Tuesday 19 May 2015

எதிர்காலத்தில் ஒரு நாள்...

கி.பி.2314

சென்னை பரபரப்பாக விடிந்திருந்தது ரோபோ கான்ஸ்டபிள்கள் போக்குவரத்து சிக்னல்களாகவே செயல் பட்டுக்கொண்டிருந்தனர்.. இன்றைக்கு சாலைப் போக்குவரத்து தினம்..! வான் வெளி போக்குவரத்து தடை செய்யப்பட்ட நாள்... மக்களும் தங்கள் ஹெலி டாக்சிகளை Road Modeக்கு மாற்றி இருந்தார்கள்..

எல்லோரும் பரபரப்பாக ஆவலாக சாலைகளில் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.. அவர்களின் முகத்தில் மிகப் பெரும் ஆச்சர்யம் பொங்கிக் கொண்டிருந்தது.. இதயம், மூளை, கை, கால் போன்ற மாற்று உடல் உறுப்புகள் விற்கும் அரசு மெடிக்கல்களில் புதிய கண்கள் வாங்கி பொருத்திக் கொள்வதில் பெரும் கூட்டம் நின்றிருந்தது..!

எல்லோரும் எதையோ பார்க்க போகும் பரபரப்பு அந்த நகரின் காற்றில் கலந்திருந்தது... "நீ பார்த்துட்டியா? நிஜம் தானா? எப்படி இருந்தது? தொட்டு பார்த்தாயா? தொட அனுமதித்தார்களா? இப்படியான கேள்விகள் தான் ஒருவருக்கு ஒருவர் உதடுகள் உச்சரித்த வார்த்தைகளாக இருந்தது..!

21 ஆம் நூற்றாண்டின் அரிய பொருள் ஒன்றை பொது மக்கள் பார்வைக்கு அரசு அருங்காட்சியத்தில் வைத்து இருப்பதை தான் அவர்கள் அப்படி பேசிக் கொண்டிருந்தனர்.. இன்று தான் கடைசி தினம் அதை பார்வையிட.. பொது மக்கள் கூட்டம் கூட்டமாக அருங்காட்சியகம் நோக்கி விரைந்து கொண்டிருந்தனர்...!

அருங்காட்சியகம் அமைந்திருக்கும் சாலைக்கு 2 கி.மீக்கு முன்பே போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.. எங்கும் இராணுவ வீரர்கள் தலைகள் தான் ஹை டெக் லேசர் துப்பாக்கிகளுடன் ரோந்து வந்து கொண்டிருந்தனர். வானில் ஹெலிகாப்டர்கள் வட்டமடித்துக் கொண்டிருந்தது..ஏலியன் ஸ்கேனர்கள் அமைக்கப்பட்டு வேற்று கிரகவாசிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது.

அந்தப்பகுதி முழுவதும் பாதுகாப்பு, பாதுகாப்பு, பாதுகாப்பு... அருங்காட்சியத்திற்கு ஒரு கி.மீக்கு முன்பே மக்கள் கூட்டம் நீநீநீநீநீநீநீநீண்ட வரிசையில் காத்திருந்தது.. அனைவரின் முகத்திலும் விவரிக்க முடியாத உணர்வுகள்.. மெல்ல காய்கறிப் புழு போல் கூட்டம் முன்னேறிக் கொண்டிருந்தது.. பார்த்தவர்கள் எதிர்புறம் வெளியேறிக் கொண்டு இருந்தார்கள்.. அவர்கள் முகங்களில் நம்ப முடியாத பரவசம்.!

அந்த பொருள் அணுகுண்டால் கூட சிதைக்க முடியாத சிலிக்கான்ஃபுரூப் கண்ணாடி கூண்டில் வைக்கப்பட்டிருந்தது.. கண்ணை உறுத்தாத அதே நேரம் பிரகாசமான விளக்கொளியில் பளீரென தென்பட்டது அப்பொருள்..ஒவ்வொரு பார்வையாளருக்கும் 5 வினாடிகள் மட்டுமே பார்வை நேரம்.. !

