Sunday 28 June 2015

குறள் குறுங்கதைகள்.

குறள்நெறிக்_குட்டிக்கதைகள்

ராஜா கண்டிப்பு மிகுந்த முதலாளி.. 20 ஆண்டுகளாக தனது தொழிற்சாலையில் அனைத்தும் அவர் கட்டுப்பாட்டிலே இருக்குமாறு பார்த்துக் கொண்டு வருகிறார். இத்தனை ஆண்டுகளில் அவர் கம்பெனிக்கு நல்ல மேனேஜர் வாய்க்கவில்லை.

வருபவர்களும் 1 வருடம் கூட தாக்குப்பிடிக்காமல் ஓடி விடுவதன் ரகசியம் அவருக்கு தெரியவில்லை. இதை தன் நீண்ட நாள் நண்பரிடம் சொல்லி வருத்தப்பட்டார். நண்பர் கேட்டார்.. உங்க மேனேஜர்களுக்கு நீங்க என்ன மாதிரி வேலை தருவிங்க"

ராஜா சொன்னார் அவர்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் அத்தனையும் அறிவுறுத்துவேன் அதை செஞ்சாலே போதும்.. அவங்க வேலையில் பாதி வேலையை நானே பாத்துடுவேன் ஏன் தான் எல்லாரும் நிலைக்க மாட்டேங்குறாங்கன்னு தெரியலை என்றார்.

நண்பர் சொன்னார்.. ஓ பிரச்சனையே இது தானா!! ராஜா நீ செஞ்ச தப்பு இது தான் அந்த வேலையை செய்ய ஒருத்தனை தேர்ந்தெடுத்துட்டு நீயே கட்டளை இட்டுக் கொண்டிருந்தால் அங்கே அவனுக்கு என்ன வேலை.. ஒருவனை பொறுப்புக்கு வைத்தால் வேலையை நம்பி அவனிடம் தராது நீயே சுமந்தது தான் தவறு என்றார்.. ராஜாவுக்கு உண்மை புரிந்தது.

நீதி: பதவிக்கு ஒருவரை நியமித்துவிட்டால் அவர்களை நம்பி பணியாற்ற விடவேண்டும்.

வினைக் குரிமை நாடிய பின்றை அவனை

அதற்குரிய னாகச் செயல்.

Saturday 27 June 2015

இந்திரசபையில் மேகி..

இந்திரலோகத்தில்_நூடுல்ஸ்

இந்திரலோகமே ஆனந்தமாக இருந்தது.. பூலோகத்தில் இருந்து வந்திருந்த புதிய உணவான மேகியைச் சுவைக்க அனைவரும் காத்திருந்தனர். எப்பம்மா சாப்பிடலாம் என அங்குள்ள குழந்தைகள் கேட்க வீட்டுக்கு வீடு இரண்டே நிமிஷம்டா கண்ணா என்னும் குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.

ரம்பா, ஊர்வசி, மேனகா எல்லோரும் தங்கள் பெயர்களை ராஜகுமாரி என மாற்றிக்கொண்டனர்.. மூன்று ராஜகுமாரிகள் இருக்கும் போது ரியல் ராஜகுமாரியான இந்திராணி என்ன செய்வதென யோசித்து தன் பெயரை மாதுரி தீக்‌ஷித் என மாற்றிக் கொண்டார்.

இந்திரன் அமிதாப் ஆனார். நல்லவேளை விக்ரம் பிரபு அங்கில்லை இல்லாட்டி சிவாஜி தாத்தா என்று அழைத்திருப்பார்.. பூலோகத்தில் விஷம் என்ற மேகியை எப்படி தேவலோகத்தில் ஏற்றுக் கொண்டனர்.. பரமசிவனே ஃபுட் கண்ட்ரோலராக வந்து அதை எடுத்து விழுங்கி நற்சான்றளித்தார்.

ஆலகாலமுண்டவரே அருமை என்றபின் அப்பீல் இருக்குமா.. இதை சமைக்க பூலோகத்தில் இருந்து நிறைய சமையல் நிபுணர்கள் வரவழைக்கப் பட்டிருந்தனர். எல்லோரும் வெகுகாலம் அமுதத்தையும் இந்திரலோகத்து டாஸ்மாக்கில் சோம, சுரா பானங்களை மட்டுமே சுவைத்திருந்ததால் மேகியை சுவைக்க ஆவலாக இருந்தார்கள்.

பாற்கடலின் ஓரம் ஒரு பெரிய ரிசார்ட்டில் சமையல் தயாராக வெகேஷன் வந்தது போல் குவிந்திருந்த முக்கோடி தேவர்களும் ஆவலாக இருந்தார்கள்.. சமையல் முடிந்தது.. அனைவருக்கும் பரிமாறப்பட்டது.. மேகியை சுவைத்த வானவர் அதன் சுவையில் மயங்கிப் போனார்கள்.. திரும்ப திரும்ப கேட்டுச் சாப்பிட்டார்கள்..

அனைவரின் விருப்பத்துக்கு இணங்க தேவலோகத்தின் சிறந்த ஃபாஸ்ட்ஃபுட் ஆக மேகி தேர்ந்தெடுக்கப்பட்டது.. மகிழ்வோடு வீடு திரும்பிய அனைவருக்கும் மறுநாள் வாந்தி மயக்கம் தேவலோகமே தலை சுற்றலில் இருந்தது.. ஃபுட் பாய்சனுக்கு காரணம் மேகியே என கண்டுபிடிக்கப்பட்டது.

