Friday 29 July 2016

ஜன(ரஞ்ச)கராஜ்

#ஜனகராஜ்

நடுநடுங்கும்குரல் அப்படியே உச்சஸ்தாதியில் ஏறி அப்படியே அமுங்கும் மாடுலேஷன்.. என் போன்ற மிமிக்ரி கலைஞர்களுக்கு இந்த வாய்ஸ் ஒரு வெல்லம்.. அந்த காலத்தில் இந்தக் குரலுக்கு கிடைத்த கைத்தட்டல்கள் ஒவ்வொரு மிமிக்ரி கலைஞனுக்கும் மிகப் பெரிய அங்கீகாரம். ஜனகராஜ் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு தவிர்க்க முடியாத நடிகன். 70களின் பிற்பகுதியில் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த நடிகன்.. ஆரம்பத்தில்..

இவரை அரவணைத்தது இயக்குனர் பாரதிராஜா அவர்கள்.. அதே கால கட்டத்தில் கவுண்டமணியையும் அரவணைத்தது பாரதிராஜாவே.. ஆரம்ப காலங்களில் மிகப் பெரிய அளவிற்கு இவருக்கு காரக்டர்கள் தராவிட்டாலும் பிற்காலங்களில் முக்கிய காரக்டர் தந்திருப்பார் பாரதிராஜா.. காதல் ஓவியம் படத்தில் கதாநாயகி ராதாவின் கணவராக நடித்திருப்பார்.. ஒரு கைதியின் டைரியில் கமலின் நண்பர் & வளர்ப்பு அப்பா காரெக்டர்

முதல்மரியாதை போன்ற க்ளாசிக் படத்திலும் கதையை கெடுக்காத காமெடியாக "நானும் கருப்பு என் பொஞ்சாதியும் கருப்பு புள்ள மட்டும் எப்படி சிவப்பா பொறந்திச்சு" என கதறி அழும் ஜனகராஜை மறக்க முடியுமா.? 80 களில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் ஆனார் ஜனகராஜ்.. ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு, மோகன் இந்த 7 பேரையும் 80 களில் 7 ஸ்டார்ஸ் என்பார்கள்.. இவர்களின் எல்லா...

படங்களிலும் ஜனகராஜ் தவிர்க்க முடியாத நடிகர் ஆனார்.. பாரதிராஜா, கே.பாலச்சந்தர், மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன், ஏன் மணிரத்னம் படங்கள் வரை ஜனகராஜிற்கென்றே ஒரு பாத்திரம் அவர்கள் கதையில் இருக்கும்.. ரஜினியுடன் படிக்காதவன் முதல் பாட்ஷா வரை ஜனகராஜின் பயணம் இருந்தது.. தங்காச்சிய நாய் கட்சிட்ச்சுப்பா என படிக்காதவனிலும் ரிக்ஷாகாரனாக இருந்து பணக்காரனாக நடிக்க வந்து சைனா டீயும்..

மசால்வடையும் வோணும்பா என ராஜாதிராஜாவிலும், நக்மா ஆட்டோவில் ஏற ரஜினியிடம் நமட்டுச் சிரிப்பில் பை சொல்வது என பாட்ஷாவிலும்  இப்படி எத்தனை படங்கள்.. அதே போல கமலுடன் விக்ரம் படத்தில் அந்த மொழி பெயர்ப்பாளன்.. அபூர்வ சகோதரர்களில் அந்த இன்ஸ்பெக்டர் காரெக்டர்.. முத்தாய்ப்பாக நாயகனின் கமலின் நண்பன் என ஜனகராஜ் திரையுலக கிரவுண்டில் அடித்ததெல்லாம் பிரும்மாண்ட சிக்ஸர்கள்.



சத்யராஜுடன் பல படங்கள் அதில் மை டியர் பிரில்லியண்ட் ஸ்டூடண்ட் ஜெய பாஸ்கர் என அலும்பும் அலம்பல்.. இளமை காலங்கள் படத்தில் ஊட்டிக்கு போகாதிங்க.. என கத்தும் பைத்தியமாக, கார்த்திக் உடன் வருஷம் 16 படத்தில் அடித்த லூட்டி.. பிரபுவுடன் கன்னிராசி இப்படி பின்னி பெடல் எடுத்து இருப்பார். இத்தனைக்கும் அப்போது தமிழ் சினிமாவில் செந்தில் கவுண்டமணியின் கொடி உச்சத்தில் பறந்து கொண்டிருந்தது.

அதற்குள் எல்லாம் சிக்காமல் சுனாமியிலும் ஸ்விம்மிங் போட்டவர் ஜனகராஜ் மட்டுமே.. இவரை காமெடி நடிகர் என்று மட்டும் சொல்ல முடியாது அருமையான குணசித்திர நடிகரும் கூட நாயகன் ஒருபடம் போதும்.. ஆரம்ப காலத்தில் பாலைவனச்சோலை படத்தில் வேலை இல்லாத பட்டதாரியாக இவர் வரும் காட்சிகளை பார்த்தாலே அது தெரியும் ஆனால் இவர் பிரமாதமான நகைச்சுவை நடிகர் என்பார் பாண்டியராஜன்.

இயக்குனர் பாண்டியராஜன் படங்களில் செந்தில் கவுண்டமணி இருக்க மாட்டார்கள் ஆனால் நிச்சயம் ஜனகராஜ் இருப்பார்.. கன்னிராசியில் பாட்டு வாத்தியார்.. ஆண்பாவத்தில்.. ஓட்டல் கடை நடத்தும் சித்தப்பா.. நெத்தியடியில்.. வேண்ணு எட்த்த்தத கொட்த்துடு ராஜா.. என வித்யாசமான குரல் மாடுலேஷனில் பாண்டியராஜன் அப்பா என தூள் கிளப்பியிருப்பார். பாலச்சந்தர் படங்களிலும் அவர் தன் முத்திரையை பதிக்காமல் இல்லை.

சிந்துபைரவி புதுப்புது அர்த்தங்கள் என சில படங்களை சொல்லலாம் அதிலும் புதுப்புது அர்த்தங்களில் அந்த திக்குவாய் காரக்டர்.. இன்னொரு விஷயம் கவனித்தால் தெரியும்.. ஜனகராஜிற்கு இளையராஜா பாடும் எல்லா பாடல்களும் அவ்வளவு பொருத்தமாக இருக்கும்.. கவுண்டமணி செந்திலை விட அதிக பாடல்களில் நடித்தவர் ஜனகராஜாகத் தான் இருக்கும் என நினைக்கிறேன்.. பூஞ்சிட்டு குருவிகளான்னு ஒரு பாட்டு.. அதை பாடியது..

இசையமைப்பாளர் சந்திரபோஸ்.. அந்த படம் வந்த காலங்களில் இந்தப் பாடலை பாடியது ஜனகராஜே தான் என விவாதித்தது உண்டு.. அந்த அளவிற்கு சிறப்பாக பாடியிருப்பார் சந்திரபோஸ்.. வாய்ப்புகள் குறைவினால் அவர் இவருக்காக அதிகம் பாடியதில்லை என்பதே உண்மை.. கவுண்டமணி கோலோச்சிய காலத்தில் எல்லா கதாநாயகர்களுடனும் தவிர்க்க முடியாத நடிகனாக சிறந்து விளங்கியது ஜனகராஜின் திறமைக்கு ஒரு சான்று.

உண்மையில் சிங்கம் சிங்கிளா தான் வரும் என்பது ஜனகராஜிற்கு தான் பொருந்தும்.. தமிழ்சினிமாவின் தனி ஒருவன் என்பது ஜனகராஜே தான்.. இவரை தொலைகாட்சி ஊடகங்கள் பெரிதாக அங்கீகரிக்கவில்லை என்பது மிகப்பெரிய வருத்தம்.. இந்த முகனூல் காலத்தில் வடிவேலு கவுண்டமணி மீம்சுகள் கலக்கி எடுத்துக் கொண்டிருந்தாலும் என் பொண்டாட்டி ஊருக்கு போயிடுச்சே என்னும் ஒற்றை மீம்சில் இங்கும் தனிஒருவன் ஜனகராஜ்.

1️⃣1️⃣🐭🎊🎈டிஸ்னி என்ற மாயலோகம்🎉🐰1️⃣1️⃣

டிஸ்னியில் மிக்கிமவுஸ் காரக்டர் அலங்கார வண்டியில் வந்தபோது புகழ் பெற்ற மிக்கி மவுஸ் தீம் சாங் ஒலித்தது.. இளையராஜாவின் டிவி லைவ் ஷோ நிகழ்ச்சிகளில் காமிரா ஆடியன்ஸ் பக்கம் வரும் போது மேடையில் பாடகர் பாடுகின்ற பாடலை பார்வையாளர்களும் பாடுவதைப் பார்த்திருப்போம்.. இங்கும் அது தான் நிகழ்ந்தது தங்கள் பால்ய வயதில் அறிமுகமான மிக்கி மவுஸ் பாடலை அமெரிக்கர்கள் இணைந்து பாட ஆரம்பித்தார்கள்.

அவர்கள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி குழந்தைகள் முதல் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் கூட அதைப் பாடியது அமெரிக்க மக்களின் வாழ்வில் மிக்கி மவுஸ் எந்தளவு கலந்திருக்கும் என உணர முடிந்தது.. இந்த வண்டி வந்த போது மட்டும் நடனக் கலைஞர்களோடு பொதுமக்களும் ஆட அனுமதிக்கப் பட்டனர். அடுத்து அலபாமா பல்கலைக்கழகத்தின் 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இசைத்து வந்த பேண்ட் அணிவகுப்பு. அடடா..

மிலிடரி ஒழுங்கில் டிரம்ஸ் & டிரம்பட் இசைத்துக் கொண்டே அவர்கள் நடந்து வந்தது மிடுக்குடன் இருந்தது.. டிஸ்னியில் பேண்ட் வாசிக்கும் வாய்ப்பு என்பது அமெரிக்காவில் உயரிய கவுரவம்.அந்த இடத்தை அடைய முயற்சிக்காத பேண்ட் குழுக்களே இல்லை எனச் சொன்னார்கள். கண்ணுக்குக் செவிக்கும் நல்ல விருந்து.. மணி 5:30 நேராக அந்த கடைசி விளையாட்டுக்கு செல்ல மேலும் 10 நிமிடங்கள் ஆகியிருந்தது.

அங்கே போனால் எங்கள் கார்டு அக்சஸ் நேரம் முடிந்திருந்தது.. அவ்வளவு தான் இந்த கார்டை வைத்து இனி எந்தக் குகையையும் திறக்க இயலாது அதனால் என்ன இது போல ரைடுகள் ஆறரை மணிக்கு மேல் முற்றிலும் நிறுத்தப்படும். எதிரே இருந்த கடைக்கு போய் 2 பர்கர் ஒரு அரைலிட்டர் கோக் 10 டாலர்கள் கொடுத்து வாங்கி ஒரு ஓரமாக அமர்ந்தோம்.. எதிரே
இருந்த எல்லார் கையிலும் தீப்பந்தம் சைசில் சிக்கன் லெக்பீஸ் இருந்தது..!

விசாரித்தோம் அது வான்கோழி கால் என்றார்கள்.. அமெரிக்காவில் வான்கோழி ஒரு முக்கிய உணவு.. வான்கோழி சமைத்து தேங்ஸ் கிவிங் டே என்றொரு நாளே கொண்டாடுகிறார்கள்.. சரி அதை பிறகு பார்ப்போம்.. பர்கர் கோக் தந்த புத்துணர்வில் எழுந்து நடந்தோம்.. இங்கே ஒரு குட்டி ப்ளாஷ் பேக்.. மதியம் மேஜிக் வேர்ல்டில் விண்டோ ஷாப்பிங் சென்றோம் அல்லவா அங்கு வித்யாசமான ஒரு கலைஞரைப் பார்த்தோம்.

