Wednesday 26 October 2016

சேலத்து ஸ்வீட்டகம்


#சேலத்து_ஸ்வீட்டகம்

"சேலத்து மாம்பழம் தித்திக்கும் மாம்பழம்" என்று சிறுவயதில் படித்து இருப்போம்.. அதே சேலத்தில் தற்போது பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் தித்திக்கும் எங்கள் ஸ்வீட்டகம் பற்றிய பதிவு தான் இது.. அதற்கு முன் ஒரு சின்ன ப்ளாஷ்பேக்.. கொசுவர்த்தி சுருள ஸ்டார்ட் ... 1966 ஆம் ஆண்டில் என் தந்தையால் ஆரம்பிக்கப்பட்ட ராஜகணபதி ஸ்வீட்ஸ் அப்போது சேலத்தில் மிகப் பிரபலம்..

என் அப்பா பெரிய ஸ்வீட் மாஸ்டர்.. ஆரியபவன் க்ரூப் தான் அவரது குருகுலம்.. வட இந்தியர்களிடம் பயின்றதால் அப்பாவின் ஸ்வீட்டுகள் சேட்டுகளின் நற்குணங்களோடு தயாராகின.. அப்பா செய்யும் பால் அல்வா மிகப்பிரசித்தம்.. இன்றும் எமது பழைய வாடிக்கையாளர்கள் நினைவில் நீர் ஊற அதை வர்ணிப்பார்கள்.. மைசூர்பாக், சோன் அல்வா, பாதாம் அல்வா, குலாப்ஜாமூன், லட்டு, ஜாங்கிரி எல்லாம்..

எங்கள் கடையில் தனித்துவமாக இருக்கும்.. இன்றைய கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா போல இல்லாது மேலும் கீழும் மஞ்சள் நடுவில் பொன்னிறத்தில் கடலை மாவும் நெய்யும் மணக்க வாயில் கரகர மொறு மொறுவெனக் கரையும் மைசூர்பாக்.. ஸ்பெஷல் ஜிலேபி பருப்பில் பக்குவமாக செய்து ஜீரா நன்கு ஊறிய ஜாங்கிரி.. மணக்க மணக்க பாதாம் அல்வா, கொழுக் மொழுக் குலாப்ஜாமூன்.. இப்படி..

எல்லா இனிப்புகள் மட்டுமல்ல வெங்காய பக்கோடா, பாம்பே மிக்சர், ஆந்திரா முறுக்கு, பட்டர் முறுக்கு, மோட்டா மிக்சர், அவல் மிக்சர், முந்திரி பக்கோடா, ரிப்பன் முறுக்கு என காரவகைகளும் தரமாக இருக்கும்.. அதுவும் அப்பா செய்யும் பக்கோடா எல்லாம் மன்னர் காலத்தில் செய்து கொடுத்திருந்தால் அந்த பக்கோடாகளுக்கு ஈடான பரிசாக 24 பர்கானாக்கள் அப்பாவுக்கு கிடைத்திருக்கலாம்.

தீபாவளிக்கு நீண்ட க்யூவில் நின்று ஸ்வீட் வாங்குவார்கள்.. அந்த இடமே பாலும் நெய்யும் மணக்க இனிய களேபரமாக இருக்கும்.. என் அம்மாவின் திடீர் மறைவு அப்பாவை புரட்டிப் போட காலம் எங்களை மதுரைக்கு விரட்டியது.. அப்பாவின் அந்த அற்புத கைப்பக்குவத்தை நான் கற்றுக் கொள்ளாமல் போனாலும்.. அந்தக்கலையை அவர் என் தம்பிக்கு தந்துவிட்டு போயிருக்கிறார் என்பதில் தான் பெருமிதமே.!

ப்ளாஷ் பேக் ஸ்டாப்... இன்று அக்டோபர் 2016...

