11 கற்றுக் கறவை கண்டங்கள்..
“எற்றுக்கு உறங்கும்” என்றால் அதன் அர்த்தம் அசைவே இன்றி படுத்துக் கிடப்பதாகும். பாம்புகளும், முதலைகளும் மட்டும் தான் உயிர் இருந்தும் அசையாமல் உறைந்தது போல கிடக்கும். கிடத்தல் என்றாலே படுத்து இருப்பது தானே! கிடந்த கோலத்தில் இருக்கும் திருவரங்கன் மீது பெரும் மையல் கொண்டவளுக்கு அது தெரியாதா என்ன.
அந்தப் பாம்பை அசைவின்றி இருப்பதற்கு மட்டுமல்ல அப்பாம்பின் படம் போல விரியும் அழகிய இடுப்பினையும் இங்கு உதாரணமாகச் சொல்லி உறங்குகின்ற அப்பெண்ணை எழுப்புகிறார் ஆண்டாள். இடைக்கு ஏன் பாம்பின் படத்தை உதாரணமாக சொல்ல வேண்டும்? ஆண்டாள் வர்ணனைப் பேரரசி! சினிமா பாடல் ஆசிரியர்கள் எழுதுவார்களே..
“இடையோ இல்லை இருந்தால், முல்லைக் கொடி போல் மெல்ல அசையும்.. இல்லாதது போல இருக்குமாம், இல்லை என்றாலும் அது இருக்குமாம். புரியலையா? அட இருங்க.. ஆண்டாள் அதற்கு இப்பாடலில் சொல்லும் உவமையைப் பாருங்க, நாகத்தின் தலை சாதாரணமாகத் தான் இருக்கிறது. ஆனால் அது படம் எடுக்கும் போது அந்தத் தலை..
சடாரென விரிகிறதல்லவா. அது போல குறுகி விரியும் அழகிய இடுப்பைக் கொண்டவளே என்று வர்ணிக்கிறார்! இல்லாதது போல இருக்கின்ற இடைக்கு இது நல்ல உவமை தானே, இருக்கு ஆனா இல்லன்னு SJ சூர்யாவுக்கு சொல்லும் முன்பே ஆண்டாள் சொல்லிவிட்டார். செல்வந்தன் பெற்ற செல்வியே, பாம்பின் படம் போல வளைந்த மெல்லிடையாளே
உன் அக்கம் பக்கத்து தோழியர் நாங்கள் உன் வீட்டு முற்றம் வரை வந்து நிற்கின்றோம். அந்த கார்வண்ணன் புகழைப் பாடுகின்றோம். நீ அசைவின்றி தூங்குவது நியாயமா? மயில் போன்ற பெண்ணே எழுந்திடு, அந்த மணிவண்ணன் புகழ் பாடிடு. நீ ஆயர் குலத்தில் வந்து பிறந்த தங்கக்கொடி..
நீ பிறந்த ஆயர் குலம், குற்றமில்லாத குலம். கறவை மாடுகளிடமிருந்து பாலை கறப்பதும், தமக்கு பகை செய்யும் பகைவர் குலத்தின் வேர் அறுப்பதும் அவர்களின் சிறப்பு. அந்த வீர குலத்தில் பிறந்த நீ இப்படிக் கிடந்து உறங்கலாமா? இதுவா உன் நோக்கம்? தேவையா இந்தத் தூக்கம்? தூங்கியது போதும் பெண்ணே எழுந்துவா! எனப்பாடுகிறார்.
ஆண்டாள் பாடினாள் அவள் தமிழில் அசைவற்றுக் கிடக்கும் பாம்புகள் கூட எழுந்துவந்து ஆடுமல்லவா!
மார்கழி 11ஆம் நாள் பாடல்...
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் குற்றம்ஒன் றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய் சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட சிற்றாதே பேசாதே செல்வபெண் டாட்டிநீ எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.
#திருப்பாவை
#ஆண்டாள்
#மார்கழி
#ஶ்ரீவில்லிப்புத்தூர்
#பாவை_நோன்பு

No comments:
Post a Comment