Thursday 28 January 2016

கஸாலி..

அண்ணன்  வெங்கடேஷ் ஆறுமுகம் எழுதிய  ஸ்ரீரங்கத்தில் ஒபாமா பதிவின் இரண்டாம் பாகம் இது ஒரு ரிலே ரேஸ் பதிவு)

கார் ஸ்ரீரங்கத்தில் போய் நின்றது. ஊரே பளிச்சென்று இருந்ததை பார்த்து அசந்துபோன ஒபாமா பக்கத்தில் நின்ற மோடியிடம்
 "வாட் ஏ மிராக்கிள் மோடி. இவ்வளவு க்ளீனா நான் அமெரிக்காவைக்கூட பார்த்ததில்லை. எப்படி?" என்று ஆச்சர்யம் காட்டினார். 

"சார் இதுதான் க்ளீன் 
திட்டம். இப்ப ஸ்ரீரங்கத்தில் அறிமுகம் செஞ்சிருக்கோம்" என்றார் மோடி. 

பக்கத்தில் நின்றிருந்த தமிழிசை மெதுவாக 
"ஜீ  இது க்ளீன் இந்தியா திட்டமில்லே. க்ளீன் ஒபாமா திட்டம். அதாவது ஒபாமா வருவதால் திடீர்ன்னு க்ளீன் பண்ணி வச்சிருக்கோம்"

"உஷ். அது எனக்கு தெரியாதா? சும்மா ஒரு விளம்பரம்தான்" என்று மோடி அதட்டினார். 

அப்போது ஒபாமா" யார் இந்த லேடி?, என் வைஃபோட படிச்சவங்களா? நீங்க என் வைஃபுக்கு கிஃப்ட் கொடுத்த பட்டுச்சேலைய கட்டிருக்காங்க?"
 என்றார்.

"நோ நோ. இவங்க எங்க கட்சி தமிழக தலைவர்"

"ஓ சாரி நான் ஆப்ரிக்காக்காரங்கன்னு நினைச்சிட்டேன். சரி என்ன சொன்னாங்க"

"அது ஒண்ணுமில்லே ஒபாமா சார். அதாவது.." 

"சரி விடுங்க. நெக்ஸ்ட் என்ன ப்ரோக்கிராம்?"

"ஒரு விளக்குமாற்றை உங்க கைல கொடுத்து ஒரு போட்டோ எடுத்திட்டா"

"வாட் விளக்குமாறு"

"விளக்குமறுன்னா வாரியல்னு எங்க பக்கம் சொல்லுவாங்க"- தமிழிசை. 

"வாட் வாரியல்?"

"க்ளீன் செய்ய பயன்படுத்துவது"

" நோ நோ அதெல்லாம் ப்ரோக்ராம்ல இல்ல"

"நோ ப்ராப்ளம். பிரச்சாரம் மட்டும் செஞ்சுடுங்க"

"ஒரு ஆளைக்காணாம். யாருக்கு பிரச்சாரம் செய்ய சொல்றீங்க?"

"உங்க பாதுகாப்புக்காக யாரையும் வெளில விடல. எல்லோரும் வீட்டுக்குள்தான் இருக்காங்க. டிவி.யில் நேரடியா பார்த்துக்குவாங்க"

"இதென்ன புதுசா இருக்கு? பக்கத்தில்தானே இருக்கேன். நேரா பார்த்துக்கட்டுமே"

"அதெல்லாம் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. நீங்க இப்படியே பேசுங்க"

"அப்படின்னா ஓகே. சரி மைக்கை கொடுங்க" 

அப்போது ஒரு இரைச்சல். யாருன்னு பார்த்தால் விஜயகாந்த். 

"என் ஆதரவில் வேட்பாளர் நிக்கறாரு. நீங்க என்னை கூப்பிடாமல் பிரச்சாரம் செய்றீங்களா?"

"மன்னிக்கவும் கேப்டன். உங்களிடம் சொல்லிட்டுத்தானே வந்தேன்"

"ஆமா ராத்திரி சொன்னீங்கள்ல மறந்துட்டேன். சரி எங்கே உங்க அப்பா அம்மா?"

"என்ன சொல்றீங்க. அப்பா அம்மாவா?" அதிர்ச்சியானார் மோடி. 

"நீங்கதானே உங்க அப்பா அம்மாவை கூட்டிட்டு பிரச்சாரத்துக்கு வருவதா சொன்னீங்க. நான் போதைல இருக்கேன்னு நினைச்சீங்களா?"

""அய்யோ கேப்டன். அது அப்பா அம்மா இல்லே. ஒபாமா!"

"ஓ அப்படியா. ஹி ஹி. இவரும் போற இடமெல்லாம் பொண்டாட்டியை கூட்டிட்டுத்தான் போவாருன்னு கேள்விப்பட்டேன். அப்படியே என்னை மாதிரி. என்ன ஒரு குறைன்னா அவருக்கு மச்சான் இல்லை. எனக்கு இருக்காரு. இதை அப்படியே அவருட்ட ஹிந்தில சொல்லிடுங்க"

"கேப்டன்,  ஒபாமாவுக்கு ஹிந்தி தெரியாது"

"ஓ தமிழா. அமெரிக்க தமிழர் போல. சரி நானே தமிழ்ல சொல்லிடுறேன்"

"அய்யோ அவருக்கு தமிழும் தெரியாது"

"அவருக்கு தமிழும் தெரியாது.  ஹிந்தியும் தெரியாதுன்னா எப்படி இந்தியாவில் சமாளிப்பாரு?"

"இங்க்லீஸ் தெரியும்"

"எனக்கு இங்க்லீஸ் தெரியாதே?"

இதை எல்லாம் ஒபாமா குழப்பத்துடன்  பார்த்தார். மோடியிடம்..

"இவரு யாரு. இவ்வளவு செக்யூரிட்டியையும் மீறி எப்படி வந்தார்?"

"இவருதான் கேப்டன். இவருக்கு செக்யூரிட்டில்லாம் பெரிய விஷயமேயில்லை. காலில் வூடு கட்டி அடிப்பார்"

மோடி விஜயகாந்தை கேப்டன் என்றதும் ஒபாமா ஒரு சல்யூட் அடித்தார். 

"சாரி ஒபாமா சார். கேப்டன்னு சொன்னதும் ராணுவ கேப்டன்னு நினைச்சீங்களா? இவரு எதிர்கட்சி தலைவர். எங்க கட்சி கூட்டணில இருப்பவரு"

"ஓ... உங்க ஊர்ல எதிர்கட்சித்தலைவரை கேப்டன்னுதான் சொல்லுவீங்களா?"

"நோ நோ. இது இவரு பட்டப்பேரு"

அப்போது விஜயகாந்த் குறுக்கிட்டு...

"என்ன சொல்றாரு ஒபாமா. மண்டைல நங்குன்னு குட்டவான்னு கேளுங்க. ஆங்"

"அய்யய்யோ. கேப்டன் அவசரப்படாதீங்க. உங்களை அறிமுகப்படுத்திட்டு இருந்தேன்"

"அதானே பார்த்தேன். சரி வந்தது வந்துட்டாரு. அப்படியே பொள்ளாச்சி பக்கம் ஒரு நாள் வரச்சொல்லுங்க"

"என்னது பொள்ளாச்சிக்கா? அங்கே எதுக்கு?" அதிர்ச்சியானார் மோடி.

"பொள்ளாச்சில என் மகன் நடிக்கற சகாப்தம் சூட்டிங்க் போயிட்டு இருக்கு. அதில் ஒரு அடியாள் கேரக்டர் இருக்கு. அதை ஒபாமா செஞ்சா நல்லாருக்கும். ஏன்னா நல்லா வாட்டசாட்டமா இருக்காரு"

"உருப்பட்ட மாதிரிதான். நானே கெஞ்சி கூத்தாடி பிரச்சாரத்துக்கு கூட்டி வந்திருக்கேன். நீங்க சூட்டிங் கீட்டிங்ன்னு குழப்பிடாதீங்க ப்ளீஸ்"

"என்னது குழப்பறேனா. அப்படின்னா நமக்கு சரிப்படாது. நான் இப்பவே கிளம்பறேன். நம்ம கூட்டணி முறிந்தது"

"அய்யோ கேப்டன் அவசரப்படாதீங்க. நம்ம அமெரிக்காவில் சூட்டிங்கை வச்சு அங்கே இவரை நடிக்க சொல்லலாம். எல்லா சிலவையும் நான் பார்த்துக்கறேன்" 

"இது டீல்"

ஒபாமாவிடம் மைக்கை நீட்டினார் மோடி.

"சார் நீங்க பிரச்சாரத்தை ஆரம்பிங்க"

அப்போது 'உடன்பிறப்பே'ன்னு ஒரு குரல் கேட்ட திசையில் பார்த்தால் கலைஞர். 

"உடன்பிறப்பே ஒபாமா
நீ முதன்முதலில் அமெரிக்கா அதிபரான போது 'அமெரிக்காவின் நவீன மார்ட்டின் லூதர் கிங்கே. கருப்பினத்தில் பிறந்த வெள்ளைக்கார நாட்டின் அதிபரே. வாழ்க. உன் வெற்றியில் விடியலை பார்க்கிறேன்.உன்னை பார்ப்பது திருவாரூர் வீதீயில் சின்ன வயதில் திரிந்த என்னை பார்ப்பதுபோல் இருக்கு'ன்னு என் முகநூலில் ஸ்டேட்டஸை போட்டு அம்பது லட்சம் லைக்ஸ் அள்ளினேன். அப்படிப்பட்ட நீ என்னை விட்டுட்டு இந்த கட்சிக்கு வாக்கு கேட்பது வெட்கமாக இருக்கிறது" என்றார். ஒபாமா குழப்பத்துடன் மோடியை பார்த்தார்.  

(அடுத்த பாகம் அண்ணன் வெங்கடேஷ் ஆறுமுகம் கற்பனையில் வரும்)

#கற்பனைத்துவம்.

Tuesday 19 January 2016

பொருட்காட்சியும் மனசாட்சியும்...

#பொருட்காட்சியும்_மனசாட்சியும்

ஏங்க.. பொருட்காட்சியில் ஒரு ஸ்டால் எடுக்கலாம்ன்னு இருக்கேன் நீங்க என்ன நினைக்கிறிங்க? அதுவா அது சரிப்படாதே..அங்க என்ன குடுத்தாலும் சாப்பிடுவாங்க ஆனா நமக்கு என்ன பேர் கிடைக்கும்.? ஐ வாண்ட் ரிபீட் கஸ்டமர்ஸ்... இல்லைங்க இங்க கடை போட்டால் நம்ம கடை பேரு நல்லா பிராண்டிங் ஆகுமில்லையா.! அதான்..ஓ.. நீ அப்படி வர்றியா.. ஓகே.. சரிம்மா

செல்வம் என் ஆபீஸ் அட்டெண்டர்.. ராஜா என் டிரைவர்..மதிய சாப்பாட்டை வீட்டில் இருந்து ஹாட் பேகில் வாங்கி வந்து நியூஸ் பேப்பர் விரித்து அதன் மீது தட்டு வைத்து நான் கை கழுவும் வரை பரிமாறி என் தட்டையும் கழுவி வைப்பார்கள். என்னிடம் நிரந்தரப் பணியாளர்கள் 45 பேர்..  பகுதி நேரப் பணியாளர்கள் 400 பேர் அத்தனை பேருக்கும் என் மேல் அதிக அக்கறை.!

நம்ம கடை போல 5 பேருக்கு அதே கேட்டகிரியில் கடை கொடுத்து இருக்காங்கப்பா.. ஓ.. அதென்ன கடை.? டீ காபி பால் & சூப் வகைகள்.. அவ்ளோதான்.! இதுக்கா ஒரு கடை.? இல்லைங்க நல்லா போகும் உங்க ஐடியா ஏதாவது தாங்களேன்... நானா? ம்ம் சரிசரி.. யோசிச்சு சொல்றேன் இன்னொண்ணு நீங்களும் கடைக்கு வியாபாரத்துக்கு கண்டிப்பா வரணும்.

ஸார் ரெடியா வீட்டுக்கு வரவா.? இது என் டிரைவர் ராஜா! வீடும் ஆபீசும் ரெண்டு தெரு தள்ளியே.! இதுக்கு கார்! வாழ்வில் எல்லா கஷ்டமும் எல்லா ஏற்றத் தாழ்வுகளும் கண்டு வந்தவன் நான். வெளியூர் போகையில் ரயில் ஆனாலும் விமானம் ஆனாலும் இறுதி வரை வந்து என் சூட்கேசை உருட்டி இழுத்து வந்து வழியனுப்பிவிடும் வேலைக்காரர்கள் தான் எனக்கு அதிகம்.

பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் இதுக்குத் தான் அதிக கூட்டம் இருக்கும் அன்னைக்கு மட்டுமாவது நீங்க கண்டிப்பா ஸ்டாலுக்கு வந்து ஹெல்ப் செய்யணும் என்றாள் என் மனைவி... சரின்னுட்டேன் விபரீதம் புரியாமல் தீவுத்திடல் கண்காட்சி ஒரு மிகப்பெரும் கடல்அங்கு போய் நான் நிற்பதா? தயக்கமாக இருந்தது ஏற்கனவே என் கார் சென்னை வெள்ளத்தில் மூழ்கி செயலிழந்து கிடக்கிறது.. இப்ப நான் மனைவிக்கு உதவணும்..

காலை 6 மணிக்கு எழுந்து பால்,காய்கறி வாங்கி சர்க்கரை, டீத்தூள் ஸ்டாக் வைத்து.. அத்தனையும் எடுத்துக் கொண்டு தீவுத்திடல் போக வேண்டும்... வெள்ளத்தில் என் கார் செயலிழந்துவிட என் ஒரே போக்குவரத்து ஓலா டாக்ஸி மட்டுமே.. என் மகளின் ஸ்கூட்டியும் அவ்வப்போது உதவிக்கு வந்தது.. செயலில் இறங்கினேன்.. இனி.. பொங்கல் விடுமுறை தினங்கள்.!

பத்தடிக்கு பத்தடி ஸ்டாலில் வெயில் தடுப்பு ஏதுமின்றி கல்லாப் பெட்டியில் அமரும் வாய்ப்பு எனக்கு.. தரை சமதளமாக இல்லாததால் சேர் போட்டு அமர முடியவில்லை நின்று கொண்டே இருந்தேன் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை.. கால்கள் கடுக்கும், இடுப்பு வலிக்கும், தோள்கள் கழண்டு விடும். இத்தனையையும் தாங்கிக் கொண்டுதான் நின்றேன்.

ஒரு சின்ன வேலைக்கே என்னை வேலை செய்யவிடாத என் பணியாளர்கள் நினைவுக்கு வந்து போனார்கள்.. ஆனால் என் மனதில் உற்சாகம்.. எத்தனை மனிதர்கள்.. எத்தனை குணாதிசயங்கள்.. எத்தனை விருப்பு வெறுப்புகள்.. எத்தனை வகையான எண்ணங்கள்.! மனிதர்களைப் படிக்க எனக்குக் கிடைத்த வாய்ப்பு இந்தத் தொழில் என்பதை முதல் நாளே அறிந்தேன்.

டோக்கன் கொடுத்து, பணம் வாங்கி, சப்ளை செய்து, எச்சில் கிளாஸ்களை அப்புறப் படுத்தி, டேபிள் துடைத்து.. ஆஹா.. எனக்குள் இன்னும் சாதித்து விட்டேன் என்ற அகம்பாவம் இல்லை.. இன்னும் உழைக்க ரெடி.. நான் பிரஸ்டீஜ் பார்க்கலை இது அத்தனையும் என்னை கண்காணித்த நண்பர்கள் சொன்னது.. இதை நான் பப்ளிக்காக செய்ததும் இன்னும் பாராட்டினர்.

எனக்கு எந்தவிதமான ஈகோவும் இல்லை எந்த நேரத்திலும் எனக்குச் சவால் வந்தால்...மீண்டும் முதல் பரோட்டாவிலிருந்து சாப்பிடும் அந்தத் தன்னம்பிக்கை உள்ளது.. என் ஸ்டாலில்.. கால் கடுக்க நின்றதில் இடுப்பு தோள் கால் குதிகால் பாதம் அத்தனையும் வலித்தது..இரவு வீடு வந்து சாப்பிட்டுப் படுக்க 1 மணி ஆகிவிடும்.. இது மூன்று தினங்களாக..

ஒரு வழியாக எல்லாம் சிறப்பாக நடைபெற்றது.. என் அனுபவத்தில் பல தரப்பட்ட மனிதர்களை சந்திக்கும் நிகழ்வாக அமைந்தது இந்த வேலை.. எல்லாம் முடிந்து இரவு 11 மணிக்கு மேல் கடையைக் கழுவி சுத்தப்படுத்தி அதை அடைத்து டேபிள் துடைத்து வீட்டுக்கு வரும் போது உடலெல்லாம் அடித்துப் போட்டது போல வலி பின்னி பெடலெடுக்கும். ஆனால்...

என் வேலையை செய்யவே எனக்கு 40 ஆட்கள் இருக்கையில் நான் உடல் வணங்கி வேலை பார்த்தது மிக சந்தோஷம். நான் கடைக்கு வேலைக்கு கேட்ட ஆட்கள் எல்லாம் ஐ.டி. கம்பெனி ஹெச்.ஆரை விட மும்மடங்கு சம்பளம் கேட்டதால் களத்தில் நானே இறங்கிவிட்டேன். இறைவா இதே போல எத்துணை உயரம் உயர்ந்தாலும் இதே போல எளிமையாக இருக்கும் குணத்தைக் கொடு என வேண்டிக்கொண்டேன்.

தாமஸ் ஆல்வா எடிசன் ஹென்றி ஃபோர்டு உள்ளிட்ட நண்பர்கள் சிலர் ஆண்டுக்கு ஒருமுறை சுற்றுலா செல்வார்களாம் நடுக்காட்டில் கிடைத்ததை வைத்து சாப்பிட்டு வாழும் அன்றைய மேன் அண்ட் வைல்ட் நிகழ்வு அது அடுத்த ஒரு வருடத்திற்கு அவர்களுக்கு புத்துணர்வு தருமாம்.. கோடிகளில் சம்பாதித்தாலும் குணம் ஏழையாக இருந்து பயன் இருக்காதல்லவா..?

இதோ இன்று ஒரு சாக்கு மூட்டையில் என்னைக் கட்டி சுற்றி பத்து பேர் உருட்டுக் கட்டையால் அடித்தது போல உடலெல்லாம் வலி இருக்கட்டுமே..
இது என் ஆணவத்தை அழித்த வலி.. வசதிகள் பல இருந்தாலும் கொஞ்சமாவது உடலுழைப்பு வேண்டும்  என எனக்கு உணர்த்திய வலி.. சிந்தித்து பார்க்கிறேன் என் தவறுகளை.. அதை நான் மாற்ற வேண்டும்.. 

இந்த  சுகமான வலியை அனுபவிக்க வேண்டும்.. ஈகோ இன்றி நான் செய்த வேலைகள் தான் என் அடையாளம்.. இதில் ஒரு ரூபாய் லாபம் எனினும் அது ஒரு கோடிக்குச் சமம்.. ஆயிரம் வசதிகள் இருந்தாலும் ஆத்ம திருப்தியைத் தருவது உடலுழைப்பு ஒன்று மட்டுமே என புரிந்து கொண்டேன்.. இப்போது என் மனசாட்சி  என்னை உறுத்தவே இல்லை.

இது பொருட்காட்சியல்ல... என் மனசாட்சி... 

Friday 15 January 2016

ஸ்பானிஷ் லீகில் இந்தியா..

