Wednesday 31 December 2014

திருவெம்பாவை - செங்கணவன்..

#திருவெம்பாவை_எளிய_தமிழில் 

உன் கருங்கூந்தல் மலரில் வண்டுகள் தேன் குடிக்கும் அழகு

மிக்கவளே! செந்தாமரைக் கண்ணன் பெருமாளிடமும் நான்கு

திசையையும் தன் நான்கு முகங்களால் காணும் பிரம்மனிடமும்

வானோர் அனைவரிடமும் இல்லாத அரிய இன்பம் நம்முடையது

நம் குற்றங்களை போக்க இதைத்தந்து நம் இல்லங்களில் வந்து

எழுந்தருளியிருக்கும் ஈசனின் செந்நிற மலர்ப் பாதங்களை,அவர்

அழகான விழிகளை, நம் அரசரை, அடியவர்க்கு ஆராவமுதானவரை

எம்பெருமானை பாடுவதால் நலம் நிறையட்டும். அதற்கு தாமரை 

நிறைந்த தடாகத்தில் பாய்ந்து நீராடி தொழுவோம் எம்பாவாய்.


பாடல்: 17

செங்கணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம் பாலதாக்
கொங்குஉண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 

கொங்கு - தேன் (உண்ணும் வண்டு); கோதாட்டி - குற்றம் நீக்கி;
சேவகன் - ஊழியன்; பங்கயம் - தாமரை.


பாசுரம் - 15

எழுத்தாளர் சுஜாதாவின் "வாரம் ஒரு பாசுரம்" (15 ) புத்தகத்திலிருந்து...

15. காற்றினிலே வரும்...

பெரியாழ்வாரைப் போல கண்ணனின் மேல் ஈடுபாடு கொண்டவர் யாருமே இல்லை கண்ணன் குழல் ஊதுவதை அவர் வர்ணிக்கும் இந்தப் பாடலைப் படிக்கும் உங்களுக்கும் காற்றில் அந்த கீதம் நிச்சயம் கேட்கும்.

கருங்கண் தோகை மயிற்பீலி யணிந்து
கட்டி நன்கு(உ)டுத்த பீதக ஆடை
அருங்கல உருவின் ஆயர் பெருமான்
அவன் ஒருவன் குழல்ஊதின போது
மரங்கள் நின்று மதுதாரைகள் பாயும்
மலர்கள் வீழும் வளர்கொம்பகள் தாழும்
இரங்கும் கூம்பும் திருமால் நின்றநின்ற
பக்கம் நோக்கி அவை பெய்யும் குணமே.

(பீலி - இறகு, பீதக ஆடை - பீதாம்பரம், அருங்கலம் - அருமையான ஆபரணங்கள், இரங்கும் - உருகும், கூம்பும் - குவியும்)

மயிலிறகும் பட்டாடையும் கட்டி அழகிய நகைகள் அணிந்து அந்த மாயக் கண்ணன் குழலூதுகையில் மரங்களில் இலை அசைவது நின்று விடுகிறது, மலர்கள் தாமாக தேனைப் பொழிகின்றது,மரக்கிளைகள் கூட தாழ்ந்து கை கூப்புவது போல் நிற்கின்றன அந்தக் குழலோசை வருகின்ற திசை நோக்கி இயற்கையே திரும்புகிறது

சுற்றிலும் இருப்பதையெல்லாம் ஸ்தம்பிக்க வைத்து விட்ட அந்த மாயக்கண்ணனின் குழலோசையில் அவன் பால் திரும்பிய பூமி தான் சுழல்வதை சற்று நேரம் நிறுத்திவிடுகிறது.  - எழுத்தாளர் சுஜாதா...

பாசுரம் - 34

எழுத்தாளர் சுஜாதாவின் "வாரம் ஒரு பாசுரம்" (34) புத்தகத்திலிருந்து...

34. ஏழாம் நூற்றாண்டின் சப்தங்கள்...

காலையில் என்னை எழுப்புவது முதல் காகங்கள், ஒற்றைக் குயில், சிங்கப்பூரில் இருந்து வந்து தாழ்வாகப் பறந்து மீனம்பாக்கத்தில் தரையிறங்கும் விமான சப்தம், ஸ்டேட் பாங்க் காலனியில் கறிகாய் விற்பவரின் சப்தம், பிள்ளைகளை பள்ளிக்கு அழைக்க அவசரப்படுத்தும் வேனின் ஹாரன் ஒலி, தரையடித் தண்ணீரை உறிஞ்ச மோட்டார் போட்ட சப்தம் இவையெல்லாம் இன்றைய அதிகாலை சப்தங்கள்.!

தொண்டரடிப் பொடியாழ்வார் காலத்தில் திருவரங்கத்தில் அதிகாலை சப்தங்கள் வேறு. காலை வேளையில் ஆழ்வாருக்கு முதல் வேலை உறங்கிக் கொண்டிருக்கும் அரங்கனை எழுப்புவது.

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்;
கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய்;
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம்;
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி,
எதிர்திசை நிறைந்தனர்; இவரொடும் புகுந்த
இருங் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும்;
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே.

