Thursday 12 January 2017

குறள் கதைகள் - 2017

#குறள்நெறிக்_குட்டிக்கதைகள்


அந்தச் சேரியில் சாமிக்கண்ணு என்றால் தெரியாதவர்கள் இல்லை 67வயது..கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லை. அவர் பேச்சுக்கு அந்தச் சேரியில் மிகுந்த மரியாதை உண்டு.அவர் சொல்வதே அங்குள்ளவர்களுக்கு வேதம். சாமிக் கண்ணுவின் ஒப்புதல் இன்றி எதுவும் அசையாது..

இப்போது பிரச்சனை சேரியில் அல்ல ஊருக்குள்.. ஆம் இந்தாண்டு தேர்த்திருவிழாவில்..தேர் வடத்தை முதலில் தொட்டு இழுக்க சாமிக்கண்ணுவை தேர்ந்தெடுத்தது தான்.! தேர்ந்தெடுத்தவர் ஊரார் பெரிதும் மதிக்கும் அருணகிரிநாத சுவாமியடிகள் என்னும் மகான்.. ஊர் மக்கள் கொந்தளித்தாலும்..

சுவாமியடிகள் மீது இருக்கும் பயபக்தியால் அவரை நேரில் சந்தித்து கேட்பது என அவர் ஆசிரமத்திற்கு வந்தனர்.. அனைவரையும் வரவேற்றார் அடிகளார்.. சொல்லுங்க என்ன தேர் இழுப்பது விஷயமாகத் தானே என்றார் குறும் புன்னகையுடன்.. வந்தவர்கள் வியந்தனர்..ஆமாம் சுவாமி அதுக்கு தான் வந்தோம் 

ஊருல உயர் ஜாதிக் காரர்கள் பலர் இருக்க இந்த சாமிக்கண்ணுவைப் போயி.. ஒரு நிமிஷம்ப்பா என அடிகளார் சொல்ல.. பேசிய நாட்டாமைக்காரர் பாதியில் நிறுத்தினார்.. ஒரு 6 மாதத்துக்கு முன்பு வெளிநாட்டு குளிர்பானக் கம்பெனி ஒன்று அந்த சேரி மக்கள் குடியிருக்கும் இடத்தை...

விலை பேசினார்கள் தெரியுமா? இல்லிங்க சாமி என்றனர் அனைவரும்.. அந்த இடத்துக்கு மட்டும் அல்ல அந்த இடத்தை வாங்கித் தந்தால் பெரிய தொகையை சாமிக்கண்ணுவுக்கும் தருவதாக பேசினார்கள்.. அப்போது அவர் நேராக என்னிடம் தான் வந்தார் அவர் என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா? சாமி என்னையவே விலை பேசறாங்க..

நான் உசுரே போனாலும் மாறமாட்டேன் ஆனா எங்க சேரி மக்கள் எனக்கு முக்கியம்.. இவங்க பணபலம் அரசியல் செல்வாக்கு இதெல்லாம் பார்த்தா என்னை நம்பி இருக்குற மக்களை இவங்க ஏதாவது செஞ்சிருவாங்களோன்னு பயமாயிருக்கு அவங்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா...

நான் செத்தே போயிடுவேன்.. அதனால அந்த இடத்தை உங்க கிட்ட தர்றேன்.. நீங்கன்னா உங்களை வந்து மிரட்ட மாட்டாங்க நாளைக்கு பிரச்சனை எல்லாம் முடிந்ததும் இடத்தை மக்கள் கிட்டயே திரும்ப கொடுத்துடலாம் இந்த இடத்தை காப்பாத்தி தர்றேன்னு என் மக்களுக்கு நான்..

வாக்கு கொடுத்துட்டேன் சாமி.. நியாயமா மோத நான் தயார் ஆனா அடிதடி அநியாயம் அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க..சாமி நீங்க தான் உதவணும்.. அப்படின்னு எங்கிட்ட வந்து சொன்ன உத்தமன் அய்யா அந்த சாமிக்கண்ணு.. உண்மையா பார்த்தா அவன் தான்பா மேல்சாதி.. 

இந்த தேரை முதலில் தொட்டு இழுக்குற தகுதி ஊரில் இருக்கும் எல்லாத்தையும் விட அவனுக்கு தான் இருக்கு என்றபோது அனைவரும் அதை மறுக்காமல் ஒப்புக் கொண்டனர்.