#ஐரோப்பிய_லீக்

தேவ் சென்னை சர்வதேச விமான நிலையத்தின் வி.வி.ஐ.பி லவுஞ்சில் நுழைந்தான்.. தேவின் முகம் கண்டதும் லேசான சலசலப்பும் அவரவர் செய்து கொண்டிருந்த வேலைகளும் தடைபட்டன.. மூளையின் நியூரான்கள் அட இது தேவ் தான் என அனைவருக்கும் சொல்லியது.. எல்லாரது முகங்களிலும் வியப்பும் ஆவலும் கலந்து கிடந்தன.. அவர்கள் இதழ்களில் புன்னகைகள் விரிந்தன சிலர் பரபரப்பாக எழுந்து நின்றார்கள்.

இளம்பெண்கள் ஹேய்..நம்ம தேவ் யா என அடிக் குரலில் கூச்சலிட்டார்கள். உலகம் முழுவதும் பிரபலமான இந்திய விளையாட்டு வீரன் தேவ். தமிழ்நாட்டை சேர்ந்தவன்.. முழுப்பெயர் தேவேந்திரன் பொன்னுசாமி.. ரசிகர்களுக்கு சுருக்கமாக தேவ்.. இந்திய அணியின் ஓபனர்.. இந்தியாவின் மிகப் பிரபலமானவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை அவனக்கு பின் தள்ளியவன்.. உலகில் அதிகம் சம்பாதிக்கிற விளையாட்டு வீரன் தேவ்.

லவுஞ்சில் பெரிய பெரிய வி.வி.ஐ.பி.கள் எழுந்து கை குலுக்கினார்கள்.. பெண்கள் அவனை கண்களால் விழுங்கியபடி ஆட்டோகிராஃப் கேட்டார்கள்
சிலர் செல்ஃபி எடுக்கும் போது வேண்டுமென்றே ஒட்டி உரசி நின்றார்கள். புன்னகைத்த முகத்துடன் தேவ் அவர்களுடன் ஒத்துழைத்தான்.. தூரத்தில் ஒரு சோபாவில் இருந்து ஒரு கை உயர்ந்ததைப் பார்த்தான்.. அது சம்யுக்த குமார் அல்லவா.. பரபரப்பாக எல்லாம் முடித்துவிட்டு அவரிடம் சென்றான்.

வெல்கம் தேவ்.. எப்படி இருக்கிங்க என்றார் உடைந்த தமிழில் சம்யுக்த்.. சம்யுக்த் பெங்களுரைச் சேர்ந்த தொழிலதிபர்.. 5 ஆண்டுக்கு முன் தேவ் தலைமையில் பெங்களூர் அணியை இந்தியன் லீக்கில் வாங்கி வைத்திருந்தவர்.. தற்போது தொழில் நஷ்டமடைந்து வெளிநாட்டில் வசிக்கிறார். நலம் சார் நீங்க..? ம்ம் இருக்கேன் இந்தியாவுக்குள்ள வந்தே 3 வருஷம் ஆச்சு இப்ப கூட ஹாங்காங்கில் இருந்து டிரான்சிட் தான் என்றார்.

அவரது குரலில் வேதனை இருந்தது.. இட்ஸ் ஓகே சார் மீண்டும் நீங்க எழுந்து வருவிங்க என்றான் தேவ்.. ஓகே மை பாய் எங்க ஸ்பானிஷ் லீக் தானே என்றார் மெல்ல கண்சிமிட்டியபடி.. சம்யுக்த் கண்சிமிட்டினார் என்றால் இயல்பாகி விட்டார் என அர்த்தம்.. தேவுக்கு நிம்மதி பிறந்தது. ஆமா சார் இது சீசன் 4 விளையாட்டா 2017 ஆம் ஆண்டு ஆரம்பிச்சது இப்ப 2020 வரைக்கும் நீளுது..கால்பந்து பார்க்க கூட இப்ப ஆளில்லை என்றான்.

யெஸ் தேவ் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் மட்டும் விளையாடிய இந்த விளையாட்டை இப்ப ஐரோப்பாவிலும் ஆரம்பிச்சிட்டாங்க அர்ஜெண்டினா பிரேஸில் டீம் கூட வந்துருச்சே.. நீ தானே இன்னிக்கி உலகிலேயே டாப் சம்பளக்காரன்.. ஆமா ஸார் என்றான் சற்று நெளிந்த படி.. தேவ் நீ தானே இப்பவும் ஓபனர்.. யெஸ் ஸார்...ஆமா அந்த ஸ்டேஜை மட்டும் விட்டுக் கொடுத்துடாதே நீமட்டும் தான் இருக்கே டீமில் மத்தவங்க எங்கே என்றார்.

மத்தவங்க நேற்றே போயிட்டாங்க சார் நான் இந்தோனிஷியா லீக்கை முடிச்சிட்டு போறேன்.. இன்னிக்கு அவங்களோட ஜாயின் பண்ணிக்குவேன்.. ஓ இந்தோனிஷியா வரை இந்த விளையாட்டு போயிடுச்சா.. வொண்டர்புல் ஓகே மை பாய் என் பிளைட்டுக்கு அனவுன்ஸ் வந்துடுச்சு.. ஜெர்மனி வந்தா வீட்டுக்கு வா என்றவர் எழுந்து மெல்ல அவனை அணைத்து விடை பெற்றார். அவர் கிளம்பியதும் சரேலென மீண்டும் ரசிகர்கள் பட்டாளம் சூழ்ந்தது..

இந்த ரகளை எல்லாம் முடிந்து விமானம் ஏறி தனது பிஸினஸ் கிளாஸ் ஸ்லீப்பர் சீட்டில் செட்டிலாகி பிளாக் காபியும் சாண்ட்விச்சும் எடுத்துக் கொண்டான்.. ஏர் ஹோஸ்டஸ்கள் தவழ்ந்து தவழ்ந்து உபசரித்தார்கள்.. அவர்களும் செல்ஃபி எடுத்துக் கொள்ள மெல்லிய இரவு விளக்கை ஆன் செய்து இருக்கையில் படுக்க அவனுக்கு போர்வையை நன்கு போர்த்தி விட்ட ஏர்ஹோஸ்டஸ் மெல்ல அவன் கையில் முத்தமிட்டு விலகினாள்.

தேவுக்கு ஆச்சரியம் சச்சினை தெரியாது என்று சொன்ன ரஷ்ய டென்னிஸ் 
வீராங்கனை இன்று தேவ் யார் எனத் தெரியாது சொல்லுவாளா இவனுடன் டேட்டிங் அல்லவா கேட்பாள்.. தேவுக்கு ஏற்கனவே  4 ஆஃபர்கள் இருக்கு
இந்த விளையாட்டு தான் அவனை இந்தளவிற்கு ஆக்கியுள்ளது இன்று உலகையே ஆட்டிப் படைக்கிறது.. எண்ணியபடியே நன்கு உறங்கினான். மறு நாள் ஸ்பானிஷ் லீக் நடக்கும் மாட்ரிட் நகரை அடைந்தான்.

அணியினர் இருக்கு ஓட்டலுக்கு போய் பயிற்சியாளருடன் ஆலோசித்தான் நாளை மறு நாள் லீக் துவங்குகிறது அதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டன மைதானத்தில் கடும் பயிற்சி எடுத்தார்கள்.. வீரர்களின் அணிவரிசையை மாற்றலாம் என்றார் உடற்பயிற்சியாளர்.. சமீபகாலமாக ஜுனியர் தேவ் என அழைக்கப்படும் சம்பத் சந்திரசேகரை ஓபனராக அனுப்பலாம் என்றார்.. ஒரு நிமிடம் கண்மூடினான் தேவ்.. "உன் இடத்தை விட்டுக் கொடுக்காதே" 

என்றார் விழிகளுக்குள் சம்யுக்தகுமார்.. தலையை உதறி சட்டென்று சொன்னான் இல்ல அதுக்கு இன்னும் காலம் வரலை.. அனைவரும் அறை திரும்ப அடுத்த நாள் உலகமே கொண்டாடும் அந்த ஸ்பானிஷ் லீக் துவங்கியது.. அந்நாட்டு அதிபர் வண்ணமயமாக நடந்த துவக்க விழாவை நிறைவு செய்ய  காலரி எங்கும் ரசிகர்கள் அவர்கள் நாட்டுக் கொடியுடன் வண்ண வண்ணமாக அமர்ந்திருந்தார்கள்.உலகின் மிகப் பெரிய டிவி சானல் 

நேரடியாக இதை ஒளிபரப்பியது பிரபல வீரர்கள் வர்ணனையாளர்களாக அமர்ந்திருக்க அழகிய சியர்ஸ் கேர்ள்கள் ஆட பியரும் கோக்கும் பெப்சியும் பொங்கி ஓட தடதடக்கும் டிரம்ஸ் டிரம்பட்டுகள் ஒலிக்க ரசிகர்கள் ஆட அந்த இடம் பெரும் ஆரவாரத்துடன் இருந்தது.. பயிற்சியாளர் ரெடியா தேவ் என்றார் கட்டை விரல் உயர்த்தி தேவும் பதிலுக்கு உயர்த்தினான்..லீக் துவங்கியது மைதானத்தில் நடுவர்கள் முதலில் இறங்கினார்கள்.

அவர்கள் இடத்துக்கு சென்று நடுவர்கள் நின்றதும்..தேவ் எழுந்தான் உடலை முறுக்கி வார்ம் அப் செய்து கொண்டான்.. மைதானத்தின் ஜெயண்ட் ஸ்கிரீனில் கவுண்டவுன் தொடங்கியது இங்கிலாந்து வீரர் ஒருவர் டென் என ஆரம்பிக்க திரையில் ஒன் சொன்னது தேவ் கவுண்ட்டவுன் முடிந்ததும் அந்தக் கதவு திறக்க திறந்தவுடன் புயலென பாய்ந்தது காளை ஒன்று.. உலகின் அனைத்து அணிகளின் ஓபனர்களும் காளையை நோக்கி ஓட இந்தியாவின் ஓபனிங் மாடுபிடி வீரனான தேவும் களத்தில் பாய்ந்தான்.

Wednesday 13 January 2016

30. வங்கக் கடல்...

#ஆண்டாள்_பெருமை

ஆண்டாள் curriculum vita  

பெயர் : ஆண்டாள், இயற்பெயர் : கோதை, உத்தேசமான பிறந்த தினம் : கி.பி.885 நவ 25 அல்லது கி.பி 886 டிசம்பர் 24, கண்டெடுத்த நாள் & நட்சத்திரம் : கலியுகம் நள வருஷம் ஆடி மாதம் சனிக்கிழமை சுக்ல பட்சம் பூர நட்சத்திரம், வளர்ப்பு தந்தை பெயர் : பெரியாழ்வார், கணவரின் பெயர் : அரங்கன் ஶ்ரீரங்கம், பட்டப் பெயர்கள் : சூடிக் கொடுத்த சுடர் கொடி, ஆண்டாள், நாச்சியார், எழுதியவை : திருப்பாவை, நாச்சியார் திருமொழி திருப்பாவை பாடல் இலக்கணம் : இயற்றர விணை கொச்சகக் கலிப்பா.

ஆண்டாளின் திருப்பாவை சங்கத் தமிழ்மாலை என போற்றப்படுகிறது.. திருப்பாவை என்பது பின்னர் வந்த பெயராகும்.. இதில் இருக்கும் பாவை நோன்பு சங்க இலக்கியங்களிலும் வருகிறது.ஶ்ரீவில்லிபுத்தூரை ஆயர்பாடியாகவும் வடபெரும் கோயிலை நந்தகோபர் மாளிகையாகவும் அதிலுள்ள தெய்வத்தை கிருஷ்ணனாகவும் பாவித்து பாடினார் ஆண்டாள்.

உன்மனதிலிருப்பது எந்த ஊரான்.? என திருமாலைப் பற்றி பெரியாழ்வார் கேட்டு பெருமாளின் திவ்ய தேசங்கள் அனைத்தையும் சொல்ல திருவரங்கன் பேர் கேட்டதும் ஆண்டாளுக்கு வெட்கம் வர அரங்கனோடு மணமா? எப்படி சாத்தியம் என உறங்கப்போக கனவில் வந்த அரங்கன் அவளை அலங்கரித்து  திருவரங்கம் அழைத்து வா எனச்சொல்ல அவரும் கோதையை அலங்கரித்து ஶ்ரீரங்கம் செல்ல அங்கு பெருமானுடன் ஐக்கியமடைந்தார் ஆண்டாள்.

தனது திருப்பாவையில் வான சாஸ்திரத்தையும் மழை பெய்வித்தலையும் ஆண்டாள் எழுதியது இன்றளவும் வியப்பிற்குரியது.. திருமால் மீது அவர் கொண்ட காதல் மிக மிக ஆழமானது. மார்கழி 30 நாட்களும் இந்த பாவை நோன்பை மேற்கொள்வது வைணவ மரபு...இந்த 30 பாடல்களையும் மார்கழியில் படித்தாலும் அது நன்மையே.. இனி 30ஆம் நாள் பாடல்..

பாற்கடல் கடைந்த மாதவனை சந்திர முகத்தானை நம் பெண்கள் சென்று வேண்டியது கிடைத்த நிகழ்வினை ஶ்ரீவில்லிப்புத்தூரிலே வாழ்வார்.. பெயரிலே பெரியாழ்வார் அவரின் செல்ல மகள் ஆண்டாள் அருளிய திருப்பாவை முப்பதையும் தவறாமல் பாடினால் நான்கு தோள்களும் தாமரைக் கண்களும் கொண்ட திருமாலின் திருவருள் பெற்று பேரின்பத்துடன் வாழ்வாங்கு வாழ்வார்கள்.

ஒரு நாள் நீ யாரையம்மா மணம் செய்து கொள்வாய்.? என பெரியாழ்வார் கேட்ட போது திருமாலுக்கென்றே படைக்கப்பட்ட என் உடல் மனிதர்களுக்கு என்னும் வார்த்தை என் காதில் கேட்டாலே என்னால் வாழ முடியாது எனச் சொன்னவள்.. ஏனென்றால் மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானதுதுதுதுதுதுதுது..

- சுபம்-

புகைப்பட மாடல் : R.S.தேஜஸ்வினி

மார்கழி 30 ஆம் நாள் பாடல்...

வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய்இழையார் சென்றுஇறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான்
கோதைசொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

29. சிற்றம் சிறுகாலே...

#ஆண்டாள்_பெருமை

மார்கழி முடிய இன்னும் 1நாள் தான் இருக்கு கடந்த 28 நாளா பாடுறோம்.. ஒரு வேளை எதுக்கு இந்த பாட்டெல்லாம் கண்ணனுக்கு புரியலையோ.? டாடி எனக்கு ஒரு டவுட்டு போல சந்தேகம் எழுகிறது ஆண்டாளுக்கு.. அம்மாவின் அமைச்சரவை அமைச்சர் போல கண்ணன் பதிலே பேச மாட்டேங்குறாரே! ஏன்?சரி விஷயத்தைக் கேட்டுட வேண்டியது தான். 

அது மட்டுமல்ல இந்த 29 வது நாள் பாடலில் வித்யாசமான ஒரு சின்ன வேண்டுகோள் வைக்கிறார். மனதில் படும் ஆசைகளுக்கு காவல் வைக்கச் சொல்கிறார்.. ஆசைக்கு காவலா.! ஆண்டாள் ஆட்டையில இது புதுசா இல்ல இருக்கு.. என்கிறீர்களா.. ஆம் அந்தக் காவலும் எதற்கு என்றால் ஆண்டாளின் காதல் மேம்படவே.. புரியலையா? சரி வாங்க சொல்றேன்.

இந்தாப்பா கண்ணா தினம் அதிகாலையில வந்து உன் காலில் விழுந்து உன்னை கும்பிடுறோம் இதுக்கான காரணம் என்னான்னு இப்ப கேட்டுக்கோ.. நாங்க எல்லாரும் பசுமாடு மேய்ச்சு கிட்டே பாட்டுப் பாடி கட்டுச் சோறு சாப்பிட்டு ஜீவனம் நடத்துற ஆயர் குலத்தவங்க ஆனா நீயோ பெருமையான கடவுள்.. நீ பந்தா எதுவும் இல்லாம எங்க குலத்தில் வந்து பிறந்த பாரு நாங்க அதுக்கு தான் இப்படிச் செய்யறோம்.

உன்கிட்ட இருந்து கொடுன்னு கேட்டு அதை வாங்கிகிட்டு போக மட்டும் நாங்க வரலை உனக்கு ஏதாவது ஒரு சின்ன உதவியாவது நாங்க பதிலுக்கு பண்ணணும் இல்லியா? இல்லாட்டி அது எங்களுக்கு பெரிய அவமானம்.. உனக்கு எடுபிடியா இருந்து சின்னச் சின்ன வேலைன்னாலும் சரி எங்களை அதைச் செய்யவிடு.. இந்த ஜென்மம் இல்ல இன்னும் ஏழேழு ஜென்மம்...

எடுத்தாலும் உன்னுடன் சேர்ந்தவங்களாக தான் இருப்போம் உனக்கே பணி செய்து கிடப்போம்.. கடைசியா ஒண்ணு கேக்குறோம் எங்களக்கு இதைத்தவிர வேற ஆசை ஏதாவது வந்தா அப்படி ஒரு நெனப்பே வராத மாதிரி நீ அருள் செஞ்சா போதும்.எப்படி பாருங்க கண்ணனை நினைப்பதை தவிர வேறு ஆசைகள் வேண்டாமாம். வந்தாலும் அதை அகற்றணுமாம்.

அதாவது உன்னை நினைக்கிற இந்த மனசுல வேற நினைப்பே வரக்கூடாது எங்கள் ஆசைக்கு காவல் இரு வேறு ஆசைகள் வந்தா உள்ள விட்டுறாதே.. இப்ப கண்ணன் தான் ஜாக்கிரதையா இருக்கணும் அப்படி வேற நினைப்பு வந்தா அவரது காவல் சரியில்லைன்னு அர்த்தம் ஆகிடுமே.. 

நாங்க உன்னை தாம்பா நினைச்சுட்டு இருக்கோம் வேற நினைப்பு வந்தா அதுக்கு நாங்க பொறுப்பு இல்ல.. அப்பா கோவிந்தா.. நாங்க சொல்ல வந்தது சுருக்கமா இது தான் The ball is in your court இதை அந்த நூற்றாண்டிலேயே அழகுத்தமிழில் சொல்லி வைத்திருக்கிறார் ஆண்டாள்.

மார்கழி 29 ஆம் நாள் பாடல்...

சிற்றம் சிறுகாலே வந்துஉன்னை சேவித்துஉன்
பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றுஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

Tuesday 12 January 2016

28. கறவைகள் பின்சென்று...

#ஆண்டாள்_பெருமை

"மன்னிப்பு..ஏய்..தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை" கேப்டனின் புகழ் பெற்ற பஞ்ச் டயலாக் இது.. கோலிவுட் ரமணாவுக்கு வேண்டுமானால் இது பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் கோகுலத்து ரமணனுக்கு அது மிகப் பிடிக்கும் என்கிறார் ஆண்டாள். சரி ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? தவறு செய்ததால்.. ஏன் தவறு செய்ய வேண்டும்..? அது தெரிந்து செய்தது அல்ல தெரியாமல் நடந்தது..ஆக்சுவலி எங்க குலத்தோட குவாலிட்டி தெரியுமா.?

காலையில மாடு கன்னு மேய்க்க ராமராஜன் மாதிரி பாடிக் கிட்டே கிளம்புவோம் பசிச்சா இருக்கிறதை பகிர்ந்து கிட்டு லஞ்ச் சாப்பிடுவோம்.. நாங்க அவ்வளவா அறிவு அதிகமில்லாத படிக்காத இடையர் குலத்து ஆளுங்க..ஆனா நீ.. எங்க குலத்துல குறையில்லாம பிறந்த கோவிந்தன் பெரிய அறிவாளி.. நீ எங்க குலத்துல பிறந்ததே பெரும் புண்ணியம் உனக்கும் எங்களுக்கும்  இருக்குற உறவை யாராலும் பிரிக்கவே முடியாது.

