Thursday 6 July 2017

வெங்கியின்..

1. எதெல்லாம் சொன்னால் வெட்கப்படுவாயோ
   அதெல்லாம் சொல்ல ஆசை...
   நீ வெட்கப்படும் அழகுக்காக ....

2. எனக்கான அரிசியிலும் உன்
    பெயரே எழுதப்பட்டிருக்கும் ...

3. உன் நகப்பூச்சு கூட பெருமூச்சு
    தந்து விடுகிறது எனக்கு..

4. சாபமிடுகிறவர்களை கெஞ்சி கேட்கிறேன்...
   அவள் அறை கண்ணாடியாய் மாற
    என்னை சபித்துவிடுங்கள்..

5. பெருமை என் முகத்தில் தெரிந்தால்
    உன் பெயர் உச்சரிக்கப்படுகிறது என அர்த்தம் ....

6. கோபித்து கொள்ளும் போது கோபமா?
    என்று கேட்பாய் கோபம் போன இடம் தெரியாது....

7. ஞானப்பழம் என்பது நீ கடித்து தருவதே...

8. உன்னிடம் தோற்று போவதற்காகவே
    சீட்டு விளையாடுகிறேன்... சூதாட்டம் ....

9. நடைபிணம் என்பதற்கு அர்த்தம் நீ
    விடுமுறைக்கு ஊர் சென்றபோது தெரிந்தது....

10. ஓடும் பேருந்தில் நெருக்கத்தில் நீ
      இருந்தாய் கிறக்கத்தில் நான் இருந்தேன் ...

11. நீ நாவல் பழம் சாப்பிட்ட அழகு ஊரில்
      எல்லோர் மனதிலும் படிந்தது....
      Bluetooth .....

12. நான் பார்க்காத போது நீ பார்த்ததை..
      நான் எப்போது பார்ப்பது......

13. உன் மோதிரத்தில் கல் இருந்தாலும்
     கடிகாரத்தில் முள் இருந்தாலும்
      உறுத்துகிறது எனக்கு ...

14. ஆற்றங்கரையில் நாகரிகங்கள் பிறந்தது..
      எனக்கென்னவோ உன் அருகில் தான்...

15. மாமரத்தை பார்த்துவிட்டு என்னை பார்த்தாய்....
     அத்தனை மாங்காயும் பறித்து தந்துவிட்டேன்...
      ஒரே கண்ணில் எத்தனை மாங்காய் !!!!

17. சில நேரங்களில் எனக்கான உத்தரவு
      உன் பார்வையிலேயே கிடைத்துவிடுகிறது....

18. ப்ளீஸ்...... என நீ கெஞ்சுவதும்
      கொஞ்சுவது போல் தான் இருக்கிறது ....

19. பிளேடினால் பென்சில் சீவுகிறாய்...
      நான் திகில் படம் பார்த்து கொண்டிருக்கிறேகன்...

20. உன் எரிக்கும் பார்வையில்
      அணைந்து விடுகிறது என் சிகரெட்.....

21. உன் விரல் கடிக்கும் குழந்தைகள்
     இனிப்பை விரும்புவதில்லை...

22. உன் மயிர் கற்றையை இழுத்து விளையாடுகிறது
      குழந்தை... ரசித்தேன் மழலையும்,குழலையும்

23. நீ சைக்கிள் ஓட்ட பழகினாய்
     தெருவுக்குள் வசந்தம் வீசியது...

24. சந்திரன் பகலில் வருவதில்லை என்பதை
       உனைக்காணும் வரை நம்பிக்கொண்டிருந்தேன்..

25. உன் தலையில் இருந்து உதிரும் பூக்களெல்லாம்
      தற்கொலை செய்து கொள்கின்றன...

26. நீ ஊதுவதாக இருந்தால் ஒவ்வொரு
      நொடியும் என் கண்ணில் தூசி விழவேண்டும்....

27. சதுரங்கம் ஆடும்போது நீ யோசிக்கும் அழகு
      என் எல்லா காய்களையும் வீழ்த்தி விடுகிறது ...

28. இராமருக்கு ... குல்லா...
      பாபருக்கு......... நாமம்...
      அயோத்தி......

29. சந்தோஷப்படுத்திய முகம் சலிப்பாகிவிடுகிறது......
      திருமணத்தில்.....