பொதுவாக கேரிகேச்சர் எனப்படும் கார்ட்டூன் ஓவியங்களில் நம்மை வரைந்து தருவார்கள் அல்லவா.. வால்ட் டிஸ்னியில் அது இன்னும் நேர்த்தி ஆகயிருக்கும்.. என்ன கவர்ந்தது சில் அவுட் கட்டர் என்னும் கலையைக் கற்ற கலைஞர்.. அவர் ஒரு மூதாட்டி.. அதென்ன சில் அவுட் நல்ல இருளில் உங்கள் மீது ஒளி பட்டால் உங்கள் நிழல் சுவற்றில் விழுமே அந்த கரிய உருவம் தான் சில் அவுட் .. என்னை ஒரு நாற்காலியில் அமர வைத்தார்.

பக்கவாட்டில் பார்க்கச் சொல்லிவிட்டு கையில் ஒரு பேப்பரையும் ஒரு குட்டி கத்திரிக்கோலையும் வைத்துக்கொண்டு அந்தப் பேப்பரை வளைத்து வளைத்து வெட்டினார் அதிகபட்சம் 2 நிமிடம் அவர் எனது பக்கவாட்டு தோற்றத்தை பேப்பரில் கத்திரித்து முடித்து இருந்தார்.. வியந்து போனேன் என் உருவம் கத்தரித்து எடுத்த குட்டி நிழலாக என் கையில் அடடா.! ப்ரேம் போட்டு நீட்டினார் மொத்தம் 15 டாலர்கள் (₹1200) இருக்கட்டுமே..

அந்தக் கலைக்கு கொடுத்த பணமாக இருந்துவிட்டு போகிறது. அவரிடம் விடை பெற்றுக் கொண்டேன்.. விண்டோ ஷாப்பிங்கில் குட்டி மிக்கி மவுஸ் பொம்மையை கிறிஸ்டோவும் மிக்கிமவுஸ் வாட்ச் ஒன்றை சசியும் வாங்கினார்கள்.. மொத்தம் 70 டாலர்கள் செலவு.. டிஸ்னியில் எங்கள் மொத்த ஷாப்பிங்கே அது தான்.. ப்ளாஷ்பேக் ஸ்டாப்.. மணி ஆறரை ஆகியிருந்தது இனி இரவு 8 மணிக்குதான் எலக்ட்ரிக் பரேடு என்றது மேப்.

அதென்ன எலக்ட் ரிக் பரேடு.? இது  டிஸ்னியின் முக்கியமான பரேடு உலகெங்கும் புகழ் பெற்றது.. கண்கவர் ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப் பட்ட வண்டிகளில் ஊர்வலமாக வருவார்கள்.. இரவில் அது கண்கொள்ளா காட்சி என இங்கு வரும்போதே சொல்லி இருந்தனர்.. காலையில் இடம் கிடைக்காததால் இப்போதே அங்கு இடம் பிடித்து அமர்ந்தோம்.. ஜாலியான அரட்டை.. மணி 8 ஆனது.. இசை ஒலிக்க விளக்கணைய அதோ அங்கே..!

(வரும்...)

🔟🐭🎊🎈டிஸ்னி என்ற மாயலோகம்🎉🐰🔟

டிஸ்னி ரோட் ஷோ என்பது அலங்கார வண்டிகளில் டிஸ்னியின் எல்லா கதாபாத்திரங்களும் கலந்து கொள்ளும் ஊர்வலம். அதாவது நமது டெல்லி குடியரசுதின விழா போல அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அழகாக அணிவகுத்து வருமே அதுபோல..எங்கும் ஆரவாரம் உற்சாகம்..வால்ட் டிஸ்னியின் லயன் கிங் தொடங்கி எல்லா புகழ் பெற்ற கேரக்டர்களுக்கும் தனித்தனி வாகனங்கள் பிரம்மாண்டமான செட்டுகள்.

அதில் நிஜம் போல இருக்கும் நடிகர் நடிகைகள், சாலையில் அந்த தீமின் வண்ண உடையில் ஆடி வரும் ஆண் பெண் டான்சர்கள் என களை கட்டியது.. லயன் கிங் வண்டி அதைத் தொடர்ந்து கரீபியன் பைரட் வண்டி பின்பு மண்டை ஓட்டின் மேல் கப்பல்.. அலங்கார உடைகள் அணிந்த டான்சர்களோடு வந்த கடல் கன்னி வண்டி, அதிலும் ஒரு டிராகன் வண்டி.! அந்த டிராகனே சைக்கிள் போல பெடல் மிதித்து ஓட்டி வந்த காட்சி ஆஹா! 

அதனுடன் வந்த டான்சர்கள் அணிந்து இருந்த ஆடைகள் எல்லாம் ஸ்பீல்பெர்க் தரம். எந்த வண்டி சூப்பர் எந்த காஸ்ட்யூம் சூப்பர் என்பதைச் சொல்ல முடியவில்லை. கிட்டத்தட்ட ஜவுளிக் கடையில் சேலை எடுக்கப் போன பெண்ணின் மனநிலையில் இருந்தோம்.. நல்ல க்ரியேட்டிவிட்டியில் உருவான அலங்கார வண்டிகள், ஆடை அணிகலன்கள், கார்ட்டூன் உருவங்கள், புகழ் பெற்ற கதாபாத்திரங்கள் எல்லாம் அங்கே..

நிஜத்தில் உலா வந்து அனைவரையும் ஒரு கனவு உலகத்திற்கு அழைத்துச் சென்றது.. இத்தனைக்கும் அந்த காரக்டர்களுக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லாத நமக்கே இவ்வளவு சிலிர்ப்பென்றால் அதற்கு நன்கு பரிச்சயமான அமெரிக்கர்கள் கடவுளை கண்ட நிலையில்.. பரவசமாக நின்றார்கள்.. இந்த உணர்வுக்கு தான் இவ்வளவு விலையும்.. 40 நிமிடங்கள் வேற்றுலகில் இருந்துவிட்டு வந்தது போல உணர்ந்தோம். ரோட் ஷோ நிறைவடைய..

மகரஜோதி முடிந்து திரும்பும் சபரிமலை பக்தர்கள் கூட்டம் போல அலை அலையாய் கலைந்தது. இவ்வளவு நேரம் நாங்கள் பார்த்தது பார்க்கின் இடது புறம் மட்டுமே வலதுபுற பார்க் முழுக்க முழுக்க வாட்டர் ஸ்போர்ட்ஸ் டவல் குளியல் ஆடைகள் இல்லாததால் அங்கு..போகவில்லை.. அதெல்லாம் நம் ஊரிலேயே இருக்கு என ஏற்கனவே சொல்லியிருந்தார் நண்பர் சீனிவாசன்.. மேஜிக் வேர்ல்டின் உள்பக்கம் போக தீர்மானித்தோம்.. 

அங்கு ஏராளமான ராட்டினங்கள், விளையாட்டு அரங்குகள், ஆடைகள், விளையாட்டுப் பொருட்கள், டிஸ்னி பிராண்ட் பொருட்கள் விற்கும் கடைகள் இருந்தன. உணவங்களில் அவர்கள் சொன்ன விலையே நம் பசியை மறக்கடித்தது அரைலிட்டர் வாட்டர் 3 டாலர்(₹201) விண்டோ ஷாப்பிங் செய்துகொண்டே நடந்தோம்.. இன்னும் ஒரே ஒரு விளையாட்டு மட்டுமே இருந்தது அது 5:30 மணிக்கு தான்.. மணி 4 தான் ஆகியிருக்க 

மீண்டும் ஒரு ரோட் ஷோ துவங்கியது. வால்ட் டிஸ்னியின் புகழ் பெற்ற மிக்கி மவுஸ் டொனால்டு டக் அலங்கார வண்டிகள் வந்தன.. நடனக் கலைஞர்கள் ஆடிப்பாடி வர அமெரிக்கர்களின் முகம் முழுக்க அவ்வளவு உற்சாகம்.. இதுவரை இல்லாத ஒன்று இப்போது அம்முகங்களில்... அதுபற்றி

(வரும்...)

9️⃣🐭🎊🎈டிஸ்னி என்ற மாயலோகம்🎉🐰9️⃣

நாங்கள் கோஸ்ட் பேலஸ் போக ஷோ துவங்க சரியாக இருந்தது இங்கு நான்கு நான்கு பேராக செல்லும் வண்டியில் ஏற்றிவிட்டார்கள் அது ஒரு தண்டவாளத்தில் பயணிக்கும் வண்டி சுரங்கத்தில் செல்லும் டிரெயிலர் போல.. வண்டி கிளம்பியது. தமிழகத்து சாலையில் பயணித்த அனுபவம் அப்படி குலுங்கியது.. ஆனால் மிரட்டி விட்ட பயணம் அது. எங்கும் கும்மிருட்டு மெல்லிய நீல நிற ஒளி எங்கும் தூசு படிந்தார் போல புகை.

அதன் நடுவே கண்ட காட்சிகள்.. மிரட்டி விட்டார்கள் சவப்பெட்டிக்கு உள்ளேயிருந்து மேல்புற மூடியை தபதப வென தட்டி அதன் மேலிருந்த ஆணியை தள்ளுவது, கையில் தன் தலையை வைத்துக் கொண்டு முண்டம் அதன் தலையை சீவுவது, தன் விரலை வெட்டிக் கொள்ளும் கிழவி, குறுக்கும் நெடுக்குமாக ஓடும் குட்டிச்சாத்தான்கள்.. முகத்தை கிழித்து எலும்பை துடைக்கும் இளம்பெண்.. அலறல், சிரிப்பு, அழுகை என திகிலூட்டினார்கள்.

அவ்வப்போது நாம் போகும் பாதையின் வல இட பக்கத்தில் படாரென்று கதவை திறந்து கொண்டு சிரிக்கும் உருவங்களும் ரத்தம் வழிய சிரிக்கும் டிராகுலாக்களும் உண்டு விர்ச்சுவல் எஃபெக்டில் தலை கீழாக நடக்கும் பேய்கள் தொங்கும் பேய், ஆடும் பேய், பாடும் பேய், சிரிக்கும் பேய் என பல வெரைட்டிகளில் பேய்கள் தென்பட்டன நம்ம தமிழ் சினிமாகாரங்க இங்கே போனால் 2050 வரை பேய்ப் படங்களுக்கு அதிக கான்செப்ட் கிடைக்கும். 

வெள்ளை நிற முகத்தோடு வெளியேறி உணவு உண்ணும் பகுதிக்கு வந்தோம் எங்கள் பிக்னிக் பேக்கை பிரித்து அமர்ந்தோம்.. ரம்யாவிற்கு நல்ல கை மணம் லெமன் சாதத்தின் வாசனை அந்த ஏரியாவை நிறைத்தது எல்லாரும் எச்சிலூற எங்களையே பார்த்தார்கள்.. அழகர் கோயிலுக்கு போவது போல கிழங்கு காரக்கறி,லெமன், தயிர்சாதம் ஊறுகாய் என கட்டுச்சோறு கட்டிட்டு அமெரிக்கா டிஸ்னி போனது முதன் முதலில் நாங்களா தான் இருக்கும்.