நீதி : ஒழுக்கம்வாய்மைமானம் ஆகிய இந்த மூன்றிலும் நிலைதவறி நடக்காதவர்களே உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள்.


ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்


இழுக்கார் குடிப்பிறந் தார்.


[பொருட்பால் : குடிமை : குறள் எண் :952]



#குறள்நெறிக்_குட்டிக்கதைகள்


"கரஸ்பாண்டண்ட் சார்.. யாரு.! நம்ம பள்ளி வரலாறு ஆசிரியர் வசந்தனையா தேர்ந்து எடுத்து இருக்கிங்க.!


"ஆமாம்பா.. தேசிய அளவிலான ஆசிரியர்கள் மாநாட்டிற்கு நம்ம பள்ளி சார்பா அவரைத் தான் பேச அனுப்பப் போறேன்".


"சார் சொன்னா தப்பா நினைச்சிக்க கூடாது வசந்தன் சின்ன வயசுக்காரர் இப்ப தான் முனைவர் பட்டத்திற்கே படிக்கிறார் நம்ம உதவி தலைமை ஆசிரியர் பரமசிவம் இருக்காரே அவர் இவரை விட அதிகம் படித்தவர் ஏற்கனவே முனைவர் பட்டம் வாங்கியவர்"..


"அவர் ஒரு நடமாடும் நூலகம்ன்னு நீங்களே சொல்லுவிங்க அவர் நிறைய நூல்கள் படிச்சவரு.. அனுபவமும் அதிகம் அவரை அனுப்பலாம் இல்ல".


"சார் நீங்க சொல்றது வாஸ்தவம் தான்.. பரமசிவம் நிறைய படித்தவர் தான் ஆனா பாருங்க பள்ளியில் நடக்கும் சாதாரண பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் கூட பேசத் தயங்குவார்"..


"சரளமாக பேசமாட்டார்.. ஆனா வசந்தன் அருமையாக பேசுவான் அழகாக வாதங்களை முன் வைப்பான் இது தான் பேசவேண்டிய செய்தி எனச்சொல்லிவிட்டால் அது சம்பந்தமாக..


நிறைய செய்திகளை சேகரித்து அருமையான உரையை தயார் செய்வான்.. அவன் தான் இம்மாநாட்டில் கலந்து கொள்ள சரியான ஆள் அறிஞர்கள் மத்தியில் உரையாடாதவர்கள் எத்தனை நூல்கள் படித்திருந்தாலும் அதற்கு மதிப்பில்லை..


அதுதான் வசந்தனை தேர்வு செய்தேன் "என்ன சரிதானே" என்றார் கரஸ்பாண்டண்ட்.. தலையசைத்து ஆமோதித்தார் கேட்டவர்.



நீதிகோழைகளுக்குக் கையில் வாள் இருந்தும் பயனில்லைஅவையில் பேசிட அஞ்சுவோர் பலநூல் கற்றும் பயனில்லை.

குறள் எண் : 726 

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்


நுண்ணவை அஞ்சு பவர்க்கு.



#குறள்நெறிக்_குட்டிக்கதைகள் 


"யெஸ் மிஸ்டர் மூர்த்தி சொல்லுங்க என்ன உங்க பிரச்சனை" என்றார் ஆர்.சுவாமிநாதன்.. 


சுருக்கமாக ஆர்.எஸ் என்றால் உலகெங்கும் வணிகர்களுக்கு மத்தியில் மிகப் பிரபலம் உலகின் முன்னணி வணிக ஆலோசகர்.. அவர் உரையாற்றுகிறார் என்றால் அதற்கு பெரும் கட்டணம் கட்டி அவரது உரையை கேட்க..


பல கோடீஸ்வரர்கள் ஏடிஎம் க்யூவில் நிற்பது போல நிற்பார்கள். அவர் முன் தான் அமர்ந்திருந்தார் மூர்த்தி.. ஒரு விழாவில் எதிர்பாராத சந்திப்பு.!


"ஒண்ணுமில்லை சார் என் கம்பெனியில் இரண்டு ஜி.எம்.கள்.. ஒருத்தர் என் மனைவியின் சகோதரர்.. இன்னொருவர் நான் தேர்வு செய்தவர் இந்த ரெண்டு பேரு இருந்தும் வணிகத்தில் நிறைய.. குழப்பங்கள் வருது அதான் என்ன செய்யறதுன்னு"... 


மெல்ல சிரித்தார் ஆர்.எஸ்.. "அதுசரி ஆமா உங்க மச்சினர் எப்படி நல்ல நாலேட்ஜ் உள்ளவரா"?


