Saturday, 27 December 2025

15 பாவை மொழி

15.எல்லே இளம்கிளியே





கிளிப் பேச்சு கேட்டிருக்கிறீர்களா? அது எப்போதும் கிண்டல் தெறிக்கும் தொனியில் இருக்கும். ஆண்டாள் இந்தப் பாசுரத்தில் கிளியோடு பேசினார் என்று கூட சொல்வார்கள். ஆனால் கிளியே ஆண்டாளுக்குப் பதிலாக பேசி அந்தத் தோழியை எழுப்பியிருக்கலாம். வாருங்கள் பாசுரத்திற்கு..


துங்குபவர்களை எழுப்பலாம், ஆனால் தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்பமுடியாது என்பார்கள். ஆண்டாள் காலத்திலும் இப்படி தூங்குவது போல நடிப்பவரை அல்லது சோம்பலில் எழுந்திருக்க மறுப்பவரை என்னவெல்லாம் தாஜா செய்து அவர் எழுப்புகிறார் பாருங்கள். 


முதல் 14 பாசுரங்களில் பெண்களை எழுப்பியவர் இந்த 15 ஆம் நாள் பாசுரத்தில் தூங்கும் பெண்ணிடம் பேசுவது போல எழுதியிருக்கிறார். பொதுவாகவே ஒருவரை ஒருவர் நன்கறிந்த பெண் தோழிகள் பேசிக் கொண்டால் அங்கு நக்கலும் நையாண்டியும் தெறிக்கும் அல்லவா!


இந்த பாசுரத்திலும் அது தெறிக்கிறது..


எழுப்பும் தோழியர் : அடியே கிளி போன்ற பெண்ணே.. எழுந்திரு.. நீ எவ்வளவு நேரம் தான் தூங்குவே?


படுத்திருப்பவள் : ஏய்ய் பேசாம இருங்கடி நானே வர்றேன்.. ஏன் எல்லாரும் சும்மா தொண தொணன்னு நச்சரிக்கிறிங்க?


எழுப்பும் தோழியர் : அடியே நிஜமாவே நீ பெரிய ஆளு தாண்டி.. நீ இப்படித்தான் பேசிக்கிட்டே மழுப்புவே, இதெல்லாம்  எங்களுக்கு முன்னாடியே தெரியும். உன் வாயில இருந்து எப்பவும் இந்த பதில் தானே வரும்.


படுத்திருப்பவள் : என்னது நானா? நீங்க எல்லாம் தாண்டி பெரிய ஆளுங்க, எனக்கு இதையெல்லாம் சொல்லித் தந்ததே நீங்க தானே, இதெல்லாம் நான் உங்ககிட்ட கத்துகிட்ட வித்தை தானே!


எழுப்பும் தோழியர் : பார்த்தியா எழுந்து வராம படுத்துகிட்டே சும்மா சீன் போட்டுகிட்டு இருக்கே. நீ சீக்கிரமா எழுந்து வாடி விரதம் இருப்பதை விட உனக்கு அப்படி என்ன பெரிய வெட்டி முறிக்கிற வேலை?


படுத்திருப்பவள்  : ம்ம்ம்.. அதை விடு நீங்க எல்லாருமா இங்க வந்துருக்கிங்க?


எழுப்பும் தோழியர் : சரிதான் ஒண்ணும் தெரியாத மாதிரி கேக்குறதைப் பாரேன். நாங்க எல்லாருமே வந்துட்டோம் தாயே! சந்தேகம் இருந்தா நீயே வந்து சரியான்னு எண்ணி பாத்துக்கோம்மா..


மதுராபுரியில் பெரும் யானையை வென்றவன், எத்தனை எதிரிகள் எதிர்த்தாலும் ஒற்றை ஆளாய் நேர் நின்று, அவர்களை அஞ்சி நடுங்கச் செய்பவன், எவரது அச்சுறுத்தலையும் தவிடு பொடியாக்கும் ஆயன், நம் மாயன்! 


அவரைப் போற்றிப் பாடத்தானே உன்னை எழுப்பறோம். நீ பிகு பண்ணாம முதலில் எழுந்து வா.. என்று இப்பாடலில் குறிப்பிடுகிறார். அன்று ஆண்டாள் கிளியோடு பேசினாரோ அல்லது தோழியரோடு பேசினாரோ இன்றைக்கும் இந்தக் கிளிப்பேச்சு கேட்கக் கேட்க எத்தனை இன்பம்.


மார்கழி 15ஆம் நாள் பாடல்...


எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோ

சில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்

வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்

வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக

ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை

எல்லாரும் போந்தாரோ போந்தார்போந்து எண்ணிக்கொள்

வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.



No comments:

Post a Comment