Thursday 27 November 2014

தீனா

இந்த தலமுறயில நீ  இஸ்கோலுக்கு போயி பட்ச்சு அப்பால காலேஜிக்கு போயி பெர்ய பெர்ய படிப்புல்லாம் பட்ச்சா அத்து ஏழேழு தலமுறிக்கும் உன் கூடயே  காவக்காரன் கணக்கா வந்துகினே இர்க்குமாம்..! "பட்ச்சிடு நீ முறையா.. அது தொடர்ந்து வரும்  தலைமுறையா" சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து.

[ பொருட்பால் : அதிகாரம் : கல்வி : குறள் எண் :398 ]

Thursday 20 November 2014

அம்மி மிதித்து....

அம்மி...

இந்தக்கால குழந்தைகளுக்கு மம்மி என்றால் தெரியும் அம்மி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. அந்த காலத்தில்  பெரும்பாலும் அடுப்படியை ஒட்டி வீட்டின் பின் புறத்திலும் வாய்ப்பில்லாத வீடுகளில் வாசல் புறத்திலும் பெரிய வீடுகளில் முற்றத்திலும் இடம் பிடித்திருக்கும்..!

அம்மா அதில் அரைக்கும் மசாலாவை வைத்தே வீட்டில் சாம்பாரா புளிக்குழம்பா, கறிக்குழம்பா என அறிந்து கொள்வோம்.. எந்த ப்ரீத்தியும் கேரண்டி தராத காலம் என்பதால் சட்னி அரைப்பதும் அதில் தான்..

அவசரத்திற்கு பழைய சாதத்திற்கு துவையல் அரைத்தும் தருவார்கள் தரையில் அமர்ந்து இரு காலையும் இரு புறம் கலவிக்கு வைப்பது போல் வைத்து சட்னிக்கு இழுத்தரைப்பார்கள்.. இப்போது அந்த பயிற்சியைத் தான் பெரு நகரங்களில் உள்ள ஜிம்முகளில் பயிற்சியாக வைத்து மாதம் 3000 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள்..!

அப்போதெல்லாம் அது அம்மா படும் கஷ்டம் என்பதறியாமல் அம்மியில் இருந்து எகிறி விழும் தேங்காய் பத்தைகளை கேட்ச் செய்ய எம்.எஸ் டோனியைப் போல அமர்ந்திருப்போம்.!
சில நேரங்களில் தேங்காயை உடைத்த பின் நொறுக்குவதும் அம்மியில் தான்..
வீட்டில் பண்டிகை தினங்கள் வந்துவிட்டால் அம்மாவின் நேரம் பெரும்பாலும் அம்மிக்கல்லுடனே இருக்கும்.. எந்த சக்தி மசாலாவும் இல்லாத காலத்தில் அம்மாவின் சக்தியில் அரைத்த மசாலா அது..!

அந்த சுவைக்கு அம்மாவின் நெற்றியில் இருந்து  தவறி மசாலாவில் விழுந்த சில வியர்வைத்துளிகள் தான் ஒரு அலாதியான சுவைக்கு காரணமாக இருந்திருக்கலாம்.. சில அக்காக்கள் இருக்கும் பக்கத்து வீடுகளில் உள்ள அம்மாக்களுக்கு அந்தளவு சுமை இருந்திருக்காது..அக்கா அரைக்கும் போது ஆண்பிள்ளைகள் வெளியேற வேண்டும் என்ற காரணம் நான் 9 ஆம் வகுப்பு வரும் வரை தெரியாது..!

பொதுவாக அம்மி அரைக்கும் போது தொடை வரை ஆடையை மேலேற்றி குனிந்து அரைக்க வேண்டும் ஆடைகள் விலகும் உடல் குலுங்கும் அது ஆண்பிள்ளைகளை சலனப்படுத்தி விடக் கூடாது என்பதற்காகத்தான். எனத் தெரிந்தது. தன் அம்மாவிடம் அல்லது அவள் வயதொத்த பிற பெண்களிடம் நமக்கு தெரியாத ஒன்று இளம்பெண்களிடம் தெரிந்துவிடும் என்பதால் அப்படிச் சொன்னார்கள் என்பதும் புரிந்தது..!