"அய்யோ இல்ல சார் என் மனைவி சொன்னதுக் காகத்தான் அவருக்கு வேலையே கொடுத்தேன்".!


"ஓஹோ.. அப்ப அந்த இன்னொரு ஜி.எம்" ? 


"அவரு பக்கா டெலண்ட் சார் அருமையான வொர்க்கர் நல்ல நாலேட்ஜ் இருந்தாலும் என்னை கேட்காம அவரை எதையும் செய்யச் சொல்ல மாட்டேன் எல்லாம் நம்ம பிடியில் இருக்கணும் சரிதானே சார்" ?


ஹா..ஹா.. "மிஸ்டர் மூர்த்தி இது தான் உங்க பிரச்சனையே.. சரியா ஒருத்தரை பத்தி தெரியாம வேலைக்கு வச்சதும் தப்பு.. வேலை செய்யத் தெரிஞ்சவரை வேலை பார்க்க விடாம இருக்குறதும் தப்பு.. புரிஞ்சதா என்றார் ஆர்.எஸ்.


மூர்த்திக்கு அவர் செய்த தவறு விளங்க ஒரு தெளிவு ஏற்பட்டது.. மகிழ்வுடன் புரிஞ்சது சார் என்றார்.


நீதி: ஒருவனை ஆராயாமல் பதவியில் அமர்த்துவதும் அமர்த்தியபின் அவன்மீதே சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும்.



தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்


தீரா இடும்பை தரும்.


[பொருட்பால்: தெரிந்து தெளிதல் : குறள் எண் : 510]



#குறள்நெறிக்_குட்டிக்கதைகள்


வேலன் ஒரு ஆட்டோ டிரைவர் அவனுக்கு 3 தங்கைகள் தந்தை இல்லை தாய் மட்டுமே எளிய குடும்பம்.. தேவைகள் அதிகம்.. வசதி வாய்ப்புகள் குறைவு மூன்று தங்கைகளையும் ப்ளஸ் டூ வரையே அவனால் படிக்க வைக்க முடிந்தது.


அவர்களும் படித்து முடித்த பின் ஒரு தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள்.. அவன் வீட்டில் இல்லாத அன்று வாசலில் வந்து நின்றார் ஒரு போலீஸ் ஏட்டு "ஏம்மா இங்க வேலன்னு ஒரு பய ஆட்டோ ஓட்டுறானே அவன் வீடு இது தானே".?


பதறிப்போனார் வேலனின் தாயார்.. "ஆமாங்கய்யா இந்த வீடு தான்.. என்ன விசயமுங்க" ?


 "கமிஷனர் அவனை உடனே ஆபிசுக்கு கூட்டியாறச் சொன்னாரு.. எங்க ஆள் வீட்டில் இல்லியா" ?


"அய்யா ஏதும் தப்பு கிப்பு பண்ணிபுட்டானா எம்மவன்" ? அய்யோ இப்படி வீட்டுக்கு போலீஸ் வர மாதிரி பண்ணிட்டானே பாவி.. நான் என்ன செய்வேன்.. எனக்கு ஒண்ணும் புரியலியே...


"அம்மா இருங்கம்மா... அதுக்குள்ள ஏன் நீங்களாவே கற்பனை பண்ணிக்கிறிங்க.! உங்க மகனோட ஆட்டோவில் பிரயாணம் பண்ணவங்க ஒரு பெட்டிய தவறவிட்டுட்டாங்க அதைக் கொண்டு வந்து உங்க மகன் கமிஷனர் ஆபிசுல கொடுத்துட்டான்..


பெட்டிக்கு சொந்தக்காரங்க இப்ப கமிஷனர் ஆபிசில் அடையாளம் சொல்லி பெட்டியை வாங்கிக் கிட்டாங்க.. அவங்க உங்க மகனுக்கு நன்றி சொல்லத்தான் கமிஷனர் அய்யா கூட்டிகிட்டு 

வரச்சொன்னாரு.. அம்மா.. அந்த பெட்டியில..


என்ன இருந்தது தெரியுமா 10 இலட்சம் பணம்.. வைர நகைங்க எல்லாம் ஒரு 25 இலட்சம் தேறும் இவ்வளவு கஷ்டமான குடும்ப சூழ்நிலை இருந்தும் பிறர் பொருளுக்கு ஆசைப்படாத மகனை பெத்து இருக்கிங்களே நீங்க மகராசி அம்மா..


