Thursday, 25 December 2025

12 பாவை மொழி

12. கனைத்து இளம் கற்றெருமை..





நினைத்தவுடன் நடந்துடும்னு எதிர்பார்க்காதே, நீ நினைச்சா மட்டும் அது நடந்துடுமா? நாம நினைச்சிகிட்டே இருந்தா செய்யறது யாரு? இவையெல்லாம் ஒரு செயலைச் செய்யாமல் நினைத்துக் கொண்டிருப்பவர்களை பார்த்து நாம் கேட்பது..ஆனால் தாய்ப்பாசம் அப்படியல்ல! 


மனதால் நினைத்தாலே போதும்.அதனால் ஏற்படும் விளைவுகள் தானே நடக்கும். அது மனிதனோ விலங்கோ அனைவருக்கும் பொதுவானது என்கிறார் நமது ஆண்டாள்.  பிரசவ வார்டில் நள்ளிரவில் அன்று தான் குழந்தையை பிரசவித்த அலுப்பால் அயர்ந்து உறங்குகிறாள் ஒரு தாய். 


அங்கிருக்கும் அத்தனை குழந்தைகளில் தன் குழந்தையின் அழுகுரல் கேட்டால் மட்டும் சட்டென உறக்கம் கலைந்து எழுவார். இது இயற்கை மனிதனுக்கு அளித்த வரம்! இந்த வரத்தை இறைவன் மனிதர்களுக்கு மட்டும் இன்றி விலங்குகளுக்கும் அளித்துள்ளது தான் சிறப்பே. 


ஆறறிவு, ஐந்தறிவு எனப் பாகுபாடு வைத்தவன், தாய்ப் பாசத்தில் மட்டும் அதை வைக்கவில்லை. வெளியூரில் தங்கி படிப்பவர்கள், வேலை பார்ப்பவர்கள் தங்கள் அம்மாவை நினைக்கும் அதே வேளையில் அவர்கள் அம்மாவிடமிருந்து அவர்களுக்கு தொலைபேசி அழைப்பு வரும்! 


இதுபோல பலருக்கு நடந்துள்ளது. மனிதன் எதையும் சாதிக்க நம்மைப் பெற்ற அம்மாவின் குரல் ஒன்று போதும். அதுவே உலகின் ஆகப்பெரும் புத்துணர்வு சக்தியாகும். இது போல நூறு மடங்கு சக்தி தன் பிள்ளைகளின் குரல் கேட்டால் தாய்க்கு வரும் என்பதே மெய்! அதெல்லாம் சரி! 


பிள்ளைகளின் குரல் கேட்டால் பாசம் பொங்கும் ஆனால் பால் பொங்குமா? பொங்கும் என்கிறார் ஆண்டாள்! இந்தப் பாசுரத்தில் தம் கன்றுகளின் குரல் கேட்ட நொடியில் எருமைகள் தாய்ப்பாசத்தில் உருகி தம் மடியில் இருந்த பாலை யாரும் கறப்பதற்கு முன் தாமாகவே சுரக்கின்றன! 


அப்படிச் சுரந்த பால் வீடெங்கும் வெள்ளமென ஆறாகப் பாய்ந்து அந்த வீடே வெண்ணிற பால் சகதியாக உள்ளது. இவ்வளவு பால் செல்வம் மிக்க, வீட்டிலேயே பாலாறு பாயும் செல்வந்தனின் தங்கையே! மார்கழி மாதத்து அதிகாலை பனித் துகள்கள் எங்கள் தலைமீது படிந்திருந்தாலும்..


நாங்கள் உன் வீட்டருகே வந்து உனக்காக நிற்கின்றோம். ஒற்றைத் தலை கொண்டு பத்துத் தலை இராவணனை வதம் செய்த எங்கள் ‘தல’ ராமன் பேர் பாடுகிறோம்! வா நீயும் வந்து பாடு,  எழுந்து வந்து கதவைத்திற.. ஏனிந்த பெரும் தூக்கம்? நீ இன்னும் எழவில்லை என்பது..


அக்கம் பக்கம் வசிக்கும் எல்லார்க்கும் தெரிந்துவிட்டது. பெருமாளைப் பாடுவதை விடவா இந்தத் தூக்கம் முக்கியம் எழுந்துவா பெண்ணே. இந்தப் பாசுரத்தில் நாம் நுகர்வது பாலின் மணத்தை மட்டுமல்ல.. ஆண்டாள் கண்ணன் பால் கொண்ட காதலின் மணத்தையும் தான்! 


ஆம் அது கறந்த பாலைப் போல் அவ்வளவு தூய்மையானது! 


மார்கழி 12ஆம் நாள் பாடல்..


கனைத்துஇளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி 

நினைத்து முலைவழியே நின்றுபால் சோர 

நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் 

பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச் 

சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற 

மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய்

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம் 

அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்



No comments:

Post a Comment