இப்போது எல்லோரும் மேகி நன்று என தீர்ப்பு சொன்ன பரமசிவனை குமாரசாமி போல பார்த்தார்கள்.. சிவனும் பதறி மேகி முதலாளியை அழைத்து விசாரித்தார்.. தேவலோக லேபில் மேகி பரிசோதிக்கப்பட்டது.. ஆனால் அதில் குறை ஏதுமில்லை.. பின் எப்படி தவறு குழம்பினார்கள். அப்போது மேகி முதலாளி ஒரு யோசனை தந்தார்..

அந்த கிச்சனை நான் பார்க்க முடியுமா என்றார்.. அழைத்துச் சென்றார்கள் அங்கிருந்த சமையல் நிபுணர்களை அழைத்து விசாரித்தார்.. அப்போது தான் அதில் ஒருவருக்கு சமையலே ஒழுங்காகத் தெரியாது என கண்டறிந்தார்.. யார் நீ எங்கிருந்து வருகிறாய் என கேட்டார்கள் அவன் சொன்ன பதிலில் அனைவரும் மயங்கி விழுந்தனர்.. அவன் சொன்னது...

#நான்_அமிர்தாவில்_படிச்சிட்டு_வந்தவனுங்க

Wednesday 24 June 2015

குறள் குறுங்கதைகள்

#குறள்நெறிக்_குட்டிக்கதைகள்

ரவியின் மளிகைக்கடை அந்த இடத்தில் பிரபலம் அது வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்புப் பகுதி.. வேறு கடைகளுக்கு 5 கி.மீ போக வேண்டும் என்பதால் அங்குள்ள வீடுகளுக்கு ரவியின் கடையே வசதி.

அவன் பலசரக்கு சாமான்களுடன் காய்கறிகளும் விற்று வந்தான். அவன் கடையில் கூட்டம் அலைமோதும்.. வாடிக்கையாளர்கள் காத்திருந்து வாங்கிப் போனார்கள்.. இச்சமயத்தில் தான் வந்தான் ஒரு தள்ளுவண்டி கடைக்காரன்.

மார்க்கெட்டில் இருந்து ஃபிரெஷ்ஷான காய்கறிகள் அந்த வண்டியில் இருந்தது வீடு வீடாக போய் அவனே கூவி அழைப்பதால் ரவி கடைக்கு போய் காத்திருக்க விரும்பாதோர் அந்த வண்டியை மொய்க்க ஆரம்பித்தனர்.

ரவிக்கு வியாபாரம் குறையலாயிற்று. ஒரு யோசனை செய்தான்.. அந்த ஏரியாவில் பிரபலமான அடிதடி கட்டபஞ்சாயத்து செய்பவரை அணுகி ஒரு தொகையை தந்து விஷயத்தை சொன்னான்.

இப்போது அந்த வண்டிக் காரனை அந்தப்பகுதியில் பார்க்க முடிவதில்லை.. ரவி கடையில் மீண்டும் கூட்டம் அள்ளியது.. ரவிக்கு பெரும் மகிழ்ச்சி.. ஒருநாள் ரவி கடையின் எதிர்புறம் இருந்த காலி இடத்தை சுத்தம் செய்து வேலி போட்டார்கள்.

மேற்பார்வை செய்து கொண்டிருந்தவர் அந்த அடிதடி பார்ட்டி. அவரைப் பார்த்ததும் ரவி என்னண்ணே இந்த இடத்தை வாங்கிட்டிங்களா வீடு கட்டப்போறிங்க போல என்றான்.

அதற்கு அவர் சொன்னார் ஆமா ரவி ஆனா கட்டப்போறது வீடு இல்ல.. காம்ப்ளக்ஸ் பில்டிங்  கிரவுண்ட் ப்ளோர்ல ஒரு  பெரிய கார்ப்பரேட் கம்பெனியோட சூப்பர் மார்க்கெட் வருது இன்னும் 4 மாசத்துல திறப்புவிழா.. என்றார். ரவிக்கு சுரீர் என்றது.

நீதி : நம்மை விட மெலியவரை துன்புறுத்த நினைக்கும் போது நம்மை விட வலியவர் உண்டு என்று நினைத்து வாழ்வதே சிறப்பு.

வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின்

மெலியார்மேல் செல்லு மிடத்து.

Tuesday 23 June 2015

குறள் குறுங்கதைகள்

#குறள்நெறிக்_குட்டிக்கதைகள்

"அவங்க கேட்ட பணத்தைக் கொடுத்து அந்த நிறுவனத்தை வாங்கிடுங்க" என்றார் தொழிலதிபர் ராஜசேகர். போர்டு மீட்டிங்கில் இருந்த அனைவரும் திகைத்தனர்.

சார் என்ன சொல்றிங்க.. அந்த நிறுவன அதிபர் வேல்பாண்டியன் உங்க பரம எதிரி.. நம்ம கம்பெனி மேல இல்லாத பொய் வழக்கு போட்டு நம்ம வியாபாரத்தையே அழிக்க பார்த்தவர்.. அவர் நமக்கு செய்யாத இடைஞ்சலே இல்லை என்றார் ஜி.எம்.

இருக்கட்டுமே அதெல்லாம் பழசு..இப்ப ரொம்ப நொடிச்சு போயி தானே கம்பெனியை விற்கிறார்.. கேட்டதை கொடுத்து வாங்கிடுங்க என்றார் ராஜசேகர்.

இல்ல சார் அவர் ரொம்ப கஷ்டத்துல இருக்கார் நாம ஏன் கேட்ட காசை கொடுக்கணும் குறைச்ச விலைக்கு கேட்டாலும் கொடுத்துடுவார் அவர் கம்பெனியை வாங்க மார்க்கெட்டுல  நம்மைத் தவிர யாருமேயில்லை. அதான் சொல்றேன் சீப்பா வாங்கிடவா என்றார் ஜி.எம்.

