13. புள்ளின்வாய் கீண்டானை...
அர்த்தராத்திரி, நடுநிசி, மூன்றாம் ஜாமம், நள்ளிரவு, பின்னிரவு, அதிகாலை இப்படியேல்லாம் முன்னிரவு & பின்னிரவு நேரங்களைக் குறிப்பிடுகிறோம், விடிவதை வானில் வெள்ளி முளைத்தது எனக் கூறும் வழக்கம் இன்றும் தென் தமிழகத்தில் உள்ளது.
மதுரையில் சர்வ சாதாரணமாக காலையில “வெள்ளென” வந்துடுய்யா என்பார்கள் அதற்கு அதிகாலையில் வந்துவிடு என அர்த்தம். இன்று நாம் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் வைத்து இரவு பகலை கணிக்கின்றோம்.
பிற கோள்களின் உதய அஸ்தமன நேரங்களும் இன்றைய அறிவியல் முன்னேற்றத்தால் கண்டுபிடித்து வைத்து இருக்கிறோம். ஆனால் எந்த அறிவியல் முன்னேற்றமும் இல்லாத காலத்தில் ஆண்டாளின் வான சாஸ்திர அறிவைப் பார்த்து இன்றைய விஞ்ஞானம் வியந்து நிற்கிறது.
நிலவு மறைந்து சூரியன் உதித்தது, வெள்ளி முளைத்தது இப்படியெல்லாம் உவமை படுத்தி இருந்தால் அது எளிய உதாரணமாக இருக்கும். ஆனால் ஆண்டாள் அழகாக “வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று” என்கிறார். அதாவது வியாழன் கோள் உறங்கும் வேளையாம்!
பூமியின் அதிகாலையே வியாழனில் இரவு என இன்றைய விஞ்ஞானம் சொன்னது பெரிதல்ல அதை அன்றே சொன்னவர் ஆண்டாள். மார்கழி 6 ஆம் நாள் பாசுரத்தின் முதல் அடியில் புள்ளும் சிலம்பினகாண் என்னும் அதே வார்த்தையை 13 ஆம் நாள் பாசுரத்தின் 5 வது வரியில்..
அப்படியே உபயோகிக்கிறார். கொக்கின் வடிவெடுத்து வந்த அசுரன் பகாசூரனின் வாயைப் பிளந்தவன், ராவணனின் பத்துத் தலைகளை கிள்ளியெறிந்தவன் அவன் புகழ்பாடி மற்ற பெண்கள் எல்லாம் நோன்பிருக்க சென்று விட்டனர். வெள்ளி முளைக்க வியாழன் மறையும் வேளை இது.
கூட்டில் இருக்கும் பறவைகளும் சப்தம் எழும்புகின்றன போதரிக் கண்ணுடைய பெண்ணே (போதரிக் கண் என்றால் வண்டமர்ந்த தாமரைப்பூ போன்ற கண்களாம்! கரு விழிகளை வண்டாகவும் அவள் முகத்தை தாமரையாகவும் உவமைப் படுத்துகிறார் ஆண்டாள்.
இம் மார்கழி நன்னாளில் எங்களோடு வந்து குளிரக்குளிர குளிக்காமல் ஏன் இப்படிப் பள்ளி கொண்டு உறங்குகிறாய்? நீ உறங்குகிறாயா அல்லது கள்ளத்தனமாக உறக்கம் வருவது போல நடிக்கிறாயா.? எங்களுடன் வந்து சேர்ந்து கொள் எம்பாவாய் என செல்லமாகவும்..
உறங்குபவளை அதட்டுகிறார் ஆண்டாள். ஆண்டாளின் திருப்பாவை ஒரு டூ-இன்- ஒன் அதில் தான் இராமாயணம் மகாபாரதம் இரண்டையும் ஒன்றாகப் படிக்கலாம்.
மார்கழி 13 ஆம் நாள் பாடல்...
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

No comments:
Post a Comment