சிறுவர்களை அம்மிக்கு அருகே விளையாட அனுப்புவது இல்லை அவர்கள் காலை நசுக்கிக் கொள்வார்கள் அல்லது மழைக் காலங்களில் பூரான், தேள் போன்ற பூச்சிகள் அங்கு அடைக்கலம் ஆகியிருக்கும் அதனிடம் கடிபடக்கூடாது என்ற பாதுகாப்பு கருதி.. சில நேரங்களில் அம்மாவே தேள் கடி பட்டு அதே குழவியில் தேளைக் கொன்றுவிட்டு அதிலேயே மஞ்சள் அரைத்து பற்று போட்டுக் கொள்ளும் மல்டி பர்ப்பஸ் நிகழ்வுகளும் நடப்பதுண்டு..!

மஞ்சள் அரைத்து அம்மியை  செங்குத்தாக நிறுத்தி மஞ்சள் வழிக்கும் போது.. சிவப்பு நிறத்தில் மிளகாய் வழிக்கும் போது.. வெள்ளை நிறத்தில் தேங்காய் வழிக்கும் போது என அவை எல்லாம் எனக்கு கோவிலில் சாமி விக்ரகங்களுக்கு செய்யப்படும் அபிஷேகங்களை நினைவு படுத்தும். அம்மி கொத்துபவர் என்று ஒரு தொழிலும் இருந்தது.. அவரும் கிரைண்டர் காலம் வரை வந்து கொத்துவார்.. இப்போது விஞ்ஞானம் அந்த தொழிலையே கொத்தித் தூக்கிப் போய்விட்டது..!

எங்கோ சில கிராமங்களில் மனிதனின் கோபத்தால் சிலரின் தவறான மோகத்தால் அம்மி கொலைக் கருவியாக சிலர் தலையையும் அரைத்திருக்கிறது..ஆனால் அது அம்மியின் தவறல்ல இப்போதும் அம்மியை சம்பிரதாயங்களுக்கு மட்டும் திருமணங்களில் பயன் படுத்துகிறார்கள் அம்மி மிதித்து அருந்ததி பார்க்க.. நல்லவேளை இப்படி ஒரு சடங்காகவாவது அது இருக்கிறதே! என்று ஒரு சந்தோஷமே!

இருப்பினும் ஒன்று சொல்ல தோன்றுகிறது சம்பிரதாயமாக மட்டுமல்ல நாம் சத்தியமாகவும் #அம்மியை_மிதித்துவிட்டோம்

Wednesday 19 November 2014

பந்தி 2

#பந்தி

மதுரையில் வாழ்பவர்களுக்கு இருக்கும் நண்பர்கள் கூட்டத்தில் ஒரு சவுராஷ்டிரா சமூகத்து நண்பன் கூட இல்லை என்றால் அந்த நட்புக்கே அர்த்தமில்லை..! அந்தளவுக்கு மதுரையின் சுவாசமாக வாழும் நட்பு மிகுந்தவர்கள்.! கடின உழைப்பாளிகள், சுறுசுறுப்பானவர்கள் வாழ்க்கையை ரசித்து வாழ்பவர்கள்.!

எனது வட்டத்தில் அந்த சமூக நண்பர்கள் மிக மிக அதிகம்.அவ்வப்போது நண்பர்கள் வீட்டில் சாப்பிடப்போகும் போது தான் தெரிந்து கொண்டேன் சிற்றான்னங்கள் எனப்படும் பலவகையான சாதங்களை அவர்கள் செய்வது போல் யாரும் சிறப்பாக செய்ய முடியாது என்பதை.! அதற்கு அவர்கள் தரும் காம்பினேஷன் தான் சிறப்பு..!

எங்க வீட்டு சாப்பாடு பத்தி சொல்றியே இதே போல வீட்டு கைமணத்துடன் சூப்பரா சுவையா சாப்பிட ஒரு ஓட்டலே இருக்கு தெரியுமா.? என்று நண்பர் ஒருவர் அழைத்து சென்ற இடம் தான் அன்னபூரணி விலாஸ் பொங்கல் கடை..! மதுரை பழைய தினமணி தியேட்டருக்கு நேர் எதிரே அமைந்திருக்கும் ஒரு சிறிய கடை..!

வாசலிலிலேயே பார்சல் பகுதி..! பழைய கால எண்ணெய் வாங்கும் கடை போல சுற்றிலும் சில்வர் போணிகள் நிறைய பலவகை சாதங்கள் வைத்து இருக்க.. 2 தக்காளி 4புளியோதரை,2 தயிர் என கேட்கும் ஆட்களுக்கு கரண்டிகளில் அள்ளி பார்சல் செய்யும் அவரது நேர்த்தி எனக்கு டிரம்ஸ் சிவமணியை ஞாபகப்படுத்தும்.!