இதையும் மீறி சின்னப் புள்ளத்தனமா நாங்க எதாவது பேசியிருந்தாலோ இல்ல உன்னை தப்பா பேர் சொல்லிக் கூப்பிட்டு இருந்தாலோ அதுக்கெல்லாம் கோவப்படாம நாங்க செஞ்சத எல்லாம் மன்னிச்சு நாங்க கேட்டதை கொடுத்துடு அப்படி கொடுத்துட்டா அதுவே போதும் உன்னையே நினைச்சு பாடிகிட்டு இருக்கிறத வுட வேற என்னத்தசெஞ்சிடப்போறோம். 

ஆண்டாள் கண்ணனிடம் அறியாமல் செய்த தவறுக்கெல்லாம் மன்னிப்பு கேட்கிறார். அவன் மன்னிப்பான் என்று ஆணித்தரமாக நம்புகிறார். மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன் மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்ன்னு சொல்லுவாங்க.. முதலில் தான் ஒரு மனிதன் என்பதை மன்னிப்புக் கேட்டு நிரூபிக்கிறார் ஆண்டாள்.. நிச்சயம் அவன் மன்னிப்பான்னு அவளுக்கு நன்றாகத் தெரியும்.. ஏன்னா ரமணன் பெரிய மனுஷன் அல்லவா.

மார்கழி 28 ஆம் நாள் பாடல்...

கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம்
அறிவுஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம்உடையோம்
குறைஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது அறியாத
பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

Monday 11 January 2016

27. கூடாரை வெல்லும்...

#ஆண்டாள்_பெருமை

இந்த காலத்து மாடர்ன் பெண்கள் ஜீரோ டயட் என்னும் பேரில் கொலை பட்டினி கிடந்து பொடி டப்பாவில் எல்லாம் லஞ்ச் கொண்டு செல்வதைப் பார்க்கிறோம்.. ஆண்டாள் காலத்திலெல்லாம் இப்படி டயட் கிடையாது ஆண்டாள் கேட்கும் சாப்பாடு என்ன தெரியுமா தட்டு நிறைய பால் சோறு இட்டு அதிலே கரண்டி கரண்டியாய் நெய்யை விட்டு அந்த பாலும் நெய்யும் முழங்கை வழியே சர்ரென சரிவில் இறங்கும் சைக்கிள் போல வழிய வழிய சாப்பிட வேண்டும் என்கிறார். எவ்வளவு கொழுப்புச்சத்து மிகுந்த உணவு.!

ஏற்கனவே பாலாம் அதுல நெய்யாம்.. இதெல்லாம் ஆயர்பாடியில் உள்ள பசுக்களின் பால் வளத்தையும் அவர்களுக்கு இதெல்லாம் அன்று விலை அதிகம் உள்ள பொருளாக இருந்திருக்காது என்பதும் தெரிகிறது. அன்று எல்லாமே ஹோம் மேட்.. நாம தான் இப்ப ஜங்புட் பிடியில் இருக்கிறோம். சோறு மட்டும் ஆடம்பரமாக இருந்தா போதுமா?அதை சாப்பிடப்போறவங்க அலங்காரமா இருக்க வேணாமா! அந்த சாப்பாட்டை சாப்பிடப் போகும் முன் என்னென்ன ஆடைகள் என்னென்ன ஆபரணங்கள் அணியவேண்டும்.? 

இதோ காஸ்ட்யூம் & பேஷன் டிசைனராக மாறி ஆண்டாள் ரெஃபர் செய்கிறார்.. கைகளில் அணிய தங்கவளைகள், இருதோளிலும் அணிய கைவங்கிகள், தங்கப்பூ போன்ற பெரிய தோடுகள், அதற்கு மாட்டல்கள், காலணிகள், இன்னும் பல நகைகள் அதுக்கு மேட்ச்சா உயர்ந்த ஆடைகள் இப்படி ஜோய் ஆலுக்காஸ் மாடல் போல கிளம்பி வந்து அதன் பிறகு தான் அந்த பால்சோறை அனைவரும் ஒன்றாகக் கூடி பின்பு சாப்பிடணுமாம். இத்தனையையும் பகைவரையெல்லாம் வெல்லும் கோவிந்தனைப் பாடி..

பயனைடைந்து நாங்கள் பெறும் பரிசுகள் என்கிறார். அது சரி தினமும் பாலும் நெய்யும் சாப்பிடும் பெண் உருவத்தில் பிந்துகோஷாக அல்லவா இருப்பாள்.. பின் ஏன் ஆண்டாள் அப்படிக் கேட்டார்..!பருத்திவீரன் படத்தில் ப்ரியாமணியை அவரது தந்தை வயது வந்த பெண்பிள்ளை என்றும் பார்க்காமல் மூர்க்கமாக தாக்குவார்.. அவர் அடித்து முடித்ததும் ஆவேசமாக ப்ரியாமணி பாட்டி கையிலிருந்த சாப்பாட்டுத் தட்டை வாங்கி அதிலிருக்கும் கறிச்சோற்றை அள்ளியள்ளி தின்று கொண்டே பாட்டியிடம் சொல்லுவார்..

இந்த அடி எல்லாம் தாங்க உடம்புல தெம்பு வேணாம்.. இன்னும் ரெண்டு கறியை போடு என்பார். அதே போலத் தான் சதா கண்ணனை நினைத்து நினைத்து உருகி உருகி அந்த ஏக்கத்தில் நிற்கவும் அவன் புகழ் பாடவும் ஒரு தெம்பு வேண்டுமல்லவா.. அவனை உருகி நினைக்க நினைக்க உடம்பில் சேரும் போஷாக்கும் உடலில் தேங்காமல் கரைந்தோடி விடும் அல்லவா.. ஆகவே நெய்யும் பாலும் கூட ஆண்டாளுக்கு ஜீரோ டயட் தான்.

மார்கழி 27 ஆம் நாள் பாடல்...

கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

Sunday 10 January 2016

26. மாலே மணிவண்ணா...

#ஆண்டாள்_பெருமை

மனிதர்கள் கடவுளிடம் வேண்டும் போது என்ன கேட்பார்கள்? பி.எம்.டபிள்யூ கார், பெரிய பங்களா,  தங்கம், வைரம், கோடி கோடியாய் பணம், பெயர், புகழ், நீண்ட ஆயுள் , தோட்டம் துரவு, நிறைவான செல்வம் என அவர்கள் லிஸ்ட் பெரிது. ஆனால் ஆண்டாள் இவற்றில் ஒன்று கூட கேட்கவில்லை! அவளது லிஸ்ட்டில் இதெல்லாம் தேவைப்படவில்லை! அதை படிப்போமா.

மணிவண்ணா.. இந்த மார்கழி நீராட எமக்கு எம் முன்னோர்கள் செய்த நெறிகளில் என்ன வேண்டும் என நீ கேட்டால்.. இந்தா என் பட்டியல்.. உலகம் அதிர முழங்கும் உன் பாஞ்சசன்யம் போல பல வெண்சங்குகள் வேண்டும், பெரும் ஒலி தரும் பறைகள் வேண்டும், பல்லாண்டு உன்னைப் போற்றிப் பாடிட ஓதுவார்கள் வேண்டும், அழகிய விளக்குகள் வேண்டும், கொடி மரங்கள் வேண்டும், அக் கொடி மரத்தில் கட்டிட வெண் சீலைகள் வேண்டும்..

ஆலிலைக் கண்ணா இவையெல்லாம் எமக்கு அருளினாலே போதும்.. தட்ஸ் ஆல்.. பாருங்கள் இதில் ஏதாவது ஒரு இடத்திலாவது சராசரி மனிதனின் ஒரு ஆசையாக இருக்கிறதா என்று.. அவருக்கு ஒரே ஆசை கண்ணன் தான்.. தனக்கு கிடைக்கும் செல்வத்தையும் புகழையும் விட  கண்ணனைப் புகழ்ந்து பாடிட இப்பொருட்களே போதும் என்கிறார் மிகச் சிம்பிளாகவும் ஹம்பிளாகவும்.

மார்கழி 26ஆம் நாள் பாடல்...

மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால்அன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.

Saturday 9 January 2016

25. ஒருத்தி மகனாய்...

#ஆண்டாள்_பெருமை

கவிஞர் கண்ணதாசன் கண்ணன் மீது அபிமானம் கொண்ட ஆண் ஆண்டாள்  கண்ணனை சிலாகித்தவர் முத்தையா என்னும் தன் இயற்பெயரைக்  கண்ணதாசன் என மாற்றிக்கொண்டவர். தனித்துவமான கவிதைகள் பல எழுதியவர் ஆண்டாளின் வரிகளையும் உரிமையுடன் தன் பாடலில் எடுத்துக் கொண்டார்.. எம்.ஜி.ஆர் படமான தாய் சொல்லைத் தட்டாதே படத்தில் இடம் பெரும் பாடலில் ஆண்டாளின் இப் பாசுர வரிகள் உள்ளது.

ஒருத்தி மகனாய் பிறந்தவனாம்... என்ற பாடல் இந்தப் பாடல் கவிஞரின் சொந்த வாழ்க்கைப் பற்றிய பாடல் என்போரும் உண்டு. முத்தையா என்ற கண்ணதாசன் பெற்ற தாய் தந்தையரால் சுவீகாரம் கொடுக்கப்பட்டவர்.. அவர் ஒருத்தி மகனாகப் பிறந்து ஒருத்தி மகனாக வளர்ந்தவர் என்பார்கள் எது எப்படியோ கண்ணனது வாழ்வும் கண்ணதாசன் வாழ்வும் ஒன்றுபோல அமைந்தது விட்டது ஆச்சரியம் தான். இப்போது ஆண்டாளுக்கு வருவோம்.

தாய்மாமன் கம்சனால் சிறைவைக்கப்பட்ட தேவகி என்னும் ஒருத்திக்கு மகனாகப் பிறந்து அதே இரவில் யமுனையைக் கடந்து யசோதையிடம் அடைந்து அந்த ஒருத்தியின் மகனாக மறைவாக வளர்ந்தவனே.. நீ உயிருடன் இருப்பது தெரிந்து கஞ்சன் வயிறு எரிவது போல கம்சன் வயிறு எரிய அவன் இழைத்த தீங்குகளை தவிடு பொடியாக்கினாய்.. வானுக்கும் பூமிக்கும் நெடுந்துயர்ந்த திருமாலே உன்னை நினைத்து உருகினோம்.

நாங்கள் விரும்பிய பறையை அருளினால் அதையிசைத்து உன் வீரத்தையும் செல்வத்தையும் வாயாரப் பாடி எங்கள் வருத்தம் தொலைத்து மகிழ்வோம். கண்ணனை வாயாரப்பாடினாலே வருத்தம் தொலையுமாம். கண்ணனின் விளம்பரத் தூதுவரான ஆண்டாள் எல்லா பாசுரத்திலும் சொல்வது ஒன்று தான். கண்ணனை நினைத்து அவன் புகழ் பாடி சரணாகி துதித்தால் உங்கள் "கீர்த்திக்கு நான் கேரண்டி" என உத்திரவாதம் அளிக்கிறார் ஆண்டாள்.

தாய் சொல்லைத்தட்டாதே என்ற படத்தில் வரும் கவிஞரின் பாடல் MGR க்கு எழுதியது.. ஆனால் பாடலின் அந்த வரிகள் அப்படியே கண்ணனுக்கும் பொருந்தும்படி கவிஞர் எழுதியிருப்பதை கேட்க கீழுள்ள லிங்க்...

மார்கழி 25 ஆம் நாள் பாடல்...

ஒருத்தி மகனாய்ப் பிறந்துஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

Friday 8 January 2016

24. அன்று இவ்வுலகம்...

#ஆண்டாள்_பெருமை

இப்பாடலில் ஆண்டாள் கிருஷ்ணலீலைகளையும் பிற அவதாரங்களையும்  அவர் செய்த வதங்களையும் போற்றிப் பாடுகிறார். சண்டைக்கு பாட்டா.? சென்னை குப்பங்களில் பாட்டுப் பாடிக் கொண்டு போடும் குஸ்திச் சண்டை இருந்தது. சண்டையிடுபவர் தன்னைப்பற்றி பெருமையாகப் பாடிக் கொண்டே சண்டையிடுவார்கள். இது மதுரைப் பகுதிகளிலும் சிலம்புச் சண்டையில் உண்டு. நான் தான் உங்கொப்பன்டா, நல்லமுத்து பேரன்டா..   

வெள்ளிச் சிலம்பெடுத்து விளையாடப் போறேண்டா எனத் தொடங்கும் பாடல் கேட்டு இருப்பீர்கள்.. பெருமாளின் அவதாரச் சண்டைகளை பிறர் செருக்கை அழித்தசெயலை அப்படியே ஒரு மெட்ராஸ் குப்பத்து ஆள் ஒருத்தர் தன் தலைவனை பார்த்து அவர் அருமை பெருமையை புகழ்ந்து பாடினா எப்படி இருக்குமோ அப்படி இந்தப்பாடலை யோசித்தேன் அட இந்தத் தமிழிலுமே இப்பாடல் படா சோக்காகீதுப்பா.

அன்னிக்கு ஒரு தபா காலாலெயே ஒல்கத்த அள்ந்தவுரே! உன் காலத் தொட்டு கும்புட்டுக்றோம்.. சிலோனுக்கு போயி அங்க ராபணன் கதய முட்ச்சவரே! உனுக்கு இர்க்குற தில்ல நென்ச்சு பெர்மப்படுறோம்.. சனியன் சகடய எட்டி மிறிச்சவரே உன்ய புகய்ந்து பாடுறோம்.. கன்னுக்குட்டி மேறி வேசங் கட்டிகினு வந்த வத்சாசுரன அப்டியே கபால்ன்னு கால புட்ச்சு தூக்கி

பக்கத்துல மரம் மேறி வேசம்கட்டி நின்னுகினு இர்ந்த கபித்தாசுரன் மேல்ய விசிறி அட்ச்சி ஒர்யே கல்லுல ரெண்டு மாங்கா அட்சா மேறி ரெண்டு பேரியுமே காலி பண்ணவரே! உன் பாதத்தில மாட்டினு இருக்குற வீரகழல தொட்டு கும்புட்டுக்றோம்: கோகுலத்துல  குடபுட்ச்சது கணக்கா அப்டியே ஏக் தம்முல அலேக்கா மலய தூக்கி மக்கள காப்பாத்ன கோவர்த்தனரே.! உன் பாசமான கொண்த்த நென்ச்சு பெர்மப்படுறோம்!

உனுக்கு எதிரியா எப்டியாப்பட்டவன் வந்து நின்னாலும் கெலிக்குற உன் வேல் கம்ப புகயறோம்  இப்டி ஒன் அல்லா பெர்மயயும் வீர தீரத்தயும் பறயட்ச்சு பாடிகினு இர்க்கதான் இங்க வந்தோம்.. எங்க மேல இர்க்கம் காட்டி ஒன் அருள கொட்த்துடு சாமி... ஆண்டாளம்மா எம்மா அயகா சொல்லிக்கீறாங்க இல்ல..!  நாளிக்கு பாக்கலாம்... வர்ட்டா..

மார்கழி 24 ஆம் நாள் பாடல்...

அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி
கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

Thursday 7 January 2016

23. மாரி மலைமுழைஞ்சில்...

#ஆண்டாள்_பெருமை

சிங்கத்தை நீ காட்டுல பார்த்துருப்ப சர்க்கஸ்ல பார்த்துருப்ப டிவில பார்த்து இருப்ப படத்துல பார்த்துருப்ப நேர்ல பார்த்துருக்கிறியா பாக்குறியா பாக்குறியா என சிங்கம் படத்தில் ஹைடெசிபலில் சூர்யா பேசும் வசனம் நினைவிருக்கிறதா.! அதுபோல கத்தாமல் அதிகாலையில் துயிலெழுப்பும் வகையில் மென்மையாய் ஆண்டாள் பாடுகிறார் கண்ணன் எனும் சிங்கத்தை.

அடைமழைக் காலத்தில் தன் மலைக்குகையில் உறங்கி ஓய்வெடுத்த சிங்கம் அக்காலம் முடிந்ததும் விழித்தெழுந்து கண்ணில் தீ பறக்க வீரமாய் ஒரு பார்வை பார்த்து அதன் பிடரியை சிலிர்த்து உடம்பை உதறி நெட்டி முறித்து நான்கு பக்கமும் பார்த்து பின் கம்பீரமாக கர்ஜித்து தன் குகையை விட்டு வெளியேறுவது போல காயாம்பூ நிறக் கண்ணா நீயும் எழுவாயாக.

உன் பரந்த மாளிகையிலிருந்து வெளியேறி உனக்காக போட்டு இருக்கும் சிங்காசனத்தில் அமர்ந்து நாங்கள் உன்னிடம் கேட்டதை சீர் தூக்கிப் பார்த்து எங்களுக்கு வரமருள வேண்டும் என்கிறார். இதில் ஆச்சர்யமான விஷயம் இந்தியாவின் புவியியல் அமைப்புப்படி குஜராத் மாநிலத்துக் காடுகள் தான் சிங்கங்கள் வாழ்வதற்கான சூழல் அமையப் பெற்றவை

தமிழகத்திலோ ஶ்ரீவில்லிப்புத்தூரிலோ சிங்கங்கள் வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை.. இருப்பினும் மலைக் குகையில் இருந்து வெளிப்பட்ட சிங்கம் என்பது அவர் காலத்து யாத் ரீகர்கள் யாரோ சொல்லக் கேட்டு எழுதி இருக்கலாம் இருப்பினும் அதன் பார்வை அதன் சுபாவம் இதெல்லாம் கேட்டு உள்வாங்கி கற்பனையில் இப்படி எழுதியதும் மிகுந்த ஆச்சர்யம் தான்.

சிங்கத்தின் பிடரி மயிர்க்கு வேரி மயிர் எனப்பெயர் அது வேர்க்கும் போது ஏற்படும் அரிப்பில் தான் அது தலையை சிலிர்க்குமாம்.. சிங்கக் கூட்டத்து தலைவனை அதன் பிடரி மயிர் மணத்தை கொண்டு தான் பிற சிங்கங்கள் தெரிந்து கொள்ளுமாம்.. இந்த அறிவியல் எல்லாம் தாண்டி ஆண்டாள் கண்ணனை சிங்கம் எனப்பாட நரசிம்ம அவதாரம் தான் இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கும். அவர் ஓங்கி அளந்தா உலகமே மூன்றடி தானே.

மார்கழி 23 ஆம் நாள் பாடல்...

மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துஉறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி
மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்துஇருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

Wednesday 6 January 2016

22. அங்கண்மா ஞாலத்து...

#ஆண்டாள்_பெருமை

ஹே.ஹே.ஹே.. இந்த பாஷா யாருக்கும் கெட்டது செய்யமாட்டான்.. தன்ன நம்பி வந்தவங்கள கைவிடவே மாட்டான்.. என்னை நம்பாம கெட்டவங்க அதிகம்.. நம்பிக் கெட்டவங்க யாருமில்லை இப்ப முடிவு பண்ணிக்கோங்க இந்த மாணிக் பாஷாவா இல்ல அந்த மார்க் ஆண்டனியா.? இப்படி பாஷா படத்தில் ரஜினி கேட்டதும் எல்லா பெரிய டான்களும் பாஷாவை கையில் முத்தமிட்டு ஏற்றுக் கொள்ளும் காட்சி நினைவிருக்கிறதா.!

அப்படி ஒரு காட்சியை ஆண்டாளும் பாசுரத்தில் வைத்திருக்கிறார் உலகின் பெரும் அரசர்கள் யாவரும் திருமால் வசம் சரணடைய அவன் காலடியில் வந்து காத்திருக்கிறார்கள் என்று. பார்த்தால் பசி தீரும்.. பாவம் தீருமா.? கண்ணனின் கண் பார்வை நம்மீது பட்டால் அது சாத்தியம் என்கிறார் அதற்கு அவனைச் சரணாகதி அடைவதைத்தவிர வேறு வழியில்லை என்கிறார் ஆண்டாளின் உவமைத் திறன் மிளிரும் மற்றொரு பாடல் இது.