(அணைந்தான் - அடைந்தான், ஈண்டி - திரண்டு, ஈட்டம் - கூட்டம்)

அதிகாலை, சூரியன் கிழக்கே சிகரத்தை அணுகிவிட்டான். இருள் நீங்கியது. பூக்கள் எல்லாம் தேன் சொரிந்தன. தேவலோகத்து மன்னர்கள் ஒவ்வொருவராக நெருங்கி வந்து நிற்கிறார்கள். இவர்களோடு வந்த யானைக் கூட்டமும் அதிரும் முரசங்களும் அலைகடல் போல் ஒலிக்கின்றன..!

"அரங்கநாதனே படுக்கையிலிருந்து எழுந்து எங்களுக்கு அருள்வாய்" இதெல்லாம் ஏழாம் நூற்றாண்டில்..! இன்றைய தின நாராசங்களில் அரங்கன் உறங்கவே மாட்டார் என்று தான் தோன்றுகிறது.   - எழுத்தாளர் சுஜாதா...



பாசுரம் - 37

எழுத்தாளர் சுஜாதாவின் "வாரம் ஒரு பாசுரம்" (37) புத்தகத்திலிருந்து...

37. மிகக் கடினம்...

"கோணை" என்ற ஒரு சொல்லுக்கு பொருள் என்ன என்று சமீபத்தில் பார்க்க வேண்டியிருந்தது. கோணை என்றால் Crookedness,வளைவு. கோணைக் கத்தி, கோணைக் கழுத்தன், கோணைப் பேச்சு, கோணை வாயன்.. இது போன்ற பிரயோகங்களில் இச் சொல் பயன்படுகிறது.

திவ்யப் பிரபந்த காலத்தில் அதற்கு மிறுக்கு, பிரயாசம், அனுபத்தி போன்ற அர்த்தங்கள் இருந்தது. சம்சாரிகளின் கோணைப் போக்கி என்று ஒரு வியாக்கியானம் உள்ளது. Difficulty - கஷ்டம் என்ற அர்த்தத்தில் நம்மாழ்வார் திரு வாய்மொழியில் திருமாலை வர்ணிக்க முயல்கையில் இச்சொல்லில் விளிக்கிறார்..

ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்
காணலும் ஆகான் உளனல்லன் இல்லையல்லன்
பேணுங்காற் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே.

(அல்லா - பயனல்லாத, பேணுங்கால் - விரும்பும் போது)

உலகில் நாம் பார்க்கிற ஆண்களைப் போல் அல்லன்,அவன். பெண்களைப் போலோ உதவாத அலியோ அல்லன் அவன். அவனைக் கண்ணால் பார்க்க முடியாது. இருப்பவனில்லை; இல்லையும் இல்லை. வேண்டும் போது வேண்டும் உருவில் தோன்றுவான்; தோன்றமாட்டான் எம்பெருமானைக் கூறுவது ரொம்பக் கஷ்டம்.

உலகின் சிறந்த கவிஞர்களில் ஒருவரும் பிரபந்தத்தின் திருவாய்மொழி மூலம் வேதத்தின் சாரத்தை கொண்டு வந்த நம்மாழ்வாரே திருமாலை இன்னவன் என்று கூற எப்படிக் கஷ்டப்படுகிறார் பாருங்கள். நம்மால் முடியுமா? வார்த்தைகளால் அவனைச் சிறைப் பிடிக்க முடியாது.  - எழுத்தாளர் சுஜாதா..

பாசுரம் - 41

எழுத்தாளர் சுஜாதாவின் "வாரம் ஒரு பாசுரம்" (41) புத்தகத்திலிருந்து...

41. என்ன பாட்டு இது...

குயில்கள் இனிமையாகத் தான் பாடுகின்றன. அதைக் கேட்டு ஆண்டாள் ரசிப்பது இல்லை என்ன பாட்டு இது?எதற்காகப் பாட்டு?திருவேங்கடத்து இறைவன் எனக்கு ஒரு வாழ்வு தந்தால் பாடுங்கள். உங்கள் பாட்டை நான் கேட்பதற்கு அவர் வந்து என்னைச் சேர வேண்டும்.அப்போது உங்கள் பாடல்களை கேட்டு ரசிக்கிறேன் என்கிறார்...

பாடும் குயில்காள்! ஈது என்ன பாடல்? நல் வேங்கட
நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின்!
ஆடும் கருளக் கொடி உடையார் வந்து அருள் செய்து
கூடுவராயிடில் கூவி நும் பாட்டுகள் கேட்டுமே.

(கருளக்கொடியுடையார் - கருடனை கொடியாகக் கொண்ட திருமால்)

ஆண்டாளின் பக்தியின் தீவிரம் அப்படிப்பட்டது. திருமால் வந்து சேரவில்லை என்றால் இயற்கையின் இனிய சப்தங்கள் கூட ரசிப்பதில்லை. காதலர்களையும் புதுசாக கல்யாணம் செய்து கொண்டவர்களையும் கேட்டுப் பாருங்கள். காதலன் வரும் வரை எதுவுமே சிறக்காது,எதுவுமே இனிக்காது. வந்து விட்டால்.....