தற்போது தம்பி அப்பா கோலோச்சிய அதே சேலத்தில் பட்டையை கிளப்பி வருகிறான்.. தம்பி செய்த பால் அல்வாவை சாப்பிட்ட ஒருவர் பழைய எம்.ஜி.ஆர் பட சகோதரர்கள் குடும்ப பாடலில் அடையாளம் தெரிந்து கொள்வதைப் போல தம்பி இது ராஜகணபதி ஸ்வீட் டேஸ்ட் ஆச்சே நீ அவரு மகனா என கண்டுபிடித்த விந்தையும் நடந்துருக்கு.. தற்போது சேலம் அப்ஸரா தியேட்டர் இறக்கம் யானை மண்டபத்தில் என் தம்பி தீபாவளி ஸ்வீட் காரங்கள் தயாரித்து விற்பனை செய்கிறார்.

கடந்த 6 ஆண்டுகளாக தீபாவளி சமயத்தில் அவர் இங்கு இந்த விற்பனையை நடத்துகிறார்.. சிறு அளவில் 6 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய அவரது தயாரிப்பின் தரம் சுவை பெரிய நிறுவனங்களைக் கவர தங்கள் பணியாளர்களுக்கு தீபாவளி இனிப்புகள் தர இனிப்பை மொய்ப்பது போல் இவரை மொய்க்க நுற்றுக்கணக்கான பாக்கெட் ஆயிரக்கணக்கான பாக்கெட் என மெகா மெகா ஆர்டர்கள் பெற்றார்.

பெரிய அளவில் தயாரித்து நிறுவனங்களுக்கு வழங்கும் பிரத்யேக இனிப்புகளை  ஏன் பொது மக்களுக்கும் விற்பனை செய்யக்கூடாது என்ற எண்ணம் உதிக்க கடந்த ஆண்டு முதல் அங்கேயே பொது மக்களுக்கும் விற்பனை செய்து வருகிறார்.. மற்ற ஸ்வீட் கடைகளை விட விலையும் குறைவு.. அதிகமாக ஸ்வீட் காரங்கள் தயாரிப்பதால் தரமும் நியாயமான விலையும் சாத்தியமாகிறது.

அசார்ட்டட் சாதா ஸ்வீட்ஸ் கிலோ 200 ரூபாய்க்கும் ஸ்பெஷல் ஸ்வீட்டுகள் கிலோ 350 முதல் 700 ரூபாய் வரைக்கும் உள்ளது.. மிக்சர் மற்றும் கார வகைகள் கிலோ 200 முதல் 300 வரை உள்ளது.. அவரது ஸ்பெஷலாக ஃபைவ் டேஸ்ட் மைசூர்பாக் என ஐந்து சுவைகளில் மைசூர்பாக் சுவைக்கலாம் என்கிறார்... 

பாதாம் மைசூர்பாக், முந்திரி மைசூர்பாக், கேரட் மைசூர்பாக், மில்க் மைசூர்பாக், ஸ்பெஷல் மைசூர்பாக் என் பஞ்ச பாண்டவர்களாக மைசூர்பாக்குகளும் ஹார்லிக்ஸ்பர்பி பூஸ்ட் பர்பி போன்ற வகைகளும் இந்த தீபாவளிக்கு ஸ்பெஷல்.. தீபாவளி முன் தின இரவு வரை விற்பனை உண்டு.. எங்களது பாரம்பரிய சுவையை மீட்டெடுக்கும் இம் முயற்சிக்கு உங்கள் ஆதரவு தேவை..சேலம் மட்டுமல்ல அருகில்...

உள்ள ஊர்களிலும் உள்ளவர்களும் வந்து வாங்கலாம் பல்க் ஆர்டர்கள் என்றால் கீழே உள்ள எண்களை தொடர்பு கொண்டு ஆர்டர் தரலாம் எங்களது தரம் சுவை பற்றி ருசித்த நாவிலிருந்து வரும் அபிப்ராயங்கள் மிக முக்கியம் ப்ரீத்திக்கு எல்லாம் என்னால் காரண்டி தரமுடியாது ஆனால் என் தம்பி செய்யும் இனிப்புகளுக்கு நான் காரண்டி.. இன்றே வருக.. இனிமையைப் பெறுக.. இன்சொல் தருக.. நன்றி..