அலைகள் தாலாட்ட திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார் நாரணன் அவரைக் காண உலகை கட்டியாளும் பெரிய சக்ரவர்த்திகள் அனைவரும் தங்கள் பராக்கிரமத்தை மறந்துவிட்டு அக்கடலோரம் வந்து அவன் செம்பாதங்களை தொழுது நிற்கிறார்கள். அவர்களோடு அடியவர்களாகிய நாங்களும் நிற்கின்றோம் எங்களை மெல்ல கண் திறந்து பார் கண்ணா என சொல்லி வைக்கிறார் பாருங்கள் ஒரு உவமானம்.அடடா என்ன அழகு.!

மெல்லக் கண்விழிப்பாய் கண்ணா மெல்ல மெல்ல... ஒரு கால் சலங்கை மணியின் வாய் பிளவு போல.. செந்தாமரைப் பூ மலர்வதைப் போல மெல்லக் கண் திற என்கிறார்.. எவ்வளவு அழகியல் பாருங்கள்.. சூரியனும் சந்திரனும் ஒன்றாக உதித்தது போல நீ விழித்து உன் பார்வை எங்கள் மீது பட்டால் நாங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தொலைந்து போய்விடும் என்கிறார். இது ஆண்டாள் கண்ணனை துயில் எழுப்பும் மூன்றாம் நாள் பாடல்.

எனக்கென்னவோ 3 நாட்களுக்கு முன்பே விழித்துக் கொண்ட கண்ணன் ஆண்டாளின் தமிழமுதைப் பருகுவதற்காகத்தான் தூங்குவது போல நடிக்கிறான் என்றே நினைக்கிறேன். அவன் பொல்லாத கள்வன் அல்லவா. படிக்கும் நமக்கே இவ்வளவு இன்பமென்றால் பாடு பொருளான அவனுக்கு! நிஜத்தில் கண்ணனைக் கட்டிப் போட்டது யசோதையல்ல ஆண்டாள் தான்.

மார்கழி 22 ஆம் நாள் பாடல்...

அம்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அம்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

Tuesday 5 January 2016

21. ஏற்ற கலங்கள்...

#ஆண்டாள்_பெருமை

கறந்தபால் அடுப்பின்றி பொங்குமா? பொங்கும் என்கிறார் ஆண்டாள். வழக்கம் போல கண்ணனுக்கு இக்காலத்து அரசியல் தலைவர்களுக்கு ப்ளக்ஸ், பேனர், போஸ்டர், ஆர்ச்சில் கொடுக்கும் அடை மொழி போல் அவர் காலத்து வாசகங்களுடன் போற்றிப் பாடிப் புகழ்ந்து எழுப்புகிறார்.

19ஆம் நாள் 20ஆம் நாள் ஆகிய இரண்டு நாட்களும் பாடிய பாசுரங்கள் கேட்டு கண்ணன் எழுந்திருக்கவில்லை.. இப்போது என்ன செய்வது? சரண்டர் தானே! அதையும் அழகான உவமையுடன் சொல்லி ஆண்டாள் அடையும் சரணாகதியைப் பாருங்கள்.

பசுவிடம் இருந்து பால் கறக்கும் போது அதன் மடியில் இருந்து பாத்திரத்தின் அடியில் விழும் பால் வேகமாக மேலேறி பொங்குகிறது.. (இந்த உவமை நியூட்டனின் விதியை நினைவு படுத்துகிறது)அப்படியென்றால் எவ்வளவு பால்வளம்! எவ்வளவு ஆரோக்கியமான பசுக்கள். இதுபோல பல பசுக்கள் வைத்திருக்கும் நந்தகோபரின் மகனே.

உலகை காப்பவனே, பெரிய மனிதனே, அவதாரப் புருஷனே,ஒளிவடிவனே, நீ தூங்கலாமா? உன் எதிரிகள் கூட உன் பலம் அறிந்து உன்னுடன் மோத பயந்து உன் வாசல் வந்து காத்திருப்பது போல அடியவர்கள் நாங்களும் உன் வாசலில் வந்து உன்னைப் புகழ்ந்து பாட காத்து நிற்கின்றோம்.. நீ எழுந்து எமக்கு அருள் புரிவாய்.

ஆண்டாள் கோபமாய், தாபமாய், செல்லமாய், காதலாய், ஊடலாய் கண்ணனைப் பாடுபவர். எதற்கும் மசியவில்லை என்றால் படாரென்று கண்ணனின் காலில் விழுந்துவிடுவாள்.. அவள் ஆதாயத்திற்காகவும் பதவிக்காகவும் இன்றைய அமைச்சர்கள் போல் காலில் விழுபவள் அல்ல.. கண்ணன் மேல் காதலில் விழுந்தவள்.

மார்கழி 21 ஆம் நாள் பாடல்...

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன் வாசற்கண்
ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.

Monday 4 January 2016

20. முப்பத்து மூவர்...

#ஆண்டாள்_பெருமை

திருப்பாவையில் பஞ்ச் டயலாக்.. ஆச்சர்யமாக இருக்கிறதா கண்ணனுக்கு ஆண்டாள் பஞ்ச் டயலாக் எழுதியிருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா புயலடிச்சு பொழைச்சவன பார்த்துருக்க இந்த பூபதி அடிச்சு பொழச்சவனை பார்த்துருக்கியா ஒரு தடவை முடிவு பண்ணிட்டா எம் பேச்ச நானே கேக்க மாட்டேன்.. நான் ஒரு தடவ சொன்னா.. கண்ணா சிங்கம் சிங்கிளாத் தான் வரும் இதற்கெல்லாம் குறைவில்லாத ஒரு பஞ்ச் ஆண்டாள் வைக்கிறார்.

கடந்த பாசுரத்தில் கட்டிலில் நப்பின்னை மார் மீது தலை வைத்து கொஞ்சம் ரொமாண்டிக்காக கண்ணன் உறங்கினார் அல்லவா.. அந்த சுகத்தில் ஒரு பாட்டுக்கே எழுந்து வந்து விட்டால் நன்றாக இருக்குமா.?ஆக இந்தப்பாடல் அவர்களை எழுப்பும் 2வது பாடல்.. இந்தப்பாடலில் அவர் கண்ணனின் வீர தீர பராக்ரமத்தை சொல்லி ஆரம்பிக்கிறார்.. இதன் உள் குத்து இவ்வளவு வீரமுள்ள ஆளு நீ பொம்பளை மார்ல சாஞ்சிகிட்டு என உசுப்பிவிடத்தான்.

முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் ஒரு பிரச்சனைன்னா சொல்லாம அங்க  ஆஜராகுரா வீரா, ஓழுக்கத்தில நீ கில்லி, துணிச்சலா அடிப்ப சொல்லின்னு ஆரம்பிச்சு வைக்குறார் பாருங்க ஒரு பஞ்ச்.. "உன் பேரைக்கேட்டாலே எதிரிகளுக்கு காய்ச்சல் வரும் தூயவனே" அடடா என்னா ஒரு பஞ்ச் என்னா ஒரு அடைமொழி! இப்படி கண்ணனை சொல்லிட்டு கொஞ்சம் "பீப்" ஒலிக்க வேண்டிய வார்த்தைகளை நப்பின்னைக்கு வர்ணனையாகச் சொல்கிறார்.

பக்தி இலக்கியங்களில் பெண்ணின் மார்பகம், பிறப்புறுப்பு பற்றியெல்லாம் சகஜமாக எழுதிய பெண்களில் ஆண்டாளும் ஒருவர்.. அக் காலத்தில் இதெல்லாம் சாதாரணம்.. இப்போது தான் கண்ணியம் இன்றி எழுதுவது எல்லாம் பெண்ணியம் எனப் பேசுகிறார்கள். செப்புக் கவசம் போல் மார்பகங்களும்,செவ்விதழ்களும் சிறு மருங்குல் தாங்கிய இடுப்பும் உள்ள நப்பின்னையே நீ எழுந்து நோன்பிற்குரிய விசிறியையும் கண்ணாடியையும்..

உன் மணவாளனிடத்தில் தந்து எங்களுக்கு அதை தரச்செய்து எங்களை நீராட விடுவாயாக என்கிறார்.. ஒன்று நிச்சயம் பாசுரத்தில் பஞ்ச் பீப் எல்லாம் 
இருப்பது தெரிஞ்சா சினிமாக்காரர்கள் இந்த பக்கம் பாய்ந்து விடும் அபாயம் இருக்கிறது.. கப்பம் செப்பம் வெப்பம் என டி.ஆருக்கும் முன்னோடியாக ஆண்டாள் இருந்து தான் ஒரு சகலகலாவல்லி என்பதை நிரூபித்து இருக்கிறார்.. யார் கண்டது அவர் காலத்தில் சினிமா இருந்திருந்தால் அதிலும் வெற்றிக் கொடி நாட்டியிருப்பார் ஆண்டாள்.

மார்கழி 20 ஆம் நாள் பாடல்....

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில்எழாய்
செப்பம் உடையாய் திறல்உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில்எழாய்
செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில்எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.

Sunday 3 January 2016

திருப்பாவை 2015 -16

திருப்பாவை..

1. மார்கழித் திங்கள்..

#ஆண்டாள்_பெருமை

ஒரே வார்த்தையில் பல விஷயங்களை  சொல்லிவிடுவார்கள் சிலர். ஆண்டாளும் அப்படியே நிலா சூரியன் மேகம் மூன்றுமே கண்ணன் ஒருவனே என்கிறார்.. கார்மேக வண்ணமும் சூரியன் போல சூடும் நிலா போல் குளிர்ச்சியும் ஒன்றாக உடையவன் என்கிறார்.. மார்கழி மாதத்து நிறை நிலா நன்னாளில் நீராடச் செல்வோம் 

ஆயர்குல செல்வப் பெண்களே கூரான வேலினால் கொடுமையை அழிக்கும் நந்தகோபனும் அழகிய கண்ணுள்ள யசோதையும் வளர்த்த இளம் சிங்கம் கார்மேகவண்ண சூரிய சந்திரன் போல முகமுடைய கண்ணன் நமக்கு பறை தந்து அருள்வான் உலகமே அவனை புகழும்படி பாடிடுவோம் வாருங்கள்.

இந்தப் பாடலில் ஏரார்ந்த கண்ணி என்று அழகான கண் உடையவள் என யசோதையையும் வர்ணிக்கிறார்.. உலகில் மாமியாரின் அழகை வர்ணித்த ஒரே பெண் ஆண்டாளாகத் தான் இருக்க முடியும்.. சரிதானே!

மார்கழி 1ஆம் நாள் பாடல்..

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்
குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் 
சிங்கம்
 கார்மேனி செங்கண் கதிர்மதியம் 
போல் முகத்தான் 
நாரா யணனே நமக்கே 
பறை தருவான்
 பாரோர் புகழப் 
படிந்தேலோர் எம்பாவாய்.

2. வையத்து வாழ்வீர்காள்...

#ஆண்டாள்_பெருமை

Universal என்னும் வார்த்தைக்கு உலகெங்கும் பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வதில் காட்டும் அக்கறையை உதாரணமாகச் சொல்லலாம்.பெண்கள் மேக்கப் போட உடை மாற்றி கிளம்ப ஆகும் நேரம் இதையெல்லாம் கிண்டலடித்து துணுக்குகள் படித்திருப்போம்.

இன்று பல வீடுகளிகளில் அழகு சாதனப் பொருட்கள் அத்யாவசியப் பொருட்களாகி விட்டன. மாதம் சில பல ஆயிரங்கள் அதற்குச் செலவும் ஆகிறது. ஆனால் அதிகாலை எழுந்து குளித்துவிட்டு அதன் பின் கண்ணில் மையிட்டுக் கொள்வதில்லை தலையில் பூச்சூடிக் கொள்வதில்லை என எந்தப் பெண்ணும் சொல்வாளோ..!!

பாவை நோன்பு என்னும் விரதத்தை கடைபிடிக்கும் ஆண்டாள் சொல்கிறார். நெய் உண்ணோம் பால் உண்ணோம் என சாப்பாடும் விஷயத்தில் மட்டும் விரதம் இருப்பது பெரிதல்ல.தீய சொற்கள் பேசாதிருப்பது பெரிதல்ல.. தான தருமங்கள் செய்வது பெரிதல்ல.. 

செய்யக் கூடாததை செய்யாமல் இருப்பது பெரிதல்ல
பெண்ணின் இயல்பான அலங்கரிக்கும் குணத்தையும் அந்த மாலவனுக்கு அர்ப்பணிப்பது தான் பெரிது.. அதுவே இந்நோன்பின் நோக்கம் என்னும் போது கண்ணன் மேல் ஆண்டாள் கொண்ட அளவிலா நேசம் புரியும்.

மார்கழி 2ஆம் நாள் பாடல் :

வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்

பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணோம் 
பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு 
எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யா 
தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

3. ஓங்கி உலகளந்த...

#ஆண்டாள்_பெருமை

சினிமாவில் மாண்டாஜ் ஷாட்டுகள் என்னும் ஒரு வகை உண்டு.. ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத வெவ்வேறு காட்சிகள் ஆனால் அனைத்தும் அது தொடர்பானவை.

உதாரணமாக முதல்வன் திரைப்படத்தில் ஒரு நாள் முதல்வராக அர்ஜுன் இருந்துவிட்ட பின் நாடெங்கும் வெவ்வேறு ஊர்களில் மக்கள் அவரது ஆட்சியின் சிறப்பைப் பற்றி டிவியில் கூறுவார்கள். இது மாண்டாஜில் ஒரு வகை.

பாலுமகேந்திரா மணிரத்னம் படங்களில் மாண்டாஜ் காட்சிகள் பாடலில் இடம் பெறும் கலைஞன் படத்தில் வரும் எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா பாடல் மாண்டாஜுக்கு நல்ல உதாரணம். இந்த மாண்டாஜ் உத்தியை ஆண்டாளும் கையாள்கிறார். 

ஓங்கி இவ்வுலகை அளந்த பெருமாளை வணங்கி குளித்து விரதம் இருக்கிறார்கள் பெண்கள் அவரை வணங்குவதால் என்னவெல்லாம் நடக்கும்? அப்படியே ஷாட்டை இங்க கட் பண்ணா...

நாட்டில் தீயவை அழிகிறது மாதம் மும்மாரி பொழிகிறது நெல்கள் செழிப்பாக வளர்கிறது.. அந்த வயல்களிடையே ஓடும் கால்வாயில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன.. அதன் கரைகளில் இருக்கும் கருங்குவளை மலர்களில் தேன் உண்ணுகிறது..

மடி நிறைய பால் நிறைந்திருக்கும் பசுக்கள் கறப்பதற்கு முன் தானாகவே கொடுத்த வள்ளல் போல பாலை சுரக்கிறது.. எங்கும் செல்வம் செழிக்கிறது. இத்தனயும் மார்கழி விரதத்தின் மகிமைகள் என்கிறார் இயக்குநர் இமயம் ஆண்டாள்.

மார்கழி 3 ஆம் நாள் பாடல்..

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி 

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரிபெய்து

ஓங்கு பெருங் செந்நெல் ஊடு கயலுகளப்

பூக்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோ எம்பாவாய்.

4. ஆழிமழைக் கண்ணா...

#ஆண்டாள்_பெருமை

கடல் நீர் ஆவியாகி மேகத்தில் சேர்ந்து மழையாகப் பொழிகிறது என்பது இன்றைய அறிவியல் மனிதர்களான நமக்கெல்லாம் தெரியும்.. ஆனால் இது ஆண்டாள் வாழ்ந்த காலத்திலும் தெரிந்திருக்கிறது என்பது தான் வியப்பான செய்தி.

ரமணன் இல்லாத காலத்திலும் ஆண்டாள் வாசித்த வானிலை அறிக்கை தான் இந்த பாடல்.. கருமை நிற கண்ணனை மேகமாக உருவகப்படுத்துகிறார் ஆண்டாள்.

மழைக் கடவுளான வருணா நீ கடலுக்குள் நுழைந்து நிறைய நீரை எடுத்துக் கொண்டு பெரும் ஒலியுடன் மேலெழுந்து மேகமாக மாறி மின்னல் ஒளிர அம்பு போல் சரம் சரமாய் மாலவன் அடியவர்களுக்கு  அருள்வது போல மழையை பொழிவாயாக என்கிறார்.

இதில் பெருமாளின் சங்கினை இடியாகவும் அவரது சக்கரத்தின் ஒளியை மின்னலாகவும் அவரது சாரங்கம் என்னும் வில் அம்பை மழையாகவும் ரசனையோடு உவமைப் படுத்துகிறார்.  மார்கழியிலும் அக் காலத்தில் மழை இருந்திருக்கிறது என்பது இன்றைய சென்னை வாசிகளுக்கு திகிலூட்டும் சேதி.

மார்கழி 4 ஆம் நாள் பாடல்..

ஆழிமழைக்கண்ணா!ஒன்று நீ கைகரவேல்;

ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்

பாழியம் தோளுடைய பற்பநா பன்கையில்

ஆழி போல் மின்னி,வலம்புரி போல நின்றதிர்ந்து,

தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்

வாழ உலகினில் பெய்திடாய்,நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

5. மாயனை மன்னு...

#ஆண்டாள்_பெருமை

நாளைய வரலாறே.. இளஞ்சிங்கமே, புதுமை விரும்பியே, மாவீரனே, வாழும் வள்ளுவரே, இப்படி எல்லாம் பல அரசியல் தலைவர்களுக்கு அடைமொழி கொடுத்து அவர்களது தொண்டர்கள் போஸ்டர்கள் பேனர்கள் அடித்திருப்பதை பார்த்திருப்போம்.

இதற்கும் முன்னோடி ஆண்டாள் தான். தன் தானைத் தலைவன் கண்ணனுக்கு பாசுரத்தில் அவர் தரும் அடை மொழிகளைப் பாருங்கள் மாயனே, வடமதுரை மைந்தனே, யமுனைத் துறைவனே, ஆயர்குல அணிவிளக்கே, என்றெல்லாம் விளித்து விட்டு..முத்தாய்ப்பாக கூறுகிறார்...

தாயை குடல்விளக்கம் செய்த தாமோதரனே என்று அதாவது கண்ணனைப் பெற்றதால் அவரது தாயின் வயிறு பரிசுத்தம் அடைந்ததாம்.. எப்படி ஒரு கற்பனை பாருங்கள் தற்போதைய தமிழகத்தில் ஆண்டாள் அரசியல்வாதியாக  இருந்திருந்தால்..

நிச்சயம் இந்த வார்த்தைக்காக அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும். ஆனால் எவரும்  தூய மனதோடு மலர் தூவி கண்ணன்பேரை சொல்லி பூஜிப்பதே போதும் அப்படிச் செய்தாலே நம் செய்த செய்ய நினைக்கிற கேடுகள் எல்லாம் தீயினால் தூசாகும் என்கிறார்.

இந்தத் தீயினால் தூசாகும் என்னும் தொனியில் தன் தலைவன் கண்ணனால் நம் பாவங்கள் பஸ்பமாகும் பொசுங்கும் பொடிப் பொடியாகிவிடும்  என பிறருக்கு உத்திரவாதம் அளிக்கிறார்.. தனக்கு அதுவே போதும் என்கிறார் பதவியை எதிர்பாராத அப்பாவித் தொண்டரான ஆண்டாள்.

மார்கழி 5 ஆம் நாள் பாடல்..

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

6. புள்ளும் சிலம்பின...

#ஆண்டாள்_பெருமை

சங்கு ஊதிட்டாங்க என்றால் இப்போது கதை முடிஞ்சது ஆள் காலி என்று தான் அர்த்தமாகிறது.. சங்கில் ஊற்றி வாயில் பால் ஊற்றினால் பிறப்பு சங்கூதி வாயில் பால் ஊற்றினால் இறப்பு என ரைமிங்காக ஸ்டேட்டஸ் போடுகிறோம் ஆனால் பெருமாளுக்கு சங்கு ஓர் அடையாளம் ஓர் ஆயுதம். 