பஞ்சு மிட்டாய்க்காரன் மணிச்சத்தம் கூட இனிமையாக இருக்கும் என்பார்கள். ஆண்டாளின் காதல் அப்படி பூக்கள், தோகை விரிக்கும் மயில்கள், மழை, கடல், அனைத்துமே கோவிந்தன் வந்தால் தான் இனிக்கின்றன. ஆண்டாளின் நாச்சியார் திருமொழியில் இருக்கும் அந்தரங்கமும் பகவானுடன் சொந்தம் கொண்டாடுவதும் பிரபந்தத்தின் வேறு எந்தப் பகுதியிலும் கிடைக்காது.

 -எழுத்தாளர் சுஜாதா..

பாசுரம் - 38

எழுத்தாளர் சுஜாதாவின் "வாரம் ஒரு பாசுரம்" (38) புத்தகத்திலிருந்து...

38. எட்டாம் நூற்றாண்டில் சர்ஜரி...

இரண்டாம் நூற்றாண்டில் சுஷ்ருதர் எழுதிய நூல்களில் முதல் பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற அறுவை சிகிச்சைகள் பற்றிய குறிப்புகள் உள்ளனவாம். தமிழிலக்கியத்தில் எனக்கு தெரிந்தவரை முதல் அறுவைசிகிச்சை பற்றி குறிப்பிட்டவர் குலசேகர ஆழ்வார். இவர் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சேர மன்னர்.!

இன்றைய கொல்லம் நகரம் அன்று கொல்லி என்று அழைக்கப்பட்டது. அதைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சேரமன்னர் திடவிரதனின் மகன் குலசேகரர். பட்டத்திற்கு வந்து மெல்ல மெல்ல அரசியல் நாட்டம் குறைந்து திருமாலின் பால் ஈர்க்கப்பட்டவர். அதற்கு சாட்சியாக இருப்பதே அவரது 105 பெருமாள் திருமொழிப் பாடல்கள். இவற்றில் ஒன்றில் தான் இந்த சர்ஜரிக் குறிப்பு உள்ளது.

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல், மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா!நீ,
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே.

ஒரு மருத்துவன் கத்தியால் அறுத்து வடு போட்டாலும் அவனதை நோயாளியின் உயிரைக் காப்பாற்றும் நோக்கில் செய்வதால் அவன் மீது நீங்காத அன்பு ஏற்படுவது போல விளையாட்டுப் போல் நீ எனக்கு விடாத துன்பம் தந்தாலும் உனக்கு அடிமை செய்ய உன் அருளையே எதிர் பார்த்து காத்திருப்பேன் என வித்துவக்கோட்டில் உள்ள பெருமானிடம் சொல்லுகிறார்.! இந்த ஊர் தற்போது கேரளாவிலுள்ளது.

பட்டாம்பியிலிருந்து ஒரு மைல் தூரத்தில் வித்துவக்கோடு உய்ய வந்த பெருமாள் கோவில் என்று சொல்கிறார்கள். இன்று இதைத் தேடிச்சென்று வணங்குபவர்கள் குலசேகரன் என்ற மன்னனையும் இப்பாடலையும் நினைத்துக் கொள்ளலாம். 

வாளால் அறுத்து வடு போட்டு.! அனஸ்தீஸியா வரும் வரை ஜனங்கள் பெருமாளை நினைத்துக் கொண்டுதான் வலியைத் தாங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.!

- எழுத்தாளர் சுஜாதா...

பாசுரம் -19

எழுத்தாளர் சுஜாதாவின் "வாரம் ஒரு பாசுரம்" (19) புத்தகத்திலிருந்து...

19. எந்த வாரம் இந்த வாரம்...

தஞ்சைப்பகுதியில் நிலச் சொந்தக்காரர்களையும் குத்தகைக் காரர்களையும் மேல் வாரம், குடிவாரம் என்று இன்றும் சொல்கிறார்கள். திருப்பாணாழ்வாரின் இந்தப் பாடலில் வாரம் வருகிறது...

பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத்தன்
வாரமாக்கிவைத்தான் வைத்ததன்றி யென்னுள் புகுந்தான்
கோரமாதவம் செய்தனன் கொலறியேனரங்கத்தம்மான் திரு
ஆரமார்பதன்றோ அடியேனை யாட்கொண்டதே.

சுமையாக நின்ற பழைய பாவங்களின் சம்பந்தத்தை தொலைத்து என்னைத் தன்னிடத்தில் அன்புடையவனாகப் பண்ணிவைத்தான். அதுமட்டுமில்லாமல் என் இதயத்துக்குள் நுழைந்து விட்டான். உக்ரமான தவம் ஏதாவது நான் முற்பிறவியில் செய்திருக்க வேண்டும். தெரியவில்லை,திருவரங்கனின் மார்பன்றோ என்னை ஆட் கொண்டது. திருப்பாணாழ்வார் திவ்யப் பிரபந்தத்தில் 10பாடல்களே பாடியுள்ளார்.