பார்வையாளர் நின்று பார்க்க உயரமான ஒரு மேடை.. அதில் ஒருவர் தான் நிற்கமுடியும் கை குழந்தைகள் உள்ளவர்கள் மட்டும் குழந்தையோடு நிற்க அனுமதி.. அதோ அந்த பெண்மணி தன் 2 வயது குழந்தையோடு நின்று சொல்லிக் கொண்டிருந்தாள்.."அதோ பார்.. அது தான் நம் முன்னோர்கள் உண்டு உயிர் வாழ்ந்த பொருள்" என்று.. 

அந்த ஒளி வெள்ளத்தில் அந்தக் கண்ணாடிப் பெட்டியில் தெரிந்தது.. #ஒரு_கைப்பிடி_அரிசி..

Saturday 9 May 2015

ஏழையின் துயரம்..

#என்னை_அழவைத்த_குறும்படம்

வாட்ஸப்பில் வந்திருந்தது ஒரு ஏழைப்பெண்ணைப் பற்றிய குறும்படம்.. சுமார் 4 நிமிடங்கள் ஓடக்கூடிய படம் அது முதல் காட்சியிலேயே ஒரு எளிய வீட்டின் ஒரு சிறு அறை காண்பிக்கப்படுகிறது..

அங்கு 23 வயது பெண்ணொருத்தி இருக்கிறாள் அவள் குடும்பம் மிகவும் வறுமையில் இருக்கிறது என்பதை அவளைப் பார்த்ததுமே தெரியும்..ஆம் நண்பர்களே அந்தப் பெண் அணிவதற்கு கூட ஆடையில்லாமல் உடலில் துணியின்றி இருக்கிறாள்.!

ஏழ்மையின் துயர் தாளாது மெல்ல அங்கு விரித்திருக்கும் பாயில் தலை சாய்க்கிறாள்.. இப்போது அந்த அறைக் கதவு திறக்கப்படுகிறது.. அங்கு நான் கண்ட காட்சி என்னை திடுக்கிட வைத்தது வந்தது ஒரு ஆண் அவனும் பரம ஏழை போல...

ஏனெனில் அவனும் ஆடைகள் ஏதும் அணியாது அந்த பெண்ணிடம் வருகிறான்... ஒரு ஏழையின் கஷ்டத்தையே பார்க்க முடியாத என்னால் இன்னொரு ஏழையின் கஷ்டத்தை எங்ஙனம் காண்பது..! சொல்லொணாத் துயரில் துக்கம் தொண்டையை அடைக்க அந்த வீடியோவை அணைத்து விட்டேன்.. எனக்கு பிஞ்சு மனசுங்க..

இந்தக் கத்தியில் பழமும் நறுக்கலாம்..

#கிரெடிட்கார்டு

கிரெடிட் கார்டுகள் இது கூரிய கத்தி.. கவனமாக கையாளாவிட்டால் சிதைத்துவிடும். பொதுவாக கிரெடிட் கார்டு கம்பெனிகளின் சட்ட திட்டங்கள் விதிகள் எல்லாம் மக்களுக்கு உகந்தவை அல்ல நீங்கள் வெள்ளை பேப்பரில் கையெழுத்திடுவதும் அதன் விதிகளை ஒப்புக் கொள்வதும் ஒன்றே.!

மேலோட்டமாக குறைந்த வட்டி என்னும் பெயரில் அவர்கள் வாங்குவது அதிக வட்டியே.. ஃபிளாட் இண்ட்ரஸ்ட் என்று தான் போடுவார்கள்.. அதாவது 10ஆயிரம் ரூபாய் கடனுக்கு ஒரு வருட தவணையில் மாதா மாதம் பணம் செலுத்தினாலும் வட்டி கடைசி வரை அந்த 10 ஆயிரத்துக்குத் தான்.. புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

சரியான தேதியில் பணத்தை செலுத்தாவிட்டால் வட்டி கட்டியே நீங்கள் ஓய்ந்து விடுவீர்கள். ஆனாலும் இந்த கிரெடிட் கார்டுகளிலும் நன்மை இருக்கிறது.. இதை சரியாகப் பயன்படுத்தினால் அதன் பலனை நன்கு அனுபவிக்கலாம்.! அதைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.. முதலில் கிரெடிட் கார்டுகள் பாதுகாப்பானவை..!