வேணாம் அது பாவம் அவரு கஷ்டத்துல இருக்கும் போது இப்படி செய்யறது பாவம்.. அவர் கேட்ட பணத்தையே கொடுத்து வாங்குங்க என்றார் ராஜசேகர்.. ஓகே சார் என்று எழுந்த ஜி.எம். சார் கடைசியா கேக்குறேன் அவர் கொடுத்த டார்ச்சர் எதுவுமே உங்களை பாதிக்கலை என்றார்.

ஹா..ஹா.. ஹா.. நான் அதெல்லாம் எப்பவோ மறந்துட்டேன் என்றார்  ராஜசேகர் சிரிப்புடன்.

நீதி: ஒருவர் செய்த தீமையை தண்டிக்க முடிந்தும் தண்டிக்காது இருப்பது சிறந்தது.. அந்தத் தீமையை மறந்துவிடுவது அதைவிட சிறந்தது.

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை

மறத்தல் அதனினும் நன்று.

Monday 22 June 2015

குறள் குறுங்கதைகள்

குறள்நெறிக்_குட்டிக்கதைகள்

ஓட்டல் கடை வைத்திருக்கும் சேகருக்கு ஒரு ஆச்சரியம் தினமும் ஒரு முதியவர் வந்து 10 அல்லது 15 பொட்டலங்கள் சாப்பாடு வாங்கிப்போவார் பார்த்தால் வசதியானவர் போலில்லை. ஆனால் யாருக்கு வாங்கிப் போகிறார் என்பதும் தெரியவில்லை.

இன்று கேட்டுவிட வேண்டும் என முடிவு செய்தான்.. பெரியவர் வந்தார்.. ஐயா தப்பா நினைக்கலைன்னா இது யாருக்கு வாங்கறிங்கன்னு தெரிஞ்சுக்கலாமா என்றான். தம்பி இதெல்லாம் சாலையில் அனாதையா இருக்குற மன நோயாளிகளுக்கு.

தனக்கு பசின்னு மத்தவங்க கிட்ட பிச்சை கேட்கக் கூட தெரியாத அவங்களுக்கு ஒரு உதவியா செய்யறேன்.. நானும் கூலி வேலை தான் பாக்குறேன் என் சாப்பாடு போக மிச்சத்தை சேத்து வச்சு இப்படி செய்யறேன்.
இந்தா பணம்.. வரட்டுமா என கட்டி வைத்திருந்த உணவு பொட்டலங்களை எடுத்துக் கொண்டு கிளம்பினார். அந்தப் "பெரிய" மனுஷன்.

நீதி : தன் கடமையை உணர்ந்தவர்கள் தன்னிடம் வசதி இல்லாவிட்டாலும் இயலாதவர்க்கு உதவுவார்கள்.

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

கடனறி காட்சி யவர்.

Sunday 21 June 2015

குறள் குறுங்கதைகள்

குறள்நெறிக்_குட்டிக்கதைகள்

நடிகர் வசந்த் கேரவனில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது சிலர் அனுமதி பெற்று அவரை சந்தித்தனர்.

வணக்கம் சார் நாங்க xyz விளம்பர நிறுவனத்தில் இருந்து வர்றோம்.. சார் நம்ம விளம்பர படத்துல நடிக்கணும்ன்னு ஆசைப் படுறோம்.

அப்படியா நடிச்சிட்டா போச்சு.. எந்த பிராடக்ட்டுக்கு?

சார் வனிதா கேட்டரிங் காலேஜ் விளம்பரம் சார்..

அப்படியா.. ஆனா இப்ப இந்த மாதிரி விளம்பரங்களில் உண்மை இருக்காதுன்னு மக்கள் பேசிக்கிறாங்க.. அந்த காலேஜோட தரம் எப்படி?

அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு சார்? மார்க்கெட்டுல உங்க ரேட் என்னன்னு தெரியும் மேற்கொண்டு 5 லட்சம் தர்றோம் என்ன சொல்றிங்க?

இல்லிங்க முழுவிவரம் சொல்லுங்க நடிக்கிறதா இல்லையான்னு நான் சொல்றேன்..

சார்.. நீங்க சமீபத்துல கேட்டரிங் செஃபா நடிச்ச படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு.. அதனாலதான் இதுல உங்களை தேர்ந்தெடுத்து இருக்கோம்.. டபுள் மடங்கு பேமண்ட் கூட தர்றோம் நடிக்க மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதிங்க.. ப்ளீஸ்

ஓ.. அப்ப ஏதோ உங்ககிட்ட தவறு இருக்கு.. கஷ்டப்பட்டு சம்பாதிச்சு தன் பிள்ளைங்களுக்கு நல்ல எதிர்காலம் அமையணுமுன்னு ஆசைப்படுற பெற்றோர்களை ஏமாத்த எனக்கு மனசு வரலை நீங்க கோடி ரூபா கொடுத்தாலும் அந்தப்பணம் எனக்கு வேணாம்..

நான் காசுக்கு நடிக்கிறவன் தான் ஆனா என்னை காசுக்கு விக்கிறவன் இல்லை தயவுசெஞ்சு எழுந்திருச்சி போயிடுங்க.

நீதி: பொருந்தா வழிகளில் வரும் செல்வத்தை புறக்கணித்துவிட வேண்டும்.

அருளோடும் அன்போடும் வாராப் பொருளாக்கம்

புல்லார் புரள விடல்.

Saturday 20 June 2015

குறள் குறுங்கதைகள்

குறள்நெறிக்_குட்டிக்கதைகள்

யோவ் பி.ஏ வெளிய யாரு?

