Tuesday, 23 December 2025

8 பாவை மொழி

8. கீழ்வானம் வெள்ளென்று...


#பாவை_மொழி


கண்ணன் புரிந்த லீலைகளில் அவன் ஆ வென்று வாய் பிளந்த போது அவனது அன்னைக்கு அன்று உலகில் உள்ள எல்லாம் தெரிந்தது ஆம் அது தான் உலகின் முதல் கூகுள்! காட்டியது நம் கோகுல்!ஆ வென்றால் பசுக்கள் என்றும் அர்த்தம் அந்தப்பசுக்கள் பாலைப் பொழிவது போல அவன் பக்தர்களுக்கு அன்பைப் பொழிவான்..


தேர்தலில் அந்தந்த கட்சிகளின் சக்திக்கு ஏற்றபடி 

செலவு செய்வது போல நம் வேண்டுதலுக்கு ஏற்றபடி அதை ஆராய்ந்து அருள்பவன் அவன். நம்மை ஆ வென்று அழைத்து ஆட்கொள்வான் கண்ணன். பெண்கள் குளிக்கையில் எட்டிப் பார்த்து குறும்புகள் செய்த முதல் கவர்னர் அவனல்லவா!


அவனைச் சேவிக்க என்ன செய்யவேண்டும்? உறங்கும் பெண்ணே பார் கீழ் வானம் விடிந்துவிட்டது எருமைகள் புல் வெளியில் பரந்து மேய்கின்றன.. பாவை விரதம் இருக்கின்ற இடத்திற்கு பலர் போய்விட்டனர் சிலர் அங்கு கிளம்பத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களை தடுத்து நிறுத்தி உன் வீட்டு வாசலில் நிற்கின்றோம்.


நீ எழுந்து வா.. குதிரையாக உருமாறி வந்த கேசி என்னும் அரக்கனின் வாயைப் பிளந்தவன்.. சாணுகன் முஷ்டிகன் என்ற இருமல்லர்களை கோதாவில் வீழ்த்தியவன்.. தேவாதி தேவன் அவன்.. அவனை சேவிப்போம் அப்போது தான் அவன் வா வென்று அழைத்து நம்மை அருள்வான். தன்னை வணங்குபவனை அருள்வது கடவுளின் குணம். 


ஆனால் நம்மை வா வா என்றழைத்து அருளும் கடவுள் இருக்கிறாரா.! கண்ணன் இருக்கிறான் என்கிறார் ஆண்டாள். அவருக்கு கண்ணனின் அருள் வருகிறதோ இல்லையோ ஆண்டாள் ஆ வென்று அழைத்தால் கண்ணனே வருவான் போல.!


மார்கழிப் பாடல் - 8


கீழ்வானம் வெள்ளென்று எருமைசிறுவீடு

மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ளபிள்ளைகளும்

போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை

கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய

பாவாய்! எழுந்திராய் பாடிப்பறை கொண்டு

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்

ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.


#திருப்பாவை

#ஆண்டாள்

#மார்கழி

#ஶ்ரீவில்லிப்புத்தூர்

#பாவை_நோன்பு


இதன் ஒலி வடிவத்தை உமா மகியின் “பேச்சு வாக்குல” யூடியூப் சானலில் கேட்கலாம். அதன் லிங்க் கீழே கமெண்ட்டில்…

No comments:

Post a Comment