பொதுவாக நாஸ்டால்ஜியா நினைவுகளில் நமது இளம் பிராயத்தில் காலை 6 மணிச்சங்கு மதியம் 12 மணிச் சங்கு என சங்கொலிப்பதை கேட்டு இருப்போம்.. இதில் ஆலைகளில் இழுந்து எழும்பும் சங்கொலியும் உண்டு.. சங்கொலி என்பது எதையும் தொடங்கும் போது ஒலிக்கும் சப்தம்.

அப்போது ஏன் இறப்புக்கு ஊதவேண்டும்? அது முடிவல்லவா?இல்லை இறப்பு மனிதர்களுக்கு மறுமையின் தொடக்கம் அதில் நம்பிக்கை இல்லாதவர்கள் அமர வாழ்வின் தொடக்கம் என்று கூட எடுத்துக்கொள்ளலாம் இப்படி பிறப்பு இறப்பு ஆலயம் போர் என வாழ்வில் சங்கொலிக்காத இடமே இல்லை 

அது பாஞ்சஜன்யமாய் பாரதப் போரில் முழங்கியதை இங்கு நினைவு கூர்வோம். அதோ அந்தச் சங்கு கருடனின் தலைவனானப் பெருமாள் கோவிலில் இருந்து பேரொலியாய் ஒலிக்கிறது.. அது அந்த நாளின் நல்ல தொடக்கமாக அமைய அந்த சப்தம் உன் காதுகளில் விழவில்லையா.?

என கேட்டு ஆரம்பிக்கிறார்.. அந்த சங்கொலியோடு பறவைகள் சிலம்பும் சப்தமும் பேரரவமாய் ஒலிக்கிறது என்கிறார்.இன்றும் மதுரைத் தமிழில் சலம்புவது என்றால் சத்தம் இடுவது என அர்த்தம்.. இந்த சிலம்புவது தான் சலம்புவதாக மருவியிருக்கும் என்று எண்ணுகிறேன்.

ஒரு விஷயத்தில் இன்றைய தமிழக அமைச்சர்களுக்கு ஆண்டாள் முன்னோடி இவர்களுக்கு அம்மா புகழ்.. ஆண்டாளுக்கு அரியின் புகழ்.. அவன் புகழ் பாடாது அவர் வாய் ஓயாது.. பறவைகள் சிலம்ப சங்கதிர ஒலி கேட்டு எழுந்திருக்காத பிள்ளைகளா.. உங்களுக்கு தெரியுமா..?

நம் பெருமான் பூதகியிடம் பால் குடித்து கொன்றது சகடனை காலால் நிறுத்திக்கொன்றது பாம்பின் மேல் உறங்கியது என.. அவர் காலத்து மாண்பு மிகு இதயதெய்வம் தங்கத்தாரகை போல கிருஷ்ணரின் பெருமைகளைச் சொல்லி இறுதியில் இப்படி முடிக்கிறார்... மனதில் நாரணனை நினைத்து

முனிவர்களும் யோகிகளும் அரி என்று உச்சரிக்கும் பேரொலியைக் கேட்டால் அது நம் காது வழியே மனதிற்குள் சென்று நம்மை குளிரச் செய்யுமாம் அதை கேட்பதற்காகவாவது எழுந்து வா என்கிறார்.

பொதுவாக அதிகாலையில் அரி என உச்சரிப்பது நலம் விளைவிக்கும் என்பார்கள்.ஆனால் ஆண்டாள் அரி என்னும் சப்தம் காதுகளில் விழுந்தால் போதும் என்கிறார்.. அவருக்கு அதுவே போதும்.

பின்குறிப்பு:

பாடல்களில் அரி என்று உச்சரிக்காமல் ஆபாசமாக உச்சரித்து அதற்கும் பீப் போட்டு சாங்கு பாடி தனக்கே சங்கு ஊதிக் கொண்டவர்களின் சங்கொலி பற்றி இதில் நான் குறிப்பிடவில்லை.

மார்கழி 6ம் நாள் பாடல்...

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள வெழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

7.கீசு கீசு என்று...

ஆண்டாள்_பெருமை

தயிர் சப்தம் போடுமா?போடும் அது தான் தயிரரவம் என்கிறார் ஆண்டாள்.. அரவம் என்றால் பெருஞ் சப்தம் பேரொலி என்னும் அர்த்தமும் உண்டு. ஆண்டாளின் அழகிய வர்ணனையைக்  கேளுங்கள்.. அதிகாலையில் வாசனைக் கூந்தலுடைய ஆயர்குலப் பெண்கள் மத்தினால் தயிர்கடைய தயிரரவம் எழும்புகிறது.

இந்த ஒரு சப்தத்திற்கு துணையாக இன்னும் சில இசைகளை  இதனோடு இணைக்கிறார் ஒரு இசைஞானி போல ஆண்டாள்.. ஆனை சாத்தான் குருவிகளின் கீச்சென்ற பேச்சு தயிர்கடையும் போது அசையும் பெண்களின் மீதிருந்து கலகலவென ஒலிக்கும் கழுத்துத் தாலியும் காசுமாலையும் ஒன்றொடு ஒன்று மோதும் சத்தம்.. 

இத்தனை ஒலிகளுடன் நாங்கள் கேசவனைப் பற்றி பாடும் பாட்டு இத்தனையுமா உன் காதுகளில் விழவில்லை? அல்லது கேட்டும் கேட்காதது போல இருக்குறாயா! அடி பேய்ப்பெண்ணே எழுந்திரு என்கிறார்.. உண்மையில் பேய்ப் பெண் ஆண்டாள் தான்.. கண்ணனை பேய் போல நினைத்து துதிக்க அவர் ஒருவரின்றி யாரால் முடியும்..!

மார்கழி 7ஆம் நாள் பாடல்..

கீசுகீசு என்றுஎங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்.

8. கீழ்வானம் வெள்ளென்று...

#ஆண்டாள்_பெருமை

தன்னை வணங்குபவனை அருள்வது கடவுளின் குணம். ஆனால் நம்மை வா வா என்றழைத்து அருளும் கடவுள் இருக்கிறாரா.! கண்ணன் இருக்கிறான் என்கிறார் ஆண்டாள். கண்ணன் ஆ வென்று வாய் பிளந்த போது அவரது அன்னைக்கு அன்று உலகில் உள்ள எல்லாமும் தெரிந்தது..  அது தான் உலகின் முதல் கூகுள்.. காட்டியது நம் கோகுல்..

நம் வேண்டுதலுக்கு ஏற்றபடி திருவிளையாடல் தருமி சொல்வது போல எவ்வளவு பிழை இருக்கிறதோ அதற்கு ஏற்றபடி... என அதை ஆராய்ந்து நம்மை ஆ வென்று அழைத்து ஆட்கொள்வான் ஆயர்குலக் கண்ணன்.. ஆ வென்றால் பசுக்கள் என்றும் அர்த்தம் அந்தப் பசுக்கள் பாலைப் பொழிவது போல அவன் பக்தர்களுக்கு அன்பைப் பொழிவான்.

அவனைச் சேவிக்க என்ன செய்ய வேண்டும் உறங்கும் பெண்ணே..? பார் கீழ் வானம் விடிந்துவிட்டது எருமைகள் புல்வெளியில் பரந்து மேய்கின்றன.. பாவை விரதம் இருக்கின்ற இடத்திற்கு பலர் போய்விட்டனர் சிலர் அங்கு கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களை தடுத்து நிறுத்தி உன் வீட்டு வாசலில் நிற்கின்றோம் நீ எழுந்து வா..

குதிரையாக உருமாறி வந்த கேசி என்னும் அரக்கனின் வாயைப் பிளந்தவன் சாணுகன் முஷ்டிகன் என்ற இருமல்லர்களை வீழ்த்தியவன் தேவாதி தேவன் அவன் அவனை சேவிப்போம் அப்போது தான் அவன் வா வென்று அழைத்து நம்மை அருள்வான் என்கிறார்.. கண்னனின் அருள் வருகிறதோ இல்லையோ ஆண்டாள் ஆ வென்றால் கண்ணனே வருவான் போல.

மார்கழிப் பாடல் - 8

கீழ்வானம் வெள்ளென்று எருமைசிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ளபிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப்பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

9. தூமணி மாடத்து...

#ஆண்டாள்_பெருமை

பாலுமகேந்திரா, பி.சி.ஶ்ரீராம், சந்தோஷ்சிவன், மணிகண்டன் போன்ற புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர்கள் படமாக்கும் காட்சிகள் கலைநயம் மிக்கதாக இருக்கும். அதற்கு முக்கியக் காரணம் காட்சிக்கேற்ற அழகான லைட்டிங்.! இயற்கையாகவோ செயற்கையாகவோ வரும் ஒளியின் மூலம் அந்தக் காட்சியை மெருகு ஏற்றுவார்கள். ஆண்டாளும் ஒரு ஒளிப்பதிவாளர் தான்.!

ஆண்டாள் இப்பாடலில் நம் கண்முன்னே படமாக லைட்டிங் அமைக்கிறார்
இப்படி (வைட் ஆங்கிளில்)ஒரு வீடு அந்த அதிகாலை இருளில் வீட்டில் ஒரு அழகான விளக்கு மாடம் அங்கு மணிகளுடன் வெண்ணிற திரைச்சீலைகள் அசைகின்றன அதனைச் சுற்றி அலங்காரமான விளக்குகள் எரிகின்றன. 

மணம் கமழும் சாம்பிராணிப் புகை பரவிக்கிடக்க காமிரா பார்வேர்டில் ஜூம் ஆகிறது. இலவம் பஞ்சுமெத்தையில் உறங்கிக் கொண்டு இருக்கிறாள் ஒருத்தி. அப்படியே இந்த காட்சியைக் கற்பனை செய்து பார்த்தால் அடடா ஒரு மணிரத்னம் படம் போலவோ ஷங்கர் படம் போலவோ இருக்கிறதா..!!

ஆண்டாள் ரசனை ராணி.. அவளது அழகியல் மிகுந்த பார்வை பாசுரங்களின் பல இடத்தில் பிரதிபலிக்கும்.. வார்த்தைகளிலேயே இந்தக் காட்சியை அமைத்த அவள் திறனைப் பாருங்கள் வளமானகற்பனை, ஆழ்ந்த ரசனை, கண்ணன் மேல் கொண்ட அளவிலாக் காதல் அத்தனையும் விளங்கும்.

இங்கே இந்த காட்சியை நிறுத்திவிட்டு அடுத்த ஷாட் அப்படியே கதவிற்கு இந்தப்பக்கம் நாம் மாற்றுவோம்... அங்கே தினமும் இந்த வீட்டிற்கு வரும் அப் பெண்ணின் தோழிகள் கதவுக்கு வெளியில் இருந்து இவளை கூப்பிட்டு எழுப்புகிறார்கள். மாமன் மகளே என்ன உறக்கம்? மணிக்கதவை திறந்துவிடு
அட மாமியே நீ உன் மகளை எழுப்ப மாட்டாயா.?

உன் மகள் என்ன பேசா மடந்தையா? செவித்திறன் அற்றவளா? மயங்கிக் கிடக்கிறாளா? யாராவது அவளை மந்திரத்தால் மயக்கிவிட்டார்களா? மாயவர்களுக்கு எல்லாம் பெரிய மாயன், மாதவன்,வைகுந்தன் என்று அவன் பல நாமங்களை சொல்லிப்பாடுவோம் அவளை சீக்கிரம் எழுப்பு... ஆண்டாள் இது போல கூப்பிட்டு நம்மை எழுப்பினால் அதற்காகவே தூங்கலாம் போல.

மார்கழி 9 ஆம் நாள் பாடல்.

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்.

10. நோற்றுச் சுவர்க்கம்...

#ஆண்டாள்_பெருமை

ஆமா இவரு பெரிய பணக்காரரு அம்பானிக்கே கடன் கொடுத்தவரு மாதிரி பேசறாரு.. பொதுவாக நாம் கிண்டலாக பேசும் போது ஒப்பீடு இது போல மிகைப்படுத்தலாக இருக்கும்.. அதாவது அவரே பெரியவர் அதை விடவா நீ பெரியவன் என்னும் தொனியில் கூறுவோம்.. அதிகாலை எழும்பாமல் உறங்கிக் கிடக்கும் பெண்ணிற்கு ஆண்டாளும் ஒரு ஒப்பீடு தருகிறார்..

சொர்க்கம் புகவேண்டும் என்பதற்காக விரதம் இருக்கின்ற பெண்ணே.. நீ கதவைத்தான் திறக்கவில்லை ஒரு குரல் கொடுத்தாவது பதில் பேசலாமே.! நறுமண துளசியை மாலையாய் அணிந்திருக்கும் நாராயணன் பெருமையை ஊர் மெச்ச போற்றித் துதித்தால் அவர் பேரின்பத்தை நமக்கு பரிசாகத் தருவார்.. அதை விட்டுவிட்டு சிற்றின்பமான இந்த உறக்கம் தேவையா.?

அன்று யமனிடம் வாய் தவறி வரம் கேட்டு தூக்கத்தை வரமாக பெற்றானே கும்பகர்ணன் அவனிடம் நீ தூக்கத்தை பரிசாகப் பெற்றுக் கொண்டாயா.? உனக்கும் அவனுக்கும் போட்டியா? அல்லது அவன் உன்னிடம் தோற்று விட்டானா.? எல்லையற்ற உன் சோம்பலை துறந்துவிடு...

வா வந்து இவ்வாசல் கதவை திறந்துவிடு.. என உறங்குபவளை கும்பகர்ணனோடு ஒப்பிடுகிறார்.எனக்கென்னவோ ஆண்டாள் பாடினால் கும்பகர்ணனே எழுந்து வந்து விடுவான் என்றே தோன்றுகிறது.

மார்கழி 10 ஆம் நாள் பாடல்..

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால்
பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த
கும்ப கருணனும் தோற்றும் உனக்கே
பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற
அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

11. கற்றுக் கறவை...

#ஆண்டாள்_பெருமை

இடையோ இல்லை.. இருந்தால் முல்லைக் கொடிபோல் மெல்ல அசையும்.. என எம்.ஜி.ஆர் படப் பாடலையும், உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா வண்ணக் கண்ணல்லவா இல்லை என்று சொல்வதுந்தன் இடை அல்லவா.. மின்னல் இடை அல்லவா..! சிவாஜிப் பட பாடலையும் கேட்டிருப்போம்.

இஞ்சி இடுப்பழகி, ஒல்லிக் குச்சி உடம்புக்காரி,போன்ற தமிழ்த் திரைப்படப் பாடல்களில் சொல்லப்படும் உவமைகள் போல ஆண்டாள் தன் பாடலில் இடை பற்றி குறிப்பிடுகிறார். ஆண்டாளின் உவமையில் அவளது இடை பாம்பின் படம் போல என்கிறார். சரேலென விரியும் போது தான் அது தெரியும் அதற்கு முன் அது இருக்கிறதா என்பதே தெரியாது என்கிறார். எவ்வளவு அழகான கற்பனை பாருங்கள்.

கன்றுகளோடு கறவைப் பசுக்களும் கூட்டமாக நிற்க பாலைக் கறந்து கொண்டிருக்கும் ஆயர் குலத்தினர் பாலைக் கறப்பதிலும் தம்மை எதிர்க்கும் பகைவர் குல வேரை அறுப்பதிலும் வல்லவர்கள் அக்குலத்தில் பிறந்த தங்கக் கொடியே..புற்றிலிருக்கும் பாம்பின் படம் போன்ற அல்குல் உடைய மெல்லிடையாளே.. மயில் போன்ற பெண்ணே.. 

உன் தோழியர் யாவரும் உன் வீட்டு வாசல் வந்து கார் முகில் வண்ணனின் புகழைப் பாடிக் கொண்டிருக்கிறோம்..எதற்கும் அசராமல் உனக்கு ஏனிந்த உறக்கம்? செல்வச் சீமான் பெற்ற செல்லப்பெண்ணே நீ அசையாமல் படுத்துறங்கும் நோக்கமென்ன? எழுந்திடுவாய் எம்பாவாய் என அழைக்கிறார்.

அல்குல் என்றால் பெண்ணின் பிறப்புறுப்பு அது தான் நாகத்தின் விரித்த படம் போல இருக்கும் இன்றைய உரையாசிரியர்கள் நாகரிகம் கருதி அல்குலை இடையாக்கி விட்டார்கள் என்ற கருத்தும் இருக்கிறது.. எப்படியோ இரண்டிற்கும் அந்த உவமை அழகாகப் பொருந்துகிறதே!

அரவமின்றி உறங்கும் பெண்ணிற்கு அந்த அரவம் விரிக்கும் படத்தையே உவமையாகச் சொன்ன ஆண்டாளின் பாசுரம் பக்தி இலக்கியத்தின் மகுடி... இதற்கு மயங்காத பாம்புகள் ஏது.! (அரவம் = பாம்பு & ஓசை)

மார்கழி 11ஆம் நாள் பாடல்..

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றம்ஒன் றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே
புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வபெண் டாட்டிநீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

12. கனைத்து இளம்...

#ஆண்டாள்_பெருமை

நாட்டில் பாலும் தேனும் ஆறாக ஓடுகிறது என்னும் சொற்றொடரை சுபிட்சத்திற்கும் செழிப்பிற்கும் உதாரணமாகச் சொல்லுவார்கள். ஆண்டாள் வீட்டுச் சுபிட்சத்திற்கு இதை ஒப்பிடுகிறார்.. போகிற போக்கில் தாய்ப்பாசம், பேரன்பு இவையெல்லாம் மிருகங்களுக்கும் உண்டு என அழகாக சித்தரிக்கும் அவரது கற்பனையைப் பாருங்கள்..

தங்கள் கன்றுகளின் குரல் கேட்ட எருமைகள் தாய்ப்பாசம் பொங்க தம் கன்றுகளை நினைத்து தம் மடியில் இருந்த பாலை யாரும் கறப்பதற்கு முன் தாமாகவே சுரக்கின்றன.. அப்படி சுரந்த பால் வீடெங்கும் வெள்ளமென ஓடி வீடே பால் சகதியாக உள்ளது.. இத்தனை பால் தரும் செழிப்பான மாடுகள் பல வைத்திருக்கும் செல்வந்தனின் தங்கையே..

மார்கழி மாதம் பெய்யும் அதிகாலை பனியின் துகள்கள் எங்கள் தலைமீது படிந்திருக்க நாங்கள் உன் வீட்டருகே வந்து உனக்காக நிற்கின்றோம்.. இராவணனை வதம் செய்த இராமன் பேர் பாடுகிறோம் நீயும் வந்து வாய் திறந்து பாடு.. வா கதவைத்திற.. உனக்கு ஏனிந்த பெரு உறக்கம்.. நீ இப்படி உறங்குவது அக்கம் பக்கத்திலிருப்போர்க்கு எல்லாம் தெரிந்துவிட்டது எழுந்து வா பெண்ணே..

இந்த வர்ணனையைப் படித்ததும் ஒரு பால் பண்ணைக்குள் சென்று வந்த உணர்வு ஏற்படுகிறது அல்லவா! பால் மணம் கூட மூக்கில் உணர முடிகிறது.. இது பாலின் மணம் மட்டும் அல்ல ஆண்டாள் கண்ணன் பால் கொண்ட காதலின் மணம்.. ஆம் அது கறந்த பாலைப் போல் அவ்வளவு புனிதமானது.

மார்கழி 12ஆம் நாள் பாடல்..

கனைத்துஇளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்
அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

13. புள்ளின்வாய் கீண்டானை...

#ஆண்டாள்_பெருமை

சரக்கிருக்கு ரபபப்பப்பா... முறுக்கிருக்கு ரபபப்பப்பா... இந்த வரிகள் ராஜா கைய வச்சா அது ராங்காப் போனதில்ல பாடலிலும், சரக்கிருக்கு.. முறுக்கிருக்கு.. எனக்கெதுக்கு மனக் கவலை.. இந்த வரிகள் புதுச்சேரி கச்சேரி எக்கசக்க பார்ட்டி ஒண்ணு புடிச்சேன் பாடலிலும் வரும்.. முதல் பாடல் அபூர்வ சகோதரர்கள் படம் இரண்டாவது சிங்கார வேலன் படம்.