ஏனெனில் உலகெங்கும் அதை கொண்டு செல்லலாம்.. பணமாக வைத்திருக்கும் அவசியம் இல்லை.. தொலைந்தாலும் அதை பிளாக் செய்து விடலாம்... முதலில் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்கள் தங்கள் பில் ஸ்டேட்மெண்ட் தேதியை நினைவில் வைத்துக் கொள்வது அவசியம்.. பில்லில் பார்த்தால் தெரியும்.

உதாரணமாக உங்கள் பில் தேதி மாதாமாதம் 19 ஆம் தேதி என்றால்.. உங்கள் கார்டுகளை 20 ஆம் தேதி முதல் பயன்படுத்துங்கள்.. அடுத்த 19 ஆம் தேதி தான் பில் போடப்பட்டு உங்களுக்கு அனுப்புவார்கள்.. அதிலிருந்து அதிகபட்சம் 15 நாட்கள் கழித்து தான் பணம் செலுத்த வேண்டும்.. ஆக 45 நாட்கள் கழித்து பணம் தரலாம்.

இதற்கு எந்த வட்டியும் கிடையாது..! சேவை வரி மட்டும் உண்டு அதாவது 10 ஆயிரம் ரூபாய்க்கு பர்ச்சேஸ் செய்திருந்தால் 130 ரூபாய் வரி சேர்த்து மட்டுமே வரும்.. இவையெல்லாம் அந்த due தேதிக்குள் செலுத்தினால் மட்டுமே. ஒரு நாள் லேட்டானாலும் வட்டி தான். Due தேதிக்கு இரு நாட்கள் முன்பு பணம் செலுத்துவது நல்லது. ஒருவேளை திடீரென தொகை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால்..!

உங்கள் பில்லிலேயே மேற்புறம் மினிமம் due எனக் குறிப்பிட்டு இருக்கும் உதாரணமாக 10 ஆயிரம் பில்லுக்கு 600 ரூபாய் தான் வரும் அதை செலுத்தினால் போதும்.. அடுத்த மாதம் செலுத்தலாம் ஆனால் அதற்கு வட்டி வரும். கார்டுகள் பற்றிய விவரங்களை போனில் யாரிடமும் சொல்லாதீர்கள்..!

முக்கியமாக cvv நம்பர்.. இதை யாரும் கேட்டால் தரவே தராதீர்கள்.. E- மார்க்கெட்டிங் என நெட்டில் பர்ச்சேஸ் செய்யும் போதும் cvv நம்பர் டிஸ்ப்ளே ஆனால் அந்த பர்ச்சேஸை தவிர்க்கவும்.. Cvv எண்களை டைப் செய்யும் போது **** என வருகிறதா என்று கவனமாக பாருங்கள்.. நெட் பர்ச்சேஸில் ஒன் டைம் பாஸ்வேர்டு மூலம் வாங்குவது பாதுகாப்பானது. மறக்காமல் லாக் அவுட் செய்யுங்கள்.

அதே போல கார்டுகளில் சிப் பொருத்தப்பட்டு இருந்தால் உங்கள் பின் நம்பரை நீங்களே டைப் செய்யுங்கள்.. சர்வரிடம், சேல்ஸ்மேனிடம் சொல்லாதீர்கள். கார்டுகளை சரியாக பயன் படுத்தினால் 40 நாட்கள வட்டியில்லா கடன் கிடைக்கும் கார்டு இருக்கிறதே என்று தங்க வியாபாரி போல உரசாதீர்கள்..!