உங்க தொகுதியில் இருந்து வந்துருக்காரு..

என்ன ஏதும் மனுவா இல்ல நன்கொடையா? இல்லிங்க அவரு மக ப்ளஸ்டூவில் 1180 மார்க் எடுத்துருக்காம் புள்ள டாக்டராக ஆசைப்படுதாம் அதான் வந்திருக்காரு.

வரச்சொல்லு..

வாங்க வாங்க... பி.ஏ எல்லாம் சொன்னாரு டாக்டர் சீட்டா ஆனா அதுக்கு நிறையா செலவாகுமேய்யா உங்கிட்ட பணம் இருக்கா..

பணம் இருந்தா நான் எதுக்குங்க உங்ககிட்ட வரப்போறேன்.. அய்யா தேர்தலில் நிக்கும்போது ஏழைகுழந்தைகள் கல்விக்கு உதவுவேன்னு வாக்குறுதி தந்திங்க அதை நம்பித்தான்...

ஓ.. வாக்குறுதி தந்திட்டா செய்யணுமா.! இந்த ஒரு சீட்டுக்கு 25 லட்சம் கொடுக்க ஆளிருக்கு.. உன்னை மாதிரி இல்லாதவனுக்கு கொடுக்க நான் ஒண்ணும் கேனையன் இல்ல கிளம்பு கிளம்பு..

செய்யறேன்னு வாக்குறுதி தந்திட்டுஇப்படி மனசாட்சி இல்லாம பேசுறிங்களேய்யா

யோவ்.. மனசாட்சியா சும்மாவா ஓட்டு போட்டிங்க ஒரு ஓட்டுக்கு 2000 கொடுத்திருக்கேன்.. அதை வாங்கினபோதே உங்க மனசாட்சி எங்க போச்சு.. போ போ எனக்கும் நியாயம் தெரியும்.

நீதி: ஒருவன் குணத்தையும் குற்றத்தையும் அறிந்த பிறகே அவனை பதவிக்கு தேர்ந்தெடு.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்.

Friday 19 June 2015

குறள் குறுங்கதை கள்

குறள்நெறி_குட்டிக்கதைகள்

டாக்டர் சார் வேற வழியே இல்லியா? கையில் 7இலட்சம் தான் இருக்கு..

இல்லிங்க இந்த ஆபரேஷனுக்கு 8 லட்சத்துக்கு அஞ்சு பைசா கூட குறையாது.

கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க டாக்டர்..

நோ.. நோ அப்படி பாத்தா நான் டாக்டர் சீட் வாங்க 15 லட்சம் கேட்டாங்க நான் 14 லட்சம் தான் முடியுமுன்னேன்.. ஆனா 15 குடுத்தப்பதான் கிடைச்சது.

அதனால!!

நான் கொடுத்ததை சம்பாதிக்க வேணாமா..! 8 லட்சம் கட்டுங்க இல்லை வேற ஆஸ்பிடல் போயிடுங்க.. வரட்டுமா.

நீதி: கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக.

Friday 12 June 2015

நச்மார்னிங் கதைகள்...

நச்மார்னிங்_கதைகள்

இரு நண்பர்கள் வெற்றியைத் தேடி பயணம் செய்து கொண்டிருந்தார்கள் அப்போது எதிரே ஒரு துறவி வந்தார் வெற்றி எங்கேயிருக்கிறது என்று அதில் ஒருவன் கேட்டான்.

துறவி சொன்னார் வெற்றி நகர்ந்து கொண்டே இருக்கும் நீங்கள் தான் அதை விரட்டிப் பிடிக்க வேண்டும். அது அருகிலும் இருக்கலாம் ஆயிரம் மைல் தள்ளியும் இருக்கலாம்...

எனக் கூறிவிட்டு போய்விட்டார் உடனே கேள்வி கேட்டவன் தன் ஊருக்கு போன் செய்து அதிவிரைவாக போகும் கார் ஒன்றை தான் இப்போது நிற்கும் இடத்தை சொல்லி வரச்சொன்னான்.

உடன் வந்த நண்பன் மீண்டும் கிளம்பத்தயாரானான்.. உடனே இவன் அவனைப்பார்த்து நண்பா ஏன் கிளம்புகிறாய் கார் வந்ததும் சேர்ந்தே போகலாமே கொஞ்சம் பொறுத்துக்கொள் என்றான்.

நண்பா துறவி சொன்னதை கேட்டாய் தானே வெற்றி அருகிலும் இருக்கலாம் என்றதை.. கார் வரும் வரை காத்திருப்பதைவிட பயணத்தை தொடர்வதே புத்திசாலித்தனம் என்றான்.

நண்பா நீ எவ்வளவு தூரம் நடந்து விடப்போகிறாய் கார் வந்தால் காத்திருந்த நேரத்தையும் சேர்த்து வேகமாக போய்விடலாம் பொறு என்றான்.

உன்னுடன் காத்திருந்து வெற்றிக்கும் நமக்குமான தூரத்தை அதிகப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை நான் கிளம்புகிறேன் என்று கூறி கிளம்பினான்...

அந்த பாதையின் திருப்பத்தில் வெற்றி நின்று கொண்டிருந்தது.!

Friday 5 June 2015

எர்வா டேபிள் மேகியமிர்தா..

சொட்டை சேது" அப்படின்னா ஏரியாவுல தெரியாத ஆளே இல்ல..  24 வயசு தான் ஆனா விழுந்த சொட்டைக்கு ஆள் 48 வயசுக்காரன் மாதிரி ஆகிட்டான்.. இதை நினைச்சு அவன் அழுவாத நாளே இல்லை.. 26 வயசு பொண்ணுங்க கூட அங்கிள்ன்னு கூப்புடுறதை அவனால தாங்க முடியலை.

