Friday 25 July 2014

எமலோகத்தில் ஃபேஸ்புக்..

எமலோகத்தில் ஃபேஸ்புக்..!

இடம் : எமலோகம் : பாத்திரங்கள் : எமதர்மன்,சித்திரகுப்தன்,டங்கரன்,டிங்கரன்,மனிதன்

காட்சி - 1

பின்னணிக்குரல் : எமதர்ம ராஜா பராக் பராக்.... ( எமன் நடந்து வர... பாஷா மியூஸிக் ) 

( வாசலில் அவருக்கு வழிவிடாத டங்கர டிங்கரர்கள் மொபைலில் நோண்டிக் கொண்டிருக்கிறார்கள் அப்படியே இருவரும் செல்ஃபி எடுக்க வழி கிடைக்காத எமன் கோபத்துடன்.... )

எம: மட கிங்கரர்களே நான் வருவது கூடத் தெரியாமல் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்..?

டங்: (திடுக்கிட்டு) பிரபு மன்னிக்கவும் நாங்கள் ஃபேஸ்புக்கில் இருந்ததால் உங்கள் பேஸைப் பார்க்கவில்லை ..

டிங்: ஆமாம் பிரபு பார்க்கவில்லை..

எம: நீ என்ன அவன் எதிரொலியா..? வாருங்கள் என்னுடன் சபைக்கு...

( எமன் முன்னே போக பயத்துடன் பின் தொடர்கிறார்கள்...)

சிகு: வாருங்கள் பிரபு என்ன வாயிலில் நிற்கும் கிங்கரர்களை அழைத்து வருகிறீர்கள் ஏதும் பிரச்சனையா..?

எம: சிகு இவர்கள் என்ன செய்தார்கள் நீயே கேள்..

சிகு : டங்கர டிங்கரர்களே பிரபு கோபப்படும்படி அப்படி என்ன குற்றம் செய்தீர்கள்..?

( இருவரும் விழிக்க )

எம: கோபத்தை கிளறாமல் சொல்லுங்களடா அதென்ன கையில் ஒரு வெற்றிலைப்பெட்டி..?

டங்: பி..பி,,பிரபு அது வெற்றிலைப் பெட்டியல்ல செல்போன்..!

எம: அதில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்..? சிகு நீ கேட்க மாட்டாயா..?

சிகு: ஐயோ..பிரபு நீங்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது நான் எப்படிக் குறுக்கே கேட்பது..? டிங்கரா டங்கரா சொல்லுங்கடா சீக்கிரம்..!

டிங்: சித்திர குப்தரே இது செல்போன்... இதில் ஆர்வமாக பேஸ்புக் பார்த்துக் கொண்டிருந்தோம் எமதர்மர் வருவதை கவனிக்க வில்லை மன்னித்தருளவும்...

எம: இவ்வளவு பெரிய உருவம் வருவது கூடவா தெரியவில்லை அற்ப பதர்களே..!

சிகு: பிரபு.. பொறுமை..! முகநூலில் இருக்கும் போது நீங்கள் மட்டுமல்ல பெரும் பிரளயமே வந்தாலும் தெரியாது..!

எம: என்ன பிரளயமே வந்தாலும் தெரியாதா..! அப்படி என்ன இருக்கிறது அதில்..!

சிகு: சொல்கிறேன் பிரபு.. இந்த முகநூல் இருக்கிறதே அதன் போதை அப்படி அவ்வளவு சீக்கிரம் வெளிவர முடியாது..!

எம: ஓ சோம பானம் சுரா பானத்தை விட அது போதையோ..!

டங்: ஆமாம் பிரபு இது அதை விட ராஜ போதை... உள்ளே வந்துவிட்டால் வெளியேறுவது கடினம்... சக்கர வியூகம் போல..

எம: நீ வாயை மூடு.. சிகு இந்த பேஸ்புக் பற்றி சுருக்கமாகச் சொல்..!

சிகு: பிரபு.. இந்த பேஸ்புக் விஞ்ஞானத்தின் வளர்ச்சி.. உலகின் எந்த மூலையில் இருப்போரும் எந்த மனிதருடனும் தங்கள் கருத்துகளை பரிமாறிக் கொள்ளலாம்..!

எம: அடடா... அருமை அருமை... மேலே சொல்..

சிகு: செய்திகள், புகைப்படங்கள், வீடியோ, குரல் என ஒரேஇடத்தில் அமர்ந்து கொண்டே பரிமாறிக் கொள்லலாம்...ஏன் ஒருவருக்கொருவர் பேசக்கூட முடியும்..

எம: பலே..மனிதர்கள் மிகவும் அறிவாளிகள்.. இவ்வளவு நல்ல சாதனமாக இருக்கிறதே இதை ஏன் இவர்கள் முகத்துக்கு நேராக பிடித்து இப்படி செய்தார்களே..! ( செய்து காட்டுகிறார் )

டிங்: பிரபு.. அது தான் செல்ஃபி.. இப்ப டிரெண்ட் அது தான்..

எம : அதென்ன செல்ஃபி..?

டங்: பிரபு.. உங்களை நீங்களே போட்டோ எடுத்துக் கொள்வது தான் செல்ஃபி..

எம: ஓ இப்போது புரிகிறது சுயத்தம்பட்டத்தின் இன்னொரு பெயர் தான் செல்ஃபி..

சிகு: அருமை பிரபு அதற்குள் முகனூலைப் புரிந்து கொண்டீர்களே..!

எம: சரி எப்படி முகநூலில் இணைவது..?

டங்: பிரபு அதற்கு நீங்கள் ஒரு கணக்கு துவங்க வேண்டும்..

எம: பாவக்கணக்கா..? புண்ணியக்கணக்கா..?

சிகு: பிரபு அது நாம் பார்ப்பது.. இவன் சொல்வது முகநூல் கணக்கு..!

டிங்: ஆம் பிரபு அதற்கு ஒரு மெயில் ஐடி இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் துவங்கலாம்..!

எம: எங்கே டங்கரா நீ துவக்கிய பேஸ்புக் கணக்கை காட்டு... 

டங் : இதோ பிரபு ( மொபைலில் காட்டுகிறார் )

எம: அட இது இப்போது வாயிலில் நீங்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் அல்லவா அதற்குள் எப்படி இங்கு வந்தது..!

டங் : ஹி..ஹி..உங்கள் பின்னால் நடந்து வரும் போதே அப்லோடு செய்து விட்டேன்..!

எம : ஆமாம் உன் பெயர் டங்கரன் தானே இங்கு ஏதோ வேறு பெயர் இருக்கிறதே..! என்ன பெயர் இது..

டங்: ஆம் பிரபு.. டார்லிங் டங்கரன் என்று அடை மொழியுடன் என் பெயர் வைத்திருக்கிறேன் பிரபு...

எம: என்ன அடை மொழிப்பெயரா ஏன் அப்படி..?

சிகு: பிரபு பேஸ்புக்கில் அடைமொழி புனைப்பெயர் எல்லாம் சகஜம்..!

எம: சிகு..  புனைப்பெயரா புரியவில்லையே..!

சிகு: டிங்கரா நீ உன் பக்கத்தை பிரபுவிற்கு காட்டு..

டிங்: இதோ.. ( காட்டுகிறார் ) 

எம: என்னடா இது உன் புகைப்படத்திற்கு பதில் நடிகர் அமீர்கானின் புகைப்படம் வைத்திருக்கிறாய்..

