Tuesday 31 May 2016

கூகுள் ஆப்பிள் தலைமையகத்தில் 2

#கூகுள்_ஆப்பிள்_ஃபேஸ்புக்_தலைமையகத்தில்

பார்ட் - 2

வடிவேலு கிணத்தைக் காணோமுன்னு தேடினா மாதிரி கூகுள் ஆபிசின் வாசலைக் காணோம்.! 4 முறை சர்க்கஸ் கூண்டுக்குள் சுற்றும் மோட்டார் சைக்கிள் வீரன் போல சுற்றி சுற்றி மெயின்ரோடுக்கே வந்து கொண்டு இருந்தோம். சரி கூகுள் மேப்பிலேயே கேட்டுவிடலாம் என்று சிங்கத்தின் குகைக்கே சென்று சந்தித்தது போல கூகுள் ஆபிசில் நின்று கொண்டே கூகுள் ஆபிசிற்கு வழி எங்கே எனத் தேடினோம் you are hear என்று...

நாங்கள் இருக்கும் பகுதியையே காட்டி கூகுள் சிங்கம் எங்களை அசிங்கப் படுத்தியது.. என்னடா இது இந்த கலிஃபோர்னியாவுக்கு வந்த சோதனை என திருவிளையாடல் பாலையா போல புலம்பினோம்.. மேப்பை ஆன் செய்து அம்புக்குறி வழி காட்ட மீண்டும் கிளம்பினோம் அது சுற்றி சுற்றி விக்ஸ் என்று எழுதியது போல மீண்டும் அங்கேயே கொண்டுவந்து விட்டது. இத்தனைக்கும் கூகுள் நுழைவாயில் எங்கே இருந்தது தெரியுமா.?

நாங்கள் நின்ற அதே ரோட்டுக்கு எதிரே தான்..! இது பழைய அலுவலகமாம். இதை சொல்லிவிட்டு போன அமெரிக்கர் ஏன் வாய் பொத்தி சிரித்துக் கொண்டே போனார் என்பது உங்களுக்கு தெரியாதா என்ன.? இங்கும் அனுமதி இல்லை என்றார்கள் ஏற்கனவே பல மூத்திர சந்துகளில் அடி வாங்கியதால் எதையும் தாங்கும் இதயம் இருந்தது.. ஆனால் கூகுளில் ஒரு வசதி கூகுள் மேப் வேன், கூகுள் ப்ளஸ் அரங்கம் எல்லாம் வெளியிலிருந்தது.

அதையெல்லாம் பார்வையிட்டோம்.. இந்த கூகுள் கார் ஒரிடத்தில் போய் நின்றவுடன் அங்கிருந்து சிக்னல்களை சாட்டிலைட்டுக்கு அனுப்பி சாட்டிலைட் அந்த ஏரியாவை படம் பிடித்து அனுப்ப மீண்டும் அதை மேப்பாக மாற்றுகிறது கூகுள் என்றார்கள். கூகுள் ப்ளஸ் ஃபேஸ்புக்கை விட வீடியோ போட்டோ எல்லாம் துல்லியம்.. இருந்தும் என்ன தான் சன்னிலியோன் வந்தாலும் சில்க் ஸ்மிதா மவுசு குறையாதது போல ஃபேஸ்புக் இடமே தனி.

ஆண்ட்ராய்டு வெர்ஷன்களான, லாலிபாப், சாக்லேட் கப், கிட்காட் போன்ற சிம்பல்களை கண்காட்சி போல ஒரு பூங்காவில் வைத்து இருந்தார்கள்.. போட்டோக்களால் அவற்றை சிறை பிடித்தோம்.இங்கும் மின்சார காருக்கு சார்ஜ் ஸ்டேஷன் இருந்தது.. முக்கியமான ஒன்று கூகுளிலும் பேஸ்புக்கிலும் அவர்கள் பணியாளர்களுக்கு சைக்கிள் கொடுத்து இருந்தார்கள் லஞ்ச் இடைவேளை அல்லது சாலையின் எதிரே இருக்கும் கூகுளின் மற்ற... 

அலுவலகங்கள் போக இதில் தான் போகணுமாம்!அந்த சைக்கிள்கள் கூகுள் நிறமான பச்சை மஞ்சள் சிவப்பு நீளம் என நான்கு கலரிலும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் சைக்கிள் ஃபேஸ்புக்கின் நீல கலரிலும் இருந்தது.! அடுத்து கூகிள் ஸ்டோர்.. பேனா முதல் டி-சர்ட், வாட்ச், வாட்டர் பாட்டில்கள், டைரிகள், பைகள், ஹேண்ட்பேகுகள் விதவிதமாக இருந்தன விலை ஆப்பிள் ஸ்டோரை விட கம்மி.. ஆப்பிளில் 30 டாலருக்கு ஒரு டி- சர்ட் ஆனால்..

இங்கு ஒரு டி-சர்ட் 10 டாலர் தான்.. இஷ்டம் போல ஷாப்பிங்கினோம். மற்ற இடங்களுக்கு போனதை விட கூகுள் போனது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.. தானாக இயங்கும் கூகுள் காரை மாலை 4 மணிக்கு பார்க்கலாம் என்றார்கள்.. ஆனால் தானாக இயங்கிய எங்கள் வயிறு பசி என்றதால் கிளம்பினோம். உள்ளே போய் பார்க்கும் வாய்ப்பு எங்குமே கிடைக்கவில்லை இருப்பினும் இன்று உலகமே போற்றுகின்ற இரு வலை தளங்களான...

கூகுள் ஃபேஸ்புக் தலைமை அலுவலகங்களுக்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கும் நேரில் செல்லக் கிடைத்த வாய்ப்பு எவ்வளவு அரிது.! மீண்டும் இந்தக் கட்டுரையில் அவ்வையார் போல சொன்னால் அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது அதனினினும் அரிது அமெரிக்கா போவதரிது அதனினும் அரிது கலிபோர்னியா சென்று கூகுள் அலுவலகம் செல்வதரிது.. இந்த பெரும் வாய்ப்பை வழங்கிய தண்டபாணித் தெய்வமே... நன்றி.!

Monday 30 May 2016

கூகுள் ஆப்பிள் தலைமையகத்தில் 1

#கூகுள்_ஆப்பிள்_ஃபேஸ்புக்_தலைமையகத்தில்

சென்ற முறை பேஸ்புக் தலைமையகத்திற்கு லீவுநாளில் சென்றதால் உள்ளே செல்ல முடியவில்லை ஆகவே இப்போது வேலை நாளில் செல்வோம் எனப் போயிருந்தோம்.. நீ எப்படி வந்தாலும் கொண்டையை மறைக்க முடியாது நோ அட்மிஷன் என நாகரீகமாக கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார் மார்க்கின் செக்யூரிட்டி.. வாசலில் இருந்த போர்டு டிசைன் மாறி இருந்தது அங்கு போட்டோ எடுத்துக்கொண்டு ஆறுதலடைந்தது தான் மிச்சம்.

சாலையின் எதிரே இருந்த மெகா பில்டிங்கும் ஃபேஸ்புக்கின் பில்டிங் தான் ஆனால் அங்கும் அனுமதி இல்லையாம். இனி அங்கு நிற்பதால் பயனேதும் இல்லை என்பதால் ச்சீ ச்சீ இந்த ஃபேஸ்புக் புளிக்கும் என்றபடி எலே பசுபதி எட்றா வண்டியை என்றோம்.. நண்பர் ராஜா வந்திருந்தார்.. வண்டி நேரே ஆப்பிள் தலைமையகத்திற்கு சென்றது. ஆப்பிள் அலுவலகம் மிக மிக பிரம்மாண்டமாக இருந்தது கார் பார்க்கிங் கடலுக்குள் வண்டி நுழைந்தது.

வாசலில் கருப்பு நிற கோட் சூட் டை சகிதம் நின்ற ஆபீசர்களை பார்த்தோம் கம்பெனியின் ஜி.எம் போல இருந்த அவர்கள் தான் வாலட் பார்க்கிங் டிரைவர்களாம்.! காரை அவர்கள் வசம் செலுத்தி விட்டு டோக்கன் பெற்றுக் கொண்டு நடந்தோம்.. பார்க்கிங்கில் மின்சாரத்தில் இயங்கும் கார்களுக்கு சார்ஜ் ஸ்டேஷன் அமைத்திருந்தார்கள். பலகார்கள் அங்கே தங்கள் ஸ்நாக்சான மின்சாரத்தை குடித்துக் கொண்டு ரிலாக்சாக நின்றிருந்தன.

அமெரிக்காவில் தற்போது பரபரப்பாக விற்பது இந்த வகைக் கார்கள் தான் 8மணிநேர சார்ஜ் போட்டால் 300 மைல் போகலாம்.. புகை விடாது என்பதால் சுற்றுப்புற சூழல் மாசு படாது.. 8 மணிநேர கரண்ட் கட் இருக்கும் நம்ம ஊருக்கெல்லாம் இது வந்தால் எப்படி இருக்கும் என விளையாட்டாக யோசித்துக் கொண்டே ஆப்பிள் அலுவலக முகப்பிற்கு வந்தோம். ஆப்பிள் அலுவலகங்கள் Infinite Loop என்று அழைக்கப்படுகிறது இதற்கு அர்த்தம்..

எல்லைகளற்ற பாதை என்பதே.! இந்த லூப்களை அவ்வையார் முருகனைப் பற்றி பாடியது போல ஒன்று இரண்டு மூன்று என வரிசைப்படுத்தி இருந்தனர் லூப் 1 தான் விசிட்டர்களுக்கான பாதை பந்தாவாக உள்ளே போனோம் ஹாலிவுட் நடிகைகள் போல இருந்த ரிசப்ஷனிஸ்ட்டுகள் தங்கள் தீவிரவாத கண்களில் எங்களை கொன்று கொண்டே ஆங்கிலக் குயில் குரலில் பேசியதன் சுருக்கம் என்ன தெரியுமா நண்பர்களே... ப்ளீஸ் கெட் அவுட்

முறையான அனுமதியின்றி உள்ளே போக முடியாதாம்.. இதைத்தானே அந்த ஃபேஸ்புக் டைலரும் சொன்னான் என்பது நினைவுக்கு வந்தாலும்.. இங்கே அழகிய பெண்கள் சொன்னது மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது (அவ்வ்வ்வ்) வழக்கம் போல வாசலில் நின்று போட்டோ.. பிறகு பார்த்தால் ஆப்பிள் ஸ்டோர் இருந்தது.. இங்காவது நம்மை அனுமதிப்பார்களா என தயங்கி வாசலில் நின்றால் இங்கே மட்டும் உள்ளே இருந்து வந்து நம்..