பேசாம செத்து போயிடலாமுன்னு கூட தோணிச்சு. ரொம்ப விரக்தியில் இருந்தான்..அப்ப அவன் நண்பன் ஒருத்தன் சொன்னான் மச்சி நாளைக்கு காலையில நான் வர்றேன் நாம ஒரு இடத்துக்கு போகலாம் உன் கவலை தீர்ந்திடுமுன்னு சொன்னான். இவனும் சரின்னான்.

அடுத்த நாள் காலை 10 மணி நண்பன் கரெக்டா வந்துட்டான்.. ரெண்டு பேரும் கிளம்புனாங்க.. நண்பன் வந்த வண்டி முன் புறம் பைக் மாதிரியும் பின்னாடி ஆட்டோ மாதிரியும் இருந்துச்சு.. பின் சீட்டுல கார் கதவு போல இருந்துச்சு மச்சி என்ன வண்டிடா இது புதுசா இருக்குன்னான் சேது.

இது ஒரு நவீன வாகனம் மச்சி இதுக்கு பேரு பைக்காட்டோ ப்ளைட் நாம போற ஊருக்கு இதுல மட்டும் தான் போகமுடியுமுன்னான்.. ஆச்சரியமா இவன் உள்ளே ஏற சீட் பெல்ட் கட்டிக்கோ மச்சி என்றான் நண்பன். சேது கட்டிக்கொள்ள நண்பன் முன் இருக்கையில் அமர்ந்து ஸ்டார்ட் பண்ணான்.

மெதுவா மவுண்ட் ரோடுல போன வண்டி அப்படியே பேய் வேகம் எடுத்து ஜெமினி பிரிட்ஜ் ஏறும் போது புயலா மாற டேய்ய்ய்ய் மச்சின்னு சேது அலற அந்த வண்டி அப்படியே டேக் ஆப் ஆகி ஜிவ்வுன்னு வானத்துல ஏறிச்சு.. இதை பார்த்து அப்படியே சேது மயங்கிட்டான். இப்ப முகத்துல சில்லுன்னு...

காத்து சேது முழிச்சு பார்த்தான் அந்த ஊரு அப்படியே சொர்க்கம் மாதிரி இருந்துச்சு... எதிர்பட்ட எல்லோருக்கும் அவ்வளவு அடர்த்தியான முடி எல்லோரும் கையில 50805080 பச்சை குத்தியிருந்தாங்க.. என்னான்னு கேட்டப்ப மாரீசன் காட்டு அரிய வகை மூலிகை கம்பெனி நம்பர்ன்னாங்க.

அதை தடவுனா தரையில கூட முடி வளரும்ன்னு சொல்லிகிட்டே ஒருத்தர் இரண்டு சொட்டு தரையில தடவுனாரு.. குபீர்னு பூமிக்குள்ள இருந்து ஒரு கொத்து முடி சவுரி மாதிரி வளர்ந்து நின்னுச்சு.. அப்படியே அவரு அதை அவன் தலையில தடவ நான் கடவுள் ஆர்யா மாதிரி சேது தலையில முடி..!

பின்னால சிரிப்பு சத்தம் கேக்க திரும்புனா தேவதை மாறி 4 பெண்கள் அவங்க பற்களில் அவ்வளவு வெண்மை.. எப்படிங்கன்னு கேட்டான் உப்பு, எலுமிச்சை, தக்காளி, கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா அடங்கிய டோல்கேட் பேஸ்ட்டு தான் காரணமுன்னாரு அந்த ஊர்க்காரரு..!

அந்த பெண்களின் சிவப்பு அழகுக்கு ஊர் அண்டு லைவ்லியும் அவங்க சரும அழகுக்கு பத்தாயிரத்தி பதினொரு ஸ்கின் ப்ராபளத்தை தீர்க்கும் தமாம் சோப்பும் காரணமுன்னு புரிஞ்சிகிட்டான். அப்ப அங்க 2 லட்சம் எலுமிச்சை சக்திகளில் விளக்கிய பாத்திரம் போல பளபளன்னுஒரு கார் வந்துச்சு.

அதை ஓட்டிக்கிட்டு வந்தது ஒரு சின்னப்பையன்.. இவ்வளவு சின்ன வயசுல எப்படி இவன் கார் ஓட்டுறான்னு கேட்டப்ப.. அவன் கிறுக்குரே, டோரியோ, வொண்டர்ஸ் பாய் போன்ற ஸ்நாக்சும் 2 மைக்ரோ செகண்ட்டுல தயாராகும் டுமாகி நூடுல்சும் சாப்பிட்டதால கிடைச்ச சக்தின்னு சொன்னாங்க.

மக்கள் கையில  ஆளுக்கொரு பெட்டி இருந்தது என்னான்னு கேட்டதுக்கு இது தான் டைம்டேபிள் மேட்..இதை 8818 வகையில உபயோகிக்கலாம்.. இதுல 818 ஆங்கிள்ல எங்க வீடு ஆபீஸ் எல்லாமே செட் பண்ணி இருக்குன்னாங்க அப்ப ஒருத்தர் ரோட்டுல கத்திகிட்டே வந்தாரு..

எதிர்ல இருக்குறதெல்லாத்தையும் அடிச்சு நொறுக்குனாரு.. என்னான்னு கேட்டா அவரு மங்கள்யாண் கடைக்காரரு சேதாரத்தை அடிச்சு நொறுக்குறாருன்னாங்க.. திடீர்னு அவரு புரட்சி போராட்டமுன்னு கத்திகிட்டே கையை தூக்க நெடு நெடுன்னு வெள்ளை தாடியோட ஒருத்தர்.