தொடர்புக்கு










Monday 24 October 2016

குலோப் ஜாமுன் புராணம்

குலோப் ஜாமுன் மிக்ஸ் என்பது வருவதற்கு முன்னால் ஸ்வீட் கடைகளில் மட்டுமே போய் வாங்க முடியும் இனிப்பு வகை குலோப் ஜாமூன்.. ஆனால் இன்று தீபாவளிக்கு பலர் வீடுகளில் இந்த இனிப்பை சர்வ சாதாரணமாக தயாரிக்கிறார்கள். ஆனால் இது இட்லின்னா சட்னியே நம்பாதுடா என்பது போல சில குலோப் ஜாமூன்களின் லட்சணத்தைப் பார்த்து நான் கண்ணீர் விட்டதுண்டு.

அதென்ன குலோப் ஜாமூன் லட்சணம்.? சொல்றேன்.. முதலில் குலோப் ஜாமூனுக்கு தேவை நிறம்.. பொன்னிற பிரவுன் கலர் பிறகு குஷ்புவுக்கும் ஹன்சிகா மோத்வானிக்கும் இடைப்பட்ட கொழுக் மொழுக் ஸ்பான்ஞ்ச் பதம்... ஸ்பூனில் கத்தி போல அறுத்தாலே இலகுவாக சிலைஸ் போல அறுபட வேண்டும் உள்ளே நெய் நிறத்தில் கொஞ்சம் மினு மினுப்பாக இருக்கவேண்டும்.. இதுதான் ஜாமூன்.!

சில ஜாமூன்களை விண்டால் உள்ளே வெள்ளை நிறம் தெரியும்.. சில வீடுகளில் சீடை போல கெட்டியாக செய்து விடுவார்கள் பாகில் ஊறினால் கூட சாஃப்ட் ஆக மாறாது.. சிலர் ஆப்பாயில் உடைந்தது போல ஜாமூனை சிதைத்து ஊற வைத்து இருப்பார்கள்.. இதெல்லாம் குலோப் ஜாமூனுக்கு நாம் செய்யும் பாவங்கள்.. சரியாக பிசைந்து ஜாமூன் செய்யத் தெரியாதவர்கள் அதை செய்யாமலிருப்பது நலம்.

அடுத்து சர்க்கரை பாகு... நன்னாரி சர்பத் பார்த்து இருக்கிறீர்களா அல்லது செக்கில் ஆட்டி வடிகட்டிய கடலை எண்ணை கலரில் தெளிவாக இருக்கவேண்டும்.. சில வீடுகளில் குலோப் ஜாமூன் மிக்ஸை சரியாக பிசையாததால் பொரித்த ஜாமூனை போட்டவுடன் அதன் பிசிறுகள் உதிர்ந்து துகள் துகளாக மிதக்கும்..ஆற்று நீரில் பாசி படர்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி பாகில் பிசிறுகள் மிதக்கும்.

பாகின் நிறத்தை சிலர் அடர் பிரவுனுக்கு மாற்றி பாகை பலியாக்கி இருப்பார்கள்.. சில வீட்டு ஜாமூன்கள் கருகிப் போய் ஜீராவில் மிதப்பது குட்டையில் ஊறும் எருமைகளை நினைவூட்டும். குலோப் ஜாமூனை சாப்பிடுவதே ஒரு கலை  இதை ஸ்பூனால் நசித்து நசித்து ஜீராவில் குழப்பி உண்பது ஜாமூனை கற்பழிப்பதற்குச் சமம்.. இப்படி ஆட்களை கண்டால் எனக்கு அவர்களை ஓங்கி அறையலாம் போல தோன்றும். 

சிலர் இன்னும் பத்து விநாடியில் உலகமே அழிந்து விடும் என்பது போல ஜாமுனை அப்படியே முழுதாக முழுங்கிவிடுவார்கள். கொஞ்சம் இருங்கப்பா என்னா அவசரம்..! குலோப் ஜாமுனை சாப்பிடும் முறை இருக்கு... முதலில் இதை சூடான ஜீரா ஊற்றி சாப்பிட வேண்டும்.. கொதிக்க கொதிக்க சூடோ மிதமான சூடோ இன்றி நடுநிலையான சூடு.. கிண்ணத்தில் இஷ்டத்துக்கு நிறைய ஜீரா இருக்கக் கூடாது.!