கையைப் பிடித்து இழுத்தார்கள்.. ஆப்பிள் அலுவலகத்துக்குள் தான் விசிட்டர் தடை ஆப்பிள் ஸ்டோருக்கு தடை போட ஸ்டீவ் ஜாப்ஸ் என்ன முட்டாளா.! பிஸினஸ் அல்லவா.. அதுவும் அடர் பச்சை பனியன் அணிந்த க்ரீன் ஆப்பிள் போல இருந்த அழகிகள் வந்து வாட் யூ வாண்ட் எனக் கேட்கும் போது வழிந்தோடும் (அந்த வழியல் அல்ல) ஆவலுடன் நீ தான் என மனதிற்குள் சொல்லி அல்ப சந்தோஷம் அடைந்துவிட்டு வாட்ச் என்றேன்.

ஹாய் அயாம் கெல்லி என்றாள் அந்த அமெரிக்கச் செல்வி மெல்ல தோளுரச உடன் அவள் நடந்து வர வேண்டுமென்றே வாட்ச் செக்ஷனை கடந்து மொத்த ஸ்டோரையும் ஒரு க்ளான்ஸ் சுற்றிவிட்டு மீண்டும் வாட்ச் செக்ஷன் வந்தோம். ஒவ்வொரு வாட்சாக எடுத்து டெமோ காட்டினாள்..அவ்வப்பொது குறும்புக் கண்களில் என் ஆசையையும் மீட்டினாள் (அட கவிதை) 299 டாலரில் ஆரம்பித்து 700 டாலர்கள் வரை விலை உள்ள வாட்சுகள் அவை.

ஐ போன்கள், ஐ பாட் மற்றும் ஐ பேடுகள் அவற்றிற்கான அக்சசரீசுகள், வாட்சுகள், டி-சர்ட்டுகள் முதலியவை தனித்தனி செக்ஷன்களாக இருந்தன அழகான அலங்காரம் அருமையான டிஸ்ப்ளே உடலை வருத்தாத ஏ.சி என ஷாப்பிங் அனுபவம்.. ஆப்பிள் வாட்சுகளில் இருக்கும் அதே வசதிகள் கொண்ட வேறு பிராண்ட் வாட்சுகள் இதைவிட மலிவு என்றார் ராஜா. வாட்ச் வாங்கும் முடிவை தள்ளிவைத்து பேச்சை மாற்ற யோசித்தேன்.

அவள் கையிலும் ஒரு ஆப்பிள் வாட்ச் இருந்தது இது நன்றாக இருக்கிறதே என்றவுடன் தன் வுட்பி பரிசளித்தான் என்று சொல்லி சில விநாடிகளில் என் அன்புத் தங்கையாக மாறினாள்.. நேரம் சரியில்லாததால் வாட்ச் வாங்கும் முடிவை தள்ளி வைத்துவிட்டு டி-சர்ட் செக்ஷனுக்கு போனோம்.. இந்த முறை கெல்லியிடம் இருந்து தள்ளியே நடந்தேன்.. கொண்ட துக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் கறுப்பு நிற டி - சர்ட் ஒன்றை எடுத்தேன்.

விவரம் இல்லாமல் ஹேய் நைஸ் செலக்ஷன் என்றாள் கெல்லி.. அவசர அவசரமாக பில் போட்டுவிட்டு கிளம்பும் போது நாம சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக்கலாமா என அவளிடம் கேட்டு (துப்புவது தடை செய்யப்பட்டுள்ளது) புண்பட்ட மனதை போட்டோ எடுத்து ஆற்றினேன்.. வண்டி அடுத்து நேராக கூகுள் அலுவலகம் சென்றது.. அங்கு போய் நின்றதும் அதிர்ந்தோம்.. ஆம் கூகுளின் வாசலைக் காணோம்... அது பற்றி அடுத்து.... (வரும்..)

சாப்ளின் வாழ்ந்த மண்ணில்..

கலிபோர்னியாவில் ஃப்ரீமாண்ட் என்ற ஊரில் தங்கியிருந்தோம்.. இம்முறை இங்கு 7 நாட்கள் தங்கியிருந்தோம்.. வாஷிங்டனில் நடந்து களைத்த கால்களுக்கு முதல் இரண்டு நாள் ஓய்வளித்தோம். தங்கியிருந்த ஓட்டல் வாசலுக்கு கூட வரவில்லை.. மூன்றாவது நாள் எங்கள் நிகழ்ச்சி ஆக முதல் 3 நாட்கள் எங்கும் போகவில்லை.. நாங்கள் கிளம்புவதற்கு முதல்நாள் தான் தெரிந்தது இதே ஃப்ரீமாண்டில் தான் சிலகாலங்கள் சாப்ளின் வசித்தது.

உலகம் முழுவதும் மொழிகளை கடந்து மக்கள் மனதில் நின்ற ஒப்பற்ற கலைஞன் அல்லவா அவர்.. மெளனப்படங்களின் முடிசூடா சக்ரவர்த்தி... ஒரு லெஜண்ட் .. வாழ்ந்த மண் இது என்று தெரிந்த பின்பு யார் தான் அங்கு போக விருப்பமில்லாமல் இருப்பார்கள். அதிலும் எங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் அவர் மானசீக குரு ஆகவே எப்படியும் அங்கு போய் எங்கள் காலடியை அவர் வாழ்ந்த அம் மண்ணில் பதித்து அவரது ஆசிகளைப் பெற வேண்டும் என முடிவெடுத்தோம்... விசாரித்தோம்.

அந்த ஊரில் இருக்கும் நம் மக்களுக்கே அது தெரியவில்லை.. அப்படியா என்று எங்களிடமே கேட்டார்கள்.. கடைசியாக நண்பர் முத்தழகு ஆமா எனக்குத் தெரியுமே என்றார்.. எங்க இருக்குன்னு உற்சாகமாக கேட்டோம் ஒரு 5 மைல் தூரம் தான் நானே கூட்டிகிட்டு போறேன்னு சொல்லி வயிற்றில் கோக் வார்த்தார். காலை 10 மணிக்கு கிளம்பினோம். 10 நிமிட கார்ப் பயணம் சுற்றிலும் அழகிய பச்சைப்பசேல் மலைக்குன்றுகள் தெரிந்தன.




இயற்கை அழகு தாலாட்டும் அமைதியான ஊர்.. நைல்ஸ் என்பது அவ்வூரின் பெயர்... காரை நிறுத்தி இறங்கியவுடனே அழகிய மரங்கள் புல்வெளிகள் என காமிராவுக்கு வேலை வைத்தது.. சார்லி சாப்ளின் மியூசியம் என நாங்கள் நினைத்து போனது இரயில்வே மியூசியம் எனத் தெரிந்து எடிசன் கண்டு பிடிப்பை வாங்கினோம். நண்பர் முத்தழகு விசாரிக்கப் போய்விட்டு வந்து சாப்ளின் மியூசியம் இதுவல்ல அது அங்க இருக்கு ஆனா... என்ன ஆனா.?

இங்குள்ள எல்லா மியூசியங்களும் சனி ஞாயிறு தான் திறந்திருக்குமாம் இன்னிக்கு லீவாம் என்றார் மிகுந்த ஏமாற்றத்துடன். எங்களுக்கும் ஏமாற்றம் தான் சரி பரவாயில்லை வெளியே நின்னாவது போட்டோ எடுத்துக்குவோம் என மனதை தேற்றிக்கொண்டு கிளம்பினோம் ரெயில்வே மியூசியம், மெளன படங்கள் கால மியூசியம், புரதான பொருட்கள் உள்ள மியூசியம், சினிமா புரொஜக்டர் மியூசியம் என குட்டி குட்டி மியூசியங்கள் அங்கிருந்தன.



எல்லாம் தனியார் வைத்திருக்கும் மியூசியங்கள் ஒரு சிறிய ஜவளிக்கடையின் ஒரு தளம் அளவில் தான் இருந்தன 10 நிமிடங்களில் சுற்றிப்பார்த்து விடலாம்.! சாப்ளின் மியூசியமும் பூட்டி இருந்தது ஆனால் உள்ளே ஆங்கிலப் படங்களில் வருவது போல காந்தி கண்ணாடியும் சிவப்பு ரோஜாக்கள் கமல் தொப்பியும் அணிந்த 70 வயது மதிக்கத்தக்க கிழவர் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்..எங்களைப் பார்த்ததும் இருங்கள் என சைகை செய்தார்.

அட நமக்கு அதிர்ஷ்டம் காத்திருக்குன்னு நினைத்து காத்திருந்தோம்.. 15 நிமிடம் ஆகியும் பேச்சு நின்றபாடில்லை ஃபேக் ஐடியிடம் கடலை போடும் ஃபேஸ்புக் போராளி போல அது நீண்டு கொண்டிருந்தது.. ஒரு வழியாக 23வது நிமிடத்தில் நிறுத்தினாரோ அல்லது செல் பேட்டரி தீர்ந்துவிட்டதோ வெளியே கதவை திறந்தார்.. அவர் வெளியே வருவதற்குள் கழுத்தில் சங்கிலி கட்டிய இரண்டு பெருச்சாளிகள் ஓடிவந்தன சங்கிலியின் மறுமுனை..



கிழவர் கையில் இருந்தது.. அலட்சியமாக எங்களைப் பார்த்து சாரி ஜெண்டில்மேன்ஸ் த மியூசியம் ஓபன் ஆன் வீக்கெண்ட்ஸ் ஒன்லி என்றார்.. அதுக்கேண்டா 25 நிமிஷம் உக்காரவச்ச என்று மைண்ட் வாய்சில் திட்டும் போது கீழே பெருச்சாளி "வவ் வவ்" என குரைத்தது.. ஆச்சரியமாக இப்போது அதைப் பார்த்தேன்.. அட நாய் தானா..! அந்த வகை குட்டியான நாயை அப்போது தான் பார்க்கிறேன். அங்கும் வாசலில் தான் போட்டோ.!

சரி சாப்ளின் தங்கியிருந்த வீடு எங்கேன்னு கேட்டோம் அதோ ஒரு ஓட்டல் இருக்கே அதாங்க அவர் இருந்த வீடு என்றார்கள்.. சாப்ளின் வாழ்ந்த ஊர் என்ற பெருமையை கட்டிக்காக்கும் படி எந்த அடையாளங்களுமே அங்கு இல்லை என்பது மிக வருத்தமாக இருந்தது.. அமைதியான அந்த ஊரின் சுற்றுப்புறத்தில் ஒரு மெல்லிய சோகம் காற்றில் கலந்திருப்பது போல ஒரு உணர்வு.. ஒருவேளை அது சாப்ளினின் ஆத்ம சோகமாகவும் இருக்கலாம்.