அவரை பாத்ததும் ஜிலேபி தாத்தான்னு ஒரு சத்தம் மங்கள்யாண் கடைக் காரரு மகன் தான்.. பெரியவர் காலில் அவரு விழ பெரியவர் கண்ணை தொடைச்சிக்க.. அப்படியே அவங்க கிளம்ப கோட் சூட் போட்டுகிட்டு ஆளாளுக்கு 40 பாஸ்போர்ட்டோடு ஒரு கும்பல் வந்துச்சு..

எல்லா நர்மதா கேட்டரிங் ஸ்டூடண்ட்ஸ்.. அவங்க எந்த நாட்டுக்கு எப்ப வேணா போலாமாம் எல்லோரும் எல்லா நாட்டுக்கும் சீசன் பாஸ் எடுத்து வச்சு இருக்காங்களாம்.. படிக்கும் போதே மாசம் ஒரு கோடி சம்பாதிச்சாங்களாம்.. இப்ப அவங்க வருமானத்துக்கு அளவே இல்லியாம்.!

அப்படியே திரும்புனா நிலா நகர் உலா நகர்ன்னு ஒரு போர்டு பூமிக்கு மிக அருகில்ன்னும் பூமியிலிருந்தே பைப் கனெக்சனில் தண்ணி வருமுன்னு சொன்னாங்க கூடிய சீக்கிரம் பக்கத்துல ஆஸ்பத்திரி, ஸ்கூல், மார்க்கெட், இஞ்சினியரிங்காலேஜ் எல்லாம் வருதுன்னாங்க.. இன்னிக்கே புக் பண்ணா..

ஒரு கோல்டு பிஸ்கெட்டு ஃபிரின்னாங்க.. சேதுவுக்கு ஒண்ணும் புரியலை இறக்கி விட்ட நண்பனை வேற காணோம்.. வந்ததுக்கு மூடியை வளர்த்துகிட்டோம்... சரி நம்ம வந்த வண்டிக்கிட்ட  போயி வெயிட் பண்ணலாமுன்னு திரும்பி பார்த்தவன் அப்படியே ஷாக் ஆயிட்டான்..!

டுமாகி நூடுல்ஸ் சாப்பிட்டு அறிவா வளர்ந்த குழந்தைங்க கையில் டிப்ஸி, யோக் டின்களை குடித்துக் கொண்டே இவங்க வண்டியை பார்ட் பார்ட்டா கழட்டி போட்டு இருந்தாங்க அதைப் பார்த்ததும் அப்படியே தலைசுத்தி மயங்கி தொம்முன்னு விழுந்துட்டான் சேது..!

சேது எழுந்திரு..எந்திரிடா.. சேது கண் விழித்தான் அவன் நண்பன் தான்..! மச்சி என்னை விட்டுட்டு எங்கடா போன நாம வந்த வண்டி..வண்டி.. என்றவன் அப்போது தான் கவனித்தான் அட இது நம்ம வீடு இல்ல... ஆடு வழிந்து தலையை சொறிய தலை வழுக்கையாய் இருந்தது..!

ஐயோ என் முடி.. என்றவனை நண்பன் விநோதமாக பார்த்தான்.. டேய் சேது என்னடா ஆச்சு உளறுற உனக்கெங்க முடி இருந்துச்சு.. சேதுவுக்கு உறைத்தது அட நான் கண்டது பூரா கனவு...என அசடு வழிந்தவன் நண்பனிடம்  சரி மச்சி நீ எங்க கூட்டிட்டு போறேன்னு சொன்ன என்றான்.

இந்த ஆயில், அது இது எல்லாம் ஏமாத்து வேலை மச்சி நமக்கு தெரிஞ்ச சினிமா மேக்கப்மேன் இருக்காரு அருமையா விக் செய்வாராம் கொஞ்சம் காஸ்ட்லி ஆனா விக் இருக்குறது தெரியாதது மாதிரி நேர்த்தியா இருக்குமாம் அவர்கிட்ட கூட்டிகிட்டு போறேன் என்றபடி ரிமோட்டை அழுத்த  டிவியில் 4050...என்ற குரல் கேட்க சேது வாய்விட்டு சிரித்தான்.

Thursday 4 June 2015

மேகி.. மேகி

#Maggi_in_Future

வரும் காலத்தில் மேகி தடை செய்யாது விற்கப்பட்டால் இதுவும் நடக்கலாம்..

படுபாவிப்பய..பரிட்சையிலே கம்மி மார்க்கு வாங்கினதுக்கு பூச்சி மருந்து குடிச்சிருந்தா கூட காப்பாத்தி இருக்கலாம் இப்படி மேகியை தின்னுட்டானே..

சாரி சார் சரியான பிரிஸ்கிரிப்ஷன் இல்லாம எங்க மெடிக்கலில் மேகி விக்கிறது இல்லை..

ஏம்பா தோட்டத்துல காட்டுப்பன்னிங்க தொல்லைன்னு புலம்புவியே இப்ப எப்படி.? பூமியில 10 பாக்கெட் மேகி புதைச்சு வச்சேண்ணே பன்னிங்க கூட்டமா வந்து தின்னுட்டு செத்துடுச்சுங்க.. இப்ப தான் நிம்மதி..

ஹலோ போலீஸ் ஸ்டேஷனா சார் எங்க வீட்டு ஜன்னல் வழியா எதிர் வீட்டுல பார்த்தேன் ஒரு அம்மா மேகி பாக்கெட்டை ஓபன் பண்ணிகிட்டு இருக்கு சீக்கிரமா வந்து அவங்களை காப்பாத்துங்க ப்ளீஸ்..