ஏட்டு பேசப்பேச வேலனின் தாயார் முகத்தில் பூரிப்பும் கண்களில் ஆனந்தக் கண்ணீரும் வழிந்தது.



நீதி : நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது.. அவனைப் பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்.


ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்


சான்றோன் எனக்கேட்ட தாய்.


[அறத்துப்பால் : புதல்வரைப்பெறுதல் : குறள் எண் : 61]



#குறள்நெறிக்_குட்டிக்கதைகள்


ரொம்ப கஷ்டமா இருக்குடா ஹரி.. என்றான் ரவி..


என்னடா பிரச்சனை புதுமாப்பிள்ளைக்கு? என்றான் ஹரி.. ரவிக்கு திருமணமாகி 6 மாதங்கள் தான் ஆகியிருந்தன அவன் மனைவி மஞ்சு.. 


ரவிக்கு மாதத்தில் 20 நாட்கள் வெளியூர் சுற்றுப் பயணம் இருக்கும்.. ஆரம்பத்தில் அவன் வெளியூர் போகும் போது அலட்டிக் கொள்ளாத மனைவி..


இப்போதெல்லாம் வெளியூரில் இருந்து போன் செய்தாலே எரிந்து விழுகிறாள் சரியாக பேசுவதில்லை இதுதாண்டா பிரச்சனை என்றான்.


சரி நீ ஊருக்கு வந்த பின்பும் அப்படித்தான் இருக்காளா உன் மனைவி.? 


இல்லடா அதான் பெரிய ஆச்சரியம் அவ்ளோ அன்பா ஆசையா பேசுறா வெளியூர் போயிட்டா எரிஞ்சு விழறா புரிஞ்சிக்கவே முடியலை..


" முட்டாள் இன்னுமா புரியலை.. டேய்  நீ அவ பக்கத்திலேயே இருக்கணும்ன்னு விரும்புறாடா" என்றான் ஹரி.


என்னடா சொல்ற.!


டேய் எல்லா பெண்கள் கிட்டயும் ஒரு விநோதமான நெருப்பு இருக்கு.. தன் துணையை பிரிஞ்சா சுடும் பக்கமா வந்தா குளிரும் இப்ப புரியுதா என்றான்.


நல்லா புரியுதுடா என்றான் தெளிந்த ரவி.


நீதி : நீங்கினால் சுடக்கூடியதும் நெருங்கினால் குளிரக் கூடியதுமான புதுமையான நெருப்பை உடையவள் பெண்.


நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்


தீயாண்டுப் பெற்றாள் இவள்.



#குறள்நெறிக்_குட்டிக்கதைகள்


(நவம்பர் 15 2016இல்)


என்னண்ணே இது..! வாசக்கதவை அதிர்ஷ்ட லட்சுமி ஓயாம தட்டி கிட்டே இருக்கா திறக்க மாட்டேங்கறீங்களே.!


இல்லப்பா இது எனக்கு உடன்படாத விஷயம் தயவு செய்து வற்புறுத்தாதே.!


அண்ணே நல்லா கேட்டுக்கோங்க டிசம்பர் 31 வரைக்கும் டயம் இருக்கு 40% உங்க கமிஷன் பழைய நோட்டு ஒரு கோடி கொடுத்தா புது நோட்டு 60 இலட்சம் தந்தா போதும் அதுக்கும் 3 மாசம் டைம் இருக்கு உங்க வியாபாரத் தொடர்புக்கு இதெல்லாம் ஜுஜுபி அதிக பட்சம் நீங்க20 நாளில் மாத்திடலாம் நல்லா யோசிச்சு சொல்லுங்க.


தம்பி எனக்கு இருக்கும் தொடர்புக்கு இது ஈசி தான்.. ஆனா ரிஸ்க் அதிகம்.. ரெண்டாவது இதுல மாட்டிகிட்டா இப்ப எனக்கு இருக்குற தொழிலும்சேர்த்த பணமும்பெயரும் போயிடும்.. முக்கியமா தேச விரோதமான இச் செயலை செய்ய எனக்கு விருப்பமும் இல்லை.. நீ 60% கமிஷன் கொடுத்தாலும் இந்த நோட்டு மாத்துற வேலை எனக்கு வேணாம்.. நீ வேற ஆளைப்பாரு.. என்னை விட்டுடு..!


நீதி : பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள்.


ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை


ஊக்கார் அறிவுடை யார்.