எனக்கு நினைவு தெரிந்து எந்த சாதம் எடுத்தாலும் 5 ரூபாய் காலத்தில் அறிமுகமானது இந்தக்கடை.. சர்க்கரைப் பொங்கல் எனது ஃபேவரிட் உணவு..! ஆனால் இந்தக்கடையில் அதை சாப்பிட்டதில் இருந்து நான் அதற்கு அடிமையாகியே போனேன்..! அந்தளவு அற்புதமான சுவை.. கைப்பக்குவம்.!

கொதிக்க கொதிக்க நெய் மணம் கமழ (நோ டால்டா கலப்படம்) வறுத்த முந்திரி திராட்சைகளோடு வெல்லம் சற்று தூக்கலாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் சரியான இனிப்புடன் குழைவாக இலையில் விழும் அந்த பொங்கலை நான் வானுலக தேவராக இருந்திருந்தால் அமிர்தம் என்றிருப்பேன்.!

அடுத்து புளியோதரை..! குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்லாவிட்டால் இதை நீங்கள் சாப்பிட முடியாது இதற்கு அவ்வளவு டிமாண்ட்.. சர்க்கரை பொங்கலில் குழைவாக இருந்த அரிசி இதில் விறைப்பாக இருக்கும்.. ஆனால் நன்கு வெந்தும் இருக்கும்.. அள்ளும் போதே நல்லெண்ணெய் மணம் நாசிக்குள் ஏறும்.. பொங்கலுக்கு முந்திரி..

புளியோதரைக்கு வறுத்த நிலக்கடலை..! அளவான புளிப்புடன் ஒவ்வொரு வாய்க்கும் வறுத்த கடலை மெல்லுவதற்கு கிடைக்க.. இதற்கான காம்பினேஷன் அவித்த கருப்பு கொண்டக்கடலை..புதினா சட்னி. சத்தியமாக இந்த காம்பினேஷனில் இன்னொரு புளியோதரை சாப்பிடாதவர்கள் வயிறு சரியில்லாதவர்களே..! அடுத்து...
வெண் பொங்கல்.. இங்கு சாப்பிடும் வெண்பொங்கல் நிச்சயம் உங்களுக்கு புது அனுபவம் மிளகு முந்திரியுடன் நெய்மணக்க குழைவாக சுவையில் ஒரு தனித்துவத்துடன் இருக்கும்..தேங்காய் சட்னி கெட்டியான துவரம்பருப்பு சாம்பாருடன் அளவு தெரியாமல் சாப்பிட்டுக் கொண்டே இருக்க தூண்டும்..

லெமன் பொங்கல்.. வெந்த அரிசியில் புளியோதரையின் இலக்கணம் மிகாது அதே நேரத்தில் எலுமிச்சை மணம் கமழ கிடைக்கும் பருப்பு புளி துவையல் இதற்கான காம்பினேஷன்.. இதற்கும் சுண்டல் வைத்து சாப்பிடலாம் ஆனால் தேங்காய் துவையலும் துவரம் பருப்பு சாம்பாரும் ஒரு பிடி பிடிக்க சொல்லும்.!

தக்காளி பொங்கல்.. ஒரு இழை பிசகினால் வெஜிடபிள் பிரியாணி ஆகிவிடும் அபாயமில்லாது தயாரிக்கப்பட்டிருக்கும் குழைவாகவும் இல்லாமல் விறைப்பாகவும் இல்லாமல் மீடியமாக இருக்கும் தயிர் வெங்காயம் இதன் காம்பினேஷன் கோடைக் காலங்களில் தயிர் வெள்ளரி மற்றும் காய்கறி குருமாவுடன் ருசிக்கலாம்..!

வெஜிடபிள் பிரியாணி.. தக்காளி சாதத்திற்கும் பிரியாணிக்கும் வித்தியாசம் தந்து விட்டாலே அந்தக்கடை சமையலில் கிங்.. அந்த வகையில் வெளிடபிள்களோடு சோயா பீன்சும் பொரித்த பிரட் துண்டுகளும் இணைந்த கலவையில் கிடைக்கும் மசாலா மணக்க சாப்பிடலாம்..தக்காளிக்கு தரும் காஃம்பினேஷனே இதற்கும்..!