என்ன வாழ்க்கைடா இது நிம்மதியே இல்லை பேசாம ஒரு பாக்கெட் மேகியை சாப்பிட்டுட்டு செத்துற வேண்டியது தான்..

அன்பார்ந்த விவசாயிகளே நெல் கரும்பு பயிர்களில் பூச்சியரிக்கும் காலமிது. 5லிட்டர் தண்ணீரில் 2 கிலோ மேகியை கரைத்து தெளித்தால்.. பூச்சிகள் இறந்து பயிர்கள் காக்கப்படும்..

மேகி 2

#மேகிக்குறள்கள்

மேகி செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

இடியாப்பம் செய்து விடல்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

மேகியைச் சமைத்த வர்க்கு.

விற்க கசடான மேகியை விற்றபின் 

நிற்க கோர்ட்டில் அதற்குத்தக.

அன்பிலார் எல்லாம் மேகி தின்பர் அன்புடையார்

என்றும் தின்பார் இட்லி அவித்து.

எப்பொருள் பற்றி எந்நடிகர் வாய்கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

மேகி 3

#மேகி_மொழிகள்

அரசன் அன்று கொல்வான்.. மேகி நின்று கொல்லும்.

புலி பசித்தாலும் மேகி தின்னாது.

மேகி வரும் முன்னே.. வியாதி வரும் பின்னே.

மேகியை மடியில கட்டிகிட்டு ஆரோக்யம் பார்த்தா மாதிரி.

கொள்ளு என்றால் வாயை திறக்கும்.. மேகி என்றால் வாயை மூடிக்கொள்ளும்.

இடியாப்பம் படுத்தாலும் மேகி மட்டம்.

உயர உயரப் பறந்தாலும் மேகி இட்லிக்கு இணையாகாது.

மேகிக்கும் ஆசை.. வாழவும் ஆசை.

மேகி என்றால் பேயும் அலறும்.

பொம்பளை சிரிச்சா போச்சு.. மேகியை சமைச்சாலும் போச்சு.

சுத்தம் சோறு போடும்.. அசுத்தம் மேகி போடும்.

மேகியோடு சேர்ந்த சாசும் விஷம்.

குர்குரே எட்டடி பாஞ்சா மேகி பதினாறடி பாயும்.

இடியாப்பம் போல மேகி.. நொந்தது நூடுல்ஸ் ஆகி.

பிள்ளையில்லாத வீட்டில் கிழவன் மேகி தின்னு செத்தானாம்.

இனி நீங்க...

Tuesday 2 June 2015

கறார் விலை...

#காசை_வச்சிட்டு_எடுத்துட்டு_போ

"துட்டை வச்சிட்டு அப்பால எட்த்துக்கோ இந்த நாளிக்கு நாளாநாளிக்கு அப்டின்ற பேச்சே வோணாம்" இஸ்டிரிக்ட்டா சொல்றேன் ஆமா... வயதான அந்தக் கிழவியின் ஹை டெசிபல் குரல் என் காதில் வந்து விழுந்தது. கடந்த மாதம் கோடை விடுமுறைக்கு வீட்டில் உறவினர்கள் கூட்டம் வழக்கம் போல மீன் மார்க்கெட்டுக்குப் போகும் இலாகா எனக்கு தரப்பட்டது.

மீன் மார்க்கெட்டில் கேட்டது தான் அந்தக்கிழவியின் குரல்.. எதிரில் நடுத்தர வயதுள்ள ஒரு பெண்மணி சங்கடத்துடன் கெஞ்சிக் கொண்டிருந்தார் "அப்புறமா தந்துடுறேன் ஆயா இனி லேட்டாவாது" சற்றுநேரம் கவனித்ததில் அந்தப்பெண்மணி கையில் 65 ரூபாய் தான் வைத்திருந்தார்  ஆனால் ஒரு கூறு மீன் 80 ரூபாய் மீதி 15 ரூபாய் கடனாக கேட்கிறார் எனப் புரிந்தது.

அந்தப் பெண்மணி அந்தக் கிழவிக்கு பழைய பாக்கி ரூ.300 தர வேண்டுமாம் கிழவி எந்தக் குறிப்புகளும் இல்லாது தேதி வாரியாக அந்தபெண் வாங்கிய கணக்கை சொல்லி குமாரசாமிகளை வெட்கப்பட வைத்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் வா சாரு என்றவள் "இந்தாமே பெர்ய கஸ்டமரு (என் உருவத்தைபார்த்தல்ல) வந்திருக்காரு போ அப்பால...

என்றுவிட்டு.. இன்னா சாரு வஞ்சிரம் போடவா தேங்கா பத்தை கணக்கா இர்க்கும் இன்னிக்கு கார்த்தால புட்ச்சது தான்.. என அவள் மார்க்கெட்டிங் திறமையை காட்ட ஆரம்பித்தாள்.. எங்கள் வீட்டில் கேட்ட சில மீன்கள் இல்லை.என்ன இருக்கு என்ன இல்லை என்பதை நான் ரன்னிங் கமெண்ட்ரி தந்து கொண்டிருக்க அய்யே இன்னாபா நீ..

இத்த அப்டியே போட்டோ எட்த்து ஏதோ வாச்சுஅப்பாமே அதுல ஊட்டுக்கு அனுப்புவியா எனக்கேட்டு தான் ஒரு அப்டேட்டடு வெர்ஷன் கிழவி என்பதை எனக்கு நிரூபித்தாள்.. ஒருவழியாக முடிந்த எனது பர்ச்சேஸ்2300 ரூபாய்.. நான் கொண்டுபோனது 2000 ரூபாய்..300 ரூபாய் இல்லை ஏற்கனவே கடன் வாங்கிய அந்த பெண்மணியிடம் கிழவி சொன்னது நினைவுக்கு வந்தது..

