16.நாயகனாய் நின்ற..
அக்கால அரசர்கள் ஒருவருக்கு வாக்கு கொடுத்துவிட்டால் அதற்கு அத்தாட்சியாக முத்திரை மோதிரமோ, பதக்கமோ தருவார்கள். அதைக் கொண்டு போய் உரியவரிடம் காட்டினால் நமக்குத் திறக்காத கதவுகளும் திறக்கும். நமக்கு வேண்டியதும் கிடைக்கும் எனப் படித்திருப்போம்!
ஆண்டாள் இப்பாசுரத்தில் நந்தகோபன் மாளிகையின் வாயிற் காப்போனிடம் அத்தாட்சியாக எதைச் சொல்கிறார் தெரியுமா? மாயக் கண்ணன் நேற்றே எங்களிடம் வந்து நீங்கள் என்னிடம் வேண்டியதை பரிசாக அளிப்பேன் என்றார், அந்த வார்த்தையை நம்பி இங்கு வந்துள்ளோம்!
அந்தக் குறும்பன் பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவான். எங்களை வரச்சொல்லிவிட்டு உறங்குவது போல நடிப்பதில் மன்னன்.. அந்த மணிவண்ணன்! ஒரு வேளை அவனை நாங்கள் எழுப்பாமல் விட்டுவிட்டால் அது குற்றமாகிவிடும் எனவே அவனை எழுப்பத்தான், நாங்கள்..
எல்லாரும் நோன்பிருந்து, நீராடி தூய மனதோடு இந்தத் தோரண வாயிலுக்கு வந்துள்ளோம். தோரணையோடு இந்த வாயிலைக் காப்போனே.. உன் தோரணையை விட்டுவிடு, எங்களை உள்ளே விடு! நாங்கள் வந்த நல்ல காரியம் நிறைவேற எங்களை உள்ளே சென்று பாட விடு!
அழகிய இம் மணிக்கதவின் தாழை விலக்கித் திறந்துவிடு! இங்கே ஆண்டாள் பாகுபலி ராஜமாதா போல எம்மை வரச் சொன்னது அந்த மாயவனின் கட்டளை! அவரது கட்டளையே எங்களுக்கு சாசனமென.. கண்ணன் அளித்த வாக்கையே அக்காவலனிடம் அத்தாட்சியாக கூறுகிறார்!
இக்காலத்தில் இளம்பெண்கள் கூட்டமாகப் போய் இப்படிக் கேட்க வேண்டிய அவசியமே இல்லை! வாயிலில் நிற்கும் எந்த வாட்ச்மேனும் தன் வாயில் ஜொள் விட்டு கதவுகளைத் திறந்து இருப்பான். ஆண்டாளின் பாடல்களில் தமிழில் அருகி மறைந்த பல தமிழ்ச் சொற்களைக் காணலாம்.
உதாரணமாக கொண்மூ, எழினி போன்ற தமிழ்ச் சொற்களுக்கு அர்த்தம் என்ன தெரியுமா? இரண்டுமே மேகத்தை குறிக்கும் தமிழ்ச் சொற்கள்! இன்று இந்தச் சொற்கள் மக்களின் பேச்சு வழக்கிலேயே இல்லை. இந்தப் பாடலிலும் நென்னல் என்ற வார்த்தையை கூறுகிறார்.
நென்னல் என்றால் நேற்று என அர்த்தம், (மாணிக்க வாசகரின் திருவெம்பாவையிலும் இந்த வார்த்தை வருகிறது) ஆம்! ஆண்டாள் அன்று இன்னலின்றி எழுதிய தமிழ்.. நென்னலில் மட்டுமன்று என்றென்றும் கன்னல்.
மார்கழி 16 ஆம் நாள் பாடல்...
நாயக னாய்நின்ற நந்தகோ பன்உடைய
கோயில்காப் பானே கொடித்தோன்றும்
தோரண வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ
வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.

No comments:
Post a Comment