பெரிய பர்ச்சேஸ் 25 ஆயிரத்திற்கும் மேல் இருந்தால் மாதா மாதம் தவணை உண்டு அதை எளிதான ஈ.எம்.ஐ ஆக மாற்றிக் கொள்ளலாம்.. உங்கள் கிரெடிட் கார்டு கஸ்டமர் கேர் எண்களை நினைவில் வைத்திருங்கள்.. தைரியமாக புகார் கொடுங்கள் தேவையில்லாது பில்லில் தொகை குறிப்பிட்டு இருந்தால் அது எதற்கு என கேளுங்கள்.. அது சரியில்லை என்றால் தரமுடியாது எனச் சொல்லுங்கள்.

குறிப்பிட்ட காலத்தில் கார்டுகள் புதுப்பிக்கப்படும் போது பழைய கார்டுகளை இரண்டாக நான்காக வெட்டி எறிந்து விடுங்கள்.. முக்கியமாக கிரெடிட் கார்டு தொகையை நெட் பேங்கிங் மூலம் செலுத்துங்கள்.. செக்காக கொடுத்தால் அவசியம் செக்கின் பின்புறம் உங்கள் பெயர்/அலை பேசி எண்ணை குறிப்பிடவும், செக்கில் ஏதும் தவறு இருந்தால் அதை உங்களிடம் கூற எளிதாக இருக்கும்.

எல்லாவற்றிற்கும் மேல் உங்கள் மற்றும் வீட்டிலுள்ள மற்றவர்களின் கிரெடிட் /டெபிட் கார்டுகளை CPP என்னும் கார்டு புரொட்டக்ஷனில் பதியுங்கள் வருடத்திற்கு 1000 ரூபாய்க்குள் தான் வரும்.. ஒருவேளை உங்களிடம் திருடப்பட்ட கார்டுகளில் சைபர் க்ரைம் கில்லாடிகள் அதை உபயோகித்து பணம் எடுத்தால் கூட அதை நீங்கள் திரும்பப்பெறலாம்.. உங்கள் பணத்திற்கும் கார்டுகளுக்கும் சிறந்த பாதுகாப்பு..

CPP (Toll Free) 1800 419 4000 SMS to Talk : SMS 'CPP' to 56767 E.mail : cppindia.feedback@cpp.co.uk இது தான் உங்கள் கார்டுகளை பாதுகாக்கும் நிறுவனம் இங்கு பதிவு செய்து கொண்டு முழு பாதுகாப்பு பெறுங்கள்.. கிரடிட் கார்டுகள் கூரான கத்தி தான்.. ஆனாலும்

#இந்தக்_கத்தியில்_பழமும்_நறுக்கலாம்

Friday 8 May 2015

குறும்பா -3

லிமெரிக்...

கார் ஏற்றிக் கொன்ற வழக்கு
கான் மீது படிந்த அழுக்கு
பார்த்த சாட்சி
பல்டியடித்த காட்சி
தீர்ப்பை தள்ளிவைத்ததே இழுக்கு.

பட்டம் படித்திட கல்லூரிகள் திறந்து
படிப்புக்கு ஏற்றபடி  பணமங்கு கறந்து
கொட்டம் அடித்து
கொள்ளையை மறைத்து
திட்டம் தீட்டுகிறார் மனசாட்சி மறந்து.

இஞ்சினியரிங் படித்தான் முத்து
இறுமாந்து நடந்திட்டான் கெத்து
கஞ்சிக்கு வழியில்ல
கழுதைகூட மதிக்கல - இப்ப 
கெஞ்சி வாழுறான் டீ காபி வித்து.

பொன்னி அரிசியைக் குழைய வடித்து
பருப்பும் நெய்யும் அதிலிட்டு பிசைத்து
வென்னீர் போல ரசம்
வாய்த்திட்டால் வசம் 
என்றும் இதற்கிணை உருளைக்கிழங்கு வறுத்து.

வசந்தையும் கணேஷையும் படைத்தவன்
வாசகர் எண்ணங்களை நன்கு படித்தவன்
கசந்ததில்லை அவன் கதை
களிப்பிற்கது விதை
பசப்பி ஜல்லியடித்ததில்லை இவனே நிலைத்தவன்.