இரண்டுமே கமல் படம் இரண்டையும் எழுதியவர் கவிஞர் வாலி.. நான் கூட இவ்வளவு பெரிய கவிஞர் வாலிக்கு இந்த இருவரிகளை விட நல்ல கற்பனை வரவில்லையா என நினைத்ததுண்டு.. ஆண்டாளின் பாசுரம் படித்த பின்பு அதற்கு விளக்கம் கிடைத்தது.. ஆண்டாளும் ஒரே வார்த்தையை வேறு வேறு பாசுரங்களில் பயன்படுத்தியுள்ளார்.. அது மார்கழி 6ஆம் நாள் பாடல்

6 ஆம் நாள் பாசுரத்தின் முதல் அடியில் புள்ளும் சிலம்பினகாண் என்னும் அதே வார்த்தையை 13 ஆம் நாள் பாசுரத்தின் 5 வது வரியில் அப்படியே உபயோகிக்கிறார்.. கொக்கின் வடிவெடுத்து வந்த அசுரன் பகாசூரனின் வாயைப் பிளந்தவன்.. ராவணனின் பத்துத் தலைகளை கிள்ளியெறிந்தவன் அவன் புகழ்பாடி மற்ற பெண்கள் எல்லாம் நோன்பிருக்க சென்று விட்டனர்.

வெள்ளி முளைக்க வியாழன் மறைய கூட்டில் இருக்கும் பறவைகளும் சப்தம் எழும்புகின்றன போதரிக் கண்ணுடைய பெண்ணே.. போதரிக் கண் என்றால் வண்டமர்ந்த தாமரைப்பூ போன்ற கண்களாம்.. கரு விழிகளை வண்டாகவும் கண்ணை தாமரையாகவும் உவமைப் படுத்துகிறார் ஆண்டாள். இம் மார்கழி நன்னாளில் எங்களோடு வந்து குளிரக்குளிர குளிக்காமல் ஏன் இப்படி..

பள்ளி கொண்டு உறங்குகிறாய்.? நீ உறங்குகிறாயா அல்லது கள்ளத்தனமாக உறக்கம் வருவது போல நடிக்கிறாயா.? எங்களுடன் வந்து சேர்ந்து கொள் எம்பாவாய்.. என செல்லமாகவும் உறங்குபவளை அதட்டுகிறார் ஆண்டாள். ஆண்டாளின் திருப்பாவை ஒரு டூ-இன்- ஒன் அதில் தான் இராமாயணம் மகாபாரதம் இரண்டையும் ஒன்றாகப் படிக்கலாம்.

மார்கழி 13 ஆம் நாள் பாடல்...

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

14. உங்கள் புழக்கடை...

#ஆண்டாள்_பெருமை

லேட்டஸ்ட் பாத்ரூம் ஃபிட்டிங் சார் கிட்டத்தட்ட 20 இலட்சம் செலவாச்சு ஒரு ஸ்டீம் பாத் & மல்டி ஷவர் சேம்பர் பிக்ஸ் பண்ணியிருக்கேன் வாட்டர் பிரஷர்ல தெறிக்கும் பாருங்க அதுல குளிக்கிறதே தனி சுகம் பைப் எல்லாம் ஜாகுவார் கம்பெனி.. குழந்தைகளுக்கு ரிவால்விங் பாத்டப் கூட ஒண்ணு இருக்கு.. இது இன்றைய வசதி படைத்தவர்களின் குளியலறை.

ஆனால் 20இலட்சமல்ல 20 கோடி கொடுத்தாலும் கிட்டாத நேச்சுரல் பாத் ரூம் ஆண்டாள் காலத்தில் பாருங்களேன் வீட்டு பின் புறத்தில் அமைந்துள்ள குளம் அங்கு செந்தாமரைகள் மலர்ந்தும் அல்லிகள் மொட்டாகவும் காணப்படுகிறது. மார்கழி என்பதால் நிச்சயம் சில்லென்ற நீர்  இப்படி ஒரு குளத்துக் குளியல் மல்டி ஷவர் தருமா.? அந்த பெண்ணை எழுப்புகிறார்..

பெண்ணே காலையில் சூரியன் உதித்து தாமரை மலர்ந்து அல்லி மூடி விட்டது வெண்ணிறப் பற்கள் மின்ன காவியணிந்த துறவிகள் அவர்களின் ஆன்மிகக் கடனான சங்கு முழங்க கிளம்பிவிட்டனர். உங்களையெல்லாம் நானே வந்து எழுப்புவேன் என ஜம்பமாக வாயாடிவிட்டு நீயே இப்படி தூங்கலாமா? இப்படி உறங்க உனக்கு வெட்கமாக இல்லை.. எழுந்து வா

நீளக்கைகள் இரண்டில் சங்கும் சக்கரமும் தரித்திருக்கும் தாமரைக் கண்ணனை அவரின் அழகை அவர் பெருமையை வாயாரப்பாடலாம் வா.
மலர் மலர்வதை வாய் திறப்பு எனவும் மொட்டு மூடிக்கொள்வதை வாய் மூடி எனவும் ரசனையோடு ஆண்டாள் விளக்கியிருப்பதை பாருங்கள்.

இத்தனை நூற்றாண்டுகளுக்கு பின்னும் மனிதர்கள் திறந்த வாய் மூட மறந்து திளைத்துக் கிடக்கிறார்கள் ஆண்டாளின் தமிழ் குளத்தில்.

மார்கழி 14 ஆம் நாள் பாடல்...

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

15. எல்லே இளம்கிளியே...

#ஆண்டாள்_பெருமை

இதற்கு முன் வந்த 14 பாடல்களில் கோபியரை எழுப்பிய ஆண்டாள் இந்த 15 வது பாடலிலிருந்து அவர்களோடு உரையாடுகிறார். ஒருவரின் குணநலன்கள் பற்றி அறிந்து நெடுநாள் பழகிய இருவர் பேசும் பேச்சில் நக்கலும் நையாண்டியும் தொனிக்கும் அல்லவா.. "நீ யாருன்னு எனக்குத் தெரியும் நான் யாருன்னு உனக்குத்தெரியும் இந்த டகால்டி வேலை எல்லாம் எங்கிட்ட வேணாம் மகனே"என்று கவுண்டமணி சொல்வது போல.

பொதுவாக இருவர் பேசிக் கொண்டிருப்பதை நாம் கவனிப்பதில்லை நிறைய சானல்களில் ரிமோட்டை தேட வைப்பது சுவாரஸ்மில்லாத பேச்சுகள் தான்.. ஆண்டாளின் இந்த பாசுரத்தின் விளக்கத்தை மட்டும் வட்டார வழக்கான சென்னைத் தமிழில் இருவர் பேசிக் கொள்வதைப் போல பார்க்கலாமா எளியவர்களின் மொழியில் படிக்கஒரு சுவாரஸ்யம் கிடைக்கும்

எயுப்புறவங்கோ : இந்தாம்மே கிளி கணக்கா இர்க்குற பொண்ணே ! எம்மாநேர்ந்தான் தூங்கிகினு இர்ப்ப?

படுத்துனு இர்க்கற பொண்ணு : ஏ.. இன்னா அல்லாரும் கீச் கீச்னு கொரல் வுடுறீங்க? கம்முனு கிடங்கோ தோ வந்துரேன்....

எயுப்புறவங்கோ : நீ மெய்யாலுமே படா கில்லாடி தாம்மே நீ இன்னா பேசுவேன்னு எங்க அல்லாருக்கும் மின்னாடியே தெர்யும்.. வுன் வாய்ல இர்ந்து இன்னா வரும்ன்னும் தெர்யும்..

படுத்துனு இர்க்குற பொண்ணு : ஆரு நானா கில்லாடி.... நீங்க தாம்மே படா கில்லாடிங்கோ!  உங்க அல்லாரையும் கண்டுகினு தான் நான் கத்துகினு இருக்கேன்.....

எயுப்புறவங்கோ : தோடா... எயுந்து வராம பட்த்துகினே சொம்மா பேசிகினே இர்க்கே! சுகுரா எயுந்துரும்மே! விர்தம் இர்க்குறத வுட அப்டி உனுக்கு இன்னா பெர்ய வேல கீது?.

படுத்துனு இர்க்குற பொண்ணு : அல்லாரும் வந்துகினாங்களா?

எயுப்புறவங்கோ : அக்காங் ! அல்லாரும் வந்துகினாங்கோ!வோணும்ன்னா நீயே வந்து கரீட்டா கீதான்னு எண்ணிக்கோ....

மதுரா புரியில பெர்ய ஆனையவே பூன மேறி மிறிச்சி கொன்னவரு... எதுக்குரவன் நெஞ்சுல இர்க்குற மஞ்சா சோத்த எட்த்து அவன் ஆணவத்த உண்டுல்லைன்னு ஆக்குனபரு..அவர பத்தியே பாடினு இர்ப்போம் எயுந்து வா கண்ணு.. 

சென்னைத்தமிழ் பேசுபவர்கள் ஆண்டாளைப் படித்தால் இப்படித்தான் பேசுவார்களா எனக் கேட்டால் இல்லை அவர்கள் நல்ல தமிழுக்கு மாறி விடுவார்கள் என்பேன்.. ஏனெனில் பக்தியில் தமிழ் வளர்த்த தங்கத் தாரகை இதய தெய்வம் புரட்சித்தலைவி நிரந்தர முதல்வர் எங்கள் அம்மா ஆண்டாள் அருளிய பாசுரங்கள் அப்படி.

மார்கழி 15ஆம் நாள் பாடல்...

எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார்போந்து எண்ணிக்கொள்
வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.

16. நாயகனாய் நின்ற...

#ஆண்டாள்_பெருமை

பெரிய மனிதர்களை சந்திக்கச் செல்லும் போது அவர்களது செக்யூரிட்டிகளுக்கு நாம் பெரும் மரியாதை தருவோம் கிட்டத்தட்ட அந்த வி.ஐ.பி.யாகவே அவரும் பிகு செய்வார். இந்த பூசாரிகள் வரமளித்தால் தான் நீங்கள் கடவுளையே காண முடியும். இவ்வளவு ஏன் ஏ.வி.எம் ஸ்டுடியோ வாட்ச்மேன் காலில் விழுந்து அனுமதி கேட்ட எத்தனையோ பேர் இன்று மிகப் பெரிய பிரபலங்கள் ஆகியிருக்கின்றனர்.

இந்தப் பாடலில் விழித்தெழுந்த பெண்கள் நந்தகோபனின் மாளிகை வாசலுக்கு வந்து வாயில் காப்போனிடம் கேட்கிறார்கள் எங்கள் நாயகன் நந்தகோபனின் கொடி பறக்கும் தோரண வாயிலை காவல் காப்போனே ஆயர்குலப் பெண்கள் எங்களுக்கு வேண்டியதை தருவேன் என நேற்றே சொன்னார் மாய மணிவண்ணர் அவரை எழுப்ப வந்துள்ளோம்.

நோன்பிருந்து நீராடி தூய்மையாக வந்துள்ளோம் நாங்கள் வந்த இந்த நல்ல காரியம் நிறைவேற எங்களை உள்ளே சென்று பாட விடு அழகிய இம் மணிக்கதவின் தாழ்ப்பாளை திறந்துவிடு.. இந்த காலத்தில் இவ்வளவு இளம்பெண்கள் கூட்டமாகப் போனால் இப்படியெல்லாம் பாட வேண்டாம் வாட்ச்மேனே வாயில்  ஜொள்ளு விட்டு கதவுகளைத் திறந்து இருப்பான்.

ஆண்டாளின் பாடல்களில் தமிழில் அருகி மறைந்த பல தமிழ் வார்த்தைகளை காணலாம். உதாரணமாக கொண்மூ, எழினி என்ற தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தம் என்னவென்று தெரியுமா? இவை இரண்டுமே மேகத்தை குறிக்கும் தமிழ்ச் சொற்கள்.. இன்று மேகம் முகில் போன்ற வார்த்தைகள் மட்டுமே வழக்கில் உள்ளன.

இந்தப் பாடலிலும் நென்னல் என்ற வார்த்தையைக்  குறிப்பிடுகிறார். நென்னல் என்றால் நேற்று என அர்த்தம், மாணிக்கவாசகரின் திருவெம்பாவையிலும் இந்த வார்த்தை வருகிறது. ஆண்டாள் எழுதிய தமிழ் நென்னலில் மட்டுமன்று என்றும் கன்னல்.

மார்கழி 16 ஆம் நாள் பாடல்...

நாயக னாய்நின்ற நந்தகோ பன்உடைய
கோயில்காப் பானே கொடித்தோன்றும்
தோரண வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ
வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.

17. அம்பரமே தண்ணீரே...

#ஆண்டாள்_பெருமை

நிச்சயிக்கப்பட்ட அத்தை மகள் திருமணத்திற்கு முன் நம் வீடு வரும் போது எடுத்தவுடன் அத்தானை கேட்காமல் மாமா சவுக்கியமா அத்தை சவுக்கியமா நாத்தனார் சவுக்கியமா என பைபாசில் பிரயாணித்து அத்தான் என்னும் ஊருக்கு வருவதற்குள் வெட்கம் பிடிங்கித்தின்னும். அதுவும் அவர்கள் சரி சரி இதுக்கு தானே இவ்வளவு சுத்தி வந்தே..எனக் கேட்கும் போது..

அங்கே கையும் களவுமாய் பிடிபட்ட நிலை ஏற்படும் இருப்பினும் அதெல்லாம் சுகமான வலி.. இங்கும் ஆண்டாள் ஒவ்வொருவராக எழுப்பி கடைசியில் கண்ணன் என்கிறார்.. அதிலும் நந்தகோபா எழுந்திரு யசோதா எழுந்திரு என எல்லாரையும் எழுப்பி கண்ணனை மட்டும் பலராமா அப்படியே உன் தம்பி கண்ணனையும் எழுப்பு என்கிறார் நாணம் ததும்ப.. அதுமட்டுமின்றி..

உண்ண உணவு, உடுக்க உடை, குடிக்க நீர் இம்மூன்றும் மனிதனுக்கு அவசியம் வேண்டும் என உலகில் முதன் முதலில் சொன்னவர் ஆண்டாளாகத் தான் இருக்க வேண்டும்.இதைக் கேட்ட ஆண்டாள் இருக்க இடம் மட்டும் ஏன் கேட்கவில்லை..? உலகில் சொந்தமாக சில சதுர அடிகள் நிலம் கிடைப்பதை விட உலகத்தை ஓங்கி தன் திருவடிகளால் அளந்த நாராயணன் காலுக்கு கீழ் ஒரிடம் கிடைத்தால் அதுவே அவருக்கு போதும்.

மார்கழி 17 ஆம் நாள் பாடல்...

அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடஅறுத்து ஓங்கி உளகுஅளந்த
உம்பர்கோ மானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்.

18. உந்து மதகளிற்றன்...

#ஆண்டாள்_பெருமை

அழகானப் பெண்ணைப் பெண் வர்ணிக்கும் போது எப்படி இருக்கும்? ஆண் கவிஞர்களை விட அழகிய உவமையோடு பெண் கவிஞர்கள் இன்னொரு பெண்ணை பாராட்டுவதெல்லாம் அரிதினும் அரிது.. அதுவும் இன்னொருத்தி அழகு என்றெல்லாம் அவ்வளவு எளிதில் புகழ மாட்டார்கள்.. ஆனால் ஆண்டாள் இந்தப்பாடலில் நந்தகோபரின் மருமகளை எழுப்புகிறார் இப்படி.

மதங் கொண்ட யானையை மோதித் தள்ளும் ஆற்றலும் போரில் பின் வாங்காத வலிமை மிகு தோளும் உடைய  நந்தகோபன் மருமகளே.. நப்பின்னையே.. நறுமணம் மிகுந்த கூந்தல் காரியே வந்து கதவைத் திற.. கோழிகள் கூவி பொழுது புலர்ந்துவிட்டது மல்லிகைப்பூ கொடி பந்தலாக படர்ந்திருக்க அதற்குள் வசிக்கும் குயில்கள் பல முறை கூவிவிட்டன.
பந்தை தாங்கிய கைபோல் கச்சிதமாய் விரலழகு கொண்டவளே.. 

உன் கணவன் பேர் பாட வந்துள்ளோம் உன் செந்தாமரைக் கைகளில் வளையல் குலுங்க மகிழ்வோடு வந்து கதவைத்திற. முகத்தை அல்லது விழிகளை தாமரை மலருக்கு ஒப்பிடுவார்கள் ஆனால் ஆண்டாள் தாமரை போன்ற கைகள் என்கிறார்..பந்தார் விரலி என்கிறார் மணம் வீசும் கூந்தல் என்கிறார் கூந்தலுக்கு மணம் இருக்கிறதோ இல்லையோ ஆண்டாளுக்கு வஞ்சனையின்றி இன்னொரு பெண்ணை போற்றுகின்ற மனம் இருக்கிறது.

இந்த 18ஆம் நாள் பாடலின் இன்னொரு விசேஷம் இது இராமானுஜருக்கு மிகப் பிடித்த பாசுரம். இராமானுஜரே தீவிர திருப்பாவை விசிறி எவரும் அவரை இராமானுஜர் என்றழைப்பதை விட திருப்பாவை ஜீயர் என்று அழைப்பதையே அவர் மிக விரும்பினார். இன்றும்  இந்தப் பாடலை மட்டும் கோவில்களில் இரு முறை பாடுவது வழக்கம்.. ஆண்டாளின் தமிழை இரு முறையல்ல கோடி முறை பாடினாலும் கேட்டாலும் திகட்டவே திகட்டாது.

மார்கழி 18 ஆம் நாள் பாடல்...

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடைதிறவாய்
வந்துஎங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்துஆர் விரலிஉன் மைத்துனன் பேர்பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளைஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

19. குத்து விளக்கெரிய...

#ஆண்டாள்_பெருமை

திருப்பாவை முழுவதும் ஆண்டாள் ஒவ்வொருவரையும் தூக்கத்திலிருந்து எழ்ந்துரு அஞ்சலி எழ்ந்துருன்னு அஞ்சலி பாப்பாவை எழுப்புவது போல் கத்தாமல் அழகுத் தமிழில் பாடி எழுப்புகிறார். ஆண்டாளின் தேன் தமிழுக்கு மயங்கி தினமும் எழுகிறார்கள்.ஆனால் அவர்கள் எல்லாரும் ஒரு சுகமான சுகந்தமான உறக்கத்தில் இருப்பதாக ஒவ்வொரு நாளும் வர்ணிக்கிறார்.

இன்று நப்பின்னையையும் கண்ணனையும் ஒன்றாக எழுப்புகிறார்.. அவர்கள் தூங்கும் அறையை பாருங்கள்..வாசல் நிலை விளக்குகள் நின்றெரியும் உறுத்தாத வெளிச்சம்,யானை தந்தத்தில் செய்த டபுள் காட் கட்டில்,மேலே அன்னப்பறவையின் சிறகு,இலவம் பஞ்சு,செம்பஞ்சு எல்லாம் நிரம்பிய மென் மெத்தை, அழகிய வெண்ணிற திரைச்சீலைகள், ஊடுருவும் மார்கழிக் குளிர்.

இத்தனைக்கும் நடுவே கொத்து கொத்தாய் நறுமண மலர்களை சூடிக் கொண்டுள்ள நப்பின்னை படுத்திருக்க இருக்கிற மென்மெத்தை போதாது என அவள் மார்பகங்களில் தலை சாய்த்து உறங்கும் கண்ணா!நீவாய் திறந்து பேசு அழகிய பெரிய மையிட்ட விழிகளுடைய நப்பின்னையே நீயாவது உன் கணவனின் பிரிவை சிறிது நேரம் பொறுக்கலாமே.. அவனை எழுப்பிவிடு.