அடடே இவள் கறார் கிழவியாயிற்றே கடந்த இரண்டு ஆண்டுகளாக இவள் பரிச்சயம் என்றாலும் இதுவரை கடன் சொன்னதில்லை.. ஒரு 300 ரூபாய் மீனை திருப்பி கொடுத்துவிடலாம் என முடிவு செய்து அவளிடம் என் நிலையை சொன்னேன்.. திடுக்கிட்டவள் அய்யே இன்னா ஸார் இது உங்கள தெரியாதா.. ஒன்யும் பிரச்னை இல்ல அடுத்து வரும்போது தா சார் என்றாள்.

இல்ல அவங்க கிட்ட நீங்க பேசினதை கேட்டு.... என்று நான் இழுக்க கிழவி சிரித்தாள் அவளும் நீயும் ஒண்ணா சார்.. நீ கவலைப்படாம ஊட்டுக்கு போ என்றாள். இப்போதும் அந்தப்பெண் சங்கடத்துடன் சற்று தள்ளி நின்று கொண்டிருக்க.. எனக்கு அப்பெண்ணின் வீட்டில் உள்ள குழந்தைகளை நினைத்துப் பார்த்தேன்.. சட்டென ஒரு எண்ணம்...

பாட்டி அந்தம்மா தரவேண்டிய 15 ரூபாயும் என் கணக்கில சேர்த்துக்க.. அவங்களுக்கு கேட்ட மீனை தந்துடு என்றேன்...ஒரு நிமிடம் என்னை பார்த்தவள்.. புன்னகைத்தபடி அடிக்குரலில் அட நீ போ அது அப்படித்தான் கேக்கும் நானும் இல்லேன்னுவேன்.. அப்புறம் தந்துடுவேன் 3புள்ளக்காரி.. கறாரா நட்ந்துகுற மேறி நட்ந்துகிட்ட தான் நமக்கு மதிப்பு அக்காங்..

என்றுவிட்டு.. அந்தப் பெண்ணிடம் திரும்பி இந்தா இதான் கடசி தரம்.. இனி கடன் கேட்டா அவ்ளோதான் என்றபடி கூறு மீனை அள்ள அந்தப்பெண் மலர்ந்த் முகத்துடன் அதை வாங்கிக்கொள்ள.. இப்ப பாக்கி 315 என மறுபடியும் குமாரசாமிகளை வெட்கப்பட வைத்தாள் கிழவி. அப்படியே ஒரு தேர்ந்த அரசியல்வாதி போல இந்த சம்பவத்திலிருந்து தாவுவோம்..

இது இதற்கும் ஒரு வருடம் முன்பு.. என் மகளை பள்ளியில் சேர்க்கப் போயிருந்தேன்.. +1 லிருந்து +2.... இடம் கிடைப்பது கடினம்.. எனக்கு தெரிந்த பெரிய சிபாரிசுகளைப் பிடித்து இடம் வாங்கிவிட்டேன்.. பீஸ் கட்டியும் முடித்துவிட்டேன்.. பள்ளிக்கு நன்கொடை கேட்டார்கள்.. எவ்வளவு எனக் கேட்டேன் உங்கள் பிரியம் என்றார்கள். நான் 25ஆயிரம் என்றேன்.

கரஸ்பாண்டடிடம் பேசிவிட்டு சொல்கிறோம் என்றார்கள்.. சரி என்று வந்து விட்டேன்.. மறுநாள் பள்ளியிலிருந்து போன் கரஸ்பாண்டண்ட் 50 ஆயிரம் கேட்கிறார் இல்லாவிட்டால் இடம் இல்லை என்றார்கள்.. நானும் சரி நேரில் போய் பேசலாம் என சொல்லி அவரை போய் பார்த்தேன்.. நரசிம்மராவை விட சிடுசிடுப்பாக மூஞ்சியை வைத்துக் கொண்டிருந்தார்..

40ஆயிரம் ரூபாய் வரை பேசினேன் மசியவே இல்லை.. கடைசியில் கையில் இருந்த பணமெல்லாம் போட்டு 47 ஆயிரம் தந்தேன்.. சற்று அலட்சியமாக பார்த்துவிட்டு மணியடித்தார் பள்ளிக் கணக்காளர் வர அவரிடம் 47 ஆயிரத்தை தந்துவிட்டு ஒரு வார்த்தை சொன்னார் பாருங்கள்.. சார் நாளைக்கு வருவாரு மிச்சம் 3 ஆயிரம் வாங்கினதுக்கு பின்னாடி...

இவர் பொண்ணுக்கு சீட்டு தாங்க என்றவர்.. கண்ணாலேயே என்னை வெளியே போடா என்றார்.. இப்போது யோசித்துப் பார்க்கிறேன்..கடன் வைத்தவருக்கே கறார் போல நடித்து பின் மனிதாபிமானத்துடன் அவளிடம் நடந்து கொண்ட மீன்காரக் கிழவி அந்த கறார் சிடுமூஞ்சி கரஸ்பாண்டண்ட்டை விட மிக மிக உயர்ந்த மனுஷியாக தெரிந்தாள். 

இன்று கல்வி தான் கறார் வியாபாரம்..அதை விற்பவர்கள் தான் கறார் வியாபாரிகள். இப்போது அந்த கரஸ்பாண்டண்ட் தான் பொருத்தமாக இருக்கிறார் இந்தக் குரலுக்கு...

#காசை_வச்சிட்டு_எடுத்துட்டுபோ