திருவரங்கத்தில் பிறந்த ரங்கராஜன்
திக்கெட்டும் புகழ்பெற்ற எங்க ராஜன்
அருமையாக எழுதியவன்
அறிவியலைப் பழகியவன்
உருவாக்கிய கதைகளில் அவன் தங்கராஜன்.

இளமை துள்ளும் எழுத்தில் கதை 
இன்றைய சந்ததியும் விரும்பும் அதை
வளமையான நடை
வாசிக்கயேது தடை
அளப்பரிய ஆற்றலுக்கு சுஜாதாவே விதை.

வெட்டி அழித்தனர் மரத்தோப்பு
வெயில் கொளுத்துதே யார் காப்பு
கொட்டுது வேர்வை
கொடுப்பாரோ தீர்வை - பசுமை
பட்டுப்போகும் இது பூமிக்கு ஆப்பு.

நம் அடையாளம் தாங்கிய ஆதார்
நீட்டினால் கேட்டனர் நீ யார்
உம் ஜாடை இருக்காது
ஊரே அதை மதிக்காது
எம்போன்றே தவிக்கின்றார் ஊரார்.

மம்மி என்று அழைக்குது பிள்ளை
மகிழ்ந்து குடிக்கிறார் ஆங்கிலக் கள்ளை
அம்மியில் நசுக்கி
அழகுத்தமிழ் பொசுக்கி
வெம்பி நம்மொழி போனது கொள்ளை.

குளிர் அடிக்கும் கொடை க்ளைமேட்டு
குதுகலத்தில் இது ரொம்ப அல்டிமேட்டு
தளிர் நடை
தகுந்த உடை
வெளிரிடும் அதுயின்றி உடல் நோடவுட்டு.

கோடை விடுமுறையை கழிக்க
கொடைக்கானல் வந்தேன் களிக்க
வாடைக் காற்று
வசந்தக் கீற்று
தாடை தாளமிடுது குளிர் அடிக்க.

இந்துக்கள் நாடென்பார் நேபாளம்
இடிந்து விரிசல் ஆனது பாளம் பாளம்
வந்தது பூகம்பம்
வலிகள் ஆரம்பம்
நொந்தவரங்கு கேட்பாரோ பூபாளம்?

பாரதி என்கின்ற ஞான ரவி
பாடியே வென்றான் இந்தப் புவி
சாரதியானான் பாட்டுக்கு
சாதியில்லையென்றான் நாட்டுக்கு
நேரது நிற்பான் இவன் அச்சமிலா வீரக்கவி.

கோடையில் பெய்த மழையாம்
குளிரச் செய்தது  நல்வழியாம்
ஆடையது நனைத்து
ஆனந்தத்தில் திளைத்து
மேடையின்றி ஆடுவது முறையாம்.

சின்னவெங்காயம் பொடியாய் நறுக்கி
சிறப்போடதை எண்ணெயில் வதக்கி
சொன்னேன் முட்டை சேர்க்க
சீருடன் தோசைமாவும் கலக்க
தின்போரை ஈர்க்குமிந்த எக்தோசை மயக்கி.

அயல் நாடுகள் பலவும் சுற்றினார்
அந்நிய முதலீட்டை கைப்பற்றினார்
புயல் போல ஓடி
புகழானார் மோடி - சின்னப்
பயல்கூட கலாய்ப்பதால் வெட்கினார்.

வார்த்த தோசையில் வட்டநிலா தெரியுது
வாங்கப் பணமில்ல வயிறெல்லாம் எரியுது
சேர்த்த காசு ஏதுமில்ல
செலவழிக்க தோதுமில்ல - ஏழையைப்
பார்த்தவங்க உதவிட்டா அதுதானே பெரியது.

இன்னா நடக்குதுன்னு ஒன்யுமே பிரிலை
இது யார்னு கேக்குறாங்க எதுமே தெரிலை
சொன்னா அத்த நம்பு
சொம்மா செய்யாத வம்பு
என்னாபா ஆதாருல எவன் மூஞ்சும்சரியிலை.