30. என்ன,ஏன்,எப்படி,எதுக்கு, எங்கே,எப்போ....
      இத்தனையையும் கண்ணால் கேட்டிட
      உன்னால் தான் முடியும்...

31. உன்னை கண்டுபிடித்தேன்
      என்னை தொலைத்துவிட்டேன்...

32. பனித்துளி அமர்ந்த ரோஜா நினைவுக்கு வருகிறது....
       உன் மேலுதட்டின் மேல் வியர்வைத்துளி...

33. உன்னைப்பற்றி தோன்றிய தெல்லாம் எழுதி விட்டாலும்
      புதிதாக தோன்றிக்ககொண்டே இருக்கிறது ....

34. அனேகமாக உன் தெருவில் குடியிருக்கும்
      அனைவரையும் நீ கவிஞர்களாக மாற்றி விட்டாய்...

35. என் உயிர் வரை இனிக்க
      உன் ஒரு முத்தம் போதும்..

36. செல்லச்சண்டையிலும் உன்னை வெல்ல
      துணிச்சலில்லை.. கொல்ல நினைத்திடுவேன்
      மெல்ல நீ அழுதால்...

37.நீ இளநீர் குடிப்பதை பார்த்தேன்.. இனி நீ
     இளநீர் குடிப்பதை மட்டுமே பார்ப்பேன்...

38. கோவிலுக்குள் நீ வரும் போது இறைவன்
      எனக்கு இரண்டாம் பட்சம் ஆகிறான்....

39. எனக்குள் குவிந்து கிடக்கிறது...
       நீ வீசி சென்ற பார்வைகள்....

40. உன் பார்வையில் பொருள் இருக்கிறதா தெரியவில்லை
      ஆனால் எனக்கான அருள் இருக்கிறது ...

41. உன் பற்களுக்கிடையே அரைபடும் போது
      மிக மிக மகிழ்ந்திருக்கும்.... கரும்பு

42. ரசனையான வாழ்க்கை வேண்டும்...
     அதை ரசித்து வாழ நீ தான் வேண்டும் ..

43. கண்களை கட்டிக்கொண்டு நீ கண்ணாமூச்சி
      ஆடுகையில் பட்டாம்பூச்சி பறப்பதைப் போல் உள்ளது...

44. நீ முகம் துடைத்து கொள்ளும் கைக்குட்டை
      மீது பொறாமை வருகிறது ..

45. நீ உதடு சுழிக்கையில் மச்சம் நகர்கிறது..
      என் உயிர் மலர்கிறது ....

46. எனக்கு நீ தாயாவாய் என்றால்..
      உனக்கு நான் நாயாவேன்...

47. கேள்விக்குறி போன்ற உன் காது மடல்களுக்கு
        நான் என்ன பதில் சொல்வது...

48. நீ பூ பறிக்கையில் பறித்த மலர் உயிர் பெற்றது..
      மற்றவை செடியிலேயே மூர்ச்சையுற்றது...

49. உன்னை வரவேற்கும் அலங்கார வளைவு.....
       நீ வந்த போது வானில் வானவில்...

50.என் ஆசை.. உன்னோடு நான்....
     பெரு மழையில்... ஒரு குடையில்....

51. நிலா பார்த்து வெகு நாட்கள் ஆகிறது...
     எனக்கு தான் நீ இருக்கிறாயே...

52. மலர்கள் சிரிக்கும் என்பதை நீ
      புன்னகைக்கும் போதுதான் நம்பினேன்....

53. அழகாய் நீ போட்ட கோலத்தை மழை வந்து
     அழித்தபோது மழையை வெறுத்தேன்...
     அடுத்த நிமிடம் அதை மறந்து மழையில் நீ
     நனைந்த போது மழையை ரசித்தேன் ...

54. அம்புலிமாமா கதைகளில் வருவது போல்
      என் உயிர் உனக்குள் இருக்கிறது ...

55. கொள்ளை அழகோடு ஒரு குழந்தையை தூக்கி வந்தாய்..
       நான் எந்த குழந்தையை ரசிப்பது!!!

56. உன் படுக்கையறையில் நீ தூங்குவது உனது கட்டில்..
      என்னை பொறுத்தவரை அது தொட்டில்......

57. வாயருகே எதை கொண்டு சென்றாலும் வாய் திறக்கும்
      குழந்தையைப்போல் உன்னைப் பற்றி எது சொன்னாலும்
      என் உள்ளம் திறக்கிறது.....