இரண்டு குலோப் ஜாமூன்கள் உள்ள ஒரு கிண்ணம் என்றால் பாதி குலோப் ஜாமூன் மூழ்கி இருக்கும் அளவிற்கு ஜீரா இருப்பது நன்று.. ஜாமூனை சாப்பிடும் முன் ஸ்பூனின் பின் புறத்தை தட்டையாக ஜாமூன் மேல் வைத்து மென்மையாக மிக மென்மையாக அழுத்த வேண்டும் உடைத்து விடக் கூடாது.. கொழுக் மொழுக் குழந்தையைக் கண்டால் அதன் புஷ்டியான கன்னத்தை வலிக்காமல் கிள்ளுவோமே அதைப்போல.

இப்போது ஜாமூன் உடையாமல் அமுங்கினால் கடவுள் உங்களுக்கு நல்ல ஜாமூனை சாப்பிடும் பாக்கியத்தை தந்திருக்கிறார் என்று நினைத்துக் கொள்ளவும்.. ஜீரா சூடாக இருந்தால் ஸ்பூனில் அதை அள்ளி அபிஷேகம் போல ஜாமூன் மேல் விடுவது சாலச் சிறந்தது.. மெதுவாக ஸ்பூனால் சிலைஸ் இடுங்கள் அத்தோடு கொஞ்சம் ஜீராவும் அள்ளி எடுங்கள் அப்படியே சூடு தணிய ஊதி ஊதி இதழ்களால் பற்றி...

உறிஞ்சுங்கள் நாவிற்குள் ஜீராவும் பற்களுக்கு இடையில் ஜாமூன் துண்டமும் அரைபட வேண்டும்..மெல்ல விழுங்குங்கள் ஒரு விள்ளலுக்கு 10 விநாடிகள் ரசித்து சாப்பிடுங்கள்.. ஆங்.. சொல்ல மறந்துட்டேன் ஜாமூனில் கொஞ்சம் பன்னீர் தெளித்து சாப்பிடுவது  இன்னும் சூப்பர் உங்கள் வாய்க்கு ஒரு மவுத் ஃபிரஷனர்..இதை சாப்பிட்ட பிறகு தரப்படும் முத்தங்கள் திரும்ப எதிர்பார்க்க வைக்கும்.

ஜாமூனை சிதைப்பது ஒரு பாவச்செயல் அதை இனி செய்யாதீர்கள் என் கவலை எல்லாம் குலோப் ஜாமூனை குளோப் ஜான், குலப்புஜான், என ஒழுங்காக அழைக்கத் தெரியாத இந்த சமூகத்தில் குலோப் ஜாமூனின் அருமை பெருமைகளை சொல்ல ஒரு மீட்பர் வேண்டும் அல்லவா.. அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்.. இதோ பன்னீர் தெளித்து ஜாமூன் சாப்பிடப் போகிறேன். வாங்களேன் என் கூட.. யார் கண்டா உங்கள் முத்தம் யாருக்கோ தேவைப்படலாம்.!

Sunday 23 October 2016

20

#உதடும்_உள்ளமும்

உதடு சொன்னது...

என் வாழ்க்கையில் வந்த ஃபிளவர் கார்டனே...
துன்பப் பனியை விலக்க வந்த வெயிலே
என்னில் ஒரு பாதியாய் இருக்கும்  வைஃப் நீதான்
என் இளைப்பாறுதலுக்கு நீதான் நாற்காலி
ஆண்டுகள் இருபதானாலும் அதே காதல்
நீயின்றி நானில்லை நம் காதலுக்கு வானமே எல்லை..

உள்ளம் சொல்வது...

என் வாழ்க்கைச் சிறையின் வார்டனே...
என் இன்பத்தை கைது செய்த ஜெயிலே
கண்ணில் என்னை ஆட்டி வைக்கும்  வைஃபை நீ தான்
உன்னை இளக்காரமாக நினைத்தால் நான் காலி
ஆண்டுகள் இருபதானாலும் அதே மோதல்
நீயின்றி நானில்லை.. வேற வழியில்லை தொடருதே தொல்லை..