டிங்: ஹி..ஹி.. சும்மா ஒரு கெத்தாக இருக்குமே என்று என் பெயரைப்பாருங்கள் பிரபு..!

எம: என்ன "உயிரைப்பிடுங்கி" என்று பெயர் வைத்திருக்கிறாய்..!

டிங்: மகாப்பிரபு அது தானே நம் தொழில் அதையே புனைப்பெயராக வைத்துள்ளேன்..!

எம: அப்படி என்றால் சொந்தப்பெயர் இங்கு யாரும் வைக்க மாட்டார்களா..?

சிகு: அப்படி வைத்தால் ஒரு திரில் இருக்குமா, விளங்காதவன்,பொறுக்கி,மோசமானவன், பழிக்குப்பழி, பன்னி மூஞ்சி,, இப்படி பெயர்கள் தான் இங்கு பிரபலம்..

டங்: பிரபு இப்படி அடைமொழியையே பெரிதாக பேசுகிறீர்களே ஃபேக் ஐடியை பார்த்தால் என்ன சொல்வீர்கள்..?

எம: அது என்ன ஃபேக் ஐடி..?!

சிகு: நான் சொல்கிறேன் பிரபு... ஒரு ஆண் பெண் பெயரிலோ அல்லது ஒரு பெண் ஆண் பெயரிலோ துவங்கும் ஐடி தான் ஃபேக் ஐடி..

டிங்: கூடு விட்டு கூடு பாய்வது போல..

எம: புரியவில்லையே..

டங்: ஐயா... சித்திர குப்தரே... உங்க ஐடியை காட்டும்..

எம: என்ன சிகு நீயுமா..!!!! 

சிகு: ஆமாம் பிரபு .. பொறுத்தருளவும் (காட்டுகிறார்) 

எம: இந்த பெண்ணின் புகைப்படம் எனக்கு பரிச்சயமாக உள்ளதே..யார் இது..?

சிகு:இது யார் என்று தெரியவில்லை.? நன்றாகப் பாருங்கள்.. நம் தேவ லோகத்து நாட்டியக்காரி மேனகை... பிரபு..!

எம: அடப்பாவி...! மேனகையை நீயா வைத்திருக்கிறாய்...

சிகு: பிரபு..!!!!! 

எம: புகைப்படத்தில்.. புகைப்படத்தில்.. ( சிகு தலை குனிகிறார் )

அவள் படத்தைப் போட்டு சித்ரா என்று வேறு உனக்கு பெயர் வைத்திருக்கிறாய்.. கொடுமை... கொடுமை..

டிங்: பிரபு அப்படியே அவரை ஹாய் என்று ஒரு பதிவு போடச்சொல்லுங்கள்..!

எம: அது எதற்கு..? 

டங்: போடச் சொல்லுங்களேன்...சொல்லுகிறோம்..

எம: இவர்கள் சொன்னது காதில் விழுந்ததா சிகு.. அப்படியே போடு ( சிகு.. போடுகிறார்)
போட்டாச்சு இப்போது என்ன..?

டிங்: சில வினாடிகள் பொறுங்கள் பிரபு.. இப்போது எத்தனை லைக் பாருங்கள்..!

எம: லைக்கா..? அது என்ன..?

டங்: அந்த செய்தியின் கீழே கைக் கட்டைவிரல் போல ஒரு குறி உள்ளதே அது தான் லைக்.!

எம : அதற்கென்ன..இப்போது..? 

டிங்: பிரபு அதற்கென்னவா அந்த லைக் பட்டன் மட்டும் இல்லாவிட்டால் முகனூலே இயங்காது... தெரியாதா..!

எம: அப்படியா.. அட சில வினாடிகளில் 50 பேர் விரும்பியுள்ளார்களே இந்த ஹாய்க்கு

சிகு: ஒரு பெண்ணின் பேரில் இருக்கும் பதிவல்லவா அதான் இவ்வளவு லைக்..!

எம : அட எமகாதகர்களா.. இப்படியுமா செய்வீர்கள்..?

சிகு: பிரபு இதென்ன பிரமாதம் இவர்கள் எடுத்த புகைப்படங்களை பாருங்க..!

சிகு: ஒரு பெண்ணின் பேரில் இருக்கும் பதிவல்லவா அதான் இவ்வளவு லைக்..!

எம : அட எமகாதகர்களா.. இப்படியுமா செய்வீர்கள்..?

சிகு: பிரபு இதென்ன பிரமாதம் இவர்கள் எடுத்த புகைப்படங்களை பாருங்க..

எம: ( பார்க்கிறார் ) நேற்று உயிர் எடுக்க போகையில்...டங்கரன்.. உயிரை எடுக்கும் போது... நரகத்தின் எண்ணை கொப்பரை அருகில்... எமலோகத்தில் ஒரு வீக் எண்ட்... சோம பானம் 3 வது ரவுண்டில் டிங்கரன் இதென்ன நேர்முக வர்ணனை போல இருக்கிறதே..!

சிகு: அது தான் பிரபு அப்டேட்ஸ்..! நடக்கும் போதே பதிவிடுவது..

எம : ஓ இவ்வளவு இருக்கிறதா..? அட இதென்ன ஒரு பனிமலை பின்னணியில் பசும்புல் வெளியில் டங்கரனும் டிங்கரனும் நிற்கிறார்கள் இப்படி இடம் எமலோகத்தில் இல்லையே.!

டங்: மகாப்பிரபு அது நரகத்தில் எண்ணைச்சட்டியிடம் எடுத்த போட்டோ நான் தான் போட்டோ ஷாப்பில் பேக்கிரவுண்டை மாத்திட்டேன்..!

எம : போட்டோ ஷாப் என்றால்..?

டிங்: இண்டர் நெட்டில் பட்டி டிங்கரிங் பார்ப்பது இதில் இல்லாததை கூட இருப்பதாக காட்டமுடியும்.?

எம: நிறுத்துங்கள்.. இதில் எல்லாமே பொய் தானா நன்மை ஏதுமே இல்லையா..?

சிகு: இருக்கிறது பிரபு.. அதற்கு முன் இங்கு வந்த மானிடன் ஒருவனின் பாவ புண்ணியக்கணக்கை பார்க்கலாமா..?

எம: வரச்சொல்லுங்கள் அவனை.. (வருகிறார்)

சிகு: பிரபு இவனும் ஒரு முகநூல் பதிவன் தான் இவன் செய்த குற்றம் என்ன தெரியுமா..?

எம: சொல்லுங்கள்...

சிகு: யார் என்ன பதிவு போட்டாலும் போய் காலை வணக்கம் சொல்லியே சாகடிப்பான்..

டங்: ஓ குட்மார்னிங் குமரேசன்..!

சிகு: அதற்கு தண்டனை என்ன பிரபு..?

எம: இங்கேயும் குட்மார்னிங் சொல்ல வேண்டும் சரியா..

மனி : ஹைய்யா ஜாலி ஓகேங்க..

டிங்: யோவ் ஜாலியா... முழுசா கேளுய்யா..! நீங்க சொல்லுங்க பிரபு 

எம: எண்ணைச்சட்டியில் முக்கி எடுக்கையில் குட்மார்னிங் சொல்லவேண்டும்..!

மனி: நான் சொல்லாட்டின்னா..!

எம: சட்டியில் முக்குவதோடு சரி.. எடுக்கவே எடுக்காதிங்க..

மனி: அய்யோ சாமி..!

எம: அடுத்த குற்றம்..?