58. உன் மெளனத்தின் சப்தங்களை
     என் செவி மட்டுமே அறியும் ...

59. நீ இமைக்க மறந்தபோதெல்லாம்
      என் இதயம் நின்று ஓடுகிறது ...

60. நீ ஊசியில் நூல் கோர்த்த போதே
      என்னை தைத்து விட்டாய்....
.
61. வியக்க வைக்கிறாய்... 
      உன் புருவங்களால் பேசி...

62. உன் முகம் கண்டுதான்
      என் பொழுது விடிகிறது..

63. நீ பாவாடை தாவணி உடுத்தியதும் அது
      தேவதைகளுக்கான ஆடையானது...

64. எதெல்லாம் சொன்னால் வெட்கப்படுவாயோ
     அதெல்லாம் சொல்ல ஆசை...
      நீ வெட்கப்படும் அழகுக்காக ....

65.பெருமை என் முகத்தில் தெரிந்தால் உன் பெயர் 
      உச்சரிக்கப்படுகிறது என  அர்த்தம்.

உலகின் மிக சிறந்த இனிப்பினை முதலில் யார்
ருசிப்பது இது தான் அந்த போட்டி..! விமானம்
ஏறி பறந்தார் ஒருவர்..! ராக்கெட் ஏறி விரைந்தார்
ஒருவர்..! அவரவர் வசதிக்கேற்ப வேகமான வாகனங்களில்
விரைந்தனர் பலர்...! நான் மட்டும் உன் இதழை
சுவைத்து தட்டி சென்றேன் பரிசினை...!

நீ வந்து பார்க்கும் போது பரிசாக தருவதற்கு கொட்டும்
அருவியை மலை முகட்டில் நிறுத்தி வைத்து பூட்டி சாவி செய்தேன்..
மொட்டு மலராதிருக்க ஒரு சாவி, மழலை பேசாதிருக்க ஒரு சாவி,
தென்றல் வீசாதிருக்க ஒரு சாவி, வான்மதி வளராதிருக்க ஒரு சாவி,
வானவில் வளையாதிருக்க ஒரு சாவி... இயற்கை படைத்த அனைத்திற்கும்
சாவிகள் செய்து உன்னிடம் கொடுப்பதற்கு ஓடோடி வந்து காத்திருக்கிறேன்..
இதோ என்னிடம் வந்து நின்று எங்கே என் பரிசு என காதலுடன்
கேட்கிறாய்.! உன்னை பார்க்கும் ஆவலில் விரைந்து வந்த நான் சாவிகளை
எங்கோ தவற விட்டுவிட்டேன்..ஒரு கணம் தயங்கி பிறகு...
உன் பேர் சொன்னேன்... எல்லாம் திறந்து கொண்டன....

நீ என்னவனான பின் பூட்டிய அறைக்குள் நம் அந்தரங்கங்கள்..
அரங்கேறியது..! பின்னிப் பிணைந்த சர்ப்பங்களாய் முகிழ்ந்த
போதும் ஆரத்தழுவி ஆயிரம் முத்தங்கள் இட்ட போதும் எனக்கு
திருப்தி இல்லை...! காதலிக்கும் போது தெருமுனை இருட்டில்
அரைவினாடி தந்த முத்தத்தை போல்....

என் மார்பில் மெல்ல உன் தலையை சாய்த்து..
புரண்டு விழுகிற கூந்தலை புறந்தள்ளி
விரல் நுனிகளால் உன் காது மடல் வருடி உன்
பேச்சுக்கு செவி சாய்த்து, உன் சோகங்களை..
பகிர்ந்து, உன் காயங்களுக்கு மயிலிறகு சொற்களால்
மருந்திடும் சுகம் ஆயிரம் கலவியிலும் காணாத இன்பம்...

இனிப்பு துணுக்குகள் வாயோரம் ஒட்டியிருக்க..
நான் சாப்பிடவே இல்லை என அடம் பிடிக்கும்..
குழந்தையை போல் நீ உன்னை...
வெளிபடுத்துகிறாய் சில் நேரங்களில் ...

இரு கரங்களால்   உன் தலையில் நீயே
பூச்சூடிக் கொள்கையில் உன் இதழ்களில்
கவ்வி பிடித்திருக்கும் கொண்டை ஊசியாய்
நான் மாறிவிட ஆசை..