அத்தனையும் முத்துக்கள்.! இந்த உருக்கமான பாடலில்"வாரம்" என்பதற்கு பல பொருள்கள் உள்ளன.என்னை குத்தகைக்கு எடுத்து விட்டான். பகவான் என் எஜமானன், நான் அவரிடம் வாடகைக்கு இருக்கிறேன் என்கிற அர்த்தம் கவிநயமும் ஆழமும் மிக்கது. பங்காக பற்றும்படி செய்தான் என்ற பொருளிலும் வருகிறது.

வாரமாக ஓதுவார்கள் என்றால் நிஷ்டையாக நியமமாக ஓதுகிறவர்கள்.வாரம் நடப்பது என்பது கோயிலுக்கு பிரார்த்தனை செய்து கொண்டு போவது. 'வாரமோதல்'  என்பது உருச்சொல்வது (மனப்பாடம்) Litany நியமமாகச் சொல்லுதல் இப்படி பல படிமங்கள் கொண்டது வாரம் எனும் சொல்.

இதில் திருப்பாணாழ்வார் சொல்வது எந்த வாரம் என்று நீங்களே தீர்மானிக்கலாம். இந்த கட்டுரையில் வாரம் ஒரு பாசுரம் என்ற ஒரே பிரயோகத்தில் மட்டும் இன்று இந்தச் சொல் முடங்கிக் கிடக்கிறது.  - எழுத்தாளர் சுஜாதா

பாசுரம் - 9

எழுத்தாளர் சுஜாதாவின் "வாரம் ஒரு பாசுரம்" (9) புத்தகத்திலிருந்து...

9. ஒரே ஒரு பாசுரம்..

வைணவர்களுக்கு மிக முக்கியமான பாசுரம் எது? அதை மட்டும் தெரிந்து கொண்டால் திவ்ய பிரபந்தத்தையே தெரிந்து கொண்ட மாதிரி. அப்படி ஒரு பாசுரம் இருக்கிறதா? என்று அவசர உலகத்தில் கேள்விகள் கேட்பவர்களுக்கு சுஜாதா அவர்கள் பரிந்துரைக்கும் பாசுரம் இது. இதோ இனி அவர் கூறியது போல...

என் தந்தை "இந்தப் பாசுரம் ஒன்றே போதும். திவ்யப் பிரபந்ததின் சாரம், திரு மந்த்ரார்த்தம் இதுதான்'என்பார். இறக்கும் தருவாயில் இந்த ஒரு பாசுரத்தை காதில் சொன்னால் போதும் என்று கூட சொல்வார்கள். திருமங்கையாழ்வார் திவ்ய பிரபந்தத்தில் அதிக எண்ணிக்கையுள்ள பாடல்களைப் பாடினவர்.

அதிகம் வைணவத் தலங்களுக்கு சென்று தரிசித்தவர். வடநாட்டில் தேவப் பிரயாகை நைமிசாரண்யம் பத்ரிகாசிரமத்திலிருந்து துவங்கி தென்னாட்டில் அத்தனை கோயில்களையும் தரிசித்து பாடியுள்ளார்.அவர் பாடாத வைணவக் கோயில் இருந்தால் அது சமீபத்தியதாக இருக்கும்.. இனி பாசுரம்..

குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயர் ஆயினவெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும்
அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா எனும் நாமமே.

நாராயணன் என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு.எளிமையானது - கடலில் சயனித்திருப்பவன். நாரா- உலகின் அத்தனை சேதன அசேதன பொருள்களையும் தன்னையும் சேர்த்து அயனன் இருப்பிடமானவன் திருமால் என்பதே இதன் ஆழமான பொருள். அந்தச் சொல்லை கைகண்டு கொண்டுவிட்டால் போதும்..

நமக்கு நல்ல குலம் அமையும்; செல்வம் பெருகும். அடியவர்களுக்கு ஏற்படும் துயரங்கள் எல்லாம் மட்டமாகும் (நிலந்தரம்) பரமபதத்தை காட்டும். பெற்ற தாயை விட அதிகமாகச் செய்யும். நாராயணன் என்ற ஒரே சொல்லை மட்டும் கண்டு கொண்டால் போதும்.இதெல்லாம் உத்திரவாதம் என்கிறார் திருமங்கையாழ்வார்.

-எழுத்தாளர் சுஜாதா.


Tuesday 30 December 2014

பாசுரம் - 28

எழுத்தாளர் சுஜாதாவின் "வாரம் ஒரு பாசுரம்" (28)புத்தகத்திலிருந்து...

28. திவ்யப் பிரபந்தமும் திருக்குறளும்..   

திவ்யப் பிரபந்தத்தில் சில பாடல்களில் திருக்குறளின் வரிகள் பயன்பட்டு இருக்கின்றன. சில அப்படியே, சில வேறு அர்த்தத்தில் இதைப் பற்றி ஆராய்ச்சியே செய்யலாம்.திருமழிசை ஆழ்வாரின் நான்முகன் திருவந்தாதியில்23ஆம் பாடல் இது.