சாப்பிட்டு முடித்த போது எல்லா வாட்டர் கேனையும் உபயோகித்து இருந்தோம் நிறைய சுமை குறைந்து இருந்தது மணி 1:45 காலையில் இருந்து நடந்து களைத்த அலுப்பு, கால்வலி, விளையாட்டுகளால் ஏற்பட்ட உடல் வலி இப்போது திருப்தியான நம்ம ஊரு கட்டுச்சோறு அங்கு வீசிய மென்காற்று இவை எல்லாம் உள்ளே இருந்த தூக்கப் பெருச்சாளியை உசுப்பி விட அங்கு இருந்த பார்க் பெஞ்சில் அப்படியே கண்ணயர்ந்தோம். 

பார்க் பெஞ்ச் என்றாலே அதில் தூங்கிவிடுவது என்ற தலையாய தமிழனின் குணம் டிஸ்னி பார்க்கிலும் வெளிப்பட்டது.. ஆனால் எதிரில் ஒரு ஸ்பானிஷ் குடும்பமும் தூங்கியதைப் பார்த்தோம் ஏதோ ஒரு ஜீன் தொடர்பு நமக்கும் அவர்களுக்கும் இருந்திருக்கும் போல.! கனவில் அமெரிக்க டோனெட் உடன் அலாவுதீன் பாயில் ஏறி பறந்து அப்படியே கரீபியன் கப்பலில் குதித்து அங்கிருந்து மலை ரயிலில் ஏறி டிகி பேர்ட் காட்டுக்குள் வந்தேன்..

காட்டில் ஹாய் ஹனி இதோ உங்கள் விளக்கு என்றாள் விற்பனைப் பெண் அதை வாங்கிக் கொண்டு திரும்பினால் டோனெட் தன் தலையை கழட்டி கையில் வைத்துக் கொண்டு தலை சீவிக்கொண்டிருக்க.... பப்ர பப்ர பப்ர பப்ர பப்பரபாம் என டிரம்பட் ஒலி கேட்டு எழுந்தேன்.. அடச்சே பூரா கனவு ஒலி வந்த திசை நோக்கினால் புகழ் பெற்ற டிஸ்னியின் ரோட் ஷோ துவங்க இருந்தது மணி 2:30 கிட்டத்தட்ட 40 நிமிடம் உறங்கியிருக்கிறோம்.

கொஞ்சம் ப்ரெஷ்ஷாக உணர்ந்தோம் அருகில் இருக்கும் ரெஸ்ட் ரூமிற்கு சென்று வொடிகலோன் மணக்கும் சோப்பால் முகம் கழுவி மேலும் ப்ரெஷ்ஷாகி வெளியே வந்தோம்.. சாலையின் இரு பக்கமு மக்கள் கூட்டம் அலைமோதியது இடம் கிடைக்க நிறையவே சிரமப்பட்டோம் ஷோ துவங்கி இருந்தது.. ஒருவழியாக இடம் கிடைத்து அங்கே நாங்கள் கண்டகாட்சி...

(வரும்...)

8️⃣🐭🎊🎈டிஸ்னி என்ற மாயலோகம்🎉🐰8️⃣

டிகி பேர்டுகள் பற்றி என் குழந்தை பிராயத்தில் அறிந்ததில்லை ஆனால் அமெரிக்காவில் புகழ்பெற்ற கார்ட்டூன் அது அந்த அரங்கத்தில் நாங்கள் சென்று அமர்ந்த அடுத்த சில நொடிகளிலேயே ஷோ ஆரம்பித்து விட்டதால் அரங்கை கவனிக்க முடியவில்லை. இதோ ஷோ ஆரம்பித்து விட்டது ஒளி வந்த பின்பு தான் பார்த்தேன் அது 180 டிகிரியில் அரைக்கோள வடிவில் அமைந்த அரங்கம் எங்களுக்கு எதிரே சர்க்கஸ் வளையம் போல வட்டம்.

அதன் கூரையில் இருந்து ஷாண்ட்லியர் போல ஒரு கதவில்லாத பறவைக் கூண்டு கீழிறங்கியது அதன் ஒவ்வொரு கிளையிலும் வரிசையாக கிளிகள், மைனாக்கள், வானம்பாடிகள் என பல பறவை இனங்கள் அமர்ந்திருக்க ஒலித்த இசைக்கு அனைத்தும் அப்படியே வாயசைத்து பாடின..அத்தனையும் பொம்மைகள் தான் ஆனால் நிஜப் பறவைகள் போலவே இருந்தன. அடுத்த 15 நிமிடமும் அந்த காட்டில் நடை பெறும் சம்பவங்கள் தான் பாடல்.

மழை வரும் அறிகுறி வானில் இடித்த இடி பட்ட மரமொன்றில் விழ காடு தீப்பிடிக்கிறது மழை ஒரு புறம் வருமா என தவிப்புடனும் தீ சூழ்ந்து இருக்கும் அக்காட்டில் தன் பறவையினங்களை பறவை ராஜா காப்பாற்றுகிறார்.. இது தான் கதை (நான் புரிந்துகொண்ட) இதில் பூக்கள் செடிகள் எல்லாம் பாடல்கள் பாடி நம்மை வியப்பில் ஆழ்த்தின.. சைடில் இருந்த ஆதிவாசிகள் சிலை அலங்காரத்திற்கு என பார்த்தால் க்ளைமேக்சில் அதுவும் பாடியது.

கிட்டத்தட்ட ஒரு பறவைகள் விக்ரமன் படம் பார்த்த திருப்தி 12 நிமிட ஷோ நிறைவடைய வெளியேறினோம். கையில் இருந்த வாட்டர் பாட்டில்களில் பாதியை காலி செய்து எங்கள் சுமையைக் குறைத்தோம். மணி 12:25தான் இன்னும் நாங்கள் பார்க்க இரண்டு இடம் இருக்கிறது என்றது மேப் அவை என்ன எனப் பார்த்தோம் கோஸ்ட் பேலஸ் & ஜங்கிள் சபாரி.. இரண்டையும் பார்த்துவிட்டு பிறகு லஞ்ச் சாப்பிடலாம் என முடிவெடுத்தோம்.

ஜங்கிள் சபாரி எங்கள் எதிரிலேயே இருந்தது மரத்தால் கட்டப்பட்ட படகுத் துறை வரிசையில் நின்று படகில் ஏறினோம் டிஸ்கவரி சானலில் வரும் ஸ்டீவ் இர்வின் போல காக்கி & காக்கி அணிந்த சபாரி கோ ஆர்டினேட்டர்கள்.. எங்கள் படகில் என்னைப்போல் மும்மடங்கு பருமனில் ஒரு லேடி. அவர் தான் கோ ஆர்டினேட்டர் படகு மெல்லக் கிளம்பி ஒரு யூடர்ன் அடித்ததும் காடு வந்தது அமேசான் நதிப்பயணம் போல இருபுறமும் அடர்ந்த காடு. 

நடுவே எங்கள் படகு சென்றது.. கரையின் இரு புறமும் ஆதிவாசிகள், புலிகள், அனகோண்டா பாம்பு, யானைக்குட்டிகள் குளிப்பது இவை எல்லாம் உயிரோட்டம் உள்ள பொம்மைகளாகச் செய்து அதற்கு உயிரும் கொடுத்து இருந்தார்கள். அவ்வப்போது சிங்கத்தின் கர்ஜனை பறவைகள் இரைச்சல் என ஆடியோ கசிந்தது. ஹோவெனக் கொட்டும் ஒரு அருவிக்கு பின்பக்கம் எங்களை நனையாது படகை ஓட்டிச் சென்றாள்.. புதுமையான அனுபவம். 

அவ்வப்போது முதலைகள் கீழே இருக்கு ஜாக்கிரதை தண்ணீருக்குள் விரலை கடித்து துண்டாக்கும் அமேசான் நன்னீர் ஆற்று மீன்கள் கவனம்.. காட்டாறு வெள்ளம் பாய்ந்தால் சேஃப்டி கார்டை எடுத்து மாட்டிக் கொள்ளுங்கள் என விளையாட்டாக பயமுறுத்தியபடியே வந்தாள்... காட்டு அருவி ஒன்றின் நீரோட்டம் இங்கு இருக்கிறது அதில் மாட்டினால் நம் படகு அருவியின் உச்சிக்கு போய் தலைகுப்புற விழுவோம் ஆடாதீர்கள் என்றாள்.

அவள் சொன்ன அடுத்த வினாடி படகு ஒரு பக்கம் வேகமாக இழுத்து செல்லப்பட்டது.. அவள் போச்சு காட்டு அருவி நீரோட்டத்தில் மாட்டி விட்டோம் என்றாள்.. அங்குமிங்குமாக படகு அலைய சில மீட்டர் தூரத்தில் அருவியின் தலை தெரிந்தது அங்கு போனால் தலை குப்புற விழவேண்டியது தான் நிச்சயம் இதில் ஏதோ ஒரு திரில் இருக்கும் என அனுமானிக்க முடிந்ததால் பதட்டம் இல்லை இருப்பினும் கொஞ்சம் பயம் இருந்தது.

அந்த அருவியின் விளிம்புக்கு போவது போல போன படகு சடாரென வலது பக்கம் திரும்பியது.. பார்த்தால் நாங்கள் படகு ஏறிய அதே இடம் அந்தப் பள்ளம் வெறும் 2 அடி தான் படகு போனால் கூட இறங்கியிருக்குமே தவிர கவிழ்ந்து இருக்காது.. அசடு வழிந்த எங்கள் முகங்களை சிரித்தபடி பார்த்தாள்.. எல்லாரும் ஒரு ஆக்ஷன் படத்தில் நேரடியாக நடித்த அனுபவம் பெற்றதால் எங்கள் இயல்பு நிலைக்கு வர கொஞ்சம் நேரமாகியிருந்தது.

அடுத்து கோஸ்ட் பேலஸ்.. (வரும்..)

7️⃣🐭🎊🎈டிஸ்னி என்ற மாயலோகம்🎉🐰7️⃣

கரீபியன் பைரேட்ஸ் உலகிற்குள் படகு திரும்பிய வினாடி மொத்த குகையும் கும்மிருட்டானது சுவர்களில் மறைந்து இருந்த ஸ்பீக்கர்களில் இருந்து திடும் திடும் என இசை ஒலிக்கத் துவங்கியது மெல்ல அவ்விசை உயர உயர அதே வேளையில் அமெரிக்க பி.எஸ்.வீரப்பா ஒருத்தரின் இடிச்சிரிப்பும் ஒலிக்க குழந்தைகள் தம் பெற்றோரைக் கட்டிக்கொண்டனர் நானும் கட்டிக்  கொள்ள ஆள்தேடி பக்கத்தில் சசி கிறிஸ்டோ இருந்ததால் விட்டுவிட்டேன்.

கும்மிருட்டில் திடீரென பளிச் வெளிச்சம் எதிரே ஒரு அருவி கொட்டிக் கொண்டிருக்க அதில் பைரேட்ஸ் தலைவன் முகம் புரொஜக்டர் ஒளியில் தெரிந்தது அவன் தன் கரகர மொறு மொறு குரலில் பைரேட்ஸ் உலகிற்கு எங்களை அச்சுறுத்தி வரவேற்க படகு அந்த அருவி நோக்கி போக போச்சு இந்த முறை நனைவது உறுதின்னு நினைத்து எங்களை தயார் படுத்திக் கொள்ள அருவியில் நுழைந்தது படகு.. ஆனால் யாருமே நனையவில்லை.! 