சாதிக்கப் பிறந்த மனிதர் வாழ்வு
சாராயத்தால் அடைந்திடும் வீழ்வு
போதித்தாலும் தெரியாது
போதையெதுவும் தெளியாது 
பாதித்தோர் சென்ற இடமெல்லாம் தாழ்வு.

கம்பனைக் கரைத்துக் குடித்து
கவிதைகள் பலவும் வடித்து
கொம்பனாக இங்கு
கொடுத்தாரே பங்கு
வம்பனாக மாற நின்றிடு நீ எதிர்த்து.

புளியோதரையில் நல்லெண்ணெய் மணக்க
பருப்புத் துவையலும் அதனோடு சிறக்க
தாளிப்பில் வேர்க்கடலை சேரு
தயிர் சேர்த்து சாப்பிட்டுப் பாரு
களிப்பான உணவிதனை எப்படி நான் மறக்க.

தலைமுடி கொட்டி வரும் வழுக்கை
தயங்காது அணிகின்றார் அதற்கு விக்கை
விலை மிக மிக அதிகம்
வளர்வதென்னவோ வணிகம்
இலைச்சாறு அமேசானாம் நாடுகிறார் அத் திக்கை.

மாலுக்குள் ஷாப்பிங் என்னும் பேரில்
மொய்க்குதய்யா கூட்டம் இவ்வூரில்
மேலுக்கு பந்தா காட்டி
மேய்ப்பார் பிள்ளகளை ஓட்டி - பின்னர்
காலுக்கு ஓய்வளித்தமர்வார் ஃபுட்கோர்ட் சேரில்.

மல்லிகை பிச்சி கனகாம்பரம் பூவை
மாலை நேரத்தில் விற்றாள் பாவை
சல்லிசா விலை கேட்டா
சிரிப்பா ஆனா தர மாட்டா
கில்லியவ வியாபாரத்தில் அதுதானே தேவை.

காரைக்குடி விருதுநகருக்கு பஸ் போச்சு
கவின்மிகு சென்னையிலது மெஸ் ஆச்சு
காரை விட பார்க்கிங்
களிப்புடன் பின் ஈட்டிங் - வெறும்
மோரைக் குடிப்பவனுக்கு இது ஆகாத பேச்சு.

வீதியில் முன்பு கூடிப் பேசுவார்கள் வீணாக
வீட்டுத் திண்ணைக்கும் போனதது தானாக
பீதியை நன்கு கிளப்பி
பொய்யை மெய்போல் குழப்பி
சாதித்தார் இன்றதை வாட்ஸப் போனாக.

பஜ்ஜியில் வெங்காயம் வைத்து
பதமாக சுட்டார் மாஸ்டர் முத்து
சொஜ்ஜியில் மெய்யாக
சொட்டுது நெய்யாக
வெஜ்ஜில் பலகாரமிது ரெண்டும் கெத்து.

Tuesday 5 May 2015

பூகம்பத்தில் 2 நிமிடம்

#என்_பூகம்ப_அனுபவம்

காலை 10 மணி தென் ஆப்பிரிக்காவில் லாஸ்ட் சிட்டி என்றும் அழைக்கப்படும் உலகின் சிறந்த பொழுது போக்கு சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சன் சிட்டியில் அமைந்திருக்கும் அம்யூஸ்மென்ட் பார்க்கில் கூட்டம் அலை மோதுகிறது.. 

அங்கிருந்த இருவர் பேசியதி கேட்டோம்.. பூகம்பம் எத்தனை மணிக்கு..? அதுவா 10:30 க்கு விட்டா 12:30 அடுத்து 3:30 அடுத்த டவுன் பஸ்சுக்கு நேரம் சொல்வது போல சொல்லிக்கொண்டு போனார்கள் நாங்களும் அவர்களைத் தொடர்ந்தோம்.