வித்தும் இடவேண்டும் கொல்லோ விடை அடர்த்த 

பத்தி உழவன் பழம்-புனைத்து?--மொய்த்து எழுந்த

கார் மேகம் அன்னகரு மால் திருமேனி

நீர் வானம் காட்டும்,நிகழ்ந்து.

[விடை அடர்த்த - எருதுகளை கொன்ற, மொய்த்தெழுந்த - திரண்டு வந்த]

இதில் திருக்குறள் 85ஐ வேறுவிதமாகப் பயன் படுத்தியிருக்கிறார் வள்ளுவர். விருந்தோம்பல் என்ற அதிகாரத்தில்...

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம். 

எனும் குறளின் பொருள்: விருந்தாளிகளுக்கு கொடுத்து மிச்சத்தை உண்பவன் தன் நிலத்தில் விதை போடக்கூட தேவையில்லை என்று விருந்தினரைப் போற்றுதலை அழுத்தமாகச் சொல்வதற்குப் பயன்படுத்தினார். ஆழ்வார் இந்தக் குறளை வேறு பரிமாணத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

பக்தி உழவனான பகவானின் நிலத்தில் நாம் ஒரு விதையும் விதைக்க வேண்டாம். அவனே கவனித்துக் கொள்வான் என்கிறார். வைணவ மரபின் அடிநாதம் இது. நாம் எதுமே செய்ய வேண்டியதில்லை. அவனை நம்பினால் மட்டும் போதும். மிச்சத்தை அவன் பார்த்துக் கொள்வான். இந்தப் பாட்டில் 2ஆம் பாதியில் மழை திரண்டு வரும்
நீலவானம் மேக வண்ணனான திருமாலைக் காட்டுகிறது ஆழ்வாருக்கு.

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்கிற பழமொழியின் பயப்படுத்தாத வடிவம் இந்தப்பாடல். -எழுத்தாளர் சுஜாதா

திருவெம்பாவை - முன் இக்கடலை..

#திருவெம்பாவை_எளிய_தமிழில் 

மழையே! நீ இக் கடலில் உள்ள நீர் ஆவியாய்த் திரண்டு வானில்

எழுந்து சிவனின் உடையாள் உமையவள் போல் கரிய நிறத்தில்

திகழ்க! எங்களை ஆளுகின்ற அவளின் சிற்றிடை போல் மின்னல்

கீற்றாய் பொலிக! பெருமானின் துணைவியின் திருவடியில் உள்ள

பொற்சிலம்பின் ஓசையைப் போல் இடியாய் ஒலிக்க! அவளுடைய

புருவங்கள் வளைந்தது போல் வானவில்லாய் வளைக! நம்மை ஆளும்

அவளோடு எப்போதும் இணை பிரியாது இருக்கும் ஈசனுடைய 

அன்பர்க்கு அவளே முன்வந்து விரைந்து அருள் அளிப்பது போல் நீயும்

மண்ணில் பொழிந்திடுவாய் எம்பாவாய்.

பாடல்: 16

முன் இக்கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய். 

இட்டிடை - சிறிய இடை; சிலை குலவுதல் - வில்லென வளைதல்;
முன்னி - முற்பட்டு.


FB Titles.

முகனூல் பதிவர்கள் புத்தகம் எழுதினால் கீழ்க் கண்ட தலைப்புகளில் எழுதலாம்..

நெட்டில் சுட்ட கதைகள்.

காபி பேஸ்ட்டும் எந்தன் போஸ்ட்டும்.

காலண்டரில் களவாடிய காலை தத்துவங்கள்.

என் அந்தரங்க சா(ச்சீ)ட்டிங் குறிப்புகள்.

நிலா மலர் காதல் - கவிதைத் தொகுப்பு

பதிவுகளை திருடுவது எப்படி!

முப்பதே நிமிடங்களில் ஃபேக் ஐடி ஆகலாம்.

ச்சீ..ச்சீ..சாட்டும்.. சிக்கிகிட்ட ஸ்க்ரீன் ஷாட்டும்.

வாட்ஸ் அப் குரூப்பும் வச்சுகிட்ட ஆப்பும்.

பிரபலங்களும் ப்ராப்ளங்களும்.

வதந்திக்கு நாங்க கேரண்டி.

முகனூல் சந்திப்பும் முச்சந்தி சிரிப்பும்.

அவ கிட்ட ஏண்டா சாட் பண்ற - அதிரடி அடிதடிக் கதைகள்.

அவதூறு பரப்பிட 500 வழிகள்.

முகனூல் பைத்தியமும் முடிவில்லா வைத்தியமும்..

#இனி_நீங்க_சொல்லலாமே

பாசுரம் 1

எழுத்தாளர் சுஜாதாவின் "வாரம் ஒரு பாசுரம்" (1) புத்தகத்திலிருந்து..

1.விளக்கேற்றி துவக்குவோம்.

எந்த நல்ல காரியத்தையும் விளக்கேற்றித்தான் துவக்கி வைக்கிறோம். இன்றைய தினங்களில் கம்ப்யூட்டர் விழாக்கள் கூட குத்துவிளக்கேற்றித்தான் துவங்குகின்றன. குத்துவிளக்கைத் தேடி அலைய முடியாது, நமக்கு ஓர் அகல் விளக்கு போதும்.