Friday 27 May 2016

அமெரிக்கப் பாராளுமன்றத்தில் 2

#அமெரிக்கப்_பாராளுமன்றத்தில்

பார்ட் - 2

சசி அணிந்திருந்த வெள்ளி அரைஞாண் கயிறு தான் மெட்டல் டிடெக்டரை அலற வைத்தது அதை கழட்டச் சொல்லி வாங்கிக் கொண்டார்கள் அதைப் பற்றி நாங்கள் விளக்க அதை காதில் வாங்காது ஒரு கெமிக்கல் தடவிய பேப்பரில் அதைத் துடைத்து பேப்பரை ஸ்கேன் செய்தார்கள் இன்னொரு டிடெடக்டரில் தடவினார்கள் இப்படி அதை பல்வேறு சோதனைக்கு உள்ளாக்கி திருப்தியானதும் அதை ஒரு ஜிப்லாக் பாலிதீன் கவரில் போட்டு..

அங்குள்ள லாக்கரில் வைத்துவிட்டு அதற்கு ஒரு டோக்கன் தந்தார்கள்.. திரும்பிப் போகும் போது தான் வாங்கிக்கொள்ள முடியுமாம்.. உள்ளே நுழைந்தோம்.. பெரிய ஐந்து நட்சத்திர ஓட்டல் லாபி போல ஒரு கூடம் சுற்றிலும் ஆளுயர உயிர்ப்பு மிக்க சிலைகள்.. நடுநாயகமாக அமெரிக்கன் லேடி என்னும் விஸ்வரூப சிலை.. அங்கிருந்த கவுண்டரில் போய் நமது டிக்கெட் தந்தவுடன் டூர் பாஸ் ஒன்றும் ஸ்டிக்கர் ஒன்றும் தருகிறார்கள்.






ஸ்டிக்கரை சட்டையில் தெரியும் படி ஒட்டிக் கொள்ளவேண்டும்.. நீண்ட வரிசையில் போய் காத்திருந்தோம்.. இந்த நேரத்தில் இந்த பார்லிமெண்ட் பற்றி பார்த்துவிடுவோம். இந்தக் கட்டிடம் கேபிடல் பில்டிங் என்று அழைக்கபடுகிறது. கேபிடல் என்பது லத்தீன் மொழிச் சொல் இதற்கு ஆலயம் என்பது பொருள் வில்லியம் தோர்ன்டன் என்பவரால்1793 ஆம் ஆண்டு துவங்கி 1800ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது கேபிடல்.

கட்டிடத்தின் கட்டுமான தரைப்பகுதி மட்டுமே 16.5 ஏக்கர்கள். பொதுவாக அமெரிக்காவில் உள்ள புரதான கட்டிடங்கள் எல்லாம் ரோமானிய கட்டிடக் கலையை அடிப்படையாக கொண்டிருக்கும்.. எந்த மாநிலம் போனாலும் அந்த பாணி தெரியும்.. இதை வாஸ்து என நம்புபவர்களும் உண்டு.. இப்போது உள்ள பார்லிமெண்ட் இதே கட்டிடத்தின் வடக்குப் பகுதியில் உள்ளது கிழக்குப் பகுதியில் உள்ளது பழைய பார்லிமெண்ட் ஆகும்.






இதைத்தான் சுற்றுலா பயணிகளுக்கு காட்டுகிறார்கள்.. அமெரிக்க பார்லிமெண்ட் காங்கிரஸ் என்றழைக்கப்படுகிறது.. ஆங்கிலத்தில் குரங்கு கூட்டத்திற்கு காங்கிரஸ் என்று பெயர்.. நாங்கள் போன அன்று இன்றைய பார்லிமெண்ட் கட்டிடத்தில் அவை நடந்து கொண்டு இருந்தது அதை பார்க்க வேண்டும் என்றால் காங்கிரஸ் ஆபிஸ் போய் அனுமதிக் கடிதம் வாங்கிப் பார்க்கலாம் என்றார்கள். டூர் பாசை காட்டினால் போதுமாம்.

அது தெற்குப் பகுதியில் இருப்பதாக சொன்னார்கள் 3கி.மீ நடக்கணுமாம்.! ஆகவே அந்த ஆணியை பிடுங்கவே இல்லை. இதோ வரிசை நகர ஆரம்பித்துவிட்டது உள்ளே போகலாமா.! க்யூவில் நிற்கும் போது செல்ஃபி எடுத்தேன் பின்னால் நின்ற சீனச்சிறுமி அதில் எட்டிப் பார்த்து என்னை கலாய்த்துக் கொண்டிருந்தாள்.. (நம்ம மூஞ்சிலேயே தெரியுதோ)ஒவ்வொரு 20 பேரையும் முதல் நிலைக்கு அனுப்பி அவர்களை ஒரு குழுவாக ஆக்கி...


அதற்கு ஒரு கைடு தலைமை தாங்குகிறார் எங்களுக்கு அழகிய கருப்பினப் பெண் ஒருவர் கைடாக வந்தார்.. இயல்பிலேயே நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவராக இருந்தார் அவரது பேச்சுக்கு எங்கள் குழுவினர் சிரித்துக் கொண்டே இருந்தனர்..அவர் கர்ப்பிணியாக இருக்கிறார் என்பதை மேடிட்ட வயிறு சொல்லியது... அவர் முகத்தில் குறும்பும் தாய்மை உணர்வும் கலவையாய் மிளிர்ந்தது அவர் கையில் 20 ஹெட் செட் இருந்தது

முதலில் எங்கள் அனைவருக்கும் ஓரு ஹெட் செட் வழங்கப்பட்டது.. அந்த 20 ஹெட்செட்டும் அந்தப் பெண் பேசும் மைக்ரோ போனின் அலை வரிசையில்  இருந்தது.. கைடு பேசுவதை நாங்கள் துல்லியமாக கேட்க அந்த ஏற்பாடு.. முதலில் ஒரு மாடம் போன்ற பகுதிக்கு போனோம் ஜார்ஜ் வாஷிங்டன் லிங்கன் போன்றவர்களின் சிலைகள் இருந்தன. அதன் பின் வந்த பெரிய ஹாலிலும் பிற ஜனாதிபதிகளின் சிலைகள் இருந்தன.



சபாநாயகர் அறை, விவாத அறை, செனட் நடக்கும் இடம் அதன் பெருமை, கூரை ஓவியங்கள், அதன் வரலாறு என அழகான ஆங்கிலத்தில் விவரித்துக் கொண்டே வந்தார் என்ன ஒரு குறை என்றால் மாளிகையின் பல பகுதிகளில் மராமத்து பணிகளுக்காக திரும்பிய பக்கம் எல்லாம் ஸ்டீல் சாரங்களும் வெள்ளைத் துணிகளும் போட்டு மூடியிருந்தார்கள் சன்னிலியோனை தழைய தழைய பட்டுப்புடவையில் பார்த்தது போல ஏமாற்றம் வந்தது. 



இருப்பினும் சுவாரஸ்யம் குறையாமல் டூரை நடத்தினார் அப்பெண்.. வரும் பள்ளிப் பிள்ளைகளிடம் என்ன வகுப்பு படிக்கிறார்கள் என்பது தெரிந்து அதற்கேற்றபடி அவர்களிடம் கேள்வி கேட்டு பதில் வாங்கினார்.. அமெரிக்க அரசியல் வரலாற்றை மிகத்துல்லியமாக விரல் நுனியில் வைத்திருந்தார்.. எல்லா கைடும் அப்படித்தானாம்.. அவர் சொன்ன ஒரு சுவையான செய்தி அந்த காலத்து சபை நடந்த போது எதிர்கட்சியினர் என்ன பேசினாலும்..

ஆளுங்கட்சி அதை கண்டுபிடித்து விடுமாம்.. வடிவேலு அர்ஜுனிடம் மட்டும் அக்கா கடையை பத்தி சொன்னது எப்படி ஊருக்கே தெரிந்ததோ அதைபோல எதிர்க்கட்சியினர் இங்கு குழம்புவார்களாம். வெகுநாட்கள் கழித்து தான் உலகுக்கு அந்த உண்மை தெரிய வந்தது.. அது ஒரு சுவாரஸ்யமான செய்தி அதை அப்படியே டெமோ செய்து காட்டினார் அனைவரும் வியந்தோம் அது என்ன தெரியுமா.! அது பற்றி நாளை 

(வரும்)


அமெரிக்க பாராளுமன்றத்தில்..1

பார்ட் - 1

வாஷிங்டன் அருகில் இருக்கும் ஹெர்ண்டன் என்னும் ஊரில் நண்பர் மகேஷ் வீட்டில் தங்கியிருந்தோம் வாஷிங்டன் அங்கிருந்து 32 மைல் தூரம் (மதுரையில் இருந்து விருதுநகர் தூரம்) நண்பர் சிவாவுடன் அன்று மதியம் அமெரிக்க பார்லிமெண்ட் கட்டண சுற்றுலாவிற்கு டிக்கெட் வாங்கி இருந்தோம். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் மதியம் 2:30 மணி. காலை உணவு வாஷிங்டன் தமிழ்ச்சங்கத் தலைவர் பார்த்தசாரதி வீட்டில்.

டாக்டர் எம்.எஸ் உதயமூர்த்தியின் மாணவர் கடலூர் அருகே சிறுகிராமம்.. ஏழ்மையான குடும்பம் கல்வியறிவால் மட்டும் சாதித்து இன்று வாஷிங்டனில் மிகப் பெரிய நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக இருக்கிறார்.. வார்த்தைக்கு வார்த்தை எம்.எஸ் உதயமூர்த்தியை சிலாகித்தார் இந்தியாவில் ஒரு மாற்றம் கொண்டுவர பல முயற்சிகளை முன்னெடுத்து பல தளங்களில் செயல்படுகிறார் வலை தளம் ஒன்று நிறுவியிருக்கிறார்.



அதில் ஒரு இலட்சத்திற்கு அதிகமான உறுப்பினர்களை சேர்த்து இருக்கிறார்.. இயற்கை உணவின் அவசியத்தை வலியுறுத்துகிறார். அதற்கான உணவகங்கள் அமைக்க முயற்சிக்கிறார்.. இந்தியாவில் கல்வி முறை மாற ஆலோசனைகள் வைத்திருக்கிறார்.. கடலூர் வெள்ள நிவாரணம் முதல் பல காரியங்களுக்கு நிதி திரட்டி தந்திருக்கிறார். டைனமிக் பார்த்தசாரதி.. அவர் வீட்டில் சாப்பிட்டுவிடு கிளம்பினோம்.