நீ இப்படி இருப்பது நியாயமும் இல்லை நல்ல குணமும் இல்லை. குளிர், மெல்லிய ஒளி, தந்தக்கட்டில், கொத்து மலரின் நறுமணம், இலவம் பஞ்சு, இளம்பெண் நெஞ்சு ஆஹா...! கண்ணன் தூங்குவது போல இப்படி ஒரு சுகமான தூக்கத்திலிருந்து நாமெல்லாம் எழுந்திருப்பதே கஷ்டம். அதையும் மீறி எழும்பியது ஆண்டாளின் பாசுர இனிமையில் என்பதே உண்மை.

மார்கழி 19 ஆம் நாள் பாடல்...

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடம் கண்ணினாய் நீஉன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவுஆற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.

20. முப்பத்து மூவர்...

#ஆண்டாள்_பெருமை

திருப்பாவையில் பஞ்ச் டயலாக்.. ஆச்சர்யமாக இருக்கிறதா கண்ணனுக்கு ஆண்டாள் பஞ்ச் டயலாக் எழுதியிருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா புயலடிச்சு பொழைச்சவன பார்த்துருக்க இந்த பூபதி அடிச்சு பொழச்சவனை பார்த்துருக்கியா ஒரு தடவை முடிவு பண்ணிட்டா எம் பேச்ச நானே கேக்க மாட்டேன்.. நான் ஒரு தடவ சொன்னா.. கண்ணா சிங்கம் சிங்கிளாத் தான் வரும் இதற்கெல்லாம் குறைவில்லாத ஒரு பஞ்ச் ஆண்டாள் வைக்கிறார்.

கடந்த பாசுரத்தில் கட்டிலில் நப்பின்னை மார் மீது தலை வைத்து கொஞ்சம் ரொமாண்டிக்காக கண்ணன் உறங்கினார் அல்லவா.. அந்த சுகத்தில் ஒரு பாட்டுக்கே எழுந்து வந்து விட்டால் நன்றாக இருக்குமா.?ஆக இந்தப்பாடல் அவர்களை எழுப்பும் 2வது பாடல்.. இந்தப்பாடலில் அவர் கண்ணனின் வீர தீர பராக்ரமத்தை சொல்லி ஆரம்பிக்கிறார்.. இதன் உள் குத்து இவ்வளவு வீரமுள்ள ஆளு நீ பொம்பளை மார்ல சாஞ்சிகிட்டு என உசுப்பிவிடத்தான்.

முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் ஒரு பிரச்சனைன்னா சொல்லாம அங்க  ஆஜராகுரா வீரா, ஓழுக்கத்தில நீ கில்லி, துணிச்சலா அடிப்ப சொல்லின்னு ஆரம்பிச்சு வைக்குறார் பாருங்க ஒரு பஞ்ச்.. "உன் பேரைக்கேட்டாலே எதிரிகளுக்கு காய்ச்சல் வரும் தூயவனே" அடடா என்னா ஒரு பஞ்ச் என்னா ஒரு அடைமொழி! இப்படி கண்ணனை சொல்லிட்டு கொஞ்சம் "பீப்" ஒலிக்க வேண்டிய வார்த்தைகளை நப்பின்னைக்கு வர்ணனையாகச் சொல்கிறார்.

பக்தி இலக்கியங்களில் பெண்ணின் மார்பகம், பிறப்புறுப்பு பற்றியெல்லாம் சகஜமாக எழுதிய பெண்களில் ஆண்டாளும் ஒருவர்.. அக் காலத்தில் இதெல்லாம் சாதாரணம்.. இப்போது தான் கண்ணியம் இன்றி எழுதுவது எல்லாம் பெண்ணியம் எனப் பேசுகிறார்கள். செப்புக் கவசம் போல் மார்பகங்களும்,செவ்விதழ்களும் சிறு மருங்குல் தாங்கிய இடுப்பும் உள்ள நப்பின்னையே நீ எழுந்து நோன்பிற்குரிய விசிறியையும் கண்ணாடியையும்..

உன் மணவாளனிடத்தில் தந்து எங்களுக்கு அதை தரச்செய்து எங்களை நீராட விடுவாயாக என்கிறார்.. ஒன்று நிச்சயம் பாசுரத்தில் பஞ்ச் பீப் எல்லாம் 
இருப்பது தெரிஞ்சா சினிமாக்காரர்கள் இந்த பக்கம் பாய்ந்து விடும் அபாயம் இருக்கிறது.. கப்பம் செப்பம் வெப்பம் என டி.ஆருக்கும் முன்னோடியாக ஆண்டாள் இருந்து தான் ஒரு சகலகலாவல்லி என்பதை நிரூபித்து இருக்கிறார்.. யார் கண்டது அவர் காலத்தில் சினிமா இருந்திருந்தால் அதிலும் வெற்றிக் கொடி நாட்டியிருப்பார் ஆண்டாள்.

மார்கழி 20 ஆம் நாள் பாடல்....

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில்எழாய்
செப்பம் உடையாய் திறல்உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில்எழாய்
செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில்எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.

21. ஏற்ற கலங்கள்...

#ஆண்டாள்_பெருமை

கறந்தபால் அடுப்பின்றி பொங்குமா? பொங்கும் என்கிறார் ஆண்டாள். வழக்கம் போல கண்ணனுக்கு இக்காலத்து அரசியல் தலைவர்களுக்கு ப்ளக்ஸ், பேனர், போஸ்டர், ஆர்ச்சில் கொடுக்கும் அடை மொழி போல் அவர் காலத்து வாசகங்களுடன் போற்றிப் பாடிப் புகழ்ந்து எழுப்புகிறார்.

19ஆம் நாள் 20ஆம் நாள் ஆகிய இரண்டு நாட்களும் பாடிய பாசுரங்கள் கேட்டு கண்ணன் எழுந்திருக்கவில்லை.. இப்போது என்ன செய்வது? சரண்டர் தானே! அதையும் அழகான உவமையுடன் சொல்லி ஆண்டாள் அடையும் சரணாகதியைப் பாருங்கள்.

பசுவிடம் இருந்து பால் கறக்கும் போது அதன் மடியில் இருந்து பாத்திரத்தின் அடியில் வேகமாக விழும் பால் அதிவேகமாக மேலேறி பொங்குகிறது.. (இந்த உவமை நியூட்டனின் விதியை நினைவு படுத்துகிறது)அப்படியென்றால் எவ்வளவு பால்வளம்! எவ்வளவு ஆரோக்கியமான பசுக்கள். இதுபோல பல பசுக்கள் வைத்திருக்கும் நந்தகோபரின் மகனே.

உலகை காப்பவனே, பெரிய மனிதனே, அவதாரப் புருஷனே,ஒளிவடிவனே, நீ தூங்கலாமா? உன் எதிரிகள் கூட உன் பலம் அறிந்து உன்னுடன் மோத பயந்து உன் வாசல் வந்து காத்திருப்பது போல அடியவர்கள் நாங்களும் உன் வாசலில் வந்து உன்னைப் புகழ்ந்து பாட காத்து நிற்கின்றோம்.. நீ எழுந்து எமக்கு அருள் புரிவாய்.

ஆண்டாள் கோபமாய், தாபமாய், செல்லமாய், காதலாய், ஊடலாய் கண்ணனைப் பாடுபவர். எதற்கும் மசியவில்லை என்றால் படாரென்று கண்ணனின் காலில் விழுந்துவிடுவாள்.. அவள் ஆதாயத்திற்காகவும் பதவிக்காகவும் இன்றைய அமைச்சர்கள் போல் காலில் விழுபவள் அல்ல.. கண்ணன் மேல் காதலில் விழுந்தவள்.

மார்கழி 21 ஆம் நாள் பாடல்...

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன் வாசற்கண்
ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.

22. அங்கண்மா ஞாலத்து...

#ஆண்டாள்_பெருமை

ஹே.ஹே.ஹே.. இந்த பாஷா யாருக்கும் கெட்டது செய்யமாட்டான்.. தன்ன நம்பி வந்தவங்கள கைவிடவே மாட்டான்.. என்னை நம்பாம கெட்டவங்க அதிகம்.. நம்பிக் கெட்டவங்க யாருமில்லை இப்ப முடிவு பண்ணிக்கோங்க இந்த மாணிக் பாஷாவா இல்ல அந்த மார்க் ஆண்டனியா.? இப்படி பாஷா படத்தில் ரஜினி கேட்டதும் எல்லா பெரிய டான்களும் பாஷாவை கையில் முத்தமிட்டு ஏற்றுக் கொள்ளும் காட்சி நினைவிருக்கிறதா.!

அப்படி ஒரு காட்சியை ஆண்டாளும் பாசுரத்தில் வைத்திருக்கிறார் உலகின் பெரும் அரசர்கள் யாவரும் திருமால் வசம் சரணடைய அவன் காலடியில் வந்து காத்திருக்கிறார்கள் என்று. பார்த்தால் பசி தீரும்.. பாவம் தீருமா.? கண்ணனின் கண் பார்வை நம்மீது பட்டால் அது சாத்தியம் என்கிறார் அதற்கு அவனைச் சரணாகதி அடைவதைத்தவிர வேறு வழியில்லை என்கிறார் ஆண்டாளின் உவமைத் திறன் மிளிரும் மற்றொரு பாடல் இது.

அலைகள் தாலாட்ட திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார் நாரணன் அவரைக் காண உலகை கட்டியாளும் பெரிய சக்ரவர்த்திகள் அனைவரும் தங்கள் பராக்கிரமத்தை மறந்துவிட்டு அக்கடலோரம் வந்து அவன் செம்பாதங்களை தொழுது நிற்கிறார்கள். அவர்களோடு அடியவர்களாகிய நாங்களும் நிற்கின்றோம் எங்களை மெல்ல கண் திறந்து பார் கண்ணா என சொல்லி வைக்கிறார் பாருங்கள் ஒரு உவமானம்.அடடா என்ன அழகு.!

மெல்லக் கண்விழிப்பாய் கண்ணா மெல்ல மெல்ல... ஒரு கால் சலங்கை மணியின் வாய் பிளவு போல.. செந்தாமரைப் பூ மலர்வதைப் போல மெல்லக் கண் திற என்கிறார்.. எவ்வளவு அழகியல் பாருங்கள்.. சூரியனும் சந்திரனும் ஒன்றாக உதித்தது போல நீ விழித்து உன் பார்வை எங்கள் மீது பட்டால் நாங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தொலைந்து போய்விடும் என்கிறார். இது ஆண்டாள் கண்ணனை துயில் எழுப்பும் மூன்றாம் நாள் பாடல்.

எனக்கென்னவோ 3 நாட்களுக்கு முன்பே விழித்துக் கொண்ட கண்ணன் ஆண்டாளின் தமிழமுதைப் பருகுவதற்காகத்தான் தூங்குவது போல நடிக்கிறான் என்றே நினைக்கிறேன். அவன் பொல்லாத கள்வன் அல்லவா. படிக்கும் நமக்கே இவ்வளவு இன்பமென்றால் பாடு பொருளான அவனுக்கு! நிஜத்தில் கண்ணனைக் கட்டிப் போட்டது யசோதையல்ல ஆண்டாள் தான்.

மார்கழி 22 ஆம் நாள் பாடல்...

அம்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அம்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

23. மாரிமலை முழைஞ்சில்...

#ஆண்டாள்_பெருமை

சிங்கத்தை நீ காட்டுல பார்த்துருப்ப சர்க்கஸ்ல பார்த்துருப்ப டிவில பார்த்து இருப்ப படத்துல பார்த்துருப்ப நேர்ல பார்த்துருக்கிறியா பாக்குறியா பாக்குறியா என சிங்கம் படத்தில் ஹைடெசிபலில் சூர்யா பேசும் வசனம் நினைவிருக்கிறதா.! அதுபோல எந்த மீடியாவும் இல்லாத காலத்திலேயே சூர்யா போல கத்தாமல் அதிகாலையில் துயிலெழுப்பும் வகையில் மென்மையாய் ஆண்டாள் பாடுகிறார் கண்ணன் எனும் ஆண் சிங்கத்தைப் பற்றி.

அடைமழைக் காலத்தில் தன் மலைக்குகையில் உறங்கி ஓய்வெடுத்த சிங்கம் அக்காலம் முடிந்ததும் விழித்தெழுந்து கண்ணில் தீ பறக்க வீரமாய் ஒரு பார்வை பார்த்து அதன் பிடரியை சிலிர்த்து உடம்பை உதறி நெட்டி முறித்து நான்கு பக்கமும் பார்த்து பின் கம்பீரமாக கர்ஜித்து தன் குகையை விட்டு வெளியேறுவது போல காயாம்பூ நிறக் கண்ணா நீயும் எழுவாயாக.

உன் பரந்த மாளிகையிலிருந்து வெளியேறி உனக்காக போட்டு இருக்கும் சிங்காசனத்தில் அமர்ந்து நாங்கள் உன்னிடம் கேட்டதை சீர் தூக்கிப் பார்த்து எங்களுக்கு வரமருள வேண்டும் என்கிறார். இதில் ஆச்சர்யமான விஷயம் அந்த காலத்திலேயே ஆண்டாளுக்கு சிங்கங்கள் பற்றித் தெரிந்திருந்தது.. இந்தியாவின் புவியியல் அமைப்புப்படி குஜராத் மாநிலத்துக் காடுகள் தான் சிங்கங்கள் வாழ்வதற்கான சூழல் அமையப் பெற்றவை

தமிழகத்திலோ ஶ்ரீவில்லிப்புத்தூரிலோ சிங்கங்கள் வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை.. இருப்பினும் மலைக் குகையில் இருந்து வெளிப்பட்ட சிங்கம் என்பது அவர் காலத்து யாத்ரீகர்கள் யாரோ சொல்லக் கேட்டு எழுதி இருக்கலாம் இருப்பினும் அதன் பார்வை அதன் சுபாவம் இதெல்லாம் கேட்டு உள்வாங்கி கற்பனையில் இப்படி எழுதியதும் மிகுந்த ஆச்சர்யம் தான். சிங்கத்தின் பிடரி மயிர்க்கு வேரி மயிர் எனப்பெயர்.

அது வேர்க்கும் போது ஏற்படும் அரிப்பில் தான் அது தலையை சிலிர்க்குமாம்.. சிங்கக் கூட்டத்து தலைவனை அதன் பிடரி மயிர் மணத்தை கொண்டு தான் பிற சிங்கங்கள் தெரிந்து கொள்ளுமாம்.. இந்த அறிவியல் எல்லாம் தாண்டி ஆண்டாள் கண்ணனை சிங்கம் எனப்பாட நரசிம்ம அவதாரம் தான் இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கும். அவர் ஓங்கி அளந்தா உலகமே மூன்றடி தானே.

மார்கழி 23 ஆம் நாள் பாடல்...

மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் 
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி
மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்துஇருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

24. அன்று இவ்வுலகம்...

#ஆண்டாள்_பெருமை

இப்பாடலில் ஆண்டாள் கிருஷ்ணலீலைகளையும் பிற அவதாரங்களையும்  அவர் செய்த வதங்களையும் போற்றிப் பாடுகிறார். சண்டைக்கு பாட்டா.? சென்னை குப்பங்களில் பாட்டுப் பாடிக் கொண்டு போடும் குஸ்திச் சண்டை இருந்தது. சண்டையிடுபவர் தன்னைப்பற்றி பெருமையாகப் பாடிக் கொண்டே சண்டையிடுவார்கள். இது மதுரைப் பகுதிகளிலும் சிலம்புச் சண்டையில் உண்டு. நான் தான் உங்கொப்பன்டா, நல்லமுத்து பேரன்டா..   

வெள்ளிச் சிலம்பெடுத்து விளையாடப் போறேண்டா எனத் தொடங்கும் பாடல் கேட்டு இருப்பீர்கள்.. பெருமாளின் அவதாரச் சண்டைகளை பிறர் செருக்கை அழித்தசெயலை அப்படியே ஒரு மெட்ராஸ் குப்பத்து ஆள் ஒருத்தர் தன் தலைவனை பார்த்து அவர் அருமை பெருமையை புகழ்ந்து பாடினா எப்படி இருக்குமோ அப்படி இந்தப்பாடலை யோசித்தேன் அட இந்தத் தமிழிலுமே இப்பாடல் படா சோக்காகீதுப்பா.

அன்னிக்கு ஒரு தபா காலாலெயே ஒல்கத்த அள்ந்தவுரே! உன் காலத் தொட்டு கும்புட்டுக்றோம்.. சிலோனுக்கு போயி அங்க ராபணன் கதய முட்ச்சவரே! உனுக்கு இர்க்குற தில்ல நென்ச்சு பெர்மப்படுறோம்.. சனியன் சகடய எட்டி மிறிச்சவரே உன்ய புகய்ந்து பாடுறோம்.. கன்னுக்குட்டி மேறி வேசங் கட்டிகினு வந்த வத்சாசுரன அப்டியே கபால்ன்னு கால புட்ச்சு தூக்கி

பக்கத்துல மரம் மேறி வேசம்கட்டி நின்னுகினு இர்ந்த கபித்தாசுரன் மேல்ய விசிறி அட்ச்சி ஒர்யே கல்லுல ரெண்டு மாங்கா அட்சா மேறி ரெண்டு பேரியுமே காலி பண்ணவரே! உன் பாதத்தில மாட்டினு இருக்குற வீரகழல தொட்டு கும்புட்டுக்றோம்: கோகுலத்துல  குடபுட்ச்சது கணக்கா அப்டியே ஏக் தம்முல அலேக்கா மலய தூக்கி மக்கள காப்பாத்ன கோவர்த்தனரே.! உன் பாசமான கொண்த்த நென்ச்சு பெர்மப்படுறோம்!

உனுக்கு எதிரியா எப்டியாப்பட்டவன் வந்து நின்னாலும் கெலிக்குற உன் வேல் கம்ப புகயறோம்  இப்டி ஒன் அல்லா பெர்மயயும் வீர தீரத்தயும் பறயட்ச்சு பாடிகினு இர்க்கதான் இங்க வந்தோம்.. எங்க மேல இர்க்கம் காட்டி ஒன் அருள கொட்த்துடு சாமி... ஆண்டாளம்மா எம்மா அயகா சொல்லிக்கீறாங்க இல்ல..!  நாளிக்கு பாக்கலாம்... வர்ட்டா..

மார்கழி 24 ஆம் நாள் பாடல்...

அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி
கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

25. ஒருத்தி மகனாய்...

கவிஞர் கண்ணதாசன் கண்ணன் மீது அபிமானம் கொண்ட ஆண் ஆண்டாள்  கண்ணனை சிலாகித்தவர் முத்தையா என்னும் தன் இயற்பெயரைக்  கண்ணதாசன் என மாற்றிக்கொண்டவர். தனித்துவமான கவிதைகள் பல எழுதியவர் ஆண்டாளின் வரிகளையும் உரிமையுடன் தன் பாடலில் எடுத்துக் கொண்டார்.. எம்.ஜி.ஆர் படமான தாய் சொல்லைத் தட்டாதே படத்தில் இடம் பெரும் பாடலில் ஆண்டாளின் இப் பாசுர வரிகள் உள்ளது.

ஒருத்தி மகனாய் பிறந்தவனாம்... என்ற பாடல் இந்தப் பாடல் கவிஞரின் சொந்த வாழ்க்கைப் பற்றிய பாடல் என்போரும் உண்டு. முத்தையா என்ற கண்ணதாசன் பெற்ற தாய் தந்தையரால் சுவீகாரம் கொடுக்கப்பட்டவர்.. அவர் ஒருத்தி மகனாகப் பிறந்து ஒருத்தி மகனாக வளர்ந்தவர் என்பார்கள் எது எப்படியோ கண்ணனது வாழ்வும் கண்ணதாசன் வாழ்வும் ஒன்றுபோல அமைந்தது விட்டது ஆச்சரியம் தான். இப்போது ஆண்டாளுக்கு வருவோம்.