சிகு: ஆபாசப் படங்களை பதிவிட்டது மற்றும் பெண்களிடம் ஆபாசமாக பேசியது.. 

எம: என்ன பெண்களிடம் ஆபாசப்பேச்சா..! இழுத்து வைத்து அறுத்தெறியுங்கள்...

மூவரும்: பிரபு.!!!!!!

எம : இவன் நாக்கை.. நாக்கை....ம்ம்ம், இழுத்துச்செல்லுங்கள் இவனை நரகத்திற்கு..

(கிங்கரர்கள் அவனை இழுத்துச் செல்ல எமன் சிகு வைப்பார்த்து) ஏன் சிகு இந்த முகநூலில் பயன் ஏதுமில்லையா..?

சிகு: யார் சொன்னது முகநூல் வந்த பின்பு பலர் நன்கு எழுதுகிறார்கள், விபத்து நேரத்தில் ரத்த தான உதவி, எங்கோ ஒரு நாட்டின் மூலையில் சிரமத்தில் இருக்கும் சக மனிதனை காக்கும் உதவி, அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய செய்தி, மருத்துவ குறிப்பு இப்படி பல நன்மைகள் இருக்கே பிரபு..

எம: சரிதான் முகநூல் கத்தி போன்றது அதில் பழமும் நறுக்கலாம் உயிரையும் எடுக்கலாம் அதை முறையாக பயன் படுத்துங்கள் இனி வரும் காலங்களில் உங்கள் பாவக்கணக்கு புண்ணியக்கணக்கு எல்லாம் சொல்லிடும் உங்கள் முகநூல் கணக்கு..! ஜாக்கிரதை.. சபை கலையலாம்..! (கிளம்புகிறார்)

சுபம்




புதிய பாரதி..!

              < புதிய பாரதி >

பூட்டைத் திறப்பது கையாலே - நல்ல
மனந்திறப்பது மதியாலே
பாட்டைத் திறப்பது பண்ணாலே - இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே.

நாட்டைப் பிடிப்பது வாக்காலே -பின்னதை
போட்டு மிதிப்பது காலாலே
கோட்டையைப் பிடித்த பின்னாலே - லஞ்ச
வேட்டைகள் தொடருது தன்னாலே.

ஊழல் சேற்றில் இறங்குவார் முன்னாலே
உழவுச் சேறென்றால் ஓடிடுவார்
பின்னாலே- திட்டங்கள் மக்களுக்கு என்றாலே
அதை சேராது தின்றிடுவார் தன்னாலே.

நாமெல்லாம் ஊர்கூடி நின்றாலே- இந்தத்
துயரெல்லாம் விரட்டலாம் தன்னாலே-
யார் வந்தும் பயம் காட்டி தடுத்தாலே- அவரை
ஓடவைப்போம் நம் ஒற்றுமைக்கு முன்னாலே.

- மீசை இன்னும் துடிக்கும்....


< புதிய பாரதி >

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா !
இப்பயிரை கண்ணீராற் காத்தோம்
கருகத் திருவுளமோ.?

எண்ணத்தில் நன்மையும் உள்ளத்தில் மிகத்
தூய்மையும் கொண்டவர்க்கு வாழ
வழியில்லை உமக்கு தெரியுமோ.?

அடிமை விலங்கு அறுத்தெறிந்து அடிமை
விலங்காய் மாறிப்போனாம்.! ஈசா..
நீ அறியாயோ.?

முன்னூறு வருடங்கள் ஓய்ந்து கிடந்த பின்
வாராது போலவந்த மாமணியை
தேடுகிறோம் தெரியாயோ.?

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்திருப்பதும்
நூலோர்கள் மதிப்பின்றி நோவுவதுங்
காண்கிலையோ.?

இன்பச் சுதந்திரம்நின் இன்னருளாற் 
பெற்றதன்றோ?அரசியல் மாக்கள் அதை 
பறித்தாற் காவாயோ.?

குடிநீரும் பணத்திற்கு விற்கின்ற நிலையிங்கு
அந்தக் குறை தீர்க்க உன் முடி நதியை
கீழிறக்க மாட்டாயோ.?

நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ
தருவாய் வஞ்சகமோ எங்கள் மனத்
தூய்மை காணாயோ.?

உண்ண உணவு உடுக்க உடை இருக்க இடம்
இம்மூன்றைத்தவிர வேறென்ன வரம்
கேட்போம்.! நீ அறியாயோ.?

நீயும் அறமும் நிலத்திருத்தல் மெய்யானால் 
ஓயுமுனர் எங்களிக்கிவ்வோர்
வரம் நீ நல்குதியே.!

- மீசை இன்னும் துடிக்கும்....


< புதிய பாரதி >

ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே ஆனந்த
சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று (ஆடு)

பள்ளியிலே தமிழ் படித்தக் காலமும் போச்சே
வெள்ளை பரங்கியர் போல் பேசுவதும் கெளரவம்
ஆச்சே - வேகாத உணவெல்லாம் தீனியும் ஆச்சே
நம்மை வேகமாக உயிரெடுக்கும் காலனுமாச்சே (ஆடு)

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம் எல்லோரும்
அதை தொலைத்து ரொம்ப நாளாச்சு,
எடுப்பார் கைப்பிள்ளையாய் நம்பிக்கையும் ஆச்சு
நம்பி நம்பிக் கெடுவதுதான் வாழ்க்கையுமாச்சு (ஆடு)

உழவுக்கும் தொழிலுக்கும் நிந்தனை செய்தோம்
நல்ல உணவுக்கு வழியில்லை சிந்தனை செய்யோம்
விழலுக்கு நீர் பாய்ச்சி மாய்ந்துவிட்டோம் - வெறும்
வீணருக்கு உழைத்திங்கு மாய்ந்துவிட்டோம் (ஆடு)

நாமிருக்கும் நாடு இதை மதிக்க மறந்தோம் - இது
நமக்கே உரிமையாம் அதை விட்டுக் கொடுத்தோம்
நல்லவை யாவும் செய்ய மறந்தோம் - வாழ்விற்கு 
நன்மைகள் எதுவென என்று உணர்வோம்..? (ஆடு)

- மீசை இன்னும் துடிக்கும்....


< புதிய பாரதி >

மன்னும் இமய மலை எங்கள் மலையே
எல்லைகளை தாண்டினாலும் கேள்வியில்லையே!
இன்னறு நீர்க்கங்கை ஆறு எங்கள் ஆறே
அந்த நறுமணமும் போனதெங்கு கூறே.?

பன்னரும் உபநிட நூல் எங்கள் நூலே
அதை படிப்பதற்கு யாவருக்கும் நேரமில்லை போலே!
பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே
அது ஏட்டிலே மட்டுமென்று தலை குனிந்து பாடே.!

மாரத வீரர் மலிந்த நன்னாடு மாமுனிவோர்
பலர் வாழ்ந்த பொன்னாடு நாரத கான நலந்திகழ் நாடு 
நல்லன யாவையும் நாடுறு நாடு பூரண ஞானம்
பொலிந்த நன்னாடு புத்தர் பிரானருள் பொங்கிய நாடு

பாரத நாடு பழம்பெரு நாடே  அது ஏட்டிலே
மட்டுமென்று தலை குனிந்து பாடே! இன்னல் வந்ததும்
அதற்கு அஞ்சினோம் கோழையாய் இப்பூமியில்
தினமும் துஞ்சினோம்.! எழுவோம் இனி புதிதாய்..

தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்
தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்
கன்னலும் தேனும் கனியும் இன்பாலும் கதலியும் 
செந்நெலும் இயற்கையாய் விளைவிப்போம்!

உழவே நாட்டின் தலைத்தொழிலென உள்ளூர
உறுதியேற்போம் அதை செயலாக்க நாமெல்லோரும் 
ஒன்றாக கைகோர்ப்போம் உன்னத பாரத
நாடெங்கள் நாடே ஓதுவம் இஃதை எமக்கில்லை ஈடே.!

- மீசை இன்னும் துடிக்கும்....


< புதிய பாரதி >

கடமை புரிவார் இன்புறுவார் என்னும்
பண்டைக் கதை பேசினோம்
கடமை மறந்து தொழில் மறந்து
கட்டென்பதனை வெட்டென்றோம்

எடுப்பார் கைப்பிள்ளையானோம் எதைச்
சொன்னாலும் சிரம் ஆட்டி கேட்டோம்
பொய்மையை தலை நிமிர வைத்தோம்
வாய்மைக்கு வாய்க்கரிசி போட்டோம்

பிறர் துன்பம் காணாது இருந்தோம் அது
தனக்கு வந்ததும் அழுது புலம்பிட்டோம்
அதிகாரம் இருப்பவரிடம் அடங்கிப்போனோம்
அப்பாவி மனிதனை அதிகாரம் செய்தோம்

மடமை சிறுமை துன்பம் பொய் வருத்தம்
நோவு மற்றிவை போல் கடமை நினைவுந்
தொலைத்திட்டோம் வீண்கதை பேசாது
விழித்தென்று நம் சுயத்தை மீட்டிட்டோம்.???

- மீசை இன்னும் துடிக்கும்....


< புதிய பாரதி >

பேயாய் உழலும் சிறுமனமே.! பேணாய்
என்சொல் இன்று முதல் நீயாய் ஒன்றும்
நாடாதே நினது தலைவன் யானேகாண்

ஆராக் காமம் மிகக் கொண்டு அலைபாயாது
இருப்பாய் எந்நாளும்! வீராவேச மொழி
பேசி வீணாய் வம்புகள் செய்யாதே..

பேராசைப் பேய் வந்தண்டாது இருப்பாய் நீயும்
செந்தணலாய்! தீராக் காதல் உள்ளத்துடன்
சக மனிதரை சேர்ந்து அடைந்திடுவாய்..

நீரால் சூழ் இவ்வையத்திலே போரால் மாள்பவர்
இனியில்லை! அன்பு மரம் அதன் வேராக அகிலம்
எல்லாம் ஊடுருவி அமைதிக் கனிகள் தந்திடுவாய்..

பெற்றோர் அவர்தம் தாளினிலே தலை வைத்து நீயும் 
பணிந்திடுவாய்! தர்மம் எதுவோ அதை பின்பற்றி
என்றும் நின்று உழைத்திடுவாய்.! (பேயாய்)

- மீசை இன்னும் துடிக்கும்....


< புதிய பாரதி >

(சங்கம் = சங்கு)

செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம் 
சேர்ந்திடலாம் என்றே எண்ணியிருப்பார்
பித்த மனிதர், அவர் சொல்லும் சாத்திரம்
பேயுரையாம் என்றிங்கு ஊதேடா சங்கம்!

வட்டியின் மேல் ஆசை காட்டி வந்த 
வரை வரவு என்று, வளைத்து வளைத்து
பணத்தை வாங்கி தலைமறைவு ஆகிடுவார்
ஆட்டமெல்லாம் ஒழிந்திட நீ ஊதேடா சங்கம்!

பொய்யுறு மாயையைப் போல் அடைந்து விடும் 
என்ற தோற்றம் தரும் கந்துவட்டி அரக்கனதை
சந்து பொந்து என சகல வழிகளிலும் ஒளிந்திடாது
விரட்டியடிக்க சேர்ந்து நின்று ஊதேடா சங்கம்!

உழைத்து சேர்க்கும் செல்வமது நிறை என்ற 
மனம் வேண்டும் அதை சுரண்ட வரும் கயவரிடம்
மயங்கிடாத திடம் வேண்டும், என உறுதி பூண்டு
ஒற்றுமையாய் கைகோர்த்து ஊதேடா சங்கம்!

- மீசை இன்னும் துடிக்கும்....


< புதிய பாரதி >

விட்டு விடுதலையாகி போனது அந்தச்
சிட்டுக்குருவியினம்..

எட்டுத்திசையும் பறந்து திரிந்து ஏறியக்
காற்றில் விரைவாய் நீந்தும் சின்னப்
பறவை அதை தேடினாலும் கிடைக்கவில்லை
அதன் கீச்சுக்குரல் ஒலிக்கவில்லை. (விட்டு)

பெட்டையினோடு இன்பம் பேசிக் களிப்புற்று
பீடையிலாத ஓர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வு எய்தியது
என்று இனி பாடத்தில் மட்டும் படித்திடலாம். (விட்டு)

முற்றத்திலேயும் கழனி வெளியிலும் முன்கண்ட
தானியமதை கொத்தித்தின்ற பறவையதை
அலைபேசி கோபுரத்து மின்னலைகள் கொத்தி
தின்றது கொடுமையன்றோ. (விட்டு)

சோம்பல் சிறிதுமின்றி உற்சாக குரலெழுப்பி
வட்டமிட்டு பறந்து திரிந்த சின்ன ஜீவன் அதன்
வம்சத்தை விஞ்ஞானம் வந்து கொன்றது 
இப்பாதகத்தை பாராது தெய்வமும் கண்மூடி நின்றது. (விட்டு)

- மீசை இன்னும் துடிக்கும்....


< புதிய பாரதி >

நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெட புழுதியில் எறிந்தனரே?
சொல்லடி, சிவசக்தி - எமைத்
துயர்மிகு வலியினில் தள்ளிவிட்டாய்.

விளைநிலம் அதை உழுது பயிர் செய்திட
வழி கேட்டேன்.. மண்ணில் மரம் கேட்டேன்,
அதை வளர்த்திட மழை கேட்டேன் - தாகம்
தணித்திடவே பஞ்சமின்றி நீர் கேட்டேன்...

நெசவுக்கு தறி கேட்டேன்,அங்கு நெய்தவனுக்கு
நல்லாடை கேட்டேன், குயவனுக்கு மண்
கேட்டேன், அது அவன் வயிற்றில் வீழாத
வரம் கேட்டேன்..

உணவினில் நலம் கேட்டேன், துரித உணவினை
விரட்டிட வழி கேட்டேன், ஆயுள் காலங்கள்
நீள கேட்டேன், அந்தக் காலனை வென்றிட
திறன் கேட்டேன்..

தமிழ் மொழி சுவை கேட்டேன், அதை தமிழரே
படித்திட உனை கேட்டேன், தசையினைத் 
தீ சுடினும் - தமிழிலே பேசிடும் நல் அகம் 
கேட்டேன்..

நல்லதை தாராயோ, - இந்த மாநிலம்
பயனுற வாழ்வதற்கே? சொல்லடி,
சிவசக்தி ! - உயிர்ச் சுமையென 
வாழ்வது கொடுமையன்றோ.?

இவை அருள்வதில் உனக்கெதுந் தடை
உள்ளதோ.? சொல்லடி சிவசக்தி.. 
சொல்லடி சிவசக்தி...சொல்லடி சிவசக்தி.