தயிர் சாதம்... தயிரில் மட்டும் புளிப்பு இல்லாமலும் பச்சை பால் மணம் இல்லாமலும் கலவை கிடைத்தாலே முக்கால் வெற்றி.. அதை மிக அழகாக அடைந்திருப்பார்கள். 
சிறு பச்சை மிளகாய் அரித்து போட்ட சின்னவெங்காயம் கடலை பருப்பு போட்டு தாளித்து கொட்டி பச்சைமிளகாய் இஞ்சி சட்னி உறுகாயுடன்..ஸ்ஸ்ஸ் டிவைன்..

முட்டை தோசை.. நல்ல கதையம்சமுள்ள அழகி திரைப்படத்தில் குருவி கொத்துன கொய்யாப் பழம் என்று கமர்ஷியல் குத்துப்பாட்டு வைத்தது போல அசைவ பிரியர்களுக்காக இந்த முட்டை அயிட்டங்களை மட்டும் வைத்துள்ளார்கள்.. அதற்கு தனிக் தோசைக்கல்லும் பயன் படுத்துகிறார்கள் என்பது சிறப்பு..!

சரி முட்டை தோசையில் என்னய்யா சிறப்பு எல்லா ஊரிலும் ஒன்று தானே.. அப்படி சாதாரணமா கேட்காதிங்க பாஸ் சொல்றேன்.. மற்றக்கடை முட்டை தோசைக்கும் இந்தக்கடை தோசைக்கும் உள்ள வித்தியாசம் இது ஆப்பம் போல மொத்தமாக வார்க்கப்படும்.பொதுவாக மாவை கல்லில் உற்றி பிறகு மேலே முட்டை ஊற்றுவர்..!

இங்கு இதற்காகவே கைப்பிடி உள்ள பெரிய அலுமினிய மக் வைத்துள்ளார்கள் அதில் இரண்டுகரண்டி மாவை உற்றி பிறகு முட்டையை உடைத்து ஊற்றி உப்பு தூவி கலக்கி ஊத்தப்பம் போல் ஊற்றுவர்கள் தோசையே மஞ்சள் நிறத்தில் வரும்.. ஹைலைட் தோசை வெந்ததும் மேலே நல்லெண்ணெய் கார எள்ளுப்பொடி தடவி..

தருவார்காள்.. மிளகு பொடியும் தூவுவதுண்டு.. எந்த சைட் டிஷ்ஷும் இல்லாமல் ஹார்லிக்ஸ் குழந்தைகள் போல அப்படியே சாப்பிடலாம்.. இங்கு நான்வெஜ் குழம்புகள் இல்லை சட்னி சாம்பார் தான் பொங்கல் & சாதங்கள் சாப்பிட உகந்த நேரம் காலை12:30 முதல்2:30 வரை அதிர்ஷ்டம் இருந்தால் 3 வரை கிடைக்கும்.!

காலை நேர டிபன் உண்டு முட்டை தோசை எல்லா நேரமும் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.. மதுரை வந்தால் தினமும் ஏதாவது 2 சாதம் 1 முட்டை தோசை என முறை வைத்து சாப்பிட்டாலும் 3 நாட்கள் வயிற்றுக்கும் மனதிற்கும் நிறைவு தரும்.! விலைவாசி உயர்வால் தற்போது ஓவ்வொரு சாதமும் 18 ரூபாயாம்..

இரண்டு சாதம் 18x2= 36 ஒரு முட்டை தோசை 25 மொத்தம் 61 ரூபாயில் திருப்தியான சாப்பாடு.. ஒரு ஹலோ சொல்லிட்டு போக நம்பர் கொடுத்து இருக்கேன் 9365881964 சொல்லிட்டு போனா எடுத்து வச்சு இருப்பாங்க சாப்பிட்டு விட்டு சொல்லுங்க..! உலக உணவு தின ஸ்பெஷலுக்காக மதுரையிலிருந்து...

வெங்கடேஷ் ஆறுமுகம்

Wednesday 12 November 2014

புன்னகை அரசிக்கு..

புன்னகை அரசிக்கு...