தாய்மாமன் கம்சனால் சிறைவைக்கப்பட்ட தேவகி என்னும் ஒருத்திக்கு மகனாகப் பிறந்து அதே இரவில் யமுனையைக் கடந்து யசோதையிடம் அடைந்து அந்த ஒருத்தியின் மகனாக மறைவாக வளர்ந்தவனே.. நீ உயிருடன் இருப்பது தெரிந்து கஞ்சன் வயிறு எரிவது போல கம்சன் வயிறு எரிய அவன் இழைத்த தீங்குகளை தவிடு பொடியாக்கினாய்.. வானுக்கும் பூமிக்கும் நெடுந்துயர்ந்த திருமாலே உன்னை நினைத்து உருகினோம்.

நாங்கள் விரும்பிய பறையை அருளினால் அதையிசைத்து உன் வீரத்தையும் செல்வத்தையும் வாயாரப் பாடி எங்கள் வருத்தம் தொலைத்து மகிழ்வோம். கண்ணனை வாயாரப்பாடினாலே வருத்தம் தொலையுமாம். கண்ணனின் விளம்பரத் தூதுவரான ஆண்டாள் எல்லா பாசுரத்திலும் சொல்வது ஒன்று தான். கண்ணனை நினைத்து அவன் புகழ் பாடி சரணாகி துதித்தால் உங்கள் "கீர்த்திக்கு நான் கேரண்டி" என உத்திரவாதம் அளிக்கிறார் ஆண்டாள்.

தாய் சொல்லைத்தட்டாதே என்ற படத்தில் வரும் கவிஞரின் பாடல் MGR க்கு எழுதியது.. ஆனால் பாடலின் அந்த வரிகள் அப்படியே கண்ணனுக்கும் பொருந்தும்படி கவிஞர் எழுதியிருப்பதை கேட்க கீழுள்ள லிங்க்...

மார்கழி 25 ஆம் நாள் பாடல்...

ஒருத்தி மகனாய்ப் பிறந்துஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

26. மாலே மணிவண்ணா...

#ஆண்டாள்_பெருமை

மனிதர்கள் கடவுளிடம் வேண்டும் போது என்ன கேட்பார்கள்? பி.எம்.டபிள்யூ கார், பெரிய பங்களா,  தங்கம், வைரம், கோடி கோடியாய் பணம், பெயர், புகழ், நீண்ட ஆயுள் , தோட்டம் துரவு, நிறைவான செல்வம் என அவர்கள் லிஸ்ட் பெரிது. ஆனால் ஆண்டாள் இவற்றில் ஒன்று கூட கேட்கவில்லை! அவளது லிஸ்ட்டில் இதெல்லாம் தேவைப்படவில்லை! அதை படிப்போமா.

மணிவண்ணா.. இந்த மார்கழி நீராட எமக்கு எம் முன்னோர்கள் செய்த நெறிகளில் என்ன வேண்டும் என நீ கேட்டால்.. இந்தா என் பட்டியல்.. உலகம் அதிர முழங்கும் உன் பாஞ்சசன்யம் போல பல வெண்சங்குகள் வேண்டும், பெரும் ஒலி தரும் பறைகள் வேண்டும், பல்லாண்டு உன்னைப் போற்றிப் பாடிட ஓதுவார்கள் வேண்டும், அழகிய விளக்குகள் வேண்டும், கொடி மரங்கள் வேண்டும், அக் கொடி மரத்தில் கட்டிட வெண் சீலைகள் வேண்டும்..

ஆலிலைக் கண்ணா இவையெல்லாம் எமக்கு அருளினாலே போதும்.. தட்ஸ் ஆல்.. பாருங்கள் இதில் ஏதாவது ஒரு இடத்திலாவது சராசரி மனிதனின் ஒரு ஆசையாக இருக்கிறதா என்று.. அவருக்கு ஒரே ஆசை கண்ணன் தான்.. தனக்கு கிடைக்கும் செல்வத்தையும் புகழையும் விட  கண்ணனைப் புகழ்ந்து பாடிட இப்பொருட்களே போதும் என்கிறார் மிகச் சிம்பிளாகவும் ஹம்பிளாகவும்.

மார்கழி 26ஆம் நாள் பாடல்...

மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால்அன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.

27. கூடாரை வெல்லும்...

#ஆண்டாள்_பெருமை

இந்த காலத்து மாடர்ன் பெண்கள் ஜீரோ டயட் என்னும் பேரில் கொலை பட்டினி கிடந்து பொடி டப்பாவில் எல்லாம் லஞ்ச் கொண்டு செல்வதைப் பார்க்கிறோம்.. ஆண்டாள் காலத்திலெல்லாம் இப்படி டயட் கிடையாது ஆண்டாள் கேட்கும் சாப்பாடு என்ன தெரியுமா தட்டு நிறைய பால் சோறு இட்டு அதிலே கரண்டி கரண்டியாய் நெய்யை விட்டு அந்த பாலும் நெய்யும் முழங்கை வழியே சர்ரென சரிவில் இறங்கும் சைக்கிள் போல வழிய வழிய சாப்பிட வேண்டும் என்கிறார். எவ்வளவு கொழுப்புச்சத்து மிகுந்த உணவு.!

ஏற்கனவே பாலாம் அதுல நெய்யாம்.. இதெல்லாம் ஆயர்பாடியில் உள்ள பசுக்களின் பால் வளத்தையும் அவர்களுக்கு இதெல்லாம் அன்று விலை அதிகம் உள்ள பொருளாக இருந்திருக்காது என்பதும் தெரிகிறது. அன்று எல்லாமே ஹோம் மேட்.. நாம தான் இப்ப ஜங்புட் பிடியில் இருக்கிறோம். சோறு மட்டும் ஆடம்பரமாக இருந்தா போதுமா?அதை சாப்பிடப்போறவங்க அலங்காரமா இருக்க வேணாமா! அந்த சாப்பாட்டை சாப்பிடப் போகும் முன் என்னென்ன ஆடைகள் என்னென்ன ஆபரணங்கள் அணியவேண்டும்.? 

இதோ காஸ்ட்யூம் & பேஷன் டிசைனராக மாறி ஆண்டாள் ரெஃபர் செய்கிறார்.. கைகளில் அணிய தங்கவளைகள், இருதோளிலும் அணிய கைவங்கிகள், தங்கப்பூ போன்ற பெரிய தோடுகள், அதற்கு மாட்டல்கள், காலணிகள், இன்னும் பல நகைகள் அதுக்கு மேட்ச்சா உயர்ந்த ஆடைகள் இப்படி ஜோய் ஆலுக்காஸ் மாடல் போல கிளம்பி வந்து அதன் பிறகு தான் அந்த பால்சோறை அனைவரும் ஒன்றாகக் கூடி பின்பு சாப்பிடணுமாம். இத்தனையையும் பகைவரையெல்லாம் வெல்லும் கோவிந்தனைப் பாடி..

பயனைடைந்து நாங்கள் பெறும் பரிசுகள் என்கிறார். அது சரி தினமும் பாலும் நெய்யும் சாப்பிடும் பெண் உருவத்தில் பிந்துகோஷாக அல்லவா இருப்பாள்.. பின் ஏன் ஆண்டாள் அப்படிக் கேட்டார்..!பருத்திவீரன் படத்தில் ப்ரியாமணியை அவரது தந்தை வயது வந்த பெண்பிள்ளை என்றும் பார்க்காமல் மூர்க்கமாக தாக்குவார்.. அவர் அடித்து முடித்ததும் ஆவேசமாக ப்ரியாமணி பாட்டி கையிலிருந்த சாப்பாட்டுத் தட்டை வாங்கி அதிலிருக்கும் கறிச்சோற்றை அள்ளியள்ளி தின்று கொண்டே பாட்டியிடம் சொல்லுவார்..

இந்த அடி எல்லாம் தாங்க உடம்புல தெம்பு வேணாம்.. இன்னும் ரெண்டு கறியை போடு என்பார். அதே போலத் தான் சதா கண்ணனை நினைத்து நினைத்து உருகி உருகி அந்த ஏக்கத்தில் நிற்கவும் அவன் புகழ் பாடவும் ஒரு தெம்பு வேண்டுமல்லவா.. அவனை உருகி நினைக்க நினைக்க உடம்பில் சேரும் போஷாக்கும் உடலில் தேங்காமல் கரைந்தோடி விடும் அல்லவா.. ஆகவே நெய்யும் பாலும் கூட ஆண்டாளுக்கு ஜீரோ டயட் தான்.

மார்கழி 27 ஆம் நாள் பாடல்...

கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

28. கறவைகள் பின்சென்று...

#ஆண்டாள்_பெருமை

"மன்னிப்பு..ஏய்..தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை" கேப்டனின் புகழ் பெற்ற பஞ்ச் டயலாக் இது.. கோலிவுட் ரமணாவுக்கு வேண்டுமானால் இது பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் கோகுலத்து ரமணனுக்கு அது மிகப் பிடிக்கும் என்கிறார் ஆண்டாள். சரி ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? தவறு செய்ததால்.. ஏன் தவறு செய்ய வேண்டும்..? அது தெரிந்து செய்தது அல்ல தெரியாமல் நடந்தது..ஆக்சுவலி எங்க குலத்தோட குவாலிட்டி தெரியுமா.?

காலையில மாடு கன்னு மேய்க்க ராமராஜன் மாதிரி பாடிக் கிட்டே கிளம்புவோம் பசிச்சா இருக்கிறதை பகிர்ந்து கிட்டு லஞ்ச் சாப்பிடுவோம்.. நாங்க அவ்வளவா அறிவு அதிகமில்லாத படிக்காத இடையர் குலத்து ஆளுங்க..ஆனா நீ.. எங்க குலத்துல குறையில்லாம பிறந்த கோவிந்தன் பெரிய அறிவாளி.. நீ எங்க குலத்துல பிறந்ததே பெரும் புண்ணியம் உனக்கும் எங்களுக்கும்  இருக்குற உறவை யாராலும் பிரிக்கவே முடியாது.

இதையும் மீறி சின்னப் புள்ளத்தனமா நாங்க எதாவது பேசியிருந்தாலோ இல்ல உன்னை தப்பா பேர் சொல்லிக் கூப்பிட்டு இருந்தாலோ அதுக்கெல்லாம் கோவப்படாம நாங்க செஞ்சத எல்லாம் மன்னிச்சு நாங்க கேட்டதை கொடுத்துடு அப்படி கொடுத்துட்டா அதுவே போதும் உன்னையே நினைச்சு பாடிகிட்டு இருக்கிறத வுட வேற என்னத்தசெஞ்சிடப்போறோம். 

ஆண்டாள் கண்ணனிடம் அறியாமல் செய்த தவறுக்கெல்லாம் மன்னிப்பு கேட்கிறார். அவன் மன்னிப்பான் என்று ஆணித்தரமாக நம்புகிறார். மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன் மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்ன்னு சொல்லுவாங்க.. முதலில் தான் ஒரு மனிதன் என்பதை மன்னிப்புக் கேட்டு நிரூபிக்கிறார் ஆண்டாள்.. நிச்சயம் அவன் மன்னிப்பான்னு அவளுக்கு நன்றாகத் தெரியும்.. ஏன்னா ரமணன் பெரிய மனுஷன் அல்லவா.

மார்கழி 28 ஆம் நாள் பாடல்...

கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம்
அறிவுஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம்உடையோம்
குறைஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது அறியாத
பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

29. சிற்றம் சிறுகாலே...

#ஆண்டாள்_பெருமை

மார்கழி முடிய இன்னும் 1நாள் தான் இருக்கு கடந்த 28 நாளா பாடுறோம்.. ஒரு வேளை எதுக்கு இந்த பாட்டெல்லாம் கண்ணனுக்கு புரியலையோ.? டாடி எனக்கு ஒரு டவுட்டு போல சந்தேகம் எழுகிறது ஆண்டாளுக்கு.. அம்மாவின் அமைச்சரவை அமைச்சர் போல கண்ணன் பதிலே பேச மாட்டேங்குறாரே! ஏன்?சரி விஷயத்தைக் கேட்டுட வேண்டியது தான். 

அது மட்டுமல்ல இந்த 29 வது நாள் பாடலில் வித்யாசமான ஒரு சின்ன வேண்டுகோள் வைக்கிறார். மனதில் படும் ஆசைகளுக்கு காவல் வைக்கச் சொல்கிறார்.. ஆசைக்கு காவலா.! ஆண்டாள் ஆட்டையில இது புதுசா இல்ல இருக்கு.. என்கிறீர்களா.. ஆம் அந்தக் காவலும் எதற்கு என்றால் ஆண்டாளின் காதல் மேம்படவே.. புரியலையா? சரி வாங்க சொல்றேன்.

இந்தாப்பா கண்ணா தினம் அதிகாலையில வந்து உன் காலில் விழுந்து உன்னை கும்பிடுறோம் இதுக்கான காரணம் என்னான்னு இப்ப கேட்டுக்கோ.. நாங்க எல்லாரும் பசுமாடு மேய்ச்சு கிட்டே பாட்டுப் பாடி கட்டுச் சோறு சாப்பிட்டு ஜீவனம் நடத்துற ஆயர் குலத்தவங்க ஆனா நீயோ பெருமையான கடவுள்.. நீ பந்தா எதுவும் இல்லாம எங்க குலத்தில் வந்து பிறந்த பாரு நாங்க அதுக்கு தான் இப்படிச் செய்யறோம்.

உன்கிட்ட இருந்து கொடுன்னு கேட்டு அதை வாங்கிகிட்டு போக மட்டும் நாங்க வரலை உனக்கு ஏதாவது ஒரு சின்ன உதவியாவது நாங்க பதிலுக்கு பண்ணணும் இல்லியா? இல்லாட்டி அது எங்களுக்கு பெரிய அவமானம்.. உனக்கு எடுபிடியா இருந்து சின்னச் சின்ன வேலைன்னாலும் சரி எங்களை அதைச் செய்யவிடு.. இந்த ஜென்மம் இல்ல இன்னும் ஏழேழு ஜென்மம்...

எடுத்தாலும் உன்னுடன் சேர்ந்தவங்களாக தான் இருப்போம் உனக்கே பணி செய்து கிடப்போம்.. கடைசியா ஒண்ணு கேக்குறோம் எங்களக்கு இதைத்தவிர வேற ஆசை ஏதாவது வந்தா அப்படி ஒரு நெனப்பே வராத மாதிரி நீ அருள் செஞ்சா போதும்.எப்படி பாருங்க கண்ணனை நினைப்பதை தவிர வேறு ஆசைகள் வேண்டாமாம். வந்தாலும் அதை அகற்றணுமாம்.

அதாவது உன்னை நினைக்கிற இந்த மனசுல வேற நினைப்பே வரக்கூடாது எங்கள் ஆசைக்கு காவல் இரு வேறு ஆசைகள் வந்தா உள்ள விட்டுறாதே.. இப்ப கண்ணன் தான் ஜாக்கிரதையா இருக்கணும் அப்படி வேற நினைப்பு வந்தா அவரது காவல் சரியில்லைன்னு அர்த்தம் ஆகிடுமே.. 

நாங்க உன்னை தாம்பா நினைச்சுட்டு இருக்கோம் வேற நினைப்பு வந்தா அதுக்கு நாங்க பொறுப்பு இல்ல.. அப்பா கோவிந்தா.. நாங்க சொல்ல வந்தது சுருக்கமா இது தான் The ball is in your court இதை அந்த நூற்றாண்டிலேயே அழகுத்தமிழில் சொல்லி வைத்திருக்கிறார் ஆண்டாள்.

மார்கழி 29 ஆம் நாள் பாடல்...

சிற்றம் சிறுகாலே வந்துஉன்னை சேவித்துஉன்
பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றுஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

30. வங்கக் கடல்...

#ஆண்டாள்_பெருமை

ஆண்டாள் curriculum vita  

பெயர் : ஆண்டாள், இயற்பெயர் : கோதை, உத்தேசமான பிறந்த தினம் : கி.பி.885 நவ 25 அல்லது கி.பி 886 டிசம்பர் 24, கண்டெடுத்த நாள் & நட்சத்திரம் : கலியுகம் நள வருஷம் ஆடி மாதம் சனிக்கிழமை சுக்ல பட்சம் பூர நட்சத்திரம், வளர்ப்பு தந்தை பெயர் : பெரியாழ்வார், கணவரின் பெயர் : அரங்கன் ஶ்ரீரங்கம், பட்டப் பெயர்கள் : சூடிக் கொடுத்த சுடர் கொடி, ஆண்டாள், நாச்சியார், எழுதியவை : திருப்பாவை, நாச்சியார் திருமொழி திருப்பாவை பாடல் இலக்கணம் : இயற்றர விணை கொச்சகக் கலிப்பா.

ஆண்டாளின் திருப்பாவை சங்கத் தமிழ்மாலை என போற்றப்படுகிறது.. திருப்பாவை என்பது பின்னர் வந்த பெயராகும்.. இதில் இருக்கும் பாவை நோன்பு சங்க இலக்கியங்களிலும் வருகிறது.ஶ்ரீவில்லிபுத்தூரை ஆயர்பாடியாகவும் வடபெரும் கோயிலை நந்தகோபர் மாளிகையாகவும் அதிலுள்ள தெய்வத்தை கிருஷ்ணனாகவும் பாவித்து பாடினார் ஆண்டாள்.

உன்மனதிலிருப்பது எந்த ஊரான்.? என திருமாலைப் பற்றி பெரியாழ்வார் கேட்டு பெருமாளின் திவ்ய தேசங்கள் அனைத்தையும் சொல்ல திருவரங்கன் பேர் கேட்டதும் ஆண்டாளுக்கு வெட்கம் வர அரங்கனோடு மணமா? எப்படி சாத்தியம் என உறங்கப்போக கனவில் வந்த அரங்கன் அவளை அலங்கரித்து  திருவரங்கம் அழைத்து வா எனச்சொல்ல அவரும் கோதையை அலங்கரித்து ஶ்ரீரங்கம் செல்ல அங்கு பெருமானுடன் ஐக்கியமடைந்தார் ஆண்டாள்.

தனது திருப்பாவையில் வான சாஸ்திரத்தையும் மழை பெய்வித்தலையும் ஆண்டாள் எழுதியது இன்றளவும் வியப்பிற்குரியது.. திருமால் மீது அவர் கொண்ட காதல் மிக மிக ஆழமானது. மார்கழி 30 நாட்களும் இந்த பாவை நோன்பை மேற்கொள்வது வைணவ மரபு...இந்த 30 பாடல்களையும் மார்கழியில் படித்தாலும் அது நன்மையே.. இனி 30ஆம் நாள் பாடல்..

பாற்கடல் கடைந்த மாதவனை சந்திர முகத்தானை நம் பெண்கள் சென்று வேண்டியது கிடைத்த நிகழ்வினை ஶ்ரீவில்லிப்புத்தூரிலே வாழ்வார்.. பெயரிலே பெரியாழ்வார் அவரின் செல்ல மகள் ஆண்டாள் அருளிய திருப்பாவை முப்பதையும் தவறாமல் பாடினால் நான்கு தோள்களும் தாமரைக் கண்களும் கொண்ட திருமாலின் திருவருள் பெற்று பேரின்பத்துடன் வாழ்வாங்கு வாழ்வார்கள்.

ஒரு நாள் நீ யாரையம்மா மணம் செய்து கொள்வாய்.? என பெரியாழ்வார் கேட்டபோது திருமாலுக்கென்றே படைக்கப்பட்டது என் உடல்.. அதை இந்த மனிதர்களுக்கு என்னும் வார்த்தையை என் காதில் கேட்டாலே என்னால் வாழ முடியாது எனச் சொன்னவள்..ஏனென்றால் அரங்கன் மேல் அவள் கொண்ட காதல் அப்படி.. "மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல..அல்ல.. அல்ல.. அதையும் தாண்டி புனிதமானதுதுதுதுதுது"...