- மீசை இன்னும் துடிக்கும்....


< புதிய பாரதி >

உண்மை அறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ?
மாயையே - மனத் திண்மையுள்ளாரை நீ
செய்வது ஒன்றுண்டோ! - மாயையே.!

எத்தனைக் கோடிகள் கறுப்புப் பணம் மாயையே.!
அது திரும்பி நம் தேசம் வரும் என்று 
தோற்றம் தந்தாய் மாயையே!

பாயும் ஆற்றுக்கு அணைகள் கட்டி மாயையே.!
அண்டை மாநிலத்துக்கு அளிக்காது
அரசியல் செய் மாயையே.!

கல்வியை கறார் விலை வைத்து மாயையே.!
அதை விளம்பர மந்திரத்தால் நீ
நம்ப வைப்பாய் மாயையே.!

நீதிமன்ற வழக்கெல்லாம் நிலுவையிலே மாயையே!
நம் ஆயுளுக்குள் அது முடியும் என
தோற்றம் தந்தாய் மாயையே.!

நல்லாட்சிக்காக வாக்களித்த மக்களுக்கு மாயையே!
ஆட்சி மாற்றம் வெறும் காட்சி தான் என
உணர்த்திடுவாய் மாயையே.!

விண்ணிலே பறக்கின்ற விலைவாசி மாயையே!
அது மண்ணுக்கு இறங்கி வரும் என்று
கனா வரச்செய் மாயையே.!

நீ தரும் இன்பத்தை நாங்கள் ஏற்பதும் மாயையே!
கர்ஜிக்கும் சிங்கமென குரைக்கும்
நாயை எண்ண வைத்தாய் மாயையே.!

இளைய சமுதாயம் விழித்திடும் காண் மாயையே!
அன்று நீ சித்தத் தெளிவெனும் தீயின்
முன் நிற்பாயோ மாயையே.!

- மீசை இன்னும் துடிக்கும்....


< புதிய பாரதி >

சென்றதினி மீளாது, மூடரே.! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில்
வீழ்ந்து குமையாதீர்.!

சென்றங்கு குழிபறித்து நிலம் அதிர
வெடி வெடித்து பாளம் பாளமாய் பெருமலைகள்
பாதத்தில் மிதிபடும் பளிங்கு கல்லாய்
உருமாறி கொள்ளை போனதிங்கே.!

கல்வாரி இங்கு எடுத்தமையால் மணல்வாரி
வந்த முகம் போல பொலிவிழந்து கிடக்கிறாள்
பூமித்தாய்.! அவள் கன்னங்களில் பெரும்
பள்ளங்கள், கொதிக்குது நம் உள்ளங்கள்.!

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று எண்ணமதில்
உறுதி கொண்டு விழித்திடுவோம்.! நாமெல்லாம்
பூமிச்செல்வத்தை தின்று விளையாடி இன்புற்று
இருந்த கயவரையெலாம் விரட்டிடுவோம் இனி.!

- மீசை இன்னும் துடிக்கும்....


< புதிய பாரதி >

ஓடி விளையாடுவாயா பாப்பா! -நீ
ஓய்ந்திருப்பதேனடி பாப்பா!
கூடி விளையாட பாப்பா! - ஒரு
துணை கூட இல்லையடி பாப்பா!

சின்னஞ்சிறு குருவி ஒன்றை - நீ
தேடிப் பார்த்திடடி பாப்பா!
வண்ணப் பறவைகளை நூலில் நீ
படமாக காணடி பாப்பா!

கொத்தித் திரியுமந்த கோழி - அதை
KFCயில் கண்டிடலாம் பாப்பா! எத்தித்
திருடுமந்தக் காக்காய் - அதைத் திதியன்று
நினைத்திடு பாப்பா!

பாலைப் பொழியும் பசு பாப்பா! - அதைப்
போஸ்டர் திங்கவிடு பாப்பா! வாலைக்
குழைக்கும்  நல்ல நாய்தான் - அதை
அந்தஸ்துக்கு வளர்த்திடு பாப்பா!

வண்டி இழுக்கும் நல்ல குதிரை - நெல்லு 
வயலில் உழுதுவரும் மாடு அண்டிப்பிழைக்கும்
நம்மை ஆடு- இவை ஓய்ந்துவிட்டால் 
விரட்டிடு பாப்பா!

காலை எழுந்தவுடன் கணினி - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல ஐபாட்
மாலை முழுவதும் டி.வி - என்று
வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா!

பொய் சொல்ல வேணுமடி பாப்பா! - என்றும்
புறம் சொல்ல வேண்டுமடி பாப்பா! சொல்ல
மறந்து நீயிருந்தால் உனக்கு தெய்வம் கூட
துணையில்லை பாப்பா!

பாதகம் செய்பவரை கண்டால் - நீ பதுங்கிக்
கொள்ள வேணுமடி பாப்பா! ஓடி ஒளிந்து விடு
பாப்பா அவர் முகத்தை மறந்துவிடு பாப்பா!

சொல்லில் தாழ்வு தமிழ்ச்சொல்லே! அதை 
ஒதுக்கி படித்திடடி பாப்பா! ஆங்கில பேச்சில்
நல்ல கல்வி அதை புகழ்ந்து பாடடி பாப்பா!

சாதிகள் உண்டடி பாப்பா! குலத் தாழ்ச்சி 
உயர்ச்சி சொல்லல் வேண்டும் - நீ இதை
சொல்ல மறுத்தால் உனக்கு எங்கும் நுழைவு
இல்லை பாப்பா!

உயிர்களிடத்தில் அன்பு  வேணும் -தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும், வயிர
முடைய நெஞ்சு வேணும் - இதைக்
கனவில் காணலாம் பாப்பா.!

- மீசை இன்னும் துடிக்கும்....



< புதிய பாரதி >

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி, 
வஞ்சனை சொல்வாரடி! - கிளியே! 
வாய்ச் சொல்லில் வீரரடி!

கூட்டத்தின் நடுவில் நின்று பொய்யான வாக்கு தந்து
பின்னர் ஆட்சிக்கு வருவாரடி! - கிளியே.!
சொன்னதை மறப்பாரடி!

தூர்வாரா நீர் நிலைகள் ஏராளம் இங்கிருக்க 
அதை கவனத்தில் கொள்ளாரடி - கிளியே!
ஆற்று மணல் அள்ளு வாரடி!

கறுப்புப் பணம் என்றும் கையகப்படுத்துவோம்
என்றும் செப்பித் திரிவாரடி! - கிளியே! அதைச் 
செய்வதறியாரடி!

அண்டை தேசத்தில் சொந்தச் சகோதரர்கள்
துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி!
கிளியே! செம்மை மறந்தாரடி!

நாட்டில் ஊடுருவி உயிர் பிடுங்கிய தீவிரவாதிகளுக்கு
நல்லமுது படைப்பாரடி! - கிளியே 
கறிச்சோறும் தருவாரடி!

நிர்வாண படங்களுக்கு மாறாய் ராணுவ ரகசியம் தந்து
நாட்டை விலை பேசுவாரடி! - கிளியே
அவர் ஒரு ராணுவ வீரரடி!

ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றுமில்லா
மாக்களுக்கோர் கணமும் - கிளியே
வாழத் தகுதியுண்டோ?

வறுமையை ஒழிப்பேனென்பார் இங்கு மத வெறி
இல்லையென்பார் மந்திரத்தாலே யெங்கும் - 
கிளியே! மாங்கனி வீழ்வ துண்டோ!

மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென்று
எண்ணுவதே இக்காலம்.. பாரதம் தலை நிமிர்ந்து
பாரினில் நிலை பெறுவது எக்காலம்???

- மீசை இன்னும் துடிக்கும்....


< புதிய பாரதி >

நெஞ்சு பொறுக்குதில்லையே.! - இந்த நிலை
கெட்ட மனிதரை நினைந்துவிட்டால், 
நம்பி நம்பிச் சாவார் - இவர் நம்பாத 
பொருளில்லை அவனியிலே, நஞ்சினை
தேனென்பார், அதை நம்பிடுவார் துணிந்து
சுவைத்திடுவார், பின்பு துயர்ப்படுவார் எண்ணி
அழிந்திடுவார் அந்தோ (நெஞ்சு)

மந்திரவாதி வருவார் - சொன்ன மாத்திரத்திலே
மனக்கிலித் தருவார் - யந்திர தகடுகள் என்பார்
அது வாழ்வு தருமென்று நம்ப வைப்பார் - நாம்
தரும் பொருளுக்கென நமை ஏய்ப்பார்
உலகத்து அரசரெல்லாம் இந்த பட்டியலில்
உண்டென்பார், வாழ்வு அஞ்சுதரு பேயென்று
உனை பயப்படுத்துவார், அந்தோ (நெஞ்சு)

சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் - ஊர்ச் சேவகன்
வருதல் கண்டு மனம் பதைப்பார், தூய வெள்ளை
ஆடை கொண்டு ஒருவன் - வெகு தூரத்தில் வரக்
கண்டு வீட்டிற்கு அழைப்பார், அப்பால் அவனுக்கே
வாக்களித்து பதவி தருவார், வென்றபின் அவனைத்
தேடி அலைவார், தன்னுரிமையை வாக்கிற்கு விற்று
விடுவார், எப்போதும் கைகட்டுவார் - இவர் 
யாரிடத்தும் பூனைகள் போல் ஏங்கி நடப்பார் (நெஞ்சு)

கொஞ்சமோ பிரிவினைகள்? ஒரு கோடி என்றால்
அது சிறிதாமோ? ஜாதிகள் இல்லையென்பார் -
குலம் குணம் பாரேன் என்பார் ஆனால் காதல்
மணம் என்றால் பொங்கிடுவார் காதலரை 
பிரித்திடுவார் - எதிர்த்தால் அழித்திடுவார் மனங்களை
பிரித்துவிட்டால் குலத்தின் மணம் வீசுமென்பார்
ஊரில் தனித்தீவாய் இரு குலமும் பிரிந்திடுவார்
நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார் (நெஞ்சு)
 
நண்ணிய  பெருங்கலைகள் - பத்து நாலாயிரம்
கோடி நயந்து நின்ற புண்ணிய நாட்டினிலே -இவர்
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார். (நெஞ்சு)

- மீசை இன்னும் துடிக்கும்....


< புதிய பாரதி >

பகைவனுக் கருள்வாய் - நன்னெஞ்சே.!
பகைவனுக் கருள்வாய்.!

புகை நடுவினில் தீயிருப்பதை காஷ்மீர
பூமியிற் கண்டோமே - நன்னெஞ்சே.!
பகை நடுவினில் அச்சம்மிகவே அங்கு
மனிதன் வாழ்கின்றான் - நன்னெஞ்சே.!
அவன் பயந்தே வாழ்கின்றான். (பகைவ)

எல்லைப் புறத்தினிலே ஊடுருவல் 
செய்திட்ட சேதியறியாயோ.?- நன்னெஞ்சே!
குப்பையாய் சடலங்கள் வீதியில் விழுந்திட்ட
அவலம் அறியாயோ.? - நன்னெஞ்சே.! (பகைவ)

உள்ள நிறைவிலார் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ.? - நன்னெஞ்சே.!
தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனாமோ.?- நன்னெஞ்சே.! (பகைவ)

போருக்கு வந்தங் கெதிர்த்த துரோககூட்டமதை 
வேடிக்கை பார்த்திட்டாய் - நன்னெஞ்சே.!
நேரு காலத்து சோகக்கதை இன்னும் தீராது
தொடர்கிறது - நன்னெஞ்சே.! (பகைவ)

வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ.? - நன்னெஞ்சே.!
வெள்ளிப்பனிமலை ஊரின் அமைதிக்கு
கொள்ளி வைத்திட்டோம் - நன்னெஞ்சே.! (பகைவ)

தின்ன வரும் புலி தன்னையும் அன்பொடு
சிந்தையிற் போற்றிட்டோம் - நன்னெஞ்சே.!
பகைவர்க்கு அருள் செய்து அருள் செய்தே
வீரத்தை மறந்தும் விட்டோம் - நன்னெஞ்சே.!
மரத்தும் போகவிட்டோம் - நன்னெஞ்சே.! (பகைவ)

- மீண்டும் மீசை துடிக்கும்....


< புதிய பாரதி >

வாழுமா செந்தமிழ்! வாழ்வரா நற்றமிழர்.!
வாழுமா மணித் தமிழ் திரு நாடு.!
இன்றெமை வருத்தும் ஆங்கிலம் மாய்க.!
நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக.!

அருந்தமிழ் வளர்ந்திடுக! திணிப்பு மொழி மடிவுறுக!
செந்தமிழ் நாட்டினர் ஆண்மையோடு இயற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக.!
நற்றமிழ் வித்தகர் நாடொறும் உயர்க.!

நம் உணவும் மொழி உணர்வும் ஒன்றென்று அறிக.!
பிற மொழி உலக அறிவிற்கு.! நம் தாய்மொழி
நம்மை அறிவதற்கு! மொழியை உணர்ந்து காப்போம்!
அல்லது விரைந்து பெரும்பழி ஏற்போம்.! 

- மீண்டும் மீசை துடிக்கும்....


< புதிய பாரதி >

என்று தணியும் இந்த விளம்பரத் தாகம்.?
என்று மடியும் எங்கள் அந்நிய மோகம்.?
என்றெமது பாமரரின் கைத் தொழில்கள் மீளும்?
என்றெமது இன்னல்கள் தீர்ந்து பொய்யாகும்
இன்றொரு பாரதம் அழிக்க வந்தானே
மானிடர் வாழ்வினை ஏய்க்க வந்தானே
அந்நிய பொருள்தனை கொண்டு வந்தானே!
அவனுக்கு தருந்துணை அரசியல் அருளன்றோ
மெய் வருந்தி உழைப்பாளர் வாடுதல் நன்றோ.?

பஞ்சமும் நோயும் இங்கு பாட்டாளியார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ.?
ஆற்று முதலைகள் போல் பெருவணிகக்கூட்டம்
சிறு தொழிலெல்லாம் நசிந்து பின் எடுக்குது ஓட்டம்
தஞ்சமடைந்த பின் கை விடலோமோ.?
தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ.?
அஞ்சலென்றருள் செயும் கடமை அரசுக்கில்லையோ?
அது அறம் மறந்து விட்டதா.?இல்லை வெஞ்செயல் 
அரக்கர் காலில் வீழ்ந்து விட்டதோ.? பதிலுண்டா.?
வீர சிகாமணி! ஆட்சி புரிவோனே.!

- மீண்டும் மீசை துடிக்கும்....


< புதிய பாரதி >

விடுதலை! விடுதலை! விடுதலை!