20 ஆம் ஆண்டு திருமண தினம்..

Saturday 22 October 2016

வெண்மணற் கடற்கரை 3

அபாயச் சங்கொலி அதிர என்னவோ ஏதோ என பதறிப் போக நண்பர் சுந்தர் சொன்னார் பயப்படாதிங்க டிரைன் வரப்போகுது தூக்கி நிறுத்தி இருக்கும் பாலத்தை கீழே இறக்கப் போறாங்க அதுக்கு எச்சரிக்கை மணியாக தான் இந்த அபாயச்சங்கு என்றார். எங்கள் படகும் அந்தபாலத்தை நெருங்கி கரையை ஒட்டி இருந்த ஒரு பூங்கா அருகில் போய் நின்றது படகில் இருந்து இறங்கினோம்.

90 டிகிரியில் வான் நோக்கி செங்குத்தாக நிறுத்தியிருந்த கர்டர் பாலம் குறிப்பிட்ட இடைவெளியில் சைரன் ஒலிக்க ஒலிக்க கீழிறங்கிக் கொண்டிருந்தது.. பொதுவாக அமெரிக்காவில் இரயில் போக்குவரத்து என்பது சிட்டி ரயில் போக்குவரத்து மட்டுமே தவிர தொலைதூர போக்குவரத்து எல்லாம் கொஞ்சமே.. பாலம் மெல்ல மெல்ல இறங்கி தன் ரயில் பாதைக் காதலியை ஆசையுடன் அணைத்துக் கொண்டது.

ரயில் வருவதற்குள் எங்கள் படகு கிளம்ப அதை படம் எடுக்க முடியாமல் படகேறினோம்.. மீண்டும் படகுத் துறை அங்கிருந்த ரெஸ்டாரண்ட் ஒன்றில் மீன் பொரிக்கும் வாசனை நாசி வழியாக எங்களை தூண்டில் போட்டு இழுக்க கடைக்குள் நுழைந்தோம் ஆனால் அங்குள்ள கோடீஸ்வரர்கள் மட்டுமே வாங்கும் விலை சொன்னதால் ச்சீ..ச்சீ.. இந்த மீன் கசக்கும் என திரும்பினோம்.

இந்த இடத்தில் பெரும்பாலான கடைகள் மூடியே கிடந்தன.. காரணம் இது போல விலையினால் தான் என்றார்கள்.. இட வாடகையும் அதிகம் என்பதே முக்கிய காரணம் என்றார்கள்.. பெரும்பாலும் பூட்டிய கடைகளை தாண்டி மெயின் வீதிக்கு வந்தோம். பிரெஞ்சு அமைப்பிலான சாலைகள் கடைகள் விளக்கு கம்பங்கள் அனைவரும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

பசி வயிற்றில் இருந்து நோட்டிபிகேஷன் அனுப்பியது.. நேரம் மாலை 6:40 மணி மதியம் 1 மணிக்கு சாப்பிட்டது ஏனெனில் இங்கு வருவதற்கு முன்பு தான் எவர் க்ளேட் முதலை ஆற்றுப் பயணம் சென்று திரும்பி இருந்தோம்.. கிட்டத்தட்ட 6 மணிநேரம்.. முன் பசிக்கு அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் இருக்கும் ஷாப்பிற்கு சென்று வாழைப் பழங்கள் கோக் மற்றும் கேக்குகள் வாங்கி பசியாறினோம்.

அந்த பங்கில் இருந்து வெளியேறும் போது மேற்கூரை திறக்கப்பட்ட ஆலிவ் பச்சை நிற போர்ஷ் கார் ஒன்று வந்தது அதில் நெடு நெடுவென ஒரு கறுப்பின வாலிபர் சுற்றிலும் 4 இளம் பெண்கள்.. அமெரிக்காவின் புகழ் பெற்ற பேஸ்பால் ப்ளேயராம்.. உல்லாச கப்பலுக்கு போகிறார் போலும்.. வாழ்க்கை வாழத்தான் அதிலும் இது போல சொகுசாக வாழ
வரம் வேண்டும் நாங்கள் விட்ட பெருமூச்சில் அந்தக் கார் மெல்ல 2 இஞ்ச் முன்னால் நகர்ந்தது.. கிளம்பினோம்.. பை பை லாடர்டேல்.!