எங்களை ரயில் ஏற்றி வாஷிங்டன் அனுப்பினார்.. நாங்கள் வந்து இறங்கிய இடம் ஒயிட் ஹவுஸ் இருக்கும் வீதிக்கு பக்கவாட்டில் இருந்தது.. நேற்று இதே இடத்திற்கு காரில் வந்தோம்.. வாஷிங்டனில் ஓடும் போட்டோமாக் நதி பாரம்பரியம் மிக்கது அமெரிக்காவை உலுக்கிய வாட்டர் கேட் ஊழலில் மைக் வைத்து பேச்சுகளை பதிந்து ஊழல் செய்தார்களே அது நடந்தது இந்த நதிக்கரையில் அமைந்திருந்த கட்டிடம் ஒன்றில் தான்.

அங்கிருந்து நடந்தோம் அமெரிக்காவின் நேச்சுரல் மியூசியத்திற்கு இது நிச்சயம் பார்க்க வேண்டிய மியூசியம்.. நாங்கள் போன போது வாஷிங்டன் முழுவதுமே மராமத்து பணிகள் நடந்து கொண்டிருந்தது அடுத்த முறை போகும் போது புதுப் பொலிவுடன் இருக்கும் என நம்புகிறோம். ஆங்காங்கே தடுப்புகளும் பாலிதீன்  பட்டைகள் திறப்புவிழாற்கு கட்டப்பட்ட ரிப்பன் போல எங்கள் பாதைகளை மாற்றிவிட்டது.10 நிமிடம் நடந்தோம்.





மியூசியத்தின் வாசலில் பார்த்தால் பெருங்கூட்டம் எல்லோரும் சபரிமலை மகர ஜோதிக்கு வந்தது போல ஆம்னி பஸ்களில் வந்து இறங்கி அலை அலையாக மியூசியத்தை மொய்த்தனர்.. இந்த மியூசியம் பெரியது சுற்றிப்பார்க்க குறைந்தது 4 மணிநேரம் ஆகும் என்றார்கள்.. மணி பார்த்தோம் மதியம் 1:45  அமெரிக்க பார்லிமெண்ட் போக வேண்டிய நேரம் 2:30 வெறும் 45 நிமிடமே இருந்தது.. இங்கு அலைமோதும் கூட்டத்தில்..



உள்ளே போகவே 45 நிமிடம் ஆகிவிடும் ஆகவே இந்த மியூசியத்தை பார்க்கும் ஆசையை தியாகம் செய்தோம்.. நண்பர் சிவா சரியாக 2 மணிக்கு வர நேராக பார்லிமெண்ட் கிளம்பினோம்.. 10 நிமிட பயணத்தில் அந்த வெள்ளை கோபுரம் தெரிந்தது.. இதைத்தான் ஒருகாலத்தில் நான் ஒயிட் ஹவுஸ் என நினைத்தது உண்டு.. இங்கும் மராமத்து பணிகள் நடந்து கொண்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக வாசலில் கார் பார்க்கிங் கிடைத்தது.



இறங்கி ஒரு கோக் டின் பர்கர் வாங்கி சாப்பிட்டுக்கொண்டே நடந்தோம் வாசலில் இருந்து 3 கி.மீ கட்டிடத்தை சுற்றி நடந்து போய் டூர் நடக்கும் இடத்திற்கு போக 15 நிமிடம் ஆயிற்று.. உலகின் பல நாடுகளில் இருந்து வந்து குவிந்திருந்த மக்கள் வெள்ளம்.. ஒவ்வொருவரும் கடுமையான பாதுகாப்பு சோதனைகள் தாண்டியே உள்ளே நுழையவேண்டும்.. வரிசையில் நின்றோம் எங்களை சோதித்த போது மெட்டல் டிடெக்டர் அலறியது.!

வரும்...


Wednesday 25 May 2016

போயஸ்கார்டனில் கலைஞர்...

#போயஸ்கார்டனில்_கலைஞர்

ஒரு கலகல கற்பனை..

அன்புத்தங்கை ஜெயலலிதாவின் அழைப்பில் தன் பிறந்தநாளன்று போயஸ் கார்டன் செல்லத் தயாராகிறார் கலைஞர்.. கலைஞரின் போயஸ் செல்லும் பயண திட்டத்தை வடிவமைத்து இருக்கிறேன் ஃபாரின் Ad ஏஜென்சி இந்த பயணத்தை சிறப்பாக வழி நடத்தும் என்றபடி சபரீசன் உள்ளே வர அடுத்த தெருவிற்கு போக அட்வர்டைஸ்மெண்ட் அட்ராசிட்டியா முதலில் இது முடியட்டும் பிறகு அதுவாகவே விடியும் என்றார் கடுப்புடன் கலைஞர்.

நிலமை சரியில்லாதை புரிந்து கொண்ட சபரி ஒதுங்கிவிட கலைஞர் தயாளு அம்மாள் ராசாத்தி அம்மாள் சகிதம் புறப்படுகிறார்.. இருவருடனும் கலைஞர் செல்வது ரொம்ப அபூர்வமாயிற்றே என பிற்பாடு ஒரு நிருபர் கேட்டபோது அன்றொரு நாள் மெரினாவில் நடந்த உண்ணாவிரதத்தில் இவர்கள் என்னுடன் வந்தார்கள் இப்போது உண்ணும் விரதத்திற்கும் இவர்கள் என்னுடன் வந்தார்கள் என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

போயஸ்கார்டன் வீடு நன்கு அலங்கரிக்கப்பட்டு இருந்தது.. ஐவர் குழு அமைச்சர்கள் வேலையாட்களை நம்பாமல் அவர்களே பணியில் இறங்கியிருந்தார்கள்.. செங்கோட்டையன் சீரியல் பல்பு கட்ட, ஓ.பிஎஸ் வாழைமரத்தை கட்ட, பண்ருட்டி, ராஜேந்திரபாலாஜி , விஜயபாஸ்கர் மூவரும் ஏணிபோட்டு தோரணம் கட்ட இப்படி ஐந்து அமைச்சர்களும் பரபரப்பாக இருந்தனர் சசிகலாவே ஆரத்தி கரைத்த அதிசயமும் நடந்தது.

பிற அமைச்சர்கள் அனைவரும் தங்கள் கையில் கலைஞர் புகைப்படத்தை வைத்துக் கொண்டு சாலையின் இரு பக்கமும் நின்று கொண்டிருந்தார்கள் திமுக அதிமுக தொண்டர்களுக்கு தனியாக ஒரு மைதானத்தில் இடவசதி செய்யப்பட்டு அங்கு கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. புகழ் பெற்ற ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன் வருகிறார் என அவ்வப்போது அறிவிப்பு செய்யப்பட்டது மதுரை முத்து அல்லது ரோபோ சங்கராக..

இருக்கும் எனத் தொண்டர்கள் யூகித்துக் கொண்டிருந்தார்கள் கலைஞரின் கார் போயஸ்கார்டனில் நுழைய 5 இலட்சம் வாலா வெடி கொளுத்தப்பட்டு அதிர்ந்தது.. இருபுறமும் அமைச்சர்கள் வரவேற்க மகளிரணியனர் மலர் தூவ இதுவரை அழகிரிக்கு மட்டும் பனித்த கலைஞரின் கண்கள் இன்றும் பனித்தது..சசிகலா ஜெயலலிதா இருவரும் சேர்ந்து ஆரத்தி எடுத்து வரவேற்க விழா மேடைக்கு கலைஞர் அழைத்துச் செல்லப்பட்டார்.

முதலில் கவியரங்கம் நடந்தது.. முதல் கவி பாட வந்தவரை கண்டதும் கலைஞருக்கு வியப்பு ஆம் வந்தது வை.கோ.! கலைஞர் அம்மாவை பார்க்க அதை ஆமோதிப்பது போல ஜெ.. சிரித்தார். அண்ணன் கலைஞர் பிறந்த தினம் தமிழகத்தின் சிறந்த தினம் என முழங்கினார் வை.கோ அவர் தலையில் இருந்த தலைப்பாகை அன்று மட்டும் மஞ்சளில் இருந்தது அனைவரையும் நெகிழச் செய்தது.. கிரேக்கத்தின் சாக்ரடீஸ் மற்றும்..

அரிஸ்டாட்டிலுக்கு இணையானவர் கலைஞர் என ஆரம்பித்த வை.கோ க்யூபா ஸ்பெயின் போலந்து ஜெர்மனி என வழக்கம் போல வாய்வழியாக ஒரு வேர்ல்டு டூர் போய் அங்கிருக்கும் தலைவர்கள் எல்லாம் கலைஞரின் கால் தூசு என்ற போது கூச்சத்தில் கலைஞரே நெளிந்தார்.. அடுத்து திருமா, முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், வாசன், தா.பா நாஞ்சில் சம்பத் என அனைவரும் கவிபாட அம்மாவிடம் கேப்டன் எங்கே என்றார் கலைஞர்.

கொஞ்சம் பொறுங்க அவர் எண்ட்ரி உங்களுக்கு சர்ப்ரைஸா இருக்கும் என்றார் அம்மா. அடுத்ததாக மேடையில் கலைநிகழ்ச்சிகள் ஆரம்பித்தது சரத்குமார் சிலம்பம் சுற்றினார்.. கருணாஸ் லொடுக்கு பாண்டி கெட்டப்பில் வந்து சிரிக்க வைத்தார் தமிழிசை வந்து சொன்ன ஜோக் படு மொக்கையாக இருக்க தொண்டர்கள் கொந்தளிக்க.. இதை கவனித்த கலைஞர் தமிழிசையை அழைத்து வேறு நல்ல ஜோக் இருக்காம்மா எனக்கேட்டார்.

இல்லிங்க அதான் என்ன செய்யறதுன்னு யோசிக்கிறேன் என்றார்.. இப்படி கடைசியில் வந்து யோசிப்பது தானே உங்க வழக்கம் என்றது கலைஞர் மை.வா ஒண்ணு பண்ணுங்க நீங்க பண்ண தேர்தல் பிரச்சாரத்தை அப்படியே பண்ணுங்க என ஐடியா தந்தார் கலைஞர்.. இப்போது தமிழிசை தாமரை மலரும் காவிக் கொடி பறக்கும் என்ற போது விசில் பறந்தது தொண்டர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.. கலைஞரை நன்றியுடன் பார்த்தார் தமிழிசை.

அடுத்ததாக இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஸ்டாண்ட அப் காமெடி இதை நடத்த வருகிறார்... என்றதும் விளக்குகள் அணைக்கப்பட்டு மீண்டும் ஒளிர திரை விலக மிடுக்குடன் வந்தார் கேப்டன்.. இவரா என அனைவரும் புருவங்கள் உயர்த்த கேப்டனே பேச ஆரம்பித்தார்.. மக்களே இந்த கேப்டன் இன்னிங்ஸ் அவ்வளவுதான் நினைச்சுகிட்டு இருந்தப்ப அரசியல் விருப்பு வெறுப்பெல்லாம் தாண்டி அம்மா என்கிட்ட போனில் பேசுனாங்க.