அது விர்ச்சுவல் எஃபெக்டில் புரொஜக்ட் செய்யப்பட்ட அருவி என்பது படகு அதில் நுழையும் போது தான் தெரிந்தது இவ்வளவு நேரம் தண்ணீராக தெரிந்தது இப்போது புகையாய் சுருண்டு கலைந்தது.. அடுத்து போக போக இருபுறமும் கரீபியன்களின் உலகம், அந்த காரெக்டர்கள் அனைத்தும் உயிரோட்டம் உள்ள பொம்மைகளாக அசைந்து பேசின இடையிடையில் துப்பாக்கி வெடித்தது அலறல் கேட்டது மிகவும் த்ரில்லிங்கான அனுபவம்.

குகையின் நடுவே தொங்கும் ஒற்றைக்கால் மனிதன், நடு மண்டையில் கோடாலியை கோல்டு மெடலாக குத்தியவன், ஒற்றைக் கண் முகமூடி அணிந்த எலும்புக்கூடு பைரேட், வெட்டிய தன் கையை தானே எடுத்து வைத்துக் கொண்ட தானைத் தலைவன், தண்ணிவண்டி டாஸ்மாக் பைரேட் என திகிலுக்கு ஏராளமான கேரக்டர்கள் இருந்தனர்.. குகை முடிவில் தங்கம்  வைரம் வைடூரியம் என கொள்ளையடித்த பொக்கிஷங்கள் இருக்கும் அறை.!

ஜொலிக்கும் அந்த அறையில் ஒரு தங்க சிம்மாசனத்தில் பைரேட்டுகளின் தலைவன் மகுடம் அணிந்து எங்களுக்கு போய்வா என கையாட்டினான். அதை கடந்த திருப்பத்தில் படகு திரும்பியதும் இயல்பு வெளிச்சத்திற்கு வந்தது.. அனைவரும் கைத்தட்டினார்கள்..உடலெங்கும் சிலிர்ப்பும் சொல்ல இயலாத ஒரு உணர்வும் ஓடிக்கொண்டிருந்தது.. வெளியே கரீபியன்கள் பயன்படுத்தும் பொருட்கள் உள்ள கடை.! இது டிஸ்னி வேர்ல்டில் சகஜம்.

அலாவுதீனோ கரிபியனோ டிஸ்னியின் கேரக்டர்கள் உள்ள அரங்கிற்கு போனாலே எக்சிட் ஆகும் போது இதுபோல கடைகள் இருக்கும் கைப்பைகள்,பர்சுகள், விளையாட்டு பொருட்கள், அலங்காரப் பொருட்கள், கைக்குட்டைகள், டேபிள்விரிப்புகள் இப்படி அந்த கான்செப்ட் அந்த காரெக்டருக்கு தகுந்தது போல வைத்து விற்பனை செய்கிறார்கள். நாங்கள் அதை வாங்குவதற்கு அமெரிக்காவில் சம்பாதித்தால் வாய்ப்பு. ம்ஹும்..

30 டாலருக்கு (₹2100) குறைந்து எதுவுமில்லை என்மனைவி மட்டும் அங்கு இருந்தால் ஐயோ கிட்டத்தட்ட ஒரு கிராம் தங்கம் விலையா என அலறி
இருப்பாள். பைரட் அனுபவத்தை அசை போட்டுக் கொண்டே கிளம்பினோம் அடுத்து டிகி பேர்டு அரங்கம் ஆனால் அதற்கு நேரம் இருந்தது.. எதிரில் தான் அலாவுதீன் மீண்டும் போனால் நாங்கள் காலையில் பார்த்ததை விட கூட்டம் அதிகம் இருந்தது. அலாவுதீன் தீம் பொருட்கள் விற்கும் கடை தென்பட்டது.

டிகி பேர்டுக்கு எதிரே தான் என்பதாலும் எப்படி பார்த்தாலும் எதுவும் வாங்கப் போவதில்லை என்ற தெம்பினாலும் உள்ளே நுழைந்தோம். என்னை போல பருமனான ஒரு பெண் அலாவுதீன் பணிப்பெண் போல உடையணிந்து வரவேற்றாள். அராபிய தீமில் அழகழகான கலைப் பொருட்கள் இருந்தன அத்தனையும் எங்கள் மனதை கொள்ளையடித்தது அதற்கு விலை வைத்து வால்ட் டிஸ்னி கொள்ளையடித்தார் என்னை அங்கு கவர்ந்தது ஒரு பொருள். 

அது என்ன தெரியுமா? அலாவுதீன் விளக்கு மிக சிறிய சைசே 30 டாலர்கள் என்றார்கள் அது குழந்தைக்கு பால் புகட்டும் சங்கு சைசில் இருந்தது.. அதை விளக்குன்னா பூதமே நம்பாது ஒரளவிற்கு பெரிய சைசில் இருந்த விளக்கு 100 டாலர்கள் என்றார்கள் (₹7000) எடுத்து விட்டேன் அய்யோ இரண்டரை கிராம் தங்கம் என இந்தியாவில் இருந்து வந்த என் மனைவியின் மைண்ட் வாய்சை கேட்ச் செய்துவிட எடுத்த இடத்தில் வைத்துவிட்டேன்.

அந்தப் பெண் என்னிடம் வந்து ஹஸ்கியான விஸ்கி வாய்சில் விளக்கு வாங்கலியா தேனே (ஹனி) என ஆங்கிலத்தில் கேட்டாள் (என்னா யாவாரத் தந்திரம்) அதை தேய்த்தால் பூதம் வருமா அன்பே என்றேன்.. மேபீ என்றாள் கண்ணடித்து.. அதை தேய்த்தால் பூதம் வரும் ஆனால் ஆயுசுக்கும் எனக்கு சாதம் வராது எனக்கூறி அவளுடன் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டேன். அடுத்து  டிகி பேர்ட் அரங்கம்.. உள்ளே சென்று அமர்ந்தோம். விளக்கு அணைந்து எரிய அங்கே...! வாவ்..!   (வரும்...)

5️⃣🐭🎊🎈டிஸ்னி என்ற மாயலோகம்🎉🐰🎈5️⃣

பேரிடி மலைரயில் எனப் பொருத்தமாகத்தான் பெயர் வைத்திருந்தார்கள்.. 10 நிமிட ரைடில் உலுக்கி குலுக்கி எடுத்து விட்டார்கள்.. ஆனால் அந்த திரில்.. நிச்சயம் விலை மதிப்பில்லாதது.. சாண்டில்யன் எழுதுவது போல சரேல் சரேல் என ஒரு பாம்பு போல பள்ளம் மேடு வலப்பக்கம் இடப்பக்கம் மேலே கீழே என அது திரும்பும் போதெல்லாம் ஒரு பரவசம்.. அதிலும் எதிரே அருவி நீர் கொட்டிக்கொண்டிருக்க கிட்டத்தட்ட அதை நோக்கிப் போய்...

போச்சு நாம தெப்பலா நனைய போகிறோம் என நினைக்கும் வினாடியில் அருவிக்கு ஒரு அடி தூரம் முன்பு சட்டசபையில் வெளிநடப்பு செய்யும் எதிர்க் கட்சி போல சட்டென வலதுபுறம் திரும்பிய கணம் இருக்கிறதே அடடா! அப்போது மெல்லிய நீர்ச்சாரல் நம்மீது விழ டிஸ்னியின் முதல் விளையாட்டே எங்களை பன்னீர் தூவி வரவேற்றதைப் போல இருந்தது. சாகசப் பயணம் முடிந்து இறங்கினோம் பேரிடி இடித்ததில் திரில் மழை பொழிந்தது.

சசி தான் கொஞ்சம் முகம் வெளிறி இறங்கினான்.. நான் என் அமெரிக்க டோனட்டை தேடினேன்..காணவில்லை இந்நேரம் அவள் அந்த அருவி அனுபவத்தை என் போல ரசித்துக் கொண்டிருக்கலாம்.. கிளம்பினோம் எங்களது அடுத்த ஷோ கரீபியன் பைரட்ஸ் என்னும் நிகழ்வு அது 12:00 மணிக்கு தான் 10: 45 க்கு வாட்டர் ப்ளாஷ் என்னும் விளையாட்டு இருந்தது என்னவென்று போய் பார்த்தால் 20 அல்லது 30 நபர்கள் ஒரு வண்டியில்..

அந்த வண்டி 50 அடி உச்சிக்கு ஏறிப் போய் அங்கிருந்து தொபுக்கடிர்னு கீழே இறங்கி தண்ணீர் தொட்டியில் இறங்கி இரு புறமும் நீரை பிளந்து வரும் விளையாட்டு... நம்மூர் தீம் பார்க்குகளில் உள்ளது தான் இருப்பினும் இங்கு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது.. மீண்டும் உச்சியில் இருந்து குதிக்கவா என சசி தயங்க நண்பேன்டா என நாங்களும் அவனுடன் நடந்தோம்.. கரீபியன் பைரட்ஸ் அரங்கம் வரும் போது சரியாக 10:50 மணி.

11மணி ஷோவிற்கு ஆட்கள் உள்ளே நுழைந்து கொண்டிருக்க ஆவலுடன் போய் நாங்க 12 மணி ஷோ ஆனா அதுக்கு பதில் இப்போது போக முடியுமா என வரவேற்பாளினி பெண்ணிடம் கேட்டோம்.. சிரித்த முகத்துடன் ஆணியே பிடுங்க முடியாது என்றாள் அமெரிக்க அசெண்டில்.. வடிவேலு போல் அவ்வ்வ்விக் கொண்டே வெளியேறினோம்.. எங்கள் கை மேப் அடுத்து அலாவுதீன் அற்புத விளக்கு பறக்கும் பாய் விளையாட்டு என்றது.

அதற்கு நேரம் ஏதுமில்லை எப்போது வேண்டுமானாலும் போகலாம் ஆகவே அங்கே போக முடிவெடுத்தோம் அடுத்த 2 நிமிட நடையில் இருந்தது அலாவுதீன் அரங்கு.. ஓரளவு இப்போது இந்தப் பகுதியின் வரைபடம் புரிந்து கொள்ள முடிந்தது எங்களுக்கு குறித்து தந்த அரங்குகளே எங்களைக் கைப்பிடித்து நூல் பிடித்தால் போல அடுத்தடுத்து அழைத்துப் போயின.. இதோ அலாவுதீன் அரங்கம் வந்துவிட்டது மலைத்து போனோம்.

க்யூ வளைந்து வளைந்து வளைந்து நின்றது ஆல் இன் ஆல் அழகுராஜ் போல அதை பெண்டெடுத்து நேராக்கினால் அது சில கிலோமீட்டர்கள் நீளம் வரும் போல.. அலாவுதீன் அரங்கில் இருந்தது ஒரு ராட்டினம் ஆக்டோபஸ் போல பல கைகள் விரிந்திருந்தது.. ஒவ்வொரு கையிலும் ஒரு பறக்கும் பாய் போன்ற வடிவமைப்பில் பைபர் பாய்கள் இது சுற்றிக்கொண்டே மேலும் கீழும் எழும் தாழும் அப்படியே நிஜமாக பறக்கும் உணர்வு தரும் ராட்டினம்.

மிக எளிதான எல்லா வயது குழந்தைகளும் ஏறும் ராட்டினம் ஆகவே கூட்டம் அள்ளியது.. கூட்டத்தில் நின்ற ஒருவரிடம் எத்தனை மணிக்கு வந்தீர்கள் என்றேன் 10:30 என்றார் மணி இப்போது 11.10 இனி அவர் நின்ற இடத்தில் இருந்து பாய் ஏறப்போகும் தொலைவிற்கு அடுத்து 30 நிமிடம் நிச்சயம்.. ஆக இங்கு நாங்கள் நின்றால் கரீபியன் ஷோ பார்க்க முடியாது.. கரீபியன் பைரட்டா? அலாவுதீன் பறக்கும் பாயா? டாஸ் போட்டுப் பார்க்காமல்..