எங்களோடு பலரும் பூகம்பம் பற்றி பேசிக் கொண்டும் கூட்டமாக கோக் குடித்துக்கொண்டும் காதலிகளை அணைத்துக் கொண்டும் முத்தமிட்டுக் கொண்டும் வேகமாக நடந்து கொண்டிருந்தார்கள்.. எனது ஆச்சரியம் எல்லாம் அதுவல்ல..!

எப்படி இவர்கள் பூகம்பம் வருவதை முன்கூட்டியே அதுவும் நேரத்தை குறிப்பிட்டு சொல்கிறார்கள் என்ற ஆச்சர்யம் தான்.! ஆனால் அதற்கு விடை அங்கு கிடைத்தது. நாங்கள் எல்லோரும் ஆவலாய் குவிந்த இடம் "எர்த்க்வேக் ஏரியா"..

இங்கு செயற்கையாக பூகம்பம் ஏற்படுத்துகிறார்கள் அதிக பட்சம் 8 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டால் கிடைக்கும் அனுபவத்தை இங்கு பெறலாம்.. அந்த இடமும் குகை போல ஆங்காங்கே விரிசலுடன் காணப்பட்டது சுவர் எங்கும் கைப்பிடிகள்..!

கீழே விழாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள். எல்லோரும் காத்திருந்தோம் ஸ்பீக்கரில் அறிவிப்பு வந்தது என்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாது என்று.. சிவப்பு விளக்குகள் அந்த குகையில் பளிச்சிட...  மிகபெரிய சைரன் அடித்ததும் கவுண்ட்டவுன் ஆரம்பிக்க 0 வந்ததும் அதிரும் இசையுடன் பூமி அதிர ஆரம்பித்தது..!

காலடியில் திரெட் மில்லில் நடப்பது போல பூமி நழுவ ஆரம்பித்தது (4ரிக்டர்) அடுத்து சில வினாடிகளில் வல இடமாக ஆட (6 ரிக்டர்) அடுத்து நம்மை  தடுமாற வைத்து தள்ளுவது போல குலுங்க இப்போது பலர் அலற ஆரம்பித்து விட்டார்கள் (8ரிக்டர்)

சரியாக 2 நிமிட அனுபவம்..! மீண்டும் ஸைரன் ஒலிக்க பச்சை விளக்குகள் எரிய பூகம்பம் நிறுத்தப்பட்டது.. பலருக்கு முகத்தில் பீதி சிலருக்கு தலை சுற்றல் ஒவ்வாமையில் சிலர் வாந்தி எடுக்க ஓடினார்கள்.. எனக்கும் கொஞ்சம் தலை சுற்றல் இருந்தது.

பாதுகாப்பாக நேரம் அறிவித்து செயற்கையாக உருவாக்கிய பூகம்பமே நமக்கு இப்படி என்றால் நேரம் தெரியாது திடீரென இயற்கையாக வரும் பூகம்பம் ரொம்பக் கொடுமை என இப்போது தோன்றுகிறது.

Sunday 3 May 2015

அமிர்தா தந்த வேலை..

க்கிக்கிக்கிங்..கீங்..கீங்..கீங்.. என்ற விநோதமான ஹாரன் மதுரையில் (கிருஷ்ணாபுரம் காலனி & மகாத்மா காந்தி நகர் பகுதிகளில்) ஒலித்தால் பெண்கள் வீட்டிலிருந்து பாத்திரத்தோடு ஓடி வருகிறார்கள்.அந்த ஒலியெழுப்பியது ஒரு சைக்கிள்!

முன்னொரு காலத்தில் வீட்டுக்கு பால்காரர் மணியடித்தபடி வருவது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் அல்லது நினைவிலிருக்கும்.. அதை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணியது போல் இந்த காலத்து வியாபாரம் அதே சைக்கிளில்.!