தம்பி நீங்க திறமையானவர் உங்ககிட்ட ஒளிஞ்சு கிடக்குற திறமை காமெடி சமீபத்துல வாட்ஸ் அப் யூ டியூபை வாழ வச்சதே நீங்க தான் அதனால் நீங்க காமெடி பண்னுங்க வடிவேலுவை பழி வாங்க இதை விட ஒரு நல்ல வாய்ப்பு இருக்காதுன்னாங்க அவங்க இப்படி தாயுள்ளத்தோட சொன்னதும் நான் நெகிழ்ந்துட்டேன் அய்யா கலைஞருக்கு அவங்க அன்புத்தங்கை ஆனா எனக்கு அவங்க அன்பு அக்கா.. இனிமே அவங்களை அக்கான்னு தான்..

கூப்பிடுவேன் அக்கா நிகழ்ச்சியை ஆரம்பிக்கவா என்றார்.! ஜெ. தலை அசைக்க முதலில் "கேப்டன் யோகா"என்னும் வெரைட்டி செய்ய ஆரம்பித்தார் கேப்டன் அனைவரும் குலுங்கி குலுங்கி சிரிக்க கண்ணில் நீர் வர கலைஞரும் சிரித்தார்.. அடுத்து கேப்டனின் ஸ்டேஜ் ஆக்ஷன் என்னும் வெரைட்டியில் அரங்கமே அதிர்ந்தது.. கலைஞரே கேப்டனை அழைத்து இன்று முதல் நீங்கள் கேப்டன் அல்ல சாப்ளின் எனப் பட்டமளித்தார்.

மதிய விருந்துக்கு பிறகு கலைநிகழ்ச்சிகள் தொடரும் என அறிவித்தவுடன் தொண்டர்கள் உணவுப்பந்தலுக்கு போக தலைவர்கள் போயஸ் இல்லத்திற்குள் சென்றார்கள். எந்த ஆட்சி வந்தாலும் டாஸ்மாக்கிற்கு சப்ளை செய்யும் மதுபான ஆலை மாறாதது போல இங்கும் அறுசுவை அரசு நடராஜன் தான் சமையல்.. கலைஞருக்கு பிடித்த உணவுகளை அம்மாவே பரிமாற அந்த அன்புமழையில் நனைந்த கலைஞர் என் அன்பு சகோதரிக்கு..

பரிசளிக்கப்போகிறேன் என்றார்.. கலைஞரிடமே பரிசா.! அம்மா கொடுத்து வைத்தவர் என்பது போல அனைவரும் பார்க்க கலைஞர் தன் பி.ஏ. சண்முகசுந்தரத்தை பார்க்க அவர் கையில் தயாராக வைத்திருந்த பார்சலை நீட்டினார்.. அதை கலைஞர் பிரிக்க அங்கு எல்லா முகங்களிலும் ஆவல் பொங்கியது இதோ பார்சல் பிரிக்கப்பட்டது உள்ளே இருந்தது இரண்டு கைத்தறித் துண்டு..! ஜெ.கொஞ்சம் நொந்து தான் போனார்.

ஆனால் கலைஞர் பேசுகையில்.. உடன்பிறப்பே அன்புச்சகோதரி எனக்கு அளவிலாது செலவு செய்து விழா நடத்தி ஏராளமான விலையுயர்ந்த பரிசுகளும் தந்து என்னை திக்குமுக்காடச் செய்து விட்டார் அந்த அன்புக்கு இந்த கைத்தறி ஆடை எப்படி இணையாகும் என நீ கேட்கும் கேள்வி எனக்கு கேட்காமல் இல்லை.. இந்த கைத்தறி ஆடையை நான் வாங்குவதால் என் தொண்டர்களும் வாங்குவார்கள்..அதிமுக நண்பர்களும்..

வாங்குவார்கள் இப்படி ஏராளமாக வாங்கும் போது அதனால் ஏழை நெசவாளர் குடும்பம் ஏற்றம் பெறும்.. அவர்கள் வாழ்வில் மாற்றம் வரும் என்பதற்காவும்.. நெசவாளிகளின் இல்லத்தில் முதல்வராக இருக்கும் என் அன்புத்தங்கை ஒளியேற்றிட வேண்டும் என்னும் கோரிக்கையை முன் வைக்கும் முகமாகத்தான் இந்த கைத்தறி ஆடை என்றார். 40 பந்துகளில் இரட்டை சதம் அடித்த டிவில்லியர்ஸ் போல இருந்தது அவர் உரை.

ஜெ.பிரமித்து போனார் இன்னும் அரசியலில் நாம் கற்க வேண்டியது எவ்வளவோ உள்ளது என்பதை புரிந்து கொண்டார்.. உடனே அவரும் உங்களால் நான் உங்களுக்காகவே நான் என்று முழங்கினேன் இனி கழக கூட்டங்களில் கைத்தறி ஆடைதான் போடவேண்டும் என கட்சிக்கும் தமிழக மக்களுக்கு இனி மாதாமாதம் விலையில்லா கைத்தறி ஆடை ரேஷனில் வழங்கப்படும் என அறிவித்து தானும் ஒரு கெயில் என ஃபார்ம் ஆனார்.

வெளியே ஒலிபெருக்கியில் இருந்து ஒரு அறிவிப்பு மதிய உணவிற்கு பின் கலைநிகழ்ச்சிகள் ஆரம்பம் மதியம் மூன்று மணியளவில் எஸ்.வி சேகர் குழுவினரின் அல்வா நாடகம் அரங்கேறுகிறது.. இதைக் கேட்டபோது கலைஞர் அம்மா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தபுஷ்டியுடன் சிரித்துக் கொண்டனர்.. (நிறைந்தது)

கப்ஸா டிவி செய்திகளுக்காக சென்னையில் இருந்து காத்தவராயன்..



கோபாலபுரத்தில் ஜெயலலிதா..

#கோபாலபுரத்தில்_அம்மா

ஒரு கலகல கற்பனை...

சென்னை ஜுன் 4 2016... தமிழகத்தில் சமீப காலமாக எந்த யூரியாவும் போடாமல் திடீரென செழித்து வளர்ந்து நிற்கும் அரசியல் நாகரீகம் நேற்று அதன் இன்னொரு பரிணாமத்தை அடைந்தது. இன்று 98 எம்.எல்.ஏக்கள் பலத்துடன் இருக்கும் எதிர் கட்சிக்கு அக்கட்சியின் தலைவரும்.. 60 ஆண்டு காலம் அரசியல் அனுபவமும்..திரைப்பட அனுபவமும் கொண்டவர்.. அரசியல் அறிவு மிக்கவர்.. 

அம்மாவை விட ஒருமுறை குறைவாக முதல்வர் பதவி வகித்தவர்.. 13 முறை சட்டமன்ற உறுப்பினராக தோல்வியே காணாது சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வருமான கலைஞர் கருணாநிதிக்கு அ.இ.அ.தி.மு.க சார்பில் பிரம்மாண்ட விழா எடுப்பதாக கடந்த மாதம் சட்ட மன்றத்தில் அறிவிப்பு செய்து தமிழகத்தை மூர்ச்சையாக்கினார் முதல்வர். 

அதன்படி.. ஓ.பி.எஸ் தலைமையில் செங்கோட்டையன், பண்ருட்டி, டாக்டர் விஜயபாஸ்கர், ராஜேந்திர பாலாஜி, ஆகியோர் அடங்கிய ஐவர் குழு விழாக் குழுவாக நியமிக்கப்பட்டது.. அவர்களும் இந்த விழாவை எப்போது கொண்டாடலாம் என அலசி ஆராய்ந்து கலைஞரின் பிறந்தநாளையே விழாவாக கொண்டாடலாம் என அறிக்கை தந்தனர்.. 

மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த அம்மா கலைத்தாயின் மகள் நான் ஆனால் தலைமகன் அண்ணன் கலைஞர் தான் எனவே பாசத்தலைவனுக்கு பிறந்தநாள் விழா என அவ் விழாவிற்குப் பெயர் சூட்டினார்.. அதன்படி நேற்று விழா துவங்கியது.அதிமுகவின் அண்ணன் தினம் என ர.ரக்கள் அழைத்த இந்த நாள் அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.. 

இந்த ஒரு நாள் மட்டும் அம்மா உணவகம் அண்ணா உணவகம் எனப் பெயர் மாறி இருந்தது.. அங்கு தமிழகத்தின் ஏழை எளிய மக்களுக்கு காலை உணவாக கேசரி, இட்லி, பொங்கல், பூரி, தோசை உட்பட 8வகை உணவுகளும் மதிய உணவாக 16 வகை காய்கறிகள் வடை பாயாசத்துடன் வாழை இலை விருந்தும் இலவசமாக வழங்கப்பட்டது. 

காலை உணவை கோபால புரத்திற்கே வந்து கலைஞருடன் அம்மா சாப்பிடுவதாகவும் மதிய விருந்துக்கு கலைஞர் போயஸ் கார்டன் செல்வதாகவும் தமிழக அரசு குறிப்பு வெளியிட்டு இருந்தது.. அதன் படி கோபாலபுரம் இல்ல நிகழ்வுகளை சன் டிவியும்.. போயஸ் இல்ல நிகழ்வுகளை ஜெயா டிவியும் நேரடி ஒளிபரப்ப ஏற்பாடு செய்திருந்தனர்.. கலைஞர் வீட்டுக்கு ஜெ.வருவது அம்மாவின் பயமா.. கலைஞரின் ஜெயமா.. என சாலமன் பாப்பையா தலைமையில் சன் டிவி பட்டிமன்றமும் 

கலைஞர் பிறந்தநாள் விழா நடத்துவது அம்மாவின் அன்பு குணமா... அம்மாவின் சாணக்கியத்தனமா என ஞானசம்பந்தன் தலைமையில் ஜெயா டிவி பட்டிமன்றமும் களை கட்டியது..அலகு குத்துவது, தீச்சட்டி எடுப்பது, மண்சோறு சாப்பிடுவது போன்ற வேண்டுதல்களை எல்லாம் கலைஞருக்கும் செய்யலாமா என தலைமை கழகத்தில் ஆர்வக்கோளாறில் ர.ரக்கள் கேட்க.. அண்ணன் கலைஞருக்கு அதெல்லாம் பிடிக்காது என திட்டவட்டமாக மறுத்துவிட்டாராம் அம்மா.

