Tuesday, 23 December 2025

9 பாவை மொழி

9. தூமணி மாடத்து..


#பாவை_மொழி


சினிமாவில் புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர்கள் படமாக்கும் காட்சிகள் கலைநயம் மிக்கதாக இருக்கும். அதற்கு முக்கியக் காரணம் காட்சிகளுக்கேற்ற அழகான லைட்டிங்! படபிடிப்பில் இயற்கையாகவோ, செயற்கையாகவோ ஒளியை உருவாக்குவதன் மூலம் அந்தக் காட்சியை மெருகு ஏற்றுவார்கள். ஆண்டாளும் ஒரு ஒளிப்பதிவாளர் தான்.


ஆம்! ஆண்டாள் இப்பாடலில் நம் கண்முன்னே படமாக விரியும்படி எப்படி லைட்டிங் அமைக்கிறார் பாருங்கள் (வைட் ஆங்கிளில்) ஒரு வீடு இருளும் ஒளியும் கலந்த அதிகாலை நேர லைட்டிங் வீட்டில் ஒரு அழகான விளக்கு மாடம், அங்கு மணிகளுடன் வெண்ணிற திரைச் சீலைகள் அசைய அதனைச் சுற்றி அலங்காரமான விளக்குகள் எரிகின்றன. 


அறை முழுதும் மணம் கமழும் சாம்பிராணிப் புகை  பரவிக் கிடக்க, காமிரா பார்வேர்டில் ஜூம் ஆகிறது. இலவம் பஞ்சு மெத்தையில் சுகமாக அயர்ந்து உறங்கிக் கொண்டு இருக்கிறாள் ஒருத்தி. அப்படியே இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பார்த்தால்.. அடடா..! ஒரு ஷங்கர் அல்லது மணிரத்னம் படத்தின் காட்சி போல இருக்கிறதல்லவா.


ஆண்டாள் ரசனை ராணி.. அவளது அழகியல் மிகுந்த பார்வை பாசுரங்களின் பல இடத்தில் பிரதிபலிக்கும் வார்த்தைகளிலேயே இந்தக் காட்சியை வர்ணித்து அமைத்த அவள் திறனைப் பாருங்கள், வளமானகற்பனை, ஆழ்ந்த ரசனை, கண்ணன் மேல் கொண்ட அளவிலாக் காதல் அத்தனையும் இந்தக் காட்சிகளாக நம் கண்முன் விரியும்.


இங்கே இந்த காட்சியை நிறுத்திவிட்டு அடுத்த ஷாட் அப்படியே கதவிற்கு இந்தப்பக்கம் நாம் மாற்றுவோம்.. அங்கே தினமும் இந்த வீட்டிற்கு வரும் அப்பெண்ணின் தோழிகள் கதவுக்கு வெளியில் இருந்து இவளை கூப்பிட்டு எழுப்புகிறார்கள். “மாமன் மகளே என்ன உறக்கம்? உன் வீட்டின் மணிக் கதவை திறந்துவிடு அட மாமியே..


நீ உன் மகளை எழுப்ப மாட்டாயா? உன் மகள் என்ன பேசா மடந்தையா? செவித்திறன் அற்றவளா? இல்லை மயங்கிக் கிடக்கிறாளா? அல்லது யாராவது அவளை மந்திரத்தால் மயக்கி விட்டார்களா? மாயவர்களுக்கு எல்லாம் பெரிய மாயன், மாதவன்,வைகுந்தன் என்று அவன் பல நாமங்களை சொல்லிப் பாடுவோம் அவளை சீக்கிரம் எழுப்பு.! 


ஆண்டாள் இது போல வர்ணித்துப் பாடி கூப்பிட்டு நம்மை எழுப்பினால், அதற்காகவே நன்கு தூங்கலாம் போல..


மார்கழி 9 ஆம் நாள் பாடல்.


தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்

தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்

மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்

மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்

ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

நாமன் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.


#திருப்பாவை

#ஆண்டாள்

#மார்கழி

#ஶ்ரீவில்லிப்புத்தூர்

#பாவை_நோன்பு


இதன் ஒலி வடிவத்தை உமா மகியின் “பேச்சு வாக்குல” யூடியூப் சானலில் கேட்கலாம். அதன் லிங்க் கீழே கமெண்ட்டில்…


No comments:

Post a Comment