கயவருக்கும் இங்கு தீயர் கொலையருக்கும்
விடுதலை பரவலாக குற்றம் செய்யும்
பாவிகட்கும் விடுதலை.! திறமை கொண்ட
தீமையற்ற தொழில் புரிந்து யாவரும் 
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வதற்கு
நாட்டிலில்லை விடுதலை..

ஏழையென்றும் அடிமையென்றும் இங்கு
உண்டு ஜாதியில், இழிவு கொண்ட மனிதர்
எல்லாம் இந்தியாவில் மட்டுமே
கல்வி வாழ செல்வம் தந்து மனம் வருந்தி
கூறியே மனிதர் யாரும் ஒன்று இல்லை
சண்டையுடன் வாழ்வமே! (விடுதலை)

மாதர் தம்மை அழிவு செய்து கொண்ட
பெருமை கொளுத்துவோம்.. கள்ளிப்
பாலும் நெல்லும் தந்து பெண் சிசுவை
கொல்லுவோம்  வைய வாழ்வு தன்னில்
எந்த வகையினும் நமக்குள்ளே தாதர்
என்ற நிலை மாறாது ஆண்களோடு
பெண்களும் சச்சரவுடன் நாளுமே
வாழ்வம் இந்த நாட்டிலே (விடுதலை)

- மீண்டும் மீசை துடிக்கும்....


< புதிய பாரதி >

கற்பனையூர் என்ற நகர் உண்டாம் - அங்குக்
கந்தர்வர் விளையாடு வாராம்.
சொப்பன நாடென்ற சுடர் நாடு - அங்குச் 
சூழ்ந்தவர் யாவர்க்கும் பேருவகை..

மீன் பிடி தொழிலுக்கு பெரும் கப்பல் - இது
சிங்களக்கடலில் யாத்திரை போம்
உயிர்கள் எதுவும் மாளாமல் சேமமாய்
மீள்வோம் நம்மூர் தினம் தினமே..

இலங்கையை ஆளும் ஒரு அரசன் - நம்மை
அன்பொடு கண்டுரை செய்திடுவான்
மன்னவன் அவனது சித்தப்படி அங்கு
வாழ்ந்தனர் தமிழர்கள் மகிழ்வுடனே..

வடக்கிலும் கிழக்கிலும் சுபிட்சம் காண் -அங்கு
எவ்வகை கவலையும் போருமில்லை
பக்குவத் தேயிலை நீர் குடிப்போம் - அந்த
மலையகமெங்கும் மகிழ்வுறவே..

இன்னமுதாய் அங்கு பலர் வாழ்க்கை அவரை
விடுவிக்க தேவை இனியில்லை
நன்னகர் அதனிடை வாழ்ந்திடுவோம் - நம்மை
நலித்திடும் பேய் அங்கு வாராதே..

குழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணங்காண் - அங்கு
பொம்மைக்கு கூட மகிழ்வுண்டாம்
அழகிய பெண்டிர் அரசிகளாம் அவர்கட்கு
கற்பு பற்றிய பயம் இல்லை..

சிங்கள அசுரனை கொன்றிடவே - அங்கு
சிறு விறகெல்லாம் சுடர்மணி வாள்
சங்கடம் ஏதும் இனியின்றி செங்கல் மணலும்
கொண்டங்கு சொந்த மனையை கட்டிடுவோம்..

கள்ளரவர் வீட்டினுள் புகுந்திடவே - வழி
காண்பதிலா வகை செய்திட்டோம்- வெள்ளை
நிறத்து வண்டி அது வீதிக்குள் வருவதை
ஒழித்திட்டோம்..

குழந்தைகளாட்டத்தின் கனவையெல்லாம் - அந்தக்
கோல நன்னாட்டிடை காண்பீரே
இழந்த நல்லின்பங்கள் மீட்குறலாம் - நீர்
இலங்கை தமிழராய் இருந்திட்டால்..

கனவுகள் கண்களில் விரிகிறது செங்குருதியின்
வாடையும் மறைகிறது உடல்கள் புலம் பெயர்ந்து
அலைகிறது எங்கள் உயிர் மட்டும் ஈழத்தில் மலர்கிறது 
இது கற்பனையூர் எனும் போது உண்மை
நெஞ்சைச் சுடுகிறது.

- மீண்டும் மீசை துடிக்கும்....


< புதிய பாரதி >

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு 
நல்லகாலமினி வருமா நல்லகாலமினி வருமா.?
சாதிகள் பிரியுது சண்டைகள் தோன்றுது
மண்டைகள் உடையுது சொல்லடி சக்தி
மாகாளி தமிழகத்தாருக்கு நல்ல குறி நீ சொல்லு..

தரித்திரம் சேருது செல்வம் தொலையுது
படிப்பு விற்குது பாவமும் வளருது 
சூதும் பாவமும் பண்ணாத மனிதன் போவான்
போவான் ஐயோவென்று போவான்.!

தமிழகத்திலே வியாபாரம் பெருகுது
உடல் பெருத்து முதலாளி வாழ்வான்
பொய்யுரைத்து ஏமாற்ற சூத்திரம் தெரியுது,
தந்திரம் வளருது, யந்திரம் (தகடு) பெருகுது
மந்திரம் போலது எங்கும் பரவுது..

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு  சாமியார்க்கெல்லாம்
தைரியம் வளருது நீதியின் தீர்ப்பை மதிக்க மறுக்குது
தொப்பை வளருது சோம்பல் வளருது
எட்டு லச்சுமியும் எட்டு திக்கில் ஒளியுது

பயம் சேருது பாவம் பெருகுது நேத்திரம் மூடுது
அநியாயம் தெரியுது புதிய பைத்தியம் படீலெனப்
பிடிக்குது வீரம் தொலையுது மேன்மை அழியுது
சொல்லடி சக்தி, மலையாள பகவதி
அதர்மம் பெருகுது அதர்மம் பெருகுது...
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு

- மீண்டும் மீசை துடிக்கும்....



< புதிய பாரதி >

காலா ! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்
என் தன் காலருகே வாடா.! சற்றே உனை 
மிதிக்கிறேன்- அட (காலா)

குடந்தையில் எரிந்த குழந்தைகள் உடலை மனதிற்
பதிக்கிறேன் நல்ல வேதாந்த முரைத்த நீதி எது
என்று ஞானியர் பலரிடம் கதைக்கிறேன்.. ஆதி

மூலா வென்று கதறிய யானையை முதலையிடம்
காத்திட்ட தெய்வங்கள் இங்கு பிஞ்சு மழலையை காக்க
வரவில்லை.. முதலைக்கு நேர்ந்தது மழலைக்கும் நேர்ந்தது
காக்க மறந்திட்டாய் மதி கெட்ட மூடனே..! அட (காலா)

உடல் எரிந்து கருகிய எம் பிஞ்சுகளுக்கு அநீதி இழைத்திட்ட
கயவர் தம் வாழ்க்கையை நீடித்தலாகுமா நீ சொல்.. நீதி 
இதுவென்றால் அது உயிர் நீத்த பிஞ்சுகளை இன்னொரு முறை
கொல்வதாகாதா... உனை அழைக்கிறேன்.. காக்கும் கடவுளாய்
வந்து நீதி மறுத்தவர் ஆவி எடுத்திடு.. அட இதற்காகவாவது 
காலம் கடத்தாது விரைந்து வந்திடு காலா..!

- மீண்டும் மீசை துடிக்கும்....


