட்டுநறுமண மலர் சூடிபெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டா இல்லையா என ஒரு நீயா நானா நடத்தி கோட்டு கோபிக்கு பதில் கோபக்கார நக்கீரரை நடுவராக்கிப் பார்த்தவர்கள் நாம்.


இப்படி அலங்காரம் செய்வதில் நாட்டமுள்ள பெண்கள் அதை வேண்டாம் எனச் சொன்னால் டிசம்பரில் அடிக்கிற புயல் தினமும் அல்லவா அடிக்கும்அடித்துவிட்டு போகட்டும் எங்களை அந்த மாயக் கண்ணன் எனும் புயல் தாக்கட்டும் அதற்காக எதையும் தியாகம் செய்வோம் என்கிறார் ஆண்டாள்கண்களில் மையிட்டுக் கொள்வதில்லைதலையில் பூச்சூடிக் கொள்வதில்லை என எந்த இந்தியப் பெண்ணாவது சொல்வாளாஆனால் ஆண்டாள் சொல்கிறார்.


பாவை நோன்பு என்னும் விரதத்தை கடை பிடிக்கும் பெண்களாகிய நாங்கள் நெய் உண்ணோம்பால் உண்ணோம் என உண்ணவிரதம் இருப்பது பெரிதல்ல.. தீய சொற்கள் பேசாதிருப்பது பெரிதல்ல.. தான தருமங்கள் செய்வது பெரிதல்ல.. செய்யக் கூடாததை செய்யாமல் இருப்பதும் பெரிதல்ல.. பெண்களின் இயல்பான அலங்கரிக்கும் குணத்தையும் அந்த மாலவனுக்கு அர்ப்பணிப்பது தான் பெரிது.. அதுவே இந்நோன்பின் நோக்கம் என்கிறார் நம்ாண்டாள், கண்ணா நாங்கள் இதை ஏதோ கடமைக்குச் செய்யவில்லை..


 மனமுவந்து உனக்காகச் செய்கிறோம்எம் வாழ்வில் இந்தப் பிறவி எடுத்து வந்த சூழலில் உலகத் துன்பங்களில் இருந்து எம்மை காப்பாய் பரமா என்று பாடுகிறார்.  சரிபரமன் என்பது பரமசிவன் அல்லவா இதில் கண்ணன் எங்கு வருகிறார்இங்கே பரந்தாமனயே பரமன் என்கிறார் நம் ஆண்டாள்கண்ணன் மேல் ஆண்டாள் கொண்ட அளவிலா நேசம் மட்டுமல்லஎந்த ஒப்பனையும் செய்யாமலேயே நம் இந்தியப் பெண்கள் எல்லாரும் பேரழகிகள் என்பதையும் இப்பாசுரத்தில் நமக்குப் புரிய வைக்கிறார் ஆண்டாள்.


மார்கழி 2ஆம் நாள் பாடல் :


வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்

பையத் துயின்ற பரம னடிபாடிநெய்யுண்ணோம் 

பாலுண்ணோம் நாட்காலே நீராடிமையிட்டு 

எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்செய்யா 

தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.