வீடு வீடாக இட்லி மாவு தருவது தான் இந்த வியாபாரம்.! வினோதமான ஒலியெழுப்பும் அந்த பிளாஸ்டிக் ஹாரன் கிளிப்பச்சை நிறத்தில் மதுரை மீனாட்சியம்மன் கையில் அமர்ந்த கிளி போல சைக்கிள் ஹேண்டில்பாரில் அமர்ந்திருக்கிறது (சைக்கிள் பெல் மாட்டும் இடத்தில்)

பின்னால் கேரியரில் பெரிய சில்வர் அண்டாவில் மாவு அதன் மேல் கயிறுகட்டி ஒரு மூடி.. சைக்கிளின் ஹேண்டில்பாரில் இடது பக்கம் சிறிய வாளியில் நீர் அதில் ஒரு குட்டி எவர்சில்வர் கப்.. ஓட்டலில் பட்டைசாதம் என தருவார்களே அந்த சைசில்.

ஒரு கப் 5 ரூபாய்.. தேவையான அளவு வாங்கிக் கொள்ளலாம்.. வேலைக்கு செல்பவர்கள் மட்டுமல்ல இல்லத்தரசிகளுக்கும் அரிசி உளுந்து ஊறவைத்து அதை பவர்கட் வருவதற்குள் ஆட்டி எடுத்து... இப்படி சிரமப்படாமல் எளிதாக வீடு தேடி வரும் மாவு... மகிழ்வோடு வாங்கிக் கொள்வார்கள் அல்லவா.

காலமாற்றத்தில் மக்களது தேவை, அவர்களது தினசரி வேலைச் சுமை, நாட்டிலுள்ள மின் பற்றாக்குறை, வீட்டிலிருந்து மளிகைக் கடை போக விடாத சாமர்த்தியம், அதை விட அன்றாடம் நம் மக்களுக்கு தேவைப்படும் உணவு என இதற்கு ஐடியா பிடித்தவரை மார்க்கெட்டிங் சூரர் எனச் சொல்லலாம்.

காலை மாலை இரு வேளையும் வலம் வருகிறது இந்த மொபைல் இட்லி மாவு வியாபாரம்.. அந்த வியாபாரியிடம் கேட்டேன் நாள் ஒன்றுக்கு காலை மாலை இரு வேளையும் 600 ரூபாய் லாபமாக சம்பாதிக்கிறார்.. இவரது தம்பியும் ஒரு சைக்கிள் அவரது வருமானமும் 600 ரூபாய்..! 

ஆக நாள் ஒன்றுக்கு 1200 ரூபாய் மாதம் 36000 ரூபாய் வீட்டில் நான்கு கிரைண்டர்கள் வைத்திருக்கிறார் அரிசி மில்லில் மொத்தமாக அரிசி வாங்குகிறார்.. உளுந்தும் அப்படியே வீட்டில் பெண்கள் மாவாட்டி வைக்க இவர்கள் அதை எடுத்துப் போய் வியாபாரம் செய்கின்றனர்.

காலை 7மணி முதல் 9:30 வரையும் மாலை 6 மணி முதல் 8 மணி வரையும் தான் வேலை.. பிற நேரங்களில் வடை பஜ்ஜி போண்டா சுட்டு டீக்கடைகளுக்கு மொத்தமாக சப்ளை செய்கிறார்கள் அதில் வரும் வருமானம் தினசரி 1000 ரூபாய்..! என்ன கிரைண்டர் வச்சு இருக்கிங்க அண்ணே அமிர்தா கிரைண்டருங்க என்றார்..!

கூவிக்கூவி வெளிநாட்டு வேலைன்னு அழைக்கும் அமிர்தாவில் படிக்காமலேயே மாதம் 60 ஆயிரம் சம்பாதிக்கும் அந்த உழைப்புக்கு ஒரு ராயல்சல்யூட்.. நாட்டில் தான் மக்களுக்கு நேர்மையாக பிழைக்க எவ்வளவு வழிகள்.. நேரமாச்சு வரட்டுங்களா கிளம்பி விட்டார்.. காதுகளில் ஒலிக்கிறது அந்த க்கிக்கிக்கிங்..கீங்..கீங்..கீங்.. என்னும் சத்தம்..

#உங்களுக்கும்_கேக்குதா