நண்பர் சீனிவாசனுக்கு போன் போட்டுக் கேட்டோம்..சட்டென கரீபியன் பைரட் தான் பெஸ்ட் அலாவுதீனுக்கு தான் எப்ப வேணா அப்படின்னு டைம் இருக்கே கூட்டம் குறைந்ததும் போங்கள் என்றார் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு திரும்பினால்..அட அங்கே யாரு.! கண்ணை நம்ப முடிய வில்லை அலாவுதீன் லைலாவுடன் உயிருடன் நின்று மக்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்.! சத்தியமாகச் சிலை அல்ல! இது எப்படி!!! 

(வரும்...)

4️⃣🐭🎊🎈டிஸ்னி என்ற மாயலோகம்🎉🐰🎈4️⃣

டிஸ்னி வேர்ல்டில் சாலையில் நடக்காமல் பிளாட்பாரத்தில் மக்கள் நின்றிருந்தால் அங்கு ரோட் ஷோ நடைபெறப்போகிறது என அர்த்தம்.. ரோட் ஷோ இல்லாத நேரத்தில் தான் மக்கள் சாலையில் இறங்கி நடப்பார்கள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை குறிப்பிட்ட நேரத்தில் பலப்பல ஷோக்கள் நடக்கும். அத்தனையும் நம் கண்களுக்கு சிறந்த புஃபே.. குழந்தைகளையும் மிகுந்த குதூகலத்தில் ஆழ்த்தும்.

இப்போது பார்க்கில் நுழையும் இடத்தில் சாலையோரம் மக்கள் நின்று கொண்டிருக்க மெயின் ஸ்டிரீட் வெல்கம் என்ற குழுவினரின் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.. எட்டு அடி உயர போஷாக்கான உயர் ஜாதி குதிரைகள் இரண்டு பூட்டப்பட்ட நீளமாஆஆஆஆஆன சாரட் வண்டி பைலட்டுகள் போல உடையணிந்த வீரர்கள் நிற்க பாரம்பரிய உடையணிந்த ஆடல்கலைஞர்கள் அந்த சாரட்டின் இருபக்கமும் ஆடி வரவேற்றனர்.

ஆட்டம் முடிந்ததும் கரகோஷம்.. மீண்டும் நடைமேடையில் இருந்து சாலைக்கு மக்கள் இறங்க அவர்களோடு கலந்தோம்.. சித்திரைத் திருவிழா கூட்டத்தில் நடப்பது போல மெதுவாகத் தான் நடக்க முடிந்தது.. மேஜிக் வேர்ல்டின் முகப்பில் ஹாரிபாட்டர் படங்களில் வருவது போல கட்டிடம் அதன் முன் அமெரிக்க அறிஞர் அண்ணா போல கை நீட்டி நின்ற ஒருவரின் சிலை இந்த டிஸ்னி உலகத்தை சிருஷ்டித்த வால்ட் டிஸ்னியின் சிலை தான்.

விளம்பர நிறுவனம் ஒன்றில் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து படிப்படியாக உயர்ந்தவர் வால்ட் டிஸ்னி. இந்த பிரபஞ்சத்தின் மிகப்பெரிய வருமானம் ஈட்டும் பொழுது போக்கு தொழிலை தன் சந்ததிக்கு விட்டுச்சென்றவர். இந்த மேஜிக் வேர்ல்டு நுழை வாயில் தான் இந்த பார்க்கினை மூன்றாக பிரிக்கிறது இந்த கட்டிடத்தின் உள்பகுதி வலப்பகுதி இடப்பகுதி இங்கெல்லாம் தான் பல விளையாட்டுகள் அரங்கங்கள் உள்ளன.. மேலும்..

டிஸ்னி சிலை அருகே தான் இனி அத்தனை ரோட் ஷோக்களும் நடக்கும் ஆகவே நாங்கள் எங்கள் லாண்ட்மார்க்கை இங்கு மாற்றிக் கொண்டோம் யார் வழி தவறினாலும் டிஸ்னி சிலைக்கு வந்து காத்திருக்கும்படி திட்டம் இட்டோம்.. எப்படியோ டிஸ்னி எங்களுக்கு வழிகாட்டியானார். முதலில் இடதுபக்கம் சாலையில் உள்ள பார்க்குக்கு போனோம் 10:30க்கு அங்கு மலை ரயில் எனப்படும் ரயில் சாகசப் பயணம் என எங்கள் மேப் கூறியது.

5 நிமிட நடை சரியான கூட்டம் நீண்ட க்யூ.. ஆனால் கெஸ்ட் பாஸ் பக்கம் கூட்டமே இல்லை எங்கள் கார்டினை ஸ்கேனரில் காட்டியபோது நீல நிறத்தில் மிக்கி மவுசின் தலை ஒளிர்ந்து அக்செப்ட்டட் என்றது. வாசல் போர்டில் பேரிடி மலை ரயில்பாதை என்னும் அர்த்தத்தில் Big Thunder Mountain Rail Road எழுதியிருந்ததை அலட்சியமாக படித்துவிட்டு உள்ளே போனோம்.. உண்மையில் அந்த பேரிடி என்பது எவ்வளவு உண்மை என..

அடுத்த 10ஆவது நிமிடத்தில் தெரிந்து கொண்டோம்.. ஒரு ரயிலில் ஒன்றன் பின் ஒன்றாக 3 வரிசை ஒவ்வொன்றிலும் 2 பேர் வீதம் மொத்தம் 6 பேர் அமரலாம்..முதல் வரிசையில் வெளிநாட்டு ஜோடி இரண்டாவதில் சசியும் கிறிஸ்டோவும் கடைசியில் நான் ஒருவன் மட்டுமே.. என்னுடன் உட்கார வந்த ஒரு அழகிய பெண்ணை வயித்தெரிச்சல் பிடித்த பார்க் ஊழியன் தடுத்துவிட்டு என்னை மட்டும் அமரச் சொன்னான் வெயிட் பாலன்சாம்.

அவனுக்கு தமிழ் தெரியாது என்பதால் சிரித்த முகத்துடன் எல்லா கெட்ட வார்த்தையிலும் திட்டினேன்.. பதிலுக்கு அவனும் சிரித்தான்.. சீட் பெல்ட் அணிவித்து மேலே ஒரு டிவைடர் போன்ற கம்பியை இறக்கி அதற்குள் என்னை சிறைபிடித்தான் மேல் பாக்கெட்டில் இருக்கும் செல்போன் கண்ணாடி பர்ஸ் போன்ற பொருட்களை பேகில் வைத்துக்கொள்ளச் சொன்னான் இதையெல்லாம் செய்து கொண்டே ஓரக்கண்ணால்..

தவிப்புடன் நின்று கொண்டிருந்த அந்த அமெரிக்க அழகியை பார்த்தேன் கண்ணடித்து கட்டை விரல் உயர்த்தினாள் ச்சே டோனெட் போச்சே என அமெரிக்க வெர்ஷனில் புலம்பினேன். ரெயில் மெல்ல நகர அமெரிக்க அழகி கையசைக்க கண்களால் அவளிடம் விடை பெற்றுக் கொண்ட அடுத்த நொடி அய்ய்ய்யோ..ரயில் தரையிலிருந்து  50 அடி பள்ளத்தில் செங்குத்தாக பாய்ந்து உடலின் ரத்த ஓட்டத்தை உச்சந்தலையில் உணர விட்டது.!

(வரும்..)

Saturday 9 July 2016

3️⃣🐭🎊🎈டிஸ்னி என்ற மாயலோகம்🎉🐰🎈3️⃣

3️⃣🐭🎊🎈டிஸ்னி என்ற மாயலோகம்🎉🐰🎈3️⃣

டிஸ்னிக்குள் நுழைந்ததும் எங்கள் கண்ணெதிரே மாயாஜால படங்களில் பார்த்த கட்டிடங்கள் சாலைகள் அச்சு அசலாக தெரிந்தது கண்ணுக் கெட்டும் தூரம் வரை சுற்றுலா பயணிகள் அந்த நேரத்திலேயே 4000 பேர் அன்று இரவு வீடு திரும்பும் போது தெரிந்து கொண்டோம் அன்றைய வருகையாளர்கள் 38456 நபர்கள் இத்தனைக்கும் நாங்கள் போனது ஒரு வியாழக்கிழமை! சனி ஞாயிறுகளில் கூட்டம் லட்சத்தை தாண்டுமாம்.!

டிஸ்னிக்குள் நுழைவதற்கு முன் ஆர்லாண்டோ டிஸ்னி லாண்டின் அருமை பெருமைகளை தெரிந்து கொள்வோமா.. உலகின் மிகப்பெரிய டிஸ்னி லாண்ட் இது கிட்டத்தட்ட 50 சதுர மைல்கள் பரப்பளவில் அமைந்துள்ளது இன்னும் நிறைய இடங்களை வாங்கி வைத்திருக்கிறார்கள் மொத்தம் 7 பார்க்குகள் உள்ளது சுற்றிப்பார்க்க குறைந்தது 7 நாட்கள் ஆகும்.. இந்த 7 நாட்கள் சுற்றுலாவிற்கு உலகின் பணக்காரர்கள் குவிகிறார்கள்.!

உள்ளுக்குள்ளேயே ஏராளமான சொகுசு ரிசார்ட்டுகள், ஐந்து நட்சத்திர மூன்று நட்சத்திர ஓட்டல்கள், கேசினோக்கள் அமைந்த இடம் டிஸ்னி.. குடும்பத்தோடு வந்து இங்கு வந்து தங்கி 7 நாளும் சுற்றிப்பார்க்க நபர் ஒருவருக்கு குறைந்த பட்சம் 5000 டாலர்கள் (மூன்றரைலட்சம்) டிஸ்னியின் உள்ளுக்குள் வந்து விட்டால் பஸ் கார் ரயில் எல்லாம் இலவசம். 7 நாட்கள் முடியாதவர்கள் வருடா வருடம் 2 என சுற்றிப்பார்க்கலாம்.

ஒரு பார்க் நுழைவு கட்டணம் பெரியவர்க்கு 200 டாலர்கள் (₹14000) முதல் 100 டாலர்கள் வரை பேக்கேஜாக வழங்கப்படும். 3 வயது வரை குழந்தைகளுக்கு இலவச அனுமதி.. 3 வயதிற்கு மேல் 50% கட்டணம். 2 குழந்தைகள் உள்ள ஒரு குடும்பம் மினிமம் பேக்கேஜில் சென்றால் 300 டாலர்கள் செலவாகும் (₹21000) அடேயப்பா என்கிறீர்களா! இங்கு இருக்கும் விஷயங்களுக்கு இந்தப்பணம் ஒரு செலவே இல்லை.! ஆம்..

டிஸ்னிலாண்ட் தரும் அனுபவத்திற்கு விலை வைத்தால் அது பல கோடி பெறும்.. சரி வாங்க நுழைவு வாயிலுக்கு.. நாம இப்ப நிக்குற இந்த பார்க் பேரு டிஸ்னி மேஜிக் லாண்ட் இங்குள்ள 7 பார்க்குளின் ரஜினிகாந்த் இந்த பார்க் தான்.! இங்குள்ளதிலேயே மிகப் பெரிய பார்க்கும் இது தான்.. அந்த நுழைவாயில் அருகே ஒரு ரெயில்வேஸ்டேஷன் செட் இருந்தது.. அதை நாங்கள் மூவரும் அடையாள இடமாக தேர்வு செய்தோம்.