அடுத்த தெருவான போயஸ் தோட்டத்திலிருந்து கோபாலபுரம் வரை வரவேற்புத் தோரணங்கள், பிளக்ஸ்,கொடி, கட் அவுட்டுகள், பேனர்கள் ஏதும் வைக்க வேண்டாம் என இரு கட்சித் தலைவர்களுமே கூட்டாக அறிவித்தது தமிழக மக்களை டாஸ்மாக் போதையை விட அதிகம் கிறுகிறுக்கச் செய்தது.ஜெயலலிதாவை வரவேற்க கலைஞர் வீட்டில் கனிமொழி தலைமையில் செல்வி, ராசாத்தி அம்மாள், கவிஞர் சல்மா தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் நியமிக்கப் பட்டிருந்தனர். 

காலை ராகுகாலம் முடிந்து போயஸ் கார்டனில் இருந்து சசிகலாவுடன் கிளம்பி 2 நிமிடத்தில் கோபாலபுரம் வந்தார் அம்மா.. வாசலிலேயே பூரண கும்ப மரியாதையுடன் புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க அம்மாவை வரவேற்றனர்.ஒரு நிமிடம் தான் இருப்பது கலைஞர் வீடா அல்லது சங்கரமடமா என ஆனந்த அதிர்ச்சியில் திளைத்தார் அம்மா.. அவருக்கு பிடிக்கும் என்பதற்காக தயாளு அம்மாளும் துர்கா ஸ்டாலினும் இதைச் செய்தார்கள் எனக் கேள்விப்பட்டதும் நெகிழ்ந்தார் ஜெ.

அடுத்த இன்ப அதிர்ச்சி கலைஞர் வாசலிலேயே தன் சக்கர நாற்காலியுடன் வந்து காத்திருந்ததைப் பார்த்து.!ஸ்டாலின், துரைமுருகன், பிச்சாண்டி, சக்கரபாணி, பொன்முடி ஆகியோர் அம்மாவைப் பார்த்து கை கூப்பினார்கள்.!வாஞ்சையுடன் வந்து கலைஞரின் நாற்காலியை தள்ள ஆரம்பித்தார் அம்மா (ங்கொய்யால யாருகிட்ட) இப்போது கலைஞர் உட்பட அனைவரும் நெகிழ்ந்தனர்..அடுத்ததாக மேள தாளம் முழங்க பழங்கள், காய்கறிகள், அரிசி, பருப்புகள், பாத்திரங்கள், நகைகள் என ஒவ்வொன்றிலும் 98 தட்டுகள் சுமந்து அதிமுக மகளிர் அணி 

சீர் கொண்டு வர அமைதியாக அவர்களை வழிநடத்திக் கொண்டிருந்தார் வளர்மதி..தங்கைக்கு தான் சீர் தருவார்கள் ஆனால் அண்ணனுக்கே சீர் கொடுத்தவர் எங்கள் அம்மா என சைடில் நின்றிருந்த நாஞ்சில் சம்பத் கூவ.. கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதிங்க சம்பத் என கண்களாலேயே அவரை எச்சரித்தார் அம்மா.. சசிகலா பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு தலையைக் குனிந்தார் கூட்டத்தில் இருவர் முக்காடு போட்டு அலைவதைப் பார்த்தார் ஜெ.. அது யாரென சசியிடம் கேட்டார். 

உடனே உளவுத்துறை அதிகாரிக்கு போன் செய்து பேசிய சசிகலா அது வேறுயாருமில்லம்மா நம்ம சரத்குமாரும் ராதிகாவும் தான் என்றார். குபீரென சிரித்துவிட்டார் ஜெ.. சூரியவம்சம் படத்தில இருந்து இவங்களுக்கு இதுவே வேலையா போச்சு என்றார் கிசுகிசுப்பாக.. கலைஞரும் அம்மாவும் கலகலப்பாக பேசத் தொடங்கினர் அரசியல் தாண்டி இருவரும் சினிமா பற்றி எம்.ஜி.ஆர் பற்றி.. எங்கள் தங்கம் படபிடிப்பில் நடந்த சம்பவங்களை கலைஞர் சொல்ல அட இவ்வளவு ஞாபகமா என வியந்தார்.. எங்கே மாறன் பிரதர்ஸ் என அம்மா உரிமையுடன் கேட்க நீங்க சொன்னால் அவங்களை வரச் சொல்றோம் என்றபடி

கலைஞர் தன் பி.ஏ.சண்முக சுந்தரத்தை பார்க்க அவர் போன் செய்ததும் வெளியே சன் டிவி ஒளிபரப்பு வேனில் இருந்த மாறன் பிரதர்ஸ் உள்ளே வந்தனர். அடுத்ததாக 98 கிலோ எடையுள்ள பிரம்மாண்டமான கருப்பு சிவப்பு கேக் வந்தது.அதை கலைஞர் வெட்டி தன் குடும்பத்தாருக்கு முன் அம்மாவுக்கு ஊட்ட.. ஜெ நெகிழ அங்கு அனைவரும் கண்ணீர் மல்க நின்றனர் சமயோஜிதமாக சன் டிவி நிருபர் தன் மொபைலில்இருந்து எஸ்.ஏ.ராஜ்குமாரின் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பாடலை ஆன் செய்ய அனைவரும் அழுதே விட்டனர்.. 

கலைஞருக்கு சூரிய ஒளியில் இயங்கும் கருப்பு சிவப்பு நிற வெளிநாட்டுக் கைக்கடிகாரமும் அவரது இல்லப் பெண்கள் அனைவருக்கும் தலா 2 போத்தீஸ் பட்டுப்புடவையும் வெள்ளி குங்குமச்சிமிழும் பரிசளித்தார்.. பிறகு அறுசுவை அரசு நடராஜனின். கைவண்ணத்தில் காலை உணவு அங்கு பரிமாறப்பட்டது ஸ்பெஷல் உணவாக சூரியகலா பரிமாறி இதிலும் தன் முத்திரையை சிலேடையாக பதித்திருந்தார் கலைஞர்.. 

எனக்கு ப்ளேட்வேண்டாம் "இலையை" கொண்டு வாருங்கள் என அம்மாவும் முத்திரை பதித்தார் அனைவரும் குரூப் போட்டோ செல்ஃபி எடுத்துக் கொண்டதும் மதியம் போயஸ் கார்டனில் விருந்து என்று அம்மா கிளம்ப... நிருபர்கள் மறித்தனர்.. மேடம் கலைஞருக்கு 94 வயது தானே..? ஆனா நீங்க ஏன் எல்லாம் 98 ஆ கொடுக்கறிங்க? சட்டசபையில் அவங்க கட்சி பலம் என்பதாலா? என்றதும்

சட்டென்று அதில்லை இந்தப் பிறந்த நாள் முதல் 98 வது பிறந்தநாள் வரை அதிமுக தான் இனி கொண்டாடும் என அறிவித்து நிருபரின் கேள்விப் பந்தில் சிக்ஸர் அடித்தார் ஜெயலலிதா.கலைஞரே ஒரு கணம் பிரமித்தார்.! அவர் கிளம்பிப் போனதும் கலைஞரை சூழ்ந்தனர் நிருபர்கள் இவ்வளவு பரிசுகள் உங்களுக்கு தந்தாங்களே அம்மா பதிலுக்கு நீங்க அவங்களுக்கு என்ன தருவிங்க என்றனர்.. அரை செகண்ட் துணுக்குற்ற கலைஞர்..

சிரித்தபடி என் இதயத்தில் இடம் தருவேன் என அவர் பாணி ஹெலிகாப்டர் ஷாட்டில் சிக்சர் அடித்தார்.. அதே நேரத்தில் மதுரை விமான நிலையத்தில் அண்ணன் அழகிரி காரசாரமாக பேட்டியளித்துக் கொண்டிருந்தார்.. விழாவுக்கு என்னை அழைத்த ஜெ கடைசி வரிசையில் கடைசி சீட் கொடுத்துவிட்டு அதிலும் ஸ்டாலின் பேரனை அமர வைத்து என்னை அவமானப்படுத்திவிட்டார் இதை நான் சும்மா விட மாட்டேன் என்று..

கப்ஸா டிவிக்காக சென்னையிலிருந்து காத்தவராயன்..


கிரிக்கெட் அசுரர்கள்..

1980 களில் டெஸ்மண்ட் ஹெய்ன்சும் கார்டன் கிரினிட்ஜும் ஓபனிங் விக்கெட் பார்ட்னர்ஷிப் 100 ரன்களுக்கு மேல் அடிக்கும் போதே மலைப்பாக இருக்கும்.. அன்றைக்கு அது அபூர்வம்.. தப்பித்தவறி அவர்களில் ஒருவர் 10 ரன்களில் அவுட் ஆகிவிட்டால் ஒன் டவுனில் வரும் விவியன் ரிச்சர்ட்ஸ் என்னும் ராட்சஷன் அடிக்கும் அடி அதுக்கும் மேலே.. அது மேட்ச் பார்க்கும் அனைவருக்கும் வலிக்கும். உலகக் கோப்பை என்றால் அது வெஸ்ட் இண்டீசுக்கு அளிக்க உருவாக்கப்பட்டது என நினைத்த காலமும் உண்டு.. 1979 ஆம் ஆண்டிலேயே 291 ரன்கள் அடித்த அணி அது.

1983 இல் இந்தியா 183 ரன்களில் ஆட்டமிழந்த போது.. வெஸ்ட் இண்டீசின் ஓப்பனர்களே அதை அடித்துவிடுவார்கள் என நினைத்து மேட்ச் பார்க்காமல் இருந்தவர்கள் ஏராளம். அதிலும் ரிச்சர்ட்ஸ் பேட்டிங் இருக்கிறதே... இவனெல்லாம் அவுட்டே ஆகமாட்டானா அல்லது இவனுக்கு பந்து போடத்தான் நாம பொறந்து இருக்கோமா என சந்தேகம் வரும் அளவுக்கு வெளுப்பார்கள் 10 மேட்ச் ஆடினால் பத்திலும் வெற்றி தப்பித்தவறி ஒன்றில் தோல்வி.. ஆஸ்திரேலியாவே அன்று அரண்டு மிரண்ட டீம் வெஸ்ட் இண்டீஸ். அதிலும் அவர்கள் பேட்டிங் மற்றும் பவுலிங் படை மிரட்டி எடுக்கும். யார் அடிப்பார்கள் யார் அடிக்க மாட்டார்கள் என கணிப்பதே கடினம். 