"தகளி" என்ற அருமையான கடைச் சங்க காலத் தமிழ் வார்த்தையை நாம் மலையாளத்துக்கு இழந்து விட்டோம். மண் விளக்குக்கு பயன்பட்டு வந்த சொல். கார்த்திகை மாதத்தில் வீடெங்கும் ஏற்றி வைப்பார்களே அந்த விளக்கு. அம்மாதிரியான ஒரு விளக்கை ஏற்றி வைத்து இத்தொடரை துவங்குவோம்.

விளக்கேற்றுவது இருள் நீங்குவதற்கு இடர்ப்பாடுகள் சுனாமி ஆழிப்பேரலைப் போல வந்தாலும் அதை நீக்க ஒரு பெரிய விளக்கை ஏற்றி வைத்தால் போதும். அதற்கு தேவையான சமாச்சாரங்கள் என்னென்ன? முதலில் ஒரு தகளி வேண்டும். அதற்கு இந்த உலகத்தையே (வையம்) எடுத்துக் கொள்ளலாம்.

அதில் எண்ணெய் ஊற்றவேண்டும் ;அதற்கு (வார்கடல்) சமுத்திரத்தைப் பயன்படுத்தலாம்.திரியேற்ற வேண்டும் ; கதிரவனில் பற்ற வைக்கலாம் அதை கடவுளின் பாதத்தில் வைத்தால் போதும் காரியம் முடிந்தது. இப் பெரிய விளக்கை ஏற்றுவதுகொஞ்சம் கஷ்டம்தான் என்றாலும் கற்பனை செய்தாவது பார்க்கலாமே.

அட சொல்லியாவது பார்க்கலாமே! காசா பணமா? அந்தச் சொல் மாலையாலேயே இடர்ப்பாடுகள் அனைத்தும் நீங்கி விடும் என்கிறார் பொய்கையாழ்வார். 

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய

சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடராழி நீங்குகவே என்று.

[வெய்ய -வெப்பமிக்க, செய்ய - சிவந்த, சுடராழி - ஒளிச்சக்கரம், இடராழி - துன்பக்கடல்]

இதைப்பாடிய பொய்கையாழ்வார் 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். திருவெஃகா என்ற பழைய பெயர் கொண்ட காஞ்சிபுரத்துக்காரர் -துறவி. இந்தப்பாடல் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் 2082 வது பாசுரம். இயற்பா என்கிற பகுதியில் முதல் திருவந்தாதியில் முதல் பாசுரம். நேரிசை வெண்பாவில் அமைந்த பாசுரம்.

பொய்கையாழ்வார் பாடிய 100 பாடல்களால் புறவிருள் அகன்றது என்பது வைணவர்கள் நம்பிக்கை.அதிகாலையில் கடற்கரையில் இருள் பிரியும் வேளையில் நின்றுகொண்டு தொடு வானத்தில் சூரியன் உதிக்க எழுந்து உலகெலாம் வெளிச்சத்தில் நனைவதை பார்க்கும் போது"சகஸ்ரகோடி பாஸ்கர நாமம்" என்று சொல்லும் "கதிராயிரம் இரவி கலந்தாற்" போன அந்தக் கணத்தில் பொய்கையாழ்வாரை நினைவில் கொள்ளுங்கள். - எழுத்தாளர் சுஜாதா



Monday 29 December 2014

திருவெம்பாவை - ஒரொருகால்..

#திருவெம்பாவை_எளிய_தமிழில் 


அவள் அடிக்கடி எம்பெருமான் என நம்பெருமானின் பெருமையை

வாய் ஓயாமல் உள்ளமெல்லாம் மகிழ்ச்சி பொங்க சொல்லிக்கொண்டு

இருக்கிறாள்! கண்களில் தாரைதாரையாய் விடாது வழியும் கண்ணீர்

அவளை இவ்வுலக நினைவில்லாது ஈசனின் நினைவில் இருப்பதை 

சொல்கிறதே ஒழிய வேறொன்றுமில்லை! இவள் வேறு தேவர்களைப்

பணிவதில்லை அவளின் பேரரசனான சித்தனின் பால் சிவப் பித்தம்

கொண்டிருக்கிறாள் இவ்வாறு அவளை சிவப்பித்தில் ஆட் கொண்ட

எல்லாம் வல்ல ஈசனின் திருப்பாதத்தை வாயார நாமும் பாடிட

மார்பு கச்சை அணிந்த மாந்தர்களே வாருங்கள் மலர்கள் நிறைந்த

இக்குளத்தில் நீந்தி நீராடி சிவனை தொழுவோம் எம்பாவாய்.


பாடல்: 15

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண் பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும்
ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 

ஓவாள் - ஓயமாட்டாள்; களி - மகிழ்ச்சி; பனித்தல் - ஈரமாக்குதல்;
பார் - உலகம்; அரையர் - அரசர்.


Sunday 28 December 2014

திருவெம்பாவை - காதார் குழை...