வெண்மணற் கடற்கரை 2

வெண்மணல் கடற்கரையில் பந்தாடும் வெண்புறாக்களை பார்ப்பதை விட அந்த குடியிருப்பில் என்ன சுவாரஸ்யம் இருந்து விட முடியும் என்றதற்கு அது ஒரு தனி உலகம் பிரத்யேக வீடுகள், கப்பல்கள், ரெஸ்ட்டாரெண்டுகள், கடைகள், இராமேஸ்வரம் போல கப்பலுக்காக தூக்கி இறக்கும் இரயில் பாலம் முக்கியமாக கோடிஸ்வரர்களின் கேர்ள் ஃபிரெண்டுகளை பிகினியில் பார்க்கலாம் என்றார் நண்பர்.. 

அட இனி இங்கே நிற்போமா... கிளம்பி கடலோரம் இருக்கும் அந்த பணக்காரர்கள் குடியிருப்பை நெருங்கினோம் கடலிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டு அதை நகருக்குள் திருப்பிவிட்டு அதில் பல சொகுசுக் கப்பல்கள் நின்று கொண்டிருந்தன.. அருகிலேயே பெரிய பெரிய கெஸ்ட் ஹவுஸ்கள்.! உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களும், ஹாலிவுட் பிரபலங்களும், கோடிகளில் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களும் இங்கு வீடும் கப்பலும் வாங்கிப் போட்டு இருக்கிறார்கள் என்றார் நண்பர்

மும்பை ஜூஹு பீச், ஹைதராபாதின் பஞ்சாரா ஹில்ஸ், சென்னை போட் கிளப் போல அமெரிக்காவில் பெரும் பணக்காரர்கள் வீடு கட்டி இருக்கும் இடம் தான் போர்ட் லாடர்டேல் கடற்கரைப் பகுதி.. கடலில் கப்பலை நிறுத்தி வைக்க முடியாது என்பதால் கடல் நீரை கட்டியிருக்கும் பங்களா வாசலுக்கு கால்வாய் அமைத்து கொண்டு வந்து அவரவர் வீடுகளின் முன் கப்பலை பார்க் செய்திருந்தனர்.

இங்கெல்லாம் வீடுகள் 50 கோடியில் இருந்து தான் ஆரம்பம்.. இங்கு வீடு இருந்தால் கப்பல் நிச்சயம் இருக்கவேண்டும் ஒவ்வொரு கப்பலும் 10 கோடி முதல் என்றபோது நம்மால் பொறாமை தான் படமுடிந்தது. அங்கு இருக்கும் படகு சவாரிக்கு கட்டணம் இல்லை.. விலையில்லா பயணத்தை அந்த ஊர் அம்மாவாக வழங்கிய கோடீஸ்வரர்களுக்கு இந்நேரத்தில் அவர்கள் பொற்பாதம் பணிந்து நன்றி கூறுகிறேன். 

படகு கிளம்பியது சுற்றிலும் வானுயர்ந்த கட்டிடங்கள், உணவகங்கள், கடைகள் மெல்ல குடியிருப்பு பகுதிக்கு திரும்பியது படகு... ஆஹா.. அழகிய பூந்தோட்டம் முகப்பில் இருக்க பின்னணியில் சொகுசாக சிரித்துக் கொண்டிருந்தது பங்களாக்கள் சில பங்களாக்கள் பூட்டியிருக்க அதன் வாசலில் கப்பல்கள் அசைந்தாடி நின்று கொண்டிருந்தன... ஒரு நீல நிறகப்பல் விலை 15 கோடிகளாம்..!