வெற்றி கிரீடம் எப்போதும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தான். அந்தளவிற்கு நாடி நரம்பு ரத்தம் சதை குடல் குந்தாணி எல்லாவற்றிலும் கிரிக்கெட் வெறி ஊறி உப்பு தடவி இருக்கும் மிரட்டலான அணி அது.ஹெய்ன்ஸ், கிரினிட்ஜ், ரிச்சர்ட்ஸ், லாரிகோம்ஸ், லோகி, டுஜான், கிப்ஸ், மார்ஷல், கார்னர், ஹோல்டிங், ராபர்ட்ஸ்.. என 80 களில் முதல் அணியும் 85க்கு பின் ரிச்சி ரிச்சர்ட்சன், ஹுப்பர், பாப்டிஸ்ட், அம்புரோஸ், வால்ஷ், பேட்டர்சன், போன்ற அடுத்த ஹீரோக்களும் வந்து கலக்கிய அணி. இவர்களுக்கு மட்டும் எப்படி இப்படி அதிரடி வீரர்கள் கிடைக்கிறார்கள் என உலகமே பொறாமையால் பொசுங்கியது அன்று.. எல்லாம் விவியன் ரிச்சர்ட்ஸ் ஓய்வு பெறும் வரையில் தான்..! 

அப்புறம் எல்லாமே தலைகீழானது. வெஸ்ட் இண்டீஸ் வேஸ்ட் இண்டீஸ் ஆனது.. காரணம்..??? அந்த தீவுகளின் வீரர்கள் பணம் அதிகம் சம்பாதிக்க கால்பந்திலும் அத்லெட்டிலும் கவனம் பதிக்க.. மெல்ல மெல்ல கிரிக்கெட் மகுடத்தை அவர்கள் பறிகொடுத்தார்கள்.. ரிச்சர்ட்ஸின் ஓய்வுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் ஒரே ஒரு எழுச்சி பிரையன் லாரா சாதனைகள் மட்டுமே அதுவும் விழலுக்கு இறைத்த நீராக இருந்ததே தவிர பழைய அண்ணன் பெருமையைத் திரும்பத் தரவில்லை. 90களின் துவக்கத்தில் இருந்து கிரிக்கெட்டில் தன் பிடியை மெல்ல மெல்ல தளர்த்திய வெஸ்ட் இண்டீஸ் கத்துக்குட்டி கென்யாவுடன் எல்லாம் தோற்றது.

இன்றளவும் சம்பளப் பிரச்சனை போர்டுக்கும் வீரர்களுக்கும் உண்டு. எல்லாம் 20/20 கிரிக்கெட் வரும் வரை..!இன்று உலகில் எந்த நாட்டில் 20/20 நடந்தாலும் அங்குள்ள எல்லா அணிகளிலும் 2 மேற்கிந்திய வீரர்களாவது இருப்பார்கள்.. இப்படி அவர்களுக்கு நல்ல துவக்கத்தை தந்து உயர்த்தியதற்கு நம் இந்திய ஐ.பி.எல் ஒரு பிரதானக் காரணம்.. இங்கு ஆடிய அனுபவத்தில் 2012 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றார்கள்.. அப்போதும் சம்பளப் பிரச்சனை வர அங்குள்ள வீரர்கள் பிற நாடுகளில் 20/20 தொடர்களில் ஆடி கிடைக்கும் வருமானமே போதும் நாட்டின் கிரிக்கெட் அணி தேவையில்லை என்ற முடிவுக்கும் வந்தார்கள்.

கடினமான சூழல் தான்.. ஆனால் இன்று உலகில் தாங்கள் ஒரு அசைக்க முடியாத அணி என ஆண்/பெண் இரு பிரிவிலும் உலகச்சாம்பியன் ஆகியிருக்கிறார்கள். இது ஒரு உலக சாதனை! இப்படி நடப்பது இதுவே முதல்முறை..! இழந்த பெருமையை மீட்ட மேற்கிந்திய தீவுகளில் இனி கிரிக்கெட் உயிர் பெறும்.. நாளை இன்னும் பலப்பல அதிரடி வீரர்கள் அங்கு உருவாவார்கள்.. பல சாதனைகள் நிகழ்த்தப்படும்.அதற்கான பிரகாசமான சூழல் தான் இந்த வெற்றிகள்.. கிளப்சோ என்னும் பாரம்பரிய பாடலும் டெஸ்ட் மேட்சுகளில் பிக் பேர்டு, பிக் டாக், என்னும் அடைமொழிகளும் கொடுத்த பாரம்பரிய டெஸ்ட் ரசிகர்கள் இப்போது இல்லை.

எத்தனை அதிரடி வீரர்கள் வந்தாலும் கேரி சோபர்ஸ் போல், காளிச்சரண் போல், கிளைவ் லாயிட் போல், லாரா போல் நல்ல டெஸ்ட் வீரர்கள் உருவாகும் வாய்ப்பு மிகக் குறைவு.. ஆனால் ஆயிரம் கெயில்கள் உருவாவார்கள் அது சர்வ நிச்சயம்.!

#வாழ்த்துகள்_வெஸ்ட்_இண்டீஸ்..

Tuesday 24 May 2016

வாஷிங்டன் வாக்கிங் - 3

அமெரிக்க ஹிஸ்டரி மியூசியத்தில் இருந்து வாஷிங்டன் சதுக்கத்திற்கு நடந்தோம்.. எதிரே பிரும்மாண்டமான கம்பம் போல தெரிந்த சதுக்கம் நாங்கள் நடக்க நடக்க பின்னால் போய்க் கொண்டிருந்தது போல தூரம் அதிகரித்தது.. ஏற்கனவே போதும் போதும்னு நடந்த எங்களுக்கு கால்வலி பின்னி பெடலெடுத்தது.. போர்வீரர்கள் நினைவாக எழுப்பப்பட்ட அந்தச் சதுக்கத்தில் வேறு சிறப்புகள் இருக்கிறதா என விசாரித்தோம்.

அமெரிக்க சுதந்திரப் போர், உயிர் நீத்த தியாகிகள், வீரர்கள், ஜார்ஜ் வாஷிங்டன் என பல மியூசியங்களில் நாங்கள் பார்த்த அதே ஆணிகள் தான் அங்கும் அடிக்கப் பட்டிருக்கின்றன என அறிந்து ஆணியே... எனச் சொல்லி தூரத்தில் நின்றே சதுக்கப் பின்னணியில் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.. கால்வலி அதிகரிக்க ராஜா பாபுவிற்கு கால் செய்தோம். அவர் அங்கு வர 15 நிமிடம் ஆகுமென்றார். சாலையோர பெஞ்ச் இருந்தது.



அதில் செட்டிலானோம்.. இந்த வாஷிங்டனில் எல்லாமே இவ்வளவு நடையாய் நடக்க வேண்டியிருக்கிறதே இங்கு வாடகை சைக்கிள் கடை வைத்தால் நன்கு போணியாகுமே என நாங்கள் நினைத்த மறுநிமிடம் கும்பலாக நின்று கொண்டே பயணிக்கும் எலக்ட்ரானிக் பைக்கில் (கிரிக்கெட் மாட்சில் கேமிரா மேன் வருவாரே) ஒரு குழு எங்களை கடந்து போனார்கள். அதன் வாடகை மணிக்கு 70 டாலராம் (5ஆயிரம்ருபாய்).

அதைக்கேட்டதும் கால்வலி மறந்து நெஞ்சுவலித்தது.. இதோ ராஜாபாபு கார் வந்திருச்சு கிளம்பலாமா.. ஏறிக் காரில் அமர்ந்ததும் கொஞ்சம் உயிர் வந்தது.. அப்போது தான் ராஜா சொன்னார்.. சாரிங்க ஒயிட் ஹவுசுக்கு இன்னொரு வாசல் இருக்கு அங்க தான் போயிருக்கணும்.. நான் உங்களை தப்பா கூட்டிட்டு வந்துட்டேன்.. இப்போ காரில் வரும் போது தான் முதன் முதலா அந்த இடத்தைப் பார்க்கிறேன் என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்.

அமெரிக்காவில் இது சகஜம் அவர் தங்கியிருப்பது வாஷிங்டனில் இருந்து 40 கி.மீ தள்ளி அவர் வேலை பார்க்கும் கம்பெனியும் வாஷிங்டன் பக்கத்தில் அவர் வாஷிங்டன் வருவதே அரிது.. எனவே அவருக்கு நாங்கள் ஆறுதல் கூறினோம். இப்ப ஒயிட் ஹவுசைப் பார்க்க முடியுமா என கிறிஸ்டோபர் கேட்க இப்ப மாலை 6 மணி அமெரிக்காவின் ஹெவி டிராபிக் ஜாம் நேரம் அங்க போயிட்டு வீடு போவதாக இருந்தால் இரவு 10 மணி ஆகும் என்றார். 

அட வளவள வேணாம்.. ஷாட்டை இங்க கட் பண்ணி ரெண்டு நாள் கழித்து ஓபன் பண்ணா நாங்க முன்னாடி வந்த அதே வீதியின் பின்பக்கம் வந்து விட்டோம் நண்பர் சிவா இன்று எங்களுடன் வந்திருந்தார்.. காரில் இருந்தே சொன்னார் அதோ அந்த சிக்னலில் உங்களை இறக்கிவிடுறேன்..அதான் ஒயிட் ஹவுஸ் இருக்கும் சாலை நீங்க நடந்துபோய் பார்த்துட்டு திரும்ப அதே சிக்னலுக்கு வந்துட்டு கூப்பிடுங்க எனக் கூறி இறக்கிவிட்டார்.





பாங்க் ஆஃப் அமெரிக்காவின் அஜீத் அலுவலகம் (தலைமை) அந்தச் சாலையின் ஆரம்பத்தில் இருந்தது.. எதிர்புறம் ஜார்ஜ் வாஷிங்டன் சிலை பின்னணியில் ஒரு புரதான கட்டிடம் அந்தத் தெரு முழுவதும் இரு பக்கமும் சிலைகள் பூங்காக்கள் 2 நிமிட நடை தூரத்தில் கும்பல் கும்பலாக மக்கள் வெள்ளம் எல்லோரும் வெள்ளை மாளிகையின் அழகை தங்கள் காமிராவில் கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர் நாங்களும் அதில் ஐக்கியமானோம்.



அன்று தூரத்தில் மனைவியைப் பார்த்தது போல விலகி நின்ற வெள்ளை மாளிகை இன்று அருகில் காதலியைப் பார்த்தது போல நெருங்கி நின்றது.. புகைப்படங்கள் எடுப்பவர்கள் கண்ணியமாக ஒருவருக்கொருவர் வாய்ப்பு கொடுத்து படம் எடுத்தார்கள் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன அம்மா போல நாங்களும் மாண்புடன் பிறருக்கு இடையூறின்றி புகைப்படம் எடுத்துக் கொண்டோம் வெள்ளை மாளிகை தெருவை நோட்டமிடுவோமா.

உலகின் அதிநவீன காமிராக்கள் பொருத்தப்பட்ட பகுதி அது உருவம் இருந்தால் காற்றையும் படம் பிடித்துவிடும் இந்தத் தெருவில் நடப்பது எல்லாம் அப்படியே மாளிகை உள்ளே உள்ள கண்ட்ரோல் ரூம் டிவியில் தெரிய அதை கண்காணிக்க ஒரு பெரிய டீமே உள்ளது.. உங்கள் நடவடிக்கையில் சிறிது சந்தேகம் வந்தாலும் உங்கள் பொடனிக்கு பின்னால் ஒரு கமாண்டோ தோன்றுவார்.. அந்தளவு துல்லியமான பாதுகாப்பு.