#திருவெம்பாவை_எளிய_தமிழில் 

காதில் அணிந்துள்ள தோடுகள் ஆட பொன்னாபரணங்களாட

மலரணிந்த கூந்தலாட அம்மலரைச் சுற்றும் தேனீக்கள் ஆட

மார்கழிக் குளிர் நீராடி தில்லை அம்பலனைப் பாடி மறையின்

பொருளா இல்லை சிவனே மறையா என்பதைப்பாடி அவனின்

ஒளி வடிவத்தின் பெருமையைப் பாடி ஈசன் அணிந்துள்ள கொன்றை

மலர் கொத்தினைப் பாடி முற்றிலும் முதல்வனாக இருக்கும் சிவனின்

வல்லமையைப் பாடி அவனே எல்லாவற்றிற்கும் இறுதியாய் இருக்கும்

அழகையும் பாடி நம் பாவங்கள் நீங்க நம்மை வளர்த்தெடுக்கும் ஈசனின்

பொற்பாதங்களின் தன்மையை வணங்கி நீராடுவோம் எம்பாவாய்.

பாடல்: 14 
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்
சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள் ஆமா பாடி
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார் பாடி
ஆதி திறம்பாடி அந்தம் ஆமா பாடிப்
பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய். ஜ்
பைம்பூண் - பொன்னாபரணம்; கோதை - பூமாலை; குழாம்
- கூட்டம்; சீதம் - குளுமை; தார் - மாலை.

காட்டுக்குள் வலைச்சிரிப்பு..

#காட்டுக்குள்_வலைச்சிரிப்பு

சிங்கம் தன் லேப்டாபில் ஆழ்ந்திருந்தது வயிற்றில் பசி குடைந்தது.. சாப்பிட்டு நான்கு நாட்கள் ஆனதால்.. மருந்திற்கும் கடந்த நான்கு நாட்களாய் மான், முயல், எருமை, போன்ற மிருகங்கள் கண்ணில் தென்படவே இல்லை தன் உதவியாளனான நரிக்கு இ மெயில் அனுப்பி காரணம் கேட்டிருந்தது நேற்று முன்தினம்.. நரியிடம் இருந்து இதுவரை பதிலில்லை திடீரென திரை ஒளிர்ந்தது.. நரியின் ரிப்ளை..!

சிங்க ராஜாவே நாம் மிகுந்த ஆபத்திலிருக்கிறோம்..இனி உங்களைப் போன்றவர்கள் 
உணவுக்கே வழியின்றி சாகப் போகிறீர்கள் என்றது அச்செய்தி.. சிங்கம் திடுக்கிட்டு தன் செல்போனை எடுத்து நரிக்கு டயல் செய்தது.. மறுமுனையில் "கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்"பாடலின் ரிங் டோன் ஒலித்தது.."முடிவே இல்லாதது" என்ற கடைசி வரி ஒலித்து வரை பாடல் முடிந்து நீங்கள் டயல் செய்த நபர் இந்த அழைப்பை ஏற்கவில்லை என்ற அறிவிப்புடன் அந்த கால் நிறைவடந்தது.!

சினத்தில் சிங்கம் நரி நம்பருக்கு டேய் ஏன் என் கால் அட்டெண்ட் பண்ணலை? நீ என்ன பெரிய அப்பா டக்கரா..! நான் ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா என SMSடைப் செய்து கொண்டிருக்க அதை Send செய்யும் வினாடியில் நரி வேகமாக மூச்சிரைக்க ஓடி வந்து வணக்கம் சொன்னது.. மன்னா மன்னிக்கவும் எனது ஆண்ட் ராய்டு போனில் சீக்கிரம் சார்ஜ் குறைவதால் அதை சார்ஜ் போட்டு இருக்கிறேன்....

அதுதான் கால் அட்டெண்ட் பண்ணவில்லை தவறாக நினைக்க வேண்டாம் என்று இளைத்துக் கொண்டே சொன்னது.. ஓ.. அதுவா விஷயம் பரவாயில்லை ஏன் அப்படி ஒரு மெசேஜ் அனுப்பினாய் தகுந்த காரணம் சொல் என பலகீனமாக கர்ஜித்தது சிங்கம் (பசியினால்) மன்னா மிகப் பெரும் ஆபத்து என்றது நரி மறுபடியும்.! முட்டாளே அது தான் என்னவென்று கூறு என்றது சிங்கம் மீண்டும் பலகீனமாக.!

மன்னா நமது காட்டில் எல்லா மிருகங்களும் இணையத்தில் இணைந்து விட்டன ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள்+, டம்ப்ளர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் என சகல சமூக வலைத்தளங்களிலும் இணைந்துவிட்டன பேராபத்து என ஊளையிட்டது நரி ஓ...அதனால் எப்படி நான் பட்டினி அதற்கு விடை சொல் என்றது சிங்கம்.! மன்னா மிருகங்கள் இணையத்தை பயன்படுத்தி தாங்கள் பலியாகாமல் காத்துக் கொள்கின்ற விந்தை முற்றிலும் புதியது.. உமக்கு அது கொடியது என்றது நரி..!