அநேக வீட்டு கப்பல்கள் கடலுக்குள் சவாரி கிளம்பி இருந்தன.. ஒரு கப்பலின் மாடியில் அரை டிராயர் அணிந்து தன் பிகினி அணிந்த 5 காதலிகள் புடை சூழ அந்தவூர் மல்லையா ஒருவர் அமர்ந்து பியரை சீப்பிக் கொண்டிருந்தார்.. அவர்கள் எங்களைப் பார்த்து கையசைக்க பதிலுக்கு அசைத்தும் மனதிற்குள் அவரை வசைத்தும் மகிழ்ந்தோம். அப்போது திடீரென அபாயச் சங்கொலி  ஒன்று ஒலித்தது... அது..

(வரும்)

Friday 21 October 2016

வெண்மணற் கடற்கரை 1

ரின் சோப் விளம்பரத்தில் வருவது போல பளிச்சிடும் வெண்மையில் ஒரு கடற்கரை! அதென்ன வெண்மை? அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்திலுள்ள மியாமி போர்ட் லாடர்டேல் பீச் தான் அது.. இந்த பீச்சின் மணல் வெண்ணிறத்தில் இருக்கும் என்றார்கள்.. பீச் என்பதால் ஷார்ட்ஸ் டி-சர்ட் அணிந்து ஆவலுடன்  கிளம்பினோம்.. நண்பர் சுந்தர் தான் எங்களைக் காரில் அங்கு அழைத்துப் போனார். மாலை 3 மணி..

போர்ட் லாடர்டேல் என்னும் வரவேற்பு முகப்பை அடைந்தோம்.. மதிய நேரம் என்பதால் கூட்டம் குறைவாக இருந்தது.. பீச் மணல் பகுதியில்
இறங்கினோம்.. ஆஹா.. வெண்ணிற மணல் சுத்தம் என்றால் படு சுத்தம் ஒரு குப்பை கூட இல்லை.. கால்கள் புதைய புதைய அதில் நடந்தோம்.. கரையெங்கும் சூரியக் குளியல் எடுத்துக் கொண்டிருந்த கால்,அரை, முக்கால், முழு நிர்வாண ஆண் பெண்களைக் கடந்தோம்.

ஏற்கனவே கலிஃபோர்னியாவின் சாண்ட்டா க்ரூசில் இதையெல்லாம் பார்த்து பழகியிருந்ததால் கிளர்ச்சிகள் ஏதுமின்றி அவர்களைக் கடக்க முடிந்தது. எதிரே அலையடித்து ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது அட்லாண்டிக் கடல்.. பீச் மணல் வாக்கிங் என ஒரு பயிற்சி இருக்கிறது கரையில் கால்களை அலைகள் நனைக்கும் மணற்பரப்பில் நடக்கும் பயிற்சி அது.. அந்த பயிற்சியைப் பலர் மேற் கொண்டு இருந்தனர்.

கடல் நீர் காலை நனைத்ததும் சிலிர்த்தேன்.. அந்த மதிய நேரத்திலும் சில்லென்ற ஐஸ்வாட்டர் போல் அட்லாண்டிக் குளிர்ந்து கிடந்தது. முழுவதும் நனைந்ததும் அடித்த காற்றில் உடல் நடுங்கியது ஆனால் பீச் மணலில் அடித்த வெயிலில் வந்து அமர்ந்தால் 5 நிமிடத்தில் ஆடைகள் உலர்ந்தன குளிரும் வெப்பமும் கலந்த சுகமான அனுபவம். இதுபோல பல முறை குளித்து கரையேறி ஆனந்த மடைந்தோம்.

நான்கு மணியை நெருங்க மெல்ல அங்கிருந்து நடக்க இப்போது நிறைய பேர் கூட்டம் கூட்டமாக பீச் நோக்கி வந்து கொண்டிருந்தனர் ஆங்காங்கே பீச் வாலிபால் ஆடத்துவங்கியிருந்தனர்..சுற்றுப் புறம் முழுக்க கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சிகள்.. ஆனால் நாங்கள் அங்கிருக்கும் ஒரு பணக்காரர்கள் குடியிருப்பு பகுதிக்கு செல்ல வேண்டியது இருந்தது.. அதென்ன பணக்கார குடியிருப்பு.! இருங்க...

(வரும்)