5 நிமிடத்திற்கு ஒருமுறை வானில் ஹெலிகாப்டர்கள் குறுக்கும் நெடுக்குமாய் வட்டமடித்தது.. டைட்டானியம் மெட்டலில் செய்த சைக்கிளில் ஆங்காங்கே துப்பாக்கி ஏந்திய கமாண்டோக்கள் ரோந்து வந்தனர்.. அவ்வப்போது கூடைப் பந்தாட்ட வீரர்கள் உயரத்தில் கையில் நவீன இயந்திர துப்பாக்கியுடன் புல்லட் ஃப்ரூப் ஜாக்கெட் அணிந்த கமாண்டோக்கள் தெரிவில் ஃபேஷன் ஷோ போல நடந்து சென்றார்கள். 

ஆனால் இவையெல்லாம் பொதுமக்களுக்கு சிறிதளவும் இடையூறு அளிக்காத வகையில் இருந்தது. வெள்ளை மாளிகை வாசலில் நாங்கள் போட்டோ எடுத்த  இடத்தில் உள்ள செக்போஸ்டில் இருந்த கமாண்டோ அவ்வளவு உற்சாகமாக பணிபுரிந்தார் பொதுமக்களிடம் அன்பாக பேசினார். இதுவே நம்மூரில் ஒரு லோக்கல் வி.ஐ.பி.வீட்டு வாட்ச்மேனாக இருந்திருந்தால் கூட அதிகாரம் கொடிகட்டி பறந்திருக்கும். மில்லியன் கணக்கான மக்கள்...



ஆண்டுதோறும் வெள்ளை மாளிகையை பார்க்க வருகிறார்கள் பொதுமக்கள் யாரையும் வெள்ளை மாளிகைக்குள் அனுமதிப்பது இல்லை.. கெடுபிடிகள் அதிகம் இருப்பினும் இதை வெளியில் இருந்தாவது பார்த்தால் போதும் என ஆவலுடன் வருகிறார்கள்.. அனைவரின் முகத்திலும் வெள்ளை மாளிகையை பார்த்த திருப்தி, எங்கும் கரைபுரண்டோடும் உற்சாகம், புராதனச் சிலைகளோடு செல்ஃபி என அந்த வீதியே கலகலப்பாக இருந்தது.

உலகின் உச்சபட்ச பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் தெருவுக்குள் கால் பதித்துவிட்டு திரும்பியது கொஞ்சம் பெருமையாக இருந்தது.. திரும்பி வரும் போது பாங்க் ஆஃப் அமெரிக்கா வாசலில் இருந்த ஒரு நடைபாதை பூங்காவில் மெரூன் நிறத்தில் நீளமான கவுன் அணிந்திருந்த ஒரு புஷ்டியான இளம்பெண் தன் ஹை டெசிபல் குரலில் மேற்கத்திய சங்கீத ஆலாபனை பாடிக் கொண்டிருந்தார் அவரது பாடலை பலர் ரசித்துக் கொண்டிருந்தனர். 



அந்தப் பெண்ணுக்கு எதிரில் விரிக்கப்பட்ட துணியில் இசை ரசிகர்கள் எறிந்த டாலர் நோட்டுகள் கிடந்தன.. ஒரே நிமிடம் யோசித்தேன் உலகின் பணக்கார நாடு.. அந்நாட்டின் அதிபர் குடியிருக்கும் அதே தெருவிலும் அன்றாடப் பிழைப்பிற்கு கையேந்தும் மக்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் என்று.. இந்தியனாக இப்போது கொஞ்சம் பெருமிதம் பிறக்க காரில் ஏறினொம். ஓஓஓஓஓஓஒ.. என அப்பெண்ணின் ஆலாபனை என் காதுகளில் புகுந்து போய்வா என் இந்திய நண்பனே என்றது.

நிறைந்தது..

பந்தி (மாடசாமி நாடார் உணவகம்)

#மாடசாமி_நாடார்_உணவகம்

தென்காசி அல்லது இராஜபாளையம் கிளம்புவதென்றால் கொலைப் பட்டினியுடன் கிளம்புவது என் வழக்கம்.. காரணம் மாடசாமி நாடார் உணவகம்.. இத்தனைக்கும் இது நகருக்குள் இருக்கும் ஓட்டல் அல்ல இராஜபாளையத்திலிருந்து தென்காசி செல்லும் சாலையில் 7 வது கிலோ மீட்டரில் இருக்கிறது.. மெயின் சாலையில் இருந்து இடது புறத்தில் கோபித்துக் கொண்டு திரும்பிய காதலி போல பிரியும் ஒரு சாலை வரும்.

அதில் 3 கி.மீ பயணம் செய்தால் மாடசாமி நாடார் உணவகத்தை அடையலாம். மெயின் ரோடிலேயே கடை ..காற்றில் வீசும் மசாலா வாசனையே கடையின் விலாசத்தை சொல்லும் அதன் முகப்பு வாசல் சின்ன குறுகலான வழியில் சந்துக்குள் இருக்கும் உள்ளே அதிகபட்சம் 30 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடும் அளவு தான் இடவசதி.. எந்நேரமும் கூட்டம் சித்திரை திருவிழா போல அலைமோதும்.



ஐ.ஐடியில் இடம் கிடைப்பது கூட எளிது.. நிச்சயம் ஒரு 15 நிமிடமாவது காத்திருக்க வேண்டும்.. எதுக்குடா இந்த காத்திருப்பு வேற கடைக்கு போகலாம்னு நினைக்க முடியாது ஏன்னா இங்கு தரமும் சுவையும் அப்படி நிச்சயம் காத்திருந்து சாப்பிட்டவர்கள் சொல்வார்கள் ஒர்த் வெயிட்டிங்னு. கொஞ்சம் திரும்பி பாருங்க இராஜபாளையம் மில் முதலாளிகள் தங்கள் லெக்ஸஸ், பென்ஸ், BMW கார்களில்  அங்கே காத்திருப்பது தெரிகிறதா!

அப்போ சாதாரணமான நாம் காத்திருக்க மாட்டோமா என்ன.! அப்படியே  பிளாஷ்பேகில் ஒரு 18 ஆண்டுகளுக்கு முன் எனக்கு அறிமுகமான கடை. அன்றிலிருந்து இன்று வரை எப்போது போனாலும் அந்தத் தரமும் சுவையும் மாறாது இருப்பது இவர்களின் ப்ளஸ்.. குற்றாலம் போகும் நண்பர்களிடம் சொல்வேன் தளவாய்புரத்தில் மதியச்சாப்பாடு சாப்பிடும் படி உங்கள் பயண திட்டத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்று.. அப்படிப் போனவர்கள்..

இன்று அவர்களது நண்பர்களுக்கு அதையே பரிந்துரைக்கிறார்கள். சரி இங்கு என்ன ஸ்பெஷல்.. தரமும் சுவையும் தான்.. இவர்களின் மசாலா கலவையும் கோக் பெப்சி ஃபார்முலா போல தனித்துவம் மிகுந்த குடும்ப கைமணம். 43 ஆண்டுகளுக்கு முன் மாடாசாமி நாடார் என்பவர் ஆரம்பித்து வைத்த கைப்பக்குவம் 3தலைமுறைகளாக தொடர்கிறது.. இரண்டாவது இங்கு உணவுகளின் விலை அநியாயத்திற்கு நியாயமாக இருப்பது தான்.!



இன்றளவும் அன்லிமிடெட் மீல்ஸ் 60 ரூபாய் தான்.. இன்னொரு ஆச்சரியம் இங்கு மட்டனை விட சிக்கன் விலை அதிகம்..! அட ஆமாங்க அதற்கேற்ற தரத்திற்கு வெங்காயம் வத்தல் என உயர் ரகமாக வாங்குகிறோம்.. குறிப்பிட்ட தரமான எள்ளை எடுத்து செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் தான்.. அதனால் தான் இங்கு மட்டனை காட்டிலும் சிக்கன் விலை அதிகம் என்கிறார் இப்போதைய தலைமுறை முதலாளியான கணேஷ்.



அதே போல மீன் குழம்பு சின்ன வெங்காயம் போட்டு வைக்கிறார்கள்.. பிரியாணியும் இங்கு ஃபேமஸ்.. ஆனால் சாப்பாடு வாங்கி கோழி சாப்ஸ் மட்டன் குழம்பு அயிரை மீன் குழம்பு எனச்சாப்பிடுவது தான் பெஸ்ட்.!அதிலும் கரண்டி சுக்கா என ஒருமெனு.. கரண்டி ஆம்லேட்டில் மட்டன் துண்டுகள் இட்டுத்தருவார்கள் அடடா சொத்தை எழுதி வைக்கலாம்.! கரண்டி ஆம்லேட்டும் பக்கா.. மாலை புரோட்டா தோசை கிடைக்கும்.



சைவ சாப்பாடும் 60 ரூபாய் தான் மணக்க மணக்க சாம்பார், ஒரு கூட்டு ஒரு பொரியல், ரசம், மோர் என அன்லிமிடெட் சாப்பாடு. அதிலும் இவர்கள் கடை ரசம் அவ்வளவு ருசி சூப் போல குடிக்கலாம் நன்றாக நான்வெஜ் சாப்பிடும் இருவர் சாப்பிட்டால் கூட பில் 500ஐ தாண்டாது..இவர்களது கிச்சனை பார்க்க வேண்டும். அடடா என்ன சுத்தம்! சுகாதாரம்.! கண்ணாடி போல பள பளவெனயிருக்கும் சாப்பிட்டுக்கொண்டே நாம் அதை பார்க்கலாம்.

அந்த அமைப்பில் தான் கடை கட்டப்பட்டு இருக்கிறது..பெரிய நகரங்களில் இல்லாமல் தைரியமாக ஒருசிறு கிராமத்தில் கடை ஆரம்பித்து அதை 43 ஆண்டுகளாக நிர்வாகம் செய்வதும்... தரத்தில் காம்பிரமைஸ் செய்து கொள்ளாமல் நியாயமான விலையில் பிறருக்கு உணவிடும் சேவைத் தொழிலை புரிந்து வருவதும் இவர்களை கை கூப்பி வணங்க வைக்கிறது.. இராஜபாளையமோ குற்றாலமோ போனால் கண்டிப்பாக போக மறக்காதிங்க நம்ம மாடசாமி நாடார் அண்ணாச்சி கடைக்கு.! ஓ.கே..