அதன் இடப்பக்கம். முதல் முறை டிஸ்னி வருபவர்களுக்கு ஒரு அழகான பேட்ஜ் இலவசமாக கொடுத்தும் கொண்டிருந்தார்கள் கூட்டம் முண்டி அடித்தது. ஆண்டிப்பட்டியோ அமெரிக்காவோ இலவசம் என்றால் ஒரே மாதிரி தான் போல. அதன் அருகே வால்ட் டிஸ்னி காரெக்டர்களின் பொம்மைகள், வாட்சுகள், ஆடைகள், அக்சசரீசுகள் உள்ள கடைகள் இருந்தன அங்கெல்லாம் கூட்டம் நிரம்பித் தளும்பியது. 

எம்ஜிஆரின் கத்தி சண்டை சத்தம் போல விஸ்க் விஸ்க் என கிரெடிட் கார்டுகள் அங்கு ஸ்வைப்பிக் கொண்டிருந்த ஒலி காதில் கேட்டது. பெற்றோரின் வசதியை எளிதாக அனுபவித்தார்கள் குழந்தைகள்.. பார்க் உள்ளே நுழையும் போதே 250 டாலருக்கு ஜஸ்ட் லைக் தட் என பர்ச்சேஸ் பண்ணியவர்களை பார்த்து பயந்தோம் அந்தக் கடைகளைத் தாண்டி பார்க்குக்குள் அடியெடுத்து வைத்த போது மீண்டும் வியந்தோம். (வரும்..)

2️⃣🐭🎊🎈டிஸ்னி என்ற மாயலோகம்🎉🐰🎈2️⃣

2️⃣🐭🎊🎈டிஸ்னி என்ற மாயலோகம்🎉🐰🎈2️⃣

காலை சூரியனோடு போட்டி போட்டு அவன் எழும்போது ஷார்ட் கட்டில் ஞானப்பழம் பெற்ற கணபதி போல நாங்களும் எழுந்து பல் துலக்கி குளித்து ரெடியாக இருந்தோம்.. அவ்வளவு அதிகாலையிலும் சுடச்சுட இட்லி சாம்பார், புதினா சட்னி, பிரட் ஆம்லெட் தயாரித்து வைத்திருந்தார் வெங்கியின் துணைவியார் ரம்யா.. சில பல இட்லிகளை கபளீகரம் செய்து விட்டு அருமையான ஃபில்டர் காபியை கண்மூடி ரசித்துக் குடித்தோம்.

"இந்த பேக்கை எடுத்துக்கோங்க"என்ற ரம்யாவின் குரலில் கண்விழித்தோம் அழகான பிக்னிக் லஞ்ச் பேக் எங்கள் முன் இருந்தது.. லெமன் சாதம் உருளைக்கிழங்கு காரக்கறி, தயிர்சாதம், 2வகை ஊறுகாய், சிப்ஸ் பாக்கெட்டுகள், சில கோக் டின்கள், லெமன் ஃப்ளேவர் கூல்டிரிங்குகள் எல்லாம் இதுல இருக்கு  டிஸ்னியில் நம்ம ஊரு சாப்பாடு கிடைக்காது மேலும் அங்கு எல்லாம் காஸ்ட்லி அதான் என்றார் புன்னகைத்தபடி.

இவை அனைத்தையும் அதிகாலையில் எழுந்து தயாரித்திருக்கிறார் ரம்யா.! நியாயமாக ஞானப்பழம் இவருக்குத் தான் போகவேண்டும்.. அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து காரில் கிளம்பினோம் கார் நண்பர் சீனிவாசன் வீட்டில் நின்றது.. சீனிவாசன் டிஸ்னிலாண்டில் கம்ப்யூட்டர் தொழில் நுட்பப் பிரிவில் பணிபுரியும் தமிழர்.. அவர் வீடு டிஸ்னிலாண்டுக்கு அடுத்த சாலையில் டிஸ்னி பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட குடியிருப்பில் இருந்தது.

அங்கிருந்து வெறும் 5 நிமிடத்தில் டிஸ்னியை அடைந்துவிடலாம்.. எனவே தேநீர் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினார்.. ஏற்கனவே இட்லியும், பிரட்டும், காபியும் ஹவுஸ்ஃபுல் போர்டை வயிற்றில் மாட்டியிருந்தது..  தயங்கினோம் புரிந்து கொண்டவர் வீட்டின் சமையலறைக்கு போய் பத்து 200ML மினரல் வாட்டர் பாட்டில்களை கொண்டு வந்தார் இதை வச்சுக்கோங்க டிஸ்னி லேண்டில் எல்லாம் காஸ்ட்லி என்றார் ரம்யாவின் எதிரொலி போல.

டிஸ்னி பணியாளரின் விருந்தினர் என்பதால் எங்களுக்கு கெஸ்ட் பாஸ் கிடைத்தது.. கிரிடிட் கார்டு போல ஆளுக்கொரு அக்சஸ் கார்டு தந்தார். டிஸ்னியின் அண்டாகாகசம் பாஸ்வேர்டு இதில் இருக்கு அங்கு போய் எங்கு இதை ஸ்வைப்பினாலும் குகைகள் திறக்கும் என்றார். அடுத்து டிஸ்னி டூர் காலை 9 மணிக்கு உள்ளே போனால் இரவு 10 :30 வரை என்னென்ன பார்க்கலாம் எந்தெந்த விளையாட்டுக்கு அக்சஸ் கார்டு செல்லும் இப்படி..

பக்கா பிளான் போட்ட பேப்பரை 3 காப்பி எடுத்து எங்கள் மூவருக்கும் கொடுத்தார்..அடுத்து பார்க்கின் மேப்.. நாங்கள் போக வேண்டிய வழி விளையாட்டுகள், ஷோக்கள் நடக்கும் நேரம் அதை தவறவிட்டால் பதிலுக்கு எங்கு போகலாம் எனத்துல்லியமாக திட்டமிட்ட மேப் அதையும் கையில் தந்து ஏதாவது ஒரு இடத்தை மூவரும் அடையாளமாக வைத்துக் கொண்டு யாரும் வழி தவறிவிட்டால் அங்கே வரும்படி பார்த்து கொள்ளுங்கள் என்றார்

இதென்ன அவ்வளவு பெரிய பார்க்கா என்றேன்.. ஆமாம் வெங்கி முழுவதும் சுற்றிப்பார்க்க 7 நாட்கள் ஆகும் என்றார் !! மலைப்பாக இருந்தது அவர் அலுவலகமும் பக்கத்தில் இருப்பதால் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அழையுங்கள் வருவேன் என்று கூறிவிட்டு.. காரை கிளப்பினார்.. மிகச் சரியாக 5 நிமிடங்கள் கார் டிஸ்னி வாசலில் வந்து நின்றது மணி காலை 9:15 அந்த நேரத்திலேயே ஒரு 2000சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.

வண்ண மலர்களில் பிரமிப்பூட்டும் மிக்கி மவுசின் உருவம் உள்ள புல் தரை லண்டன் கடிகாரம் போன்ற கட்டிடம் எங்கும் ஹோவென இரைச்சல் மிக்கி மவுஸ் காதுகளை ஹெட் பேண்டாக மாட்டிக்கொண்ட சிறுவர் சிறுமிகள் அனைவரின் கையிலும் அக்சஸ் வாட்ச் (எங்களுக்கு கார்டு) எல்லாரும் டிஸ்னிக்குள் நுழைந்து கொண்டிருந்தனர் செக்யூரிட்டி செக் நடந்து அனுமதித்தனர் உள்ளே நுழைந்தோம் அப்படியே வியந்தோம்.. (வரும்..)

1️⃣🐭🎊🎈டிஸ்னி என்ற மாயலோகம்🎉🐰🎈1️⃣

1️⃣🐭🎊🎈டிஸ்னி என்ற மாயலோகம்🎉🐰🎈1️⃣

கலிபோர்னியாவில் இருந்து ஃப்ளோரிடா செல்ல கடைசி 5 நிமிடத்தில் விமானத்தை பிடித்த பரபர கதையை ஏற்கனவே சொல்லியிருப்பேன்.. அங்கிருந்து ஐந்தரை மணிநேரம் பிரயாணித்து பிரியாணியாகி மியாமி நகரில் விமானத்திலிருந்து துப்பப்பட்டோம்.. உடலெங்கும் அடித்து போட்டது போல வலி கடந்த இரண்டு நாட்களாக கலிபோர்னியாவில் சுற்றியது கடைசி தினத்தின் அதிகாலை விழிப்பு , அதிகாலை டிராஃபிக். 

விமானத்தை பிடிக்க நடந்த அலைக்கழிப்பு பிறகு பறக்கும் போது காற்றின் வேகத்தால் ஒட்டக சவாரி போல தூக்கியடித்து குலுக்கிய விமானப்பயணம் எல்லாம் சேர்த்து காலி கோக் டின்னை நசுக்கியது போல எங்களை ஆக்கி இருந்தது.. இப்போது ஆர்லாண்டோ போக வேண்டும் எங்களை அங்கு காரில் அழைத்து செல்ல வந்திருந்த வெங்கியிடம் எவ்வளவு நேரம் பயணம் என்றோம் நாலே மணிநேரம் தான் என காதில் ஆஸிட் வார்த்தார்.!

மதுரை சென்னை தொலைவை அமெரிக்க சாலைகளில் 4 மணிநேரத்தில் எளிதில் கடக்கலாம் கிட்டத்தட்ட 300 மைல்கள்.! நாங்கள் விடியற்காலை 5 மணிக்கு எழுந்தது முதல் இப்போது மாலை 5 மணிவரை ஒரே ஒரு பர்கரும் ஒரு கிளாஸ் கோக்கும் 5 டம்ளர் தண்ணியும் மட்டும் தான் உணவு. பசி எங்களை ரொனால்டோ போல பந்தாடியது.. ஒருமணிநேர பயணத்தில் ஒரு அற்புதமான இந்திய ரெஸ்ட்டாரெண்ட் இருக்கு கொஞ்சம்...

பசி பொறுக்கமுடியுமா என்றார் வெங்கி காந்திய வழியில் எங்கள் உண்ணா நோன்பை அடுத்த ஒரு மணிநேரத்திற்கு போஸ்ட்போன் செய்தோம்.. காரில் இருந்த 2 பிஸ்கெட் பாக்கெட்டுகள் கண்ணிமைக்கும் நேரத்தின் கால் பங்கு நேரத்தில் காலியானது இல்லாவிட்டால் நாங்கள் கபாலி ஆகியிருப்போம்.! ஏன்னா வயிற்றில் பசி என்னும் நெருப்புடா.. பிஸ்கெட்டும் குடிநீரும் வயிற்று நெருப்பை கொஞ்சம் அணைக்க கொஞ்சம் தெம்பு வந்தது.

அடுத்த ஒருமணிநேரம் ஃப்ளோரிடா மாநிலத்தின் முதலைகள் மலைப் பாம்புகள் பற்றி திகில் கதைகளை கேட்டுக் கொண்டே ரெஸ்ட்டாரெண்ட் அமைந்திருக்கும் பகுதிக்கு வந்து பார்த்தால் அங்க கிணத்தைக் காணோம் அடச்சே ரெஸ்ட்டாரெண்ட காணோம்.. மெட்ராஸ் தர்பார்ன்னு அந்த ஓட்டல் பேரு இங்கதான் இருந்துச்சு என புலம்பினார் வெங்கி.. இருங்க கேட்போமுன்னு உள்ளே போனோம் ஒரு பார் தான் இருந்தது..!