நான்கு தலைமுறைகளை வசப்படுத்திய புன்னகைப்பூவே

திரையுலகில் நல்லநேரம் என்றும் உன் பின்தொடர்கிறது

கலைத்தாயின் பேர் சொல்லும் பிள்ளை நீ..உனை வாழ்த்த

பார்க்கலாமா நதிமூலம் ரிஷிமூலம்.. உன்னை நிழலில் மட்டும்

யானை மாலையிட்டு அரசியாக்கவில்லை நிஜத்திலும் அதுவே!

ஏனெனில் உன்னை ஜெயிக்க வைக்க கலைவாணியே எடுத்த

சரஸ்வதி சபதம் அது.! கற்பக விருட்சமாய் உன் புகழ் சிறக்கும்

என்பதால் தான் நீ கற்பகத்தில் அறிமுகமானாய்.. உன் நடிப்பும்

உன் புன்னகையும் என்றும் வாடாத இரு மலர்கள்.. திரையுலகிற்கு

அன்னை வேளாங்கண்ணி என்றாலும் தசாவதார பாத்திமா என்றாலும்

அம்மன் வேடம் என்றாலும் எல்லா மதத்திற்கும் கை கொடுத்த தெய்வம் நீ

கந்தன் கருணை ஆனாலும் திருமால் பெருமை ஆனாலும் உனக்கும்

அதில் ஒரு இணையில்லா பங்குண்டு நடிகர்களை தெய்வமாக ரசிகன்

பார்க்கலாம்.. ஆனால் நீ தெய்வமாகவே நடிக்கப் பிறந்தவள்.! நீ திரையில்

திரிசூலம் ஏந்தி தோன்றிய போது கும்பிட்ட கரங்கள் தான் எத்தனை.!

நிஜத்திலும் நான் ஏன் பிறந்தேன் என்றுணர்ந்து நான் வாழ வைப்பேன் என

பலருக்கு உதவும் உத்தமி நீ... மொழி கடந்து உன் ரசிகர்கள் ஒன்றுபடுவதும்

ஒரு பாரத விலாஸ் தான்.! நீ வாழும் பட்டணத்தில் பூதம் இருந்தாலும் அதுவும்

உன் ரசிகனாகவே மாறியிருக்கும்.. அல்லது அது சொர்க்கம் ஆகியிருக்கும்.!

திரையுலகின் தெய்வமே புன்னகை செல்வமே உன் பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்

இவ்வாழ்த்தை நீ எடுத்துக் கொண்டால் அதுவே எனக்கு கிடைத்த..

தங்கப்பதக்கம்..



Sunday 2 November 2014

ஐ கதை..

ஐ"யப்பன் முதலில் ஒரு ஐ"பாட் வாங்கி பாட்டு கேக்குறான் அப்புறம் கொஞ்ச நாளில் ஐ" போனுக்கு மாறுகிறான் பிறகு ஐ"பேடு எனும் டேப்லெட்டும் வாங்குகிறான் இத்தனையும் வாங்கி ஃபேஸ்புக்,ட்விட்டர்,கூகிள் எல்லாம் பார்த்து பார்த்து அவனது ஐ" பாதிக்கப்படுகிறது. 

ஐ"டாக்டரிடம் போகும் போது அவர் 5000 ரூபாய்க்கு ஐ"டெஸ்ட் கட்டணம் கேட்கிறார் அப்போது தான் ஐ"யப்பனுக்கு தெரிகிறது அதி பயங்கர வில்லன் ஐ"சக் என்பவன் ஏராளமான ஐ"போன்களை தயாரித்து மார்க்கெட்டில் விட்டு எல்லோரையும் ஐ"ப்ராப்ளம் வரச்செய்து ஐ"டெஸ்ட் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாயை மக்களிடம் இருந்து கறக்கும் நாசவேலையில் ஈடுபட்டு இருப்பது.. 

பற்றாக்குறைக்கு மெட் ராஸ் ஐ"பரப்பும் வைரஸ்களையும் விஞ்சானிஸ் மூலம் கண்டுபிடித்து வில்லன் ஐ"சக் ஸ்டாக் வைத்திருப்பதும் ஐ"யப்பனுக்கு தெரியவர அவனது ஐ" திறக்கிறது.. பொது மக்களின் ஐ"யையும் திறக்க ஐ"யப்பன் ஐ"சக்கை எதிர்க்க துணிகிறான்.. ஐ"யப்பன் ஐ"சக்கை வென்றானா வெண் திரையில் உங்கள் ஐ"கொண்டு பாருங்கள்...

#ஐ_படத்தின்_கதைச்சுருக்கம்