< புதிய பாரதி >

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
தொலைந்திட்டது எங்கும் "காணோம்"
பள்ளிப்பாடத்திலும், தொழிற்கூடத்திலும்
பாமரர் பேச்சினிலும், படித்தவர் வீட்டினிலும் 
இகழ்ச்சியாய் நாமமது தமிழினை ஒதுக்கி
வைத்து வாழ்ந்திடுதல் நன்றோ.? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்
தேயும் படி பரவச் செய்தது எவரோ.?

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர்போல், 
இளங்கோ வைப்போல், பூமிதனில் யாங்கணுமே 
பிறந்ததில்லை உண்மை, இவர்கள் அனைவரையும்
இளந்தலைமுறைக்கு தெரியவில்லை இது கொடுமை..
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம் ஒருசொற் கேளீர்.!
சேமம் ஏதுமின்றி எம் தமிழை தெருவில் தூக்கி போட்டு 
விட்டோம். இம்மொழி எங்ஙனம் சிறக்கும்..?

பிறநாட்டு மோகந்தன்னில் நற்றமிழின் சாத்திரங்கள்
மறைந்துவிடும்.. இறவாத புகழுடைய புது நூல்கள் 
பிற மொழியில் நம்மை ஆட் கொள்ளும்.. 
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் 
மகிமை இல்லை எந்நாளும்... திறமான புலமையென 
வெளிநாட்டோர் சொல்லும் முன் நம் திறமையெல்லாம் 
மூட்டை கட்டி பரண் மேலே வைத்திட்டோம்..

உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே
ஒளியுண்டாகும் வெள்ளத்தின் பெருக்கைப் போல்
கலைப்பெருக்கும், கவிப்பெருக்கும் மேவுமாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழி பெற்று
நம் மொழிப்பற்றை பறை சாற்றிடுவோம் தெள்ளுற்ற
தமிழமுதின் சுவை தன்னை இனி புது பாலகர் நாவினில்
ஊட்டிடுவோம் தமிழை கரை சேர்த்திடுவோம்.. இதைச்
செய்பவர் எவரோ அவரே இங்கமரர் சிறப்பு கண்டார்..!

- மீண்டும் மீசை துடிக்கும்....


< புதிய பாரதி >

பாரத தேசமென்று பெயர் சொல்லுவார் வாழ
பயங்கொள்ளுவார் துயர் எவர் துடைப்பார்..

வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம் - அங்கு
அண்டை சதியால் தினம் உயிர் விடுவோம்
பள்ளித்தல மனைத்தும் கோவில் செய்வோம் அதனை 
பள்ளிவாசல் இடிப்பதென பொருள் கொள்ளுவோம்..
பாரத தேசமென்று பெயர் சொல்லுவார் வாழ
பயங்கொள்ளுவார் துயர் எவர் துடைப்பார்..

சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம், 
சேதுவில் மீன்பிடித்து பிடிபடுவோம்.. வங்கத்தில்
ஓடிவரும் நீரின் மிகையை பயிர்கள் செய்யாதருந்து 
திருப்பி விடுவோம்... (பாரத)

வெட்டுக்கனிகள் செய்து தங்கம் முதலாம் 
வேறு பல பொருளும் குடைந்தெடுப்போம்
எட்டு திசைகளிலுஞ் சென்றிவற்றை
ஏற்றுமதி செய்து விட்டு கை வீசி வருவோம் .. 

பாரத தேசமென்று பெயர் சொல்லுவார் வாழ
பயங்கொள்ளுவார் துயர் எவர் துடைப்பார்..

- மீண்டும் மீசை துடிக்கும்....


< புதிய பாரதி >

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இச்சகத்திலுள்ளோரை ஏய்த்து பிழைக்கும் மானிடர்க்கு
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
காவி கட்டி  ஆசி தந்த போலிச்சாமி யாருக்கும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
ஓட்டு வாங்க பொய்யுரைத்து வீடு தேடி வந்தவர்க்கும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
ஆசைக்காட்டி மோசம் செய்யும் நிதி நிறுவனத்தாருக்கும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
ஈமு கோழி, காந்தப் படுக்கை பேரைச் சொல்லி ஏய்க்கவும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சி மீது இடிந்து விழும் வீடு விற்கும் கயவர்க்கும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

- மீண்டும் மீசை துடிக்கும்....


< புதிய பாரதி >

 அரசியல் முதல் அறிவியல் வரை, காதல் முதல் சாதல் வரை, சமூக விடுதலை முதல் சமத்துவம் வரை என எல்லாவற்றையும் நம் அன்றைய பாரதியின் பாடல் வரிகளை இன்றைய சூழலுக்கு ஏற்றார் போல மாற்றி பாட வருகிறார் புதிய பாரதி..! இனி ஒவ்வொரு நாளும் அவர் மீசைத் துடிக்கும்..! படிக்க ஆசைப் பிறக்கும்..! உங்கள் ஆதரவுடன் வர இருக்கிறார் புதிய பாரதி..


< புதிய பாரதி >

செந்தமிழ் நாடெனும் போதினிலே - மின் 
சக்தி வந்து போகுது பாதியிலே - எங்கள்
அன்னையர் ஆளும் ஆட்சியிலே குடி சக்தி
பிறக்குது பாரினிலே ( செந்தமிழ் )

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி - என
ஆறுகள் யாவிலும் மணல் அள்ளி - திரு
மேனி சிறுத்த தமிழ்நாடு ( செந்தமிழ் )

கல்வி இறந்த தமிழ்நாடு - புகழ்
யாவும் இழந்த தமிழ்நாடு - நல்ல
பல்கலை பட்டங்கள் வாங்கிடவே - பணம்
கேட்டு விழுந்த தமிழ்நாடு ( செந்தமிழ் )

நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று
நித்தம் அழுதிடும் கடலின் எல்லை - அண்டை
நாட்டவன் கைகளில் மாண்டிடவே எங்கள்
மீனவர் கிடக்கும் தமிழ்நாடு ( செந்தமிழ் )

- மீண்டும் மீசை துடிக்கும்..


< புதிய பாரதி >

அரசியல் முதல் அறிவியல் வரை, காதல் முதல் சாதல் வரை, சமூக விடுதலை முதல் சமத்துவம் வரை என எல்லாவற்றையும் நம் அன்றைய பாரதியின் பாடல் வரிகளை இன்றைய சூழலுக்கு ஏற்றார் போல மாற்றி பாட வருகிறார் புதிய பாரதி..! இனி ஒவ்வொரு நாளும் அவர் மீசைத் துடிக்கும்..! படிக்க ஆசைப் பிறக்கும்..! உங்கள் ஆதரவுடன் புதிய பாதையில் நம் புதிய பாரதி..!


மனதிலுறுதி வேண்டும்
வாக்குக்கு பணம் தர வேண்டும்
நினைவு மழுங்கிட வேண்டும்,
நெருக்கத்தில் நகர் வாழ்வும் வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசம் குவளையில் மது அது வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்,
பிறர் உழைப்பினில் அதை நாம் பெற வேண்டும்.

கண் திறந்திட வேண்டும்
காரியத்தி லுறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும், அதை
பெரிய பெட்டியில் பூட்டிட வேண்டும்
மண் விலை பெற வேண்டும், நல்ல 
வயல்வெளி அழித்தங்கு வீடுகள் தென்பட வேண்டும்
உண்மை உறங்கிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்

- மீண்டும் மீசை துடிக்கும்....