அங்கிருந்த ஒருவர் வாங்க வாங்க வணக்கம் என்றார் தமிழில்.. நம்ம திருச்சியை சேர்ந்தவராம் பெயர் சாகுல் அங்கு மேனேஜராக இருக்கிறார் மெட்ராஸ் தர்பார் இப்போது இந்தியன் கஸினாக பேர் மாறி இருந்தது மற்றபடி எல்லா உணவும் கிடைக்கும் என எங்கள் வயிற்றில் பால் தேன் நெய் தயிர் எல்லாம் வார்த்தார்.. சமோசா முதல் ஊத்தப்பம் வரை எல்லாம் சுடச்சுட அருமையாக பரிமாறினார்கள். திருப்தியாக சாப்பிட்டோம்.

கிளம்பும் போது 8 மணியாகிவிட்டது.. இனி ஆர்லாண்டோ போக இன்னும் 3 மணிநேரம் ஆகுமுன்னார் வெங்கி.. சரி போய் நல்லா ரெஸ்ட் எடுக்கறோம் நாளைக்கு எங்களை சீக்கிரம் எழுப்பிடாதிங்க என்றோம்.. அய்ய நீங்க நாளைக்கு காலையில் 6 மணிக்கே ரெடியாகி கிளம்பணும் தெரியுமா என்றார். அதெல்லாம் முடியாதுங்க நாங்க ரெஸ்ட் எடுக்கணும் என்றோம் அப்போ நீங்க டிஸ்னிலாண்ட் போகலையா என்றார் குறும்பாக சிரித்தபடி...

என்ன டிஸ்னி லாண்டா!!!! அப்போதே எங்கள் தூக்கம் பறந்தது.. உலகில் வசிக்கும் ஒவ்வொருவரும் டிஸ்னி லாண்ட் போயிருக்காவிட்டாலும் சொன்னாலே தெரியும் பெயர் டிஸ்னி.. ஒரு முறை அங்கு போகும் வாய்ப்பு என்பதே ஒருவருக்கு கிடைத்த பெரும் யோகம்..அதிலும் உலகில் பல்வேறு நாடுகளில் அமைந்திருக்கும் பல டிஸ்னி லாண்ட்டுகளில் மிகப் பெரியதான ஆர்லாண்டோ நகரில் உள்ள மேஜிக் வேர்ல்டுக்கு போகக் கிடைத்த வாய்ப்பு என்றால் நிச்சயம் நாங்கள் யோகக்காரர்கள் தானே.! கண்களைத் திறந்து கொண்டே கனவு காண ஆரம்பித்தோம்.. விடிந்தது.. (வரும்...)

தசரதனானோம்..

கலைநிகழ்ச்சிகள் டிவி நிகழ்ச்சிகள் என பொதுவாகவே ஊர் சுற்றி நான்.. என் சொந்தத் தொழிலான விளம்பரத் துறையும் பல ஊர்களுக்கு போகும் படி இருப்பதால் நான் எப்போதும் வீட்டின் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருப்பேன்.. சாமுராய் போர் வீரனைப் போல 2 மாதங்கள் வரை எல்லாம் கழித்து வீடு திரும்பியது உண்டு இது கடந்த 20ஆண்டுகளாக அப்போதெல்லாம் கலங்காத என் மனைவி இப்போது கலங்கியிருக்கிறாள்.

காரணம் எங்கள் ஒரே மகள்.! பிறந்ததிலிருந்து எங்களை விட்டுப் பிரிந்திராத அக்குழந்தை இப்போது கல்லூரி படிப்பிற்காக சென்னை விடுதியில்.. அவளை அங்கு விட்டு விட்டு திரும்பிய முதலிரண்டு நாட்கள் சாதாரணமாக தெரிந்தாலும் இப்போது ஒரு வெறுமை வீட்டில் தெரிகிறது ஆழ்ந்த அமைதியில் இருக்கிறது என் வீடு.. யாருக்காக எழுந்து யாருக்காக உணவு தயாரிப்பது.? காலையில் சீக்கிரம் எழுந்து கொள்ள தேவையில்லை.

நன்கு தூங்கலாம்.. அறிபறி வேலைகள் இல்லை நிதானமாக எழுந்து இஷ்டம் போல சமைத்து இருக்கலாம்.. ஆனால் இப்போது தான் அதிகாலை விழிப்பு வருகிறது.. மகளின் அறைக்குள் சிறு சப்தம் கேட்டாலும் ஓடிப்போய் பார்க்கிறோம்.. அவள் நினைவுகளில் எங்கள் தலையணை ஈரமாகிறது.. ஒரு செல்போனில் அவள் குரல் கேட்டாலும் குரல் உடையாது இருக்க பிரம்ம பிரயத்னம் செய்யவேண்டியிருக்கிறது.. வாட்ஸப்பில் அவள் குரல் கேட்டால்..

வாசலுக்கு ஓடி வந்து பார்க்கக் தூண்டுகிறது.. நான் இல்லாத போது மகளின் அருகாமையை வைத்து என்னை மறந்த என் மனைவியின் பாடு தான் இன்னும் மோசம் பெண் தசரதனாய் புத்திர சோகத்தில் வாடுகிறார். என்னை உங்களுக்கென்ன பழகிட்டிங்க எனக்கு தான் தாங்க முடியலை என்கிறாள் அடிக்கடி.. அடி பைத்தியக்காரி நான் பிரிவை பழகிட்டேனா எனக்குத் தானே தெரியும் ஆண்டாளை காணாத பெரியாழ்வானைப் போல புலம்புகிறேன்..

நல்லது ஓர் தாமரைப்பொய்கை
நாண் மலர் மேல் பனி சோர,
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு,
அழகழிந்தால் ஒத்ததாலோ!
இல்லம் வெறியோடிற்றாலோ!
என் மகளை எங்கும் காணேன்;

(தாது - உள்ளிதழ் (மொட்டு)

தாமரைப் பொய்கையில் மலர்களின் மேல் பனி படர்ந்து அல்லி மலரும் மொட்டுக்களும் உதிர்ந்து அழகிழந்தது போல வீடு வெறிச்சோடிப் போயிற்று என் மகளைஎங்கும் காணவில்லை...

இதை எழுதும்போதே கண்ணீர் பெருக்கெடுக்கிறது.. என்ன செய்ய நாளை எப்படியும் ஒருவனை மணந்து கொண்டு பிரிந்து தானே செல்வாள் செல்வமகள் அதற்கான முன் தேர்வு இது என ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்கிறோம். இதுவும் கடந்து போகும் அது தானே உலக நியதி.!

ஈரோடு தோட்டத்து விருந்து

#தோட்டத்து_விருந்து

ஈரோட்டில் எனது க்ளையண்ட் ஒருவரை வியாபார நிமித்தமாக சந்திக்க போயிருந்தேன்.. வழக்கமாக அவரை சந்திக்கச் செல்லும் போதெல்லாம் மதிய உணவு அவருடன் தான்.. அவர் வீட்டுச் சாப்பாடே வரும்.. சில சமயம் புகழ் பெற்ற ஓட்டல்களுக்கும் அழைத்துச் செல்வார். இன்னிக்கு வீட்டில் சமைக்கல லஞ்ச் எந்த ஓட்டல் சார் போகலாம் சைவமா? அசைவமா? என்றார். உங்கள் பிரியம் சாரென்றேன் அவரும் நல்ல உணவுப் பிரியர்..

ஆகவே அவரது தேர்வு சரியானதாகத் தான் இருக்கும் என அறிவேன்.. தோட்டத்து விருந்து போகலாமா என்றார்..ஈரோடு பக்கம் இது போல கிராமத்து வீட்டு ஸ்டைல் ஓட்டல்கள் மிகப்பிரபலம் என்பது தெரியும்.. கிளம்பினோம். நசியனூர் சாலையில் இருந்து இடதுபக்கம் பிரியும் ரோட்டில் இருந்தது அந்த மெஸ்.. சுற்றிலும் காம்பவுண்ட் கட்டிய தோட்டம் அதன் நடுவில் முனிவர்கள் ஆசிரமம் போல 3 குடில்கள் தெரிந்தது.




சாலையின் இருபுறமும் ஏராளமான கார்கள் வரிசையாக நின்றன. எங்களது காரையும் அங்கு நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தோம். நல்ல கூட்டம் இருப்பினும் எங்களுக்கு இடம் கிடைத்தது. குடிலின் உள்ளே கடப்பா கற்களால் டேபிளும் இரும்பு சேர்களும் போடப்பட்டு இருந்தன. டேபிளில் ஒவ்வொருவர் முன்பும் கிட்டத் தட்ட ஒரு ஆட்டுக்குட்டியையே மூடி மறைக்கலாம் போல அஜீத் வாழை இலை விரிக்கப்பட்டிருந்தன.

ஒரு தட்டில் 3 எவர்சில்வர் மக்குகள் வைக்கப்பட்டன ஒன்றில் மீன் குழம்பு, இன்னொன்றில் மட்டன் குழம்பு மூன்றாவதில் நாட்டுக் கோழி குழம்பு இது எல்லாருக்கும் சாப்பாடு ஆர்டர் செய்தாலே போதும் இலவசமாக இவற்றை சாப்பிடலாம்.. பொல பொலவென சூடான சாதம் வந்தது முதலில் நாட்டுக் கோழி குழம்பை ஊற்றி சுவைத்தேன்.. மசாலா இல்லாமல் மஞ்சள்,சீரகம், மிளகாய் வத்தல்,தேங்காய் ஆகியவற்றை கையால் அரைத்து வைத்த குழம்பு.

மட்டன் குழம்பும் அப்படியே மீன்குழம்பிற்கு மட்டும் வத்தல் மிளகாய்க்கு பதில் பச்சை மிளகாய் சேர்த்து  அரைத்திருந்தார்கள் ஆஹா..! ருசி அள்ளியது. சிக்கன் கொத்துக்கறி, மட்டன் சுக்கா, ஈரல் என நாங்கள் மூன்று பேர் ஒவ்வொரு அயிட்டமாக ஆர்டர் சொல்லி ஷேர் மூன்றையும் செய்து கொண்டோம்.. எதிலுமே மசாலா கிடையாது கையால் அரைத்து சமைத்து இருந்தனர். செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் நல்லெண்ணெய் மட்டும்..



அளவாக பயன்படுத்தி இருந்தனர்.. அடுத்து ஆம்லேட் சொன்னோம் சின்ன வெங்காயத்தை சிப்ஸ் போல வட்டமாக வெட்டி பச்சை மிளகாய் போட்டு பிரமாதமாக செய்து தந்தனர் வறுத்த சீரகமும் மிளகும் இடித்த பொடி தூவி ஆம்லேட்டே அவ்வளவு ருசி.. அடுத்து ரசம்.. ஆஹா ஆஹா என்னா டேஸ்ட்டு கொங்கு பகுதியின் ஸ்பெஷலான பச்சைப்புளி ரசம் புளித் தண்ணியில் வெங்காயம் பச்சை மிளகாய் வெட்டி போட்டு கருவேப்பிலை சேர்த்து..

சாதத்தில் சுடச்சுட ஊற்றி சாப்பிட இது தான் தேவாமிர்தம் என்பது போல இருந்தது.. ஆம்லேட் காம்பினேஷனில் ரசம் சாதம் சென்டம் எடுத்தது. கடைசியாக தயிர் வாங்கிக்க மறந்துடாதிங்க இங்க அது ஸ்பெஷல் என்றார் க்ளையண்ட்.. அவர் சொன்னது போலவே கத்தி வைத்து அறுத்தது போல கெட்டித்தயிர் வந்தது.. புளிக்காத உப்பு தேவைப்படாத சுவையில் தயிர் அருமை ஊறுகாயுடனும் சுக்கா வருவலுடனும் செம காம்பினேஷன்.