மடையா.. நீட்டி முழக்காமல் விஷயத்தை சொல் ஒரு மானைப் பார்த்தே 4 நாட்கள் ஆகிவிட்டது என்றது சிங்கம் (மீண்டும் பலகீனமாக) மன்னா மான் முயல் காட்டு எ ருமை போன்ற மிருகங்கள் கூகுள் மேப்பில் சிங்கம், புலி, சிறுத்தைகள் உலாவும் இடத்தை தெரிந்து கொண்டு அதற்கு நேரெதிர்புறம் மேயப் போகின்றன அதுதான் உங்கள் கண்ணுக்கு எந்த மிருகமும் தென்படாததற்கு காரணம் என்றது நரி..!

என்ன கொடுமை சரவணா இது.. என்ற அரதப்பழசான சந்திரமுகி டயலாக் பிரபு போல குண்டாக இருந்த சிங்கம் வாயிலிருந்து உதிர்ந்தது.. ஆமாம் மன்னா அது தான் எனக்கும் அதிர்ச்சி என்றது நரி.! அப்படியென்றால் இணையம் வந்த பின் என்னைப்போல் இருக்கும் அசைவ விலங்குகள் உணவில்லாமல் இறந்து விடுவதா?என்ன நியாயம் இது? சர்வைவல் என்பது தவறா..?இதற்கு வேறு வழியில்லையா? பல வினாக்களை எழுப்பியது பலகீனத்திலும் சிங்கம்.. நரி கள்ளமாக புன்னகைத்தது..!

இருக்கிறது மன்னா கடவுள் எந்த இணையத்தை கொண்டு வந்து உங்களை பட்டினி போட்டானோ அதிலேயே உங்கள் உணவுக்கும் வழி வகுத்துள்ளான் என்றது நரி.. அட.! அது என்ன வழி.! என்றது சிங்கம் இப்போது ஆர்வத்தில் பலகீனமில்லாமல்.. மன்னா இணையத்தில் மிருகங்கள் உங்களை ஃபாலோ செய்கின்றனஅவற்றை அவர்கள் அறியாமல் ஃபாலோ செய்ய உகந்தது தான் ஃபேஸ்புக் என்றது நரி.!

ஃபேஸ்புக்கா.? அதில் எப்படி உணவு கிடைக்கும் நரியே என்றது குழப்பத்தில் சிங்கம். மன்னா தாங்கள் ஃபேஸ்புக்கில் ஒரு ஐடி தொடங்கி ப்ரொஃபைல் படமாக ஒரு மான் படத்தை வைத்து மான்களுக்கு முயல்களுக்கு ஃபிரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்து அவர்களை நண்பனாக்கிக் கொண்டு சாட்டிங்கில் நயமாக பேசி அவர்களை உங்களை தேடிவரச்செய்து அடித்து உண்ணலாமே பாஸ் என்றது நரி.!

ஆஹா.. அபாரமான யோசனை ஆனால் இதை புலிகளும் செய்யுமே நமக்கு இரை கிட்டுமா யாரை நம்புவது நரியாரே.? என்ற சந்தேகத்தை எழுப்பியது சிங்கம்... உடனே நரி நாம் புலி சிறுத்தைகளை பேச்சு வார்த்தைக்கு அழைப்போம் அவர்களோடு ஒரு உடன்படிக்கை செய்வோம் மான் படம் உங்களுக்கு முயல் படம் புலிகளுக்கு..எருமை படம் சிறுத்தைகளுக்கு என ப்ரொஃபைல் படங்களை பிரித்துக் கொண்டு வேட்டையாடலாம் இதை சட்டமாக்கிவிடுங்கள் மன்னா என்றது..!

சூப்பர்.. நல்ல யோசனை உடனே சிங்கம் புலி க்ரூப்ஸ் என்ற பெயரில் வாட்ஸப்பில் ஒரு க்ரூப் ஆரம்பித்து அனைத்து புலி இனத்திற்கும் செய்தி அனுப்பிவிடு.. என்றது சிங்கம்.. ஓகே மன்னா நானும் இப்போது தான் சிறு முயல் ஒன்றை என் ஃபேக் ஐடி மூலம் நட்பாக்கி இருக்கிறேன் நாளை அது என்னை பார்க்க வருகிறது.. எங்களுக்கும் இந்த க்ரூப்பில் இடம் கொடுப்பீர்களா என்றது நரி..!

உங்களுக்கு இடமா.! இதயத்தில் இடம் தருகிறேன்.. வேண்டுமானால் ட்விட்டரில் தொடர்கிறேன்.. சிங்கம் புலிகள் இடத்தில் சிறு நரிகளுக்கு இடம் கேட்டதே தவறு என்றது அரசியல் தலைவர் பாணியில்.. சரி மன்னா என்று நரி அதிருப்தியுடன் விடை பெறும் அதே நொடியில் வேறொரு இடத்தில் மான்கள் முயல்கள் எருமைகள் எல்லாம் கூடி தங்கள் ப்ரொஃபைல் படங்களாக சிங்கம் புலி படங்கள் வைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றிக் கொண்டிருந்தன.!