இங்கு வறுத்த பொரித்த உணவுகளை விட குழம்பாக கூட்டாக சமைக்கப் படும் உணவுகளே பிரசித்தியானவை, தலைக்கறி, கொங்கு கோழிக் குழம்பு, நல்லி எலும்புக் குழம்பு காரக்கறி குழம்பு போன்றவை ஸ்பெஷல்.. சைவமும் உண்டு.. ஆனால் Wi-Fi  இருக்கும் இடத்தில் மொபைல் டேட்டாவுக்கு என்ன வேலை.. வயிற்றுக்கு பிரச்சனை இல்லாது வஞ்சனை இல்லாது அசைவம் சாப்பிட உகந்த இடம் தோட்டத்து விருந்து.! ஏவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

முகனூலரின் கதை

#முகனூலானின்_கனவு

கூரை இடிந்து விழாத அதிசய நாளொன்றில் சென்னை விமானநிலையத்தில் நின்று கொண்டிருக்கிறேன்.. மனமெல்லாம் விரக்தி ச்சே தினசரி ஒரு கொலை ரவுடிகள் எல்லாம் கைது செய்யப்பட்டதற்கு அடுத்த நாளே ரவுடி ஒருவரை பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி கொலை செய்கிறார்கள்.. ஒருவேளை வேறு மாநில அல்லது வேற்று கிரக ரவுடிகளாக இருக்கலாம்னு மனசை ரிலாக்ஸ் பண்ணிக்க ஒரு பார்க்குக்கு போனால் அது சைலண்ட்டாக இருந்தது.!

அட.! இது தான் அமைதிப் பூங்காவா..! விடை தெரிந்ததும் சரி ரெண்டு வாரம் வெளிநாடு போகலாம்னு அமைதி பூங்காவில் இருந்து வெளியேறி வீடு வந்து பாஸ்போர்ட் எடுத்து பார்த்தால் லண்டன் உட்பட சில நாடுகள் செல்ல விசா இருப்பதை பார்த்து பெட்டி கட்டினேன் அதாவது Indexit. அந்த நேரம் மெஸ்ஸி ஓய்வு என அறிவித்துவிட கடுப்புடன் சிலியையும் கலைஞரையும் திட்டிவிட்டு ஆப்ஸில் டாக்சியை அழைத்து ஏர்போர்ட்டுக்கு ஓலா"வினேன்.

இதோ ஏர்போர்ட்டில் வந்து லண்டன் பிளைட்டிற்காக வெயிட்டிங் எதிர்பட்ட பெண்களெல்லாம் மூஞ்சியை மறைத்து பொக்கே,பூனை, புலி முகமுடியில் அலைந்தனர்.. விசாரித்தால் அவர்கள் மார்பிங் பாதுகாப்பு கருதி முகத்தை மறைத்துக் கொண்டதாக சொன்னார்கள்.. வேதனையுடன் டீ சாப்பிட போனேன் அங்கு தக்காளி சூப் தான் இருந்தது.. மோதிரத்தை கழட்டி கொடுத்து ஒரு சூப் சாப்பிட ஆச்சர்யமாய் கடைக்காரர் மீதி காசு தந்தார்.

என்னடான்னு கேட்டா தங்கம் விலை தக்காளியை விட ஏறிடுச்சு அதான் அப்படின்னார். விரக்தியா சிரிச்சுகிட்டே மறுபடி வெயிட்டிங் ரூமுக்கு போய் பேஸ்புக் திறந்தா அண்ணா நான் சுவாதி பேசுகிறேன்னு.. ஒரு மெசேஜ்.. எனக்கு ஒரே குழப்பம் அறிஞர் அண்ணாவுக்கு ஏன் சுவாதி பேசணும்ன்னு நினைச்சுகிட்டே தூங்கிட்டேன்.(கனவுலயும் தூங்குனது நீ தான்யா) ப்ளைட் ஏறும் நேரமுன்னு பக்கத்தில் இருந்த ஒருவர் எழுப்ப விமானமேறினேன்.

விமானத்தில் கோனியாக் வித் ஐஸ் வித்தவுட் ஐஸ் வித் வாட்டர் வித்தவுட் வாட்டர் வித் பெப்சி வித்தவுட் பெப்சி வித் டிராபிகானா வித்தவுட் டிராபிகானா வித் 7அப்.. யோவ்.. போதும்யா ஓவரா போகாதேன்னு சொல்றிங்களா.!ஓகே.. சாப்பிட்டு மீண்டும் தூங்கி லண்டன் வந்து இறங்கினால் அங்கு தரையில் வயிற்றைப் பிடித்தபடி ஒருவர் புரண்டு கொண்டு இருந்தார்.. தெரிந்த முகமாக இருக்கிறதே என எட்டிப் பார்த்தால் அட நம்ம மல்லையா.!இவருக்கு என்ன ஆச்சு.? அவரிடமே கேட்டேன்..

லண்டனில் தலைமறைவாகத் தான் இருந்தேன் ஆனால் மத்திய அரசு அதிரடியாக செயல்பட்டு தன் ரேஷன் கார்டை முடக்கிவிட்டதால் சாப்பிட்டு 4 நாட்கள் ஆச்சு இனியும் லண்டனில் மறைந்திருந்து சாவதை விட அங்கு போய் தப்பிப்பதே மேல் என்றார்.. ஒரு பர்கரை அவருக்கு வாங்கித் தந்துவிட்டு நடக்கும் போது.. ஹல்லோ பிலால் மாலிக் வெல்கம் டூ லண்டன் என குரல் கேட்டு திரும்பினேன் அங்கு ஒய்.ஜி நின்று கொண்டிருந்தார்.

திடுக்கிட்டு விழித்தேன்..

ட்விஸ்ட்கதைகள்

அது ஒரு ஐந்து நட்சத்திர ரிஸார்ட்டின் அறை..ஸ்பிளிட் ஏசி அந்த அறையை ஊட்டியாக்கி இருந்தது. அடர் பர்பிள் & லாவண்டர் வண்ண தீமில் அமைந்த அறை.. திரைச்சீலைகள், சுவரின் வண்ணம்,பர்னிச்சர்களின் வண்ணம், விளக்குகளின் வண்ணம், வரவேற்பறை அதைத் தாண்டி மாடுலர் கிச்சன் ரெப்ரிஜிரேட்டர்,கிச்சனை ஒட்டி கிரானைட்டால் இழைத்த டைனிங் டேபிள் நாற்காலிகள் ஏன் டிவி & ஏ.சி ரிமோட் கவரும் பர்பிள்& லாவண்டரில்..

டேபிள் மேல் இருந்த பழக்கூடையில் வைக்கப்பட்ட ஆப்பிளின் பளபளப்பில் சீலிங்கில் இருந்த ஷாண்ட்லியர் தெரிந்தது.. மெகா எல்.ஈ.டி டிவியில் வாயடைத்துக் கொண்டிருந்தனர் பிராட் பிட்டும் ஏஞ்சலினாவும். மெல்லிய லாவண்டர் நிற திரை ஒன்று அரேபிய கூடாரம் போல மேலெழுந்த மெகா கட்டில் ஆறு தலையணைகள் எல்லாம் அடர் பர்பிளில்.. வாட்டர் பெட் அதன்
அருகே டீப்பாய் அதன் எதிரேயுள்ள சேரில் ஷ்யாம் அமர்ந்திருந்தான்.

டீப்பாய் மீதிருந்த வயலட் நிற டம்ளரில் விரற்கடையளவு ரெமி மார்ட்டின் ஐஸ்க்யூபில் குளித்துக் கொண்டிருக்க அருகில் ரெமிமார்ட்டின் முழுபாட்டில் தட்டில் நெய்யில் வறுத்து மிளகு தூவிய முந்திரி..இன்னொரு தட்டில் சூடான சில்லி ஷ்ரிம்ப் பக்குவமாக சமைக்கப்பட்டு இருக்க அதன் மீது ஆவி நீந்திக் கொண்டிருந்தது.. ஒரு மிடறு சிப் செய்தான் முந்திரியா ஷ்ரிம்பா என ஒரு நொடி தடுமாறி ஷ்ரிம்பை தேர்வு செய்து எடுத்துக் கடித்தான்.. வாவ் என..

சுயசான்றிதழ் அளித்தன அவன் உதடுகள்.. அடுத்த சிப்பிற்கு க்ளாசை எடுக்கப் போகும் போது.. Wife calling என ஐபோன் திரையில் ஒளிர கண்ணா உனை தேடுகிறேன் வா என ரிங்டோனியது.. மெல்ல புன்னகைத்தபடி எடுத்தான் ஷ்யாம்.. ஹாய் டார்லிங் எதிர்முனைக்குரல் காதல் பொங்க காதில் வழிந்தது.. சொல் ஹனி.. என்ன பண்ற.? டார்லிங் நானா ஜஸ்ட் நவ் ரிலாக்சிங் பேபி.. ரெமி வித் ஷ்ரிம்ப்.. டிவைன்..

டேய் ஓவரா போகாதே இரண்டு லார்ஜ் போதும்.. ப்ராமிஸ் பண்ணியிருக்கே ஞாபகம் இருக்கா.! யா இருக்கு டியர்.. அப்புறம் நீ 2 நாளில் வந்துடுவே தானே.. யா பேபி ஒன்லி டூ டேஸ் அப்புறம் அங்க ஓடி வந்துடுவேன்.. ஐயாம் வொண்டரிங்  ஜஸ்ட் ஒரு அரைமணி நேரம் முன்பு தானே பேசின.. என்ன திடீர்னு மறுபடியும்..? அதில்ல நீ எப்பவும் வித்யாசமா விசேஷ நாட்களை கொண்டாடுவே.. அது ஞாபகம் வந்தது..! புரியல.? அதில்ல டியர்..

வாலண்டைன் டேன்னா அன்னைக்கு காதலர்கள் கூட க்ரீன் டேன்னா அன்னிக்கு ஃபுல்லா ஃபாரஸ்ட்டில.. சில்ரன்ஸ் டேன்னா அன்னிக்கு ஃபுல்லா சில்ரன்சோட அதான் நாளைக்கு எப்படி கொண்டாடப் போற.? ஏன் நாளைக்கு என்ன..? ஹேய் உனக்குத் தெரியாதா நாளைக்கு யோகா டே.. எப்படி செலிபரேட் பண்ணப்போற..? ஓ.. அதுவா பேபி அது சீக்ரெட் உன்கிட்ட நேரில் வந்து சொல்றேன் ஓகேவா.? நோ..நோ..

எனக்கு ஒரு லீடாவது கொடு அப்புறம் எல்லாம் சொல்லு.. ம்ம்.. ஓகே நாளை முழுவதும் யோகாவுக்காக ஒரு கான்செப்ட் பிடிச்சு இருக்கேன்.. போதுமா.. மத்ததை நேரில் சொல்றேன் திரில் போய்டும் செல்லம்..ப்ளீஸ்டா.. ப்ளீஸ்.. ஓகே டா குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ் உம்மா.. எனக்கூறி அவன் தொடர்பை துண்டித்த விநாடி.. க்ளிக் டக் என குளியலறை திறந்து ஸீத்ரூ நைட்டியில் தலையை துவட்டிக்கொண்டே யாருங்க உங்க வைஃபா எனக்கேட்டபடி ஷ்யாமின் அருகில் வந்து அமர்ந்தாள் யோகலக்ஷ்மி என்னும் யோகா.